Music Life Series Of Cinema Music (Mettukkalo kangal) Webseries by Writer S.V. Venugopalan.

இசை வாழ்க்கை 57: மெட்டுக்களோ கண்கள்  – எஸ் வி வேணுகோபாலன் 




எந்த வயதிலிருந்து இசையில் விழுந்தோம் என்று கேட்டால், எல்லோராலும் துல்லியமாக அந்த முதல் தருணத்தைச் சொல்ல முடியுமா தெரியவில்லை. அன்னை வயிற்றில் இருக்கும்போதே இசை தான் தாலாட்டுகிறது. பிறந்த குழந்தைக்கு இசை தான் பாலூட்டுகிறது. சீராட்டுகிறது. அந்தப் பாடலை எல்லாம் குழந்தையும் பாடத் தொடங்கும்போது இல்லம் கூடுதல் வெளிச்சத்தில் மின்னுகிறது. குழந்தையைப் புற உலகம், பாடாதே என்று எதோ ஒரு புள்ளியில் அதட்டி நிறுத்தி விடுகிறது. அதற்கும் அசராத பிள்ளைகள் பாடியபடியே வளர்கின்றனர்.

‘ரமேஷா, எனக்காகக் கொஞ்சம் பாட்டு பாடுறா கண்ணா’ என்று (வீட்டில் பெயர் ரமேஷ்) என் இசையைக் கொண்டாடிப் பாடவைத்து ரசித்தவள் எங்கள் லலிதா சித்தி. கயிற்றுக் கட்டில், திண்ணை அல்லது மர பெஞ்சு ஏதோ ஒன்றில் அமர்ந்தபடி, சினிமாப் பாடல்கள், நிறுத்தாமல் ஒரு மணி நேரம் கூட அடுத்தடுத்துப் பாடப் பாட அப்படி சுவைத்துக் கேட்டுக் கொண்டிருப்பாள். ஒருபோதும்,
பாட்டைக் கழற்றி வைத்ததில்லை உடலிலிருந்து.

பள்ளிக்கூடப் பருவத்திலேயே இட்டுக்கட்டிப் பாடும் வழக்கம் தொடங்கி இருந்தது. அது வயது ஏறிக்கொண்டே போனாலும் நிற்கவில்லை. மகன் நந்தாவை உறங்க வைக்கையில், அவனுக்காக அப்போதைக்கப்போது உருவாக்கிய பாடலில் ஒன்று,

செல்ல நந்தா தூங்கு – என்
வெல்ல நந்தா தூங்கு
நாள் முழுதும் நீ செய்யும்
குறும்புக்கெல்லாம் ஓய்வு (செல்ல நந்தா )

கையுடைஞ்ச பொம்மைக்கு ஒரு
காலு கூடக் குறையும் – உன்
கை பட்டால் கால் பட்டால்
எந்தப் பொருள் தேறும்?

பிஞ்சு விரல் தூக்கி என்னை
அடிக்கும் போது வலிக்கும் – நான்
கெஞ்சிடாமல் சிரித்து விட்டால்
கூடக் கொஞ்சம் கிடைக்கும் – அடி
கூடக் கொஞ்சம் கிடைக்கும் (செல்ல நந்தா)

மயிலிறகால் வருடியதாய்
ரகசியமாய் முத்தம் -நீ
தருகையிலே பெறுகையிலே
இருக்குமிடம் சொர்க்கம்

விஷமங்கள் செய்கையிலே
தூங்க வைக்கத் தோன்றும் – நீ
தூங்கிவிட்டால் விழிக்கும்வரை
காத்திருப்பேன் நித்தம்
காத்திருப்பேன் நித்தம்! (செல்ல நந்தா)

நகைச்சுவைப் பாடல் ஒன்று கூட புனைந்ததுண்டு. அது நந்தாவின் நேயர் விருப்பம், ஏதாவது காமெடி பாட்டுப் பாடுப்பா என்றான், மூன்று வயது இருக்கையில். யாரைப் பற்றி காமெடி என்று கேட்கவும், என்னைப் பற்றியே பாடு என்றான்.

அவன் பேரு நந்தா, அவன் பண்ணுவான் பந்தா, அத்தைக் கொண்டா இத்தைக் கொண்டா, கேட்கும் அனகொண்டா…இது தான் பல்லவி. சரணம் இப்படி வரும்:

‘இட்டிலி கொடுத்தால் சப்பாத்தி கேட்பான்,
சப்பாத்தி கொடுத்தால் பரோட்டா கேட்பான்
பரோட்டா கொடுத்தால் சென்னா கேட்பான்
சென்னாவைக் கொடுத்தால் தின்னாமல் சிரிப்பான் (அவன் பேரு)

அப்படி ரசித்து ரசித்து சிரித்துக் கேட்டபடி தூங்குவான்.

சேர்ந்திசைக் குழு ஆசிரியை ராஜராஜேஸ்வரி அவர்கள் மூன்று ஆண்டுகளுக்கு முன்பு மயிலாப்பூர் பற்றி ஒரு பாட்டு கேட்டார் என்று, மயிலாப்பூர் அது ஒயிலாப்பூர் என்று ஒன்று எழுதிக் கொடுக்க, அவர் அத்தனை அன்பு பாராட்டி, மறுத்தாலும் விடாது சன்மானமும் வழங்கி சிறப்பித்தார். இதெல்லாம் பழைய புராணங்கள். இசைப்பாடல்கள் என்று ஒருபோதும் உட்கார்ந்து எழுதியதில்லை.

அண்மையில், கல்லூரி மாணவி சிந்துஜா என்பவர், தமது கல்வியின் பகுதியாக ஒரு படைப்பாளி என்ற முறையில் என்னோடு நெடிய உரையாடல்கள் நடத்தி, விவாதங்கள், கேள்விகள் எழுப்பித் தனது படிப்பை நிறைவு செய்ய இருப்பவர். என்னைப் பற்றிய விவரங்கள் தொகுத்துக் கொண்டே வந்தவர், கதை, கவிதை, குறுநாவல் எல்லாம் எழுதுகிறீர்கள், இசைப்பாடல்கள் ஏன் எழுதுவதில்லை என்று கேட்டார். அதெல்லாம் ஞானமில்லை, வாய்ப்பு இல்லை என்று சிரித்தபடி மறுத்துக் கொண்டே இருப்பேன். இசை வாழ்க்கை என்று ஒரு தொடர் எழுத வரும், இசைப்பாடல் எழுத வராதோ, ஏமாத்தாதீங்க அய்யா’ என்று திரும்பத் திரும்ப சண்டை பிடிப்பார். அண்மையில் ஒரு நாள் தீர்த்துச் சொல்லி விட்டார், பாடல் எழுதிக் கொடுத்தால் தான் ஆயிற்று என.

இசைப்பாடல் ஒன்று கேட்கின்ற நெஞ்சம்
இசைப்பேன் நானும் கொஞ்சம் ஓ ஓ
இதற்கா வார்த்தைப் பஞ்சம்?

என்று தொடங்கிய ஒரு பாடலை, உடனே அமர்ந்து எழுதி அவருக்கு அனுப்பி விட்டு, எழுத்தாளர் அழகிய சிங்கர் அவர்களது சொல் புதிது எனும் வாட்ஸ் அப் குழுவிலும் பகிர்ந்து கொண்டேன். ராகவன் மதுவந்தி எனும் நண்பர் (நேரில் பார்த்தறியாதவர்) அதை அவருடைய நண்பர், பாரதி அன்பர் திரு ராம் குமார் அவர்களுக்குப் பகிர்ந்து பேச, அவர் உடனே ராகேஷ் எனும் நண்பருக்கு அனுப்பிக் கேட்க, உடனே ராகேஷ் அவர்கள் இசையமைத்துத் தானே அந்தப் பாடலைப் பாடி, ஆடியோ பதிவை அனுப்ப, அப்படியே எனக்கும் வந்து சேர்ந்துவிட்டது.

கேட்டு அசந்து போனேன். எழுத்து இசையாக உருமாறும்போது ஏற்படும் ரசாயன வித்தைகள், தனக்காக நிகழ்கையில் அதன் ஈர்ப்பு பன்மடங்கு இருப்பதை உணர முடிந்தது. பாடலின் உணர்வுகளுக்குள் பயணம் செய்கிறது ராகேஷ் அவரது குரல். அத்தனை உயிர்ப்போடு முன்பின் அறியாத ஒருவரது வரிகளைத் தமது இசை ஆற்றில் அவர் மிதக்க விடும் கற்பனைத் திறன் வியக்க வைக்கிறது.

பாடலை, இன்னும் சிந்துஜா பார்க்கவில்லை என்பதுதான் இதில் சுவாரசியம். ஆடியோவையும் பின்னர் அனுப்பியாயிற்று. பாடலுக்கான பெருமை அவரைச் சாரும்.

கவிஞர் ஓர் ஓவியர் என்றால், ஓவியத்தை உயிரோடு உலவச் செய்யும் மந்திரவாதியாகிறார் இசையமைப்பாளர். மெட்டுக்குப் பாட்டும், பாட்டுக்கு மெட்டும் என்று எத்தனை ஓவியங்களை உயிர்த்துடிப்பு மிக்க இசைப்பாடல்களாக இசை மேதைகள் வழங்கி வந்துள்ளனர் திரையிசையில்!

அண்மையில் வந்த ‘லேடீஸ் ஸ்பெஷல்’ இதழின் தீபாவளி மலரில், ‘சந்தம் கொஞ்சும் சினிமா’ பாடல்கள் எனும் தலைப்பில் நண்பர் ஆர் கே ராமநாதன் (ஆர்க்கே), ரசனை பொங்கிப் பொங்கி அருமையான பாடல்கள் சிலவற்றை ரசித்து ரசித்து எழுதி இருக்கிறார். அழைத்து வாழ்த்தும்போது, கட்டுரையில் இடம் பெறாத வேறொரு பாடலைச் சொன்னால், ‘கடகட’ என்று பள்ளி மாணவர்கள் பத்தாம் வாய்ப்பாடு சொல்வது மாதிரி இலகுவாகப் பாடல் வரிகளை வேகமாகச் சொல்லிக் கொண்டே செல்கிறார் மனிதர்.

பாடல்களே வாழ்க்கையாக மாறி விட்ட காலம் எல்லோருக்கும் வாய்க்கிறது. சிலர் அதை இழக்காது தக்கவைத்துக் கொள்ளும் வரம் பெற்றிருக்கையில், வாழ்க்கையே இசையாக ஒலிக்கத் தொடங்குகிறது.

ஆர்க்கே கட்டுரையில் அவர் லயித்து எழுதியதில் மெல்லிசை மன்னரின் அமர்க்களமான ‘முத்துக்களோ கண்கள்’ பாடலும் ஒன்று. அதை வெறும் பாடல் என்று எப்படி குறிப்பிடுவது? ‘நெஞ்சிருக்கும் வரை’ மறக்க முடியாத கனவுத் தூரிகையின் காதல் ஓவியம் அல்லவா அது!

காதல் ததும்பும் ஓர் இதயத்தின் துள்ளல் துடிப்பையே தாளக்கட்டு ஆக்கி இருப்பாரோ என்னவோ எம் எஸ் வி! இதயத்தைத் தொட வேண்டுமானால், வீணையும், வயலினும், புல்லாங்குழலும் வருகை தந்து விடுவார்கள், சொல்லவே வேண்டாம்.

பாடல் முழுக்க முத்துக்களின் துளிகள் விழுந்து கொண்டே இருக்கும் ஒரு மெல்லோசை கேட்டுக் கொண்டே இருக்கும், சிறிய மணிகளின் ஓசை அது. க்ளோக்கென்ஸ்பீல் என்று அழைக்கப்படும் இசைக்கருவியை , இலேசாக ஒரு குச்சியால் இசைக்க, அளவான மணிகளின் இசை உள்ளத்தில் துளித்துளியாகக் காதல் ரசம் சேர்த்து நிரம்ப வைக்கிறது. (சைலோஃபோன் என்று போட்டு வரைந்திருப்பதை ஆங்கில அரிச்சுவடி புத்தகத்தில் பார்த்திருப்போம் அப்படியாக இருக்கிறது அது)

மணிகள் ஒலிக்க, பின்னணியில் இலேசாக வயலின் இழைக்க, கிடார் தொடங்கி வைக்க, வீணையின் சுகமான மீட்டலில் இருந்து பிறப்பதுபோல் ஒலிக்கத் தொடங்குகிறது டி எம் சவுந்திரராஜன் அவர்களது குரல். ‘முத்துக்களோ கண்கள்’ என்பது அவரது முதல் கேள்வி. ‘தித்திப்பதோ கன்னம்’, அடுத்தது. பதில் வேண்டாம், நாயகனுக்கு, ‘சந்தித்த வேளையில் சிந்திக்கவே இல்லை, தந்துவிட்டேன் என்னை’ என்பதில் காதல் பரிமாறப்பட்டு விடுகிறது. அந்த வரியில் சந்த ஓசைக்கு ஏற்ற சொல்லடுக்குகள் அருமையாக அமைத்திருப்பார் கவிஞர் கண்ணதாசன்.

அங்கே நுழைகிறார் பி சுசீலா, ‘படித்த பாடம் என்ன’ என்ற வேகமான கணையைத் தொடுத்து, அதே மூச்சில் சட்டென்று குரலைத் தாழ்த்தி, ‘உன் கண்கள்’ என்று எடுத்து, ‘பார்க்கும் பார்வை என்ன’ என்று வளர்த்து, ‘பாலில் ஊறிய ஜாதிப் பூவைச் சூடத் துடிப்பதென்ன’ என்று கொண்டு நிறுத்துவார். பின், பல்லவியை நாயகியின் மொழியில், பதிலாக, ‘முத்துக்களே பெண்கள், தித்திப்பதே கன்னம்’ என்று நிறுவி, ‘சந்தித்த வேளையில் சிந்திக்கவே இல்லை தந்துவிட்டேன் என்னை’ என்று அதே சந்தங்களில் பல்லவியை நிறைவு செய்வார்.

அதில் அந்த ஜாதிப் பூவில் என்ற இடத்தில் எத்தனை சங்கதிகள் வைக்கிறார் மெல்லிசை மன்னர், ஆஹா! அதே போல், பார்வை என்ன என்ற இடத்தில் ஒரு சின்னஞ்சிறு வளைவு அக்கார்டியன் இசைத் துளியை சிந்த வைக்கிறார், அந்தத் துளி, பாடல் முழுவதும், சரணங்களிலும், அம்மாதிரியான என்ன வரும் இடங்களில் எல்லாம் அழகாக ஒலிக்கவைத்திருப்பார்.

‘கன்னிப் பெண்ணை’ என்ற முதல் சரணத்தில், ‘தென்றல் தாலாட்ட’ என்ற வருடலைத் தென்றல் போலவே வீசவைத்திருப்பார் டி எம் எஸ். ‘கடலில் அலைகள்’ என்று எடுக்கும் பி சுசீலா, அந்த ‘ஓடி வந்து’ என்பதில் அந்த ‘ஓடி’ எனும் சொல்லை, கடல் அலைகள் நம் பாதங்களில் ஓடிவந்து சிலீர் என்று தொட்டுவிட்டு மீள்கிற உணர்வைக் கொணர்வார்.

‘எழுந்த இன்பம் என்ன என் எண்ணம் ஏங்கும் ஏக்கம் என்ன’ என்கிற அடியில், காதல் ஏக்கத்தை என்னமாகப் பரிமாறி விடுவார் டி எம் எஸ். ‘விருந்து கேட்பதென்ன’ என்கிற பதிலடியை சுசீலா சந்தங்களின் விந்தைகளை ஒரு பந்தலிட்டுக் காட்டிவிடுவார்.

‘ஆசை கொஞ்சம்’ என்று பி சுசீலா காதல் சிணுங்கலோடு தொடங்கும் இரண்டாம் சரணத்தில், ‘பின்னிப் பார்ப்பதென்ன’ என்று இழைக்குமிடத்தில், ‘அருகில் நடந்து மடியில் விழுந்து ஆடக் கேட்பதென்ன’ என்ற வரியில் காதல் தாபத்தை மேலும் கூட்டுகிறது டி எம் எஸ் குரல்.

‘மலர்ந்த காதல் என்ன, உன் கைகள், மாலை ஆவதென்ன’ என்று காதல் விசாரணை நடத்தும் சுசீலாவின் கேள்விக்கு, ஒயிலான பதிலை, ‘வாழை தோரண மேளத்தோடு பூஜை செய்வதென்ன; என்று முடிக்கிறார் டி எம் எஸ்; தொடக்கத்தில் ஒலித்த அதே இசைத் துணுக்குகளோடு பல்லவியிலிருந்து சுசீலாவின் இதமான ஹம்மிங் ஒழித்து நிறைவு பெறுகிறது பாடல்.

பாடல் முடிந்தபிறகும், அந்த முத்துக்கள் சிந்தும் ஓசையும், காதல் இதயத்திற்கான துடிப்பின் லயத்தில் மிதக்கவைக்கும் தாளக்கட்டும் உள்ளே ஒலித்துக்கொண்டே இருக்க வைத்துவிடுகிறார் எம் எஸ் வி.

இந்தப் பாடலை அத்தனை ரசித்துக் கேட்டுக்கொண்டிருக்கையில், தற்செயலாக, இப்போதைய பின்னணி பாடகி பத்மலதா அவர்கள், இந்தப் பாடலின் அழகை, இந்துஸ்தானி ராகத்தின் எழிலில் எப்படி அசாத்தியமாக இசை அமைத்திருக்கிறார் மெல்லிசை மன்னர் என்று ரசித்து விளக்கும் ஒரு பதிவைக் கேட்க வாய்ப்பு கிடைத்தது. ராகங்கள், ஸ்வரங்கள் இவை எதுவும் அறியாதவன், ரசிக்கக் கிடைத்த வாய்ப்பைக் கொண்டாடுபவன் தான் என்றாலும், இந்த இசைக்கலைஞர் அத்தனை அழகாக அந்தப் பாடலின் வரிகளை அதன் அழகியல் நுட்பங்களோடு இசைத்து விளக்குவதில் ஆழ்ந்து போகத்தான் செய்தேன்.

சொற்களில் இருந்து இசையை உணர்ந்து கொள்கிறேன் என்று அடிக்கடி சொல்வார் எம் எஸ் வி. இசையிலிருந்து சொர்க்கத்தை உணர்ந்து கொள்கிறார்கள் ரசிகர்கள். மிக எளிய மனிதர்களை அவர்களது அன்றாடப்பாடுகளின் கனத்த ஓசையை வாங்கிக்கொண்டு மெல்லிய காற்றை அவர்கள் உழைப்பின் களைப்பின் மீது பரவவிடுகிறது இசை. அவர்களைக் கனவில் ஆழ்த்தி விட அல்ல, உயிர்ப்போடு அடுத்த நாள் தங்கள் விடியலைத் தேடி விழிப்பு கொள்ளவும் வைக்கிறது இசை.

(இசைத்தட்டு சுழலும் ….)
கட்டுரையாளர் அலைபேசி எண் 9445259691
மின்னஞ்சல் முகவரி: sv.venu@gmail.com

முந்தைய தொடரை வாசிக்க:

இசை வாழ்க்கை 50: என்னென்பேன் இசை ஏடென்பேன் – எஸ் வி வேணுகோபாலன்

இசை வாழ்க்கை 51: அதன் பேர் தாளம் அன்றோ! – எஸ் வி வேணுகோபாலன் 

இசை வாழ்க்கை 52: இசையில் வந்தவர் யாரெனக் கேட்டேன் – எஸ் வி வேணுகோபாலன்

இசை வாழ்க்கை 53: பூவிதழ் மேலொரு இசைத்துளி இருக்க – எஸ் வி வேணுகோபாலன்

இசை வாழ்க்கை 54: தென் பொதிகை தென்றல் வந்து ஆரீரோ பாடட்டும் ! – எஸ் வி வேணுகோபாலன்

இசை வாழ்க்கை 55: இப்போதும் எப்போதும் முப்போதும் இசைப் பாட்டு  – எஸ் வி வேணுகோபாலன்

இசை வாழ்க்கை 56: இசையே இசையின் ஒலியே  – எஸ் வி வேணுகோபாலன் 

Music Life Series Of Cinema Music (Isaiye isaiyin oliye) Article by Writer S.V. Venugopalan.

இசை வாழ்க்கை 56: இசையே இசையின் ஒலியே  – எஸ் வி வேணுகோபாலன் 



புலமைப்பித்தன் அவர்கள் மறைவுச் செய்தி வந்த அடுத்த சில நிமிடங்களில், பத்திரிகை நண்பர் ஒருவர் அழைத்து புலவருக்குப் புகழஞ்சலி எழுதுவது பற்றிக் கேட்டார். திரைப் பாடலாசிரியர்கள் யாரேனும் எழுதுவது பொருத்தமாக இருக்கும் என ஒன்றிரண்டு பெயர்கள் சொன்னதில், முக்கியமாக நான் குறிப்பிட்டது, கவிஞர் பிறைசூடன் அவர்களை! அடுத்த சில நாட்களில் இவரையும் இழப்போம் என்று யார் உணர்ந்திருப்பார்?

