விட்டல்ராவ் (Vittal Rao) எழுதிய கூடார நாட்கள் (Koodara Natkal) - நூல் அறிமுகம் | Subbarao - https://bookday.in/

கூடார நாட்கள் (Koodara Natkal) – நூல் அறிமுகம்

கூடார நாட்கள் (Koodara Natkal) - நூல் அறிமுகம் தமிழ் எழுத்தாளர்களில் விட்டல்ராவைப் போல் அரிய அனுபவங்களைச் சந்தித்த எழுத்தாளர் எவரும் கிடையாது. அவரைப் போன்று பல்கலை வித்தகராக உள்ள எழுத்தாளரும் கிடையாது. எனவே அவரது அனுபவப் பதிவுகள் ஒவ்வொன்றும் நமக்கு…
ச.சுப்பாராவ் (S.Subbarao) மொழிபெயர்ப்பு செய்த நண்பர்களின் பார்வையில் மார்க்ஸ் (Nanbargalin Paarvaiyil Marx) - நூல் அறிமுகம் - https://bookday.in/

நண்பர்களின் பார்வையில் மார்க்ஸ் (Nanbargalin Paarvaiyil Marx) – நூல் அறிமுகம்

நண்பர்களின் பார்வையில் மார்க்ஸ் (Nanbargalin Paarvaiyil Marx) - நூல் அறிமுகம் மொழிபெயர்த்து எழுதியவர் ச. சுப்பாராவ் அவர்கள்.சிறந்த மொழிபெயர்ப்புக்கான பல விருதுகளை பெற்றுள்ளார். " நிகழ்ந்த போதே எழுதப்பட்ட வரலாறு " இந்திய பொருளாதார தேசியத்தின் தோற்றமும் வளர்ச்சியும்" உள்ளிட்ட…
ச. சுப்பாராவ்(S.Subbarao) எழுதிய வனபுத்திரி : நூல் அறிமுகம்(Vanapuththiri), பாரதி புத்தகாலயம்(Bharathiputhakalayam) - https://bookday.in/

வனபுத்திரி (Vanapuththiri) : நூல் அறிமுகம்

வனபுத்திரி (Vanapuththiri): நூல் அறிமுகம் ஒரு படைப்பாளனின் மிகப்பெரிய காவியத்தில் இடம்பெற்றிருக்கும் கதாபாத்திரங்களில் ஒரு சிலர் உடனிருந்து நூலினைப் படைத்த ஆசிரியனோடும் நூல் உருவாகக் காரணமாக இருந்த கிரியா ஊக்கிகளோடும் விடுபட்டுப் போன பக்கங்களைக் குறித்து உரையாடலை நடத்தினால் எப்படி இருக்குமோ…
ஆயிரம் புத்தகங்கள், ஆயிரம் நூல் அறிமுகம்: 1946 இறுதிச் சுதந்திரப் போர்- கப்பற்படை எழுச்சியின் கதை – கோவை பிரசன்னா

ஆயிரம் புத்தகங்கள், ஆயிரம் நூல் அறிமுகம்: 1946 இறுதிச் சுதந்திரப் போர்- கப்பற்படை எழுச்சியின் கதை – கோவை பிரசன்னா

      இந்தியாவின் சுதந்திரத்திற்கான போராட்டம் காந்தியின் தலைமையில், அவரின் சத்தியாகிரக அடிப்படையில் கிடைத்தது என்பதுதான் நமக்கு காலங்காலமாக புகட்டப்பட்ட செய்தி. ஆனால் அதற்கு இணையாக, ஆங்கிலேய கப்பல் படையில் பணி புரிந்த மாலுமிகள் முன்னெடுத்த போராட்டம் அவ்வளவாகப் பேசப்படவில்லை.…
நூல் அறிமுகம்: ச.சுப்பாராவின் ”கிளியும் அதன் தாத்தாவும்” – இரா.சண்முகசாமி

நூல் அறிமுகம்: ச.சுப்பாராவின் ”கிளியும் அதன் தாத்தாவும்” – இரா.சண்முகசாமி




நூல் : கிளியும் அதன் தாத்தாவும்
ஆசிரியர் : ச.சுப்பாராவ்
விலை : ரூ.60
வெளியீடு : பாரதி புத்தகாலயம்
ஆண்டு : செப்டம்பர் 2022
தொடர்புக்கு : 044 – 24332424 /24330024/
விற்பனை : 24332924
புத்தகம் வாங்க : www.thamizhbooks.com
bharathiputhakalayam@gmail.com

ஆசிரியருக்கு பெருந்தொற்று காலத்தில் இணையத்தில் கிடைத்த கதைகளை நமக்குத் தேவையானதை மட்டும் மொழிபெயர்த்துக் கொடுத்திருக்கிறார்.

