ச. தமிழ்ச்செல்வன்(S.Tamilselvan) எழுதிய எசப்பாட்டு ஆண்களோடு பேசுவோம்(esappaatu) : நூல் அறிமுகம் Bharathi Puthakalayam - https://bookday.in/

எசப்பாட்டு ஆண்களோடு பேசுவோம் : நூல் அறிமுகம்

எசப்பாட்டு ஆண்களோடு பேசுவோம் : நூல் அறிமுகம்   நூலின் தகவல் :  நூல் : எசப்பாட்டு ஆண்களோடு பேசுவோம் ஆசிரியர் : ச. தமிழ்ச்செல்வன் வெளியீடு :  பாரதி புத்தகாலயம் முதல் பதிப்பு : நவம்பர் 2018 பக்கம் :…
ச. தமிழ்ச்செல்வன் S.Tamilselvan in Kaveri Aatrankarai the rich literary tradition and the need for a new library Uraar Vanaindha Noolagam - https://bookday.in/

ஊரார் வனைந்த நூலகம் – ச. தமிழ்ச்செல்வன்

ஊரார் வனைந்த நூலகம் - ச. தமிழ்ச்செல்வன்   காவிரி ஆற்றங்கரையில் அமைந்திருக்கும் அழகிய ஊர் முசிறி. எழுத்தாளர் ராஜம் கிருஷ்ணன் பிறந்த ஊர். ஊருக்கு வெளியே ஆற்றின் கரையில் இயங்கி வந்தது அரசு நூலகம். அந்த நூலகக் கட்டிடம் காலத்தால்…
வாசிப்பு என்னும் ரசவாதம் | தமுஎகச (TNPWAA) கோவை இலக்கியச் சந்திப்பு 250 - ச. தமிழ்ச்செல்வன் S. Tamilselvan படைப்புகள் திறனாய்ரங்க நிகழ்வு | https://bookday.in/

வாசிப்பு என்னும் ரசவாதம்

வாசிப்பு என்னும் ரசவாதம் முக்கால் லட்ச ரூபாய் புத்தகங்கள் பரிமாற்றம் தமுஎகச கோவை இலக்கியச் சந்திப்பு 250 - ச. தமிழ்ச்செல்வன் படைப்புகள் திறனாய்ரங்க நிகழ்வு குறித்து.... தமுஎகச பொன் விழா இலச்சினை வெளியீடு மற்றும் கோவை இலக்கியச் சந்திப்பு 250…
நூல் அறிமுகம்: ச. தமிழ்ச்செல்வனின் ’புதுமைப்பித்தன் கதைகள்’ – செ.தமிழ்ராஜ்

நூல் அறிமுகம்: ச. தமிழ்ச்செல்வனின் ’புதுமைப்பித்தன் கதைகள்’ – செ.தமிழ்ராஜ்




நூல் : புதுமைப்பித்தன் கதைகள்
ஆசிரியர் : ச. தமிழ்ச்செல்வன்
விலை : ரூ.₹145/-
வெளியீடு : பாரதி புத்தகாலயம்

தொடர்புக்கு : 044 – 24332424 /24330024/
விற்பனை : 24332924
புத்தகம் வாங்க : www.thamizhbooks.com
[email protected]

இன்றைய காலத்தை நவீன யுகமென்று சொல்லிக்கொண்டிருக்கின்றோம். எண்பது ஆண்டுகளுக்கு முன்னே ஒரு தமிழ் எழுத்தாளன் உலகின் ஆகச்சிறந்த எவரும் முன்வைக்காத யோசிக்காத முற்போக்கான செய்திகளை சிறுகதை வாயிலாக நமக்கு தந்துவிட்டு போயிருக்கின்றார். இன்றைய எழுத்துலகம் கூட தயங்கி தயங்கி எழுதுகிற ஒழுக்கம், புனிதம், பண்பாடு, கலாச்சாரம் யாவற்றையும் தனது எழுதுகோலால் உடைத்தெரிந்துவிட்டு சாகாவரம் பெற்ற எழுத்தாளனாய் மிளிர்கிறார். ஒவ்வொரு வார்த்தையிலும் இவர் செய்யும் மாயாஜாலங்கள் எக்காலத்திலும் புதுமையான பேசுபொருளாய் மெருகேறிக் கிடக்கும்.

முதல் கதையான பொன்னகரமே நகர வாழ்க்கையின் நரக சித்திரத்தை வரைந்தளித்துவிடுகிறார்.
கற்பெனும் கற்பிதத்தை எளிய மக்கள் உடைத்தெரியும் லாவகத்தை பதிவாக்கி அதிர்ச்சிக்குள்ளாகும் சமூகத்தை சமநிலைக்கு உட்படுத்துகிறார். உடம்பின் மீதான மேற்கட்டுமானங்களை தகர்த்தெறிந்து இதில் ஒன்றுமேயில்லை என தயக்கச் சட்டைகளை உரித்து எறிகிறார். உடலரசியல் உடல்மொழி மீதான இன்றுவரைக்கும் இருக்கும் மர்ம முடிச்சுகளை அவிழ்த்தெறிகிறார். தொகுப்பில் 17 கதைகள் இருக்கின்றன 5 கதைகள் உடல் மேல் போர்த்தப்படும் பத்தாம் பசலித்தனங்களை துகிலுரித்து காட்டுகின்றன. அதற்காக ஆண்களையும் பெண்களையும் தறிகெட்டு ஒடச்சொல்லவில்லை. நீங்கள் புரிந்துகொள்வதில் சற்று பிசகினாலும் மாபெரும் சிக்கலை ஏற்படுத்திவிடக்கூடும். அபாயங்களும் இருக்கின்றன. எல்லோருக்குமான மெல்லிய கோட்டை நீங்கள் எப்படி வரைந்து கொள்கிறீர்கள் என்பதில் இருக்கின்றது உங்கள் அறிவு நாணயம்.

தமிழ்கூறும் நல்லுலகில் சிறுகதையின் வரலாற்றை எவர் தொகுத்தாலும் முதலிடத்தில் இருத்தக்கூடிய செல்லம்மாள் வாசிக்கும் ஒவ்வொரு முறையும் மனதில் ரணத்தை ஏற்படுத்தக்கூடியது கசிந்தோடும் கண்ணீரை கட்டுப்படுத்திக்கொள்ளாமல் எவராலும் வாசித்து வெளியேறிவிட முடியாது. தமிழ்த் திரையுலகம் செல்லம்மாக்களை காட்சிப்படுத்திடாதது ஆச்சர்யமானதொன்றுமில்லை.நாற்றமடிக்கும் மசாலா குப்பைகளிலிருந்து இவர்கள் முதலில் மீண்டெழ வேண்டும்.

சொ. விருத்தாச்சலம் எனும் இயற்பெயரை கொண்ட புதுமைப்பித்தனை தமிழ்க் கதையுலகு கொண்டாடுகிறதென்றால் அவரின் கதைக்கட்டுமானம் சொற்தேர்வு சிறிதுகூட பிசிறடிக்காத வார்த்தைகள் சின்ன சின்ன வரிகளில் கூட அரசியல் பகடி நைய்யாண்டி சமூக விமர்சனம் எனக் கற்றுக்கொள்ள ஏராளமான செய்திகள் இருக்கின்றன. மகாமசானம் சிறுகதையில் நகரத்தின் அவஸ்தையை அவசரத்தை சொல்லி வருகையில் போகிறபோக்கில் அப்பொழுது அவன் ரஸ்தாவின் ஓரத்தில் உள்ள நடைபாதையில் படுத்து சாவாசகமாய் செத்து கொண்டிருந்தான். என்ற வரிகளை வாசித்ததும் ஒருகணம் திக்கித்து மனம் நின்றுவிடுகிறது. 5 பக்கச் சிறுகதையில் நகரத்தின் நெருக்கடிகளை பேசுகிறார். செத்துப்போன பிச்சைக்காரனை அவனின் இறுதிக்காரியத்திற்கு பிச்சையெடுக்கும் இன்னொரு யாசகனை தகப்பனை குழந்தையை துயரவியல் காட்சியை என்ன நடந்தாலும் ஊர்ந்து செல்லும் சமூகத்தின் எருமைமாட்டுத்தனத்தை படம்பிடிக்கின்றார்.

இப்படி பேச விவாதிக்க வியக்க இத்தொகுப்பில் சிறந்த கதைகள் இருக்கின்றது சிறந்ததொரு சிறுகதையை எழுதவேண்டும் என தீர்மானித்துவிட்டால் உங்களுக்கு வேறு வாய்ப்பே இல்லை புதுமைப்பித்தனைச் சரணடைவதை தவிர செம்மொழி கிரீடத்தைச் சூட்டிக்கொண்டாலும் தமிழ்ச் சிறுகதையின் வயது இரண்டு நூற்றாண்டுகள்தான் அதன் துவக்க காலத்திலேயே அழுத்தமாக தனது தனித்துவமான முத்திரையை பதிவு செய்திருக்கும் புதுமைப்பித்தனின் கதைகள் காலத்தின் ரேகையில் என்றும் படிந்திருக்கும்.

பெரும்பாலான கதைகளில் மொழிக்கலப்படமும் பிராமண சமூகமொழியும் ஒரு எள்ளல் நடையுடன் பயன்படுத்தப்பட்டிருக்கும். புது வாசிப்பில் இடரலாக இருந்தாலும் தொடர் வாசிப்பில் அத்தடைகள் உங்களுக்கு இராது. ஒரு படைப்பாளரை அறிமுகப்படுத்துவதென்பது சோற்றுப் பதம்தான். புதுமைப்பித்தனின் முழுத்தொகுப்பையும் வாசிக்கத் துவங்குவது முழுமையானதொரு வாசிப்பை நோக்கி முன் நகர்கிறீர்கள் என்பது அர்த்தமாகும். இவ்வாசிப்பு இயக்கம் உங்களுக்கு அம்மாதிரியான வெளிச்சகீற்றுகளை ஏற்படுத்தி தருகின்றது. நமக்குள்ளிருக்கும் அறியாமை இருட்டுகள் அதன் வழியே வெளியேறட்டும். நம்முன்னே ஆயிர ஆயிரமான கதைகள் கொட்டிக்கிடக்கின்றன. ஒவ்வொரு மனித வாழ்வியலும் காலத்தின் பதிவாய் அதை எழுதிப்பார்க்கட்டும். சொல்லித் தீராத கதைகளும் எழுத்தில் வடிக்காத சொற்களும் நம் வசமே. வானளவு வாசிப்போம் ஒரு கையளவாவது எழுதிச் செல்வோம் நன்றி நண்பர்களே.

செ.தமிழ்ராஜ்
வண்டியூர்
மதுரை-625020
9965802089

நூல் அறிமுகம்: ச.தமிழ்ச்செல்வனின் ’கேட்டதால் சொல்ல நேர்ந்தது’ – பிரபாகர் பாண்டியன்

நூல் அறிமுகம்: ச.தமிழ்ச்செல்வனின் ’கேட்டதால் சொல்ல நேர்ந்தது’ – பிரபாகர் பாண்டியன்




நூல் : கேட்டதால் சொல்ல நேர்ந்தது
ஆசிரியர் : ச.தமிழ்ச்செல்வன்
விலை : ரூ.₹200/-
வெளியீடு : பாரதி புத்தகாலயம்
தொடர்புக்கு : 044 – 24332424 /24330024/
விற்பனை : 24332924
புத்தகம் வாங்க : www.thamizhbooks.com
[email protected]

கேட்டதால் சொல்ல நேர்ந்தது என்ற நூலில் கேள்விகள் கேட்ட அனைத்து நெறியாளருக்கும் மிகுந்த நன்றியை நான் சொல்ல கடமைப்பட்டுள்ளேன். ஏனெனில் இந்த நேர்காணல் தொகுப்பு என்பது தமிழ் இலக்கிய வரலாற்றில் ஒரு எழுத்து பாரம்பரிய மிக்க குடும்பத்தின் மிக முக்கிய எழுத்தாளராக இருந்துவரும் திரு.தமிழ்ச்செல்வன் அவர்களின் பல்வேறு காலகட்டத்தில் நடத்தப்பட்ட நேர்காணல்களாகும்.

இந்த நேர்காணலில் ச.தமிழ்ச்செல்வன் அவர்களின் வாழ்க்கையின் பரிணாமங்கள் குறித்த கேள்விகளுக்கு நேர்மையான முறையில் அவர் பதிலளித்துள்ளார். 13 நேர்காணல்களில் அவரது முழுமையான ஆளுமையைப் புரிந்துகொள்ளும் விதத்தில் பதில்களாகப் பகிர்ந்துள்ளார்.

இந்த நேர்காணல்களில் பெரும்பாலான கேள்விகள் அவரது சிறுகதை குறித்தே இருந்துள்ளன. ஏனெனில் அவரது சிறுகதைகளின் தாக்கம் எவ்வாறு இருந்திருக்கும் என்பதுதான் சொல்லாமல் விளங்கும் செய்தி ஆகும். கிட்டத்தட்ட எல்லா நேர்காணல்களிலும் தவறாது ஏன் சிறுகதை எழுதவில்லை என்பதும் அதற்கு அவர் இன்னமும் எழுதாமல் 150,200 கதைகளும் உள்ளன என்றால் அரவது மேதமையை புலமையை வியக்காமல் இருக்க முடியாது.

மேலும் ச.தமிழ்ச்செல்வன் அவர்களின் பார்வை மற்றும் சிந்தனைக்கு ஒரு சான்றாக பண்பாடு குறித்த கேள்வியில் அவர் சொன்ன பதில் இன்னமும் பண்பாடு என்பது ஒற்றை பொருளில் தான் புரிந்து கொள்ளப்படுகிறது. மனிதன் பரிணாம வளர்ச்சியில் அவன் சமூகமயமாதலின் போது தேவைப்பட்ட பண்பாடு என்பது வேறு. தற்போது முதலாளிகளின் லாப உற்பத்திக்கேற்ற அடிமைகளினை உருவாக்கும் விதிமுறைகளையும் அதனால ஏற்படுத்தப்படும் ஒழுங்குகளையும் தான் பண்பாடு என்றால் அது இப்போது தேவை இல்லை என்பது சமூகம் மற்றும் கலாசாரத்தின் மீது அவர் கொண்டுள்ள மக்கள் நலன் சார்ந்த எழுத்தாளர் என்பதை காட்டுகிறது.

ஒரு பொதுவுடைமை இயக்கத்தின் பிரதிநிதி என்றால் அவர் கடவுள் மறுப்பாளர் என்றும் அதன் மீது தீவிர எதிர்ப்பு வெறுப்பு கொண்டவர் என்கிற கருத்தை அவர் மாற்றி அமைகிறார். எவ்வாறெனில் கடவுள் என்பதில் அவர் மக்களின் கடவுள் நம்பிக்கையை பற்றி பேசுகிறார். “இங்கு கருணை இருந்திருந்தால் மனிதன் புதிதாக ஒரு கருணை வடிவத்தை உருவாக்க வேண்டிய அவசியம் இல்லை” என மார்க்சின் கருத்தினை எளிமையான முறையில் விளக்கம் கொடுக்கின்றார். கடவுள் நம்பிக்கை மற்றும் மதம் ஆகிய இரண்டின் எல்லைகளையும் இதில் கடவுள் நம்பிக்கை எவ்வாறு அரசியல்படுத்தப்படுகிறது என்பதையும் எளிமையாக சொல்கிறார். இது போன்றே சாதி குறித்தும் அவர் சாதியையும் அரசியல் படுத்தப்படுகிறது என்பதையும் விளக்குகிறார். ஒட்டு அரசியல் இருக்கும் வரை மதம் மற்றும் சாதி என்பது அரசியல் செய்வோரின் பாதுகாப்பு கவசமாகவும், ஒட்டு பெறும் அட்சய பாத்திரமாகவும் உள்ளது என்கிறார்.

கல்வி குறித்த கேள்விகளுக்கு கல்வி எவ்வாறு இன்று மக்களுக்கு புகட்டப்படுகிறது என்பதையும் அது எவ்வாறு மக்களின் சிந்தனையை மழுங்கடித்து கடிவாளம் போட்ட குதிரை போல இளைஞர்களையும் ஆளும் வர்க்கங்களுக்கு சாதகமாக அமைக்கப்பட்டுள்ளது என்பதையும் கூறியுள்ளார். பல்வேறு நாடுகளில் உள்ள கல்வி கற்பிக்கும் முறைகளையும் அவைகளை நமது நாட்டில் நடைமுறைப்படுத்த உள்ள சாத்தியக்கூறுகளையும் விவரிக்கின்றார்.

இளம் படைப்பாளர்களுக்கு தனது வாசிப்பு மற்றும் தனது எழுத்து அனுபவங்கள் தன்னை எழுதத் தூண்டிய அனுபவங்கள். தனது அஞ்சல்துறை அனுபவம் அறிவொளி திட்டப்பணிப் பயணம் குறித்தவை தனது இளமைக்கால அனுபவங்கள் யாவும் பயனுள்ள விதத்தில் பகிர்ந்துள்ளார். தனது அபிமான எழுத்தாளரான கு.அழகிரிசாமி அவர்களின் எழுத்தும் அவரது எழுத்து தன்னைப் பாதித்த அம்சங்கள் குறித்தும் அவரைப் போல வெறும் நாய் மற்றும் அன்பளிப்பு போன்ற ஒரு நூறு கதைகளாவது எழுதிவிடமாட்டமா என்கிற ஏக்கத்தையும் அவர் வெளியிடாமல் இல்லை.

தனது இலக்கிய பயணத்தில் தனது இணையரது பங்கு பற்றி கூறும்போது அவர் தனது இணையர் பொருளாதார தேவைகளையும் குடும்பத்தையும் நன்றாக கவனித்துக் கொண்டதாலேயே தன்னால் இந்த இலக்கிய பணியை சிறப்பாக செய்ய இயலும் என்றவர், தாமும் பெண் விடுதலை குறித்தும் பெண் சுதந்திரம் எவ்வாறு குடும்ப அமைப்பிற்குள்ளிருந்து துவங்க வேண்டும் என்பதை தெளிவாக எடுத்துரைத்துள்ளார். மேலும் ஆண்கள் தமது ஆண் என்கிற எண்ணத்தை வீட்டின் சமையலறையில் இருந்து பெண்களுக்கு முழு விடுதலை வழங்கவேண்டும் என்பதை சொல்லியதோடு மட்டுமல்லாது தமது வீட்டிலும் செயல்படுத்தி வருவதாகவும் கூறியுள்ளார்.

மேலும் இந்த நூலை வாசிக்கும் போது எனக்கு ஏற்பட்ட உணர்வானது சிறுவயதில் ச.தமிழ்ச்செல்வன் அவர்களுக்கு ஏற்பட்டதை போலவே இருந்தது. அவர் தமது அம்மாவின் தந்தை (தாத்தா) வீட்டிற்க்கு சென்ற போது ஏற்பட்ட அனுபவங்களை சொல்லும் போது என்னுடைய சிறுவயது நினைவுகள் நிழலாடியது, என்னை அந்த பால்ய வயதிற்கே கூட்டிச்சென்றது இந்த நூலின் மறக்க இயலாத பக்கங்களாகும்.

இலக்கியம் குறித்து சொல்லும் பொது “வாழ்வைப் புரிந்து கொள்வதற்கான, மனித மனங்களைப் புரிந்து கொள்வதற்கான, மனிதன் கண்டுபிடித்த ஒரே சாதனம், இலக்கியம்தான்” என கூறுகிறார் இலக்கியம் குறித்து இதற்கு மேல் எதுவும் கூறிவிட இயலாது என எண்ணுகிறேன்.