ஒரு கவிஞர், பாடலாசிரியர், எளிய மனிதர், ஆர்ப்பாட்டங்கள் அற்றவர் என்பதைக் கடந்து அவரைப்பற்றி அதிகம் தேடி வாசித்ததில்லை. நேர்படப் பேசுபவராக இருந்திருக்கிறார் என்று தெரிகிறது. நெளிவு சுளிவுகள் என்று நாகரீகமாக வருணிக்கப்படும், அடிமைத்தன அணுகுமுறையை ஏற்காதவர் என்பதெல்லாம் அவரது நேர்காணல்கள் பார்த்தால் பிடிபடுகிறது. ‘ரயில்வே கேட்டுக்கே தலை குனிஞ்சு போகாதவன்’ என்று நையாண்டியாக ஓரிடத்தில் சொல்கிறவர், வாய்ப்புக்காகத் தன்னைக் குறுக்கி நடத்திக் கொள்ள விரும்பவில்லை. தான் நெருக்கமாக அறிந்த மனிதர்களைப் பற்றித் தனக்கு மனத்தில் பட்டதைப் பட்டவர்த்தனமாகப் பேசுகிறார், தனது தொடக்க காலப் பக்குவமற்ற தன்மைகள், சிறுபிள்ளைத் தனமாக ஏட்டிக்குப் போட்டிப் பேசி அடைந்த சங்கடங்கள் எல்லாம் வெளிப்படையாக அவர் சொல்வதை யூ டியூபில் நிறைய கேட்க முடிகிறது.

Music Life Series Of Cinema Music (Isaiye isaiyin oliye) Article by Writer S.V. Venugopalan.

வறுமையின் தரிசனத்தை கவிஞர் காயங்கள், தழும்புகள் தடவியவாறு கடைசிவரையில் நினைவில் தேக்கி வைத்துக் கடந்த காலத்தை மறக்க முடியாதவராகவே வெளிப்படுகிறார் எந்த உரையாடலிலும் ! ஒரு விஷயத்தை எத்தனை வெவ்வேறு மனிதர்கள் பேட்டியில் சொல்லியிருந்தாலும் ஒன்றுபோலவே அதே வரிசையில் அவர் பகிர்வது, உண்மைக்கு நெருக்கமான அவரது இதயத் துடிப்பைப் படம் பிடிக்கிறது. கிரகங்கள், விதி, ஆன்மீகம், பக்தி என்று அவர் குறிப்பிடும் நேரங்களில் கூட சோகங்களையும் நகைச்சுவையாக நினைவுகூரும் பேச்சு மொழி அவரது! சிறை படத்திற்காக எழுதியவர், முதல் பாடல் இடம் பெற்ற படம் நூறு நாட்கள் ஓடியதும், தனக்கு வாய்ப்புகள் அள்ளிக்கொட்டி வந்துவிழும் என்று நம்பி இருந்தேன் என்கிறார், பாவம்.

கண்ணதாசன் காலியிடத்தில் தனக்கு ஓர் ஆசனம் என்ற தனது திறமை மீதில் வளர்த்துக் கொண்ட கனவுகள் தகர்ந்து போய் வாழ்வாதாரத்திற்காக அலைவுற நேர்ந்த கதியைத் தமது கடைசி நேரம் வரை அவரால் மறக்க முடியவில்லை, தனக்குரிய நியாயமான அங்கீகாரம், தனது எழுத்துக்குரிய நேர்மையான அடுத்தடுத்த வாய்ப்புகள் ஏன் தப்பிப் போயிற்று என்று அறிந்திருந்தார். வெற்றி பெற்ற பாடல்களுக்குப் பிறகும் சென்டிமென்ட்களில் தலையைப் புதைத்துக் கொண்டு அவரவருக்கான டீம் என்ற வார்ப்பைச் சுமந்து கொண்டு தெரியும் திரைப்படவுலகில் எந்த டீமிலும் இல்லாதவராக எப்போதாவது நினைவுக்கு வந்து அழைக்கப்படுபவராக மட்டுமே 400 படங்களுக்குமேல் பாடல்கள் எழுதிக் கொடுத்து மறைந்திருக்கிறார் என்பது உண்மையில் வேதனைப்படவே வைக்கிறது. ‘மீனம்மா மீனம்மா’, ‘நடந்தால் இரண்டடி’, ‘சைலன்ஸ்…காதல் செய்யும் நேரம் இது’, விருது பெற்ற ‘சோலப் பசுங்கிளியே’ போன்ற பல புகழ்பெற்ற பாடல்கள் இயற்றியவரான பிறைசூடன் அவர்களது திரையுலகப் பாடல் பயணம் சுவாரசியமான இடர்ப்பாடுகளைக் கடந்து தான் நிகழ்ந்திருக்கிறது.

தான் கேளாமலே தனக்கு ஒரு நல்ல டேப் ரிகார்டர் வாங்கி அளித்து, எங்கே பார்த்தாலும் மதிப்போடு விளித்த எஸ் பி பாலசுப்பிரமணியம், தனக்கு ஃபோன் கிடைக்க உதவியதிலிருந்து சக மனிதராக நடத்திய வி குமார், தனது அறியாத சிறுபிள்ளைத்தன சேஷ்டையெல்லாம் மறந்து குழந்தையைப் போல் அன்பு கொண்டாடிய மெல்லிசை மன்னர், சங்கர் கணேஷ், தனக்கு வாய்ப்புகள் வழங்கிய இளையராஜா, இரண்டே பாடல்கள் கொடுத்தாலும் அன்பு மறவாத ஏ ஆர் ரெஹ்மான் முதற்கொண்டு தனக்கு அன்பு காட்டிய எல்லோரையும் விடாது பாராட்டும் நெஞ்சு இருந்தது அவருக்கு. பாடல் வரிகளிலிருக்கிறது சங்கீதம் எனும் எம் எஸ் வி அவர்களையும், இசை தான் ஆதாரம், பாடல் அப்புறம் எனும் வேறு வகை இசை அமைப்பாளரையும் ஒப்பிட முடிகிறது அவருக்கு. தத்தகாரத்தையும், பாடல் வரிகளையும் மளமள என்று நினைவுகூர்ந்து பேசிக் கொண்டே இருந்திருக்கிறார் மனிதர்.

எஸ் பி பி மறைவு அவரை மிகவும் பாதித்திருந்தது, அவரது நினைவேந்தல் நிகழ்வொன்றில் எஸ் பி பி சரணை எதிரே பார்த்துக் கொண்டு பேசுகையில், ‘அவரது குரலை மீட்டுருவாக்கம் செய்து உங்கள் பாடல்கள் நீங்கள் பாடவேண்டும், வேறு என்ன நினைவாலயம் எழுப்பினாலும் போதாது’ என்று அவருக்கு நேர்ப்பட அறிவுறுத்தும் திண்மை பிறைசூடனுக்கு இருந்தது மலைக்கவைக்கிறது. திரையிசையில் திறமையாளர்களை வஞ்சனையன்றிக் கொண்டாடும் அவர் பாங்கும் சிறப்பானது. அவரது நகைச்சுவை உணர்ச்சிதான் அவரைத் தக்கவைத்துப் பணியாற்ற வைத்துக் கொண்டிருந்திருக்கும் என்று கூட தோன்றுகிறது. தன்னையே விமர்சித்துக் கொள்ளும் அவரது சுய பகடி மனத்தை என்னவோ செய்கிறது.

பக்திப் பாடல்கள் பக்கம் ஒரு கட்டத்தில் நகர்ந்து சென்றுவிட்ட அவரால், சமூக அவஸ்தைகளைப் பாடு பொருளாக்கி விடுதலை நோக்கிய வெளிச்சப் பாதைகளைத் தேட இயலாமல் போய் விட்டது என்று தோன்றுகிறது. தனது பாடுகளை அவர் ஏதும் பதிவு செய்திருக்கிறாரா, என்று கேட்டறிய வேண்டும் என்று தோன்றியது.

‘என் பொம்முக்குட்டி அம்மா’வுக்கு படத்தில் இளையராஜாவின் உருக்கம் மிகுந்த இசை மெட்டில் கே ஜே யேசுதாஸ் என்ற மகத்தான பாடகர், எஸ் சித்ரா எனும் சின்னக் குயிலோடு சேர்ந்திசைத்துப் புகழ் பெற்ற ‘உயிரே உயிரின் ஒளியே’ பாடல், பிறைசூடன் அவர்கள் வழங்கியது தான்.






ஜேசுதாஸ் அவர்கள், இதயத்தைத் தொடும் ஹம்மிங் தொடர்ந்து ‘உயிரே உயிரின் ஒளியே ஒரு நாள் உறவா இதுவே’ என்று முதலடி தொட்டுப் பாடும் அழகான பல்லவியில், பின்னர் சித்ராவின் குரலுமாக விரியும் பாடல் முழுவதிலும் ரசிகர்கள் தங்களை எப்படி கரைத்துக் கொள்கிறார்கள் என்பதை, 4 லட்சம் பேர் பார்த்திருக்கும் யூ ட்யூப் பதிவில் காண முடியும். கதைக் காட்சிக்கான கருப்பொருளை அந்த பாத்திரங்களின் உள்ளத்து உணர்ச்சிப் போராட்டங்களின் மொழியாக, ஆனால் எளிமையாக வார்க்க வேண்டிய சவாலில், பிறைசூடன் அருமையாகவும், இலகுவாகவும் தத்தகாரங்களில் கலந்து மிதந்து எழுதிக் கொடுத்திருப்பது பிடிபடும்.

பல்லவியிலிருந்து சொல்லவேண்டிய கதையை எடுத்துச் சொல்லிச் செல்கிறது அவரது பாடல் மொழி. ‘நம் பந்தங்கள் சொந்தங்கள் இன்றா நேற்றா அன்பே சொல்’ என்பது தனித்துவமாக ஒலிக்கிறது. ‘இன்பங்கள் துன்பங்கள் என்றும் வாழ்வின் உண்மைகள்’ என்பது பல்லவியின் நிறைவு வரி. பல்லவி, சரணம் இரண்டின் நிறைவிலும் உணர்ச்சிகளின் தெறிப்பை ஓர் ஹம்மிங் வைத்துக் கொண்டு வந்திருப்பார் ராஜா.

தன்னன னா தானே னன தன்னன னா என்ற சரணத்தின் மெட்டு அபாரம். முதல் சரணத்தில் யேசுதாஸ், இரண்டாம் சரணத்தில் சித்ரா அவரவர் பாணியில் சரணத்தை எடுத்துப் பாடுவது அப்படி பாய்ந்து வந்து இதயத்தைத் தொடும். இழப்பின் வலியைக் காற்றின் வெளியில் வேதனைக் கீற்றாக ஒலித்துக் கொண்டே இருக்கும் வரிகளை யேசுதாஸ் அத்தனை அனுபவித்துப் பாடி இருப்பார். சோகம் குழைத்திருப்பார் சித்ரா.

அந்நாட்களில் தெற்கே சிற்றூர்கள் வரை கல்யாணம், காதுகுத்து, திருவிழா ஏதானாலும் திரும்பத்திரும்ப ஒலித்துக்கொண்டிருந்த பாடல்கள் வரிசையில் பிறைசூடன் அவர்களது பாடலும் ஒன்று என்ற குறிப்பை அண்மையில் ஆர்வத்தோடு கவனிக்க நேர்ந்தது. இளையராஜாவின் காதல் துள்ளல் மெட்டு அது. எஸ் பி பி – சொர்ணலதா குரல்களில் ‘உன்ன நெனச்சேன் பாட்டு படிச்சேன்’ படத்தில் இடம் பெற்ற அந்தப் பாடல் ஒரு தபேலா தாளக்கட்டில் நிகழ்த்தப்பட்ட காதல் பரவசம். நாயகனாகவும் நாயகியாகவும் வயலின்களும், குழலிசையும் ஒருவருக்கொருவர் சீண்டிக்கொண்டும், சிணுங்கிக்கொண்டும் தக்க தருணத்தில் ஒருவரையொருவர் ஆரத்தழுவி இன்பம் கொண்டாடியும் கிளர்த்தும் இசைச்சூழலில் தெறிக்கும் காதல் விளைச்சல் அது.

ஹம்மிங் தொட்டுத்தான் ‘என்னைத் தொட்டு’ என்று பல்லவி எடுக்கிறார் சொர்ணலதா. முதல் சரணத்தில் நுழையும் எஸ் பி பி தமது சுவாரசியமான புன்னகை சங்கதிகள் குலுங்கப் பாடலைத் தொடர்ந்து, இரண்டாம் சரணத்தில் அமர்க்களமான ஹம்மிங் தொடுக்கிறார்.

‘மன்னன் பேரும் என்னடி, எனக்குச் சொல்லடி, விஷயம் என்னடி’ என்ற பல்லவி சொற்களில் மெட்டுக்கான அழுத்தம் மேலும் கூட்டுகின்றன, வந்து விழும் சொற்கள். சொர்ணலதா அதற்குச் செய்யும் நகாசு ஒரு பக்கம் எனில், ‘மங்கை பேரும் என்னடி’ என்று எடுக்கும் எஸ் பி பி, இன்னும் அமர்க்களப்படுத்துவார். பல்லவியில் புறப்படும் கனவுப்பயணம் ஒரு துள்ளல் பல்லக்காகவே மாறிவிடுகிறது.

ராஜாவின் வேக சந்தங்களில் அடுக்குத் தொடராக சொற்களை அடுக்கியும், காதல் ஊர்தியின் கனவு சவாரியாகவே மெல்லுணர்வுகளைப் பதுக்கியும் இந்தப் பாடலைப் புனைந்திருக்கிறார் பிறைசூடன். இந்தப் பாடல் எழுதியவர் மட்டுமல்ல, பாடகர்கள் இருவரும் கூட இப்போது இல்லை. (நாயகியாக நடித்த மோனிஷா உண்ணியும் இப்போது இல்லை, மலையாளப் படத்தில் நடித்ததற்காக தேசிய விருது பெற்ற அவர், கார் விபத்தில் மரிக்கையில் அவருக்கு வயது 22).

ஓர் இசைப்பாடலின் உருவாக்கத்தில் எத்தனையோ நுட்பமான அனுபவங்கள் கலந்திருக்கின்றன. பலரும் சிலவற்றைப் பகிர்ந்தும் வந்திருக்கின்றனர். எழுதப்படாத, பேசப்படாத அனுபவங்கள் ஏராளமானவை இருக்கும். தாம் எழுதிய பாடல்களில் மட்டுமின்றி எழுதப் படாது போனவற்றின் குறிப்புகளிலும் வாழ்ந்து கொண்டே இருப்பார் பாடலாசிரியர் பிறைசூடன்.

‘இளவயதிலேயே முடிவெடுத்துக் கொண்டுவிட்டேன், வாழ்க்கை இசையோடு தான்’ என்று சொல்லி இருக்கிறார் அவர். இன்னாருக்குத் தான் என்றில்லாமல் எந்த இசை அமைப்பாளர் கேட்டாலும் எழுதிக் கொடுத்துக் கொண்டே இருந்தவர் அவர். இசை வாழ்க்கை தான் அவரது வாழ்க்கையும்.

ஓர் இசைப்பாடல் இத்தனை அனுபவங்களின் தொகுப்பாகவும் காலப் போக்கில் கனம் சேர்த்துச் சுழன்று கொண்டிருக்கிறது. அது தான் இசையின் மகத்துவம். வாழ்க்கையின் தனித்துவம். இசை வாழ்க்கையின் உன்னதம்.

(இசைத்தட்டு சுழலும் ….)
கட்டுரையாளர் அலைபேசி எண் 9445259691
மின்னஞ்சல் முகவரி: sv.venu@gmail.com

முந்தைய கட்டுரைகள் படிக்க: 

இசை வாழ்க்கை 41: இராத்திரிக்குத் தூங்க வேணும் பாடிக்கிறேன் கொஞ்சம்…. – எஸ் வி வேணுகோபாலன்

இசை வாழ்க்கை 42: ஆடிப் பாடி எழுத வந்தால் அலுப்பிருக்காது – எஸ் வி வேணுகோபாலன்

இசை வாழ்க்கை 43: தனியாகப் பாடிடும் சந்தோஷம் தந்தாய் இசையே இசையே..! – எஸ் வி வேணுகோபாலன்

இசை வாழ்க்கை 44: இது அவள் தந்த பாடலடி, வெண்ணிலாவே..! – எஸ் வி வேணுகோபாலன்

இசை வாழ்க்கை 45: இசையை அணைத்துச் செல்வோம் – எஸ் வி வேணுகோபாலன்

இசை வாழ்க்கை 46: எனக்கொரு காதலி இசைக்கின்றாள்  – எஸ் வி வேணுகோபாலன் 

இசை வாழ்க்கை 47: எல்லாம் எதற்காக நமக்குக் கொண்டாடும் இசைக்காக – எஸ் வி வேணுகோபாலன்

இசை வாழ்க்கை 48: யாரோடு யாரோ இசை யார் பாடுவாரோ – எஸ் வி வேணுகோபாலன்

இசை வாழ்க்கை 49: பண்ணுக்குள் பொத்தி வைத்தேன்- எஸ் வி வேணுகோபாலன்

இசை வாழ்க்கை 50: என்னென்பேன் இசை ஏடென்பேன் – எஸ் வி வேணுகோபாலன்

இசை வாழ்க்கை 51: அதன் பேர் தாளம் அன்றோ! – எஸ் வி வேணுகோபாலன் 

இசை வாழ்க்கை 52: இசையில் வந்தவர் யாரெனக் கேட்டேன் – எஸ் வி வேணுகோபாலன்

இசை வாழ்க்கை 53: பூவிதழ் மேலொரு இசைத்துளி இருக்க – எஸ் வி வேணுகோபாலன்

இசை வாழ்க்கை 54: தென் பொதிகை தென்றல் வந்து ஆரீரோ பாடட்டும் ! – எஸ் வி வேணுகோபாலன்

இசை வாழ்க்கை 55: இப்போதும் எப்போதும் முப்போதும் இசைப் பாட்டு  – எஸ் வி வேணுகோபாலன்

Music Life Series Of Cinema Music (Per Vaichalum Vaikkamal Ponalum Malli Vasam) Old Tamil Movie Songs Article by Writer S.V. Venugopalan.

இசை வாழ்க்கை 55: இப்போதும் எப்போதும் முப்போதும் இசைப் பாட்டு  – எஸ் வி வேணுகோபாலன் 



சை வாழ்க்கை கட்டுரைகள், அடுத்த மாநிலத்திலும் ரசிக்கப்படுவது உற்சாகத் தகவல். சம்யுக்தா, எங்கள் வங்கியில் பணியாற்றி ஓய்வு பெற்ற கேரள நண்பர் சுரேஷ் அவர்களுடைய செல்ல மகள். இசை ஞானம் மிக்க பாடகி. மகள் பாடிய சில பாடல்களின் ஆடியோ பதிவுகளை அவ்வப்பொழுது சுரேஷ் அனுப்பி வருவார். சிறப்பான பாடல்களை அதே சிறப்போடு இசைத்திருப்பார். தமிழ்ப் பாடல்கள் பலவும் அருமையாகப் பாடுபவர். உச்சரிப்பு திருத்தங்கள், பாடல் வரிகள் கவனித்து வாட்ஸ் அப்பில் உடனுக்குடன் தெரிவிப்பது வழக்கம். உள்ளன்போடு ஏற்றுக் கொள்ளும் குடும்பம். கடந்த வாரம் அவர்கள் அனுப்பி இருந்த ஒலிப்பதிவில் அம்சமாகப் பாடி இருக்கிறார் சம்யுக்தா, மாலைப் பொழுதின் மயக்கத்திலே பாடலை. ‘இசை வாழ்க்கை கட்டுரையில் ரசித்து எழுதப்பட்டதை வாசித்துத் தான் இந்தப் பாடலைத் தேர்வு செய்து அவளைப் பாட வைத்தேன்’ என்றார் சுரேஷ். நன்றி தோழா.

‘எதற்கு இத்தனை பாராட்டு என் மகளுக்கு’ என்று வியப்புற்றார். காரணங்கள் நிறைய இருந்தது. அவற்றில் முக்கியமானது, அந்த கரோக்கி அத்தனை சுவாரசியமானதாக இல்லை.  கரோக்கி என்பதை எல்லோரும் அறிந்திருப்பீர்கள், பின்னணி இசை மட்டும் ஒலிக்கும், உரிய இடைவெளியில் பாடலை யாரும் பாடிப் பார்த்துக் கொள்ளலாம். எண்ணற்ற இசை ரசிகர்கள் தனியாகவும், வேறு சிலரோடு இணைந்தும் இந்த கரோக்கி முறையைப் பயன்படுத்தித் தங்கள் பாடல்களைப் பாடி அதைப் பரவலாகப் பகிர்ந்து கொள்வதையும் பார்த்திருப்பீர்கள். ஸ்ம்யூல் பகிர்ந்து கொள்ளும் நண்பர்கள் இருப்பார்கள் எல்லோருக்கும். இந்தப் பாடலுக்கான கரோக்கி அத்தனை அம்சமாக இராது போயிருந்தது. ஆனாலும் சிறப்பாகப் பாடி இருக்கிறார் சம்யுக்தா.

