ச.சுப்பாராவ் எழுதி பாரதி புத்தகாலயம் (Bharathi Puthakalayam) வெளியிட்ட விரலால் சிந்திப்பவர்கள் (Viralal Sindhippavarkal) - நூல் அறிமுகம்

நூல் அறிமுகம்: விரலால் சிந்திப்பவர்கள்

சிறந்த சிறுகதை எழுத்தாளர், சிறந்த மொழிபெயர்ப்புக்கான பல விருதுகளைப் பெற்றுள்ளவர், தற்சமயம் மதுரையில் ஆயுள் காப்பீட்டுத் துறையில் பணியாற்றி வருபவர், "நிகழ்ந்து போவதே எழுதப்பட்ட வரலாறு", "இந்திய பொருளாதார தேசியத்தின் தோற்றமும் வளர்ச்சியும்", "உலக மக்களின் வரலாறு" உள்ளிட்ட பல நூல்களை…
Kaala Paani Novel By M Rajendran Novelreview By S Subbarao. நூல் அறிமுகம்: டாக்டர். மு. ராஜேந்திரனின் காலா பாணி - ச.சுப்பாராவ்

நூல் அறிமுகம்: டாக்டர். மு. ராஜேந்திரனின் காலா பாணி – ச.சுப்பாராவ்



காலா பாணி

பத்து பதினைந்து ஆண்டுகளுக்கு முன், வரலாறு குறித்த பாரதி புத்தகாலயத்தின் ஒரு சிறு வெளியீட்டில் ஒரு முக்கியமான விஷயத்தைப் படித்தேன். நமக்கு காய்ச்சல், வயிற்றுப் போக்கு என்றால் மருத்துவர் வெளியூர் சென்றீர்களா? கடந்த  2- 3 நாட்களில் வெளியில் சாப்பிட்டீர்களா? என்ன சாப்பிட்டீர்கள் ? என்று கேட்கிறார். இன்னும் சில நாள்பட்ட நோய்களுக்கான சிகிச்சைக்குப் போனால் கடந்த சில வருடங்களாக உங்கள் வேலை, உணவுப் பழக்கம், தூக்கம் போன்ற விபரங்கள் தேவைப்படுகின்றன. சர்க்கரை நோய் போன்ற நோய்களுக்கு உங்கள் பெற்றோர், தாத்தா பாட்டிக்கு இந்த நோய் இருந்ததா என்ற பழைய கதை தேவை. எனவே தனி மனிதனின் நோயைத் தீர்க்க அவனது பழைய வரலாறு அவசியம்.

சமூகத்தின் நோயைத் தீர்க்க சமூகத்தின் பழைய வரலாறு அவசியம் என்று அந்த நூலாசிரியர் சொல்லியிருப்பார்.  நான் அதற்கு முன்பிருந்தே வரலாற்று நூல்களை மிக ஆர்வமாகப் படிப்பேன் என்றாலும், மேற்சொன்ன கருத்தைப் படித்த பிறகு கூடுதல் அக்கறையோடும், கவனத்தோடும் வரலாற்று நூல்களைத் தேடித் தேடிப் படிக்க ஆரம்பித்தேன். அப்படியான தேடலில் சமீபத்தில் கிடைத்தது தான் டாக்டர்.மு.ராஜேந்திரன், இ.ஆ.ப அவர்கள் எழுதியிருக்கும் காலா பாணி என்ற வரலாற்று நாவல்.

இந்திய விடுதலை இயக்கத்தின் துவக்கப் புள்ளியாக இருந்தது கட்டபொம்மன், மருதுபாண்டியர்களின் வீரம் செறிந்த எதிர்ப்பியக்கங்கள்தான்.  ஏற்கனவே டாக்டர் ராஜேந்திரன் அந்த வீர வரலாற்றை 1801 என்ற நாவலாக எழுதியிருக்கிறார். அது பரவலான கவனத்தையும் பெற்றது. மருது சகோதரர்களுடம் 512 பேரை ஒரே நாளில் தூக்கிலிட்ட கிழக்கிந்தியக் கம்பெனி சிவகங்கை அரசர் வேங்கை பெரிய உடையணத் தேவன், சின்ன மருதுவின் புதல்வன் 12 வயது சிறுவன் துரைசாமி உட்பட 73 பேரை நாடு கடத்தியது. பிரிட்டிஷ் இந்திய வரலாற்றில் நாடுகடத்தப்பட்ட முதல் அரசர் னஉடையணத் தேவன்தான்.  இப்படி நாடு கடத்தப்பட்டவர்களை கம்பெனி காலா பாணி என்ற குறிப்பிட்டது.

காலா பாணிகள் 11.02.1802 அன்று தூத்துக்குடி துறைமுகத்திலிருந்து கிளம்பி 66 நாட்கள் பயணத்தில் பினாங்கு வந்து சேர்கிறார்கள். இதில் உடையணத் தேவன் மட்டும் பிரி்ககப் பட்டு மால்பரோ கோட்டையில் சிறை வைக்கப்படுகிறார்.  19.09.1802 தனது முப்பத்திநான்காவது வயதில் தனிமைச் சிறையில் இறந்து போகிறார் உடையணத் தேவன். அந்தக் கண்ணீர்க் கதைதான் காலா பாணி. இந்தியாவின் முதல் சுதந்திர எழுச்சி தமிழகத்திலிருந்து தான் துவங்கியது என்பதை மிக ஆதாரபூர்வமாக நிறுவும் படைப்பு.  படைப்பிற்கு உதவிய துணைநூல்களின் பட்டியலைப் பார்த்தாலே தெரியும்.

கிழக்கிந்தியக் கம்பெனியின்  ஏராளமான ஆவணங்களை ஆராய்ந்து எழுதப்பட்ட நாவல். ஆனால் இன்று வந்து கொண்டிருக்கும் பல டாக்கு ஃபிக்ஷன் போல் கூகுள் செய்து உட்கார்ந்த இடத்திலிருந்து எழுதப்பட்டதல்ல.  உடையணத் தேவனின் மதுரை சக்கந்தி அரண்மனையிலிருந்து, பினாங்கு, பென்கோலன் என்று உடையணத் தேவனின் அந்த இறுதிப்பயண இடங்கள் அனைத்திற்கும் நேரில் சென்று ஆய்வு செய்திருக்கிறார். கட்டபொம்மன், உடையணத் தேவன் போன்றோரின் இன்றைய வாரிசுகளிடம் நேர்காணல் செய்திருக்கிறார். உடையணத்தேவனின் வாளைக் கையில் ஏந்திப் பார்த்திருக்கிறார்.  கள ஆய்வு ஒரு நாவலுக்கு எந்த அளவு முக்கியம் என்பதை, அதுதான் நாவலின் வெற்றியைத் தீர்மானிக்கிறது என்பதைக் காட்டும் நாவல்.

காலா பாணி அன்றைய கிழக்கிந்தியக் கம்பெனி காலத்து தமிழகம், தமிழகம் மட்டுமல்ல,  அன்றைய  உலகம் பற்றிய ஒரு விரிவான சித்திரத்தைத் தருகிறது. பிரான்ஸில் பிரெஞ்சுப் புரட்சியின் சிறைத் தகர்ப்பை அறிந்து அதைப் போல கோயம்புத்தூரில் ஒரு சிறை உடைப்பை போராளிகள் நடத்துகிறார்கள் என்பது வியப்பாக இருக்கிறது. சோஸ் லெப்டினென்ட், ஆப்காரி காண்ட்ராக்டர், மிஸ்தீஸ், பேஷ்குஷ் கலெக்டர், இஸ்திமிரார் என்று எத்தனை எத்தனை புதுப் புது வார்த்தைகள் ! கம்பெனி பதவிகள், அதிகாரப் படிநிலைகள், அலுவலக நடைமுறைகள், எந்தப் பதவியில் உள்ளவர் வரும் போது எத்தனை குண்டு முழங்க வரவேற்க வேண்டும் என்பது போன்ற சம்பிரதாயங்கள், அன்றைய மருத்துவ முறைகள், பானர்மேனின் சமாதி பினாங்கில் இருப்பது, என்று ஏராளம் ஏராளமான தகவல்கள். 

துலுக்கப் பெண்ணை சாகிபா என்றும், மலாயா பெண்ணை நயோன்யா என்றும், மராட்டிய பெண்ணை மாதுஸ்ரீ அல்லது பாயி சாகேப் என்றும். வெள்ளைக்காரியை மேம் சாகிபா என்றும், பிரெஞ்சுக்காரியை மதான் என்றும் தமிழ் பெண்ணை நாச்சியார் என்றும் அழைக்க வேண்டும் என்ற ஓரிடத்தில் ஒரு படை வீரன் சொல்கிறான். இந்தியாவைச் சுற்றியுள்ள சின்னச் சின்னத் தீவுகளில் கம்பெனியின் ஆட்சி, அங்கு அடிமையாகவும்,  கைதியாகவும் போய் வாழ்நாள் முழுதும் துன்பத்தில் உழலும் தமிழர்கள், சந்தர்ப்பவசத்தால் சற்றே வசதியான வாழ்க்கை கிடைக்கப் பெற்றவர்கள், அவர்கள் தம் சக தமிழர்களுக்குச் செய்யும் மிகச் சிறிய உதவிகள் எல்லாமே மிகையின்றிச் சொல்லப்பட்டுள்ளன.

ஆனால் நாவலில் ஆடம்பரமான மொழிநடை, வர்ணனைகள் எதுவும் கிடையாது. இயல்பான மொழி. ஆசிரியர் தனது மொழித் திறமையைக் காட்ட வேண்டும் என்று எந்த இடத்திலும் வலிந்து மிகையாக எதையும் எழுதவில்லை. ஆனாலும், பெரிய உடையணத் தேவன் தன் சகாக்களோடும்,  கம்பெனி அதிகாரிகளோடும் கையறு நிலையில் பேசும் போது எனக்கு கண் கலங்குகிறது. அதுவும் அந்த கடைசி மூன்று பக்கங்கள்….