எழுத்தாளர்கள் குறித்து: “குழந்தைகளுக்கு தனது துயரம் மற்றவர்களின் துயரம் என்று தெரியாது, அனைவரது துயரத்தையும் தனதாகவே நினைப்பார்கள். அதனால் தான் எழுத்தாளர்களுக்கு குழந்தை மனநிலை வேண்டும் என்று சொல்வார்கள்” என எழுத்தாளர்களின் மனநிலை எவ்வாறு இருக்கும் என தனது மனதினையும் கன்னாடியைப் போல பிரதிபலித்துள்ளார் எனக் கொள்ளலாம்.

மேலும் இந்த நூலில் நமக்கு அரசியல் குறித்த கருத்தாகட்டும், காதல், மதம், கடவுள் நம்பிக்கை, பொதுவுடைமை இயக்கம், சிறுகதை, கட்டுரை தொகுப்பு, போன்ற எது குறித்த கருத்துகளுக்கும் இங்கு நமக்கு பரிந்துரைகளும் புரிதல்களும் கிடைக்கும் என்பதை நான் உறுதியாக கூறுவேன்.

நன்றி:
பிரபாகர் பாண்டியன் முகநூல் பதிவிலிருந்து…..

நூல் அறிமுகம்: ச. தமிழ்ச்செல்வனின் தமிழ்ச் சிறுகதையின் தடங்கள் – தேனி சீருடையான்

நூல் அறிமுகம்: ச. தமிழ்ச்செல்வனின் தமிழ்ச் சிறுகதையின் தடங்கள் – தேனி சீருடையான்




நூல் : தமிழ்ச் சிறுகதையின் தடங்கள்
ஆசிரியர் : ச. தமிழ்ச்செல்வன்
விலை : ரூ.₹ 895/
பக்கம் 895.
வெளியீடு : பாரதி புத்தகாலயம்
தொடர்புக்கு : 044 – 24332424 /24330024/
விற்பனை : 24332924
புத்தகம் வாங்க : www.thamizhbooks.com
[email protected]

மண்ணும் மனித வாழ்வும் கதைகளை உருவாக்குகின்றன.

கதைகளால் ஆனது உலகம் என்கிறார்கள். கதைகளும் கலைகளும்தான் மொழியையும் வாழ்வியல் பரிணாமத்தையும் உருவாக்கின “எத்தனைகோடிப்பேர் பூலோகத்தில் பிறந்து மடிந்திருக்கிறார்கள். நிஜத்தில் இன்று அவர்கள் இல்லை. ஆனால் அவர்கள் விட்டுச் சென்ற சிந்தனைகள் கண்ணுக்குத் தெரியாமல் பிரபஞ்சத்தை நிறைத்திருக்கின்றன” என்கிறார் புதுமைப்பித்தன். (அன்னையிட்ட தீ)

ஆம்! மனிதர்கள் விட்டுச் சென்ற சிந்தனைகளின் ஒரு பகுதிதான் கதைகள். கதை என்பது மனிதர்களால் அல்லது இயற்க்கையால் ஆனது. வேறு வார்த்தையில் சொல்வதென்றால் மனிதப் பாத்திரங்களின், இயற்கையின் இயக்கமே கதை. ஒரு மனிதனை மையப் படுத்தி இன்னொரு மனிதன் வர்ணிப்பது கதை. ஒருவரை அல்லது ஒரு சம்பவத்தை அல்லது ஒரு விலங்கை வர்ணிக்கிறோம் என்றால் வாழ்வின் நிழல் படிந்து விடுகிறது. சொல்லொணாத் துயரங்களின் ஆழத்தில் இருந்தும் மகிழ்ச்சியின் அடிச்சுவட்டில் இருந்தும் கதைகள் உருவாகின்றன. அந்தக் கதைகள் சொல்லும் செய்தியிலிருந்து அடுத்தகட்ட நகர்வுக்கான தரவுகள் கிடைக்கின்றன.

ஆதி நாளில் இருந்து கதைகள் சொல்லியும் கேட்டும் மனித சமுதாயம் வளர்ந்து வந்திருக்கிறது. ஆனால், தமிழில் நவீனச் சிறுகதையின் தோற்றம் மற்றும் வளர்ச்சி பற்றி விவாதிக்கும் ஒரு ஆய்வுநூல் இப்போது வந்திருப்பது நல்ல முன்னெடுப்பு. இந்நூல் நாற்பதுக்கும் மேற்பட்ட நூல்களைப் படைத்துத் தமிழ் உலத்துக்கு அற்பணித்த ச. தமிழ்ச்செல்வன் அவர்களால் பிரம்மாண்டமான வடிவில் எழுதப் பட்டுள்ளது. இதை ஒரு வாழ்நாள் சாதனை என்று சொல்வதில் எந்தப் பிசிறும் இல்லை. அவருடைய நீண்ட நெடிய வாசிப்பின் தாக்கம் நூல் நெடுகப் பரவியும் விரவியும் கிடக்கிறது.

நவீனத் தமிழ்ச் சிறுகதை எழுதத் தொடங்கிய காலம் எது என்ற கேள்விக்கு அவருக்குக் கிடைத்த விடை வா வே சு அய்யர் எழுத ஆரம்பித்த 1910களின் காலம் என்பதுதான். “குளத்தங்கரை அரசமரம்” கதை தமிழின் முதல் சிறுகதை. அந்தப் படைப்பில் இருந்துதான் தமிழ்ச் சிறுகதை வரலாறு துவங்குகிறது என்ற முடிவுக்கு வந்து இந்நூலை எழுத ஆரம்பிக்கிறார் தமிழ்ச் செல்வன்.

சி. சு செல்லப்பா “தமிழ்ச் சிறுகதை” பிறக்கிறது என்ற கட்டுரையில் பாரதி எழுதிய “ஆறில் ஒரு பங்கு” கதைதான் முதல் சிறுகதை என்கிறார். 1888ல் சிங்கப்பூரைச் சேர்ந்த மக்தூன் சாகிப் எழுதிய “வினோத சம்பாஷணை” முதல் தமிழ்ச் சிறுதை என்ற கருத்தும் உண்டு. சில நாவல்கள் எழுதிய ஆசிரியர் ஆர். எஸ். ஜேகப் சொல்வது; ”சரிகைத் தலைப்பாகை” என்ற தலைப்பில் அருள்மிகு சாமுவேல் பவுல் அய்யர் என்பவரால் 1887 ஆம் ஆண்டு ‘நற்போதகம்’ என்ற மாத இதழில் எழுதியதே முதல் சிறுகதை என்கிறார். இப்படி முதல் சிறுகதை எழுதப்பட்ட காலம் எது என்பதில் பல கருத்து வேறுபாடுகள் இருந்த போதிலும் ச. தமிழ்ச்செல்வன் அவற்றையெல்லாம் புறந்தள்ளிவிட்டு, 1913 ஆம் ஆண்டுதான் தமிழ்ச்சிறுகதையின் துவக்க காலம் என்கிறார். “குளத்தங்கரை அரச மரம்” தமிழின் முதல் சிறுகதை.

இந்த ஆய்வுநூலில் 1913ல் இருந்து 70கள் வரை 51 படைப்பாளிகளின் சிறுகதைகளை விவாதிக்கிறார் நூலாசிரியர். முன்னுரையில் ”இது ஆய்வு நூல் அல்ல” என்று சொன்னாலும் வாசிப்பு அனுபவத்தில் ஆய்வுப் புலமே பதியமிடப்பட்டிருக்கிறது. ஆய்வு என்றால் என்ன? அது பல விவாதங்களுக்கு உட்பட்டது என்றாலும் சுருக்கமாக இப்படிக் கணிக்கலாம். “ஏற்கனவே உள்ள கருத்தியலை விவாதித்து, அதற்குள் ஊடாடி நிற்கும் புதிய பருப்பொருளை வெளிக் கொண்டு வருவதே ஆய்வு.” தண்ணீருக்குள் மின்சாரம் இருக்கிறது என்பது நிஜம்; ஆனால் தண்ணீரின் வேகத்துக்குள் ஒரு சக்கரத்தின் விசையை ஊடாட விடும்போதுதான் அந்த நிஜம் ஒரு பருப்பொருளாய் மனிதப் பயன்பாட்டுக்குக் கிடைக்கிறது. நீரின் விசையைச் சக்கரச் சுழற்சிக்குள் செலுத்துவதே ஆய்வு; விடையாக வருவது மின் சக்தி.

எதை, எப்படி, எந்தவிதமாய் எழுதுவது என்ற கேள்விக்கான விடையைத் தேடுவது மட்டுமல்லாமல், ஒவ்வொரு படைப்பின் வர்க்க சேர்மானம், அரசியல் கணக்கு என்பவற்றையும் தேடிக் கண்டடைகிறது நூல்.

அய்ரோப்பாவில் நிகழந்த தொழிற்புரட்சிக்குப் பின், நிற்க நேரமின்றி அலையும் வாழ்க்கைமுறையில் இருந்துதான், சிறுகதை இலக்கியத்தின் தேவை தோன்றியது என்கிறார் தமிழ்ச்செல்வன். அவசர அவசரமாய் வாசித்து முடிக்க வேண்டிய வாழ்க்கை நிர்ப்பந்தம். ஒரு சின்ன சம்பவத்தை இலக்கியமாக்கிவிட வேண்டும் என்ற எழுத்தாளரின் மன வியாகூலம்.! இவ்விரண்டும் சேர்ந்தே சிறுகதை இலக்கியத்தை சாத்தியப் படுத்தின. தொழிற்புரட்சி நிகழ்ந்த பின் மனித இயக்கம் வேகமடைகிறது எனக் கண்டறிந்து அந்த வேகத்துக்குத் தகுந்து இலக்கிய ஆக்கம் வேறு பரிமாணம் கொள்கிறது என்பதே ஓர் ஆய்வுமுறைதானே!

“மங்கையர்க்கரசியின் காதல்” என்ற தொகுப்பே (வ வே சு அய்யர் எழுதியது) தமிழின் முதல் சிறுகதைப் படைப்பு. வ வே சு அய்யர் மறைவுக்குப் பிறகு அவர் மனைவி பாக்கியலட்சுமி தொகுத்து வெளியிட்டார். (ஆக முதல் தொகுப்பாசிரியர் பாக்கியட்சுமி என்பது தெரிகிறது.) ராஜாஜி இந்த நூலைப் பற்றிக் குறிப்பிடுவது முக்கியமானது. “இக்கதைகளை ஒருவன் படித்துப் புத்தகத்தைக் கீழே வைக்கும் காலத்தில் அவன் மனதில் பரிசுத்தமான உணர்ச்சிகளும் உன்னதமான எண்ணங்களும் ததும்பும்.”

வ வே சு அய்யர், மாதவய்யா, பாரதி ஆகியோர் தமிழ்ச் சிறுகதை இயக்கத்தின் முதல் மூவர் என அழைக்கலாம். இவர்கள் 1926க்கு முன்பே மரணமடைந்து விட்டனர். அதனால் இவர்கள் எழுதிய காலம் தமிழ்ச் சிறுகதையின் முதல் காலகட்டம் ஆகும். அடுத்தடுத்த காலகட்டத்தில் புதுமைப்பித்தன் உள்ளிட்ட மணிக்கொடி எழுத்தாளர்கள் வருகிறார்கள்.

தமிழிலும் ஆங்கிலத்திலும் பெரும் புலமை பெற்றிருந்த மாதவையா அந்தக் காலத்தின் புரட்சிப் படைப்பாளி என நிறுவுகிறார் ஆசிரியர். ஜாதி ஆதிக்கமும் தீண்டாமைக் கொடுமைகளும் கொடிகட்டிப் பறந்துகொண்டிருந்த காலத்தில், தான்பிறந்த பிராமண ஜாதிக்கு எதிரான கருத்தை உள்ளடக்கமாக வைத்துக் கதை எழுதினார்.. சாதி எதிர்ப்பு, இந்து மத சீர்கேடுகளைச் சாடுதல், பெண் கல்வி, ஆண்பெண் சமத்துவம், விதவை மறுமணம் போன்ற கருப்பொருள்களில் முற்போக்குப் படைப்புகளைத் தந்தார். அதனாலேயே சனாதனவாதிகளால் அவர் வெறுத்து ஒதுக்கப்பட்டார். “சுய சாதி நிராகரிப்பு” என்ற இன்றைய பேசுபொருளை அன்றே தன் வாழ்க்கையில் கடைப்பிடித்தார்; அல்லது தன் படைப்புகளில் பதிவுசெய்தார்.

1883ஆம் ஆண்டு “சட்டத்தின் முன் அனைவரும் சமம்” என்ற சட்டம் ஆங்கில அரசால் இயற்றப்படுகிறது. மனமுவந்து வரவேற்ற மாதவையா “தந்தையும் மகனும்” “குதிரைக்காரக் குப்பன்” “தில்லை கோவிந்தன்” ஆகிய சிறுகதைகளில் அதைப் பதிவு செய்கிறார். “பார்ப்பானை ஐயனென்ற காலமும் போச்சே” எனப் பாடிய பாரதியைப் போலவே சிறுகதைகளில் செய்து காட்டினார் மாதவய்யா.

முதல் சிறுகதை ஆசிரியர் வ வே சு அய்யர், தான் நடத்திய குருகுலத்தில் பிராமணர்களுக்கும் சூத்திரர்களுக்கும் தனித்தனிப் பந்தி வைக்கப்பட்டது. அதற்கான எதிர்வினைபோல் எழுதப்பட்ட கதை “ஏணியேற்ற நிலயம்.” இன்றைக்கும் ஆய்வாளர்களால் வியந்து போற்றப்படும் கதை அது. (மாதவய்யர் என்ற தன் பெயரை மாதவய்யா என மாற்றிக் கொண்ட்தே புரட்சிதானே?) ஆக, மாதவய்யா ஒரு புரட்சிப் படைப்பாளி என நிறுவுகிறார் தமிழ்ச்செல்வன்.

தமிழ்ச் சிறுகதை இயக்கத்தின் மிக முக்கிய முன்னோடி புதுமைப்பித்தன். அவர் படைப்புகளின் அடிநாதம் சமூக நையாண்டியே. சமூக ஏற்றத் தாழ்வுக்கு எதிரான கருத்தியல் அவர் படைப்புகளில் மிளிர்கிறது. ஆனாலும் இலக்கியம் படைப்பது சமூகத்தை உய்விப்பதற்காக அல்ல என்ற கருத்தைக் கொண்டிருந்தார். “தனது ஆத்ம திருப்திக்காக எழுதிக் கொள்வதைவிட விவேகமான காரியம் வேறு கிடையாது” என்றும் ”கலை தர்மஸ்தாத்திரம் கற்பிக்க வரவில்லை” என்றும் பிரகடனப் படுத்தினார்.

கிறித்துவ மதத்துக்கு மாறுவதற்கான வாய்ப்பை இந்து மதம்தான் தருகிறது எனக் கண்டறிந்து எழுதினார் மாதவ்வய்யா என்றால் இஸ்லாமிய கிறித்துவ மதங்களின் மீதும் மதமாற்ற நடவடிக்கை மீதும் புதுமைப் பித்தனுக்குக் கடுமையான ஒவ்வாமை இருந்தது. ”புதியகூண்டு,” ”கொடுக்காப்புளி மரம்” ”நியாயம்” போன்ற கதைகளிலும் சில கட்டுரைகளிலும் அது வெளிப்பட்டிருக்கிறது. புதுமைப் பித்தனின் இந்த உள் முரணை விரிவாக விவாதிக்கிறது நூல். திகசிக்குப் பிறகு, புதுமைப் பித்தனை விமர்சனப் பார்வையோடு அணுகியவர் தமிழ்ச் செல்வனாகத்தான் இருக்கும். இது ஒரு முக்கியமான ஆய்வுநிலை என்று நான் கருதுகிறேன்.

புதுமைப்பித்தன் படைப்புகளில் இதுபோன்ற பலவீனங்கள் இருந்தாலும் “அவர் அளவுக்குத் தன் சமகாலத்தை, அதன் அரசியல், பொருளாதாரத்தை, பண்பாட்டுக் கூறுகளைத் படைப்புகளின் வழி ஈவு இரக்கமின்றிக் கேள்விக்கு உள்ளாக்கிய இன்னொரு கலைஞனைத் தமிழ் இலக்கிய உலகம் இன்றுவரை கண்டடையவில்லை.” என்கிறார் நூலாசிரியர்.

அன்றுமுதல் இன்றுவரை தமிழில் இலக்கியம் படைத்து வாழ்ந்துவிடலாம் என்று நினைத்து எழுதிய யாரும் படைப்புகளில் வெற்றியடைந்த அளவுக்குப் பொருளாதாரத்தில் உயர்வடைய முடியாமல் தோற்றுத்தான் போயிருக்கின்றனர். அவர்களில் முக்கியமானவர் கு ப ராஜகோபாலன். ஆண்பெண் உறவுதான் அவர் எழுத்தின் சாராம்சம். ”பெண்ணின் சித்தத்தை இருளாக்கும் உணர்ச்சிகளையும் கருவாக நின்றுவிட்ட வேட்கைகளையும் நுட்பமாகவும் அநாயசமாகவும் படம் பிடிப்பதில் நிகரற்றாவர்; பெண் மனதைச் சித்தரிப்பதில் வல்லவர்.” கரிச்சான் குஞ்சுவின் இந்தக் கூற்று உண்மை என்பதை, குபராவின் முதல் கதையாகிய “நூருன்னிசா”வில் தொடங்கி பலவற்றிலும் பதியமாகி இருக்கிறது..

வறுமையோடு மல்லுக்கட்டி மாய்ந்தவர் புதுமைப் பித்தன் என்றால் வறுமையோடும் நோயோடும் இடையறாது போரிட்டு மாண்டு போனார் குபரா. முதலில் கண்பார்வை இழந்து, பின் கொஞ்சம் வெளிச்சம் பெற்று மீண்டார். பிறகு “காங்கரின்” என்ற வியாதியால் அவர் கால்கள் பாதிக்கப்பட்டன. அந்த நோயே அவர் உயிரை வாங்கியது. தி, ஜானகிராமன் எழுதுகிறார். ”என் மனதில் இருள் சூழ்ந்து கிடந்தது. கரிச்சான் குஞ்சுவும் என்னோடு சேர்ந்து அழுதுகொண்டிருந்தான். குபரா கிடந்த கிடையும் பட்ட சித்திரவதையும் எங்கள் இருவர் மனதிலும் அநிச்சயத்தையும் கலவரத்தையும் மூட்டியிருந்தன. நாங்களும் கையாலாகாமல் தவித்தோம். கால்களின் வெளியே இரண்டு பக்கங்களிலும் எரிச்சல்! அது பையபைய உயிரை அரித்துக் கொண்டிருக்கிறது. ……கால்களை எடுத்துவிடலாம் என்று ஆஸ்பத்திரியில் தீர்மானித்தார்கள். குபரா அதை மறுத்துவிட்டார். நனைந்த கண்களுடன் let me die, A peaceful death. என்று சொல்லிவிட்டு, “காவேரித் தீர்த்தம் ஒரு டம்ளர் வேண்டும்” என்றார். ஓடிப்போய்க் கொண்டுவந்து கொடுத்தார்கள். கை நடுங்க அதை வாங்கி ஒருவாய் அருந்தினார். உடனே உடல் துவண்டது. வீட்டுக்குக் கொண்டு போவதற்குள் உயிர் பிரிந்தது.”

