“அறிவுத் தேடல்” கவிதை – கவிஞர் ச.சக்தி
கவிதை: கொடி – ச.சக்தி
அம்பேத்கர் நகர் ….!!!!! கவிதை – கவிஞர் ச.சக்தி
அதுதான்
என் சேரிக்குள் நீங்கள்
நுழைவதற்கான முதல் தெரு
ஆமாம் நீங்கள் உங்கள் பாதங்களிலிருக்கும்
செருப்புகளை கழட்டாமல்
நடந்து செல்வதற்கான
முதல் தெரு அது தான்
ஓங்கி வளர்ந்த ஓர் அரசமரம்
அந்த அரசமரத்தடியில்
வீற்றிருக்கிறான்
எங்கள் அரசனாகிய புத்தன்
புத்தரின் மெளனத்தோடு
விளையாடிக் கொண்டிருக்கும்
சேரி குழந்தைகளாகிய
பல சித்தார்த்தன்கள்
இரண்டாவது தெருவில்
பழைய நூலகம்
நூலகத்தின் நுழைவு வாயிலில்
பல நூல்களைக் கற்று
கற்பி யென்று முழங்கிய
தத்துவஞானியான
அம்பேத்கரின் சிலை
கூண்டுகளற்ற நீல வானத்தின்
கீழ் சிலை மினு மினுக்கும்
சிலையை சுற்றி
பல இளைஞர்கள்
ஒவ்வொருவரின் கைகளிலும்
ஒவ்வொரு புத்தகம்
அது தான்
எங்கள் பெரிய காலனி
சேரி மக்களுக்கான மிகப்பெரிய அடையாளம்
இரவு விடியும் வரை
விழித்திருக்கும்
பல ஜனங்களின் கூடாரம்
கபடி விளையாட்டு
வாலிபால் விளையாட்டு
கிரிக்கெட் விளையாட்டு
இப்படிப் பல விளையாட்டுகளால்
ஜொலிக்கும் கடைசி
தெருவிலிருக்கும் நந்தனார் மைதானம்
இப்படியே தான் விடிகிறது
ஒவ்வொரு நாளுக்கான
எம்சேரி மக்களுக்கான இரவும் பகலும் ,
கவிஞர் ச.சக்தி
அழகு பெருமாள் குப்பம்,
பண்ருட்டி,
பேரழகியின் பேனா…!!!! கவிதை – கவிஞர் ச.சக்தி
அந்த கருப்பு நிற பேனாவும்
வெள்ளைப் பேப்பரும்
ஈரக்காற்றிலே மிதக்கின்றன.
மனமெனும் பந்தலில்
அடுக்கி வைக்கப்பட்ட
எழுத்துக்களைச் சுமந்தவாறு,
இரவு முழுவதும்
கண்களில் மேய்ந்து
கொண்டிருந்த
பல எழுத்துக்கள்
கண்களை
திறந்ததும் மறைந்து
கொள்கின்றன
இமைகளென்னும்
கதவுகளுக்கு பின்னே ,
“வானத்திலிருந்து
கீழ் நோக்கி வரும்
மழைத்துளி தரையில்
விழும் பொழுது
பூத்துக் கரைந்து விடுகிறது
கானல் நீராகிய கனவுக்குள்ளே ”
“ஊர்ந்து
செல்லும் கட்டெறும்பு
ஒன்று கருப்பு மையினைத்
தடவியவாறு ஊர்ந்து செல்கிறது
அவள் எழுத முற்பட்ட
எழுத்துக்களை எழுதியவாறு ”
கவிஞர் ச.சக்தி
அழகு பெருமாள் குப்பம்,
பண்ருட்டி,
மலம் அள்ளுபவனின் மனிதம்…..!!!! கவிதை – ச.சக்தி
உங்க ஆசன வழியில்
முளைக்கிற
மஞ்சள் நிறப் பூக்களை
எங்கள் தலையில்
சூடுகிறோம்
ஒவ்வொரு நாளும்,
தலையில் சூடிய
மஞ்சள் நிற பூக்கள்
எங்கள் குடிசைகள்
முழுவதும் வாசனை வீசும்
கைகளிலும் கால்களிலும்
உயர்ந்த காற்றைப்போல,
தலையில் ஏற்றிய
மஞ்சள் நிறப் பூக்கள்
கசங்கி
முகத்தின் வழியாக ஒழுவும்.
முகத்தில் ஒழுகும்
மஞ்சள் பூ எங்களின்
வாயில் துருக்கப்படுகிறது,
தினந்தோறும் மெல்ல மெல்ல
சாப்பிடுகிறோம்
மஞ்சள் நிறப் பூக்களை
தலையில் சுமந்தவாறு