அன்றாடம் நான்  பெரியார் பேருந்து நிலையத்திற்கு எதிரே மதுரையின் கோட்டையின் மிச்சத்தைப் பார்ப்பேன். என் மதுரைக் கோட்டை என்று என்னையறியாமல் பெருமிதம் கொள்வேன். நாவலைப் படித்து முடித்த அன்று அந்தக் கோட்டை மதிலைப் பார்த்த போது அந்த பெருமிதம் இல்லை. நாடு கடத்தப்பட்ட உடையணத் தேவனைக் கடைசியாகப் பார்ப்பதற்காக அந்தக் கோட்டை வாசலில் நின்று அவரது மனைவி மருதாத்தாள் கெஞ்சிக் கதறியதும், காவலன் அவளை விரட்டி விட்டு கோட்டைக் கதவை இழுத்து மூடியதும் தான் கண்முன் நின்றன. முதன் முறையாக என் மதுரைக் கோட்டை மதிலைப் பார்த்து நான் கண்கலங்கி நின்றேன்.

பழைய வரலாற்றைச் சொல்வதன் வழியே,  இன்றும் நாம் கைவிடக் கூடாத ஏகாதிபத்திய எதிர்ப்பை ரத்தமும், சதையுமாகச் சொல்லிய டாக்டர்.மு.ராஜேந்திரன், இ.ஆ. ப அவர்களின் கரம் தொட்டு வணங்கி வாழ்த்துகிறேன்.

நூல்: காலா பாணி
ஆசிரியர்: டாக்டர். மு. ராஜேந்திரன், இ.ஆ.ப
வெளியீடு: அகநி வெளியீடு
விலை: ரூ650.00
பக்கம்: 536

Ooradangu Utharavu Book By P.N.S.Pandiyan Bookreview Sa. Subbarao நூல் அறிமுகம்: பி.என்.எஸ்.பாண்டியனின் ஊரடங்கு உத்தரவு புதுச்சேரி அரசியல் போராட்ட வரலாறு - ச. சுப்பாராவ்

நூல் அறிமுகம்: பி.என்.எஸ்.பாண்டியனின் ஊரடங்கு உத்தரவு புதுச்சேரி அரசியல் போராட்ட வரலாறு – ச. சுப்பாராவ்



புதுச்சேரி அரசியல் போராட்ட வரலாறு

வரலாற்றை எழுதுவது மிகவும் சிரமமான வேலை. மிகப் பழங்காலத்து வரலாறு என்றால் அது குறித்து போதிய தகவல்கள் கிடைக்காது. கிடைக்கும் தகவல்களை எந்த அளவு நம்புவது, நம்பாமல் இருப்பது என்பதும் மற்றொரு பிரச்சனை. சமீபத்திய வரலாற்றை எழுதுவதில் வேறுவிதமான பிரச்சனை வரும். ஏராளமான தரவுகள் கிடைக்கும். எதை எடுத்துக் கொள்வது, எதை தள்ளுவது என்பது பிரச்சனையாக இருக்கும். மற்றொன்று சமீபத்திய வரலாறு எனும் போது அந்த நிகழ்ச்சியில் பங்கேற்றவர்களே சிலர் இன்னும் நம்மிடையே இருக்கக் கூடும்.

நேரில் பார்த்தவர்கள், அது குறித்து படித்து அறிந்தவர்கள், சொல்லக் கேட்டவர்கள் என்று ஏராளமான ஆட்களின் நினைவுகளில் அந்த வரலாற்று நிகழ்வு பசுமையாகப் படிந்திருக்கும். அதை ஆவணப்படும் போது மிக மிக அதிகமான கவனம் தேவைப்படும். அப்படி மிகக் கவனம் எடுத்து ஆவணப்படுத்தும் வரலாற்று நூல்களே இன்றைய தலைமுறைக்கும், எதிர்காலத் தலைமுறைக்கும் வரலாற்றை எடுத்துச் சொல்லும் வாயில்களாக நிற்கின்றன. அத்தகையதொரு நூலை சமீபத்தில் படிக்க நேர்ந்தது ஒரு இனிய அனுபவம். செய்தியாளர் பி.என்.எஸ்.பாண்டியன் அவர்கள் எழுதிய ஊரடங்கு உத்தரவு என்ற நூல்தான் அது.

புதுச்சேரி தமிழகத்தோடு ஒட்டிக் கொண்டுதான் இருக்கிறது. ஆனால் தமிழ்நாட்டினருக்கு புதுச்சேரி என்றால் மிக மேலோட்டமாக பாரதியார், அரவிந்தர், மது, கேபரே என்று ஒரு சில விஷயங்கள் மட்டுமே நினைவிற்கு வரும். புதுச்சேரி பற்றி பெரிதாக அக்கறை காட்டாத தமிழர்களுக்கு இந்தப் புத்தகம் சொல்லும் வரலாற்றுச் செய்தி மிக வியப்பானதாகக் கூட இருக்கும்.

1979ல் பிரதமர் மொரார்ஜி தேசாய் புதுச்சேரியை தமிழகத்தோடு இணைக்க விரும்புவதாக சொல்லப் போக, புதுச்சேரி முழுவதும் அரசியல் வேறுபாடு கடந்து அதற்கு எதிராகப் போராட்டம் நடக்கிறது. ஊரடங்கு உத்தரவு, துப்பாக்கி சூடு என்று பெரிய அளவில் நடக்கும் போராட்டம் பத்து நாட்கள் கழித்து மொரார்ஜி தான் கூறியதைத் திரும்பப் பெற்றதோடு முடிகிறது.  இந்தப் போராட்ட வரலாற்றின் பதிவே இந்த 256 பக்க நூல்.

வெறும் பத்து நாட்களின் கதையாக இல்லாமல் புதுச்சேரியின் சுதந்திரப் போராட்ட வரலாறு,  அங்கு ஒவ்வொரு அரசியல் கட்சியும் வளர்ந்த விதம், புதுச்சேரிக்கும் பிரான்ஸிற்கும் உள்ள கலாச்சாரத் தொடர்பு, அதன் காரணமாக இன்றும் புதுச்சேரியில் நிலவும் ஒரு தனித் தன்மை கொண்ட கலாச்சாரம், அந்தக் கலாச்சாரம் குறித்து அந்த மக்களின் பெருமித உணர்வு, எல்லாவற்றையும் பதிவு செய்திருக்கிறார் பாண்டியன்.

இந்த நூலின் மிகப் பெரிய பலமே, எந்த சார்பு நிலையும் எடுக்காது உள்ளது உள்ளபடி அப்படியே வரலாற்றைப் பதிவு செய்திருப்பதுதான்.  போராட்டக் களத்தில் நின்று போராடிய பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களின் கூற்றுகள் அப்படியே பதிவாகி உள்ளன. புதுச்சேரி இணைப்பு தொடர்பாக நாடாளுமன்ற இரு அவைகளிலும் நடந்த விவாதங்கள், உள்துறை அமைச்சரின் பதில்கள் எல்லாம் அப்படியே பதிவு செய்யப்பட்டுள்ளன. பின்னிணைப்பாக உள்ள பிரெஞ்சிந்திய புதுச்சேரி – ஒரு பார்வை என்ற கட்டுரை மிக முக்கியமானது. பிரபஞ்சனின் முன்னுரையும், திருமாவேலனின் அணிந்துரையும் புத்தகத்திற்குள் நாம் நுழைய நம்மைத் தயார்படுத்துகின்றன.

நூலில் குறிப்பிடப்படும் இந்தப் போராட்டம் நடந்த காலத்தில் நூலாசிரியர் ஐந்து வயது சிறுவனாக இருந்திருக்கிறார். இந்தப் போராட்டம் குறித்து அவ்வப்போது கேள்விப்பட்டதை வைத்து மிக விரிவாக ஆய்வு செய்து இந்த நூலைப் படைத்துள்ளார்.  

ஒற்றைத் தலைமை, ஒற்றைக் கலாச்சாரம், இந்திய சமூகத்தின் பன்முகத் தன்மைகளை ஏற்க மறுப்பது போன்ற பல்வேறு மோசமான அம்சங்கள் தலைதூக்கும் இக்காலகட்டத்தில் இந்தியாவின் மிகச் சிறிய ஒரு யூனியன் பிரதேசத்தின் மக்கள் தமது தனித்தன்மைக்கு ஆபத்து வந்த போது அத்தனை வேறுபாடுகளையும் மறந்து ஒன்றுபட்டு போராடி, ஒன்றிய அரசின் பிடிவாதப் போக்கை மாற்றி, அதைப் பணியச் செய்த வரலாற்றைச் சொல்லும் இந்த நூல் கூடுதல் முக்கியத்துவம் பெறுகிறது.

 எழுத்தாளர் பிரபஞ்சனின் இறுதிநாட்களில் அவர் கூடவே இருந்து கவனித்துக் கொண்டவரான சிறந்த இலக்கியவாதியான பி.என்.எஸ்.பாண்டியன் இந்த நூலின் வழியே ஒரு சிறந்த வரலாற்று ஆய்வாளராகவும் உருவெடுத்திருக்கிறார். 

அவருக்கு எனது வாழ்த்துகள்.