தமிழ்ச் சிறுகதை இயக்கத்தின் மகத்தான படைப்பாளி இறந்து போனதை ஒரு காவியப் பனுவல் போல சொல்லிச் செல்கிறார் தமிழ்ச் செலவன்.

இந்த ஆய்வு நூலில் 44 ஆண் படைப்பாளிகளும் ஏழு பெண் எழுத்தாளர்களும் வருகின்றனர். அவரவர் காலத்தின் சமூக வாழ்வியல் வரலாறு அவர்களின் கருப் பொருளாகி கதையாடலாகவும் கலையாடலாகவும் மிளிர்ந்திருக்கின்றன. சுதந்திர போராட்ட காலத்தின் வெளிப்பாடுகள், திராவிடப் பரப்புரையின் விழுதுகள், மானுட யதார்த்தத்தை விலக்கி வைத்த வன்முறைப் போக்கைக் கேள்விக்கு உட்படுத்திய யதார்த்தவாதப் படைப்புகள் என மூன்றுவகை பாடுபொருள்கள் உள்ளடக்கங்களாய் விதைக்கப்பட்டன.

ஒரே ஒரு சிறுகதை எழுதிப் புகழ் பெற்ற மூவலூர் ராமாமிர்த அம்மையார் முதல் 300க்கும் மேற்பட்ட கதைகள் எழுதிய பி. எஸ் ராமையா வரை அனைவருடைய படைப்புகளையும் பிசிறின்றி ஆய்வு செய்து ஓவியச் சித்திரமாய்த் தீட்டி இருக்கிறார் தமிழ்ச்செல்வன்.

தமிழின் மிக நுட்பமான படைப்பாளி கிருஷ்ணன் நம்பி என்றால் மிகையாகாது. வித்தியாசமான உள்ளடக்கம், விதவிதமான வடிவங்கள் என்று பரிசோதித்துப் பார்த்தவர். ஒருசோற்றுப் பதமாக “தங்க ஒரு…” கதையைச் சொல்லலாம். வசிக்க வீடு கிடைக்காமல் மனிதர்கள் தங்கள் உடலைக் குறுக்கிக் கொண்டு ஒரு ஷூவுக்குள் வாழ்கிறார்கள். மாய யதார்த்தவாதத்தின் சுவடு படிந்த கதை இது. “மருமகள்,” ”சுதந்திரக்கொடி,” நீலக்குயில்” ஆகியவையும், ஏற்கனவே நடைமுறையில் இருந்த வடிவக் கட்டளையைப் புறந்தள்ளிவிட்டுப் புது வடிவம் எடுத்துப் புலர்ந்தவை. 44 வயது வரை வாழ்ந்து 25 கதைகள் மட்டுமே எழுதியிருந்தாலும், தமிழ்ச்சிறுகதை வரலாற்றின் தவிர்க்க முடியாத படைப்பாளியாய்த் திகழ்கிறார்.

தமிழ்ப் புனைவிலக்கியத்தைச் சிறப்பு, சிறப்பின்மை பற்றி மதிப்பீடு செய்யும் க, நா, சு கிருஷ்ணன் நம்பி பற்றி எழுதுவது எந்த வகையில் சேர்த்தி என்று தெரியவில்லை. “அவர் (கிருஷ்ணன் நம்பி) கதைகளை நான் தமிழில் நல்ல கதைகள் என்று வெளியிடுகிற பட்டியலில் சேர்ப்பதில்லை என்று அவருக்கு வருத்தம்தான் என்பது எனக்குத் தெரியும். அந்தத் தரத்துக்கும் அப்பாற்பட்ட ஒரு தரத்தை எட்ட முடியாமல் போனது, அவருடைய முற்போக்குச் சிந்தனை இருட்டினால்தான் என்றும் எனக்கு நினைப்பு.”

இந்தக் கருத்துபற்றி தமிழ்ச்செல்வன் எழுதுகிறார். ”முற்போக்குச் சிந்தனைகளை இருட்டெனக் கண்ட க, நா, சுவின் பட்டியலில் கிருஷ்ணன் நம்பியின் கதைகள் இடம் பெறாமல் போனதில் வியப்பொன்றும் இல்லை.” ஆம்! க நா சு சதா சர்வகாலமும் பிராமணியத்தையும் கலை கலைக்காவே என்ற இலக்கிய சித்தாந்தத்தையும் தூக்கிப் பிடித்துக் கொண்டே அலைந்தார்.

கிருஷ்ணன் நம்பியாவது 25 கதைகளின் ஆசிரியர். வெறும் 14 கதைகள் எழுதி மகத்தான படைப்பியக்கவாதிகளின் வரிசையில் தன்னை இணைத்துக் கொண்டவர் எழுத்தாளர் லிங்கன். “கருணை மனு” என்ற அவரின் ஒரே ஒரு தொகுப்பை நியூ செஞ்சுரி புத்தக நிறுவனம் வெளியிட்டுள்ளது. எழுத்தாளனுக்கு மதிப்பில்லாத ஒரு சமூகத்தில் ஏழையாய் இருந்துகொண்டு எழுதுவது சவாலானது. ஆனால் இப்படியான ஏழை எழுத்தாளர்களுக்குக் களம் அமைத்து ஊக்கப்படுத்தியவர்கள் இடதுசாரிகள் என்பது இன்னொரு முக்கியக் குறிப்பு. லிங்கன் கலை இலக்கியப் பெருமன்றத்தில் இயங்கியபடி தாமரையில் எழுதினார். ”முற்போக்குப் படைப்பாளிகள் சமூகப் பிரச்சாரகர்கள்” என்று “சுத்த” இலக்கியவாதிகளால் முத்திரை குத்தப்பட்டிருந்த காலத்தில், “கலை அமைதி கெடாத படைப்புகள் செய்தார் லிங்கன்” என்கிறார் தமிழ்ச் செல்வன். “எல்லாக் கதைகளிலும் வர்க்க அரசியல் பேசும் லிங்கன் ஒன்றில் கூட முஷ்டி உயர்த்தவில்லை.”

சோகமான சங்கதி என்னவென்றால் லிங்கன் மரணித்து பல மாதங்கள் கழித்துத்தான் வெளி உலகுக்குத் தெரிய வந்தது. பொருளாதாரத் தேடல் ரம்யமாய் இருந்தால்தான் எழுத்துத் தேடல் தடையின்றி நிகழும் என்பதற்கு லிங்கன் ஓர் உதாரணம். அவர் வாழ்க்கையை வாசிக்கும்போது கண்கள் துளிர்ப்பதைத் தவிர்க்க முடியவில்லை.

யாராலும் பின் தொடர முடியாத எழுத்தாளர்கள் என்றால் அது மௌனியும் சுயம்புலிங்கமும்தான் என்கிறார் தமிழ்ச்செல்வன்.. (கோணங்கியையும் சேர்த்துக் கொள்ளலாம் என்பது என் கருத்து..) புரியாத் தன்மையோடு எழுதியவர் மௌனி. “என் எழுத்தைப் புரிந்துகொள்ளும் ஆற்றால் எந்தத் தமிழனுக்கும் இல்லை” என டமாரம் அடித்துக் கொண்டார் ஆனால் சுயம்புலிங்கம் மக்கள் மொழியில் எளிமையாக எழுதினார். சுயம்புலிங்கத்தின் கவிதைகளையும் கதைகளையும் அறிந்து புரிந்து, ‘கல்குதிரை’ இதழில் அவற்றைப் பிரசுரித்து அவரின் மேதமையை வெளி உலகுக்கு அறிமுகப் படுத்தினார் கோணங்கி. கோணங்கிக்கு மகிழ்ச்சிகரமான பாராட்டுகள்.

“சின்னஞ்சிறு கதை” என்ற பெயருடன் ஆனந்த விகடன் 80களில் பிரசுரித்தவற்றைவிட சிறிய வடிவம் கொண்டவை சுயம்புலிங்கத்தின் கதைகள். அதிகபட்சம் இரண்டு பக்கங்கள்!

லிங்கனைவிட ஏழ்மையில் உழன்றவர் சுயம்பு. தூத்துக்குடி மாவட்டம் வேப்பலோடை என்கிற பனங்காட்டுக் கிராமத்தில் பிறந்து, பிழைப்புத் தேடி 1964ல் சென்னை சென்று படாத கஷ்டம் இல்லை. மாட்டுத் தீவனக் கடையில் தொழிலாளி, தள்ளுவண்டியில் வைத்துப் பொருட்களை விற்பது, சிறிய மிட்டாய்க் கடை போட்டு நடத்துவது எனப் பொருளாதாரச் செல்வாக்கியம் இல்லாத தொழில்கள் செய்து நொம்பலப்பட்ட வாழ்க்கை அவருடையது. ஆனாலும் நூலகம் சென்று வாசிப்பது, அங்கு ”மக்கள் எழுத்தாளர் சங்கம்” நடத்திய கூட்டங்களைக் கூர்ந்து கவனிப்பது என்று தனது இலக்கிய அறிவை வளர்த்துக் கொண்டார்.

கஞ்சிப்பாடு நிறைவடையாத வாழ்க்கையின் பிரதிபலிப்பு அவரின் பல படைப்புகளில் வழிகின்றன. “ஒரு மண்சட்டியில் கம்மங்கஞ்சியை நல்லாக் கரைப்பார். வெஞ்சனத்துக்கு ரெண்டு வத்தல், ரெண்டு உப்புக்கல்! அம்மியில் வச்சித் தட்டுவார். மொளகாத்தூள ரெண்டு வெரலிட்டு அள்ளுவார்; நாக்குல வச்சுத் தேய்ப்பார்; கஞ்சி சரசரன்னு போகும். அம்மியில் மீதி இருக்கிற மொளவாத் தூள அள்ளி அடிநாக்குல வைப்பார்; கண்ண மூடிக்கிட்டுக் கஞ்சியக் குடிப்பார்.”

”நடை” என்ற சிறுகதையில் வரும் கஞ்சிப்பாட்டுச் சித்திரம் இது. இடைத்தட்டு எழுத்தாளர் எவராலும் தீட்ட முடியாத வாழ்வியல் சித்திரம். இதுபோன்ற சித்தரிப்புகள் இவர் கதைகளில் அநேகம் இருக்கின்றன.

“நாட்டுக்குப் பொருத்தம்; நாமே நடத்தும் கூட்டுப் பண்ணை விவசாயம்” என்றொரு திரையிசைப் பாடல் ஐம்பதுகளிலும் அறுபதுகளிலும் ஊரெங்கும் ஒலித்துக் கொண்டிருந்தது. கூட்டுறவு சங்கம் ஏற்படுத்தி மானாவாரி விவசாயிகளுக்கு அரசு கடன் தந்து விவசாயம் செய்யச் சொன்னது. மழையில்லாக் காலங்களில் விதைப்பு வரண்டு பயிர்கள் கருகிப்போகும். இதைப் புரிந்துகொள்ளாத அரசு அதிகாரிகள் கடனைத் திருப்பிச் செலுத்தாத விவசாயிகளின் நிலத்தையோ வீட்டுப் பொருட்களையோ ஜப்தி செய்து கொண்டு சென்றுவிடுவார்கள்.

”மானாவாரி மனிதர்கள்” என்ற கதையில் சுயம்புலிங்கம் எழுதுகிறார். “நான் ஒரு மானாவாரி சமுசாரி; மழையை மட்டும் நம்பி விவசாயம் செய்து பிழைக்கிறவன். பருவ மழை தவறும்போதெல்லாம் எனக்குக் கோவம் வரும்; அப்போதெல்லாம் நான் இந்த வானத்தையே பகைத்துக் கொள்வேன். ஆரோக்கியம் கெட்ட இந்த வானத்தை இடித்துத் தகர்த்தால் என்ன என்று எனக்குத் தோணும்.

இன்றைக்கு என் கோவம் இவர்கள் (அதிகாரிகள்) மேல் தாவியது. என்ன மனிதர்கள் இவர்கள்? உண்மையாகவே விவசாயிகளுக்கு உதவக் கூடியவர்கள்தானா இவர்கள்? நல்ல பெய சங்கம்; நல்ல பெய சர்க்கார்; நான் வானத்தை இடித்துத் தகர்க்க வேண்டும் என்று நினைத்துக் கொண்டிருந்தேன். இடித்துத் தகர்த்து நிர்மூலமாக்க வேண்டியது வானத்தை இல்லை; அரசு நிர்வாகத்தையாக்கும் என்று இப்போது புரிந்துகொண்டேன்.”

அதற்கடுத்து ஒரு வரி எழுதுகிறார். “கிணற்றில் குளித்துக்கொண்டிருக்கிறேன்; சுகமாக இருக்கிறது.”

இந்த வரி முக்கியமானதாகத் தோன்றுகிறது தமிழ்ச்செல்வனுக்கு. சூடு பொசுக்கும் மனநிலையில் சர்க்காரை இடித்துத் தகர்க்க நினைக்கும் சுயம்பு அடுத்த வரியிலேயே சுகம் தரும் கிணற்றுக் குளியலைச் சொல்வது சரியா என்ற கேள்வியை எழுப்பி அதற்கான விடையைத் தேடிச் செல்கிறார்.

“அடித்துத் தகர்த்து நிர்மூலமாக்க வேண்டியது அரசு நிர்வாகத்தை” என்ற வரியோடு கதையை முடித்திருந்தால் அது கோபத்தோடு முடிந்திருக்கும். அப்புறம் ஏன் “கிணற்றில் குளித்துக் கொண்டிருக்கிறேன்; சுகமாக இருக்கிறது” என்று ஒரு வரியை எழுதி, அவரே கிளப்பி விட்ட கோபத்தைத் தணிக்கிறார்?”

தமிழ்ச்செல்வன் மேலும் எழுதுகிறார். “இதுதான் சுயம்புவின் கதைப்பாணி; குளிர்ச்சியான கிணற்றுத் தண்ணீருக்குள் உட்கார்ந்து சுகமாக உணரும்போது அந்த நாளின் வெக்கை நினைவில் அலையடிக்கிறது என்று சொல்லலாம். அல்லது அப்படியே வெந்த நினைவோடு கதையை முடிக்கப்படாது என்று சுயம்பு நினைத்திருக்கலாம். நடந்த சூடு தணிஞ்ச அப்புறம்தானே கதையை மத்தவுகளுக்குச் சொல்லுகிறோம்; அந்தப் பிரக்ஞையும் காரணமாக இருக்கலாம். (கோபத்தோடு முடித்திருந்தால் அது விரக்திநிலை என்றும் நினைத்திருக்கலாம் என்பது என் எண்ணம்..)

‘கல்லறைத் தோட்டம்,’ ‘நீர்மாலை’ ‘சீம்பால்’ ‘குருவி’ எனப் பல கதைகளில் இப்படி ஆற்றுப்படுத்தி, அமத்தி முடிக்கிறதைத் தன் பாணியாகக் கொண்டுள்ளார் சுயம்பு.” (சுயம்புவின் நடையோடு தனது நடையை ஒத்திசைவு செய்திருப்பதைக் காண்க.) இது ஓர் ஆய்வுநூல்தான் என அடையாளப் படுத்தும் பகுதிகளில் இதுவும் ஒன்று.

இந்த நூலின் மிக நீண்ட அத்தியாயம் கி, ராஜநாரயணன் உடையது. 61 பக்கங்கள். அள்ளிப் பெருக்க அவரின் முற்றத்தில் அந்த அளவு தான்யம் குவிந்து கிடக்கிறது. எல்லாமே கரிசக்காட்டு விளைச்சல்கள். வரண்ட நிலத்திலும் வளம் காணும் நிறைந்த மனசு.

நூற்றாண்டு காலம் வாழ்ந்த மகா படைப்பாளி அவர். சிறுகதைகள் என்று எடுத்துக் கொண்டால் 82 தான் எழுதியிருக்கிறார். நாவல்கள், கட்டுரைகள், கடிதங்கள், பாலிய்ல் கதைகள், நாட்டுப்புறக் கதைக் களஞ்சியம் எனப் பல பரிமாணங்கள் அவர் படைப்புச் சக்கரத்தின் ஆரங்களாய்ச் சுழல்கின்றன. ஏழாப்புவரை மட்டுமே வாசித்துள்ள கிரா, பாண்டிச்சேரி பல்கலைக் கழகத்தின் பேராசிரியராகப் பணியாற்றியிருக்கிறார்.

அவர் ஆரம்பகாலத்தில் கம்யூனிஸ்ட் கட்சியின் விவசாயப் பிரிவுச் செயலாளராகப் பணியாற்றியபோது எழுதிய ”தோழன் ரெங்கசாமி” கதை சமுதாயத்துக்காக உழைத்து, சித்திரவதைக்கு உள்ளான தியாகத்தை விவரிக்கிறது. இதுபோல் இன்னும் பல அரசியல் கதைகள். அரசியல் என்றால் கட்சி அல்லது வர்க்க அரசியல் மட்டுமில்லை. வாழ்வியல் அரசியலும்தான். தீர்வை வசூலிக்க வரும் ஓர் அதிகாரியைப் பற்றி விவரிக்கிறார் கிரா. பல் ஊத்தையைக் குத்துபவராக அதிகாரியைச் சித்தரிப்பது வாசக மனதில் அதிகார வர்க்கத்தின்மீது அருவருப்பு உணர்வை ஏற்படுத்தும் நோக்கம் கொண்டது. தீர்மானகரமாக அவர்கள் எல்லாம் இப்படித்தான் என்று ஓங்கி முத்திரை குத்தும் சித்தரிப்பு! கிரா என்கிற சம்சாரியின் கலை அரசியல் இது.

கிரா என்றால் கரிசல் காட்டுக் கலைக்களஞ்சியம் என நிறுவுகிறார் தமிழ்ச்செல்வன். அவர் பாடாத பொருள் இல்லை; சொல்லாத சொலவடை இல்லை. தமிழ் இலக்கியத் தளத்தின் மகத்துவமான சக்கரவர்த்தி அவர்.

சனிப்பிணம் சிறுகதையின் மூலம் எழுத்துலகத்துக்குள் நுழைந்தவர் கந்தர்வன். அவர் ஓர் அரசு ஊழியர். அலுவலக ஊழியர்களை அணிதிரட்டும் பணியில் ஈடுபட்டு, துறை ரீதியான தண்டனைகள் அனுபவித்தவர். நாகலிங்கம் என்ற தன் சொந்தப் பெயரை ‘கந்தர்வன்’ என மாற்றிக் கொண்ட நிகழ்வு சுவாரஸ்யமானது. தமிழக முதல்வர் அண்ணாவையும் ஒன்றிய அமைச்சர் விவி கிரியையும் விமர்சனம் செய்து ஒரு கட்டுரை எழுதி ‘கண்ணதாசன்’ இதழுக்கு அனுப்பினார். ஆசிரியர் ராம. கண்ணப்பன் கூறினார். “நீங்கள் அரசு ஊழியராக இருப்பதால் புனைபெயர் வைத்துக் கொள்ளுங்கள்.” என்ன பெயர் வைத்துக் கொள்வது என யோசித்த போது, “அப்போது நான் ஜாவர் சீத்தாராமனின் கந்தர்வகானம் வாசித்துக் கொண்டிருந்தேன்; அதையே எனது புனைபெயராக்கிக் கொண்டேன்” என்கிறார்.