பாடல் வரிகளை அடுத்தடுத்த சரணங்களை நோக்கி முன்னகர்த்திச் செல்வதில், பாடுபவருக்கான ஊக்கம், ரசிப்பு, திளைப்பு எல்லாம் இசையால் கிடைக்கப் பெறுவது, கவிஞரது சொற்களுக்கு இசை ஒரு வசந்தத்தை வரவழைத்துத் தருகிறது. 

ண்மையில் வந்திருக்கும் உயிர்மை 200வது இதழில், ‘நாம் ஏன் இசையை ரசிக்கிறோம்?’ என்ற அருமையான கட்டுரை எழுதி இருக்கும் மனநல மருத்துவர் டாக்டர் ஜி ராமானுஜம், இசை அனுபவங்களின் காரணிகளை நிறைய ஆய்வுகளின் அடிப்படையில் ஆராய்ந்து எழுதி இருக்கிறார். பின்னணி இசை இன்றி மௌன ராகம், நாயகன் போன்ற படங்களைப் பார்த்தால் நமது அனுபவம் முழுமை அடைவதில்லை என்று ஓரிடத்தில் அவர் சொல்வது கவனிக்கத்தக்கது. 

‘இசையால் மனிதன் உயிர் வாழ்வதில் எந்தப் பலனும் இல்லை. இசை இல்லாமலே மனிதன் உயிர் வாழ முடியும். ஆனால் அதை வாழ்க்கை எனச் சொல்ல முடியுமா எனத் தெரியாது’ என்று உளவியலாளர் ஸ்டீவ் பிங்கர் வாசகங்களைப் பேசும் கட்டுரை, ‘பேர் வச்சாலும் வைக்காமப் போனாலும் மல்லிவாசம் என்பதைப் போல் பலன் இருக்கிறதோ இல்லையோ, வாழ்க்கையைச் செழுமையாக்க முழுமையாக்க இசை நமக்குத் தேவை’ என்று நிறைவு பெறுகிறது. 

செழுமையாவதும், முழுமையாவதும் வாழ்க்கையின் முக்கிய பயன் அல்லவா….இசை கேட்பது, இசைப்பது, இசையை ரசிப்பது யாவுமே உறுதிமிக்க பலன்களை அளிக்கவே செய்கிறது.  

மனிதர்மைக்கேல் மதன காமராஜன் திரைப்படத்தில் இடம் பெற்ற கவிஞர் வாலி எழுதிய அந்த வசமான பாட்டில் வந்து முடிக்கிறார் பாருங்கள் கட்டுரையை, அதை விட வேறென்னஇப்போது அந்தப் பாடல் மறு உயிர்ப்புக்கு வேறு வந்துவிட்டது. மலேசியா வாசுதேவனும், எஸ் ஜானகியும் கொண்டாட்டக் குரல்களில் உற்சாக பரவசம் ஏற்றி ரசிகர்களை கிறுகிறுக்க வைத்த பாடல் அது

துப்பாக்கி விசை அதிர்ந்ததும் ஓட்டம் என்பார்களே, பாடலை டிரம்ப்பெட் இசைக்க தாளக்கருவிகளும், வயலின் உள்ளிட்ட இசைக்கருவிகளும் எடுக்கிற நாட்டிய பரவச இசையில், நான்கு நாள் காய்ச்சலில் படுத்திருப்பவரைக் கூட எழுந்து பாய்ச்சல் வேகத்தில் ஓடவைக்கத் தக்க பாடல்களில் ஒன்று, இளையராஜாவின் அமர்க்களமான இந்த இசை நாட்டியம்.  



https://youtu.be/70Ql0E6_qJQ



வேகமான தாளகதியில் அடுக்கடுக்கான சந்தங்களுக்குக் காதல் உணர்வுகளை அள்ளியள்ளித் துள்ளித்துள்ளி வழங்கி இருப்பார் வாலி. மலேசியா வாசுதேவன் ரசனையோடு அனுபவித்து அந்த சொற்களை அத்தனை இன்பமாக ராக அடுக்குகளின் சங்கதிகள் தெறிக்கப் பாடி இருப்பார். அதற்கு ஏற்ற அதே ஓட்டத்தில் எஸ் ஜானகி இடையிடையே புன்னகை பூக்களும் தக்க இடங்களில் பூக்கவைத்துச் சிணுங்கலும், சிருங்காரமும் ருசிக்கப் பாடி இருப்பார். 

இசைக்கருவிகளின்அதிர்வேட்டுக் கச்சேரி, ரசிகர்களை ஒரு குடை ராட்டினத்தில் ஏற்றிச் சுற்றவைக்கும் கதியில் ஓடத்தொடங்க, பல்லவியை ஓர் உள்ளச்சிலிர்ப்போடு, ‘பேர் வச்சாலும் வைக்காமப் போனாலும் மல்லிவாசம் அது குத்தால சுகவாசம்’ என்று மலேசியா வாசுதேவன் எடுக்கும் இடத்தை ஒரு லட்சம் தடவை கேட்டாலும் அலுக்கவே செய்யாது. அடடா..அடடா… ராஜாவின் மெட்டும், 

வாசுதேவனின் கணீர்க் குரலின் மென்வண்ணக் கலவையும், தொடரும் எஸ் ஜானகியின் கிறக்கமிகுந்த குரலுமாகப் பல்லவி பல்லக்கு பவனியாக அமைந்திருக்கும். 

‘அட இப்போதும் எப்போதும் முப்போதும்’ என்ற சொற்களை ஒவ்வொருமுறையும் இரண்டு பாடகர்கள் பாடுவதில் மட்டுமல்ல, பின்னணியில் கூடவே ஒலிக்கும்  சுவாரசியமான இசை ஜாலங்களுமாக  எத்தனை போதை ஊறவைக்கிறார் இளையராஜா. இரண்டு சரணங்களுமே மென் குத்தாட்ட சங்கதிகள் ததும்பிப் பொங்கி வழிபவை தான். 

‘கோடை வெப்பத்தில்’ என்று தொடங்கும் முதல் சரணத்தில், ‘மந்தாரைச் செடியோரம் ஹோய்…கொஞ்சம் மல்லாந்து நெடுநேரம்’ என்ற இடத்தை வாசுதேவன் அசாத்தியக் காதல் பித்தேறி முத்தாக இசைப்பதும், ‘சந்தோஷம் பெறலாமா ஹோய் அதில் சந்தேகம் வரலாமா?’ என்று ஜானகி பதிலுக்கு வாரி இறைக்கும் காதல் நீரூற்றும் ஆஹா…ஆஹா..

‘காதல் மன்னனா நீயும் கண்ணனா நாளும் ஓர் அலங்காரமா?’ என்ற இரண்டாம் சரணத்தின் வரிகளில் ஜானகி பரிமாறும் சங்கதிகளும், துள்ளல் பாவங்களும் அலாதியானவை. ‘தோழி மெல்லத்தான் சேதி சொல்லத்தான் தோன்றினேன் அவதாரமா’ என்று வாசுதேவன் பதிலிசைக்கும் போதும் தான் எத்தனை எத்தனை சங்கதிகள். பாடல் முழுக்க முழுக்க இளம் ஜோடிகளின் காதல் கொண்டாட்ட மெட்டு தான். 

திரையில் கமல், குஷ்பு அத்தனை அம்சமாக, பாடலுக்கேற்ற லயம் பிசகாத உடல் மொழியில் நடித்திருப்பதும் பாடலை அந்நாட்கள் தொட்டு ரசிகர் மனங்களில் ஆட்டம் போடவைத்துக் கொண்டிருக்கிறது. 

இடையறாத ஆன் லைன் வகுப்புகள் நடுவே இடைவேளை 

கிடைக்கையில் அல்லது சுவாரசியம் மிகுந்த ஏதேனும் ஓர் உரையாடல் எங்களுக்குள் நடக்கையில் சட்டென்று எங்கள் மகன் நந்தா ஹாலில் உள்ள டிவியில் யூ டியூப் வருவித்துச் சட்டென்று இந்தப் பாடலுக்குள் கொண்டு நிறுத்திக் கண்களால் என்னிடம், ராஜா பற்றிய பெருமையோடு ஒரு வார்த்தை கடத்திப் பாடலில் முழுதாக ஆழ்ந்து விடும் தருணங்கள் கணக்கற்று நிகழ்ந்து கொண்டிருப்பவை.

ந்தக் கட்டுரை எழுதிக் கொண்டிருக்கையில், திரைக்கலைஞர் ஸ்ரீ காந்த் மறைவுச் செய்தி வந்திருந்தது. தமிழ்த் திரையில் வெண்ணிற ஆடை மூலம் நான்கு புதிய முகங்களைத் தமிழ் ரசிகர்களுக்கு அறிமுகம் செய்தார் இயக்குநர் ஸ்ரீதர். ஜெயலலிதா, நிர்மலா, மூர்த்தி, ஸ்ரீகாந்த். குறிப்பிடத்தக்க பாத்திரங்களில் மிகவும் நேர்த்தியான நடிப்பை வழங்கியவர் ஸ்ரீ காந்த். 

இயல்பிலேயே நகைச்சுவை பொங்கும் கண்கள் அவருக்கு இருந்ததைத் தமிழ்த் திரையுலகம் அத்தனை பயன்படுத்திக் கொள்ளவில்லை. இந்தக் கொடுமை சவுகார் ஜானகி அவர்களுக்கும் நேர்ந்தது. இவர்கள் இருவரும் ஜோடியாக நடித்த எதிர் நீச்சல் படத்தில் கிட்டு மாமா, பட்டு மாமி பாத்திரங்களுக்கு வேறு யாரையும் யோசிக்கத் தோன்றவில்லை.

Aduthathu Ambujatha HQ தமிழ் - Song Lyrics and Music by T.m. Soundararajan,  P. Susheela arranged by Diin0z on Smule Social Singing app

‘அடுத்தாத்து அம்புஜத்தப் பார்த்தேளா’ பாடலில், டி எம் சவுந்திரராஜன் அத்தனை கொனஷ்டை செய்து நையாண்டிக் காட்சிக்கான பாவங்களைக் கொணர்ந்திருப்பார். பி சுசீலா, கணவனை வம்புக்கு இழுத்து அலறடித்து அப்புறம் ஒரேயடியாய் வீழ்த்திவிடும் பாத்திரத்திற்கான குரலை அபாரமாக இசைத்திருப்பார். 

இப்படியான பாடல்களை வாலி அன்றி வேறு யார் எழுதி இருக்க முடியும்! வி குமார், குடும்ப சண்டைகளின் போர்க்களத்தை, ஓர் அசட்டு தம்பதியினரின் அன்றாட வம்பு தும்புகளை, அதில் இழையோடும் கொஞ்சல், கெஞ்சல், மிஞ்சல் கொஞ்சமும் நழுவிப் போய்விடாத வண்ணம் மெட்டமைத்து அருமையான பாடல் வழங்கி இருப்பார்.

நடுத்தர வர்க்கம், அடுத்தவர்களோடு தங்களை ஓயாது செய்துகொண்டிருக்கும் ஒப்பீட்டில்தான் தனக்கு இயல்பாக வாய்க்கும் வாழ்க்கையின் இன்பங்களைத்  தொலைத்துவிட்டுத் திண்டாடித் தவிப்பது. அதன் ஒரு வண்ணம் தான் இந்தத் திரைப்பாடல். 

‘ஏன்னா நீங்க சமத்தா நீங்க அசடா’ என்று பல்லவிக்குமுன் பேச்சுமொழியை ராகத்தில் தொடங்கும் இடத்திலேயே சுசீலா முத்திரை பதிப்பார். ‘ஏண்டி புதுசா கேக்கற என்னைப் பாத்து’ என்ற பதில் கோதாவில் இறங்கி இருப்பார் டி எம் எஸ்.   அடுத்தாத்து சங்கதியெல்லாம் நமக்கேண்டி, அவன் சம்பளம் பாதி கிம்பளம் பாதி வாங்கறாண்டிஎன்பதில் ஒரு சமூக செய்தியும் உண்டு.





பாடலும் பாடலின் காட்சியும் மிகக் குறைவான ஒரு கூட்டுக் குடித்தனக் குடியிருப்பின் மிகச் சிறிய இடத்திற்குள் அன்றாட நிகழ்வின் உணர்வாக நிலைபெற்று விட்டுவிட்டது. ‘உங்களுக்கென்று வாக்கப்பட்டு என்னத்தக் கண்டா பட்டு?’ என்று சுசீலா கொண்டு நிறுத்தும் இடத்தில், கோபமாக ஒரு வவுச்சரைக் கம்பியில் குத்திவிட்டுப் பார்க்கும் பணியாளர்கள் சிலர் நினைவுக்கு வந்து போகிறார்கள்.  ‘பட்டு கிட்டு பேரச் சொல்ல பொறந்திருக்கே ஒரு லட்டு’ என்ற வரிகளை, டென்னிஸ் ஆட்டத்தில் எதிராளி தம் பக்கம் அனுப்பி வைக்கும் சாமர்த்தியமான வீச்சை அநாயாசமாக வாங்கிப் பதிலுக்கு அடித்து அனுப்பும் வீச்சாக டி எம் எஸ் இசைத்திருப்பார்.

சட்டியில் இருந்தா ஆப்பையிலே வரும் தெரியாதோடி நோக்குஎன்ற டி எம் எஸ் விளக்கத்திற்கு, ‘எப்போ இருந்தது, இப்போ வர்றதுக்கு எதுக்கெடுத்தாலும் சாக்கு..’ என்ற அலுப்பை, அந்த சாக்கு எனும் பதத்தின் உகரத்தில் வைத்துத் தீட்டி இருப்பார் சுசீலா.

‘ஏட்டிக்குப் போட்டி பேசாதேடி பட்டு’ என்ற இடத்திலிருந்து புறப்படும் புயல், ‘பேசினா என்ன வெப்பேளோ  ஒரு குட்டு’ என வலுப்பட்டு வடகிழக்காக நகர்ந்து மேலும் தீவிரமாகி அடிக்கும் பெருமழை,  வாலியின் அபார ஞானத்தை வெளிப்படுத்தும் வரிகளாகும். டி எம் சவுந்திரராஜன், பி சுசீலா எனும் அற்புதமான பாடகர்களது பன்முக இசைத்திறனில்  நகைச்சுவை, நையாண்டி வெளிப்படுத்தும் பாடல்களில் இது முக்கியமானது. பாடலுக்கான உடல் மொழியையும், அந்த கதாபாத்திரங்களின் பண்புகளையும் அசாத்தியமாக வடித்திருப்பார்கள்  நடிகர்கள் இருவரும்.

தனித்துவப் பங்களிப்பு வழங்கிச் சென்றிருக்கும் ஆர்ப்பாட்டம் அற்ற நடிகர் ஸ்ரீ காந்த் அவர்கள் நினைவுக்கு இந்தப் பாடல் மூலம் அஞ்சலி செலுத்தத் தோன்றியது. 

கலை, மனித வாழ்க்கையை அவரவர் காலத்திற்கும் அப்பால் நிலைநிறுத்துகிறது. இசை, மனித வாழ்க்கையை அவ்வப்பொழுது ஏற்படும் ஏற்ற இறக்கங்களில் வண்டி குடை சாய்ந்துவிடாது தோள் கொடுத்துத் தற்காத்து அருள்கிறது. நெருக்கமான மனிதர்களோடு ஏற்படும் பிணக்குகளில் இருந்து மனத்தை விடுவித்து அன்பின் பூக்களை மலரச் செய்கிறது. 

(இசைத்தட்டு சுழலும் ….)

மின்னஞ்சல் முகவரி: sv.venu@gmail.com

முந்தைய கட்டுரைகள் படிக்க: 

இசை வாழ்க்கை 41: இராத்திரிக்குத் தூங்க வேணும் பாடிக்கிறேன் கொஞ்சம்…. – எஸ் வி வேணுகோபாலன்

இசை வாழ்க்கை 42: ஆடிப் பாடி எழுத வந்தால் அலுப்பிருக்காது – எஸ் வி வேணுகோபாலன்

இசை வாழ்க்கை 43: தனியாகப் பாடிடும் சந்தோஷம் தந்தாய் இசையே இசையே..! – எஸ் வி வேணுகோபாலன்

இசை வாழ்க்கை 44: இது அவள் தந்த பாடலடி, வெண்ணிலாவே..! – எஸ் வி வேணுகோபாலன்

இசை வாழ்க்கை 45: இசையை அணைத்துச் செல்வோம் – எஸ் வி வேணுகோபாலன்

இசை வாழ்க்கை 46: எனக்கொரு காதலி இசைக்கின்றாள்  – எஸ் வி வேணுகோபாலன் 

இசை வாழ்க்கை 47: எல்லாம் எதற்காக நமக்குக் கொண்டாடும் இசைக்காக – எஸ் வி வேணுகோபாலன்

இசை வாழ்க்கை 48: யாரோடு யாரோ இசை யார் பாடுவாரோ – எஸ் வி வேணுகோபாலன்

இசை வாழ்க்கை 49: பண்ணுக்குள் பொத்தி வைத்தேன்- எஸ் வி வேணுகோபாலன்

இசை வாழ்க்கை 50: என்னென்பேன் இசை ஏடென்பேன் – எஸ் வி வேணுகோபாலன்

இசை வாழ்க்கை 51: அதன் பேர் தாளம் அன்றோ! – எஸ் வி வேணுகோபாலன் 

இசை வாழ்க்கை 52: இசையில் வந்தவர் யாரெனக் கேட்டேன் – எஸ் வி வேணுகோபாலன்

இசை வாழ்க்கை 53: பூவிதழ் மேலொரு இசைத்துளி இருக்க – எஸ் வி வேணுகோபாலன்

இசை வாழ்க்கை 54: தென் பொதிகை தென்றல் வந்து ஆரீரோ பாடட்டும் ! – எஸ் வி வேணுகோபாலன்

Music Life Series Of Cinema Music (புலமைப்பித்தன் (Pulamaipithan) Old Tamil Movie Songs Article by Writer S.V. Venugopalan. இசை வாழ்க்கை 54: தென் பொதிகை தென்றல் வந்து ஆரீரோ பாடட்டும் !

இசை வாழ்க்கை 54: தென் பொதிகை தென்றல் வந்து ஆரீரோ பாடட்டும் !



எஸ் வி வேணுகோபாலன்

செப்டம்பர் 12 அன்று காலையில் ஒரு முக்கிய நிகழ்ச்சி தொடங்க வேண்டிய வேலைகளில் மூழ்கி இருந்தபோது  9.12 மணிக்கு, அலைபேசியில் ஓர் அழைப்பு. சுதாகர் அழைக்கிறார். சாக்ஸஃபோன் இசைக்கலைஞர் சுதாகர். பேசுவதற்கான அழைப்பு இல்லை, எங்கோ ஒரு திருமண நிகழ்வில் வாசிக்கையில்லைவ்ஆக நான் கேட்பதற்கு அப்படி அழைத்து அருகே அலைபேசியை வைத்துவிட்டு வாசித்துக் கொண்டிருக்கிறார். அலைபாயுதேஆஹாசட்டை பாக்கெட்டில் அலை அப்படியே பாய்ந்து கொண்டிருக்க, எங்கள் நிகழ்ச்சிக்கு வருவோரை வரவேற்பதில் அலைபாய்ந்து கொண்டிருந்தேன். அன்று இரவும் அப்படி ஒரு வாசிப்பு அழைப்பு, அப்போது நகுமோமு!