பீகார் பகுதிகளில் வாயில் வெற்றிலை பாக்கு  போட்டுக்கொண்டு உட்கார்ந்து  கதை பேசிக்கொண்டிருந்த பெரிசுகளிடமிருந்து பெறப்பட்ட மைதிலி மொழி சிறார் கதைகள். இதில் போஜ்புரி, மைதிலி, மகாஹி, அங்கிகா, வஜ்ஜிகா என்று ஐந்து மொழிகளில் வழங்கப்பட்டவை.

இக்கதைகள் மிகுந்த நகைச்சுவை உணர்வு கொண்டது. தமிழ்ச் சிறார்களுக்கான கதைகளை மட்டும் தேர்ந்தெடுத்து நமக்கு கொடுத்திருக்கிறார். அதிலும் நீதிபோதனைகள் உள்ளே வராமல் வெட்டிவிட்ட பின்பே வழங்கியிருக்கிறார். குழந்தைகளின் வயிறு குலுங்கும் வண்ணம் கதைகள் சொல்லலாம். நான் ‘நகர, கிராமத்து காக்கா’ கதையை வாசித்து குலுங்கி சிரித்துவிட்டேன். பேருந்தில் பக்கத்தில் உட்கார்ந்தவர் ஒரு மாதிரியாக பார்த்தார். இது என்னுடைய வாசிப்பில். உங்களுக்கு எப்படி இருக்குமோ எனக்குத் தெரியாது தோழர்களே.

அந்தக் கதையின் சுருக்கம்-
கிராமத்து காக்காவுக்கு எதுவும் கிடைக்காம நகரத்துக்கு வந்து நகர காக்காவிடம் உதவி கேட்க, நகர காக்கா கிண்டல் மட்டுமே செய்தது. அதாவது நாம பேசுவோமே கிராமத்தான் என்று அதுபோல. அப்போது ஒரு சிறுவன் கையில் ஜாங்கிரியுடன் வர நகரத்துக் காக்கா தன்னுடைய திறமையை பீத்துவதாக எண்ணி அவனிடம் பிடுங்க அருகே சென்றது. சிறுவன் காகத்தை பார்த்து ஜாங்கிரியை வாயில் போட்டுக்கொண்டான். நகர காக்கா ஏமாந்தது. இப்போது கிராம காக்கா அதே சிறுவனின் அருகில் சென்று அவன் தலையில் தன் அலகால் லேசாக தட்டியது. ஆ என்று சிறுவன் வாய் திறக்க ஜாங்கிரி கீழே விழ தூக்கிகொண்டு பறந்தது. யார் திறமைசாலிங்க என்று தயவுசெய்து நீதியை குழந்தைக்கு சொல்லக்கூடாது. மீதியை புத்தகத்தில் காண வாரீர். எழுத்தாளருக்கு மனமார்ந்த நல்வாழ்த்துகள்!
இதில் 16 கதைகள் உள்ளது. வாசிப்போம். குழந்தைகளை வாசிக்க வைப்போம் தோழர்களே.

வாசிப்போம்!
உலகை நேசிப்போம்!

தோழமையுடன்
இரா.சண்முகசாமி 
புதுச்சேரி.

புதிய புத்தகம் பேசுது – செப்டம்பர் மாத இதழ் – 2022

புதிய புத்தகம் பேசுது – செப்டம்பர் மாத இதழ் – 2022

புதிய புத்தகம் பேசுது – செப்டம்பர் மாத இதழ் – 2022 – கீழ்கண்ட தலைப்புகளுடன் இப்போது உங்களுக்காக PDF வடிவில்… ♻️ தலையங்கம்: தேவை: வாசிக்கும் ஆசிரியர் - ஆசிரியர் குழு ♻️ கல்வி வரிசை நூல்கள் ♻️ சமீபத்திய…
நூல் அறிமுகம்: தமிழில் ச.சுப்பாராவின் எம். எஸ் சுப்புலட்சுமி உண்மையான வாழ்க்கை வரலாறு – மணி மீனாட்சி சுந்தரம்