அடிப்படையில் அவர் ஓர் இடதுசாரி எழுத்தாளர். குறிப்பாக மார்க்ஸிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியிலும் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கத்திலும் இயங்கிக் கொண்டிருந்தார். இடதுசாரிகளின் படைப்புகளை அதிகம் பிரசுரித்தது “செம்மலர்” என்ற மாதாந்திர இலக்கிய ஏடு. ஏட்டில் எழுதப்படாத விதி ஒன்றை அதில் எழுதியவர்கள் கைக்கொண்டார்கள். எந்தப் பாத்திரத்துக்கும் ஜாதி ஒட்டைச் சேர்ப்பதில்லை என்பதே அந்த விதி. ஜாதியில்லாத சமுதாயம் உருவாகவேண்டும் என்ற ஆசையின் விளைவாக இருக்கலாம்.

கந்தர்வன் அதை உடைத்தெறிந்தார். ஜாதி வேண்டாம் என்பது சரி; இருக்கும் ஜாதியப் பெயர்களை இலக்கியத்தில் பிரதிபலிக்காமல் இருப்பது முழு யதார்த்தமாகுமா?

சனிப்பிணம் கதையின் தொடக்கம் இப்படி இருக்கிறது. “ராமு நாடாரின் மளிகைக் கடையை விட்டுக் கிளம்பிய ஆராயி…….” அப்போது முற்போக்கு எழுத்தாளர்கள் பலருக்கும் எழுந்த கேள்வி “நாடார் என்று குறிப்பிடலாமா?” என்பதுதான். கந்தர்வனின் புகழ்பெற்ற படைப்பாகிய “சீவன்” கதையில் “கந்துப்பிள்ளை” ”கூழுப்பிள்ளை” எல்லாம் வருகிறார்கள். சாதிப்பெயரை வலிந்து ஒட்டவும் வேண்டாம்; வெட்டவும் வேண்டாம் என்பது கந்தர்வனின் முடிவு.

61 கதைகளை எழுதியுள்ள அவரது படைப்புகளில் முக்கியமானது என்று தமிழ்ச்செல்வன் குறிப்பிடுவது “சீவன்” என்ற கதையைத்தான். இந்தக் கதையில் ஒரு வித்தியாசமான கிறுக்கனை அறிமுகப் படுத்துகிறார் கந்தர்வன். அவனின் பிச்சை எடுக்கும் பாணி அலாதியானது. அவன் ஏந்தும் தட்டில்தான் எதையும் போடவேண்டும்; கையால் வாங்க மாட்டான். சிலர் வெறுந்தண்ணியைக் கூட தட்டில் ஊற்றி ஏமாற்றுவதுண்டு.

முனியசாமி கோயில் எதிரில் இருக்கும் அரசமரமே அவன் வசிப்பிடம். முனியப்பன் துடியான சாமி. எப்போதாவது சுருள்காற்று சுழற்றிச் சுழற்றி அடிக்கிறது என்றால் முனியசாமி வேட்டைக்குப் போய்விட்டு வருகிறார் என்று அர்த்தம். மழை சோவென்று கொட்டும். ஊரார் “முனியய்யா எச்சில் துப்புகிறார்” என்பார்கள். இரவு நேரங்களில் அவ்வழியில் பயணிக்கும் யாரும் அவன் பார்வைபட்டு மயங்கி விடுவார்கள்; அல்லது மாண்டு விடுவார்கள். அந்தக் கிறுக்கன் எந்த பயமும் இல்லாமல் அங்கேயே கிடக்கிறான்.

ஒருநாள் ஊரே சிதைந்து போகும் அளவுக்கு சூறாவளியுடன் கூடிய மழை கொட்டுகிறது. பலரும் அந்தக் கிறுக்கன் என்ன ஆனானோ என நினைத்தபடி தர்மகர்த்தா கூழுப் பிள்ளையிடம் சொல்கின்றனர். அவர் கோயிலை நோக்கி நடக்கிறார்; அரசமரம் கங்கு கணக்கு இல்லாமல் ஆட்டம் போடுகிறது. வில்லாய் வளைந்து ஆடுகிறது; வேர்ப்பக்கங்கள் விசித்து வெளியே வந்துகொண்டிருந்தன. கிறுக்கன் தூரடியில் படுத்துக் கிடக்கிறான். கூழுப்பிள்ளை தன் கண்ணாலேயே பார்த்தார். அந்தக் கிறுக்கன் அப்போதுதான் தூக்கத்தில் இருந்து எழுந்து அழுக்கு மூட்டையையும் தகர டப்பாவையும் அலுமினியத் தட்டையும் தூக்கிக் கொண்டு மரத்டிடையை விட்டு இருபதடி நடந்திருப்பான்; சடசடவென்று அரசமரம் வேரோடு தூரோடு முனியசாமி சிலைமேல் விழுந்தது. கூழுப்பிள்ளை கிட்ட வந்து பதறப் பதறப் பார்க்கிறார். சின்னச் சின்ன கற்களாய்ச் சிலை சிதறிக் கிடந்தது. ஊர் ஜனம் கூடிவிட்டது. கூழுப் பிள்ளைக்குக் கண்கள் பொங்கி வந்தன. “கிறுக்கன் தப்பிச்சுட்டான்; சாமி போயிருச்சே.”

நாத்திக சித்தாந்தத்தின் உச்சமான கதை இது. .ஏற்கனவே எழுதப்பட்ட இந்தியக் காப்பியங்கள் தெய்வம் ஜெயித்து மனிதன் தோற்பதை விவரிக்கின்றன. இந்தக் கதை கிறுக்கன் ஜெயித்து தெய்வம் சிதறுவதைப் படம்பிடிக்கிறது. ”காவிய மரபின் எதிர் இயக்க நிலையே சீவன் கதை” என நிறுவுகிறார் தமிழ்ச்செல்வன்.

தமிழ்ச் சிறுகதை இயக்கத்தின் ஆரம்பகட்ட படைப்பாளிகளில் பெரும்பாலானோர் தஞ்சைத் தரணியைச் சேர்ந்தவர்கள். குறிப்பாகக் கும்பகோணம். காவேரி நதி பாய்ந்து நெல்லும் புல்லும் விளைந்த செழுமையான பூமி. அந்த நிலத்தில்தான் ஆண்டான் அடிமை முறை ஆழமாய் வெரூன்றி இருந்தது. முதலாளித்துவமோ, டெமாக்ரசியோ நுழையாத இருண்ட பூமி அது. கூலித் தொழிலாளிகள் சாணியால் குளிப்பாட்டப் பட்டு சவுக்கால் அடிக்கப் பட்டார்கள். அரசு நிர்வாகத்தால் அதைத் தடுக்க முடியவில்லை. நிலப்பிரபுக்கள் தனி ராஜ்யம் நடத்திக்கொண்டிருந்தார்கள்.

தஞ்சைத் தரணியைச் சேர்ந்த எழுத்தாளர்களின் படைப்புகளில் இந்த வர்க்க முரண்பாடு பதியமாகவில்லை. அதற்கு மிக முக்கியக் காரணம் அவர்கள் அனைவரும் நடுத்தர அல்லது மேல்தட்டு எழுத்தாளர்கள் என்பதுதான்.

இந்த நூல் தமிழ்ச்சிறுகதை இயக்கத்தின் 50% பகுதியை நிறைவு செய்திருக்கிறது. இன்னும் எழுதவேண்டிய ஏராளமான படைப்புகள் இருக்கின்றன என்றாலும் இதுவே தமிழ்ச்செல்வனின் வாழ்நாள் சாதனைதான். இந்துமதி, வாசந்தி, கோணங்கி, உதயசங்கர், தனுஷ்கோடிராமசாமி, ஜெயமோகன், மேலாண்மை பொன்னுசாமி, எஸ். ராமக்கிருஷ்ணன், சி. ஞானபாரதி, விழி. பா, இதயவேந்தன், சுப, புன்னை வனராசன், திலிப்குமார், ச, சுப்பாராவ், ஜனநேசன், அழகிய பெரியவன், இராகுலதாசன், மணிநாத், ஜெயந்தன், தோப்பில் முகமது மீரான், மீரான் மைதீன் மாரிசெல்வராஜ், ஜோதிர்லதா கிரிஜா உள்ளிட்ட பல படைப்பாளிகளின் பட்டியல் இருக்கிறது. அந்தப் பட்டியலில் தமிழ்ச்செல்வனும் வருகிறார். அந்த வரலாற்றை யார் எழுதப் போகிறார்கள் என்பதுதான் கேள்வி.

– தேனி சீருடையான்

நூல் அறிமுகம்: ச.தமிழ்ச்செல்வனின் தமிழ்ச் சிறுகதையின் தடங்கள் – எஸ் வி வேணுகோபாலன் 

நூல் அறிமுகம்: ச.தமிழ்ச்செல்வனின் தமிழ்ச் சிறுகதையின் தடங்கள் – எஸ் வி வேணுகோபாலன் 



ஒரு பெரிய மனசுக்காரரின் அரிய தொகுப்பு 
எஸ் வி வேணுகோபாலன் 

நூல் : தமிழ்ச் சிறுகதையின் தடங்கள்
ஆசிரியர் : ச.தமிழ்ச்செல்வனின்
விலை : ரூ.₹ 895/-
பக்கங்கள்: 896
வெளியீடு : பாரதி புத்தகாலயம்

தொடர்புக்கு : 044 – 24332424 /24330024/
விற்பனை : 24332924
புத்தகம் வாங்க : www.thamizhbooks.com
[email protected]

கடந்த ஆண்டு 94-வயது தந்தையின் அழைப்பில் நீண்ட நாள் கழித்து எங்கள் சொந்தவூர் சென்று வந்தோம். கோயில் பூசையில் ஆழ்ந்திருந்த அப்பாவின் அருகே அமர்ந்திருந்தோம், பின்னர் ஊரைப் பார்க்கப் புறப்பட்டோம். வரிசையாக எங்கள் பாட்டன் பூட்டன் வீடுகள் சிதிலமடைந்திருந்தன. எங்கள் பெரிய தாத்தா வீட்டு வெளிப்புறத்தில் வீதியோரம் இருந்த கிணற்றைக் காணவில்லை. எங்கள் பெரியப்பா சிற்றூரின் அஞ்சல் அலுவலகப் பொறுப்பேற்று நாங்கள் வேடிக்கை பார்க்க, அஞ்சல் அட்டைகள், ஸ்டாம்ப் எல்லாம் பத்திரப்படுத்தி வைத்திருந்த மிகப் பெரிய மரப்பெட்டி, பணத்தை உள்ளிறக்கி வாயைக் கட்டி மெழுகில் அரக்கு உருக்கி முத்திரை போட்டு சீலிட்ட தோல் பை எல்லாம் பரப்பி வைத்திருந்த பெருந்திண்ணை, சுற்றிலும் வேலியமைத்திருந்த ரீப்பர் கட்டைகள், வீட்டினுள்ளே எப்போதும் சங்கீதம் இசைத்தபடி ஆடிக்கொண்டிருந்த ஊஞ்சல், பெரிய சமையல் கட்டு, உள்ளிருந்தபடியே ஜன்னல் திறந்து அங்கிருந்தே ராட்டினக் கயிறு பற்றி தண்ணீர் இறைத்துக் கொள்ள வெளியே காத்திருந்த கிணறு, அண்ணன் தம்பிகளுக்கு இடையே நடந்த வாக்குவாதங்களின் சாட்சியமாக இருந்த நெல் நிலவறைகள், நிலக்கடலை மூட்டைகள் எல்லாம் காத்து வைத்திருந்த வீடு இருந்த இடம் தடயமே இராது காலிமனையாகப் புற்கள் பூத்துக் கிடந்தது.

என் அத்தை மகள் ஒருத்தியின் திருமணத்தில் பெண் அழைப்புக் காட்சி, நாற்பதாண்டுகள் ஆகி இருக்குமோ, மனக்கண்ணில் விரிந்தபோது தெரிந்த காட்சிகள் மறுக்கப்பட்ட வீதியாயிருந்தது இப்போது. ஒரு மாயாவி சட்டென்று கண்ணெதிரே தோன்றி அந்தக் காட்சிகளை மறு உருவாக்கம் செய்ய மாட்டானா என்றிருந்தது. அதில் நான் கேள்விப்பட்ட இன்னும் முந்தைய தலைமுறை உறவுக்காரர்கள் முகங்களையும் பார்க்கவும், அவர்கள் அன்பை அருகிருந்து அள்ளிப் பருகவும் கூட ஆர்வமெழுந்தது.

என்ன வியப்பு, அப்படியான மாயாவி ஒருவர் கண்ணெதிரே தோன்றவும் செய்தார். பார்க்கத் துடித்த – பார்த்தும் பேசாது பறிகொடுத்த, இன்னும் உடன் வாழ்கிற உறவுக்கார்களை அவரவர் இல்லங்களைத் திறந்து கொண்டுபோய் அறிமுகப்படுத்தி, அவர்களைத் தழுவிய ஈரக்காற்று நம்மீது பட்டுக் குளிர வைக்கவும் செய்கிறார். அவர்களது கண்ணீரின் வெம்மையை நாம் உணரச் செய்கிறார். அவர்களது பூரிப்பை நம்மீது படரப் பண்ணுகிறார்.

55 படைப்பாளிகள் – வவேசு அய்யர் தொடங்கி கந்தர்வன் வரை, அவர்தம் சிறுகதைகள் (மூவாயிரம் இருக்குமோ!) தேடியெடுத்து (ஆகப் பெரும்பலவும் ஏற்கெனவே வாசித்தவை என்றாலும் மீண்டும்) வாசித்து, படைப்பாளிகள் குறித்த

கட்டுரைத் திரட்டுகள் துழாவி, சுமார் 200 புத்தகங்கள் வழி மேலும் நெருங்கித் தமிழ்ச் சிறுகதையின் தடங்களை அவை பதியப்பட்ட முதல் 50 ஆண்டுகள் வரைக்குமான அளவில் வரையறுத்துக் கொண்டு ச..தமிழ்ச்செல்வன் தனது ஆழமான பிரதிபலிப்புகளைக் கட்டுரைகளாக வடித்துத் தொகுத்து வழங்கியிருப்பது அபாரமான விஷயமாகும்.

‘சிற்பியின் நரகம்’ சிறுகதையில் சாத்தன் அந்த நடராசர் சிற்பத்தை எப்படியெல்லாம் எங்கெங்கிருந்தாலும் பாவங்களைப் பிடித்து வடித்தேன் என்று கிரேக்க தத்துவ ஞானி பைலார்க்கஸிடம் சொல்லிக்கொண்டிருப்பான். புதுமைப்பித்தன் மட்டுமல்ல கு அழகிரிசாமி, கி ராஜநாராயணன், ஜெயகாந்தன், விந்தன், கு ப ராஜகோபாலன், அவரது சீடராகத் தன்னை வரித்துக்கொண்ட கரிச்சான் குஞ்சு….வண்ணதாசன், வண்ணநிலவன் என்று பல்வேறு படைப்பாளிகளின் சிறுகதை படைப்புத் தன்மையை, அவரவர் சிற்பம் வெளிப்படுத்தும் அழகியலை, அவை பேசும் அரசியலை வாசகருக்கு எடுத்துச் சொல்கிறார் தமிழ்ச்செல்வன்.

நான் ஏன் எழுதுகிறேன் என்ற கேள்வியைத் தனக்குத் தானே எழுப்பிக் கொள்ளும் படைப்பாளிகள் என்ன பதில் சொல்கின்றனர் என்பதை ந பிச்சமூர்த்தி, தி ஜானகிராமன், இந்திரா பார்த்தசாரதி, சுந்தர ராமசாமி, சுயம்புலிங்கம், தஞ்சை பிரகாஷ்………..என்று அவரவர் சொந்த வாக்கியங்களிலேயே மேற்கோள் காட்டும் இந்தத் தொகுப்பு, அவர்களது தூரிகைகள் தீட்டும் சித்திரங்களை அசாத்திய உழைப்பில் அப்படியே கண்முன் கொண்டுவந்து நிறுத்தி வாசகர்களுக்குப் படைக்கும் பாங்கு அபாரம்.

எழுத்தாளர்களது சாதி, இன, மதக் குறியீடுகள் மூலம் அணுகாது, தாங்களாக நிறுவிக் கொண்ட அல்லது சார்பு எடுக்க மறுத்த அரசியல் வழி பாராது, கதைகள் வெளிப்படுத்தும் வர்க்கப் பார்வையை அளவீடாகக் கொள்கிறார் தமிழ்ச்செல்வன் என்பது மிக முக்கியமான அம்சம். அதனால் தான், ஆன்மீக உணர்வும், மேல்தட்டு மக்கள் கதைகூறலாகவுமே அமையும் எழுத்துகளில் ஒரு ‘தரிசனம்’ வாய்க்கிறது, சமூக வாழ்வின் வெக்கையும் தவிப்பும் தகிப்பும் வந்தாக வேண்டியிருக்கிறது லாசரா எழுத்திலும் என்று எழுத முடிகிறது அவருக்கு. தாம் எழுதிய 88 கதைகளில் உலுக்கிப் போடும் ‘மயான காண்டம்’ போல் 11 கதைகளில், பசியால் துரத்தப்படும் மனுஷிகளும் மனுஷர்களும் என்னவாகிறார்கள் என்று பேசும் வண்ணநிலவன் போல, பசிக்காக இத்தனை கதைகள் எழுதியவர் வேறு யார் என்று கேட்க முடிகிறது. தன்னை முற்போக்கு என்று வரையறுத்துக் கொள்ளாத நாஞ்சில் நாடனின் ‘யாம் உண்பேம்’ எனும் அதிர வைக்கும் சிறுகதை, மராத்திய விவசாயிகள் தற்கொலை பற்றிப் பேசிய முதல் அல்லது ஒரே தமிழ்ச் சிறுகதை என்று அறுதியிட்டுச் சொல்ல முடிகிறது. பி எஸ் ராமையா உள்ளிட்டுப் பேசப்படாதவர்களைப் பேசும் நூல், பல இடங்களிலும் நெகிழ்ந்து உருகி உணர்ச்சிவசப்பட்டு வாசிக்க வைக்கிறது.

எழுத்தின் வழி வாழ்வாதாரம் வரித்துக் கொண்டு வறுபட்டு வாடி வதங்கியும் பேனாவைக் கீழே வைக்காத மகத்தான படைப்பாளிகள் கு அழகிரிசாமி, புதுமைப்பித்தன், விந்தன் …. குறித்த விவரங்கள் அவர்தம் படைப்புலகத்தின் மேன்மையை வாசகர்கள் இன்னும் நெருக்கமாக உணர வைக்கின்றன. குறிப்பிட்ட ஆக்கங்களின் வேரை, அவை விளைந்த பின்னணியைக் கூட நாம் அருகே பார்க்க முடியும் அளவு ஆய்வுக் குரலும் ஒலிக்கிறது கட்டுரைகளில்.