அடைக்கும் தாழ் அற்ற அன்பின் அழைப்புகள் இப்படி தொடரும். இசையின் இழைகள் கண்ணுக்குப் புலப்படாத அன்பு நெசவை செய்து கொண்டிருக்கவே செய்கின்றன. ரசனை தான் அதன் வண்ணமயக் கொண்டாட்டம்

டந்த ஞாயிறு வண்ணக்கதிர் இணைப்பில், ‘அவர் என்னென்ன சொன்னாலும் ரசனைஎன்ற தலைப்பில் எழுதி இருந்த கட்டுரைக்கு நிறைய ஆர்வமிக்க எதிர்வினைகள். அண்மையில் மறைந்த புலமைப்பித்தன் அவர்களை இப்போது அறியவந்து தேடித்தேடி அவரது அருமையான பாடல்களை ரசிகர்கள் பலரும் கண்டடைந்து வருவதையும் உணர முடிகிறது

கவிதை உலகம் வேறு. திரைப்பாடல் களம் வேறு. ‘ஒருவரின் துடிப்பினிலே விளைவது கவிதையடாஎன்று திரைப்பாடலில் எழுதி இருப்பார் கவிஞர் கண்ணதாசன் (சின்னச் சின்ன கண்ணனுக்கு.. பி பி ஸ்ரீனிவாஸ் அவர்களது முத்துகளில் ஒன்று!). திரைப்பாடல் உருவாக்கம் ஒருவரது துடிப்பினில் விளைவது அல்ல. ஆனால், அதன் உயிர், அதன் ரசவாத சொற்கள், தத்தகாரத்திற்கு ஏற்ப வந்து விழும் சந்தங்கள் எல்லாம் பாடலாசிரியரது சொந்தத் துடிப்புக்கு ஏற்பத் தான் விளையும்

முப்பதாவது வயதில் முதல் பாட்டு தந்து திரையிசை உலகில் நுழைந்தவர் புலமைப்பித்தன். பல நூறு பாடல்கள் எழுதியவர். பாடல்கள் எழுதுவது மிகவும் இயல்பான விஷயம் என்று அவர் சொல்வாராம், அது தான் அம்சம்!

இயக்குனர் சங்கருக்கு மட்டும் தான் தெரியும், குடியிருந்த கோயில் படத்தின் முக்கியமான அந்தப் பாட்டை எழுதியவர் யார் என்று…. 

அறிமுகப் பாட்டே, ‘நான் யார் நான் யார் நீ யார்’ என்று எழுதிக் கொண்டு நுழைந்திருப்பவர் புலமைப்பித்தன், ‘புலவர் வருவார் பின்னே அவர் பாட்டு வரும் முன்னேஎன்று தமது எழுத்துகளால்  அறிமுகமானது எத்தனை சுவையான விஷயம்பிறகு எம்ஜிஆர் இவரை விடவில்லை. அவரது அரசியலின் குரலை இசைப்பாடலாக வடித்துக் கொண்டிருந்தவர் புலவர்.

admkformer leader, the Pulamaipittan has passed away || அ.தி.மு.க.முன்னாள்  அவைத்தலைவர் புலவர் புலமைப்பித்தன் காலமானார்

கோவை சூலூரைச் சார்ந்த அவர், திரைத்துறையில் பாடல் எழுதும் நோக்கத்தோடு தான் சென்னை வந்தார் என்று ஒரு குறிப்பு பார்க்கக் கிடைத்தது. அவர் தமிழ் ஆசிரியராக இருந்தவர்

வடலூர் பாவலர் முருகு வரதராசன், ஆசிரியர் பயிற்சிக் கல்லூரிக்கு வருகையில், அங்கே பணியாற்றிக் கொண்டிருந்திருக்கும் இவரை இன்னார் என்று அறியாமல் இவரிடம் தான் முதல் தாக்கல் கொடுத்திருக்கிறார். பின்னர் ஒரு நாள் வரதராசனைப் பார்க்கும்போது, ‘நீங்கள்  தமிழ் இலக்கண வகுப்புகள் எல்லாம் எளிமையாக சொல்லித் தருகிறீர்களாம், செய்யுள் பகுதிகள் அழகாகப் பாடி விளக்கம் சொல்கிறீர்களாம், மாணவர்கள் சொன்னார்கள்’ என்று பாராட்டிய போதும், தன்னை வாழ்த்துபவர் யார் என்று அறிந்திருக்கவில்லை, பிறகு தான் அங்கே ஓர் ஆசிரியர் சொன்னார் என அண்மையில் பேசும்போது குறிப்பிட்டார் வரதராசன்

அறிமுகமற்ற ஓர் இளம் ஆசிரியரைப் பாராட்டும் மனம் அவருக்கு இருந்தது. பரந்து விரிந்த ஓர் இதயத்தின் பிரதிபலிப்பு அது . ஓர் உன்னதமான படைப்பாளி, தன்னைக் கடந்து உலகைப் பார்க்கும் அகக்கண்கள் பெற்றிருக்கிறார். அவரால் தன்னியல்பாக அடுத்தவர் படைப்புகளைக் கொண்டாட முடிகிறது. புலமைப்பித்தன் தமிழைத், தமிழ் இசையை யார் சிறப்பித்தாலும், தான் அவர்களைச் சிறப்பித்து மகிழ்ந்திருக்கிறார்.

பாடல் வரிகளை ரசித்து ரசித்து அவர் எடுத்துச் சொல்கையில், ஒரு கவிதைக்கான மதிப்பையும், அன்பையும் அவர் திரைப்பாடல்கள் மீதும் கொண்டிருந்தார்  என்று தோன்றுகிறது. எண் சீர் விருத்தம், அகவற்பா, வெண்பா போல ஒரு திரைப்பாடலை அதன் சந்தங்களோடு இசை நயம் சிறக்க அவர் தங்குதடையின்றிப் பிசிறின்றி சொல்லிக் கொண்டே போக முடிந்ததால், இசையமைப்பாளர் மெட்டு கொடுத்தாலும் தட்டுத் தடுமாறாமல் பட்டென்று எழுதிக் கொடுக்க முடிந்தது

தீபம் (1977) தான், சிவாஜி கணேசன் நடிக்க இசைஞானி, இசையமைத்த முதல் படம் என்று நினைவு. கே ஜே யேசுதாஸ், எஸ் ஜானகி பாடி இருக்கும்பூவிழி வாசலில்’, டி எம் எஸ் குரலில்பேசாதேவாயுள்ள ஊமை நீ’ உள்பட அத்தனை பாடல்களும் புலமைப்பித்தன் எழுதியவை

இதை வாசிக்கும் அன்பர்களுக்கு,’ என்ன முக்கியமான அந்தப் பாட்டை இன்னும் சொல்லவில்லையே’ என்று அடித்துக் கொள்ளுமே….ஆஹாவெறும் பாட்டா அது, ராக இசை மாரி அல்லவா அது

காதல் சரங்கள் தொடுப்பதில் ஒவ்வொரு கவிஞருக்கும் ஒவ்வொரு பாணி இருக்கும். காதலின் வெப்பநிலை கொஞ்சம் கூடுகிற போது, சொற்களும் கொதிக்கத் தொடங்குகின்றன. இள நெஞ்சங்களுக்கு அதைப் பக்குவமாகப் பரிமாறுகிற ரசனையை இலக்கணம் அறிந்த புலவர், இலக்கணமாகவே கற்றிருந்தார். எத்தனை கொதித்தால் என்ன, ராஜா, இசையால் குளிர்வித்து விடுவார் என்று அப்படி எழுதி இருப்பார் இந்தப் பாடலை.





அந்தப் புரத்தில் ஒரு மகராணி‘ …. டி எம் சவுந்திரராஜன் குரல், அதற்குமுன் கேட்டிராத ஓர் அலைவரிசையில் ஒலிப்பதை அந்நாட்களில் வெறி பிடித்ததுபோல் கேட்டுக் கொண்டே இருந்தது மறக்கமுடியாதது. எஸ் ஜானகி ஒரு குயிலின் குரலாகவே இசைத்திருப்பார் பாடல் முழுவதையும்

பாடலின் திறப்பை அத்தனை அலங்கார வளைவுகள் அமைத்துத் திட்டமிட்டிருப்பார் ராஜா. வயலின்களின் ஆர்ப்பாட்ட புறப்பாடு, குழலின் குழைவு, சிதார் தேன்துளிகள் இழைத்துக் கொடுக்க அம்சமாக நுழைகிறார் டி எம் எஸ், பல்லவியில்

‘அந்தப்புரத்தில் ஒரு மகராணி, அவள் அன்புக்கரத்தில் ஒரு மகராஜன், கண்கள் சிவந்திருக்க அவள் பார்த்தாள் காமன் திருச்சபைக்கு வழி கேட்டாள்’ ! என்னமான காதல் சிலிர்ப்பில் இருக்கும் அந்த உச்சரிப்பு ஒவ்வொன்றும்! இப்போது, ஜானகி வந்து இணையவேண்டும், அதற்கு ஒரு மாயாஜாலம் வேண்டாமா, தாளக்கருவியை மாற்றி கிண்ணென்று கேட்கவைத்து (மிருதங்கம் என்று தான் தோன்றுகிறது!), சிதார் கொஞ்ச வைத்து வரவேற்கிறார். 

‘சாமந்திப் பூக்கள் மலர்ந்தன’ என்ற வரியை அத்தனை மோக ரசத்தில் இசைக்கிறார் ஜானகி. டி எம் எஸ் பாடும்  ‘இரு சந்தனத் தேர்கள் அசைந்தன’ என்பதில் புலவரின் சிருங்காரம் தலை தூக்குகிறது. ‘பாவை இதழ் இரண்டும் கோவை, அமுத ரசம் தேவை என அழைக்கும் பார்வையோ..’ என்ற  அடுத்த வரிகளுக்கான மெட்டு, ராஜா எப்படி அமைத்தார் என்பது எண்ணியெண்ணி இன்புற வைக்கிறது.

ஆனால், மாயச் சித்துவேலை  அதோடு முற்றுப் பெற்று விடுவதில்லை. பல்லவியை இப்போது எஸ் ஜானகி எடுக்கிறார், ‘அந்தப்புரத்தில் ஒரு மகராஜன், அவன் அன்புக்கரத்தில் ஒரு மகராணி’ என்றுஅப்புறம் தான் இருக்கிறது ரச வாதமே (ராசா வாதம் என்றும் கொள்ளலாம்), 

ஆசை கனிந்துவர அவன் பார்த்தான்என்ற வரியில், அந்த ஆசை என்ற சொல்லின் உச்சரிப்பிலேயே எத்தனை ரகசியமான காதல் கடத்தலும், காமன் கட்டளை கடத்தலும் நடந்து விடுகிறது! அதற்கு அடுத்த வரியை, புலவர், சும்மா ஒப்புக்கு, ‘அன்னம் தலைகுனிந்து நிலம் பார்த்தாள்என்று சொல்லி சமாளிக்கும் இடத்தில் காதலின் தட்பவெப்பம் யாராவது பார்த்துக் கொள்வது நல்லது.

உடனே மீண்டும் வயலின்கள் காதல் வளர்த்தெடுக்கும் பொறுப்பை எடுத்துக் கொண்டு சரணத்தை நோக்கி, மெல்ல மெல்ல வேகமெடுத்துத் தீ மூட்டி விட, புல்லாங்குழல் தலையிட்டு இதப்படுத்த, ‘சங்கு வண்ணக் கழுத்துக்குத் தங்க மாலை, அவள் சங்கமத்தின் சுகத்திற்கு அந்தி மாலைஎன்ற முதல் சரணத்தை, டி எம் எஸ் சங்கதிகள் மின்னப் பாடப்பாட அந்தத் தாளக்கட்டின் சுகமே அலாதியாக இருக்கும்

Music Life Series Of Cinema Music (புலமைப்பித்தன் (Pulamaipithan) Old Tamil Movie Songs Article by Writer S.V. Venugopalan. இசை வாழ்க்கை 54: தென் பொதிகை தென்றல் வந்து ஆரீரோ பாடட்டும் !

அதே வேகத்தில், ஜானகி, ‘குங்குமத்தின் இதழ் சின்னம் தந்த காளை அவன் கொள்ளை கொள்ளத் துடிப்பது என்ன பார்வைஎன்று இசைக்கவும், ‘அது பார்வை அல்ல பாஷை என்று கூறடி என்றான்என்ற பதங்களை டி எம் எஸ் பாட அதற்கேற்ற தாள ஒத்திசைவோடு ராஜா அமைத்திருப்பது, புலமைப்பித்தன் வரிகளுக்கு அசாத்திய மெருகேற்றுதலாக அமைந்திருக்கும்

இப்போது பல்லவிக்கு இருவரும் மீண்டதும், அடுத்த சரணத்திற்கு ராஜா அமைக்கிற இசைப்பயணம் இருக்கிறதே, ஆஹாஆஹாஉயிரில் நேராகப் போய்க் கலக்கும் இசையல்லவா அந்த இடம்…. புல்லாங்குழலில் ஒரு காதல் கோபுரத்தை எழுப்புகிறார், அடடா..அடடாஅதற்கு மென்மையான தாளக் கை தட்டலும் ஒலிக்க, அதைக் கொண்டாடி மீட்ட வைக்கிறார் வீணையை, இதய வீணை அல்லவா, பாடல் முடிவில் வர இருக்கும் ஹம்மிங் ஸ்வரங்களுக்கு ஏற்ற அதே மெட்டில் பிளந்து கட்டுகிறது வீணை இசை, அதைத் தங்கம்போல் வாங்கி வாங்கி ரசிக்கிறது இடையே இடையே வயலின் வில்லிசை

எல்லாமாகச் சேர்ந்து சைகை காட்டியதும் டி எம் எஸ் நுழைகிறார், ‘முத்துச் சிப்பி திறந்தது விண்ணைப்பார்த்துஎன! மொத்த சரணமும் இன்பச் சொற்களால் காதலை ஆசீர்வதித்து, அடுத்த கட்டத்திற்கு வளர்த்து எழுதி இருப்பார் புலமைப்பித்தன். ‘அங்கு தென்பொதிகை தென்றல் வந்து ஆரீரோ பாடும்என்பது தமிழ் மீதான காதலும் சேர்த்துக் கொண்டாடும் புலவரின் முத்திரை வரி

அந்தஆராரிரோவை ஹம்மிங் மந்திரமாக மாற்றிப் பாடகர்கள் இருவரும் அசத்தலாக இசைக்கப் பாடலை நிறைவடைய வைத்துக் காதலைத் தொடர விட்டிருப்பார் ராஜாஇந்தப் பாடலில், மாயாமாளவகௌளை  ராகத்தை ஓர் உற்சவமாகக் கொண்டாடி இருந்தார்  ராஜா என்று தி இந்து கட்டுரையாளர் சாருலதா மணி எழுதுகிறார்

https://www.thehindu.com/features/friday-review/music/a-ragas-journey-the-magic-of-mayamalavagowla/article2618199.ece

மிகச் சிறந்த ரசனைக்குரிய பாடல்கள் நிறைய வழங்கிச் சென்றிருக்கிறார் புலமைப்பித்தன். கண்டவர் விண்டிலர் விண்டவர் கண்டிலர் என்பது போல் இருக்கிறது பாடல்களுக்கான பெயர்

இலக்கிய சொல்மழை திரைப்பாடலில் எல்லாக் காலங்களிலும் பெய்துதான் வந்திருக்கிறது. புலமைப்பித்தன் பாடல்களில் ஆலங்கட்டி மழை (கல்யாணத் தேனிலா…). சிலபோது சன்னலோரத்தில் இருந்து ரசிக்கத்தக்க கம்பியிழை மழை (சங்கீத ஸ்வரங்கள் ஏழே கணக்கா…). ஒரு சமயம், இடியோசை சரமழை (பொன்னந்தி மாலைப் பொழுது, இன்பமே உந்தன் பேர் பெண்மையோ..). சோகத்தில் இசைக்கும்போது, நள்ளிரவு நேரத்து ஓலைக் குடிசையின் முகட்டில் விடாது சொட்டிக் கொண்டே இருக்கும் மழை, ‘உச்சி வகுந்தெடுத்து’ போல!

வண்ணக்கதிர் கட்டுரை படித்ததும், ‘மதுரையை மீட்ட சுந்தரபாண்டியன் படத்தின் இரண்டு சிறப்பான பாடல்களை நீங்கள் விட்டுவிட்டீர்கள்’ என்று ஆதங்கத்தோடு, எங்கள் தெருவில் வசிக்கும் நண்பர் கிருஷ்ணன் (இந்தியன் வங்கியில் உதவி பொது மேலாளராகப் பணியாற்றி ஓய்வு பெற்றவர்) செய்தி அனுப்பி இருந்தார். ‘700 பாடல்களுக்கு மேல் எழுதி இருக்கிறார் என்கிறார்கள், கட்டுரை 800 சொற்கள் தானே, எப்படி எல்லாப் பாடல்களையும் எழுத?’ என்று பதில் போட்டதும், அப்படியானால் அவரைப் பற்றி இன்னொரு கட்டுரை எழுதுங்கள் என்று கேட்டுக்கொண்டார்.  இந்த அத்தியாயத்தோடு 

முற்றுப் பெறுகிற விஷயமா புலவரின் பங்களிப்பு!

தென்றலில் ஆடும் கூந்தலில் கண்டேன் மழை கொண்ட மேகம்ஒரு தபலா திருவிழா. சிதார் உற்சவம். வீணை வைபவம். ராக ஆரத்தியை வாணி ஜெயராம் எடுக்க, ஸ்வர சங்கதி தீபம் ஜொலிக்க வைப்பார் யேசுதாஸ். மெல்லிசை மன்னர் வழக்கம்போலவே வயலின்களும், புல்லாங்குழலும் இழைத்து ஒரு காதல் சிற்பமாக செதுக்கி வழங்கி இருப்பார் இந்தப் பாடலை





பல்லவியை யேசுதாஸ் தொடங்குகிறார், ‘தென்றலில் ஆடும் கூந்தலில் கண்டேன் மழை கொண்ட மேகம், என் தேவதை அமுதம் சிந்திடும் நேரம் இனி என்ன நாணம்என்ற வரிகளில் அவர் இழைக்கும் சங்கதிகளும், பொதுவாகவே யேசுதாஸ் சொல்லின் இறுதியில் வருகிறம்முக்குக் கொடுக்கும் சுகமான அழுத்தமும் அமர்க்களமாக ஒலிக்கும்

மன்னவன் உங்கள் பொன்னுடல் அன்றோ இந்திரலோகம்என்று வாணி ஜெயராம் எடுக்குமிடமே தேனாய்ச் சுரக்கும் குரல். அதுவும் அந்த “அன்றோ”! ‘அந்தி மாலையில் அந்த மாறனின் கணையில்’ என்று வருமிடத்தில், ‘மாறனின் கணையில்’ இரண்டு சொற்களென்று தெரியாத அளவு தாளக்கட்டுக்குள் அனாயசமாக உருட்டிக் கொண்டு வந்திருப்பார் வாணி. ‘ஏன் இந்த வேகம்என்ற பதங்களுக்கு அத்தனை தாபம் ஏற்றி இசைப்பார்.

ஒவ்வொரு சரணமும் ஒவ்வொரு லயத்தில் அமைத்திருப்பார் எம்.எஸ்.வி

பாவையுடல் பாற்கடலில் பள்ளி கொள்ள நான் வரவோஎன்ற முதல் சரணத்தை அபாரமான காதல் துளிர்க்க வேகமாக எடுப்பார் யேசுதாஸ். அதன் அடுத்த அடியில், ‘பனி சிந்தும் கனி கொஞ்சும் பூவிதழில் தேன் பெறவோஎன்பதைச் சட்டென்று குரல் தாழ்த்திக் கிறக்கமூட்டுவார். ‘மாலை வரும் நேரமெல்லாம்என்று தொடரும் அடுத்த வரிகளை வாணி ஜெயராம் அதற்கேற்ற பாவத்தில் கொணர்வார்.  

இரண்டாம் சரணத்தின் தொடக்கத்திலேயே, யேசுதாஸ், ராக சுகம் தெறிக்க, ‘ஆலிலையின் ஓரத்திலே மேகலையின் நாதத்திலேஎன்று எடுத்து நிறுத்தி மீண்டும் இரண்டாம் முறையெடுத்து, ‘இரவென்றும் பகலென்றும் காதல் மனம் பார்ப்பதுண்டோஎன போதையுற இசைப்பார்

முந்தைய சரணத்தில் சாதுவாக வாசித்த தபலா தாளக்கட்டு, இந்த சரணத்தில் யேசுதாஸ் முடித்த மாத்திரத்தில் நடத்தும் இந்திர ஜாலம், ஆஹா!   ‘கள்ளவிழி மோகத்திலே துள்ளிவரும் வேகத்திலே‘  வாணி பாடுகையிலும்  அதே செப்படி வித்தையாக உருட்டு உருட்டித் தொடரும் இன்பம்ஆஹா..ஆஹா..’காலை வரை கேட்பதுண்டோஎன்று வாணி கேட்டால், காலம் முழுக்கக் கேட்டுக் கொண்டே இருக்கும் தபலா மாயம் அது. (பிரசாத் அவர்களே தானோ?)

மூன்றாம் சரணத்தில், ‘கற்பகத்துச் சோலையிலேஎன்ற முதல் வரியில்சோலையிலே’ என்ற சொல்லுக்கு யேசுதாஸ் வழங்கும் சங்கதிகள் சொக்கவைக்கும். வாணி, ‘காவியத்து நாயகனின் கட்டழகு மார்பினிலேஎன்ற இழைப்பும், சரணத்தின் நிறைவில், ‘மோகனப் பண் பாடியதோஎன்ற குழைப்பும் அபாரமாக கொண்டு வந்திருப்பார்.