நூல்: ஊரடங்கு உத்தரவு புதுச்சேரி அரசியல் போராட்ட வரலாறு
ஆசிரியர்: பி.என்.எஸ்.பாண்டியன்
வெளியீடு: வெர்சா பேஜஸ் வெளியீடு.
விலை: ரூ200. 00
பக்கங்கள்: 256

White Paper on Reading for 2021 by Sa Subbarao. 2021ற்கான வாசிப்பு குறித்த வெள்ளை அறிக்கை - ச. சுப்பாராவ்

2021ற்கான வாசிப்பு குறித்த வெள்ளை அறிக்கை – ச. சுப்பாராவ்




1.கடவு –திலீப்குமார்
2.முற்றுகை – வேலூர் சுரா
3.ஆரண்யம் – கயல்
4.அறியப்படாத மதுரை – ந.பாண்டுரங்கன்
5.விடுதலை வேள்வியில் மதுரை – ந.பாண்டுரங்கன்
6.நண்பர்கள் பார்வையில் ஏங்கெல்ஸ் – ச.சுப்பாராவ்
7.பாக்களத்தம்மா – புலியூர் முருகேசன்
8.திருவிழாக்களின் தலைநகரம் – சித்தர வீதிக்காரன்
9.குரலற்றவர்கள் – ஹரீஷ் குணசேகரன்
10.நந்தி நாயகன் – மங்களம் ராமமூர்த்தி
11.தட்டப்பாறை – முஹம்மது யூசுப்
12.இடபம் – பா.கண்மணி
13.ராஜவனம் – ராம் தங்கம்
14.இந்திய இலக்கிய சிற்பிகள் சுஜாதா – இரா.முருகன்
15.என் குருநாதர் பாரதியார் – ரா.கனகலிங்கம்
16.மோகனா –ஒரு இரும்புப் பெண்மணியின் கதை – S.மோகனா
17.இந்திய இலக்கிய சிற்பிகள் சங்கரதாஸ் சுவாமிகள் – அ.ராமசாமி
18.தமிழிசைத் தவமணி மதுரை மாரியப்ப சுவாமிகள் வரலாறு – சோழ.நாடன்
19. வாசிப்பு அறிந்ததும், அடைந்ததும் – ச.சுப்பாராவ்
20.ராணி மங்கம்மாள் – நா.பார்த்தசாரதி
21.ஒரு வாழ்க்கை சில சிதறல்கள் – ஜான்சிராணி
22.இந்தியப் பயணம் – ஜெயமோகன்
23.கலைமொழி – ரெ.சிவா
24.The night window – Dean Koontz
25.ஞாயிறு கடை உண்டு – கீரனூர் ஜாகீர்ராஜா
26.மதுரை கோவில்களும், திருவிழாக்களும் – டாக்டர் பி. ஆறுமுகம்
27.சினிமா எனும் பூதம் – R.P.ராஜநாயஹம்
28.The Lincoln lawyer – Micheal Connelly
29.பேரருவி – கலாப்ரியா
30.வெற்றிப்படிகள் – வானதி திருநாவுக்கரசு
31.இந்திய இலக்கிய சிற்பிகள் ஏ.கே.செட்டியார் – சா.கந்தசாமி
32.பி.ஆர்.எஸ்.கோபாலின் குண்டூசி சரித்திரமும், ஏடுகளும் – வாமனன்
33.யாத்வஷேம் – நேமி சந்த்ரா தமிழில் கே.நல்லதம்பி
34.The name of the game is Kidnapping – Keigo Higashino
35.The man who never was – Ewen Montagu
36.Mrs.விஸ்வநாதன் ரிச்சர்ட்ஸ் 1983 – 1920 – மலர் –விசு
37.Mistress of the game – Sidney Sheldon and Tilly Bagshawe
38.Salvation of a saint – Keigo Higashino
39. Nothing Ventured – Jeffrey Archer
40.Hidden in Plain Sight – Jeffrey Archer
41.எமர்ஜென்ஸி ஜே.பியின் ஜெயில் வாசம் – எம்.ஜி.தேவசகாயம் தமிழில் ஜே.ராம்கி
42.A Place Called Freedom – Ken Follett
43.A history of Sikhs voume I – Kushwant Singh
44.The greatest folk tales of Bihar – Nlin Verma
45.வேங்கையின் மைந்தன் – அகிலன்
46.கழுதைப்பாதை – எஸ்.செந்தில்குமார்
47.பத்தினிக்கோட்டம் பாகம் 1 – ஜெகச்சிற்பியன்
48.பத்தினிக்கோட்டம் பாகம் 2 – ஜெகச்சிற்பியன்
49.தீம்புனல் – ஜி.காரல் மார்க்ஸ்
50.புனைபாவை – இரா.முருகவேள்
51.இருபதாம் நூற்றாண்டில் மதுரை – முனைவர் அ.பிச்சை
52.தீக்கொன்றை மலரும் பருவம் – அபுபக்கர் ஆடம் இப்ராஹிம் தமிழில் லதா அருணாச்சலம்
53.அச்சமேன் மானுவவா – நாஞ்சில்நாடன்
54.ஆண்ட்ரூஸ் விடுதி அறை எண் ஏதுமில்லை – எஸ்.சுஜாதா
55.Personal Librarian – Maine Benedict and Victoria Christopher Murray
56.The Residence – Kate Andesen Brower
57.சில நெடுங்கதைகள் – யுவன் சந்திரசேகர்
58. மார்க்ஸ் சில தெறிப்புகள் – இரா.இரமணன்
59.. என் நண்பர் ஆத்மாநாம் – ஸ்டெல்லா புரூஸ்
60.உபசாரம் –சுகா
61.உலகில் ஒருவன் – குணா கந்தசாமி
62.கன்னி நிலம் – ஜெயமோகன்
63.மதுரை போற்றுதும் – ச.சுப்பாராவ்
64.நான் கண்ட உலகம் – ஜி.டி.நாயுடு
65.பழி – ஐயனார் விஸ்வநாத்ஸ
66.திகிரி –போகன் சங்கர்
67.கிறிஸ்தவ தமிழ்த்தொண்டர் – ரா.பி.சேதுப்பிள்ளை
68.ஒன்பது குன்று – பாவண்ணன்
69.சினிமா சீக்ரெட் பாகம் 4 – கலைஞானம்
70.A rhino in my garden – Conita walker
71.படைவீடு – தமிழ்மகன்
72.பிருந்தாஜினி – செந்தமிழினியன்
73.நகர்துஞ்சும் நள்யாமத்தில் செங்கோட்டு யானைகள் எடுத்துப் படித்த VIII தஸ்தாவேஜ்கள் – பாவெல் சக்தி
74.விடாமுயற்சி வெற்றி தரும் – ச.சுப்பாராவ்
75.கடல் பயணங்கள் – மருதன்
76.தவ்வை – அகிலா
77.தியாக உள்ளம் – விஷ்ணு பிரபாகர் தமிழில் சீதா திருமலை
78.யார் அறிவாரோ – மஹாபளேஷ்வர் ஸைல் தமிழில் இரா.தமிழ்ச்செல்வன்
79.சென்று போன நாட்கள் – எஸ்.ஜி. இராமாநுஜலு நாயுடு
80.அதிதி – வரத.இராஜமாணிக்கம்
81.நூல்கள் நூலகங்கள் நூலகர்கள் – சச்சிதானந்தன் சுகிர்தராஜா
82.Ex Libris – Confessions of a common reader – Anne Fadiman
83.மெட்ராஜ் 1726 ஸ்ரீ பெஞசமின் சூல்ட்சே தமிழில் க.சுபாஷிணி
84.கலகல வகுப்பறை – ரெ.சிவா
85.நீலத்தங்கம் – இரா.முருகவேள்
86.வினோபா – டி.டி.திருமலை
87.ஆதிவாசிகள் நிலத்தில் போன்சாய் – கயல்
88.Weird things customers say in bookshops – Jen Campbell.
89.மன்னன் மகள் – சாண்டில்யன்
90.ஓர் அன்னாடுகாச்சியின் சேலம் – விட்டல்ராவ்

மொத்த பக்கங்கள் – 20454, நாளொன்றுக்கு சராசரி பக்கங்கள் – 56 பட்டியலைப் பார்த்தால் ஆங்கிலத்தில் குறைவாகவும், தமிழில் அதிகமாகவும் படித்திருக்கிறேன். இந்த 90 புத்தகங்களில் அச்சுப் புத்தகங்கள் 57, மின்புத்தகங்கள் 33. நூலாசிரியர்கள் அன்போடு எனக்கு அனுப்பி வைத்தவை 11.

இவற்றில் நான் எதிர்பாராத வண்ணம் மிக அற்புதமாக இருந்தவைகளும் உண்டு. நான் எதிர்பார்த்த அளவிற்கு இல்லாமல் போனவையும் உண்டு. ஆனால் இரண்டு வகைகளுமே ஏதோ ஒரு புதிய செய்தியை எனக்குக் கற்றுக் கொடுக்கவே செய்தன.
Books that fascinated me at 2021 Collections By Sa Subbarao 2021ல் என் மனம் கவர்ந்த புத்தகங்கள் - ச.சுப்பாராவ்

2021ல் என் மனம் கவர்ந்த புத்தகங்கள் – ச.சுப்பாராவ்




2021ல் 100 புத்தகங்கள் வாசிக்க வேண்டும் என்று இலக்கு வைத்திருந்தாலும், எழுத்து வேலைகள், சொந்த வேலைகள் காரணமாக 90 தான் படிக்க முடிந்தது. அவற்றில் என் மனம் கவர்ந்த 20 புத்தகங்கள் பற்றிய குட்டிக் குட்டி அறிமுகம் இங்கே… இது தர வரிசையல்ல.. ஒன்றின் கீழ் ஒன்றாகத் தான் எழுத முடியும் என்பதால் வரிசை எண் தரப்பட்டுள்ளது. மற்றபடி எல்லாம் ஒவ்வொரு விதத்தில் சிறப்பானவை. 