கி ராஜநாராயணன் (கி ரா) அவர்களது பெரிதும் பேசப்படும் கதையான ‘கதவு’, விகடன் சிறுகதை போட்டியில்மூன்றாம் பரிசுக்குக் கூட கருத்தில் கொள்ளப்படவில்லை, சாதாரண கதையாக பிரசுரத்திற்குக் கூட ஏற்கப்படவில்லை என்கிற விந்தை ஒருபுறம் இருக்க, அது பின்னர் தாமரை பொங்கல் சிறப்பிதழில் வெளியான போது பிரபல எழுத்தாளர்களது பாராட்டுக் கடிதங்கள் வந்தன என்று எழுதி இருக்கிறார் கி ரா. ஏன் எழுதினேன் என்று கூறுகையில், கதைக்கான கரு என்கிற தலைப்பிலான கட்டுரையில் தான் நேரடியாக கிராம முன்சீப் ஜப்தி செய்து கொண்டு வைத்த கதவு ஒன்றில் குழந்தைகள் ஒட்டியிருந்த தீப்பெட்டி படம் பார்த்து ஏற்பட்ட பாதிப்பில் எழுதினேன் என்று குறிப்பிட்டிருக்கிறார். அதோடு விடவில்லை தமிழ்ச்செல்வன், கதைக்கான வரலாற்றுப் பின்னணி ஒன்று தோழர் இரா நல்லக்கண்ணு எப்போதோ பேசியதாகக் கேள்விப்பட்டு நேரடியாக அவரோடே தொலைபேசியில் தொடர்புகொண்டு கேட்டறிந்து, அந்நாட்களில் நெல்லை மாவட்டம் கோவில்பட்டி, விளாத்திகுளம் வட்டாரத்தில் வலுக்கட்டாயமாக இப்படி வரிவசூல் செய்யும் கொடுமைக்கு எதிராக கம்யூனிஸ்ட் கட்சி நடத்திய வரிவஜா இயக்கத்தில் கி ரா பங்கேற்ற தாக்கத்தில் விளைந்தது அந்தக் கதை என்று ஆவணப்படுத்துகிறார். மட்டுமல்ல, கட்சி, போராட்டம் இவற்றை உட்கொணராமல், வாசகருக்கு ஏற்படவேண்டிய உணர்வைத் தூண்டும் இந்தக் கதை, கலை இலக்கியம் யாவும் மக்களுக்காக என்று இயங்கும் படைப்பாளிகளுக்கான பாடமாகவே பரிந்துரைக்கிறார் தமிழ்.

கதைகள் காலக் கண்ணாடி என்று சொல்லப்படுவதை எத்தனை எத்தனை படைப்பாளிகளின் கதைக் களங்களில் இருந்து பிரதிபலிக்க வைக்கிறார்! தி ஜானகிராமன் கதையில் (ஸ்ரீ ராமஜெயம்) ‘ஜப்பான்காரன் குண்டு போட்ட சமயம்’ என்று வருகிறது. கதை நாற்பதுகளில் நிகழ்கிறது. மட்டுமல்லாது அந்தக் கதையில் வரும் போராட்டம், அச்சக ஊழியர்கள் சங்க நடவடிக்கை தீவிரமாக இருந்ததையும் ஆவணப்படுத்தி விடுகிறது என்று கூறுகிறார் தமிழ். ‘வெள்ளைக்காரன் ராத்திரி கப்பல் ஏறியிருக்கான். மறுநாள் பட்டப்பகல்ல ஊர்ல ஒரு கொல விழுந்தது’ (ஒரு மாதிரிக் கிராமம்) என்கிறார் சுயம்புலிங்கம். அதேபோல் மாட்டிறைச்சி பற்றிப் பேசும் மகாகவி பாரதியின் கதையை அவன் காலத்து மனநிலையில் இருந்து புரிந்து கொள்ளவேண்டும் என்றும் குறிப்பிடுகிறார் தமிழ். அசோகமித்திரன் கதைகளினூடாகப் புலப்படும் தரவுகளைக் குறிப்பிடுகிறார்.

22 நாவல்கள், 300 சிறுகதைகள், 15க்கு மேற்பட்ட வானொலி நாடகங்கள் படைத்த அநுத்தமா, ஒரு நாள் கூடப் பள்ளிக்குப் போகாமல் 115 நாவல்கள் எழுதிய வை மு கோதைநாயகி அம்மாள், 500 சிறுகதைகள், 9 ஓரங்க நாடகங்கள் எழுதிய கமலா விருத்தாச்சலம் …..என்று பெண் படைப்பாளிகளை இந்தத் தொகுப்பு மிகவும் சிறப்பாகக் கொண்டாடிப் பேசுகிறது (ஆர் சூடாமணி விடுபட்டது ஒரு குறை). அம்பையின் நுழைவே ஒரு புரட்சிகர நடவடிக்கை என்று குறிப்பிடும் தமிழ்ச்செல்வன், அவரைப் படிக்காமல் எப்படி மாதர் இயக்கத்தைக் கட்ட முடியும் என்ற கேள்வியை நூல் வெளியீட்டுக் கூட்டத்தில் ஒருவித பதட்ட உளவியலோடு எழுப்பினார். பெண் மனத்திற்குள் நடத்திய பயணம் மட்டுமல்ல, ஆண் பெண் உரையாடலைக் களமாக்கி அவர் பொதுவெளிக்கு எடுத்துவந்த செய்திகளும் அதுகாறும் தவிர்க்கப்பட்டு வந்த நுட்பமான விவாதங்களும் உடலியல் நுணுக்க விவரிப்புகளும் அசாதாரணமானவை என்று நிறைய மேற்கோளோடு பேசுகிறது கட்டுரை.

தி ஜா படைக்கும் பெண்கள், கி ரா கதைகளில் பெண்கள் என்று பல்வேறு படைப்பாளிகளின் பார்வையில் ஒப்பீடும், தகுதிமிக்க விதந்தோதுதலும் நல்ல வாசிப்பு அனுபவமாகும். தஞ்சை ப்ரகாஷ், ஜி நாகராஜன் கதைப்போக்கு குறித்த தரமிக்க விவாதத்தையும் நடத்துகிறது தொகுப்பு. மௌனி குறித்த பிம்பத்தை அலசும் நூல், ந முத்துசாமியின் புஞ்சை கிராமத்து வாழ்க்கையைப் பேசும் கதைகளை அடையாளப்படுத்துகிறது.

தமிழ் மொழி வளர்ச்சியில் இலக்கிய படைப்பாளிகளின் பங்களிப்பைக் காத்திரமாகப் பேசும் கட்டுரைகள் நிரம்பிய தொகுப்பில், பி ஏ பட்டப்படிப்பில் தமிழைக் கட்டாயப் பாடமாக்க வேண்டும் என்று 1925ம் ஆண்டு அக்டோபர் 22 அன்று பிற்பகல் 3.30 மணியளவில் சென்னை பல்கலை ஆட்சிமன்றக் கூட்டத்தில் ஆவேசமாகப் பேசியமர்ந்த அடுத்த சில நிமிடங்களில் மூளையில் இரத்தக் குழாய்கள் வெடித்து உயிரிழந்தார் அ மாதவய்யா என்கிற தகவல் கண்ணீரை வரவழைப்பது.

திராவிட இயக்க எழுத்தாளர்கள் பங்களிப்பையும் கருணாநிதி, ஏவிபி ஆசைத்தம்பி, அரங்கண்ணல் என்று கதைகளோடு எடுத்துச் சொல்கையில், அந்த வரிசையில் கச்சிதமாகப் பாத்திரங்களை வார்த்துச் சொல்லும் கலை எஸ் எஸ் தென்னரசு எழுத்தில் தான் வசப்பட்டது என்கிறார். அண்ணாவின் செவ்வாழையை யார் மறக்க முடியும், செம்மையாக விவரிக்கிறார்.

தொடக்கத்தில் கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினராக இருந்துவிட்டுப் பின்னர் கம்யூனிஸ்டுகள் இலக்கிய நதியில் காலை நனைத்துப் போனவர்கள் என்று சொன்ன சுந்தர ராமசாமியின் சிறப்பான கதைகளையும், விமர்சனத்திற்குரிய படைப்புகளையும் பேசுகிறது தொகுப்பு. தி ஜா வுக்கு இரண்டு கட்டுரைகள். கி ரா வுக்கு முடிவுறாத பக்கங்கள், கு அழகிரிசாமிக்கு இன்னுமின்னும் என்று விரியும் எழுத்துகள் என்று எழுதிச் செல்லும் தமிழ்ச்செல்வன் எழுதுகோல் இந்திரா பார்த்தசாரதி உள்ளிட்ட சிலருக்கு ஆகச் சுருக்கமாகப் பேசி முடித்துக் கொண்டிருக்கிறது. ஜெயகாந்தன், பிரபஞ்சன், கரிச்சான் குஞ்சு, கல்கி, புதுமைப்பித்தன், ராஜாஜி போன்ற படைப்பாளிகள் குறித்த கட்டுரைகள் மிகவும் காத்திரமானவை, எத்தனை எத்தனை திறனாய்வு எழுத்துகளையும் சேர்த்து ஒப்பிட்டு அலசுகிறார் தமிழ்.

தொமுசி குறித்த கட்டுரை அரிதான வரலாற்றுத் தரவுகளின் பொக்கிஷம் எனில் பா செயப்பிரகாசம் படைப்புலகம் பற்றிய கட்டுரை அவர் வாழும் காலத்திலேயே அவருக்கு வழங்கப்பட்ட தகுதிமிக்க அங்கீகாரம். நாவல்களுக்காகக் கொண்டாடப்படும் எழுத்தாளர்களது சிறுகதைகள் அதைவிடவும் பேசப்பட வேண்டும் என்பதில் பூமணியின் அபார எழுத்துகள், தி ஜா வின் வார்ப்புகள் என இந்தத் தொகுப்பு அந்த விதத்திலும் பேசப்பட வேண்டியதாகிறது. அதிகம் எழுதாமல் போன லிங்கம் அவர்களது அசாத்திய எழுத்து பற்றிய கட்டுரை வாசகரையும் ஏங்க வைக்கிறது. இன்குலாப் சிறுகதையுலகில் இடம் பெறுவதை, மா அரங்கநாதன் புனைவுலகை, சா கந்தசாமியின் எழுத்துகளை நேர்த்தியாகப் பதிவு செய்திருக்கிறார் தமிழ்.

கலை இலக்கியம் மக்களுக்காகவே என்பதைக் கீழ்மைப்படுத்தி, கலை கலைக்காகவே என்ற குரல் ஓங்கி ஒலித்தவர்களது படைப்புகளிலும் வெளிப்படும் சமூக பிரக்ஞை, மேட்டுக்குடி மொழியாளர்கள் எழுத்திலும் அடித்தட்டு மக்களுக்காகக் குரல் எழுப்பும் கதைகள் என்று பாகுபாடற்று அலசுகிறது தமிழின் பேனா. பிரச்சாரத் தூக்கலான கதைகள் என்று முற்போக்கு படைப்பாளிகள் மீது ஒட்டுமொத்தமாகவ வைக்கப்படும் ஏற்றுக் கொள்ள முடியாத விமர்சனங்களுக்கு ஆங்காங்கே உரிய இடத்தில் நெத்தியடியாகப் பதில் கொடுத்தும், அந்தந்த படைப்பாளிகளைக் காழ்ப்போடு அணுகாமல் மதிப்போடு பேசிக்கொண்டே நகர்கிறது.

தமிழ்ச் சிறுகதைப் பரப்பில் தொடர்ந்து பேசப்பட வேண்டிய பல கதைகளை அந்தந்த காலப் பொருத்தம், அரசியல் உள்ளடக்கம், சமூக வெளிச்சம், சாதீய பாலின நுணுக்கம் இவற்றோடு ஒரு வாசகர் இந்தத் தொகுப்பில் இருந்து உறிஞ்சி எடுத்துக் கொள்ள முடியும் என்பது இந்தக் கட்டுரைகளின் மிக முக்கிய அம்சம் ஆகும்.

ஜெயந்தன் உள்ளிட்டு விடுபட்ட எழுத்தாளர்கள் சிலரது பெயர்கள் நினைவுக்கு வந்தாலும், இப்போதைய இந்தத் தொகுப்பின் வருகை இளம் வாசகருக்கு மிக அரிய காலப்பெட்டகம் என்று சொல்ல முடியும். மூத்த வாசகர்களுக்கு அவரவர் இளமைக் காலத்தை மீட்டெடுத்துக் கொடுக்கக் கூடும். பலரை வாசிக்கத் தவறிய குற்ற உணர்ச்சியையும் தூண்டும், சார்வாகன் எனும் அற்புதமான படைப்பாளியை மிகத் தாமதமாக அணுகினேன் என்று தமிழ்ச்செல்வன் சொல்வது போலவே. உள்ளபடியே, சார்வாகனை அவரது மறைவில் சென்று பார்த்தபோது அத்தனை துயரத்திற்கு உள்ளாகி இருந்தேன், அதற்கு மூன்று நாட்கள் முன்பு வந்து பார்த்துச் சென்ற கவிஞர் எஸ் வைத்தீஸ்வரன் பின்னர் அது குறித்துச் செய்த பதிவு தொகுப்பில் இடம் பெற்றிருப்பது, யாரையும் கலங்க வைக்கக் கூடியது.

படித்துக் கொண்டே இருக்க வைக்கும் தொகுப்பு பற்றி இன்னும் பேசிக் கொண்டே இருக்க வைத்திருப்பது இந்த நூலின் சிறப்புகளில் தலையாயது. எழுதிக் கொண்டே இருங்கள் தமிழ், பிற படைப்பாளிகளைக் கொண்டாடும் பெரிய மனசுக்காரர் நீங்கள்! உங்கள் சிறுகதை படைப்புலகம் இன்னும் விரிவடைய வேண்டியதே வாசகருக்குக் கிடைக்கும் செய்தி, நீங்கள் நம்ப வைக்க முயற்சி செய்வதுபோல் எல்லாவற்றையும் எத்தனையோ பேர் ஏற்கெனவே எழுதி முடித்து விட்டனர், எழுத இன்னும் என்ன என்பதல்ல!

நன்றி: செம்மலர்: டிசம்பர் 2022

Struggle for whom, am I not in it? Article By S. V. Venugopalan. யாருக்கான போராட்டம், நான் இல்லையா இதில் ? - எஸ் வி வேணுகோபாலன் 

யாருக்கான போராட்டம், நான் இல்லையா இதில் ? – எஸ் வி வேணுகோபாலன் 

யாருக்கான போராட்டம் குதிக்கால் இட்டு உட்கார்ந்தான்.  சப்பணமிட்டு அமர்ந்து பார்த்தான்.  ஒரு காலை சப்பணமிட்டு, ஒரு காலை நீட்டி இப்படியும் அப்படியுமாய் உட்கார்ந்து பார்த்தான்.  ம்கூம்... எப்படி உட்கார்ந்தாலும் - பசித்தது... ச. தமிழ்ச்செல்வன், பாவனைகள் சிறுகதையில். பட்டினிக் குறியீட்டுத் தர வரிசையில், இந்தியா…
Challenges faced in contemporary language politics (Tamil Nationalism) Article by Writer Sa. Tamilselvan. Book Day, Bharathi Puthakalayam

சமகால மொழி அரசியலில் எதிர்கொள்ளும் சவால்கள் – ச. தமிழ்ச்செல்வன்



வீழ்ந்துவிடா வீரம்! மண்டியிடா மானம்!!” என்பதைத் தன் முழக்கமாகக் கொண்டுள்ள திரு. சீமான் தலைமையிலான ‘நாம் தமிழர் கட்சி’ தன்னைத் தமிழின மீட்புக்கான கட்சி எனப் பிரகடனம் செய்து இயங்கி வருகிறது. அண்மையில் நடை பெற்ற சட்டமன்றத்தேர்தலில் 234 தொகுதிகளில் தனித்துப் போட்டியிட்ட அந்தக் கட்சி 30,41,974 (6.6%) வாக்குகள் பெற்று தி.மு.க., அ.தி.மு.க-வுக்கு அடுத்தபடியாக மூன்றாவது பெரிய கட்சியாக உருவெடுத்துள்ளது. சமூக வலைத்தளங்களில், சீமானின் அறிவியல் பார்வையற்ற அதிரடிப் பேச்சுக்கள் ஒரு பகுதியினரால் கலாய்க்கப்பட்டாலும், மற்றொரு பகுதி இளைஞர்களைத் தொடர்ந்து ஈர்த்து வருகிறது.

தமிழ்த்தேசிய அரசியலின் ஒரே முகம் சீமான்தான் என்று சொல்லிவிட முடியாது. அவர் பேசுவதெல்லாமே தமிழ்த்தேசிய அரசியல் என்றும் சொல்ல முடியாது. தமிழ்த்தேசப் பொதுவுடமைக் கட்சி, தமிழ்த்தேச விடுதலை இயக்கம், தமிழ்ப்புலிகள் இயக்கம், மே-17 இயக்கம் போன்ற, அளவில் சிறிய இயக்கங்களும், மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம், தமிழக வாழ்வுரிமைக்கட்சி போன்றவையும் அவ்வப்போது திராவிட முன்னேற்றக்கழகமும் தமிழ்த்தேசிய அரசியலை/அதன் பல்வேறு கூறுகளை முன்னெடுத்துப் பேசுவதைப் பார்த்திருக்கிறோம். பார்த்தும் வருகிறோம்..

மொழியை அரசியல் அணிதிரட்டலுக்கான ஆயுதமாகப் பயன்படுத்தும் இயக்கங்கள் எல்லாமே தமிழ்த்தேசிய அரசியல் முன்னெடுப்பதாகக் கொள்ளலாம். வர்க்கத்தை அவர்கள் அடிப்படையாக கொள்வதில்லை. மக்கள் கொண்டிருக்கும் பல அடையாளங்களிலும் மொழி அடையாளமே அடிப்படை எனக்கொண்டு அவர்களின் அரசியல் அமைகிறது. வகுப்புவாத இயக்கங்களும் கூட தமிழ்த் தேசியத்தை பயன்படுத்திக் கொள்ள நினைக்கிறார்கள். அதற்கேற்பவும் சில தமிழ்த் தேசியர்கள் பேசியிருக்கின்றனர்.

1959 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் நடைபெற்ற ஒன்றுபட்ட இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (தமிழ்நாடு கமிட்டி)யின் 5-ஆவது மாநில மாநாட்டு அறிக்கையில் அன்றைக்கு வளர்ந்து கொண்டிருந்த தி.மு.க பற்றி கீழ்க்கண்டவாறு குறிப்பிட்டது:

“இந்தியாவின் இதர சில மாகாணங்களில், காங்கிரஸ் கொள்கையினால் அதிருப்தி அடைந்த மக்களை வகுப்புவாதக் கட்சிகள் ஆகர்ஷிக்க முடிகிற மாதிரி, தமிழ்நாட்டைப் பொறுத்த மட்டில், தவறான கோஷத்தினடிப்படையில் மக்களில் சில பகுதி யினரை தி.மு.க. திரட்ட முடிகிறது. இந்தக் கட்சியின் பால் அனுசரிக்கப்படவேண்டிய கொள்கை, தமிழ் நாட்டில் ஒரு முக்கியமான அரசியல் பிரச்சினையாகும்.

பூர்ஷுவா கட்டுக்கோப்புக்குள்ளேயே, தேர்தல்களை லட்சியமாகக் கொண்டு, பிரச்சாரத்தையே பிரதான வேலையாக வைத்து, ஒரு பூர்ஷ்வா ஸ்தாபன அமைப்பாகத்தான் தி.மு.க. உருப்பெற்று வருகிறது. வர்க்க ஸ்தாபனங்களை வளர்க்க விரும் பாததால், காங்கிரஸ் கட்சியுடன் அடிப்படையான கொள்கைகளில் மோதல் ஏற்பட இடமில்லை .”