காதல் பாடல்கள் மட்டுமல்ல, மனித உணர்வுகளை, வாழ்க்கைச் சூழலை, சக மனிதர் நோவுகளை, அதன் காரணங்களை திரைக்கதை வழங்கும் சாத்தியங்களுக்குள் நின்றபடி தனது தமிழால் வியக்கத்தக்க பாடல்களாகப் புனைந்து தந்து கொண்டிருந்தவர் புலமைப்பித்தன். கடந்து போன பாடல்களை இப்போது மீண்டும் கண்ணெதிரே கொண்டு நிறுத்துகிறது அவரது மறைவு

பாடல்கள் மறைவதில்லை. இசை ஓய்வதில்லை. புலவரின் சொத்தான ரசனைக்கோ முற்றுப் புள்ளி விழுவதில்லை. இசையைக் கொண்டாடுவோர், வாழ்க்கையைக் கொண்டாடுவோர். ரசனையின் சாராம்சம் வாழ்க்கை மீதான நேசம் தான். எல்லோரது நல்வாழ்வுக்குமான குரலுக்குத் தான் இசை என்று பெயர்.

(இசைத்தட்டு சுழலும் ….)

மின்னஞ்சல் முகவரி: sv.venu@gmail.com

முந்தைய கட்டுரைகள் படிக்க: 

இசை வாழ்க்கை 41: இராத்திரிக்குத் தூங்க வேணும் பாடிக்கிறேன் கொஞ்சம்…. – எஸ் வி வேணுகோபாலன்

இசை வாழ்க்கை 42: ஆடிப் பாடி எழுத வந்தால் அலுப்பிருக்காது – எஸ் வி வேணுகோபாலன்

இசை வாழ்க்கை 43: தனியாகப் பாடிடும் சந்தோஷம் தந்தாய் இசையே இசையே..! – எஸ் வி வேணுகோபாலன்

இசை வாழ்க்கை 44: இது அவள் தந்த பாடலடி, வெண்ணிலாவே..! – எஸ் வி வேணுகோபாலன்

இசை வாழ்க்கை 45: இசையை அணைத்துச் செல்வோம் – எஸ் வி வேணுகோபாலன்

இசை வாழ்க்கை 46: எனக்கொரு காதலி இசைக்கின்றாள்  – எஸ் வி வேணுகோபாலன் 

இசை வாழ்க்கை 47: எல்லாம் எதற்காக நமக்குக் கொண்டாடும் இசைக்காக – எஸ் வி வேணுகோபாலன்

இசை வாழ்க்கை 48: யாரோடு யாரோ இசை யார் பாடுவாரோ – எஸ் வி வேணுகோபாலன்

இசை வாழ்க்கை 49: பண்ணுக்குள் பொத்தி வைத்தேன்- எஸ் வி வேணுகோபாலன்

இசை வாழ்க்கை 50: என்னென்பேன் இசை ஏடென்பேன் – எஸ் வி வேணுகோபாலன்

இசை வாழ்க்கை 51: அதன் பேர் தாளம் அன்றோ! – எஸ் வி வேணுகோபாலன் 

இசை வாழ்க்கை 52: இசையில் வந்தவர் யாரெனக் கேட்டேன் – எஸ் வி வேணுகோபாலன்

இசை வாழ்க்கை 53: பூவிதழ் மேலொரு இசைத்துளி இருக்க – எஸ் வி வேணுகோபாலன்

Music Life Series Of Cinema Music (M.S. Vishvanathan And Other Music Events) Article by Writer S.V. Venugopalan

இசை வாழ்க்கை 53: பூவிதழ் மேலொரு இசைத்துளி இருக்க



எஸ் வி வேணுகோபாலன்

முந்தைய கட்டுரையை, வீணை வித்வான் திரு பிச்சுமணி அய்யர் அவர்களது மகன் வாசித்தால் சிறப்பாக இருக்குமே என்று விரும்பி, எப்படியோ இணைய தளத்தில் வாசித்த கட்டுரைகளில் ஒன்றில் இருந்து அலைபேசி எண் தட்டுப்பட்டு, அதில் வாட்ஸ் அப் இருக்க இன்னும் ஆர்வத்தோடு புக் டே இணைப்பைப் பகிர்ந்து கொண்டிருந்தேன். அடுத்த சில நிமிடங்களில் கட்டுரையைத் திறந்து பார்த்திருக்கின்றனர் என்பதும் பார்த்து அகமகிழ்ந்தேன்

அவரை அழைத்துப் பேசுவோம் என்று அந்த நம்பரை டயல் செய்தேன், ஒரு பெண்மணியின் குரல் ஒலித்தது, மறுமுனையில் ! அறிமுகப்படுத்திக் கொண்டு, கட்டுரை பற்றிக் குறிப்பிடவும், ‘மிகவும் சிறப்பாக இருந்தது, எழுதியது நீங்கள் தானா, இசை பற்றியது என்றால் விரும்பிப் படிப்பேன், யாரோ அனுப்பி இருக்கிறார்களே என்று இணைப்பை கிளிக் செய்து பார்த்து, இசை பற்றியதாக இருக்கவே உடனே வாசித்தேன்என்றார். நான் உடனே, ‘இது விஸ்வநாதன் சார் நம்பர் என்று கருதி அழைத்தேன், அவரது தந்தைக்கு ஓர் எளிய புகழஞ்சலி படைத்தது அவர் வாசிக்கட்டும் என்று…’ என இழுத்தேன். ‘இது அவரோட நம்பர் தான், நான் அவருடைய மனைவி, வசந்தா…. வசந்தா விஸ்வநாதன்என்று சொல்லி நிறுத்தினார்

அவர் கடந்த ஆண்டு, திடீர் என்று ஏற்பட்ட மாரடைப்பில் காலமாகி விட்டார்…’ என்று சொல்லவும், என்ன பதில் சொல்ல என்றறியாமல் கண்ணீர் மல்க தவித்தேன். ‘இப்போது மகள் வீட்டுக்கு வெல்லிங்டன் வந்திருக்கிறேன்என்றார். பிறகு, தமது அன்புக் கணவர் பற்றியும், மகன் ஸ்ரீராம் தமிழிலும் இசையிலும் கொண்டிருக்கும் ஆர்வம் பற்றியும் நிறைய பகிர்ந்து கொண்டார்

Music Life Series Of Cinema Music (M.S. Vishvanathan And Other Music Events) Article by Writer S.V. Venugopalan

தமது ஏழாவது வயதில் மியூசிக் அகாதமி போட்டியொன்றில் பரிசு பெற்றவர் விஸ்வநாதன். வீணை கற்றுக் கொண்டது மட்டுமின்றி, யுவ வீணா என்ற புதிய பாணி இசைக்கருவியை வாசிப்பதில் அசாத்திய திறன் பெற்று விளங்கியவர்மறைவதற்கு மிகச் சிறிது நேரத்திற்கு முன்பாகக் கொண்டு தமது யுவ வீணா கையிலெடுத்து இசைத்துக் கொண்டிருந்தார் என்று சொன்னார் வசந்தா. அது வாழ்க்கையின் முற்றுப் புள்ளி அல்ல, உயிரிழையைப் பக்குவமாக இசையிழை வாங்கி பத்திரப்படுத்திக் கொண்டுவிட்ட தருணம் அது என்று படுகிறது. காற்றில் கலக்கிறது காற்று. உயிர்க்காற்று தான் வாழ்வெனில், இசைக்காற்று பின் வேறென்ன, இசை வாழ்க்கை என்று வேறெதைப் பேசிக் கொண்டிருக்கிறோம்!

டந்த வாரம், எங்கள் இல்லத் திருமணம் ஒன்று. என் வாழ்க்கை இணையர் தோழர் எம் ராஜேஸ்வரியுடைய தமக்கை கங்கா நடராஜன் மகனுக்குத் திருமணம். ஷிவ்ராம் –  ஸ்வேதா சரஸ்வதி திருமணத்தில் அருமையான நாதஸ்வர கோஷ்டிகூடுதல் சிறப்பு, சாக்ஸஃபோன்!  

முதல் நாள் மாலை சில அருமையான பாடல்கள் ஓடிக் கொண்டிருந்தன, திருமண வேலைகளின் ஓட்டத்தினோடே நேரம் சற்று திருடித்திருடி ரசித்து ஓடிக் கொண்டிருந்தோம். திருமண நாளன்று காலையில் மாடிப்படியேறி வருகையில் காதில் விழுந்த தவில் இசை, வித்தியாசமான துள்ளாட்டமாக ஒலித்தது. நங்கநல்லூர் ஆஞ்சநேயர் கோயில் ஆஸ்தான இசைக்கலைஞர் கிருஷ்ணமூர்த்தி  அவர் என்று பின்னர் அறிய முடிந்தது. முகூர்த்த நேரத்திற்கு முன்பும் பின்பும் பிளந்து கட்டினர்

மணப்பெண் வீட்டாரில் ஒருவர் முதல் நாள் மாலையில் இருந்தே இசையின் துளிகள் ஒன்றுவிடாமல் வாங்கி உள்ளே நிரப்பி திக்குமுக்காடி ரசித்துக் கொண்டிருந்தார், அவரது பரந்த உள்ளம் போலவே அவர் திறந்த பர்ஸிலிருந்தும் எடுத்து வெகுமதி அளித்து அந்த எளிய கலைஞர்களை நெகிழ வைத்துக் கொண்டிருந்தார். வாத்திய கோஷ்டி அருகே அமர்ந்து அவர் தட்டுப்பாடின்றி ரசிக்க ஓர் இருக்கை நிலைநிறுத்தி இங்கே அமர்ந்து கேளுங்கள் அய்யா என்று கேட்டுக் கொண்டேன், அப்போது தெறித்த அவரது கண்களின் மின்னல் மறக்க முடியாதது, லட்சுமிநாராயணன் எனும் அந்தப் பெரியவர் பூனாவில் இருந்து வந்திருந்தார், திருமணத்திற்கு (பூனா லேனா என்று பெயர் வைத்துவிட்டேன் அவருக்கு) !

சாக்ஸஃபோன் கலைஞர் நாதஸ்வர இசையோடு கலந்து அமுதம் வழங்கிக் கொண்டிருந்தவர், ஒரு கட்டத்தில் தன்னிசையாகப் பொழிய ஆரம்பிக்கையில், ‘சின்னஞ்சிறு கிளியேஎன்றெடுத்தார். ஆஹா….ஆஹாஒவ்வொரு சரணமாக வந்து கொண்டிருந்தார், லேனா சார் எங்கிருந்தோ கண்களால் நான் எங்கிருக்கிறேன் என்று என்னைத் தேடிக் கொண்டிருந்தார், அவர் தேடுவார் என்றறிந்து அதன் முன்பே அவரருகே சென்று நிற்கவும், கைகளால் அந்த ரசத்தின் ரசனையை எனக்குக் காற்றின் இடைவெளியில் கடத்தினார்.  

நானோசாக்ஸஃபோன்காரர் எப்போது, ‘கன்னத்தில் முத்தமிட்டால்…’ வரிகளுக்கு வருவார் என்ற எதிர்பார்ப்போடு காத்திருந்தேன், வந்தார், மகாகவியின் கவிதை வரிகளின் மீதான தமது காதலைத் தமது இசைக்கருவியில் வழிய விட்டார், தன்னன்ன தானன என்ற வாசிப்பிற்குப் பிறகு ஒரு விரற்கடை அளவு இழைப்பு கொடுத்து, மீண்டும் தன்னன்ன தானன என்று எதிர்பார்த்தபடியே எடுக்கிறார் மனிதர்….அப்புறம், ‘உள்ளம் தான்…..’ என்பதில் சங்கதிகள், ‘கள்வெறி கொள்ளுதடிஎன்பதில் ஒரு குழைவுஅப்புறம் அடுத்தடுத்த வரிகளும் ! நிறைவாகஉன் கண்ணில் நீர் வழிந்தால்…’ அதில் உச்சமாக, ‘என் கண்ணில் பாவை அன்றோ…’ அருமை..அருமை

Music Life Series Of Cinema Music (M.S. Vishvanathan And Other Music Events) Article by Writer S.V. Venugopalan

திருமணத்திற்கு வருகை தந்தோருக்கு வழங்கியஇசை வாழ்க்கை திறப்புஎனும் எளிய நூலின் பிரதிகளை நாதஸ்வர இசைக்குழுவினருக்கும் கொண்டு கொடுத்தோம். தவில் கலைஞர் தான் குழுவின் அமைப்பாளர். அவரிடம் அன்று கேட்க முடியாதிருந்த ஒரு கேள்வியை இரண்டு நாட்களுக்குப் பிறகு அழைத்துக் கேட்டபோது அவருக்கு வியப்பாக இருந்திருக்கக் கூடும்.   என்ன கேள்வி அது?

முகூர்த்த நேரத்தில் தாலி கட்டி முடித்து கெட்டி மேளம் வாசித்துத் தணிந்து முடித்தபின், மெல்ல ஒரு பாடலை நாதஸ்வர கலைஞர் எடுக்க முற்படுகையில் தவில் கலைஞர் ஏதோ சைகையால் அதைத் தவிர்க்குமாறு காட்டியதை நான் கவனித்துவிட்டேன்அது ஓர் அருமையான இசைப்பாடலின் ஆரம்ப ஆலாபனைஏன் அந்தப் பாட்டை எடுக்கக் கூடாது என்று நாதஸ்வரக்காரர் யோசித்த மிக மிகச் சிறிய கால இடைவெளியை, இன்னொரு தவில்காரர் தமது வாத்திய இசையால் நிரப்பி, நிறுத்தி, நாதஸ்வரக்காரர் எடுத்த வேறு பாட்டுக்கு ஏற்ப தாளக்கட்டு வாசிக்கத் தொடர்ந்தது திருமண நாள் கச்சேரி.   எஸ் ஜானகியின் புகழ் பெற்ற சிங்கார வேலனே பாட்டின் ஹம்மிங் தான் அவர் வாசிக்க முற்பட்டிருந்தார்

ஏன் அதை நிறுத்தி விட்டீர்கள்?’ என்று அலைபேசியில் தவில்காரரை கேட்டபோது, ‘சில கல்யாண வீடுகள்ல,  சட்டென்று சினிமா பாட்டு வாசிக்க ஆரம்பிச்சிட்டீங்களா என்று கேட்பார்கள், அதற்காகத் தான், ‘மாடு மேய்க்கும் கண்ணா‘  மாதிரி கொஞ்சம் பாடிட்டுநீங்க கூட எதிர்த்தால நின்னு ரசிச்சுப் பார்த்தீங்களே –  அப்புறம் திரைப்பாடல்கள் வரலாம்னு தான்என்றார்.  

அப்படியெல்லாம் இப்போதும் யாரும் பார்க்கிறார்களா என்ன என்று அவரைக் கேட்டேன். ஆனால், எத்தனை கவனமும், அக்கறையும் இந்தக் கலைஞர்கள் எடுத்துக் கொள்கிறார்கள் என்பது வியப்பானதுஅடுத்து சின்னஞ்சிறு கிளியே வாசித்தவரை நினைத்துக் கொண்டேன்.

சாக்ஸஃபோன் கலைஞர் சுதாகர், நெல்லூரில் இருந்து வந்து வாசித்து விட்டுச் செல்பவர். அலைபேசியில் அழைத்துப் பேசவும் பேரானந்தம் கொண்டார். நாதஸ்வர இசையோடு கலந்து வாசிப்பதில் உள்ள நுட்பங்கள் பற்றிக் கேட்டேன், உண்மை தான், சிரமம் தான், அனுசரித்து வாசிக்க வேண்டும் என்று சொன்னார்

உடனே, கணேசன் அனுப்பி வைத்த கட்டுரை நினைவில் தட்டுப்பட்டது. யார் கணேசன்? இணைய தளத்தில் தீக்கதிரில் வந்த கட்டுரை பார்த்து, நாற்பது ஆண்டுகளுக்குப் பிறகு என்னைக் கண்டெடுத்த கல்லூரி வகுப்புத் தோழன்,   அவன் அனுப்பிய மெயிலில் வந்த  கட்டுரையின் தலைப்பு, ‘பெண்களாலும் வாசிக்க முடியும்என்பது

தினமணி நாளேட்டின் ஞாயிறு கொண்டாட்டம் இணைப்பில் 2013ல் சி சு ஜெகஜோதி என்பவர் எழுதி இருந்த அருமையான குறுங்கட்டுரை. பாண்டிச்செல்வி எனும் பெண், மறைந்த தமது தந்தை கருப்பையா அவர்களது கனவை நிறைவேற்றும் வேட்கையோடு எல்லாத் தடைகளையும் சவால்களையும் எதிர்கொண்டு சாக்ஸஃபோன் கலைஞராக உருவெடுத்திருப்பவர்

https://www.dinamani.com/weekly-supplements/sunday-kondattam/2013/oct/20/

கட்டுரையின் வரிகளைப் பாருங்கள், நாதஸ்வரத்தோடு சேர்ந்து சாக்ஸஃபோன் வாசிப்பது பற்றி சுதாகர் சொன்னதற்கு பதில் இதில் கிடைக்கிறது: சாக்ஸஃபோன் என்றால், எத்தனை எத்தனை இளங்கலைஞர்கள் வாசிக்கின்றனர், அன்பாக

மிகப் பழைய படங்களிலேயே இசையமைப்பாளர்கள் இந்த ரசமான இசைக்கருவியை அம்சமாகப் பயன்படுத்தி இருப்பதைக் கேட்க முடியும். எம் எஸ் வி ரசிகர்களது இணையதளத்தில் பாடல்களின் பட்டியலே போட்டிருந்தார் அவரது ஆழ்ந்த பற்றாளர் ஒருவர். ‘முத்து நகையே உன்னை நானறிவேன்‘ (ஆஹாஓஹோ), ‘மின்மினிப் பூச்சிகள் கண்களில் தென்படும்என்று போகிறது அந்த வரிசை.

எனக்குத் தோன்றியது, சூரிய காந்தி படத்தின், ‘நான் என்றால் அது அவளும் நானும்என்ற அருமையான பாடல். (பாடல் தான் அருமை, கருத்துகள், ஆணாதிக்க நெடி நெருடுபவை). எஸ் பி பி அவர்களின் ஒயிலான பாடல்களில் ஒன்று அதுஒரு நிகழ்வில் நாம் நுழைந்து நமக்குத் தெரிந்தவர் யாராவது இருக்கின்றனரா என்று இங்குமங்கும் அலைபாய்ந்து கொண்டிருக்கையில், சட்டென்று ஒரு பன்னீர் சோடா உடைத்து நம்மிடம் நீட்டுவதைப் போல, அந்தப் பாடலையே, சாக்ஸஃபோன் வைத்துத்தான் திறந்து கொடுக்கிறார் மெல்லிசை மன்னர். ஆஹா, அந்தத் திறப்பே அலாதியானது, பாடலுக்கான சூழலில் நம்மைக் கொண்டு இறக்கிவிடும். மேதைகளே உங்களுக்கு எத்தனை வணக்கங்களும் செலுத்தத் தகும்

மேற்கத்திய இசைக்கருவிகளில் தமிழ்த் திரையருவியை விழச் செய்த பாடல்களில், சந்திரோதயம் படத்தின் பாடலை, மேற்சொன்ன சாக்ஸ் பட்டியலில் அந்த எம் எஸ் வி ரசிகர் குறிப்பிட்டிருந்தது மிகவும் பிடித்திருந்தது

பாடகர்கள், காதலர்களின் மயக்க உணர்வுகளை அப்படி அபாரமாகப் பாடி இருக்க, அந்த மயக்கத்தின் கிறக்கத்தில் ரசிகர்களைத் தவிக்க விடுமாறு  தேர்வு செய்திருப்பார் எம் எஸ் வி, இசைக்கருவிகளை. அய்…..யோ என்பார்களே சிலர், ஓராயிரம் அய்யோ போடவைக்கும் ரீங்கார இசைக்கோவை அந்தப்பாடல். இல்லாவிட்டால், ஆர் சிவகுமார் எனும் வாசகர் (அவர் யாரோ, அவருக்கும் சிறப்பு வணக்கம்), எம் எஸ் வி மறைந்த மறுநாள் தி இந்து ஆங்கில நாளேட்டில் ஆசிரியர்க்குக் கடிதங்கள் பகுதியில் கேட்க மிகவும் இனிமையான அவரது பாடல்களின் வரிசையில் இதைக் குறிப்பிட்டிருப்பாரா



https://www.youtube.com/watch?v=YJ5-82jqN5A



காதலுக்கான மென் களத்தை, அதாவது, வாகாகத் துள்ளிவர ஏற்ற கம்பளத்தை வயலின்களும், எட்டியெட்டிப் பார்க்கும் அக்கார்டியன் துணுக்குகளும், பூத்தூவி வரவேற்கும் குழலிசையும் கொஞ்சிக்கொஞ்சி வளர்த்தெடுக்க, இதயத்தை ஈரப்படுத்தும் பன்னீர்த் துளிகள் போல் சிதார் சிந்தும் முத்துகளில் என்னமாகப் பல்லவியை எடுக்கிறார் பி சுசீலா!