1.ஞாயிறு கடை உண்டு – கீரனூர் ஜாகீர் ராஜா.
தஞ்சை என்றாலே பிராமணர்களும், கர்னாடக சங்கீதமும் என்பதாக ஒரு தோற்றம் எவ்வாறோ ஏற்பட்டுவிட்டது. தஞ்சையில் தவணைக்கு வீட்டு உபயோகப் பொருட்களைக் கொடுத்து, பணம் வசூலிக்கும் இஸ்லாமிய இளைஞர்கள், துணிக்கடைகளில் வேலை பார்க்கும் இஸ்லாமியப் பெண்கள் என தஞ்சையின் நாமறியாத ஒரு முகத்தைக் காட்டுகிறார் ஜாகீர்.

2.சினிமா எனும் பூதம் – R.P.ராஜநாயஹம்.
ஆசிரியர் பின்னட்டைக் குறிப்பில் சொல்லுவது போல, எந்தக் குறிப்புகளின் தேடலுமின்றி, முற்றிலும் அவரது ஞாபக அடுக்குகனை மட்டுமே கொண்டு, அறிந்த திரை ஆளுமைகள் பற்றிய அறியாத சுவாரசிய விஷயங்களை ஆவணப்படுத்தியிருக்கும் நூல். ராஜநாயஹம் தி.ஜானகிராமனின் பரமரசிகனாக, அசோகமித்திரனின் சீடனாக, ந.முத்துசாமியின் மாணாக்கனாக,  Shakespearean Scholar ஆக, இருப்பதால்,  அவரது நினைவுகளின் அடுக்குகளிலிருந்து தெறிக்கும் தகவல்கள் மிக அழகான நடையில், எந்த பாசாங்கும் மேற்பூச்சுமின்றி, ரசிக்கும்படியான தேர்ந்த சொற்களில் வந்திருக்கின்றன.

3.வெற்றிப் படிகள் – வானதி திருநாவுக்கரசு
தமிழில் எழுத்தாளர்களின் சுயசரிதையே அரிது என்ற நிலையில் ஒரு பதிப்பாளரின் சுயசரிதை என்பது நிச்சயமாக அரிதினும் அரிதுதான்.  தமிழ்ப் பதிப்பாளர் ஒருவரின் சுயசரிதை என்ற வகைமையில் இதுவே முதலாவதாகக் கூட இருக்கலாம்.  மிக நீண்ட காலமாக பதிப்புத் துறையில் ஏராளமான பெரிய பெரிய படைப்பாளிகளின் படைப்புகளை வெளியிட்டவர் என்ற வகையில் அவரது வாழ்க்கை வரலாறு ஒரு விதத்தில் தமிழ் பதிப்புலப் பெரியோர்களின் வரலாறாகவும், அக்காலத்திய ஆளுமைகள் பற்றிய சித்திரமாகவும் விரிகிறது.

4.யாத் வஷேம் – நேமி சந்த்ரா – தமிழில் கே.நல்லதம்பி
இரண்டாம் உலகப் போர், நாஜிக் கொடுமைகள் பற்றிய நாவல்கள் ஆங்கிலத்தில் ஏராளம், ஏராளம்.  குட்ரீட்ஸ் டாட் காமில் WW2  என்று தேடினால் .04 நொடியில் 797  நாவல்களைக் காட்டிவிடும்.  எங்கோ ஐரோப்பாவில் நடந்த விஷயம் என்பதால் இயல்பாகவே இந்திய மொழி எதிலும்  மேற்குறித்த வரலாற்றைச் சுற்றிய புனைவு இருக்காது.  அந்தக் குறையைத் தீர்க்கும் விதமாக நேமி சந்த்ரா கன்னடத்தில் எழுதியிருக்கும் யாத் வஷேம் கே.நல்லதம்பியின் அற்புதமான மொழிபெயர்ப்பில் தமிழில் வந்துள்ளது. ஆஹா…. என்ன ஒரு புனைவு…. என்ன ஒரு ஆய்வு.. என்ன ஒரு களப்பணி….  இந்த அளவோடு நாவல் நிற்கவில்லை. இன்றைய காலத்திற்கு மிகவும் தேவையான ஒரு முக்கிய செய்தியையும் முடிவாகச் சொல்கிறது நாவல்.

5.தீக்கொன்றை மலரும் பருவம் – அபுபக்கர் ஆடம் இப்ராஹிம் – தமிழில் லதா அருணாச்சலம்
நைஜீரிய நாவல்.  முன்னுரையில் மொழிபெயர்ப்பாளர் சொல்வதைப் போல பிறந்தது முதல் மனதளவில் தனிமையில் உழலும் இருபத்தைந்து வயது ஆணுக்கும், ஐம்பது வயதிற்கு மேற்பட்ட பெண்ணுக்கும் இடையே சமூகத்தின் அத்தனை தளைகளையும், நியதிகளையும், மதிப்பீடுகளையும் கடந்து மலரும் உறவைப் பற்றிப் பேசுகிறது இந்தப் புதினம். அந்த வகையில் நான் முதலில் சொன்னது போல இது நைஜீரிய மோகமுள்ளாக, நாமறிந்த கதையாக இருக்கிறது. அதே சமயம் முன்னுரையின் முடிவில் லதா சொல்வது போல் இது நைஜீரியாவின் வட மாகாணங்களில் வாழும் மக்கள், அந்த நிலப்பரப்பின் வரலாறு மற்றும் புவியியல் பயணமாக, உள்ளார்ந்த வாழ்வையும், உணர்வுகளையும், பிரச்சனைகளையும். வலிகளையும், ரகசியமாக ஒளிரும் கண்ணீரையும் பற்றியும் பேசுகிறது. அந்த வகையில் நம்மை வேறொரு உலகத்திற்கு அழைத்துச் செல்கிறது. அங்கிருப்பவர்களும் உங்கள் ஊர்க்காரர்கள் மாதிரிதான் என்பதையும் காட்டுகிறது.

6.ஒன்பது குன்று – பாவண்ணன்
தன் பணி நிமித்தம் கர்னாடக மாநிலமெங்கும் சுற்றியலைந்த காலத்தில் தனக்கு ஏற்பட்ட அனுபவங்களை தனக்கேயுரித்தான பாணியில் எழுதியிருக்கிறார் பாவண்ணன். புத்தகத்தைப் படித்த இரண்டு நாட்களும் நானும் அவருடன் கூடவே கர்னாடக மாநிலத்தின் காடுகளிலும், மலைகளிலும் டெலிபோன் கேபிள் பதித்தவாறு சுற்றித் திரிந்தேன்.

7. நகர்துஞ்சும் நள்யாமத்தில் செங்கோட் யானைகள் எடுத்துப் படித்த VIII தஸ்தாவேஜ்கள் –பாவெல் சக்தி
நீதியும், அறமும், வாழ்வதற்கான உரிமையும் மறுக்கப்பட்டவர்களும், வன்புணர்வின் இறுதியில் சாலையின் ஓரம் கழிவென வீசப்பட்டவர்களும், உயிரென இருந்தவாகளை கொலைகளுக்கு பலிகொடுத்துவிட்டு நியாயம் கேட்பவர்களும், இருக்கும் கொஞ்சநஞ்ச வாழ்வையும் கையில் பிடித்துக் கொண்டு, இழந்த சொத்துக்களை மீட்டெடுக்கப் போராடுபவர்களும், தோல்வியடைந்த திருமணங்களினால் கைவிடப்பட்டவர்களும், அவர்கள் தூக்கிச் சுமக்கும் குழந்தைகளும், கடைசிக்காலத்தில் கைவிட்டுப் போன பிள்ளைகளிடம் கையேந்தும் வயதானவர்களும்.. நீதிமன்றத்தைத் தான் கடவுளாக நம்பி வருகிறார்கள். அவர்களின் இறுதி நம்பிக்கையும், அரசினால், அதிகாரங்களினால், அலட்சியங்களினால், சட்டங்களின் துணுக்கங்களினால் நெரித்துக் கொல்லப்படுவதுதான் நடைமுறையாக இருக்கிறது. இந்த பரிதாபத்திற்குரிய ஜீவன்களின் மீது பரிவும், பாசமும், ஓரளவிற்கு மேல் அவர்களுக்கு உதவ முடியவில்லையே என்ற கரிசனமுமாக எழுதப்பட்ட கதைகள் இவை.  விசித்திரமான வழக்குகள், குற்றங்கள் என்பதோடு வாழ்வில் எல்லாவற்றையும் தொலைத்துவிட்டு நீதிமன்றத்தின் வளாகத்திலேயே திரிந்து கொண்டிருக்கும் கோடானுகோடி பாவப்பட்ட மக்கள் பற்றிய விரிவான, அக்கறையான, உண்மையான பதிவுகளாக இக்கதைகள் உள்ளன.  

8.சென்று போன நாட்கள் – எஸ்.ஜி.இராமாநுஜலு நாயுடு தொகுத்தவர் இரா.ஆ.வேங்கடாசலபதி
நூறாண்டுகளுக்கு முன் வாழ்ந்த ஒரு பத்திரிகையாளரின் நூல். அக்காலத்திய எழுத்தாளர்கள், பத்திரிகையாளர்களைப் பற்றிய அபூர்வமான பதிவு.  பாரதியோடு நேரடியாகப் பழகியவர் நாயுடு. பாரதியைப் பற்றி முதன்முதலில் எழுதியவரும் அவரே.  வியப்பூட்டும் தகவல்கள் உள்ள அரிய புத்தகம்.

9.அதிதி – வரத.இராஜமாணிக்கம்
வீடு தரும் பாதுகாப்பை மீறி அதை விட்டு வெளியேறுபவனின் கதை. பழநியின் குதிரை வண்டிகளைப் பதிவு செய்த முதல் நாவல் இதுவாகத்தான் இருக்கும். வெளியேறுபவனின் துயரத்தோடு, அவன் வீட்டாரின் துயரங்களையும் சேர்த்துச் சொல்லும் வித்தியாசமான நாவல். ஆசிரியரின் முதல் நாவல் என்பதை நம்ப முடியவில்லை.