நூல் அறிமுகம்: தமிழில் ச.சுப்பாராவின் எம். எஸ் சுப்புலட்சுமி உண்மையான வாழ்க்கை வரலாறு – மணி மீனாட்சி சுந்தரம்




நூல் : எம். எஸ் சுப்புலட்சுமி உண்மையான வாழ்க்கை வரலாறு
ஆசிரியர் : ச.சுப்பாராவ்
விலை : ரூ.₹220
வெளியீடு : பாரதி புத்தகாலயம்

தொடர்புக்கு : 044 – 24332424 /24330024/
விற்பனை : 24332924
புத்தகம் வாங்க : www.thamizhbooks.com
bharathiputhakalayam@gmail.com

தன்னுடைய பாடும் திறத்தாலே இவ்வையத்தைப் பாலித்த எம்.எஸ்.சுப்புலட்சுமியின் வாழ்க்கை வரலாற்று நூல் இது.

பத்திரிகையாளர் டி.ஜே.எஸ்.ஜார்ஜ் ஆங்கிலத்தில் எழுதிய இந்நூலை ச.சுப்பாராவ் தமிழில் மொழிபெயர்த்துள்ளார். தமிழில் எழுதப்பட்டதைப் போன்ற உணர்வைத் தருகிறது இவரின் மொழிபெயர்ப்பு.
‘உண்மையான வாழ்க்கை வரலாறு’ என்று ஒருவித பூடகத் தன்மையுடன் தலைப்பு இருந்தாலும், எம்.எஸ் என்ற ஆளுமையின் சிறப்புக்கு மாசு கற்பிக்கும் நோக்கம் எதுவுமின்றி மிகுந்த கவனமும், உண்மையை உரைக்கும் ஆர்வமும், அர்ப்பணிப்பும் கொண்டு இந்நூல் எழுதப்பட்டுள்ளது.
பதின்மூன்று தலைப்புகளில் எம்.எஸ்.சுப்புலட்சுமியின் வாழ்க்கை விவரிக்கப்பட்டுள்ளது.
நூலாசிரியர் எம்.எஸ் -இன் வரலாற்றை இப்படித் தொடங்குகிறார்,
“எம்.எஸ்.சுப்புலட்சுமி மதுரை நகர், சண்முகவடிவு என இரு அம்மாக்களுக்குப் பிறந்தார். தமிழ்ப் பண்பாட்டின் மனசாட்சியையும், இதயத்துடிப்பையும் பிரதிபலித்த இரு அன்னையர்!”
“எம்.எஸ்.என்பதில் எம் என்பது வெறும் புவியியல் ரீதியான அடையாளமல்ல, அது தொப்புள்கொடி உறவு “என்பதற்கான காரணங்களை விவரித்துள்ளார்.
மதுரை என்னும் தூங்கா நகரத்தின் எண்ணற்ற பக்கவாட்டுச் பந்துகளில் ஒன்றான மேலக்கோபுரத்தெரு, அனுமந்தராயர் தெருவில் எம்.எஸ்.பிறந்தது முதல் ‘பாரத ரத்னா’ விருது பெற்றது வரையிலான வாழ்க்கைச் செய்திகளைக் கொண்டுள்ளது இந்நூல்.
வாழ்க்கை நிகழ்வுகளை மட்டும் அடுக்கிக் கொண்டு போகாமல் கர்நாடக இசையின் தோற்றம்,தொடர்ச்சி, கச்சேரிகளில் நிகழ்ந்த மாற்றங்கள், தேவதாசி முறை, மகத்தான பெண் கலைஞர்களின் வரவு, தனித்தன்மையுடைய ஆசிரியர்கள், கலைஞர்கள், தமிழிசையின் வரலாறு , இசையின் அழகியல், இரசனைத் திறன் ஆகியவற்றை எம்.எஸ் -இன் கதையோடு ஊடும்பாவுமாகக் கூறிச் செல்கிறார் ஆசிரியர்.
அந்தக்கால ஆசிரியர்களின் அடி தாங்க முடியாமல் படிப்பை பாதியில் (ஐந்தாம் வகுப்பு) விட்டிருக்கிறார் எம்.எஸ்.(நல்லவேளை!)
தனது பத்தாவது வயதில்,மதுரையில் ஆரம்பிக்கப்பட்ட சைக்கிள் கம்பெனி திறப்பு விழாவில்(பின்னாளில் மாபெரும் டி.வி.எஸ் குழுமம்)பாடியதிலிருந்து எம்.எஸ்-ன் கலைவாழ்வு தொடங்குகிறது.
எம்.எஸ் ஒரு பாடகியாக வளர்ந்தது, சினிமாவில் நடித்தது, திருமணம் செய்தது, கர்நாடக இசையை உலகம் முழுமைக்கும் கொண்டு சென்றது, இசையால் பக்தி செய்தது எனப் படிப்போரைக் கரைத்துச் செல்கிறது இந்நூல்.
எம்.எஸ் -க்கும் அவரது கணவர் சதாசிவத்துக்கும் இடையேயான ஆத்மார்த்தமான உறவு பற்றி ஆசிரியர் இப்படிக் கூறுகிறார்,
“இசை எம்.எஸ் இன் வாழ்க்கை என்றால், சதாசிவத்திற்கு எம்.எஸ் தான் வாழ்க்கை. சதாசிவமும் எம்.எஸ்-ம் போல எந்தக் கணவனும் மனைவியும் ஒருவருக்கொருவர் நன்றிக்கடன் பெற்றிருக்கமாட்டார்கள்.”
வழக்கமாகப் புகழ்பெற்றவர்களைப் பற்றிப் பொதுவெளியில் பரப்பப்படும் புனைவுகளுக்கு எம்.எஸ் -ம் தப்பவில்லை. அவை பற்றிய விவாதங்கள் இந்நூலில் இருந்தாலும் அவை எம்.எஸ் என்னும் பேரொளிக்கு முன் வந்து மறையும் பனித்துளிகளாகவே தெரிகின்றன.
தியாகையரைப் போல இறைவனை நாடும் பக்திபூர்வமான இசையை தமிழகத்தில் இருந்து உலகெங்கும் பரப்பிய இசையரசியின் வரலாற்றை, இசை ரசிகர்களுக்கு மட்டுமன்றி எல்லோருக்குமானதாகத் தந்திருக்கிறது இந்நூல்.
மதுரை சண்முகவடிவு சுப்புலட்சுமி தனக்குப் பிடித்தமான அடர்நீல நிறப் பட்டுப்புடவையை அணிந்திருக்கிறார். மடிசார் புடவையின் முந்தானை அவரது வலது தோள் வழியாகச் சுற்றப்பட்டிருக்கிறது. அவருக்கு மிக விருப்பமான மதுரை மல்லிகையைச் சூடியிருக்கிறார். மஞ்சள் பூசிய நெற்றியில் வட்டமான குங்குமப்பொட்டு,அவர் அணிந்திருக்கும் வைரத்தோடு, மூக்குத்தியின் பிரகாசத்தில் இசை உலகின் சூரியனாய் தகதகக்கிறது. பக்தியில் கரைந்து எம்.எஸ் பாடத் தொடங்குகிறார். உலகம் தன்னிலை மறந்து கேட்டுக் கொண்டிருக்கிறது. என்றென்றும்….
-மணி மீனாட்சி சுந்தரம்
நூல் அறிமுகம் : ச.சுப்பாராவின்‘மதுரை போற்றுதும்’ – ரமணன்