அதே அறிக்கை மேலும் குறிப்பிடுவது:

“இவர்களுடைய சமூக அஸ்திவாரத்தைப் பின் வருமாறு நிர்ணயிக்கலாம்: கிராமங்களில் பண வசதியுள்ள விவசாயிகளின் பையன்கள், பள்ளிப்படிப்பு முடிந்து கிராமத்திலிருக்கும் இளைஞர்கள், சில மத்தியதர விவசாயிகள், சிறு தொழில் நடத்துப் வர்கள், மாணவர்கள், ஸ்தாபன ரீதியாகத் திரட்டப்படாத நகர உழைப்பாளிகளில் ஒரு பகுதி, சர்க்கார் சிப்பந்திகளில் கணிசமான பகுதி, பள்ளி உபாத்தியாயர்களில் ஒரு பகுதி, மேற்கூறிய பகுதிகளிடம் தி.மு.க. மேலும் பரவினால் ஆச்சரியப்படுவதற் கில்லை. இவர்களை அஸ்திவார மாகவும் பிரச்சாரக் கருவிகளாகவும் கொண்டு, இதர தொழிலாளிகள் விவசாயிகளிடம் இவர்கள் செல்வாக்கு நுழைவதும் சாத்தியம். சிற்சில இடங்களில் இது நடைபெற்றும் வருகிறது. –

சாதாரண ஏழை எளிய மக்களின் வாழ்க்கை பிரச்னைகளை எடுத்துப் போராட்டங்களை ஒடு முக்கிய அரசியல் வேலையாக திமுக நடத்து தில்லை. பொதுக்கூட்டங்கள், பத்திரிகைகள், பிரசுரங்கள், கலை நிகழ்ச்சிகள் மூலம் பிரச்சாரம்தா ‘அவர்களுடைய பிரதான கட்சி வேலையாயிருக்கிறது.

முதலாளித்துவ வளர்ச்சி ஏற்றத்தாழ்வா இருப்பதும், தமிழ் மக்களை வேலையில்லாத் திண்டாட்டம், விலைவாசி உயர்வு, முதலிய பல நெருக்கடிகளுக்கும் ஆளாக்கும் காங்கிரஸ் சர்க்காரின் கொள்கைகளும் நடைமுறையும், திமுக இயக்கம் வளர்வதற்கான சூழ்நிலையை அளிக்கின்றன. தமிழ் மறுமலர்ச்சி, பிரதேச தொழில் வளர்ச்சி, தமிழ் இன எழுச்சி, முதலியவற்றிற்கு தவறான ரூபத்தைக் கொடுத்து இவர்கள் மக்களிடம் ஆதரவு பெற முடிகின்றது. பிரிட்டிஷ் ஆட்சியை எதிர்த்த இந்திய மக்களின் விடுதலை ஆர்வத்திற்கு ஒப்பாக, வடநாட்டு ஏகாதிபத்தியத்தை எதிர்க்கும் தமிழனின் விடுதலை இயக்கமாக, தமிழ்நாட்டு நிலைமையை சாமர்த்தியமாகவும், கவர்ச்சிகரமாகவும் திமுக தலைமை வர்ணித்து, மக்களைத் திசை திருப்பி விடுகிறது.”

இந்த வரலாற்று இணைகளைத் தொட்டுக்காட்டுவது அச்சுறுத்த அல்ல. ஆனால் இந்த அறிக்கை ஆய்வு செய்தது போல,. நா.த.க. உள்ளிட்ட தமிழ்த்தேசிய அரசியலை இன்று முன்னெடுக்கும் அமைப்புகளில் இணைந்துள்ள இளைஞர்கள், பொதுமக்களின் வர்க்கப்பின்னணி சமூகப்பின்னணி பற்றியெல்லாம் ஆய்வு செய்து புரிந்துகொள்ள வேண்டியது அவசியம்.

Challenges faced in contemporary language politics (Tamil Nationalism) Article by Writer Sa. Tamilselvan. Book Day, Bharathi Puthakalayam

ஆகவே தமிழ்நாட்டில் பல இயக்கங்களும் தங்கள் வளர்ச்சிக்குத் தேவை என்று கருதும் போதெல்லாம் தமிழ் இன அல்லது தமிழ் இனவாத அரசியல் முழக்கங்களைக் காலம் தோறும் எழுப்பியே வந்திருக் கின்றன. சில சந்தர்ப்பங்களில் சில பிரச்னைகளில் இந்திய கம்யூ னிஸ்ட் கட்சியும் தமிழ்த்தேசிய வாதிகளின் நிலைபாட்டுக்கு நெருக்கமான நிலைப்பாட்டை எடுத்ததுண்டு. ஆகவே தமிழ்த் தேசிய அரசியலுக்கு ஒரு வரலாறு தமிழ் மண்ணில் இருக்கிறது. ஒரு கட்சி சார்ந்ததாக மட்டும் அது இருக்கவில்லை. பல இயக்கங்களும் கையிலெடுப் பதும் கீழே போடுவதுமான தன்மையுடன் அது இருந் துள்ளது. அந்தந்தக் காலச் சூழலுக்குள் வைத்து அவற்றை நாம் புரிந்துகொள்ள வேண்டும்.

மார்க்சும் எங்கெல்சும் வாழ்ந்த காலத்தில் ஐரோப்பாக்கண்டம் முழுவதும் பற்றி எரிந்து கொண்டிருந்த ஒரு பிரச்னை தேசிய இனப்பிரச்னை. முதல் உலகப்போரை நோக்கி இட்டுச்சென்ற ‘சந்தைக்கான’ முதலாளித்துவ, பிரபுத்துவப் பங்கீட்டுச் சண்டைக்காலத்தில் ஆக்கிரமிப்பு யுத்தங்களின் மூலம் தேச எல்லைகள் அழிக்கப்படுவதும் மீண்டும் மீண்டும் புதிய தேசங்கள் உருவாக்கப் படுவதும் சிதைக்கப்படுவதுமான நிகழ்வுப்போக்கில். முன்னுக்கு வந்தவை ஆட்சி மொழி, பயிற்றுமொழிப் பிரச்னையும் அதை ஒட்டிய தேசிய இனப் பிரச்னையும்தான். எனவே, தேசிய இனப்பிரச்னை குறித்து ஆழமான கவனத்தை மார்க்சும் ஏங்கெல்சும் செலுத்தினர் என்பது மறுக்க முடியாத வரலாற்று உண்மை .

உலகின் முதல் காலனியாக்கப்பட்ட நாடான அயர்லாந்தின் வரலாற்றில் துவங்கி ஒடுக்கப்படும் தேசிய இனங்களின் வரலாறுகள் எல்லாவற்றையும் ஆழமாக ஆய்வு செய்து பல கட்டுரைகளை எழுதினர். ருஷ்ய தேசிய இனத்தின் ஒடுக்கு முறைக்கு ஆளான பல்வேறு தேசிய இனங்களின் பிரச்னைகள் குறித்து லெனின் தொடர்ந்து கவனம் செலுத்தினார்.

மார்க்சியவாதிகளிடத்தும் மார்க்சியவாதிகளாக ஆக விரும்புவோரிடத்தும் தேசிய இனப்பிச்னை குறித்துக் காணப்படும் வேலைத்திட்ட ஊசாலாட்டங் களைப் பரிசீலனை செய்யும் நோக்கத்துடன் தோழர் லெனின் 1913 செப்டம்பர் 5 பிராவ்தா இதழில் எழுதிய “மொழிப்பிரச்னை குறித்து மிதவாதிகளும் ஜனநாயக வாதிகளும்” என்கிற கட்டுரை, மொழி மற்றும் தேசிய இனம் சார்ந்த பிரச்னையை மார்க்சியர் எப்படி அணுகவேண்டும் என்பதற்கான வழிகாட்டும் வாசகங்களைக் கொண்டுள்ளது. அக்கட்டுரையின் சில பகுதிகளை இங்கு பார்க்கலாம்: –

“தேசிய இனங்களின், மொழிகளின் சமத்துவத்தை அங்கீகரிக்காத, அதற்காகப் போராடாத எவரும், எல்லாவிதமான தேசிய இன ஒடுக்குமுறையையும் சமத்துவமின்மையையும் எதிர்த்துப் போராடாத எவரும் மார்க்சியவாதி அல்ல, ஜனநாயகவாதியுங்கூட அல்ல. அது சந்தேகத்துக்கு இடமில்லாதது”

“ பாட்டாளி வர்க்கம் குறித்துப் பேசுகையில் ஒட்டு மொத்தமாய் உக்ரேனியக் கலாசாரத்தை ஒட்டுமொத்தமாய் ருஷ்யக் கலாசாரத்துக்கு எதிராய் வைத்திடுவதானது, முதலாளித்துவ தேசியவாதத்தின் நலனை முன்னிட்டு வெட்கமின்றிப் பாட்டாளி வர்க்க நலன்களுக்குத் துரோகமிழைப்பதே ஆகும்.”

” ஒரு தேசிய இனத்தின் தொழிலாளர்கள் மற்றொன்றின் தொழி லாளர்களிடமிருந்து தனியே பிரிக்கப்பட்டு ஒதுக்கி வைக்கப்படுவதையும், மார்க்சிய ”ஒன்று கலத்தல்” மீதான எல்லாத் தாக்குதல்களையும், பாட்டாளி வர்க்கம் சம்பந்தப்பட்ட பிரச்சினைகளில் ஒட்டு மொத்தமாய் ஒருதேசியக் கலாசாரத்தை ஒருமித்த தாய் இருப்பதாகப் பாவிக்கப்படும் இன்னொரு தேசிய கலாசாரத்துக்கு எதிராய் வைப்பதற்கான எந்த முயற்சிகளையும், இன்ன பிறவற்றையும் எவ்விதத்திலும் ஆதரித்து நிற்பதானது, முதலாளித்துவ தேசியவாதமே ஆகும். இந்த முதலாளித்துவ தேசியவாதத்தை எதிர்த்து ஈவிரக்க மற்ற போராட்டம் நடத்துவது அத்தியாவசியக் கடமையாகும்.”

இம்மூன்றும் ஒன்றோடு ஒன்று பின்னிப் பிணைந்ததாக நம்முடைய பார்வை இருக்க வேண்டும். இவற்றில் முதல் பத்தியை மட்டும் எடுத்துக்கொண்டு இனவாத எல்லைக்கும் போகக் கூடாது. எந்தத் தேசிய இனமானாலும் அந்தந்த தேசிய இனங்களின் பாட்டாளி வர்க்க ‘ஒன்று கலத்தலின்’ மீது நின்றே தேசிய இன விடுதலையைப் பேச வேண்டும் என்கிற வழிகாட்டுதலை லெனின் தருகிறார். இந்தப்பார்வையை உட்கொண்டே நாம் தமிழ்த்தேசியத்தின் வரலாற்றுத் தடங்களைப் பார்க்க வேண்டும்.

தமிழ்த்தேசியத்தின் தடங்கள்:

கிழக்கிந்தியக் கம்பெனியின் அதிகாரிகளான எல்லிஸ், பர்னல், ரிச்சர்ட் கிளார்க் போன்றோர் ஒரு குறிப்பிட்ட நிலப்பரப்பில் வாழும் மக்கள் பின்பற்றும் சட்டங்கள், வழக்கங்கள் ஆகியவற்றின் தொகுப்பையே ‘திராவிடம்’ என்றனர். ஆனால் அறிஞரும் கிறித்துவ மிசனரியுமான ராபர்ட் கால்டுவெல்தான் முதன் முதலாக ‘திராவிடம் என்பது தமிழ் உள்ளிட்ட பல மொழிகள் அடங்கிய மொழிக்குடும்பத்தைக் குறித்தது என்று சொன்னார். (மொழியாகிய தமிழ்-ந.கோவிந்தராஜன் – க்ரியா பதிப்பகம்)

தெக்கணமும் அதிற்சிறந்த திராவிடநல் திருநாடும் எனத்துவங்கி
“கன்னடமுங் களிதெலுங்கும் கவின் மலையாளமும் துளுவும் உன்னுதரத் தேயுதித்தே ஒன்றுபல வாகிடினும்
ஆரியம்போல் உலகவழக்கழிந் தொழிந்து சிதையாவுன்
சீரிளமைத் திறம் வியந்து செயன்மறந்து வாழ்த்துதுமே!” என்கிற பாடலை (இன்று நம் தமிழ்த்தாய் வாழ்த்து) மனோன்மணியம் சுந்தரம் பிள்ளை பாடுவதற்கு அடியெடுத்துக் கொடுத்தவர் கால்டுவெல்.

ஆங்கிலேயர்களுக்கு அதுகாறும் எல்லாமே சமஸ்கிருதம் தான். சமஸ்கிருதம் தான் இந்தியாவின் மொழிகளுக்கெல்லாம் தாய் என்றே ஐரோப்பிய அறிவுலகம் நம்பியது. மாக்ஸ் முல்லர் போன்ற வர்கள் வடமொழி இலக்கியம் – பண்பாடு – கலை என்பதைத் தாண்டித் தெற்கு நோக்கித் திரும்பவே இல்லை. திராவிட மொழிகளை வடநாட்டார் ‘பைசாச பாகதம்’ அதாவது ‘பேய்களின் மொழி’ என்றே பேசி வந்தனர். இதற்குப் பின்னால் ஒரு மொழி அரசியல்’ இருந்தது. அதை உடைத்து தமிழ்மொழியின் சிறப்புகளையும் அதன் செறிவுமிக்க இலக்கியங்களையும் ஐரோப்பாவுக்கு எடுத்துச் சென்றவர்கள் கிறித்துவப் பாதிரிமார்களே.

1606-ல் இத்தாலியிலிருந்து தமிழ்நாட்டுக்கு வந்த ராபர்ட்டி நொபிலி, 1700-ல் இத்தாலியிலிருந்து வந்து தமிழ் எழுத்துச் சீர்திருத்தம் கண்ட வீரமாமுனிவர் என்ற கான்ஸ்ட ன்டின் ஜோசப் பெஸ்கி, 1709-ல் ஜெர்மனியிலிருந்து வந்து தமிழ் கற்றுத் தொண்டாற்றிய சீகன் பால்கு, 1796-ல் இங்கிலாந்திலிருந்து வந்திறங்கி திருக்குறளின் முதல் 13 அதிகாரங்களுக்கு ஆங்கி லத்தில் உரை எழுதிய எல்லிஸ் துரை, 1814-ல் ஜெர்மனியிலிருந்து வந்து திரு நெல்வேலியில் ‘சாந்தபுரம் -சந்தோஷபுரம்’ முதலிய பன்னிரண்டு கிராமங்களை உண்டாக்கிய இரேனியுஸ் அடி கள், 1838-ல் இங்கிலாந்திலிருந்து வந்து திருக்குறளையும் திருவாசகத்தையும் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்த ஜி.யு.போப் என்று தமிழுக்குத் தொண்டாற்றித் தமிழ் மக்களை கிறித்துவத்துக்கு ஈர்த்த பாதிரிமார் பலர். –

கிறித்தவ மதமாற்றங்களுக்கு எதிர்வினையாகவும் கிறித்துவமும் தமிழும் என்பதற்கு மாற்றாகவும் சைவமும் தமிழும் என முழங்கித் தமிழ் அரசியலை முன்னெடுத்தார் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த ஆறுமுக நாவலர். அவருடைய குரலை தமிழ் நாட்டில் இயங்கிய சைவ மடங்களும் எதிரொலித்துத் தமிழ் அரசியலை (சைவத்தைக் காப்பதற்காக) அதன் ஆரம்ப வடிவில் பரவலாக்கினர். 1848 ஆம் ஆண்டில் ஆறுமுக நாவலர் சைவப்பிரகாச வித்தியா சாலையை அமைத்தார். சென்னைக்கு வந்து அச்சு இயந்திரம் வாங்கிச்சென்று சைவ நூல்களைப் பதிப்பித்தார்.

சைவ மத அரசியலோடு பிணைந்ததாக இருந்த இப்போக்கைத் தமிழ் மொழிசார்ந்த இயக்கமாக மாற்றித் துணை புரிந்தவை இரண்டு அம்சங்கள். ஒன்று கால்டுவெல் துவக்கிவைத்த ஆரிய – திராவிட எதிர்நிலை மற்றொன்று 19 ஆம் நூற்றாண்டில் துவங்கியிருந்த அச்சுப்பதிப்பு இயக்கம். 1894 ஆம் ஆண்டு எட்டுத்தொகையினுள் ஒன்றான புறநானூறு மூலமும் உரையும் தமிழ்த்தாத்தா எனப் பின்னர் அடையாளப்பட்ட உ.வே.சாமிநாதையர் அவர்களால் பதிப்பிக்கபட்டது. 1000, 2000 எனப் பிரதிகள் அச்சிடப்பட்டு மக்களிடம் பரவியது. தமிழின் தொன்மையும் செறிவும் குறித்த பெருமித உணர்வு பரவிட இது ஒரு ஊக்கமாக அமைந்தது.

“பொதியமலைப் பிறந்த மொழி வாழ்வறியும் காலமெலாம் புலவோர் வாயிற் துதியறிவாய் அவர் நெஞ்சின் வாழ்த்தறிவாய் இறப்பின்றித் துலங்குவாயே” என்று மகாகவி பாரதி உ.வே. சா.வைப் போற்றியதும் இக்காலத்தில்தான்.

பாண்டித்துரைத்தேவர் 1905 ஆம் ஆண்டு நான்காம் தமிழ்ச்சங்கம் என்கிற அமைப்பை உருவாக்கினார். தமிழ் மொழி சார்ந்த விவாதங்களை அது முன்னெடுத்தது.

தனித்தமிழ் இயக்கம்

Challenges faced in contemporary language politics (Tamil Nationalism) Article by Writer Sa. Tamilselvan. Book Day, Bharathi Puthakalayam

அப்போது எழுதப்பட்டு வந்த தமிழ் உரைநடை மணி பிரவாளமாக இருந்தது. மணி ஒன்றும் பவளம் ஒன்றும் அடுத்தடுத்துக் கோத்து உருவாக்கப்படும் மாலையைப் போலத் தமிழ்ச்சொல் ஒன்று வட சொல் ஒன்றென அடுத்தடுத்துப் பயன்படுத்தி எழுதுவது மணிப்பவளம் என்னும் கலப்படத்தமிழ் நடையாகும்.

இத்தகைய நடையால் தமிழுக்குக் கேடுவிளையும் எனக்கண்ட தமிழறிஞர் மறைமலை அடிகள் 1916 இல் துவக்கிய இயக்கமே ‘தனித்தமிழ் இயக்கம்’.

வேதாச்சல சுவாமிகள் என்கிற தன்னுடைய பெயரை மறைமலை அடிகள் என்று மாற்றினார். தன் குடும்பத்தின் அத்தனை பேருடைய பெயர்களையும் திருஞான சம்பந்தன் – அறிவுத் தொடர்பன், மாணிக்கவாசகம் – மணிமொழி, சுந்தரமூர்த்தி – அழகுரு என்று மாற்றப்பட்டன. அவருடைய தங்கை பெயர் திரிபுர சுந்தரி – முந்நகரழகி என்று மாற்றப்பட்டது. மருமகன் பெயர் குஞ்சிதபாதம் – அது தூக்கிய திருவடியாயிற்று.

வெறும் பெயர் மாற்றத்தோடு நில்லாமல், ஆரி யத்தை நீக்கிய தமிழ்த்திருமணம், திருவள்ளுவர் ஆண்டுமுறை, தமிழர் மதம், தமிழரின் நான்மறை முதலிய கோட்பாடுகள் இவ்வியக்கத்தால் முன்வைக்கப்பட்டன. தமிழ்முறைத்திருமணம் என்கிற வழக்கம் இன்றளவும் தொடர்வதைப் பார்க்கிறோம்.