10.நூல்கள், நூலகங்கள், நூலகர்கள் – சச்சிதானந்த சுகிர்தராஜா
கல்லூரி நாட்களில் கணையாழி அறிமுகமானதிலிருந்து நான் அவரது பத்தி எழுத்துகளின் ரசிகன்.  புத்தகக் காதலர்கள் பற்றி புத்தகம் பேசுது இதழில் புதிய தொடர் ஒன்றை எழுத என்னைத் தூண்டிய புத்தகம்.

11.நீலத் தங்கம் – இரா.முருகவேள்
புனைவு எழுத்தாளர் முருகவேளை விட கட்டுரையாளர் முருகவேள் என்னை மிகவும் கவர்கிறார். உலகமயச் சூழலில் தண்ணீர் விற்பனை குறித்து மிக ஆழமாக அதே சமயம் மிகச் சுருக்கமாக விளக்கும் நூல். புனைவுலகத்திலேயே சஞ்சரித்துக் கொண்டிருந்த என்னை நீ வாழும் உலகம் எப்படி இருக்கிறது என்ற பார் என்று கன்னத்தில் அறைந்து சொன்ன புத்தகம்.

12.பி.ஆர்.எஸ். கோபாலின் குண்டூசி சரித்திரமும், ஏடுகளும் – வாமனன்
சினிமா பத்திரிகைகள் குறித்து சற்றே ஏளனமான பார்வை கொண்டிருந்த எனக்கு சினிமா பத்திரிகை பற்றிய நல்ல பார்வையை, சினிமா பத்திரிகைக்காரர்களுக்கும் இருக்கும் தொழில் தர்மத்தைப் பற்றியெல்லாம் சொன்ன புத்தகம். மிக அரிதான தகவல்கள் உள்ள காலப் பெட்டகம்.

13.Greatest folk tales of Bihar
 பீஹார் பகுதிகளில் புழங்கும் மைதிலி மொழியில் சொல்லப்பட்ட, எழுதப்பட்ட சிறார் கதைகளின் தொகுப்பு. சில கதைகள் மௌரியர் காலத்தவை. சில பிரிட்டிஷ் ஆட்சி காலத்தவை. ஆனால் எல்லாக் காலத்து குழந்தைகளும் படிக்க வேண்டியவை. விரைவில் என் மொழிபெயர்ப்பில்….

14.உபசாரம் –சுகா
சுகாவின் அனுபவப் பகிர்வுகள் மிகவும் நகைச்சுவையான மொழியில். ஒரு கட்டுரையில் வண்ணதாசன் கதைகளை நம்மால் வாசிக்க முடியாது. கேட்கவும்  முடியாது. உணரத்தான் முடியும் என்பார் சுகா. உபசாரம் கூட அந்த மாதிரிதான்.

15.Rhino in my garden – Conita Walker
ஒரு காண்டாமிருகத்தையும், நீர்யானையையும் தன் வீட்டில் வளர்த்த ஒரு பெண்ணின் அனுபவங்கள். தென்னாப்பிரிக்காவின் காடுகள், நிறவெறி, கானுயிர் பாதுகாப்பு என்று எத்தனை எத்தனையோ விஷயங்களைச் சேர்த்துச் சொல்லிப் போகும் புத்தகம். ஏழை நாடு, அல்லது வளரும் நாட்டில் தான் அழிந்து படும் நிலையில் அரிய வனவிலங்குகள் அதிகம் உள்ளன. உணவின்றித் தவிக்கும் மக்களா, அல்லது அரிய வனவிலங்குகளை அழிவிலிருந்து பாதுகாப்பதா, எதற்கு முன்னுரிமை என்ற பெரும் கேள்வியில் அந்த நாடுகள் திண்டாட கோனிட்டா போன்றோர் தனிமனிதராக தம்மால் இயன்ற அளவு போராடுகிறார்கள். 

16.Ex libris –Confessions of a common reader – Anne Fadiman
நேருவோ, அப்துல் கலாமோ பெரிய நூலகத்தை வைத்துப் பராமரிப்பது பெரிய விஷயமல்ல. மாதச் சம்பள வேலை பார்த்துக் கொண்டு பெரிய நூலகத்தை வைத்துப் பராமரிப்பதுதான் பெரிய விஷயம். ஆனி என்ற புத்தகக் காதலியின் புத்தகக் காதல் பற்றிய நூல். புத்தகக் காதலர்கள், காதலிகள் உலகெங்கும் ஒரே மாதிரிதான் இருக்கிறார்கள் என்பதை அறிய மகிழ்ச்சியாக இருக்கிறது.

17.Weird things customers say in bookshops –  Jen Campbell

புத்தகக் கடைக்காரர்களும் உண்மையில் புத்தகக் காதலர்கள்தான். புத்தகக் காதலின் உச்சபட்சத்தில், கிறுக்கு அதிகமாகும் போது, புத்தகக்கடை வைத்து நஷ்டப் படுகிறார்கள். அங்கு வரும் வாடிக்கையாளர்களோ, இவர்களை விட கிறுக்கர்களாக இருப்பார்கள்.  அந்த அனுபவங்களின் தொகுப்பே இது.  தமிழில் இது போல் யாராவது எழுதினால் தமிழ்புத்தகக் கிறுக்கர்கள் பற்றி அறிந்து கொள்ள வசதியாக இருக்கும்.

18. இந்திய இலக்கியச் சிற்பிகள் – சுஜாதா – இரா.முருகன்
சமீபகாலமாக சுஜாதா பற்றி பெரிய சர்ச்சை ஓடிக் கொண்டிருக்கிறது. ஆனால் இந்த சர்ச்சைக்கு முன்பே, சுஜாதா ஒரு இலக்கியச் சிற்பிதான் என்று ஆதாரபூர்வமாக நிறுவி இருக்கிறார் இரா.முருகன்.  நான் சுஜாதாவைப் பற்றி எழுதினால் எதை எதை எல்லாம் எழுதுவேனோ, அவை அனைத்தையும் இரா.முருகன் எழுதியிருக்கிறார். என் மனதில் எப்படி அவர் புகுந்து பார்த்தார் என்று வியந்து கொண்டே இருக்கிறேன்.

19.என் குரு நாதர் பாரதியார் – ரா.கனகலிங்கம்
பாரதியைப் பற்றிய மிக அழகான, அரிதான பதிவுகள்.  பிரெஞ்சு தேசிய கீதத்தை பிரெஞ்சுக்காரர்களைப் போலவே பாடும் பாரதியார், பாரதியாரின் கச்சேரிக்கு வயலின் வாசிக்கும் பிரெஞ்சுக்காரர்,  தேச முத்துமாரி பாடல் உருவான கதை என்று புல்லரிக்க வைக்கும் புத்தகம்.

20.முற்றுகை – வேலூர் சுரா
‘அதீத இயந்திரமயம் வேலைகளைப் பறிக்கும். தேவைக்குக் குறைவான இயந்திரமயம் தொழிலையே பாதிக்கும்,‘ ( Too much autaomation kills employment and Too little automation kills organisation )  என்ற உலகமயப் போட்டிச் சூழலுக்கேற்ப பொதுத் துறை தொழிற்சங்கங்களின் அணுகுமுறை அமைய வேண்டியதன் அவசியத்தை மிக அழகாகப் புனைவாகக் கூறும் படைப்பு.

வரலாற்றைப் புனைவாக்குவது மிகவும் கடினம்.  மிகப் பழங்கால வரலாறு என்றால் தரவுகள் கிடைப்பது, கிடைத்த தரவுகளை சரிபார்ப்பது மிகவும் சிரமமாக இருக்கும்.  சமீபத்திய வரலாற்றைப் புனைவாக்குவதில் வேறு விதமான சிரமம்.  அந்த வரலாற்றில் பங்கேற்றவர்கள் பலர் உயிரோடு இருப்பார்கள். அவர்களது நினைவுகளில் அந்த நிகழ்வு பசுமையாக இருக்கும். அதில் சிறிதளவு தவறாக எழுதிவிட்டாலும் கடும் விமர்சனத்திற்கு ஆளாக நேரிடும். இப்படிச் சிக்கலான வரலாற்றுப் புனைவை தன் முதல் நாவலாக எழுதியிருக்கிறார் வேலூர் சுரா. முற்றுகை என்ற அந்த வரலாற்றுப் புனைவில் மற்றொரு புதுமையும் உண்டு. ஒரு தொழிற்சங்கத்தின் மிக முக்கியமான போராட்ட வரலாற்றைப் புனைவாகக் கூறும் புதுமை. அகில இந்திய இன்சூரன்ஸ் ஊழியர் சங்கம்  1960களில் இயந்திரமயத்திற்கு எதிராக நடத்திய இலாக்கோ விஜில் என்ற மாபெரும் போராட்டம் பற்றிய சிறு நாவல் இது. 

இவை தவிரவும்,  வாசிப்பு அறிந்ததும், அடைந்ததும், மதுரை போற்றுதும், நண்பர்கள் பார்வையில் ஏங்கெல்ஸ், டால்ஸ்டாய் சிறார் கதைகள், உலகப் புகழ்பெற்ற சிறார் கதைகள் என்று என் மனம் கவர்ந்த ஐந்து புத்தகங்களையும் இந்த ஆண்டு படித்தேன். ஆனால் அவற்றை எழுதியது அடியேன் என்பதால் அவை பற்றி விரித்துக் கூறாது முடிக்கிறேன்.

வாசிப்புதான் தீராத இன்பம். அதை வாசித்தால் மட்டுமே உணர முடியும்.

Athithi Novel by V Rajamanikkam Bookreview by Sa Subbarao. நூல் அறிமுகம்: வரத. இராஜமாணிக்கத்தின் அதிதி நாவல் - ச. சுப்பாராவ்

நூல் அறிமுகம்: வரத. இராஜமாணிக்கத்தின் அதிதி நாவல் – ச. சுப்பராவ்



அதிதிவீட்டைத் துறத்தல் எளிதல்ல..