நூல் அறிமுகம் : ச.சுப்பாராவின்‘மதுரை போற்றுதும்’ – ரமணன்




ச.சுப்பாராவ் எழுதி சந்தியா பதிப்பகம் வெளியிட்டுள்ள ‘மதுரை போற்றுதும்’ புத்தகத்தை மதுரை பார்சல் பாசஞ்சர் போல மெதுவாகப் படித்தேன். மனிதர் கடுமையாக உழைத்திருக்கிறார். சிறு வயது முதல் தான் அலைந்த மதுரை தெருக்களில் மீண்டும் ஒருமுறை சுற்றியிருக்கிறார். இம்முறை வேடிக்கையாக மட்டும் அல்ல; பார்த்த ஒவ்வொன்றிலும் ஒளிந்திருந்த வரலாற்றை, சோகத்தை, அழகை ஆழமாகப் பார்த்திருக்கிறார். ஆனாலும் எளிமையான, ஜனரஞ்சகமான கதை போல் சொல்கிறார். போகிற போக்கில் அவர் தெளித்துச் செல்லும் இலக்கிய குறிப்புகளை அறிவதற்கு என்னைப் போன்ற வாசகன் சற்று முயற்சி எடுக்க வேண்டும்.கம்பராமாயணத்தில் தொடங்கி நெடுநல்வாடை, சிலப்பதிகாரம் வழியாக சி.சு செல்லப்பாவின் ‘சுதந்திர தாகம்’, ஒரு எழுத்துப் புலியின் மதுரை குறித்த வர்ணனை (யார், என்ன புத்தகம் என்று சொல்லி விடுங்கள் ராவ்),’காவல் கோட்டம்’ என ஆங்காங்கே மதுரை தொடர்பான இலக்கியப் படைப்புகளைக் கொடுக்கிறார். இருந்தாலும்…..