மறைமலை அடிகள், பாரதிதாசன், கா.சுப்பிர மணியபிள்ளை, வ.சுப்பையாபிள்ளை, தேவநேயப் பாவாணர், கா.அப்பாதுரையார், சி.இலக்குவனார், இளவழகனார்,வ.சுப.மாணிக்கனார், கி.ஆ.பெ. விசுவநாதம் போன்ற அறிஞர்கள் தனித்தமிழ் இயக்கத்தின் வேர்களாக இருந்தனர். பல்வேறு சிந்தனைப்போக்கு உள்ளவர்களான இவர்கள் தனித்தமிழ் என்கிற ஒரு நிகழ்ச்சி நிரலில் ஒன்றுபட்டி ருந்தனர். பல இதழ்களும் தனித்தமிழ் இயக்கத்தை முன்னெடுக்கத் துணை புரிந்தன. மறைமலை அடிகளாரின் “அறிவுக்கடல்” திருவி.க. நடத்திய நவசக்தி,பாவாணர் நடத்திய ‘தென் மொழி’ பாவேந்தர் நடத்திய ‘குயில்’ கி.ஆ.பெ. விசுவநாதத்தின் ‘தமிழர் நாடு’ போன்றவை அவ்விதழ்கள். தனித்தமிழ் இயக்கம் போலவே அதே காலத்தில் பாவாணர் ‘உலகத் தமிழ் இயக்கம்’ என்கிற அமைப்பையும் வ.சுப.மாணிக்கனார் ‘தமிழ்வழிக் கல்வி இயக்கம்’ என்கிற இயக்கத்தையும் நடத்தினர்.

‘தனித்தமிழ் இயக்கத்தின் அரசியல் பின்னணி’ என்கிற சிறு நூலில் இவ்வியக்கம் பற்றிய தன் பார்வைகளை பேராசிரியர் கா.சிவத்தம்பி முன் வைத்துள்ளார். “பத்தொன்பதாம் நூற்றாண்டில் தமிழ் அடையாளங்களை மீட்டெடுத்தல், பகுத்தறிவு இயக்கம் முன்னெடுத்த சாதி மறுப்பு, பெண் விடுதலை, பார்ப்பனியத்துக்கு எதிராகக் கிளர்ந்த ‘தென்னிந்திய நலவுரிமைச்சங்கம்’ எனப்பல்வேறு அசைவியக்கங்கள் ஊடாடிய தமிழ்ச்சூழலில் தமிழ், சைவம் என்னும் பின்னணியில் வரும் மறைமலை அடிகள் தனித்தமிழ் இயக்கத்தை நிறுவினார்.” என்பது அவர் கருத்து.

நீண்ட காலமாகத் தமிழ் நிலப்பரப்பில் அந்நியர் ஆட்சி நடைபெற்று வந்த பின்னணியில் ஆட்சி மொழியாகத் தெலுங்கு, மராட்டியம், உருது, பாரசீகம் பின்னர் ஆங்கிலம் முதலியன கோலோச்சியுள்ளன. மக்கள் மொழியாகத் தமிழே இருந்தாலும் அது எப்போதும் ஆட்சிமொழி ஆனதில்லை. இந்த நெடிய மொழித்திணிப்பு வரலாற்றுக்கான எதிர்வினையாகவும் ஏக்கத்தின் வெளிப்பாடாகவும் தனித்தமிழ் இயக்கத்தைக்காண வேண்டும். இதில் ஒரு நியாயப்பாடு இருப்பதை நாம் புறக்கணிக்க முடியாது.

தோழர் ப. ஜீவானந்தம் அவர்களின் கருத்து கவனத்தில் கொள்ளத்தக்கது:

“தனித்தமிழ்ப்போக்கால் லாபம் உண்டா? உண்டு என்பது என் கருத்து. இதனால் தமிழ்மொழி வளர்வதற்கு ஆக்கமும் ஊக்கமும் கிடைக்கிறது. ஆனால் இதை அளவுக்கு மீறி மொழி வெறியை எட்டுமளவுக்குக் கொண்டுபோகக்கூடாது.கூடுமான வரைக்கும் எல்லாவற்றையும் தமிழிலே, அழகான, எளிய தமிழிலே, எளிதாகப் புரியக்கூடிய தமிழிலே சொல்ல வேண்டும். வேண்டாத இடத்தில் வலிந்து கொண்டு வருவது கூடாது என்ற முறையில் தனித்தமிழ்ப்போக்கு சரியே” என்றார் ஜீவா.

இந்தித்திணிப்பு எதிர்ப்பு இயக்கங்கள்

Challenges faced in contemporary language politics (Tamil Nationalism) Article by Writer Sa. Tamilselvan. Book Day, Bharathi Puthakalayam

தமிழ்த்தேசிய அரசியல் அலை ஓய்ந்துவிடாமல் காத்த இயக்கங்களில் முக்கியமானவை இந்தி எதிர்ப்பு இயக்கங்கள் எனலாம். 1937-38 காலகட்டத்தில் ராஜாஜி தலைமையிலான அரசு 125 பள்ளி களில் இந்தியைக் கட்டாயப் பாடமாக்கியபோது இந்தித்திணிப்பு எதிர்ப்புப் போராட்டம் எழுந்தது.

சுதந்திர இந்தியாவில் 1950இல் உருவான இந்திய அரசியலமைப்புச்சட்டம் 15 ஆண்டுகளுக்கு ஒன்றிய அரசின் அலுவல் மொழியாக இந்தி அல்லது ஆங்கிலம் இருக்கும் என்றும் 15 ஆண்டுகளுக்குப் பின் ”அல்லது ஆங்கில” என்கிற வாசகம் நீக்கப்படும் என்றும் கூறியது. இது நேருவின் வாக்குறுதி: மீண்டும் 1965 இல் இந்திப் பிரச்னை எழுந்தது. போராட்டமும் வீறு கொண்டு எழுந்தது. கல்லூரி மாணவர்கள் களத்தில் குதித்தனர். பக்தவச்சலம் அப்போது தமிழ்நாட்டின் முதலமைச்சர். ராஜாஜி உள்ளிட்ட பல கட்சித்தலைவர்கள் போராட்டத்தை ஆதரித்தனர். இரு மாதங்கள் வரை நீடித்த இப்போராட்டத்தில் 70 க்கு மேற்பட்டவர்கள் இறந்தனர், கொல்லப்பட்டனர். அதிகாரபூர்வமாக 70 பேர் என்றாலும் 500 பேர்வரை இறந்திருக்கலாம் என்ற கருத்து வலுவாக உள்ளது.

இதன் தாக்கம் 1967 தேர்தலில் வெளிப்பட்டது. திமுக ஆட்சிக்கு வந்தது.ஆங்கிலம் அலுவல் மொழியாகத் தொடரும் திருத்தம் இந்திராகாந்தி பொறுப்புக்கு வந்தபின் கொண்டுவரப்பட்டது.

மொழியுணர்வும் மொழிசார்ந்த அரசியலும் இப்போராட்டங்களால் சூடு தணியாமல் தொடர்ந்தது. உதவியது ஒன்றிய அரசின் பிடிவாதமான மொழிக்கொள்கை எனலாம்.

மொழிவாரி மாநிலங்களுக்கான போராட்டம்

இந்தியா என்பது பல்வேறு மொழிவழி தேசிய இனங்களின் கூட்டமைப்பு என்பதை இந்திய அரசியலமைப்புச் சட்டம் உறுதி செய்திருந்தாலும், விடுதலையை நோக்கி நகர்ந்துகொண்டிருந்த காலத்தில் இந்திய தேசியக் காங்கிரஸ் கட்சி அக்கருத்தை மனப்பூர்வமாக ஏற்றுக்கொண்டதில்லை. ஆனால் இந்தியாவின் பல்வேறு வட்டா ரங்களில் வாழ்ந்த மக்களின் வேட்கையாகவும் கனவாகவும் அது இருந்தது. விடுதலைப்போராட்டத்தில் எல்லாப்பகுதி மக்களையும் இணைக்க வேண்டிய தேவை இருந்ததால் எல்லா மொழிகளுக்குமான சமத்துவம் பேணப்படும் என்று சொல்லி வந்தது. 1928இல் அனைத்துக்கட்சிகள் மாநாட்டில் அமைக்கப்பட்ட நேரு கமிட்டி முன் வைத்த அறிக்கை மொழி சார்ந்து உண்மையிலேயே ஜனநாயகப் பூர்வமாகப் பேசியது:

“ஒரு பிராந்தியம் தன்னைத் தானே பயிற்று வித்துக் கொள்வதற்கும், தனது சொந்த மொழியின் மூலமாக தனது அன்றாட வேலைகளைச் செய்து கொள்வதற்கும், ஒரு மொழிவாரி மாநிலம் அவசிய மாக இருக்க வேண்டும். அது பல மொழிகளைக் கொண்ட பகுதிகளாக இருக்குமானால், தொடர்ந்து சிக்கல்கள் ஏற்படுவதோடு, இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட பயிற்று மொழி மற்றும் பணி மொழிகளும் இருக்கும். எனவே, மொழிவாரி அடிப்படையில் பிராந்தியங்களைப் பிரித்து அமைக்கவேண்டியது மிகவும் அவசியமாகும். கலாச்சாரத்தின் பல்வேறு விசேஷத் தன்மைகளுடனும் இலக்கிய அம்சங்களுடனும் இணைத்து செல்வது மொழியாகும். மொழிவாரி மாநிலங்களில், இந்த அனைத்து அம்சங்களும் அந்த பிராந்தி யத்தின் பொதுவான வளர்ச்சியில் உதவிகரமாக இருக்கும்” (எஸ்.ஆர்.சி. அறிக்கை , பக். 13). –

Challenges faced in contemporary language politics (Tamil Nationalism) Article by Writer Sa. Tamilselvan. Book Day, Bharathi Puthakalayam

இந்த அறிக்கையின் ஒரு வார்த்தைக்குக்கூட காங்கிரஸ் கட்சி ஆட்சிக்கு வந்த பிறகு உண்மையாக இருக்கவில்லை. உறுதிமொழிகளுக்குத் துரோகம் இழைத்தது. தேச ஒற்றுமை, தேசப்பாதுகாப்பு, பொருளாதார வளர்ச்சி, ஐந்தாண்டுத்திட்டம் இதெல்லாம்தான் முக்கியம் என்று சொல்லி தட்டிக்கழித்துக்கொண்டே வந்தது. இதற்கிடையே மக்கள் போராட்டங்கள் வெடித்தன. ஆந்திர இயக்கம் பொட்டி ஸ்ரீராமுலுவின் 58 நாட்கள் உண்ணா விரதத்துக்குப் பிறகான மரணத்தை ஒட்டித் தீவிரமா னது. நாடெங்கும் மொழிவாரி மாநிலங்களுக்கான வெகுஜன எழுச்சியில் கம்யூனிஸ்ட்டுகள் முன்னிலை பாத்திரம் வகித்தனர். வன்முறையால் ஒடுக்க முயன்று தோற்ற நேரு அரசாங்கம் கடைசியில் 1953இல் மாநிலங்கள் சீரமைப்புக் கமிஷனை அமைத்து 01-11-1956 அன்று மொழிவாரி மாநிலங்களை அமைத்தது. 

“தேசிய இனங்களின் சுய நிர்ணய உரிமை” என்கிற நூலில் தோழர் லெனின் எழுதியுள்ள இப்பகுதி இவ்விடத்தில் பொருத்தி வாசிக்கத் தோதாக உள்ளது:

“ருஷ்யாவில் தேசிய இயக்கங்கள் தோன்றி யிருப்பது இதுதான் முதல் தடவையல்ல; அது இந்த நாட்டுக்கு மட்டுமே உரித்தான அம்சமும் அல்ல. உலகம் முழுவதிலும் முதலாளித்துவமானது நிலப் பிரபுத்துவத்தின் மீது இறுதி வெற்றி கொள்ளும் காலகட்டம் தேசிய இயக்கங்களுடன் இணைந்துள்ளது. விற்பனைப் பண்ட உற்பத்தியின் – முழுவெற்றிக்கு உள்நாட்டு மார்க்கெட்டைப் பூர்ஷ்வாக்கள் கைப்பற்ற வேண்டியது அவசியம்; ஒரே மொழி பேசும் மக்களைக் கொண்ட, அரசாங்க ரீதியில் ஐக்கியப்படுத்தப்பட நிலப்பரப்புகள்’ அதற்கு வேண்டும்; அம்மொழியின் வளர்ச்சிக்கும் அதன் இலக்கியம் உருப்பெற்றுத் திகழ்வதற்கும் முட்டுக்கட்டையாக உள்ள தடைகள் அகற்றப்பட வேண்டும்.

இங்கேதான் தேசீய இயக்கங்களின் பொருளாதார அடித்தளம் இருக்கிறது. மனித உறவு களுக்கு மிகமிக முக்கியமான சாதனம் மொழி. நவீன முதலாளித்துவத்துக்கு ஏற்ற அளவில் உண்மையிலேயே சுதந்திரமான, விரிவான வாணி கத்துக்கும், மக்கள் சுதந்திரமாகவும் விரிவாகவும் பல்வேறு வர்க்கங்களாக அமைவதற்கும், பெரிய உடைமையாளனுக்கும், விற்போருக்கும் வாங்குவோருக்கும் இடையில் நெருங்கிய தொடர்பை ஏற்படுத்துவதற்கும் மிகமிக முக்கிய மாகத் தேவையான சூழ்நிலைகள், மொழியின் ஐக்கியமும் தடையற்ற வளர்ச்சியும் தான்.

ஆகவே ஒவ்வொரு தேசீய இயக்கத்தின் போக்கும் நவீன முதலாளித்துவத்தின் தேவைகள் மிக நன்றாகப் பூர்த்தி செய்யப்பட வாய்ப்புள்ள தேசீய அரசுகள் அமைப்பதற்கான வழியிலானது. மிகமிகத் தீர்க்கமான பொருளாதாரக் காரணிகள் – இந்த இலக்கை நோக்கி இட்டுச் செல்லுகின்றன.”

இந்தியாவில் நிலப்பிரபுத்துவத்தை வெற்றி கொள்ளாமல் அதனுடன் சமரசம் செய்து கொண்டு தன் கூட்டாளியாகக் கொண்ட இந்தியப் பெரு முதலாளி வர்க்க அரசு பல்தேசிய மொழிகளின் 1. வளர்ச்சிக்குப் பாடுபட மறுத்து ஒற்றை இந்தி மொழியைத் திணித்துத் தன் ஒரே மார்க்கெட்டைப் பிடிக்க முயன்றது எனலாம்.

அடையாள அரசியலின் முக்கியமான ஒரு தேவை – அல்லது கூறு என்னவெனில் நாமல்லாத மற்றமை ஒன்றை எதிர் நிலையில் நிறுத்தி நாம் தமிழரல்லவோ என்கிற அணிதிரட்டலைச் செய்வது. காவிரி நதிநீர்ப் பங்கீடு ஒரு தீராப்பிரச்னையாக கர்நாடகத்துக்கு எதிராக தமிழ் உணர்வைத் தூண்டுகிறது. முல்லைப்பெரியார் அணைப் பிரச்னையில் கேரளம் எதிர்நிலையாக நாம் என்ற உணர்வூட்ட உதவுகிறது.

கச்சத்தீவு, நியூட்ரினோ, ஹைட்ரோகார்பன், நீட் தேர்வு எனத் தமிழ் மக்கள் பாஜக அரசினால் வஞ்சிக்கப்படுவதான உணர்வு தொடர்ந்து நீடிக்கிறது. ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக லட்சோப லட்சம் இளைஞர்கள் ஆணும் பெண்ணுமாகத் திரண்டதில் மற்ற அம்சங்களோடு தமிழ்த்தேசிய அரசியல் கூறும் அதில் உண்டு . இவற்றில் பல மாநில எல்லைசார் பிரச்னைகள், சில அறிவியல் சார்ந்த பிரச்னைகள், சில ஒன்றிய அரசின் கார்ப்பொ ரேட் அடிவருடிக் குணத்தால் வரும் பிரச்னைகள். எல்லாவற்றையும் தமிழ்த்தேசிய அரசியல் தனதாக்கிப் பேசும் வல்லமை கொண்டுள்ளதுஎந்தப்பக்கமிருந்து பந்து வந்தாலும் ஓடி ஓடி அடித்துவிடுகிற மட்டைப்பந்து வீரனைப்போல.

சில அறிவியல் உண்மைகள்:

தமிழ்த்தேசிய அரசியலை எதிர்கொள்ளல் பற்றிய இறுதிப்பகுதிக்கு முன்னால் சில அறிவியல் உண்மைகளைக் குறித்துக்கொள்வது நல்லது. தமிழ்த் தேசியர் காலம் காலமாக முழக்கமாகவே எழுப்பிவரும் சில உணர்ச்சிகரமான வாதங்களை அறிவியலால் எதிர்கொள்ளலாம்.

“கல்தோன்றி மண் தோன்றாக் காலத்தே வாளோடு முன் தோன்றிய மூத்த குடி” நம் தமிழ்க்குடி என்பது ஒன்று. சேரன் செங்குட்டுவன் இமயம் வென்றான் இமயத்தில் கல்லெடுத்து கனகவிசயர் தலையில் ஏற்றித் தெற்கே கொண்டு வந்து கண்ண கிக்குச் சிலை வடித்தான்” என்பது இன்னொன்று. இந்த வசனங்களை எள்ளி நகையாடுவதால் எந்தப் பயனும் இல்லை . இதை நம்பும் ஒரு பகுதி மக்களுக்கு அறிவியல் பூர்வமான விளக்கங்கள் சொல்லி வென் றெடுப்பதே நம் கடமை. ஆப்பிரிக்காக் கண்டத்துடன் ஒட்டியிருந்த இந்தியத்தட்டு அங்கிருந்து பிரிந்து நகர்ந்து வந்து ஆசியத் தட்டுடன் மோதியபோது உருவான மண் மேடுதான் இமயமலை. அங்கே உள்ள கல்லால் எதையும் செய்ய முடியாது. மண் கட்டிபோல உடைந்து நொறுங்கும் தன்மைதான் இமயமலைக் கல்லுக்கு உள்ளது.ஆகவே சேரன் செங்குட்டுவன் விந்திய சாத்பூரா. மலைகளிலிருந்து கல் கொண்டு வந்தான் என்று சொன்னாலாவது நம்பலாம்.

இன்னொரு நம்பிக்கை – இது இன்றுவரை ஆழமாக தமிழ்ச்சமூக உளவியலில் ஊடுருவி யுள்ளது இலங்கைக்குத் தெற்கே அண்டார்டிகா வரை விரிந்திருந்த குமரிக்கண்டம் அல்லது லெமூரி யாக்கண்டத்தில்தான் முதல் மனிதன் தோன்றினான். அவன் தமிழன். இக்கருத்து 1930-4 களில் துவங்கிய தமிழியக்க அறிஞர்களான மொழிஞாயிறு தேவ நேயப்பாவாணர், பன்மொழிப்புலவர் கா. அப்பாதுரையார் துவங்கி இன்று யூ ட்யூப்பில் “ஆதி மொழி தமிழ். ஆதி மனிதன் தமிழன்” என முழங்கும் சீமான் வரை உயிர்த்திருக்கிறது.