தமிழ் புனைவுலகில் திடீர்திடீரென ஏதாவது ஒரு நல்ல நாவல் சத்தமில்லாமல் வந்து விடுகிறது. கண்கொத்திப் பாம்பாய் கவனித்து அதை லபக்கென்று கவ்விப் பிடித்துக் கொள்வது வாசகனுக்கு பெரிய சவாலாகவே உள்ளது. அப்படி சமீபத்தில் வந்திருப்பது அன்புத் தோழர். வரத.இராஜமாணிக்கத்தின் அதிதி என்ற நாவல்.  நான்கைந்து நாட்களின் சம்பவங்களை, முக்கிய கதாபாத்திரங்கள், துணைப் பாத்திரங்களின் வாழ்க்கையை முன்பின்னாகச் சொல்லி ஒரு நாவலாக்கியிருக்கிறார் இராஜமாணிக்கம்.

பழனி நகர்மன்றத்தின் முன்னாள் தலைவர், வழக்கறிஞர், இடதுசாரி இயக்கத்தின் முன்னணித் தலைவர் என்று பலவகைகளிலும் கடுமையான பணிகளில் இயங்கிக் கொண்டிருக்கும்  அவர் அவ்வப்போது சிறுகதைகள் எழுதிவந்தார். இப்போது நாவலாசிரியர் ஆக மலர்ந்துள்ளார். மனைவியிடம் கோபித்துக் கொண்டு வீட்டை விட்டு வெளியேறியவனின் கதை, பல்வேறு சூழல்களில் வீட்டை விட்டு வெளியேறியவர்களின் கதையாக வளர்கிறது. இதே கருவை மையமாகக் கொண்டு இதற்கு முன் வெளிவந்துள்ள படைப்பு யுவன் சந்திரசேகரின் வெளியேற்றம் நாவல் மட்டும்தான் என்று நினைக்கிறேன்.

கஷ்டமோ, நஷ்டமோ, வீடு தரும் பாதுகாப்பும், இதமும் வேறு எதுவும் தராது. தாங்க முடியாத துயர் வந்து சூழும் போதுதான் மனிதன் அந்தப் பாதுகாப்பையும் உதறி, வெளியேறத் துணிகிறான். மனைவிக்கு எதிர் வீட்டு இளைஞனுடன் உள்ள தொடர்பு நாயகனை வீட்டை விட்டு வெளியேற வைக்கிறது. அவனது தாயும் அவனது சிறுவயதில் அவனையும், வீட்டையும் விட்டு இவ்விதமாக வெளியேறியவள்தான். வீட்டை விட்டு வெளியேறியவனுக்கு பாலியல் தொழில் செய்யும் நடுத்தரவயதுப் பெண்மணி ஒருத்தி ஆதரவு தருகிறாள். அவளும், அவளது நிழலில் தொழில் புரியும் பெண்களும் அவ்வாறே வீட்டை விட்டு வந்தவர்கள்தான். ஒருபுறம் இவர்களது கதை. மறுபுறம் நாயகனைத் தேடும் அவனது மனைவி, மாமனாரின் கதை. அவன் மனைவியும் அடிப்படையில் நல்லவள்தான். ஏதோ சற்று கவனம் பிசகி தவறாகிவிடுகிறது. கணவன் வீடு திரும்ப வேண்டுமே என்று துடிக்கிறாள். கடைசியில் அவனும் வீடு திரும்ப சுபமாய் முடிகிறது நாவல்.

மிக எளிய, அசலான கதை. சொன்ன விதத்தில் அசாதாரணக் கதையாக மாறுகிறது. பழைய ஒன்றுபட்ட மதுரை மாவட்டத்தில் வீட்டை விட்டு வெளியேறுபவர்கள் பொதுவாக பழநிக்குத் தான் செல்வார்கள். எனக்குத் தெரிந்து பழநியிலிருந்து மீட்டு வீட்டுக்கு அழைத்து வரப்பட்ட ஓடிப் போனவர்கள் நான்கைந்து பேர் உண்டு. அது எதனால் என்று தெரியவில்லை.  ஆசிரியர் அதை சரியாகப் பயன்படுத்தியிருக்கிறார். அல்லது அவரது சொந்த ஊர் என்பதனாலும் இருக்கலாம். எதுவாயினும்,  பழநியின் குதிரை வண்டிகள், வண்டிக்காரர்கள் இத்தனை விரிவாகப் பதிவான முதல் நாவல் இதுதான் என்று நினைக்கிறேன். தோழரின் நாவல் என்பதால் இயல்பாகவே  குதிரைவண்டிக் காரர்களின் போராட்டம் ஒன்றும் நாவலில் உண்டு.  அது வலிந்து திணிக்கப்படாமல் கதையோட்டத்தோடு வருவது சிறப்பு.

நாவலில் எனக்குப் பிடித்த அம்சம் பழநியின் வெயில் பற்றி நாவல் நெடுக வரும் வரிகள். சு.வெங்கடேசனின் காவல் கோட்டத்தில் இருள் ஒரு பாத்திரம் போலவே வரும். அதைப் போன்று இதில் வெயில் வருகிறது. பழநி மலை சூரியனின் வெப்பம் முழுவதையும் உறிஞ்சி இரவு பகல் பாராது ஊர் மீது உமிழ்ந்து கொண்டே இருக்கும். நான் ஓராண்டு காலம் அங்கு பணிபுரிந்த போது அதை நேரடியாக அனுபவித்திருக்கிறேன். உள்ளூர்காரர்கள் அதை உணர்ந்திருக்க மாட்டார்கள். நம்மைப் போல் வெளியாட்களுக்குத் தான் அது தெரியும் என்று நினைத்திருந்தேன். இராஜமாணிக்கம் அதை சரியாக உணர்ந்து  பாத்திரங்களின் மனஉணர்வுக்குத் தகுந்தாற் போல் வெயிலை வர்ணித்துக் கொண்டே போகிறார். வெயில் கதைமாந்தர்கள் கூடவே வருகிறது. பின்னால் வந்து தயங்கி நிற்கிறது. நிழலால் அரவணைக்கிறது. எரிச்சல் தருகிறது. இதமும் தருகிறது.

நாவலில் பெரிதாக குற்றம் குறைகள் இல்லை. சில பாத்திரங்களுக்கு , குறிப்பாக குதிரைவண்டிக்காரர் சுப்பு பாத்திரத்திற்கு சில இடங்களில் மரியாதை விகுதியும், சில இடங்களில் அன் விகுதியும் மாறி மாறி வருவதைத் தவிர்த்திருக்கலாம். பழநியின் சித்த வைத்தியர்கள்,  புகழ்பெற்ற திரையரங்குகள், பிரபல விபூதி, பஞ்சாமிர்தக் கடைகள் பற்றி எல்லாம் ஆங்காங்கே சொல்லியிருந்தால் இன்னும சிறப்பாக இருந்திருக்கும்.

ஆனால் அவை பெரிய குறைகளல்ல. இவை இல்லாததால் நாவலின் போக்கு எந்த இடத்திலும் தொய்வடையவில்லை. தடுமாறி நிற்கவில்லை.

முன்னர் குறிப்பிட்ட யுவனின் வெளியேற்றம் நாவல் காட்டும்,  வீட்டை விட்டு வெளியேறுபவர்களின் உளச்சிக்கல்கள், துயர்களை விட,  அவர்கள் இல்லாத வீட்டில், ”ஏன் போனான்? எங்கோ போனான்? வருவானா? மாட்டானா? உயிரோடு இருக்கிறானா? இல்லையா? ” என்ற எண்ணற்ற கேள்விகளோடு தவிக்கும் அவனது சுற்றத்தின் துயர்கள் சற்றும் குறைந்தவையல்ல.  என் உயிர் நண்பன் ஒருவனின் தந்தையார் 30 – 35 ஆண்டுகளுக்கு முன் ஒரு மாட்டுப் பொங்கலன்று வீட்டில் ஏற்பட்ட சிறு சச்சரவில் மனம் நொந்து, வீட்டை விட்டுப் போனவர்தான். இன்றுவரை வீடு திரும்பவில்லை. இப்போதும்,  நானும், அவனும் சினிமா, வெளியூர் என்று எங்கேனும் சென்றுவிட்டு நள்ளிரவில் மதுரை திரும்பும் போது,  அவன் பஸ், ரயில் நிலையத்தில், ஆளரவமற்ற சாலைகளில் மூடிக்கிடக்கும் கடைகளின் வாசலில் கிழிந்த போர்வையைப் போர்த்திக் கொண்டு தூங்கிக் கொண்டிருக்கும் கந்தலான உருவங்களின் முகத்தைக் கூர்ந்து பார்த்துக் கொண்டே வருவான். அதைப் பார்க்கும் போதெல்லாம் எனக்கு ரத்தக் கண்ணீர் வரும்.

அந்த சொல்ல முடியாத துயரத்தை தனது முதல் நாவலில் பதிவு செய்துள்ள தோழர்.வரத.இராஜமாணிக்கத்தை வாழ்த்துகிறேன். கதையிலேனும் இப்படியானவர்களின் துயா் தீரட்டும் என்று சுபமாக முடித்த அந்த மென்மனதுக்காரரை நெஞ்சார அணைத்துக் கொள்கிறேன்.