தனது ஆளுமையை உருவாக்கியவர்களில் ஜனதாக் கட்சி, எழுத்தாளர் சுஜாதா, மதுரையில் நடைபெற்ற அரசியல் கூட்டங்கள், இசைக் கச்சேரிகள், இடது பக்கம் திருப்பிய டெய்லர் மணி என ஒரு அத்தியாயம். அதில் இடதுசாரிகள் குறித்து நல்ல விவரிப்பு. அன்று அவர் கேட்ட அரசியல் தலைவர்களில் மோகன், நன்மாறன் ஆகியோருடன் பின்னாளில் நெருங்கிப் பழகியதையும் குறிப்பிட்டிருக்கிறார். ஆனாலும்….

நூற்றுக்கணக்கான புத்தகங்களைப் படித்து அவற்றின் சாரத்தைச் சுவையான கட்டுரையாக எழுதுபவர் அல்லவா? அதனால் மதுரையில் இருக்கும் பதிப்பகங்களைப் பற்றிக் கிட்டத்தட்ட பத்து பக்கங்கள் எழுதியிருக்கிறார். மீனாட்சி புத்தக நிலையம், என்சிபிஎச், அன்னம், பாரதி புக் ஹவுஸ் என பரந்துபட்ட தொடர்புகள். ஆனாலும்….

பழம்பெரும் நடிகர்கள், இசைக் கலைஞர்கள், நாட்டுப்புறக் கலைஞர்கள், ஆயிரக்கணக்கான மாணவர்களுக்குத் திருப்பாவை கற்று தந்த மாமி என கலைகளைப் பற்றிய ஒரு 365 சுற்று அனுபவத்தைத் தருகிறார். இருந்தாலும்…..

மதுரைக்காரன் மீனாட்சி அம்மன் கோயிலைப் பற்றி எழுதாமல் இருப்பானா? சங்கப் புலவர்களுக்குச் சன்னதி, மதுரையை முன்னொட்டாகப் போட்டுக்கொண்ட புலவர்களின் பெரிய பட்டியல், பள்ளியறை போகும்போது கோயில் கணக்கு படிப்பது, அப்போது எதுவரை தேவாரம் ஓதுவார்கள், எங்கிருந்து நாதஸ்வரம் வாசிக்கப்படும், பெண்கள் படுக்கப் போகுமுன் நகைகளைக் கழற்றி வைப்பது போல மீனாட்சி அம்மனும் செய்வது (தொ.பரமசிவன் மக்களுக்கும் கடவுள் வழிபாட்டிற்கும் உள்ள தொடர்பைக் கட்டுரையாக விளக்குவதை இந்த இரண்டு வரிகளில் விளக்குவது போல தோன்றுகிறது. ஐயப்பனின் மனைவியாகக் கருதப்படும் புஷ்கலை என்பவர் ஒரு சவுராஷ்டிரப் பெண்; அவரின் திருமண சடங்குகள் இன்றும் சவுராஷ்டிர சமுதாயத்தினரால் நடத்தப்படுவது என்கிற சேதியும் இது போன்றதாகக் கருதுகிறேன்.) போன்றவை குறித்த புதிய செய்திகள் சிறப்பு. இருந்தாலும்……

பாரதியார் பணியாற்றிய சேதுபதி உயர்நிலைப் பள்ளியில் அவர் படித்தது; தன் பள்ளியைப் பற்றி விரிவாக எழுதியிருக்கும் அவர் நினைவாற்றல்; கல்லறையையும் ஆய்வு செய்யும் அவரது விந்தை மனம்; அதிலும் ஜாக்சன் துரையையும் ஜம்புரோவையும் ஒப்பிட்டிருப்பது; இருந்தாலும்…

மதுரையின் உணவு வகைகளை ஆங்காங்கே சுவையாகச் சொல்லியிருப்பது; தானும் நண்பர்களும் டீ குடித்துக்கொண்டே கச்சேரிகளையும் அரசியல் பேச்சுக்களையும் கேட்டது; பீப்பிள்ஸ் நாடக்குழுவில் நடித்தது; தன்னால் விலை குறைந்த பொருட்களையே வாங்க முடிந்தது என்பது போன்ற வருணனைகள் அவரின் எளிய பின்னணியை காட்டுகிறது என்றாலும்…….