புவியியல் அறிஞர் சு.கி.ஜெயகரன் அவர்களின் ‘மணல் மேல் கட்டிய பாலம்’ நூலில் உள்ள “குமரிக்கண்டம்-லெமூரியாக்குழப்பம்” என்கிற கட்டுரையின் இப்பகுதி இம்முழக்கங்கள் வெறும் கற்பிதங்கள் எனக் காட்டுகின்றன.

Challenges faced in contemporary language politics (Tamil Nationalism) Article by Writer Sa. Tamilselvan. Book Day, Bharathi Puthakalayam

“பன்மொழிப் புலவர் கா. அப்பாத்துரையார் தான் எழுதிய குமரிக்கண்டம் அல்லது கடல் கொண்ட தென்னாடு (1941) நூலில் லெமூரியாக் கண்டம் பற்றியும் அதன் நில அமைப்பு, அதில் வாழ்ந்த உயிரினம், மக்கள் பற்றியும் விவரங்களைத் தருகிறார். “இலெமூரியாக் கண்டத்தில் கிழக்குப் பகுதியின் மேல்பகுதியில் சில உயர்ந்த மலைகளே இன்று பஸிபிக் கடலின் தீவுகளாகியிருக்கின்றன. எரிமலைகளும், நில அதிர்ச்சியும் அக்கண்ட முழுமையும் என்றும் குலுக்கிக் கொண்டே இருந்தன. இலெமூரிய வாழ்க்கைக்காலம் நடுக்கற்காலமாகும். உள்நாட்டுச் சதுப்பு நிலங்களிலும், கடற்கரையோரங்களிலும், டினோஸர்கள் வாழ்ந்தன. ஊன்வெறியால் அவை உறுமும் பொழுதும், மரஞ்செடி கொடிகளை நெரித்து அவை நடக்கும் அரவம் கேட்கும் போதும் இலெமூரிய மக்கள் கவலையும், முன்னெச்சரிக்கை யும் கொள்வர்; இலெமூரிய மக்கள் தற்கால மக்களை – விட நெட்டையானவர்; ஆறடிக்கு மேற்பட்டு ஏழடி வரையிலும் அவர்கள் உயர்ந்திருந்தனர்; உடலின் எடை 160 – 200 கல் என்று கூறப்படுகிறது.” மேற்கூறிய தகவல்கள் அறிவியல் ஆதாரமற்றவை என்பது தெளிவு. இதில் முக்கியமான குழப்பம் டைனோஸர்களையும் ஆதி மனிதயினத்தையும் சமகாலத்தவராக்கியது. டைனோஸர்கள் அழிந்து பல்லாயிரக்கணக்கான ஆண்டுகளுக்குப் பின்னரே மனித இனம் தோன்றியது என்பது நாமறிந்த அறிவியல் தகவல்.”

குமரிக்கண்டத்தின் வரைபடத்தைக்கூட கற்பனையாக வரைந்துள்ள நம் முன்னோர்கள், அப்படத்தில் குறிக்கப்படும் 700 காத தூரம் என்பது அண்டார்டிகாவையும் தாண்டி பூமிக்கு வெளியே வரை நீள்வதைக் கணக்கிடவில்லை. பய வர்க்கப்போரை நடத்தும் பாதையில் செல்லாத இயக்கங்களுக்கு, இத்தகைய கற்பிதங்கள் தேவைப்படுகின்றன. சமூகமும் இவற்றில் ஆவேசம் கொண்டு ஆசுவாசம் அடைகிறது போலும்.

அறிவியல் கண்டுபிடிப்புகள் இன்றைக்கு மனித குலத்தின் தோற்றமும் பரவலும் பற்றிப் புகைமூட்டமாயிருந்த சித்திரத்தை மேலும் மேலும் தெளிவாக்கி வருகின்றன. மரபணு ஆராய்ச்சியின் மூலம் ஆதிமனிதர்களான ஹோமோ சேப்பியன்கள் உருவான இடம் ஆப்பிரிக்கா என்பது நிரூபிக்கப்பட்டுள்ளது.

அறிவியலாளர் சு.கி.ஜெயகரன் எழுதிய “மூதாதையரைத் தேடி..” (காலச்சுவடு பதிப்பகம் முதற் பதிப்பு – 1991) என்கிற நூலிலிருந்து எடுக்கப்பட்ட இப்பகுதி மேற்படிக் கற்பிதமாக கருதுகோள்களை உடைக்கிறது: 

“மரபியல் ஆய்வுகளும், தொல்லியலாய்வு களும் ஆதிமனித இனம் தோன்றியது ஆப்பிரிக்கா என்பதை உறுதி செய்வதால் அக்கண்டமே மானுடத்தின் தொட்டிலாகக் கருதப்படுகிறது. ஏறத்தாழ 100,000 ஆண்டுகட்கு முன் ஆப்பிரிக்காவில் வாழ்ந்த ஹோமோ செபியன் இனக்கூட்டத்திலிருந்து தற்கால மனிதர் தோன்றினர் என்பது ஆய்வுகளிலிருந்து தெரியவருகிறது. இதுவரை தெற்காப்பிரிக்காவில் நடத்தப்பட்ட அகழாய்வு களால் கண்டுபிடிக்கப்பட்ட தொல்லுயிரெச்சங்கள், எவ்வாறு ஹோமோ எரக்டஸிலிருந்து பழம் CourCuir Coulu (Archaic Homo Sapian) பரிணமித்து, அதன் வழித் தோன்றலான ஹோமோ செபியன் (தற்கால மனிதன்) உருவானான் என் பதைக் காட்டுகின்றன. இப்பரிணாம வளர்வின் பல்வேறு கட்டங்களைக் காட்டும் தடயங்கள் பல கிடைத்துள்ளன.

மேலும், பழம் ஹோமோ செபியன்கள் அப்போது உருவாகிக் கொண்டிருந்த சஹாரா, கலஹாரி பாலைவனங்களைத் தவிர்த்து அவற்றின் ஓரங்களிலிருந்த மலை, வனப்பகுதிகளிலும், அட்லாண்டிக் கடற்கரையையொட்டி கானகங்கள் இருந்த பகுதிகளிலும் ஏறத்தாழ 200,000 ஆண்டு களுக்கு முன் வாழ ஆரம்பித்தனர். கடற்கரை யோரம் வாழ்ந்த ஆதியினம் ஆழமற்ற கடற்பகுதி களில் கிடைத்த நத்தைகள், மீன்கள் போன்ற புரதச்சத்து அதிகம் கொண்ட உணவை உண்ண ஆரம்பித்தனர். இதனால் இவர்களது மூளையளவு பெருத்தது என அறியப்படுகிறது. இந்த இனத்தின் வழித்தோன்றல்களே ஆப்பிரிக்காவை விட்டு வெளியேறிய ஹோமோ செபியன்கள்.

Challenges faced in contemporary language politics (Tamil Nationalism) Article by Writer Sa. Tamilselvan. Book Day, Bharathi Puthakalayam
Image Courtesy: MtDNA | genetics | Britannica

தாய்வழி வரும் மிட்டோகோண்டிரியல் டி.என்.ஏக்களின் (Mt DNA) ஆய்வுகளும் தந்தை வழிவரும் Y குரோமோசோம் டி.என்.ஏக்களின் ஆய்வுகளும் தற்கால மனிதர் 100,000 மற்றும் 20,00,00 ஆண்டுகட்கு முன் ஆப்பிரிக்காவில் உருவானதை உறுதிப்படுத் துகின்றன. அவர்களின் வழித்தோன்றல்களான தற்கால மனிதர் தலைநிலம் வழியாக ஐரோப்பாவிற்கும், கடற்கரையை ஒட்டிய பகுதிகளின் வழியாக இந்தியா, இந்தோ னேஷியா மற்றும் ஆஸ்திரேலியா வரையும் 50,000 – 60,000 ஆண்டுகளுக்கு முன் குடியேறினர். அக்கால கட்டத்தில் கடல் மட்டம் 100மீ.க்கும் அதிகமாக தாழ்ந்திருந்ததால், கண்டச் சரிவுகளின் (Contimental Shelf) பெரும்பகுதி நிலமாயிருந்தது. கடற்கரைகள் இன்றிருப்பதைவிட வெகுவாக அகன்றிருந்தன அப்பகுதிகளின் வழியாகவும் ஆதிமனிதக் குடியேற்றங்கள் ஏற்பட்டன.”

இது தொடர்பான அறிவியல் கண்டுபிடிப்புகள் எல்லாவற்றையும் தொகுத்து எளிய மொழியில் டோனி ஜோசப் என்கிற எழுத்தாளர் “ஆதி இந்தியர்கள்” என்கிற நூலில் அளித்துள்ளார். “கடந்த சில ஆண்டுகளில், உலகம் முழுக்க ஆயிரக் கணக்கான பண்டைய டி.என்.ஏ. மாதிரிகள் படியெடுக்கப்பட்டு ஆய்வு செய்யப்பட்டிருக் கின்றன. இவற்றின் முடிவுகளை வைத்து யார், எங்கு, எப்போது இடம்பெயர்ந்தார்கள், அவற்றின் மூலம் உலகின் பெரிய மக்கள் தொகைக் குழுக்கள் எப்படித் தோன்றின என்பன குறித்த துல்லியமான வரைபடத்தை உருவாக்க முடிந்திருக்கிறது.” என்று சொல்லும் டோனி ஜோசப் ஆப்பிரிக்காவிலிருந்து இந்திய நிலப்பரப்புக்குள் சுமார் 65,000 ஆண்டுகளுக்கு முன்னர் வந்தவர்களே முதல் இந்தியர்கள் என்கிறார். 12,000 ஆண்டுகளுக்கு முன்னர் இந்தியாவுக்குள் நுழைந்த ஈரானின் ஸாக்ரோஸ் மலைப்பகுதியைச் சேர்ந்த உழவர் குழுவை இரண்டாவது இந்தியர்கள் என்கிறார்.

இந்த முதல் இரண்டு குழுக்களும் கலந்து உருவாக்கிய விவசாயப்புரட்சியே ஹரப்பா நாகரிகத்தை நோக்கி இட்டுச்சென்றது. கிழக்கு ஆசியாவிலிருந்து காசி,முண்டாரி போன்ற ஆஸ்த்ரோ -ஆசிய மொழிகளைக் கொண்டு வந்த குழு மூன்றாவது இந்தியர்கள். மத்திய ஆசியாவிலிருந்து நான்காவதாக வந்து சேர்ந்த, ஆரியர் என்று தம்மைக்கூறிக்கொண்ட குழுவை நான்காவது இந்தியர் என்கிறார். இன்று இந்தியாவில் வாழும் நாமெல்லோருமே இந்த நான்கு இந்தியர்களின் கலப்பில் உருவாகி வழிவழியாக வந்தவர்களே. 

இந்த நூல் சங் பரிவாரங்களால் கடுமையாகத் தூற்றப்பட்டு வருவதே இதன் உண்மைத்தன்மைக்கு ஆதாரம் எனலாம். ஆரிய இனம் இந்தியாவின் பூர்வ குடி என்கிற சங் பரிவாரத்தின் கப்ஸாக்களையும் இந்நூல் அடித்து நொறுக்குவதால் சங்கிகள் மூலத்தில் மிளகாய் அரைத்துப் பூசியதுபோல இந்நூலுக்கு எதிராகக் கூக்குரலிட்டு வருகிறார்கள். இத்துடன் சு.கி.ஜெயகரன் எழுதிய “குமரி நில நீட்சி” என்கிற புத்தகம் குமரிக்கண்டம் இருந்ததற்கான சான்றுகள் இல்லை என்பதற்கான அடுக்கடுக்கான அறிவியல் ஆதாரங்களைத் தந்துள்ளது. இந்த இரு நூல்களையும் சேர்த்து வாசிக்க வேண்டும். இவ்விரு புத்தகங்கள் சில முக்கியமான முடிவுகளுக்கு நம்மை இட்டுச்செல்கின்றன.

தமிழ் இனத்தின் வரலாறு தெற்கேயிருந்து அல்ல. ஆதி மனிதன் தமிழன் அல்லன். உலகின் எல்லா மனிதர்களும் ஆப்பிரிக்காவிலிருந்து நடந்து நடந்து பரவியவர்களே.

அப்படியானால் நாம் யார்? தமிழர்களாகிய நாம் எங்கிருந்து வந்தோம்? –

“Journey of a Civilization Indus to Vaigai’ (ஒரு நாகரிகத்தின் பயணம்- சிந்து வெளியிலிருந்து வைகை வரை) என்கிற தன் ஆய்வு நூலில் திரு. ஆர்.பாலகிருஷ்ணன் அவர்கள் மேற்குறிப்பிட்ட நூல்களின் தொடர்ச்சியாக புதிய கருதுகோள் ஒன்றை முன் வைக்கிறார். ஹரப்பா நாகரிகம் சிதைந்த பிறகு அங்கிருந்த மக்கள் எங்கே சென்றார்கள்? வடக்கிலிருந்து நகர்ந்து நகர்ந்து அவர்கள் தெற்கே வந்தார்கள். ஊர்ப்பெயர் ஆய்வுகள் மற்றும் சங்க இலக்கியத்திலுள்ள அகச்சான்றுகள் இவற்றை அடிப்படையாகக் கொண்டு இதை அவர் நிறுவுகிறார். ஹரப்பா விட்ட இடமும் சங்க இலக்கியம் தொட்ட இடமும் ஒன்று என்கிறார். தமிழி, கொற்கை, வஞ்சி போன்ற ஊர்ப்பெயர்கள் ஆப்கானிஸ்தான் தொடங்கி தமிழகம் வரையிலும் நெடுகிலும் இருக்கின்றன.

Challenges faced in contemporary language politics (Tamil Nationalism) Article by Writer Sa. Tamilselvan. Book Day, Bharathi Puthakalayam

பிடிமண் எடுத்துவருவதுபோல மக்கள் இடம் பெயரும்போது புதிய குடியேற்றங்களுக்கு தம் ஊர்ப்பெயரையே வைப்பது மரபு. அதன் வழித் தம் ஊர் நினைவுகளையும் அந்த வாழ்வையும் மீட்டெடுத்துக்கொள்கிறார்கள். சங்க இலக்கியம் அது எழுதப்பட்ட சமகாலத்தைப் பற்றிய இலக்கியமாக மட்டும் இல்லாமல் மீள் நினைவுகளையும் பேசுகிறது. இமயமலையில் உள்ள எருதுகளைப்பற்றியும் தார்ப்பாலைவனத்து ஒட்டகங்கள் பற்றியும் மேற்கிலிருந்து வீசும் வெப்பக்காற்று பற்றியும் அது பேசுவதெல்லாம் இந்தியத் துணைக்கண்டம் முழுமைக்குமான இலக்கியமாக அது இருப்பதை நிறுவுகிறது என்கிறார். வைகைக் கரையின் கீழடி வரையிலான தொல்லியல் ஆய்வுகளையும் வரலாற்றுத் தரவுகளையும் கொண்ட மிக முக்கியமான ஆய்வாக இந்நூல் விளங்குகிறது.

ஆக, கதை இப்போது தமிழ்த்தேசியர்களின் கற்பிதங்களையும் காலி செய்து விட்டது. நம்முடைய மூதாதையரும் ஆப்பிரிக்க மண்ணில் தோன்றியவரே. கல்தோன்றி மண் தோன்றாக் காலத்தேயெல்லாம் மனிதர்களே தோன்றியிருக்கவில்லை. டினோசர்கள் தோன்றி அழிந்த பிறகுதான் இந்தியத்தட்டு ஆப்பிரிக்காவிலிருந்து பிரிந்து நகரத்துவங்கியது. அப்போது மனித இனமே தோன்றியிருக்கவில்லை.

இன்றைக்கும் தமிழ்நாட்டின் குமரிப்பகுதியில் மலையாளம், தமிழ் என இருமொழி பேசும் மக்கள் வாழ்கின்றனர். தர்மபுரி, கிருஷ்ணகிரி பகுதியில் கன்னடமும் தமிழும் பேசும் மக்கள் இருக்கின்றனர். சென்னை உள்ளிட்ட வட மாவட்டங்களில் தெலுங்கும் தமிழும் புழங்குகின்றன. மதுரையில் சௌராஷ்ட்ரா, தமிழ் என இருமொழியாளர்கள். ஆந்திராவிலிருந்து நாயக்க மன்னர்கள் இங்கு ஆண்ட காலத்தில் புலம் பெயர்ந்து வந்து தமிழ்நாட்டின் கரிசல் வட்டாரத்திலும் கோவைப்பகுதியிலும் குடியேறிய மக்கள் இன்றளவும் தெலுங்கும் தமிழும் பேசுகிறார்கள், உருதும் தமிழும் என இருமொழி பேசும் இஸ்லாமியத் தமிழர்கள் இருக்கிறார்கள். இவர்கள் எல்லோருமே தமிழர்கள் என்பதை மறுக்கும் தமிழ்த் தீவிர தேசியவாதிகளும் இருக்கிறார்கள். எளிய அருந்ததியர் மக்களைக்கூடத் தெலுங்கர்கள் எனச்சொல்லி வெளியேறச்சொல்லும் குரல்களை நாம் கேட்டிருக்கிறோம். மொழித்தூய்மை வாதம் இனத்தூய்மை வாதம் பாசிசத்தை நோக்கித்தான் இட்டுச்செல்லும்.

அடையாள அரசியலை எதிர்கொள்ள

தமிழ் மொழிக்கென்று சில தனித்தன்மைகளும் செறிவான எழுத்துப்பாரம்பரியமும் உலகில் எம் மொழியிலும் காணக்கிடைக்காத திணைக்கோட்பாடும் பெருமளவுக்கு மதச்சார்பற்ற சங்க இலக்கியமும் போன்ற சிறப்புகள் உள்ளன. அவற்றுக்காக நாம் பெருமிதம் கொள்ள வேண்டும். அவற்றைப் பேசவும் வேண்டும். ஒடுக்கும் தேசிய இனம் ஒடுக்கப்படும் தேசிய இனம் என்கிற உரையாடல் மார்க்சியத்தில் உண்டு. பொருளாதாரச் சுரண்டல் அல்லாத பிறவகைச் சுரண்டல்களும் மார்க்சிய உரையாடலில் உண்டு. அவற்றை அறிவியல்பூர்வமாக முன்னெடுப்பது அவசியம். 

எப்போதும் அடையாள அரசியல் எழுப்புகின்ற முழக்கங்கள் கோரிக்கைகளில் அடையாள அரசியல் அல்லாத சில நியாயமான பிரச்னைகளும் இருக்கும். ஆவேசமான உணர்ச்சிகளுக்கு அப்பால் துலக்கமாகும் அத்தகைய கோரிக்கைகள் மீது அக்கறை காட்ட வேண்டும்.

தமிழ்த்தேசிய இயக்கத்திற்கு நீண்ட கால வரலாறு இருக்கிறது. அது ஒருபடித்தானதாகவோ, இடையறாத் தொடர்ச்சி உடையதாகவோ இல்லை என்றபோதும். எப்போது என்ன பெயரில் தமிழ்த் தேசிய அரசியல் எழுந்தாலும் இந்த வரலாற்றி லிருந்து நெருப்பெடுத்துத் தங்கள் பந்தங்களை அவர்கள் பற்ற வைப்பார்கள் என்பதைப் புரிந்துகொண்டு, அவர்களைப் பின் தொடரும் எளிய மக்களுடன் அவர்களைப் பொருட்படுத்தி உரையாடலைத் தொடர வேண்டும்.

நன்றி: மார்க்சிஸ்ட் தத்துவார்த்த மாத இதழ் (ஜூலை)