Dujak Dujak Oru Appavin Diary Book By Theni Sundar BookReview By Sa Ka Muthukannan நூல் அறிமுகம்: தேனி சுந்தரின் டுஜக் டுஜக் ஒரு அப்பாவின் டைரி - சக.முத்துக்கண்ணன்

நூல் அறிமுகம்: தேனி சுந்தரின் டுஜக் டுஜக் ஒரு அப்பாவின் டைரி – சக.முத்துக்கண்ணன்




நூல்: டுஜக் டுஜக் ஒரு அப்பாவின் டைரி 
ஆசிரியர்: தேனி சுந்தர்
வெளியீடு: பாரதி புத்தகாலயம்
விலை: 100
புத்தகம் வாங்க இங்கு க்ளிக் செய்யவும்: thamizhbook.com

கவிதைக்கென்ன இலக்கணம்? மண்ணாங்கட்டி இலக்கணம்! எதையும் மீறுவதும், உடைத்துப் பார்ப்பதும் தானே நவீனம். மழலைச் சொற்களை விடப் பெரிதா கவி?

இலக்கியத்தில் மட்டுமல்ல. உலகில் வரையறுக்கப்பட்ட எந்தவொன்றும் குறிப்பிட்ட காலம் வரைதான். அப்புறம் ஊறி உப்பிச் சிதறிவிடும். அப்படி செய்து வைத்திருக்கும் விதிகளை, சடங்குகளை உடைத்து காட்டுகிறது சுந்தரின் எழுத்து.

குழந்தைகளோடு குழந்தையாக உடன் கிடந்து களித்த அப்பாவின் அனுபவங்கள் தான் நூல் முழுக்க. அப்பா ஆசிரியராகவும் இருப்பதால் நமக்கு இன்னும் நெருக்கமாகி விடுகிறது. ஒரு ஆசிரியராக நாம் கற்க இதில் இடமிருக்கிறது.

இசைக்குறிப்புகள் போல குழந்தைகளின் குரல்களை அப்படியே தந்திருக்கிறார்.

இத்தனை மெல்லோசைகளுக்கும் ஊடாக ஆண் என்கிற கூறு குழந்தைகளுக்குள் மெல்ல முளைப்பதை நுண்மையாக உணரமுடிகிறதே..! அதுவேறொன்றுமில்லை நம் மரபுதான். தமிழ்ச்செல்வன் தோழர் சொல்வதைப் போல ‘என்னயறிமலேயே என் ஆண் மனோபாவம் வெளிப்பட்டிருக்கலாம்’.

டார்வினின் மொழி சில இடங்களில் ஓங்கி நிற்கின்றது. புகழ்மதி அதற்குள் அடங்குகிறாள். அப்பாதான் திருத்தி எழுதியிருக்க கூடும். ‘அடப் போடா லூசு’ என மகள் எகிறியடிக்க. ‘மறுத்துப் பேசு மகளே’ என சுந்தர் மெல்ல தூண்டுகிறார்.

ஊரடங்கு காலம் ஆயிரமாயிரம் துயர நினைவுகளைக் கொண்டிருந்தாலும், சுந்தருக்கு படைப்பு மனதை தந்திருக்கிறது. என்ன செய்ய வீட்டுக்குள் கால்கள் அடங்கி உக்காரும் போதுதான் ஒரு களச் செயல்பாட்டாளனுக்கு இன்னொரு கண் திறக்கிறது. வாரம் ஒரு நாளைக்கூட ஒதுக்க முடியாமல் ஒடும் தோழர்களே!.. இக்கவிச்சொற்கள் உங்கள் குழந்தைகளின் குரல்களாக நின்று உங்களை எச்சரிக்கின்றன. அவர்களுக்காக நேரம் ஒதுக்குங்கள்; கேள்விகளுக்கு காது கொடுங்கள்;

றெக்கை முளைத்து பறக்கும் கேள்விகள் – பக்கந்தோறும் நின்று பாடமெடுக்கின்றன நமக்கு. இந்த வகையில் எனக்கு ஒரு ஐ ஓப்பனராக சுந்தர் இருக்கிறார். சுந்தரோடு ஒப்பிடும் போது நான் எனது மகள் வெண்பாவிடம் உரையாடிது ரொம்பக் கம்மி.

சுந்தர் அடுக்கி எழுதிய சொற்கள் யாவும்…ஒளிப்புள்ளிகளாகத் தெரியும் சின்னச் சின்ன துவாரங்கள். நாம் தான் நெருக்கத்தில் கண்ணை வைத்துப் பார்க்க வேண்டும். எனக்கு அச்சிறு துவாரத்தின் வழி பெரிய வானம் தெரிகிறது.

தினசரி நாம் பார்க்கும் அதே வானம்தான். ஆனால் நாம் கவனிக்கத் தவறிய நட்சத்திரங்களை இந்நூலில் வரைந்து வைத்திருக்கிறார் சுந்தர். எத்தனை நட்சத்திரங்கள்? எத்தனை ஜொலி ஜொலிப்புகள்?

வாழ்த்துகள் சுந்தர். தொடர்ந்து எழுதுங்க.