புத்தகம் முழுக்க நகைச்சுவை உணர்வு விரவிக் கிடக்கிறது; இரண்டாம் ஆட்டம் பார்த்துவிட்டு வந்த அன்று எதிர்த்த வீட்டு அக்கா தூக்கில் தொங்கியதைச் சொல்லும்போது சோகம் பின்னணியாய் ஒலிக்கிறது ஜார்ஜெட் தாவணி போட்டால் அந்த அக்கா சினிமாவுக்குப் போகிறார்கள் என்ற இடத்தில் தமிழ் மக்களின் மனத்தில் சினிமா எத்தகைய இடத்தைப் பிடித்திருக்கிறது என்பதைப் போகிற போக்கில் சொல்கிறார். இருந்தாலும்…..

மதுரையின் கட்டிடங்கள்,தெருக்கள்,திருவிழாக்கள் எல்லாமே சிறப்பாக விவரிக்கிறார். இருந்தாலும்……

(இந்தப் பதிவின் முடிவில் நான் சொல்ல நினைத்ததைச் சரியாக ஊகிக்கும் முதல் ஐந்து நண்பர்களுக்கு சுப்பாராவின் புத்தகம் பரிசாக அளிக்கப்படும்.)
– ரமணன்

நூல் :
மதுரை போற்றுதும்

ஆசிரியர் : ச.சுப்பாராவ்
பதிப்பகம் : சந்தியா பதிப்பகம்
விலை : 200
தொடர்பு எண் : 098411 91397

Kaala Paani Novel By M Rajendran Novelreview By S Subbarao. நூல் அறிமுகம்: டாக்டர். மு. ராஜேந்திரனின் காலா பாணி - ச.சுப்பாராவ்

நூல் அறிமுகம்: டாக்டர். மு. ராஜேந்திரனின் காலா பாணி – ச.சுப்பாராவ்



காலா பாணி

பத்து பதினைந்து ஆண்டுகளுக்கு முன், வரலாறு குறித்த பாரதி புத்தகாலயத்தின் ஒரு சிறு வெளியீட்டில் ஒரு முக்கியமான விஷயத்தைப் படித்தேன். நமக்கு காய்ச்சல், வயிற்றுப் போக்கு என்றால் மருத்துவர் வெளியூர் சென்றீர்களா? கடந்த  2- 3 நாட்களில் வெளியில் சாப்பிட்டீர்களா? என்ன சாப்பிட்டீர்கள் ? என்று கேட்கிறார். இன்னும் சில நாள்பட்ட நோய்களுக்கான சிகிச்சைக்குப் போனால் கடந்த சில வருடங்களாக உங்கள் வேலை, உணவுப் பழக்கம், தூக்கம் போன்ற விபரங்கள் தேவைப்படுகின்றன. சர்க்கரை நோய் போன்ற நோய்களுக்கு உங்கள் பெற்றோர், தாத்தா பாட்டிக்கு இந்த நோய் இருந்ததா என்ற பழைய கதை தேவை. எனவே தனி மனிதனின் நோயைத் தீர்க்க அவனது பழைய வரலாறு அவசியம்.

சமூகத்தின் நோயைத் தீர்க்க சமூகத்தின் பழைய வரலாறு அவசியம் என்று அந்த நூலாசிரியர் சொல்லியிருப்பார்.  நான் அதற்கு முன்பிருந்தே வரலாற்று நூல்களை மிக ஆர்வமாகப் படிப்பேன் என்றாலும், மேற்சொன்ன கருத்தைப் படித்த பிறகு கூடுதல் அக்கறையோடும், கவனத்தோடும் வரலாற்று நூல்களைத் தேடித் தேடிப் படிக்க ஆரம்பித்தேன். அப்படியான தேடலில் சமீபத்தில் கிடைத்தது தான் டாக்டர்.மு.ராஜேந்திரன், இ.ஆ.ப அவர்கள் எழுதியிருக்கும் காலா பாணி என்ற வரலாற்று நாவல்.

