நூற்றாண்டின் ஈடு இணையற்ற கதைசொல்லி காப்ரியேல் கார்சியா மார்க்கேஸ் – தமிழில்: சொ.பிரபாகரன்
காப்ரியேல் கார்சியா மார்க்கேஸ் இந்த நூற்றாண்டின் ஈடு இணையற்ற கதைசொல்லிகளில் ஒருவர்.
தனக்குள் தனது லத்தீன் அமெரிக்க நிலத்தின் பல்வேறு கதைகளையும், மனிதர்களையும் சுமந்து அலைந்த மார்க்கேஸின் இறுதி நாட்களைப் பற்றி அவர் மகன் எழுதியுள்ள கட்டுரை ஒன்றை வாசித்தேன்.
ஒரு படைப்பாளிக்கு நிகழவே கூடாத ஒன்று அவருக்கு அவரின் இறுதி நாட்களில் நிகழ்ந்துள்ளது. அது தனது அத்தனை நினைவுகளை, கதைகளை, மனிதர்களை அவர் மறந்து போனது .
சில நேரங்களில் சரியான வார்த்தைகள் மறந்துள்ளார். தன்னுடன் இருப்பவர்கள் யார் என்பதையும் மறந்துள்ளார். ஒரு கட்டத்தில் “வீட்டில் எல்லாரையும் அதட்டி வேலை வாங்கிக் கொண்டிருக்கும் இந்த பெண்மணி யார்?” என்று தனது மனைவியைப் பார்த்து கேள்வி கேட்டுள்ளார்.
இது அவரின் மனைவிக்கும் மகனுக்கு அதிர்ச்சியளித்துள்ளது.
அவருக்கு நினைவாற்றலைக் கொஞ்சம் கொஞ்சமாக மறக்க வைக்கும் டிமென்ஷியா நோய் தாக்கியுள்ளது. டிமென்ஷியா அறிகுறிகள் தென்படும் ஆரம்ப நிலையிலேயே மார்க்கேஸ் கூறிய வார்த்தைகள்
“நான் என் நினைவுகளின் வழியாக வேலை செய்கிறேன். நினைவகமே எனது கருவி மற்றும் எனது மூலப்பொருள். அது இல்லாமல் என்னால் வேலைகளைத் தொடர இயலாது. எனக்குத் தயவு செய்து உதவுங்கள்.”
“நான் என் நினைவுகளை இழந்துவிட்டேன், ஆனால் அதிர்ஷ்டவசமாக நான் அதை இழக்கிறேன் என்பதையும் மறந்துவிட்டேன்.”
“அனைவரும் என்னை ஒரு குழந்தை போல் நடத்துகிறார்கள். ஆனால் இதுவும் நன்றாக உள்ளது நான் இதை விரும்புகிறேன்.” என்று கூறியுள்ளார்.
தனது நினைவுகளை முற்றிலும் இழந்த நாட்களில் ஒருநாள் மாலை வேளையில் தனது தோட்டத்தில் நின்று கொண்டு எங்கேயோ வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்துள்ளார். அங்கு வந்த அவரின் உதவியாளர்
டான் கேப்ரியல், நீங்கள் இங்கே என்ன செய்கிறீர்கள்?
“அழுது கொண்டிருக்கிறேன்”
“அழுகையா! கண்ணீர் வரவில்லையே? ”
“ஆமாம் கண்ணீர் இல்லாமல் அழுகிறேன். என் தலை இப்போது குப்பையாக இருப்பதை நீ உணரவில்லையா? ” என்று கூறியுள்ளார்.
இன்னும் நிலைமை மோசமாக மாறுகிறது.
இது என் வீடு அல்ல. நான் என் வீட்டிற்குச் செல்ல விரும்புகிறேன். அது என் அப்பாவின் வீடு. என் அப்பாவுக்கு அருகில் எனக்கு ஒரு படுக்கையும் இருக்கிறது என்று திரும்பத் திரும்ப சொல்கிறார்.
அவர் தனது தந்தை என்று சொல்வது அவரின் தந்தையை அல்ல, அவரது தாத்தா கர்னல் ஆரேலியானோ புவேண்டியாவை என்று அவரது மகன் சொல்கிறார்
காப்ரியேல் எட்டு வயது வரை அவருடன் தான் வாழ்ந்தார். அவரது தாத்தா கர்னல் அவரது வாழ்க்கையில் மிகவும் முக்கியமான நபர். மார்க்கேஸின் படைப்புகளை வாசித்தவர்களுக்குத் தெரியும் அவரின் தாத்தா அவரின் பல படைப்புகளில் முக்கியமான கதாபாத்திரமாக வருவார் என்பது.
ஆச்சரியமாக எல்லாவற்றையும் மறந்து போன காப்ரியேல் எப்படி தனது தாத்தாவை மட்டும் மறக்கவில்லை என்று தெரியவில்லை.
இதைப் பற்றித் தேடி வாசித்தால் இதற்கும் விடை கிடைக்கிறது. தனது எட்டு வயது வரை மார்க்கேஸ் வளர்ந்தது தனது தாத்தா மற்றும் பாட்டியுடன் தான். மார்க்கேஸின் தாத்தா கர்னல் ஒரு அரசாங்க அதிகாரி அவர் மார்க்கோஸின் மீது அளவு கடந்த அன்பைச் செலுத்தியுள்ளார். லத்தீன் அமெரிக்காவின் பூர்விக (மேஜிக் ரியலிசம்) கதைகளை மார்க்கோஸ்க்கு சொன்னது அவர் தான்.( இந்த கதைகளின் வழியாகப் பிறந்தது தான் தனிமையின் நூறாண்டுகள் என்கிற புகழ் பெற்ற நாவல்) இதுமட்டுமின்றி அவர் தாத்தா சொன்ன பல கதைகள் அவரின் ஆழ் மனதில் கடைசி வரை இருந்துள்ளது.
ஒரு படைப்பாளி தனது நினைவுகளை இழந்தாலும் அவனுக்குள் இருக்கும் கதைகளும், கதைசொல்லிகளும் மறைவதில்லை போல.
இந்த நூற்றாண்டின் மிகச்சிறந்த கதைசொல்லி தற்போது நிம்மதியாக உறங்கிக் கொண்டிருப்பார்.
நீங்கள் உறங்குங்கள் காப்ரியேல் எனக்குப் பிடித்த உங்களின் ஒரு வார்த்தையை நான் எனக்கு மீண்டும் சொல்லிக் கொள்கிறேன்.
“எதுவாக இருந்தாலும், நீங்கள் ஏற்கனவே ஆடிய வாழ்க்கை நடனங்களை யாராலும் உங்களிடமிருந்து பறித்துச் செல்ல முடியாது.”
காப்ரியேல் கார்சியா மார்க்கேஸ்.
தமிழில்: சொ.பிரபாகரன்