 ‘எங்கிருந்தோ ஆசைகள், எண்ணத்திலே ஓசைகள்என்ற முதலடியை எடுக்கும் போதே, இந்தப் பாடல் வரிகளில் சங்கதிகள் அநாயாசமாக தொடுத்துக் கொடுக்க இருப்பதன் முகவரியைத் தெரிவித்து விடுகிறது அவரது குரல். ‘என்னென்று சொல்லத் தெரியாமலே நான் ஏன் இன்று மாறினேன்?’ என்ற அவரது பதில் தெரிந்த கேள்வியை அணைத்துப் பெற்றுக் கொள்ளும் வயலின், அவரது குரலை ஒரு சுற்று சுற்றி அவரிடமே தருவது போலப் பெற்றுக் கொண்டு சுசீலா திரும்ப அந்த வரிகளை மேலும் சங்கதிகளோடு விவரிக்க, சிதார் தனது அன்பை மேலும் சிந்த, அந்த சுவாரசியமான இடத்தில் டி எம் சவுந்திரராஜன், ‘ஆசை வரும் வயதுஎன்று நுழையும் வருகை எத்தனை மெல்லுணர்வுகளின் கூட்டுச்சுவை, ‘அய்யோசொல்லாமல் எப்படி!

அதோடு போகிறதா, ‘ஆசை வரும் வயது, உந்தன் வயதுஎன்பதில் வயது எனும் இடத்தில் கொஞ்சம் அளவான இழைப்பு,’பேசும்..’ என இழுத்து, ‘இள மனதுஎன்று ஒரு மிக நுண்ணிய இடைவெளி கொடுத்து, ‘எந்தன் மனதுஎன்று விடுக்கும் இடத்தில் அந்த மனது கொள்ளும் ஆனந்தத்தை அளப்பது போன்ற சங்கதிகளில் விரித்து, அந்த இன்பத்தில் திளைக்கையிலேயே, ‘ஆடவன் பார்வையில் ஆயிரம் இருக்கும், மாதுளம் நாளொரு தூதுகள் அனுப்பும்என்னென்ன சுகம் வருமோ?’ என்று மேலும் சுவை கூட்டிக் கொண்டு போய், நிறுத்தி, ‘தேவிஎன்று செப்பும் விளி இருக்கிறதே, அய்யோ .சொல்லாமல் எப்படி?  

அங்கிருந்து பல்லவிக்குச் செல்கிறார் டி எம் எஸ், கூடவே வயலின்களும், இன்ன பிற வார்த்தை சொல்லும் வாத்தியங்களும் உடன் வர, ‘நான் தான் உன்னை மாற்றினேன்என்று . பல்லவியை அவர் முடிக்கவும், அதை அப்படியே பற்றிக் கொள்கிறது சாக்ஸஃபோன்… ஆஹா….ஒரு நூறு அய்யோ போடவேண்டிய இசைத்தூவல் அது. பாடகர்கள் பாடுவதன் இழைப்பை அந்தக் கருவி, மனச்சீலையில் தூரிகை தொட்டு வேகமாக வரைவது போலிருக்கிறது அழியாத சித்திரமாக!  கச்சேரிகளில் டிரம்பெட் வாசிப்பைப் பார்க்கிறேன் அந்த இடத்தில், மெல்லிசை மன்னர் என்ன கருவியைப் பயன்படுத்தினார் என்று அறிந்தவர்கள் சொல்லவேண்டும்.

சுசீலா நுழைவு அந்த இடத்தில், அடுத்த அய்யோ போடவைக்கிறது. ‘மாலை வரும் மயக்கம்….’ அதோடு விடுவாரா, ‘என்ன மயக்கம்….’ என்று சங்கதிகளில் கேட்போரை மயக்குகிறார். ‘கா……லைஎன்பதில் அவர் எடுக்கும் நீட்சி, நகராது வாட்டி எடுக்கும் நேரத்தின் காட்சி ! ‘வரும் ..வரைக்கும்.இல்லை உறக்கம்என்பதிலும் கொஞ்சுகின்றன சங்கதிகள்

அதன்பின், டி எம் எஸ், முந்தைய சரணத்தில் எடுத்த அதே மெட்டில், ‘பூவிதழ் மேலொரு பனித்துளி இருக்க, நானதைப் பார்க்கையில் நூலென இழைக்கஎன்று காதலின் தவிப்பைப் படம்பிடிக்கும் விதத்தில் எங்கோ கொண்டு சென்று, ‘என்னென்ன அதிசயமோ?’ என்ற சொற்களை, பூப்பந்தைத் தரையில் வேகமாகத் தட்டித் தட்டி எடுத்துக் கொடுக்கும் சித்து விளையாட்டு போல் நடத்துகிறார். அந்த  அதிசயமோ என்ற இடத்தில், திருமண பலகாரங்கள்  செய்கையில் இத்தனை சுற்று முறுக்கு என்பார்களே, அப்படி அத்தனை வேகச் சுற்று திருத்தமான சங்கதிகள் போட்டு ஒரு குறு ஆலாபனையும் சேர்த்து வழங்கி இருப்பார்

சந்தித்ததோ பார்வைகள் …’ என்று அத்தனை தாபத்தோடு டி எம் எஸ் குரலெடுத்து, ‘தித்தித்ததோ நினைவுகள்என்று அதை இன்னும் மோகமயப்படுத்தி, ‘மையலைச் சொல்லத் தெரியாமலே ஏன் ஏன் இந்தக் கேள்விகள்என்று கொண்டு வந்து நிறைவு செய்யுமிடத்தில்அதுவும் அந்தத் ‘தெரியாமலேஎன்ற இடம் இருக்கிறதே…. அய்யோ போட்டிருப்பீர்களே, நன்றி!  

சாக்ஸஃபோன் செய்த சாகசத்தை இப்போது டி எம் எஸ் அவர்களோடு சேர்ந்து எடுக்கும் ஹம்மிங்கில் பின், தானே ஒரு காதல் துள்ளலோடு நிறைவு செய்துவிடுகிறார் சுசீலா! இசைக்கருவிகள் முற்றும் போடுவதைக் கூடக் கேட்க வைக்கிறார் மெல்லிசை மன்னர்

இருங்கள், இன்னுமொரு முக்கிய அழகு இந்தப் பாடலில் சொல்லப்பட வேண்டியது உண்டு. சரணங்களில்  உந்தன் வயது, எந்தன் மனது என்று டி எம் எஸ் முடிக்கும் இடங்களிலும், பி சுசீலா மயக்கம், உறக்கம் என்று பி சுசீலா முடிக்கும் இடங்களிலும், அந்த சொற்களை அப்படியே அரவணைத்துக் கொள்ளும் மென்மையான இசையை கவனித்திருப்பீர்களே, அடடாஎத்தனை ரசமான இடம் அது……எம் எஸ் வி அவர்களது இசைக்கோவையில், கவிஞர் வாலியின் அமர்க்களமான காதல் சொற்கள், பாடல் வரிகள்! டி எம் எஸ்பி சுசீலா குரலினிமை, இரவுகளுக்காகவே, தனிமை ஏக்கங்களைத் தணிப்பதற்காகவே, இணை பறவைகளைப் பிணைப்பதற்காகவே உருவானது போல் வியக்கவைக்கும் பாடல்கள் தான் எத்தனை எத்தனை.  

புறச்சூழலின் தட்ப வெப்பத்தைப் போலவே, அகச்சூழலின் வெப்பமாதல் தவிர்க்க, இசை கொண்டு கொஞ்சம் குளிர்வித்துக் கொள்ளலாம் அல்லவா !

(இசைத்தட்டு சுழலும் ….)

மின்னஞ்சல் முகவரி: sv.venu@gmail.com

முந்தைய கட்டுரைகள் படிக்க: 

இசை வாழ்க்கை 41: இராத்திரிக்குத் தூங்க வேணும் பாடிக்கிறேன் கொஞ்சம்…. – எஸ் வி வேணுகோபாலன்

இசை வாழ்க்கை 42: ஆடிப் பாடி எழுத வந்தால் அலுப்பிருக்காது – எஸ் வி வேணுகோபாலன்

இசை வாழ்க்கை 43: தனியாகப் பாடிடும் சந்தோஷம் தந்தாய் இசையே இசையே..! – எஸ் வி வேணுகோபாலன்

இசை வாழ்க்கை 44: இது அவள் தந்த பாடலடி, வெண்ணிலாவே..! – எஸ் வி வேணுகோபாலன்

இசை வாழ்க்கை 45: இசையை அணைத்துச் செல்வோம் – எஸ் வி வேணுகோபாலன்

இசை வாழ்க்கை 46: எனக்கொரு காதலி இசைக்கின்றாள்  – எஸ் வி வேணுகோபாலன் 

இசை வாழ்க்கை 47: எல்லாம் எதற்காக நமக்குக் கொண்டாடும் இசைக்காக – எஸ் வி வேணுகோபாலன்

இசை வாழ்க்கை 48: யாரோடு யாரோ இசை யார் பாடுவாரோ – எஸ் வி வேணுகோபாலன்

இசை வாழ்க்கை 49: பண்ணுக்குள் பொத்தி வைத்தேன்- எஸ் வி வேணுகோபாலன்

இசை வாழ்க்கை 50: என்னென்பேன் இசை ஏடென்பேன் – எஸ் வி வேணுகோபாலன்

இசை வாழ்க்கை 51: அதன் பேர் தாளம் அன்றோ! – எஸ் வி வேணுகோபாலன் 

இசை வாழ்க்கை 52: இசையில் வந்தவர் யாரெனக் கேட்டேன் – எஸ் வி வேணுகோபாலன்

Music Life Series Of Cinema Music (Revathy Krishna And Veena Vidwan Pichumani Iyer) Article by Writer S.V. Venugopalan.

இசை வாழ்க்கை 52: இசையில் வந்தவர் யாரெனக் கேட்டேன் 



எஸ் வி வேணுகோபாலன்

தபலா பிரசாத் அவர்கள் வாசிப்பு உள்ளிட்ட விஷயங்கள் தாங்கிவந்த கடந்த வாரக்கட்டுரையை, அவருடைய மகன் தபலா ரமணா அவர்கள் வாசிக்க அனுப்பி வைக்க, ஆஹா, எதிர்பாராத அன்பின் பெருமழையாக அவரது உரையாடல் அமைந்தது. ‘அப்பாவும் மிகவும் மகிழ்ச்சி அடைந்தார்என்ற ஒற்றை வாக்கியம், அத்தனை இன்பம் அளித்தது. வாத்தியங்களின் வாசிப்பைக் கொண்டாடுவது அந்தக் கலைஞர்களைச் சிறப்பிப்பது ஆகிறது!

கடந்த வாரக் கட்டுரையில் தேர்வு செய்திருந்த பாடல்கள் ரமணா அவர்களுக்கு மிகவும் பிடித்திருந்தது. நான் சொன்னேன், ‘எல்லோரும் உங்கள் தந்தையின் வாசிப்பு என்றால், பாரதி கண்ணம்மா நீயடி சின்னம்மா பாடலைத் தான் வாசிக்கும்படி அவரைக் கேட்கிறார்கள்என்று. அதற்கு ரமணா சொன்ன பதில் சிலிர்க்க வைப்பது.

நினைத்தாலே இனிக்கும் படம், அதில் பணியாற்றிய கலைஞர்களுக்கு மட்டும் போட்டுக் காண்பிக்கப்பட்ட நேரத்தில் என்னை அப்பா அழைத்துப் போயிருந்தார், சின்ன வயசுதான் அப்ப எனக்கு ! வாஹினி ஸ்டூடியோ அரங்கில் படம் ஓடிக் கொண்டிருக்கபாரதி கண்ணம்மா பாட்டு சீன்ல அந்த தபலா வாசிப்பு வர்றப்ப, பக்கவாட்டில் இருந்த வாசல் ஒன்றின் அருகே வந்து நின்றபடி, எம் எஸ் வி அண்ணன், ‘பிரசாத்….’ அப்படின்னு உணர்ச்சி வசப்பட்டு உரக்கக் குரல் கொடுத்தார் பாருங்க, அப்படியே சிலிர்த்துப் போயிருச்சு … மறக்கவே மறக்காது சார்…”

கோடி ரூபாய் கொடுத்தாலும் ஈடாகுமா? இப்படியான பாராட்டு ஓர் உண்மையான கலைஞரின் வாழ்க்கையில் அவரது மகனால் இத்தனை நினைவு கூரப்படும் எனில், அவருக்குள் ஏற்பட்டிருக்கும் பரவசத்தை விவரிக்க வார்த்தை உண்டா, என்ன?  அந்தக் காலத்தில் ஷொட்டு கொடுத்தார் என்று கதைகளில் எழுதி இருப்பார்கள்

வார்த்தை சொல்லும் வாத்தியம்என்பாராம் மெல்லிசை மன்னர். இசைக்கருவிகளின் மீதான அவர் காதல் தான் எத்தனை அபாரமானது! எம் எஸ் வி அவர்கள் மறைந்த போது, தி இந்து ஆன் லைனில் ஒரு தொடர் உரையாடல், அவரது மேதைமை குறித்து

நிகழ்ந்ததைப் பார்க்க நேர்ந்தது.  

https://www.thehindu.com/specials/live-chat/live-chat-msv-remembered/article7421855.ece

புகழ் பெற்ற வீணைக் கலைஞர் ரேவதி கிருஷ்ணா அப்போது அங்கே குறிப்பிட்டிருந்த விவரிப்பு தான் அதுபாச மலரின் நிகரற்ற பாடலான ‘மலர்ந்தும் மலராதபாடலைத் தாம் வீணையில் வாசிக்கக் கேட்டுக் கண்ணீர் உகுத்து, தாம் அந்தப் பாடலுக்கு இசையமைக்கையில் என்ன பாவத்தை விரும்பி இருந்தாரோ, அது தமது வீணையிசையில் ஒலிக்கக் கேட்டேன் என்று நெகிழ்ந்து பாராட்டினார் என்று அந்த உரையாடலில் பதிவு செய்திருந்தார் ரேவதி கிருஷ்ணா

Retro Top 12 Instrumental Songs by Revathy Krishna | HD Songs - YouTube
வீணைக் கலைஞர் ரேவதி கிருஷ்ணா

2014ம் ஆண்டு ஜூலை 12 அன்று மாலை அவரைப் பார்த்திருக்கிறோம் – அல்ல, அவரது அபார வீணை வாசிப்பைக் கேட்டிருக்கிறோம்அல்ல, அல்ல, இசை வனத்தில் எல்லாம் மறந்து இளைப்பாறி இருந்தோம்!

அவருக்கு ஒரு மின்னஞ்சல் அனுப்பியதை, இப்போது மீண்டும் மெயிலில் இருந்து கண்டெடுத்து வாசிக்கையில், இசை வாழ்க்கையின் பகுதியாகவே உணர முடிந்தது. அதன்  சில வரிகள் மட்டும் இங்கே

மதிப்பிற்குரிய கலைமாமணி வீணை வாணி ரேவதி கிருஷ்ணா அவர்களுக்கு 

ஆஹாஅடடாஅடேங்கப்பாஆத்தாடிஆத்தாடி…. என்னவென்று சொல்ல!

ஜூலை 12 அன்று திருமண வரவேற்பு என்று மட்டுமே தெரியும். திகட்டாத இசையமுது பருகும் ஓர் இனிய மாலையாக அது உருப்பெறும் என்பது உள்ளபடியே எனக்குத் தெரிந்திருக்கவில்லை

நானும் என் வாழ்க்கை இணை தோழர் ராஜேஸ்வரியும் விருப்பத்தோடு நாங்களாக இன்றைய மாலைப் பொழுதை எங்கள் குடும்ப நண்பர்கள் மருத்துவர்கள் பி வி வெங்கட்ராமன்ஜெகதா தம்பதியினருடைய மூத்த மகள் நிரஞ்சனா பாரதி திருமண வரவேற்புக்கு வருகை தருவோரை வாசலில் நின்று வரவேற்று மகிழ்ந்திருந்தோம்

அவ்வப்போது எங்கள் காதுகளைத் தீண்டிச் சீண்டிக் கொண்டிருந்த வீணை இசை இன்பத்தை ஒவ்வொரு அற்புதப் பாடல் முடிய முடிய இழந்து கொண்டிருக்கிறோம் என்பது எட்டு மணிக்கே உறைத்தாலும், எங்கள் பணியை விட்டு உள்ளே வர உள்ளம் இசையவில்லை

ஒன்பதரைக்கு உள்ளே வந்தமர்ந்தோம்அதற்குப் பிறகான ஒரு மணி நேரத்துக்கும் கொஞ்சம் கூடுதலான நேரம் உங்கள் பாடல்களை அப்படியே உருகி உருகிக் கேட்டிருந்தோம்

தேன் சிந்தியது வானம், உங்கள் வீணையில் (பொண்ணுக்குத் தங்க மனசு)

விழி கதை எழுதியது, உங்கள் விரலசைவில் (உரிமைக் குரல்)

ஆகாய வெண்ணிலா தரைமீது வந்தது…(அரங்கேற்ற வேளை )

சஹானா சாரல் தூவ, சஹாரா பூக்கள் பூத்தது…(சிவாஜி)

மலரோடு தனியாக நின்றான் காதலன் (இரு வல்லவர்கள்)

திருத்தமான உச்சரிப்பு போல் உங்கள் வேக வாசிப்பில் வீணை பேசவும், பாடவும் செய்தது எங்களைக் கொண்டாடித் திளைக்க வைத்தது

நன்றி..

உள்ளபடியே, அன்றைய நிகழ்ச்சியில் அப்படி வாசித்தார்இந்த மின்னஞ்சலை அவர் பார்த்திருப்பார் என்ற கால இடைவெளி கொடுத்து அவரை அழைத்தபோது, பேரானந்தம் கொண்டார்

யூ டியூபில் அல்லது அவரது முக நூல் பக்கங்களில் ரேவதி கிருஷ்ணா வாசிப்பை எடுத்துக் கேட்டு ரசிக்கலாம்





டி ஆர் மகாலிங்கம் அவர்களதுசில்லென்று பூத்த சிறுநெருஞ்சிக் காட்டினிலேபாடலை (இசை வாழ்க்கை 21ல் பேசி இருந்தோம்), அந்தத் தொகையறா மட்டுமல்ல, சரணங்களில் வரும் ராக ஆலாபனை உள்பட வாய்ப்பாட்டுக்காரர் பாடுவது போலவே அசாத்தியமாக வாசிக்கிறார் ரேவதி கிருஷ்ணா





பி பி ஸ்ரீனிவாஸ் அவர்களது மென்குரலை, ‘பொன் என்பேன்‘ பாடலில் அப்படி இதம் பதமாக வழங்க முடிவது வியக்க வைக்கிறது

வார்த்தை பேசும் வாத்தியம்என்று மெல்லிசை மன்னர் இப்படியான கருவிகளை ஏன் கொண்டாடினார் என்பதும் புரிகிறது. அடுத்தவர்களைப் பாராட்டும் வாழ்க்கை தான் இசை வாழ்க்கை என்பதும் புரிகிறது.

வீணை பேசுமா எனில், பாக்கிய லட்சுமி படத்தில் இடம் பெற்று, மெல்லிசை மன்னர்கள் விஸ்வநாதன்ராமமூர்த்தி இசையில் கண்ணதாசன் பாடலைப் பாடி, அதனால் பி சுசீலாவுக்குப் பெரும் புகழ்  கிடைக்கச் செய்தமாலைப் பொழுதின் மயக்கத்திலே…’ கேட்கவேண்டும்!  

ஒரே ஒரு தடவை கேட்டால் போதும், அப்புறம், அதன் இசைத்தட்டு நம் உள்ளத்தில் சுழலத் தொடங்கிவிடும். அப்படியான ஓர் அசாத்திய அனுபவம் அது

படத்தின் திரைக்கதையில் அந்த இடத்தில், ஓர் இளம் விதவை பாடுவது போன்ற இடத்திற்கான பாடலில், இனிப்பும் கசப்பும், இன்பமும் துன்பமும், வியப்பும் அதிர்ச்சியும் ஒரு சேரக் கலந்து வருவதன் வெளிப்பாட்டை, மெல்லிசை மன்னர்கள் வீணை, ஷெனாய், வயலின் இன்ன பிற வார்த்தை பேசும் வாத்தியங்கள் வைத்து இசைக்கோவை அமைத்திருந்த அசாத்திய பாடல் அது. அது மட்டுமாமுக்கியமான இன்னொரு கருவி, இருக்கட்டும், அதற்குப் பிறகு வருவோம்.

வீணை வாசித்தது யார், அவர் ஓர் அபாரமான இசைக்கலைஞர். அவரைப் பற்றிய செய்திகளுக்கும் பிறகு வருவோம்முதலில் பி சுசீலா!