நூல்: அதிதி நாவல்
ஆசிரியர்: வரத.இராஜமாணிக்கம்
வெளியீடு: பாரதி புத்தகாலயம்
விலை: ரூ180.00
பக்கம்: 192

Vida Muyachi Vetri Tharum book in tamil translated by Sa Subbarao book review by M Dhananchezhiyan. நூல் விமர்சனம்: விடாமுயற்சி வெற்றி தரும் - தமிழில்: ச. சுப்பாராவ் - மு தனஞ்செழியன்

நூல் விமர்சனம்: விடாமுயற்சி வெற்றி தரும் – தமிழில்: ச. சுப்பாராவ் – மு தனஞ்செழியன்




தோழர் சுப்பாராவ் அவர்களுக்கு கொரோனா காலத்தில்  கட்டாய வீட்டுச் சிறையில் உதிர்த்து இருக்கும். குழந்தைகளுக்கான மொழிபெயர்ப்பு கதைகளை வாசிக்கும்போது நாமும் நம் பால்யத்திற்குத் திரும்பி விடும் பொருட்டு கதைகள் நகர்கிறது.

இந்த தொகுப்பில் வெவ்வேறு உலக மொழிகளில் எழுதப்பட்ட இருபத்தி ஏழு கதைகள் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது.

இரு கஞ்சர்கள் ஹீப்ரூ மொழிக்கதை இரண்டு கஞ்சர்களின் கஞ்சத்தனத்தால் உணவு கூட உண்ணாமல் தண்ணீர் மட்டுமே குடித்து வாழும் கதை

கெட்டிக்காரத் தவளை ஜெர்மன் நாட்டுக் கதை நரிக்கும் தவளைக்கும்  வழக்கமான உரையாடலில் நரியை விட  தவளை தரமானது என்று நிரூபிக்கப்படுகிறது.

இளையவளும், அரக்கனும் – ஸ்காட்லாந்து நாட்டுக்கதை ராஜா இறந்த பிறகு ராணியையும் மூன்று குழந்தைகளும் குடும்பத்திலிருந்து விரட்டி அரக்கனிடம் இருந்து தப்பித்து வாழும் கதை குழந்தைகளுக்கு நம்பிக்கையும் உற்சாகமும் அளிக்கக்கூடிய வகையில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது.

மகன்களை ஏமாற்றிய தந்தை – காஷ்மீரத்துக் கதை. இன்றைய குடும்பச் சூழலில் தந்தை மகன் உறவுகளில் சிதலம் ஏற்படுவதைக் குழந்தைகளுக்குக் கதையாக பதித்துள்ளது காஷ்மீரத்துக் கதை.

இன்னொரு காஷ்மீர் மொழி கதை தான் சூரியன் சந்திரன் காற்று விருந்துக்கு சென்ற கதை இதை ஏற்கனவே நான் எனது அம்மா சிறுவயதில் கூறியபோது கேட்டது. இப்பொழுதுதான் ஒரு விஷயம் தெரியவந்தது, வேறு நாடுகளிலிருந்து கதைகள் மக்கள் வழியாக பயணித்து இருப்பதும். இதில், என் அம்மா சொன்ன அதே கதை மாற்றமில்லாமல் வந்திருப்பது என் குழந்தைப் பருவத்தை மீண்டும் வருடிச் சென்றது.

எல்லோரும் மொச்சை சாப்பிட்டு இருப்போம். ஆனால், மொச்சையின் மேலே இருக்கும் வெள்ளை முளைப்பகுதியை. மொச்சைக் போட்ட தையல் – ஜெர்மனி நாட்டுக் கதையில் நமக்கு மொழிபெயர்த்து விளங்க வைக்கிறார் எழுத்தாளர் சுப்பாராவ்.

பொதுவாக சிறார் கதைகள் இருக்கும் நண்பர்களின் ஜோடி சேருமணங்கள் வித்தியாசமாகவும் ரசிக்கும் படியாகவும் இருக்கும். அதையேதான் குழந்தைகளும் விரும்புகிறார்கள். அப்படியான ஒரு ஜப்பானிய நாட்டுக் கதைதான் – புத்திசாலி குரங்கு கரடி நண்பனும். தன் முதலாளி தன்னை கசாப்புக்கு அனுப்ப போகிறார் என்று அறிந்த குரங்கு தன் கரடி நண்பனை வைத்து தந்திரமாக பிழைத்து கொள்கிறது.

புத்தகத்தின் தலைப்பாக வந்திருக்கும் விடாமுயற்சி வெற்றி தரும் குறுங்கதை அரேபிய மொழி கதையாகும். இதில் ‘கேட்பவனுக்குக் கிடைக்கும், தட்டுங்கள் திறக்கப்படும்’ என்கிற பழைய அரபு மொழியின் அடிப்படையில் எழுதப்பட்டுள்ளது. அதை நண்பர் ஒருவர் சோதித்துப் பார்க்கச் செய்யும் முயற்சிகள் வெற்றி தரும் வகையில் அமைகிறது. குழந்தைகளுக்கும்  ஒரு செயலை தொடர்ந்து செய்யுமாறு நம்பிக்கையூட்டும் வகையில் கதை நகர்கிறது.

குழந்தைகள் விரும்பும் மாயாஜாலக் கதைகள் இல்லையே என நினைக்கும்போதே எனக்கு ஒரு கண் போனாலும் பௌத்த ஜாதகக் கதை வந்து நிற்கிறது. சங்கை வைத்துத் தான் வேண்டியதை நிறைவேற்றிக் கொள்பவனும் அதை அவனிடம் இருந்து பறிக்க நினைப்பவனுக்கு நிகழ்வும் துன்பமே கதையின் முடிவு.

இதில் வரக்கூடிய கதைகள் பெரும்பாலும் அண்ணன் தங்கைகளைப் பற்றியும், குடும்ப உறவுகளை பற்றியும், அதில் பெண்கள் புத்திசாலித்தனமாக நடந்து கொள்வது பற்றியுமே, நகர்கிறது அதிலும் குறிப்பாகச் சீன தேசத்துக் கதைகள் பெண்களின் புத்திசாலித்தனத்தை மீண்டும் மீண்டும் நிரூபிக்கிறது.   

சிலி நாட்டுக் கதைகள் குறும்புத்தனம் செய்யும் குழந்தைகள் மன்னர் உடன் நேரடி வாக்குவாதத்தில் ஈடுபட்டு மன்னரைத் தோற்கடித்து விடுகிறாள்

நார்வே நாட்டுக் கதைகள் ‘யார் வேலை கடினம்’ என்கிற கணவன் – மனைவி பேதம் பற்றிய புரிதலைக் குழந்தைகளின் மனதில் ஒரு விட்டில் பூச்சி போல ஒளிரச் செய்கிறார் எழுத்தாளர்.

அமெரிக்கன் கதை – ‘கேன்டியின் மதிநுட்பம்’ படிக்கும் பொழுது கொஞ்சம் பயமாகவும் சிறார்களுக்கு எதற்கு ஒரு கொலை பற்றிய கதை என்கிற கேள்வியும் மனதில் குழந்தைகள் உலகத்தில் சூனியக் கிழவியும்,  அரக்கனும் இல்லாமல் போக மாட்டார்கள்.  அதே வரிசையில் அரக்கர்களை அடுத்து சூனியக் கிழவி வந்து நிற்கிறாள் ரஷ்யத் தேசத்து கதைகளில்.  

ஜெர்மனி தேசத்துக் கதை பனிரெண்டு சகோதரர்களும் டென்மார்க் சொத்துக்களைப் பணி ரோஜாவும் வரும் பனிரெண்டு அண்ணன்களும் ஒரு தங்கையின் மீதான வெறுப்பைக் கொண்டிருக்கிறார்கள் இருந்தாலும் கதையின் முடிவு நம்பிக்கை ஊட்டும் விதமாகவே முடிகிறது இந்த கதைகளில் இருக்கும் ஒற்றுமைகள் பனிரெண்டு அண்ணன்களும் ஒரு தங்கையும் கதைகள் வெவ்வெரு நாட்டிற்கு இவரும் வரிகளின் வாயிலாகப் பயணிப்பதற்கு இந்த இரண்டு கதைகளும் ஒரு சாட்சியாக  இருக்கலாம்.

‘புத்திசாலி மரியா’ போர்ச்சுகல் நாட்டுக் கதை. ஒரு தவறை இழைத்துவிட்டு அதற்கு வருந்தும் போது. அதில் ஏற்பட்ட நஷ்டத்தை ஈடு செய்ய முடியாது என்பதை மரியா புரிந்து கொண்டு ஒரு பொம்மையை வைத்து நாடகம் செய்கிறாள். இதுவே குழந்தைகள் மீது கோபத்தையும் தவறுகளையும் ஏற்படுத்துவதற்கு முன்னான ஒரு நிதானத்தையும் பொறுமையையும் பற்றி உணர்த்தும் கதையாகும்.

ஜெர்மன் நாட்டுக் கதைகள் பெண்களின் புத்திசாலித்தனத்தைப் போற்றியும் மனைவிமார்களின் செயல்களை மட்டமாக நினைக்கும் கணவன்மார்களின் புத்தியைச் சம்மட்டியால் அடிக்கவும் செய்கிறது.

சீன தேசத்துக் கதை, ஸ்காட்லாந்து நாட்டுக் கதைகள் என உலக வரைபடத்தைக் குழந்தைகளுக்கான கதைகளின் வாயிலாக நம் கண் முன்னே கொண்டு வந்து நிறுத்துகிறார்.

நார்மண்டி நாட்டுக் கதை சிவப்பு, வெள்ளை, கறுப்பு  என்று நிறங்களின் மீது காதல் கொண்டேன் ஒரு மன்னர் மாய உலகில் அவரை ஏமாற்றி வாழும் அவருடைய சித்தி என்று  கதை போக்கக் குழந்தைகள் விரும்பும் வண்ணங்களால் நிரம்பியுள்ளது.

ஜெர்மனியின் பிரான்கோனியா பகுதியின் கதை குழந்தைகள் விரும்பும் மாய உலகின் வீரர்கள் நிகழ்த்தும் கதைகளாக நீள்கிறது.