இந்திய விடுதலை இயக்கத்தின் துவக்கப் புள்ளியாக இருந்தது கட்டபொம்மன், மருதுபாண்டியர்களின் வீரம் செறிந்த எதிர்ப்பியக்கங்கள்தான்.  ஏற்கனவே டாக்டர் ராஜேந்திரன் அந்த வீர வரலாற்றை 1801 என்ற நாவலாக எழுதியிருக்கிறார். அது பரவலான கவனத்தையும் பெற்றது. மருது சகோதரர்களுடம் 512 பேரை ஒரே நாளில் தூக்கிலிட்ட கிழக்கிந்தியக் கம்பெனி சிவகங்கை அரசர் வேங்கை பெரிய உடையணத் தேவன், சின்ன மருதுவின் புதல்வன் 12 வயது சிறுவன் துரைசாமி உட்பட 73 பேரை நாடு கடத்தியது. பிரிட்டிஷ் இந்திய வரலாற்றில் நாடுகடத்தப்பட்ட முதல் அரசர் னஉடையணத் தேவன்தான்.  இப்படி நாடு கடத்தப்பட்டவர்களை கம்பெனி காலா பாணி என்ற குறிப்பிட்டது.

காலா பாணிகள் 11.02.1802 அன்று தூத்துக்குடி துறைமுகத்திலிருந்து கிளம்பி 66 நாட்கள் பயணத்தில் பினாங்கு வந்து சேர்கிறார்கள். இதில் உடையணத் தேவன் மட்டும் பிரி்ககப் பட்டு மால்பரோ கோட்டையில் சிறை வைக்கப்படுகிறார்.  19.09.1802 தனது முப்பத்திநான்காவது வயதில் தனிமைச் சிறையில் இறந்து போகிறார் உடையணத் தேவன். அந்தக் கண்ணீர்க் கதைதான் காலா பாணி. இந்தியாவின் முதல் சுதந்திர எழுச்சி தமிழகத்திலிருந்து தான் துவங்கியது என்பதை மிக ஆதாரபூர்வமாக நிறுவும் படைப்பு.  படைப்பிற்கு உதவிய துணைநூல்களின் பட்டியலைப் பார்த்தாலே தெரியும்.

கிழக்கிந்தியக் கம்பெனியின்  ஏராளமான ஆவணங்களை ஆராய்ந்து எழுதப்பட்ட நாவல். ஆனால் இன்று வந்து கொண்டிருக்கும் பல டாக்கு ஃபிக்ஷன் போல் கூகுள் செய்து உட்கார்ந்த இடத்திலிருந்து எழுதப்பட்டதல்ல.  உடையணத் தேவனின் மதுரை சக்கந்தி அரண்மனையிலிருந்து, பினாங்கு, பென்கோலன் என்று உடையணத் தேவனின் அந்த இறுதிப்பயண இடங்கள் அனைத்திற்கும் நேரில் சென்று ஆய்வு செய்திருக்கிறார். கட்டபொம்மன், உடையணத் தேவன் போன்றோரின் இன்றைய வாரிசுகளிடம் நேர்காணல் செய்திருக்கிறார். உடையணத்தேவனின் வாளைக் கையில் ஏந்திப் பார்த்திருக்கிறார்.  கள ஆய்வு ஒரு நாவலுக்கு எந்த அளவு முக்கியம் என்பதை, அதுதான் நாவலின் வெற்றியைத் தீர்மானிக்கிறது என்பதைக் காட்டும் நாவல்.