முதலில் இதமான வீணையின் வாசிப்பு தொடங்குகிறதுதுயரச் சாயலைக் கதையின் பின்புலத்தை  இலேசாக ஒரு கவிதை போல் தீட்டுகிறது வயலின் இழைப்பு. பாடல் முழுவதுமே இந்த இலாகாவை வயலின் பொறுப்பில் தான் விட்டிருக்கின்றனர்

வீணையும், வயலினும் சொல்ல வந்த முன்கதைச் சுருக்கத்தை முடிக்குமிடத்தில், ஒரு நேர்க்கோடு இழுப்பது போல், ‘மாலைப் பொழுதின் மயக்கத்திலே நான் கனவு கண்டேன் தோழிஎன்று கதையை விவரிக்க நுழையும் இடத்திலேயே சுசீலா கல்லையும் கரைத்துக் குழைக்கும் குரலில் எடுக்கிறார் பல்லவியை

Musical Minds: T. M. Soundararajan with singer P. Susheela and music director M.S. Viswanathan at a recording. | Music director, Singer, Musician

அதை அன்போடு ஆசீர்வதித்து, ‘மேலே சொல்லுஎன்கிறது வீணை. ‘மனதில் இருந்தும் வார்த்தைகள் இல்லை, காரணம் ஏன் தோழிஎன்று போகிற இடத்தில், அந்தஇல்லைஎன்பதில் எத்தனை இருக்கிறது, சுசீலா அழுத்தும் விதத்தில்! அப்புறம், ‘காரணம் ஏன் தோழி?’ என்று இரண்டாம் முறை எடுப்பது, மனிதர்கள் உரையாடலில், வியப்போ, அதிர்ச்சியோ, துயரமோ இருந்தால் முதன்முறை வைக்கும் கேள்வியை மீண்டும் கேட்போமே அப்படியான கணக்கில் மெட்டு அமைத்ததில் சொற்களை வைத்தானே கவிஞன், அவருக்கும் அப்புறம் வருவோம், இப்போது சுசீலா தான்!

பல்லவி அங்கே முடிவதில்லை, வீணையின் மிகச் சிறு துணுக்கு வாசிப்பின் தூண்டலில், ‘இன்பம் சில நாள் துன்பம் சில நாள் என்பவர் யார் தோழி?’ என்ற அபாரமான கேள்வியை அசாத்தியமான அழகில் இசைக்கிறார் சுசீலா, ‘இன்பம் கனவில் துன்பம் எதிரில், காண்பது ஏன் தோழிஎன்று அதற்கான பதிலையும் தந்துவிட்டு, ‘காண்பது ஏன் தோழியை இரண்டாம் முறையும் பாடுமிடத்தில் உள்ளத்தின் வலியை நெருக்கமான மருத்துவரிடத்தில் வைக்கும் கேள்வியைப் போல் எழுப்புகிறார். அதை ஓர் அளவான ஆலாபனையால் மேலும் கூர்மைப் படுத்துகிறார்

இந்த ஆலாபனை அந்த இடத்தில் மட்டுமல்ல, பின்னர் சரணங்கள் நிறைவு பெறுமிடத்திலும்விம்மும் உள்ளத்தை வாகாகக் கரம் பற்றிப் பல்லவியில் கொண்டு சேர்த்து விடுகிறது

பிறகு பல்லவியின் முதல் வரியைத் தொட்டு முடித்ததும், மீண்டும் பாடுகளைத் தான் வாங்கிக் கொள்கிறது வீணை, என்னமாகக் கதையைச் சொல்லிப் போகிற வாசிப்பு. ஓர் உற்ற தோழன் போலும் வயலின் கூடவே நடை போட்டுச் செல்கிறது

மணமுடித்தவர் போல் அருகினில் ஓர் …’ என முதல் சரணத்தை, வீட்டு முற்றத்தில் அமர்ந்து லயித்துப் பூ தொடுக்கிற பெண் போலும் தொடங்குகிறார் சுசீலா. வடிவு கண்டேன் தோழியில், ஒரு சிறு ஏற்றத்தில் எத்தனை சுகம் வைக்கின்றனர் இசையமைப்பாளர்கள்

அதே ரீதியில், ‘மங்கை என் கையில் குங்குமம் தந்தார் மாலை இட்டார் தோழிஎன்று மேலும் அடுத்த உயரத்திற்குக் கொண்டு செல்ல, அந்த சுகத்தை அப்படியே  பெற்றுக் கொள்ளும் ஷெனாய் அதை மேலும் விரிவாக்கி சுசீலாவிடமே திருப்பி வழங்கவும், அடுத்த வரிகள் எல்லாம்….ஆஹாஆஹா…. ‘வழி மறந்தேனோ வந்தவர் நெஞ்சில்என்றதும் கேட்போரே சாய்ந்து விடுவோம்! ‘மறவேன் மறவேன் என்றார் உடனே மறந்துவிட்டார் தோழிபிறகு? ‘பறந்து விட்டார் தோழி‘  அந்த ஒயிலான அளவான ஆலாபனை, அப்புறம் பல்லவி.

இரண்டாம் சரணத்தை நோக்கிய திசையில் வீணை, வயலின் இசையோடு ஷெனாயும் சேர்ந்து கொள்வது, பாடலின் கருப்பொருளை மேலும் உள்ளத்திற்கு நெருக்கமாக்கி விடுகிறது. ‘கனவில் வந்தவர் யாரெனக் கேட்டேன் கணவர் என்றார் தோழிஅப்படியே முதல் சரணத்தின் அதே ஏற்றம் பெறுமிடம். ‘கணவர் என்றால் அவர் கனவு முடிந்ததும் பிரிந்தது ஏன் தோழிஎன்ற கேள்விக்கு ஷெனாய் பதில் சொல்கிறேன் என்று தொடங்கி, இழைத்து இழைத்து உருக வைத்து, ‘உனக்கே தெரியுமே, என்ன சொல்லஎன்கிற மாதிரி விக்கித்து நின்றுவிடுகிறது



https://youtu.be/dCfjx50IXvg



 

அதையடுத்த வரிகளில் கவிஞன் ஆட்சி தான்: ‘இளமையெல்லாம் வெறும் கனவு மயம் இதில் மறைந்தது சில காலம். தெளிவும் அறியாது முடிவும் தெரியாது மயங்குது எதிர்காலம்என்ற இடத்தில், நெகிழ்த்திக் கண்களை ஈரப்படுத்தி விடுகிறார் சுசீலாமயங்குது எதிர்காலம் இரண்டாம் தடவை பாடவும், அந்த அளவான அழகான ஆலாபனையின் கரம் பற்றிப் பல்லவி

தோழி என்ற சொல் வரும் ஒவ்வொரு முறையும் வெவ்வேறு வகைகளில் அந்தச் சொல்லை சுசீலா உருமாற்றிக் கொடுத்துக் கொண்டே இருப்பார். பாடல் நிறைவு பெற்ற பின்னும் சிந்தும் வீணையின் முத்துகள் நெஞ்சை நிறைக்கின்றன.

என்ன சொற்கள்….என்ன சொற்கள்….’நான் நிரந்தரமானவன் அழிவதில்லை, எந்த நிலையிலும் எனக்கு மரணமில்லைஎன்று எழுதிய வரிகள் செருக்கின் பாற்பட்டு வந்து விழுந்தவை அல்ல, எல்லாக் காலத்திற்குமான கவிதைத் தமிழ், இசைத் தமிழ் அவர் இசைத்த தமிழ். இந்தப் பாடல், கண்ணதாசனின் மகத்தான ஆக்கங்களில் ஒன்று.

பாடல் காட்சியில் சௌகார் ஜானகியின் முகபாவமும், புருவ அசைப்புகளும், உடல்மொழியும் அத்தனை அம்சமாக அமைந்திருக்கும் எனில், வீணை வாசிக்கும் வி சரோஜாவின் விழிகள் பேசிக்கொண்டே இருக்கும்.

இப்போது பாடலை மனத்தில் நினைத்துக் கொள்ளுங்கள், இரவு நேரமாக இருந்தால் மிக உகந்தது, பாடலை மெல்ல ஓடவிடுங்கள்…. அதாவது வீணையின் நாதம் தொடங்கிய மாத்திரத்திலிருந்து! அந்த மிருதங்க வாசிப்பு

உறுத்தாது, மேல் சென்று ஒலித்துவிடாது, பாடலின் கதியைச் சற்றும் தான் உயர்வு நவிற்சி செய்துவிடாது, மென் பாதங்களின் நடைபோலும் அந்த மிருதங்க வாசிப்பு, பாடல் முழுக்க

மெல்லிசை மன்னர்களே, இந்தப் பாட்டுக்கான தாளக்கருவியை எந்த கணத்தில், மிருதங்கம்தான் என்று தேர்வு செய்தீர்களோ, அந்த நேரப்பொழுதிற்கு என் முதல் வணக்கம்!

அப்படியானால், பாடல் முழுக்கப் பேசும் அந்த வீணையை வாசித்தது யார்? வித்வான் ஆர் பிச்சுமணி அய்யர்!  

96 வயது நிறை வாழ்வு வாழ்ந்து அடுத்தடுத்த தலைமுறை ஆர்வலர்களுக்கு வீணை வாசிப்பு கற்பித்த சிறப்பான இசை மேதை ! நாகப்பட்டினத்தில் பிறந்தவர், இளவயதிலேயே, திருச்சி குப்பண்ணா எனும் புகழ்பெற்ற இசைக்கலைஞரிடம்  கற்றுக் கொண்டு உயர்ந்த கலைமாமணிதமது மனைவிக்கு வீணை வாசிப்பை அசாத்தியமாகப் பயிற்றுவிக்க வந்த அவரைக் கண்டெடுத்த திரையுலக ஜாம்பவான் கே சுப்பிரமணியம் அவர்கள், அவரைத் திரை இசையுலகிற்கு அறிமுகம் செய்வித்தாராம்

Tribute : R. Pichumani Iyer – MYLAPORE TIMES
வீணை இசைக்கலைஞர் பிச்சுமணி அய்யர்

பின்னாளில், அவருடைய பேரன் பி கண்ணனுக்கு வீணை இசை கற்பித்தவர் பிச்சுமணி  அய்யர்.  ‘உன் பாட்டனார் என் மீது பொழிந்த அன்புக்கு நான் செலுத்தும் நன்றிக்கடன்‘  என்று நெஞ்சுருகச் சொல்வாராம்.

2020ல் அவரது நூற்றாண்டு சமயத்தில், புகழ் பெற்ற மிருதங்கக் கலைஞர் உமையாள்புரம் சிவராமன் அவர்கள், தஞ்சாவூர் பாணி வாசிப்புக்குப் பேர் போனபிச்சுமணி அய்யருக்குத் தாம் பக்கவாத்தியம் வாசித்த பெருமை மிக்க காலத்தை நினைவு கூர்ந்திருக்கிறார். லயம் பிசகாத சுநாதம் அவரது வாசிப்பு என்று புகழ்ந்திருக்கிறார். ‘சங்கீத கலா நிபுணவிருது உள்ளிட்டுப் பல விருதுகள் பெற்றவர் பிச்சுமணி அய்யர்.

மிகச் சிறந்த ஆசிரியர் என்று கொண்டாடுகின்றனர் அவர் சீடர்கள். ஒற்றை ஒற்றையாகத் தான் வகுப்பு, நேரடி கவனம், அசாத்திய பொறுமை, நேர்மையான நடத்தை, கலையின் மீதான அளப்பரிய விசுவாசம். அத்தனை விஷய ஞானம்

சம்பூர்ண ராமாயணத்தில் வரும்வீணைக் கொடியுடைய வேந்தனே‘, ‘இன்று போய் நாளை வாராய்எனும் புகழ் பெற்ற பாடல்களில் மின்னும் வீணை இசை, பிச்சுமணி அய்யர் அவர்கள் வாசிப்பு தான்

தன்னடக்கமாக வாழ்ந்த அந்த வீணை இசைக்கலைஞர் மறைந்தது ஜூன் 2015ல். ஒரு தற்செயல் ஒற்றுமைஅசாத்திய திறன் பெற்றிருந்தும் எளிமையாகவே வாழ்ந்த மெல்லிசை மன்னர் மறைந்தது ஜூலை 2015.

பாடல் நிறைவு பெற்றபின்னும் ஒலிக்கின்ற வீணைத் தந்திகள் போலவே, வாழ்ந்து மறைந்தபின்னும் பேச வைக்கிறது இசை. நமக்குள் நின்று பேசுகிறது. கவலைகள் கப்பிக்கிடக்கும் உள்ளறையில் கொஞ்சம் கண்ணீர் பெருக வைத்துத் தூய்மைப்படுத்திப் பளிங்காகத் துடைத்துக் கொடுக்கிறது. நல்ல விஷயங்களைக் கொண்டாடக் கற்பிக்கிறது. தத்தம் வாழ்க்கையை, சாப நிலையென்ற நினைப்பொழித்து வரமாக உணரவைத்துக் கொண்டாடப் பழக்குகிறது.

(இசைத்தட்டு சுழலும் ….)

மின்னஞ்சல் முகவரி: sv.venu@gmail.com

முந்தைய கட்டுரைகள் படிக்க: 

இசை வாழ்க்கை 41: இராத்திரிக்குத் தூங்க வேணும் பாடிக்கிறேன் கொஞ்சம்…. – எஸ் வி வேணுகோபாலன்

இசை வாழ்க்கை 42: ஆடிப் பாடி எழுத வந்தால் அலுப்பிருக்காது – எஸ் வி வேணுகோபாலன்

இசை வாழ்க்கை 43: தனியாகப் பாடிடும் சந்தோஷம் தந்தாய் இசையே இசையே..! – எஸ் வி வேணுகோபாலன்

இசை வாழ்க்கை 44: இது அவள் தந்த பாடலடி, வெண்ணிலாவே..! – எஸ் வி வேணுகோபாலன்

இசை வாழ்க்கை 45: இசையை அணைத்துச் செல்வோம் – எஸ் வி வேணுகோபாலன்

இசை வாழ்க்கை 46: எனக்கொரு காதலி இசைக்கின்றாள்  – எஸ் வி வேணுகோபாலன் 

இசை வாழ்க்கை 47: எல்லாம் எதற்காக நமக்குக் கொண்டாடும் இசைக்காக – எஸ் வி வேணுகோபாலன்

இசை வாழ்க்கை 48: யாரோடு யாரோ இசை யார் பாடுவாரோ – எஸ் வி வேணுகோபாலன்

இசை வாழ்க்கை 49: பண்ணுக்குள் பொத்தி வைத்தேன்- எஸ் வி வேணுகோபாலன்

இசை வாழ்க்கை 50: என்னென்பேன் இசை ஏடென்பேன் – எஸ் வி வேணுகோபாலன்

இசை வாழ்க்கை 51: அதன் பேர் தாளம் அன்றோ! – எஸ் வி வேணுகோபாலன் 

Music Life Series Of Cinema Music (Pankaj Mullick And Tabala Prasad) Article by Writer S.V. Venugopalan. Book day , Bharathi Puthakalayam

இசை வாழ்க்கை 51: அதன் பேர் தாளம் அன்றோ!



எஸ் வி வேணுகோபாலன்

வீந்திர சங்கீதம் குறித்த கடந்த வாரத்தின் பதிவு நிறைய அன்பர்கள் உள்ளங்களைக் குளிர்வித்திருக்கிறது. தற்செயல் ஒற்றுமை ஒன்று இதில் பேச இருக்கிறோம். அதற்கு முன் ஒரு சுவாரசியமான விஷயம்

வங்கி பரிவர்த்தனை தொடர்பான அய்யம் ஒன்றைக் கேட்க அழைத்தார் புதிய அன்பர் ஒருவர். அவர் கேட்ட விஷயம் முடிந்ததா என்று அவரிடமிருந்து பதில் எதிர்பார்த்த நேரம், வாட்ஸ் அப்பில் பார்க்கையில் தபலா வாசிக்கும் புகைப்படம் தனது டிஸ்பிளே படமாக வைத்திருப்பதைக் கண்டேன்

அவரை நான் நேரில் பார்த்ததில்லை என்றாலும் அது அவராகத் தான் இருக்கவேண்டும் என்று பட்டது. அவரை அழைத்துக் கேட்கவும், தாம் குறிப்பிட்ட வேலை முடிந்தது என்று சொன்னார், அந்த தபலா வாசிப்பது நீங்கள் தானா என்றதும் அவருக்கு ஏற்பட்ட மகிழ்ச்சியை விவரிக்க முடியாது. உங்களுக்கு இசையில் ஆர்வம் உண்டா என்று கேட்டார் சரவணன் எனும் அந்த அன்பர்.   

அடுத்த சில நாளில், ஒரு வீடியோ இணைத்து அனுப்பினார்தமிழ்த் திரையின் மூத்த தபலா இசைக்கலைஞர் ஒருவரோடு ஓர் எளிய உரையாடல் நடத்தியதன் காணொளிப்பதிவு அது. எளிமையான அந்த மனிதர், இசையுலகில் ஜாம்பவான்களுக்கு தபலா வாசித்தவர். அவருடைய தந்தை, கிட்டத்தட்ட 40 ஆண்டுகள் திரையிசையில் தபலா வாசிப்பு வழங்கியவர்

வேறு யார், சாட்சாத் பிரசாத் அவர்கள் தான்! அவருடைய அண்ணன் ராமலிங்கம், தம்பிகள் மனோகர், (மறைந்துவிட்ட) ருத்ரா எல்லோருமே தபலா கலைஞர்கள். தம்முடைய மகன்கள் மட்டுமல்லமகன் ரமணாவின் மைந்தன் கார்த்திக் வம்சி கூட தபலா இசைக்கிறார் என்கிறார் பிரசாத்.

ழு வயதில் வாசிக்க வந்திருக்கிறார் பிரசாத். வஞ்சிக்கோட்டை வாலிபனின் புகழ் பெற்ற பத்மினிவைஜயந்திமாலா போட்டி நடனப் பாடலான ‘கண்ணும் கண்ணும் கலந்துபாடலுக்கு வாசிக்கையில் அவருக்கு வயது 12. மெல்லிசை மன்னரின் குழுவில் ஒருவராக இணைந்தது 1972ல்.  

Music Life Series Of Cinema Music (Pankaj Mullick And Tabala Prasad) Article by Writer S.V. Venugopalan. Book day , Bharathi Puthakalayam
தபெலா பிரசாத் (Tabala Prasad)

அவரது நேர்காணல் எதை எடுத்துப் பார்த்தாலும், ஜி ராமநாதன், கே. வி மகாதேவன், எம். எஸ் விசுவநாதன் மூவரும் பிரும்மா, விஷ்ணு, சிவன் என்று பரவசம் பொங்கக் கூப்பிய கரங்களோடு சொல்கிறார். இளையராஜா மண்ணில் சொர்க்கத்தை வரவழைத்துவிட்டவர் என்கிறார். கொண்டாடுகிறார். பாலிவுட்டில் நவுஷத்ஆர் டி பர்மன், லட்சுமிகாந்த் பியாரிலால் என்று முக்கிய இசை அமைப்பாளர்களுக்கு எல்லாம் வாசித்திருக்கிறார்.    ஆர் ரஹ்மான் அவர்களுக்கும் வாசித்திருக்கிறார். புதிய இளம் தலைமுறை இசை அமைப்பாளர்கள் அழைப்பையும் ஏற்று வாசித்து வருகிறார்.

எம் எஸ் வி அவர்களது மகள் அவரை நேர்காணல் செய்கிறார். நிறைய பேர் அவரோடு உரையாடல் நடத்தும் வெவ்வேறு காணொளிப் பதிவுகளில்அவரது பதில்கள் ஆதாரமான செய்திகளில் மாற்றம் இல்லாத பொழிவாக இருக்கிறது

பாடலை ஓடவிட்டு தபலா இசை வருமிடங்களில் அவரை வாசிக்கச் சொல்லிக் கேட்கின்றனர்தமது முறை வரும்வரை அவர் கண்களில் ஆர்வம் பொங்க, எந்த இடம் என்ற எச்சரிக்கை அவரது விரல்களில் காத்திருக்க, உரிய இடத்தில் சொடுக்குப் போட்டாற்போல் பளீர் என்று எத்தனையோ ஆண்டுகளுக்குமுன் வாசித்த வாசிப்பை அப்படியே அழகான பிரதி எடுத்தாற்போல் வாசிப்பதைக் கண் கொண்டு பார்க்கவேண்டும், காதுகள் மட்டுமல்ல உடலே சிலிர்க்கும்

பாரதி கண்ணம்மா (நினைத்தாலே இனிக்கும்) பாடலைத் தான் அதிகம் அவரை வாசிக்கக் கேட்டு இன்புறுகின்றனர். அத்தனை அழகு அது. எம் எஸ் வி அவர்களது கற்பனைக்கு சபாஷ் போடவேண்டும். 47வது கட்டுரையில் பார்த்த பாடல் அது.   அல்லது, ராகங்கள் பதினாறு கேட்கின்றனர். அதுவும் அருமையானது.