காலா பாணி அன்றைய கிழக்கிந்தியக் கம்பெனி காலத்து தமிழகம், தமிழகம் மட்டுமல்ல,  அன்றைய  உலகம் பற்றிய ஒரு விரிவான சித்திரத்தைத் தருகிறது. பிரான்ஸில் பிரெஞ்சுப் புரட்சியின் சிறைத் தகர்ப்பை அறிந்து அதைப் போல கோயம்புத்தூரில் ஒரு சிறை உடைப்பை போராளிகள் நடத்துகிறார்கள் என்பது வியப்பாக இருக்கிறது. சோஸ் லெப்டினென்ட், ஆப்காரி காண்ட்ராக்டர், மிஸ்தீஸ், பேஷ்குஷ் கலெக்டர், இஸ்திமிரார் என்று எத்தனை எத்தனை புதுப் புது வார்த்தைகள் ! கம்பெனி பதவிகள், அதிகாரப் படிநிலைகள், அலுவலக நடைமுறைகள், எந்தப் பதவியில் உள்ளவர் வரும் போது எத்தனை குண்டு முழங்க வரவேற்க வேண்டும் என்பது போன்ற சம்பிரதாயங்கள், அன்றைய மருத்துவ முறைகள், பானர்மேனின் சமாதி பினாங்கில் இருப்பது, என்று ஏராளம் ஏராளமான தகவல்கள். 

துலுக்கப் பெண்ணை சாகிபா என்றும், மலாயா பெண்ணை நயோன்யா என்றும், மராட்டிய பெண்ணை மாதுஸ்ரீ அல்லது பாயி சாகேப் என்றும். வெள்ளைக்காரியை மேம் சாகிபா என்றும், பிரெஞ்சுக்காரியை மதான் என்றும் தமிழ் பெண்ணை நாச்சியார் என்றும் அழைக்க வேண்டும் என்ற ஓரிடத்தில் ஒரு படை வீரன் சொல்கிறான். இந்தியாவைச் சுற்றியுள்ள சின்னச் சின்னத் தீவுகளில் கம்பெனியின் ஆட்சி, அங்கு அடிமையாகவும்,  கைதியாகவும் போய் வாழ்நாள் முழுதும் துன்பத்தில் உழலும் தமிழர்கள், சந்தர்ப்பவசத்தால் சற்றே வசதியான வாழ்க்கை கிடைக்கப் பெற்றவர்கள், அவர்கள் தம் சக தமிழர்களுக்குச் செய்யும் மிகச் சிறிய உதவிகள் எல்லாமே மிகையின்றிச் சொல்லப்பட்டுள்ளன.

ஆனால் நாவலில் ஆடம்பரமான மொழிநடை, வர்ணனைகள் எதுவும் கிடையாது. இயல்பான மொழி. ஆசிரியர் தனது மொழித் திறமையைக் காட்ட வேண்டும் என்று எந்த இடத்திலும் வலிந்து மிகையாக எதையும் எழுதவில்லை. ஆனாலும், பெரிய உடையணத் தேவன் தன் சகாக்களோடும்,  கம்பெனி அதிகாரிகளோடும் கையறு நிலையில் பேசும் போது எனக்கு கண் கலங்குகிறது. அதுவும் அந்த கடைசி மூன்று பக்கங்கள்….

அன்றாடம் நான்  பெரியார் பேருந்து நிலையத்திற்கு எதிரே மதுரையின் கோட்டையின் மிச்சத்தைப் பார்ப்பேன். என் மதுரைக் கோட்டை என்று என்னையறியாமல் பெருமிதம் கொள்வேன். நாவலைப் படித்து முடித்த அன்று அந்தக் கோட்டை மதிலைப் பார்த்த போது அந்த பெருமிதம் இல்லை. நாடு கடத்தப்பட்ட உடையணத் தேவனைக் கடைசியாகப் பார்ப்பதற்காக அந்தக் கோட்டை வாசலில் நின்று அவரது மனைவி மருதாத்தாள் கெஞ்சிக் கதறியதும், காவலன் அவளை விரட்டி விட்டு கோட்டைக் கதவை இழுத்து மூடியதும் தான் கண்முன் நின்றன. முதன் முறையாக என் மதுரைக் கோட்டை மதிலைப் பார்த்து நான் கண்கலங்கி நின்றேன்.

பழைய வரலாற்றைச் சொல்வதன் வழியே,  இன்றும் நாம் கைவிடக் கூடாத ஏகாதிபத்திய எதிர்ப்பை ரத்தமும், சதையுமாகச் சொல்லிய டாக்டர்.மு.ராஜேந்திரன், இ.ஆ. ப அவர்களின் கரம் தொட்டு வணங்கி வாழ்த்துகிறேன்.

நூல்: காலா பாணி
ஆசிரியர்: டாக்டர். மு. ராஜேந்திரன், இ.ஆ.ப
வெளியீடு: அகநி வெளியீடு
விலை: ரூ650.00
பக்கம்: 536