பிரசாத் அவர்கள் குறிப்பிடும் இன்னொரு பாடல், அண்ணன் ஒரு கோயில் என்றால்…!  அந்தப் பாடலுக்கான வாசிப்பை அவரிடம் வாசிக்கச் சொல்லிக் கேட்க வேண்டும் என்று எனக்குப் பட்டது.  

பி சுசீலா தனியாகவும், எஸ் பி பி தனியாகவும் பாடியிருக்கும் அந்தப் பாடல் எத்தனை முறை கேட்டாலும் திகட்டாத வரிசையில் வருவது. அதிலும், எஸ் பி பி பாடியிருப்பது சோக கீதம். எந்த மனநிலையில் இருந்தாலும், துயரமான சூழலுக்கான கீதங்கள் எனில் ஆழ்ந்து கேட்டு அந்தச் சூழலுக்குள் போய் நின்று லயித்துச் சொக்கி நிற்கும் எனக்கு உயிரான பாடல் இது

எம் எஸ் வி ரசிகர்கள் வலைத்தளம் ஒன்றில், ஹிந்துஸ்தானி பாணியில் சிறப்பாக அமைக்கப்பட்ட பாடல் என்று கொண்டாடப்படும் இந்தப் பாடலின் தொடக்கத்தில், பேரமைதியின் இடையே எங்கோ தொலைதூரத்தில் தொடங்கி மெல்ல மெல்ல அருகே நெருங்கும் ஒலியில் எஸ் பி பி அவர்களது அசத்தல் ஆலாபனையுடன் தொடங்குகிறது பாடல்.   

தனிமைத் துயரில் ஒரு பெருவெளியில் யார் அழைத்தாலும் திரும்பக் கூடாது என்று நடப்பவரை இதமாகப் போய்த் தீண்டும் காற்றின் குரலாக, உன் சோகம் என்னதும் தான் என்று தோள் தடவி முகத்தைத் திருப்பித் தலையைச் சாய்த்துக் கேவல் தணிக்கும் படிக்கு இழைக்கிறார் பாலு, அந்த ஆலாபனையை! அதனூடே அழுத்தமாக வயலின் இழைப்பு





ஆலாபனை தொடர்ந்து, ஓடோடி வந்து மடியில் விழுந்து சிணுங்கும் குழந்தையைப் போல் பின்தொடர்கிறது சிதார் வாசிப்பு. அப்புறம் தொடங்குகிறார் பாலு,பல்லவியை,  ‘அதன் பேர் பாசம் அன்றோஎனுமிடத்தில் குழையும் சுவை தனித்துவமானதுபல்லவியை ஏந்திப் பிடிக்கும் தாளலயத்தின் சுகம், தபலா எனும் அற்புதக் கருவியின் வரம். பாசம் குறித்த ஒரு நீண்ட சொற்பொழிவைக் குறுகத் தறித்த குறளாக அவர் குரல்.  

சரணங்களுக்கு இடையே சிதாரும், தபலாவும் உருக்கத்தின் ஆணிவேர் தேடிச் சங்கிலித்தொடர் போல் பின்னிப் பிணைந்து நடத்தும் தேடல் அத்தனை இதமான இசை அனுபவமாக வாய்க்கிறது

முதல் சரணத்தை, ‘பொன்னை வைத்த இடத்தினிலே பூவை வைத்துப் பார்ப்பதற்குஎன்ற வரியை இதயத்தைப் பிழிந்து இசைக்கிறார் பாலு. அதில்பார்ப்பதற்குஎன்ற இடத்திற்கான தாள கதி, ஒற்றைக் காலில் படியிலேறி இறங்குவதுபோல் இருக்கும் தபலா வாசிப்பு. மீண்டும் இரண்டாம் முறை அந்த வரியைப் பாடுகையில், இடத்தினிலே என்ற சொல்லை அத்தனை சங்கதிகள் போட்டு உருக்கம் கூட்டுவார் அவர். அதே போல், அண்ணன் இன்றி யாரும் உண்டோ என்ற வரியை இரண்டாம் முறை பாடுகையில் அந்தயாரும்சொல் அத்தனை தவம் செய்திருக்கும் பாலுவின் அலங்கரிப்புக்கு! மீண்டும், ‘அதன் பேர் பாசமன்றோஎன்ற உயிர்ப்பு !

இரண்டாம் சரணத்தைக் கொண்டுவந்து இணைக்கிறது மெல்லிய குழலிசை கீற்று. ‘தொட்டில் இட்ட தாயுமில்லை தோளில் இட்ட தந்தையில்லைஎன்ற வரிகளைத் தாலாட்டிச் சீராட்டிப் பாடி இருப்பார் எஸ் பி பி. அதுவும், தாயுமில்லை என்ற சொல்லை இரண்டாம் வருகையில் மயிலிறகால் வருடிக் கொடுத்துப் பாடுவார். ‘கண் திறந்த நேரமுதல்என்ற விழிப்பின் சிலிர்ப்பும் அப்படி தெறிக்கும். அந்த உணர்வுகளை தபலா உருட்டி உருட்டிப் பரிமாறும்.

கண்ணன் மொழி கீதை என்றுஎனும் மூன்றாம் சரணத்திலும் தபலா அபாரமான கதியில் ஒலித்துக் கொண்டிருக்கும். பாடல் முழுவதும், தீபமன்றோ என்ற சொல்லை ஒவ்வொரு முறையும் ஒவ்வொரு வகையில் துயரப்பெருக்கின் வலியாகக் கடத்தி இருப்பார் பாலு. பிரசாத் அவர்களது வாசிப்பு பரிதவிப்பின் பேச்சு மொழிபோலவும், வேதனையை ஆற்றுப்படுத்தும் மாயா ஜாலமாகவும் ஒரே நேரத்தில் ஒலிவடிவெடுக்கிறது.

பிரசாத் உள்ளத்தில் இன்னும் மறவாத மற்றொரு பாடலாக, நான் அவனில்லை திரைப்படத்தின் புகழ் பெற்ற, ராதா காதல் வராதா பாடல். அதுவும் கண்ணதாசன் அவர்களது பாடல் தான்.  1970களின் குரலில் பாலுவை இப்போது கேட்டாலும், அவரது மகத்தான சாதனையின் எளிய காரணம், அவரது இசை ஞானம், அர்ப்பணிப்பு, அபார உழைப்பு என்பதாக விரிகிறது. எம் எஸ் வி அவர்களது அருமையான இசைக்கோவை அந்தப் பாடல். தபலாவின் மந்திர விசையை உருகியுருகிக் கேட்டுக் கொண்டே இருக்கவைக்கும் பாடல்





பாடல் முழுக்க மெல்லிசை மன்னர் கோரஸ் குரல்கள், ஏற்ற இசைக்கருவிகள், தாள லயம் அத்தனை அம்சமாகப் படைத்திருப்பார்.பாடலின் திறப்பே, ‘ ஹரே நந்த ஹரே நந்த ஹரே நந்த ஹரே ஹரேஎன்ற கோரஸ் வளர்ந்து, டிரம்ஸ் ஆர்கெஸ்ட்ரா தாள லயத்தில்கோகுல பாலா கோமகள் ராதாஎன்று பெருகியோடி நிற்குமிடத்தில், ‘ஹே ராதா….’ என்று எடுக்கும் எஸ்பிபி அவர்களது ஆலாபனை விவரிப்பும் இந்துஸ்தானி பாணி தான் என்று தோன்றுகிறது. (இதெல்லாம் கற்றுக் கொண்டிருந்தால் சிறப்பாக இருந்திருக்கும்).

 ‘ராதா காதல் வராதாஎன்ற சொற்களில் போதையேற்றிக் கொண்டே இருப்பார் பாடல் முழுவதும் பாலு. அதுவும், காதல் என்பதில் முதல் எழுத்தானகாஅத்தனை கிறக்கத்தில் வந்து விழும். ‘நவ நீதன் கீதம் போதை தராதாஎன்பது ஒரு ஜோர் எனில், ‘ராஜ லீலை தொடராதாஎன்பது இன்னொரு வகை ஜோர்

சரணத்தை நோக்கிய கொண்டாட்டத்திலும் கோரஸ் குரல்கள், டிரம்ஸ் தாள லயம். அதைப் பற்றி வாங்கிக் கொள்ளும் சிதார் இசையும், அதன் உயிர்த் தோழன் தபலா, தோழி ஷெனாய், புல்லாங்குழலும் வளர்த்தெடுக்கும் இசையைப் பின்னர் வயலின் மென்மையாகக் கைமாற்றிக் கொண்டு தருகிறது எஸ் பி பி யிடம்

அவர் தொடங்குகிறார், ‘செம்மாந்த மலர் சூடும் பொன்னார்ந்த குழலாளைத் தாலாட்டும் புல்லாங்குழல்என்று. அங்கே அதை ஆமோதிக்கும் குழலிசை கேட்போரை எல்லாம் காதலர்களாக மாற்றிவிடுகிறது.  ‘செந்தூர நதியோடும் செவ்வாயின் இதழோரம் கண்ணா உன் காதல் கடல்என்று நிறுத்தும் இடத்தில், தபலா நடத்தும் சொற்பொழிவு எங்கோ கொண்டு சென்றுவிடும். அடுத்துவரும் சிருங்கார வரிகளை, பாலுவின் தாபமிக்க குரல்களில் கேட்டுத் திணறத்தான் வேண்டும், விவரித்து என்ன ஆகப்போகிறது! ‘சுகம் என்ன சொல்லடி ராதா, ராதாஎன்ற இடத்தை அசாத்திய கற்பனை உள்ள பாடகரால் தான் வண்ணம் தோய்த்துப் பாட முடியும்

மீண்டும் கோரஸ் நுழைந்து விடுகின்றனர். கோலாட்டக் கும்மியாட்ட உணர்வுகளின் வேக வேக தாளகதியில் இசைக்கருவிகள் கொஞ்சிக்கொண்டே செல்ல, ஷெனாய் வாத்தியத்தின் மோகப் பிடிமானம் பிடித்து, ‘மந்தார மழை மேகம் நின்றாடும் விழி வண்டு கொண்டாடும் இசை என்னடிஎன்ற இடத்திலும் பாலு அத்தனை காதல் போதையை ஊட்டுகிறார். ‘மார்கழி ஓடை போலொரு வாடைதொடர்ந்துஎன்னிடம் ஏனடி ராதாஎன்ற இடத்தில் தனது முத்திரை சிரிப்பும் தாளக்கட்டுக்குள் தீப்பொறி போல் பற்ற வைக்கிறார் பாலு. அத்தனை ஒயிலாகவும், மயக்கமாகவும் ஒலிக்கும் ஜாலக்குரல் பாடல் முழுவதும். தாள வாத்திய கொண்டாட்டத்திற்கு, பிரசாத் அவர்களது  கைவிரல்களை எத்தனை கொண்டாடினாலும் தகும்.

இப்போது வருவோம் ரவீந்திர சங்கீத் இசைக்கு!  1905ல் பிறந்த அற்புத இசைக் கலைஞர் பங்கஜ் மல்லிக் அவர்களைப் பற்றிய குறுங்கட்டுரை இரண்டு வாரங்களுக்குமுன் தி இந்து ஆங்கில நாளிதழின் வெள்ளிக்கிழமை இணைப்பில் வந்திருந்தது. திரை இசையில் எத்தனையோ முதல் விஷயங்கள் சாதித்த அந்த அபார மனிதரைப் பற்றிய தகவல்களில் முக்கியமானது தபலா பற்றியது!

Music Life Series Of Cinema Music (Pankaj Mullick And Tabala Prasad) Article by Writer S.V. Venugopalan. Book day , Bharathi Puthakalayam
பங்கஜ் மல்லிக் (Pankaj Mullick)

https://www.thehindu.com/entertainment/music/pankaj-mullick-pioneer-of-indian-film-music/article35603953.ece

ரவீந்திர சங்கீதத்திற்கு தபலா தாளக்கட்டு சேர்த்து இசைக்கும் முயற்சியை முதன்முதல் செய்தவர் பங்கஜ் தான்இந்துஸ்தானி இசையின் த்ருபத், கயல், தப்பா வடிவங்களில் தேர்ச்சியான பயிற்சி பெற்றுக் கொண்டபின், கவி ரவீந்திரநாத் தாகூர் அவர்களது நெருங்கிய உறவினரான தினேந்திரநாத் தாகூர் அவர்களோடு தற்செயலாக ஏற்பட்ட இசையார்ந்த நட்பை அடுத்து, ரவீந்திர சங்கீதத்தில் ஆர்வம் கொள்கிறார்  அதைத் தனது உயிர் மூச்சாகக் கொள்கிறார்அவர் அதில் செலுத்திய கற்பனைகளின் இசை விளைவுகளை அறிந்த தேசிய கவி தாகூர் அவரை அழைத்துக் கொண்டாடுகிறார். பதின்ம வயதுகளில் தான் இருந்திருக்க வேண்டும் பங்கஜ் அப்போது, எத்தனை அரிய பேறு ! அப்போதுதான், தபலாவை பக்கவாத்தியமாகக் கொண்டு ரவீந்திர சங்கீதம் இசைக்கும் பரிசோதனையில் வெற்றி பெறுகிறார் பங்கஜ் மல்லிக்

தீபா கணேஷ் அவர்களது ஆய்வுக்கட்டுரை, இரத்தினச் சுருக்கமாகப் பல வரலாறுகளை உள்ளடக்கி இருக்கிறது. வானொலி சாதனம் இந்தியா வந்தடைந்தபோது, அந்த வாய்ப்பைப் பற்றிக் கொண்ட பங்கஜ் மல்லிக், 45 ஆண்டுகள் வான்வழி இசைப் பயிற்சி வழங்கி இருக்கிறாராம். 1931ல் கொல்கத்தா வானொலி நிலையத்திற்குத் தற்செயலாகச் சென்ற இன்னொரு மகத்தான கலைஞரைக் குரல் பரிசோதனை செய்யும் பொறுப்பு அவருக்கு வாய்த்திருக்கிறது. அப்போது ஏற்பட்ட பிணைப்பில், இந்த இணையர் பின்னர், மறக்க முடியாத பாடல்களை வழங்கினர் என்கிறார் தீபா. அந்த மனிதர் கே எல் சைகல்

அதுமட்டுமல்ல, பங்கஜ் மல்லிக், வேறொரு முக்கிய மாற்றத்தைத் திரை இசையில் கொண்டுவரக் காரணமாக இருந்தவர். 1935ல் இரண்டு திரைப்படங்களுக்கு இசை அமைக்கையில், ஒத்திகைகள் செய்து பார்ப்பதிலேயே களைத்துப்போய் விட்ட நடிகர்கள் காமிரா முன் ஆடிப் பாடுகையில் சோர்ந்து போய் சரியாக வராமல் போயிருக்கிறது. இசையமைப்பதில் ஈடுபட்டிருந்த பங்கஜ் மல்லிக், ஆர் சி போரல் எனும் புகழ் பெற்ற இசையமைப்பாளர் மற்றும் ஹாலிவுட் சவுண்ட் என்ஜினீயர் டெம்மிங் மூவரும் சேர்ந்து ஒரு புதிய ஆலோசனை முன்வைத்தனர். அதன்படி, பாடல்களை முன் கூட்டியே இசையமைத்து, அதை ஷூட்டிங் நேரத்தில் ஓடவிட்டு நடிகர்களை இயக்கிப் படங்கள் எடுப்பது என்பது. முதல் பாடகர்நடிகராக பங்கஜ் நடித்துத் தானே இசையும் அமைத்த படம் முக்தி. வெளியான ஆண்டு 1937.  தாகூரின் கவிதை இசை வடிவில் முதலில் பயன்படுத்தப்பட்ட படமாகவும் அது அமைந்ததாம்

“…. ஆர் ரஹ்மான் அவர்களதுசைய்யச் சைய்யகேட்டிருப்பீர்கள், என் தாத்தா பங்கஜ் மல்லிக், அந்தக் காலத்திலேயே டாக்டர் படத்திற்காக ரயிலோடும் ஓசையை இசையில் கொணர்ந்தவர்என்று பங்கஜ் மல்லிக் அவர்களது 115வது பிறந்த நாள் நிகழ்ச்சியில் பேசி இருந்தாராம் பேரன் ராஜீப் குப்தா.  

திரையிசையில் ஹார்மோனியத்தைக் கடந்து பியானோ நுழைந்தது முதல் மேற்கத்திய கருவிகளின் இசை கலந்ததில் பங்கஜ் அவர்களது பங்களிப்பு மகத்தானது என்று சொல்லப்படுகிறது

வேயின் குழலோடு வீணை முதலா மனிதர்
வாயினிலும் கையாலும் வாசிக்கும் பல்கருவி 

என்றார் மகாகவி. தமது நேர்காணல் ஒன்றில், தபலா கலைஞர் பிரசாத் சொல்கிறார், மனிதர்கள் வாசிக்கும் கருவிகளின் இசை தான் கொண்டாட்டமானது, கீ போர்டில் எல்லாக் கருவிகளையும் ஒலிக்கவைப்பது அத்தனை சுவாரசியம் அற்றதுவல்லினம், மெல்லினம் எல்லாம் தனித்துவமாக ஒலிக்குமா எந்திரத்தில் என்று கேட்கிறார் பிரசாத்!

காசு, பிழைப்பு, பெயர், புகழ், பாராட்டு இவற்றுக்கு அப்பாற்பட்ட அர்ப்பணிப்பு மிக்க மனிதர்கள் இசையே வாழ்க்கையாக வாழ்வதன் இசை தான் நம்மை வாழ்விக்கிறது. தாள லயம் பிசகாத வாழ்க்கைக்கு இசை பின்னணியாக அமைகிறது. அப்படியான வாழ்க்கை முன்னணியில் நிற்க வேண்டியது.

 

(இசைத்தட்டு சுழலும் ….)

மின்னஞ்சல் முகவரி: sv.venu@gmail.com

முந்தைய கட்டுரைகள் படிக்க: 

இசை வாழ்க்கை 41: இராத்திரிக்குத் தூங்க வேணும் பாடிக்கிறேன் கொஞ்சம்…. – எஸ் வி வேணுகோபாலன்

இசை வாழ்க்கை 42: ஆடிப் பாடி எழுத வந்தால் அலுப்பிருக்காது – எஸ் வி வேணுகோபாலன்

இசை வாழ்க்கை 43: தனியாகப் பாடிடும் சந்தோஷம் தந்தாய் இசையே இசையே..! – எஸ் வி வேணுகோபாலன்

இசை வாழ்க்கை 44: இது அவள் தந்த பாடலடி, வெண்ணிலாவே..! – எஸ் வி வேணுகோபாலன்

இசை வாழ்க்கை 45: இசையை அணைத்துச் செல்வோம் – எஸ் வி வேணுகோபாலன்

இசை வாழ்க்கை 46: எனக்கொரு காதலி இசைக்கின்றாள்  – எஸ் வி வேணுகோபாலன் 

இசை வாழ்க்கை 47: எல்லாம் எதற்காக நமக்குக் கொண்டாடும் இசைக்காக – எஸ் வி வேணுகோபாலன்

இசை வாழ்க்கை 48: யாரோடு யாரோ இசை யார் பாடுவாரோ – எஸ் வி வேணுகோபாலன்

இசை வாழ்க்கை 49: பண்ணுக்குள் பொத்தி வைத்தேன்- எஸ் வி வேணுகோபாலன்

இசை வாழ்க்கை 50: என்னென்பேன் இசை ஏடென்பேன்எஸ் வி வேணுகோபாலன்

Music Life Series Of Tamil Cinema Music Article by Writer S.V. Venugopalan. Book day website is Branch of Bharathi Puthakalayam

இசை வாழ்க்கை 50: என்னென்பேன் இசை ஏடென்பேன் 

எஸ் வி வேணுகோபாலன் ஐம்பதாவது கட்டுரை வாசிக்கும் அனைவருக்கும் அன்பு வணக்கங்களும், நன்றியும் ! ஓர் இணைய தளத்தில் தொடர்ச்சியாக ஒரு கலந்துரையாடல் போல் இந்தக் கட்டுரைத் தொடர், ஐம்பது வாரங்கள் வந்திருப்பது, உண்மையிலேயே கையில் கிள்ளிப் பார்த்துக் கொள்ள வேண்டிய…
Music Life Series Of Tamil Cinema Music Article by Writer S.V. Venugopalan. Book day website is Branch of Bharathi Puthakalayam

இசை வாழ்க்கை 49: பண்ணுக்குள் பொத்தி வைத்தேன் 

எஸ் வி வேணுகோபாலன் தந்தையைப் பற்றிய இசை நினைவலைகள் வாசித்த என் மைத்துனியின் கணவர் தோழர் நடராஜன், 'உங்கள் அப்பா பாடல் பாடிய ஆடியோ கிடைக்குமா?' என்று வாட்ஸ் அப்பில் கேட்டிருந்தார். சட்டென்று பதில் சொல்ல இயலாத ஏக்கம் சூழ்ந்தது. அப்போது…