பிரான்ஸ் தேசக் கதை மூன்று நாய்கள்  அண்ணன், தங்கை ஒற்றுமை பற்றியும் சொத்துக்களை சமபங்காக அண்ணன், தங்கை பிரித்துக் கொள்கிறார்கள்.

அயர்லாந்து நாட்டுக் கதை – சொந்தமாய்

ஒரு பனிக்கரடி  குழந்தைகள் உலகில் எப்போதும் யாரும் மறைந்து விடவே முடியாத அளவுக்கு வண்ணங்களாக ஆகும் ராஜகம்பளம் கற்பனையாகவும் இருக்கும் வீட்டில் தன்னுடன் இருக்கும் பொம்மைகளை வைத்து குழந்தைகள் அட்டவணையில் எவ்வாறெல்லாம் விளையாடுவார்கள் என்று எதார்த்த கற்பனை வாதத்தை அயர்லாந்து நாட்டுக் கதை மூலமாக நாம் அறிய முடிகிறது.

இத்தனை கதைகளின் மொழிபெயர்ப்பை பார்க்கும் போது வியப்பாகவும் மலைப்பாகவும் தான் இருக்கிறது.  பிறமொழிகளிலிருந்து கதைகளைக்  கொண்டு வருவது சாதாரணமான ஒன்றல்ல. ஒரு டைம் பாமின் சரியான வயரை கண்டு பிடித்து வெட்டுவது போன்ற பரபரப்பு நிறைந்த வேலை. பிறமொழிகளில் உள்ள கருத்தையும்  வருமொழியில் அடக்குவது சுலபமானதல்ல  இருந்தாலும். அதை சரியாகக் கருத்து  பிறழ்வு இல்லாமல் கொண்டு வந்த எழுத்தாளர் ச. சுப்பாராவ் அவர்களுக்கு அன்பும், மகிழ்ச்சியும்..

விடாமுயர்சி வெற்றி தரும் (உலகப் புகழ் பெற்ற சிறார் கதைகள்)
தமிழில் : ச. சுப்பாராவ் 
முதல் பதிப்பு : அக்டோபர்,  2021 
சித்திரங்கள் : ரோஹிணி   குமார் 
விலை 120/-
பக்கங்கள் : 128 
வெளியீடு :புக்ஸ் ஃபார் சில்ரன் பாரதி புத்தகாலயம் ஓர் அங்கம் 
7, இளங்கோ சாலை ,
தேனாம்பேட்டை, சென்னை – 600018.
தொலைபேசி: 044-24332424
புத்தகம் வாங்க: thamizhbooks.com
Book Review: Nanbargalin Parvayil Marx Written by Sa.Subbarao book review by Saguvarathan நண்பர்களின் பார்வையில் மார்க்ஸ்

நூல் விமர்சனம்: ச.சுப்பாராவின் நண்பர்களின் பார்வையில் மார்க்ஸ் – சகுவரதன்




மொழிபெயர்த்து எழுதியவர் ச. சுப்பாராவ் அவர்கள். சிறந்த மொழிபெயர்ப்புக்கான பல விருதுகளை பெற்றுள்ளார். “நிகழ்ந்த போதே எழுதப்பட்ட வரலாறு” இந்திய பொருளாதார தேசியத்தின் தோற்றமும் வளர்ச்சியும்” உள்ளிட்ட பல நூல்களை மொழிபெயர்த்துள்ளார்.

23 ஆண்டுகாலம் நூலகத்திலேயே வாழ்க்கையை கழித்து, நாற்பதாயிரம் புத்தகங்களைப் படித்துக் குறிப்பெடுத்து, தான் புகைத்துப்போடும் போடும் சுருட்டுக்குக்கூட தான் எழுதும் புத்ககத்தின் வருவாய் போதாது எனத் தெரிந்தும் மூலதனம் என்னும் நூலை உலக மக்களுக்குத் தந்த காரல்மார்க்ஸ். உறவுகளை நிர்ணயிப்பதே பொருளாதாரம்தான் என்று சொன்னவர்.

வாழ்நாள் முழுக்க பொருளாதாரச் சிக்கலில் தவித்தாலும் மனிதகுல சமூக மாற்றத்திற்கு புதியதொரு விடியலுக்காக இறுதிவரை சிந்தித்த மாமனிதனின் வாழ்க்கை அம்சங்களை அவருடன் பயணித்த இரு நண்பர்களின் வாக்குமூலம்தான் இந்நூல். ஒருவர் ஜெர்மன் சோஷலிஸ்டும் ஜெர்மன் சோசலிஸ்டு டெமாக்ரஸி கட்சித் தலைவருமான கார்ல் லீப்னெஸ்ட். மற்றொருவர் பிரெஞ்ச் புரட்சியாளரும் மார்க்சின் இரண்டாவது மகளை மணந்தவருமான பால் லஃபார்கே.

இருவரது நினைவலைகளில் ஏராளமான செய்திகள் அறிய முடிகின்றன. மார்க்ஸ் என்ற அற்புத மனிதரை, பொருளாதார மேதையை, உலகத்திற்கே மார்க்சிய தத்துவத்தை போதித்த அறிஞரின் குழந்தைத்தனமான செய்கைகளை, இன்புற்று மகிழ்ந்த தருணங்களை, அல்லல்படும் துயரங்களை, விளையாட்டுகளை நண்பர்களிடம் கழித்த பொழுதுபோக்குகளை, விவாதங்களை, நூலக தேடல்களை என பல சம்பவங்கள் விவரித்துக் கொண்டே செல்வதை வாசிக்க பெருமூச்சு கிளம்புவது நிச்சயம். கார்ல் லீப்னெஸ்ட், மார்க்ஸைப்பற்றி கூறும்போது அடிக்கடி “மார்க்ஸ் பாணி” என்று ஒன்றைக்குறிப்பிடுகிறார்.

மார்க்ஸ் ஒரு கருத்தாக்கத்தை சாத்தியப்படும் அளவு சுருக்கமாக உருவாக்கிக் கொள்வார். அதை தொழிலாளர்களால் புரிந்து கொள்ளப்படாத வார்த்தைகள் எதுவும் வந்துவிடக்கூடாது என்று மிகக் கவனத்தோடு சொற்களைத் தேர்ந்தெடுத்து விரிவாக விளக்குவார். பிறகு பார்வையாளர்களை கேள்விகேட்கச் சொல்லுவார். யாரும் கேள்வி கேட்கவில்லை என்றால் பார்வையாளர்கள் தவறாகப் புரிந்துகொள்ளக்கூடாது, புரிதலில் எந்த இடைவெளியும் இருக்கக்கூடாது என்பதற்காக பார்வையாளர்களை கேள்வி கேட்டு பரிசோதித்துக்கொள்வார்.

உரையாடும் போது கரும்பலகையைப் பயன்படுத்துவதும் அதில் பல சூத்திரங்கள் எழுதுவதுமான செயல்பாடுகளை மார்க்ஸ் தொடர்ந்து செய்து வந்திருக்கிறார் என்கிற தகவல் நம்மை வியப்பில் ஆழ்த்துகிறது. “மார்க்ஸ் மற்றும் அவரைச்சேர்ந்தவர்களை” “கொள்ளைக்காரர்கள்” என்றும் “மனித இனத்தின் சக்கைகள்” என்றும் பிறரால் அழைக்கப்பட்டதை நகைச்சுவையாக விளக்கி, தாங்கள் ஏன் அடிக்கடி நூலகம் சென்று அங்கேயே இருந்து வாசிப்பில் ஈடுபட்டோம் என்பதையும் அழகுற கூறுகிறார்.

சில சமயங்களில் எங்களுக்கு சாப்பிட ஒரு பருக்கைக்கூட இருக்காது. ஆனால் அதற்காக நாங்கள் பிரிட்டிஷ் மியூசியம் போகாமல் இருக்கமாட்டோம். ஏனெனில் அங்கு வசதியான நாற்காலிகள் இருக்கும். குளிருக்கு கதகதப்பாக, வசதியாக இருக்கும். அது வீட்டைவிட வசதியானது. அதாவது வீடு இருந்தவர்களின் வீட்டைவிட மார்க்ஸ் வீட்டில் ஏழ்மை மட்டும் தங்கியிருக்கவில்லை. பல்வேறு ஆளுமைகள் தங்கி கற்றுச்செல்லும் பள்ளியாகவும் திகழ்ந்திருக்கிறது. இரவு முழுக்க விவாதம், நடைமுறை தந்திரங்கள் பிற நாடுகளின் அரசியல் பண்பாட்டு நிலைமைகள் என பல்வேறு விஷயங்களில் உரையாடல்கள் அமையுமாம். மார்க்ஸ் தன் குழந்தைகளிடம் காட்டும் அன்பு அபாரமானது. குழந்தைகளோடு ஓடி விளையாடுவார். அவர்களின் குழந்தைத்தனமான விளையாட்டுகளில் குழந்தையாக பங்கேற்பார்.

மார்க்சின் ஆண்குழந்தைகள் சிறுவயதிலேயே இறந்துபோனார்கள். பெண் குழந்தைகள் ஆண் குழந்தைகளைப்போலவே படு சேட்டைகளுடன் இருப்பார்களாம். மார்க்சின் மகன் இறந்தபோது அதன் சூழ்நிலையை இப்படி விவாதிக்கிறார்.

அந்த காட்சியை என்னால் மறக்கவே முடியாது. இறந்த தன் குழந்தை அருகே குனிந்து அந்தத் தாய் மௌனமாக அழுது கொண்டிருந்தாள். லென்சன் நின்றபடி அழ மார்க்ஸ் சமாதானம் சொல்வோர் மீது கடுமையாக கோபமிட்டபடி தாங்க முடியாத துக்கத்தில் இருக்க, இருபெண் குழந்தைகளும் சத்தமில்லாமல் அழுதபடி அம்மாவிடம் ஓட்டிக்கொண்டிருந்தன. அவர்களை விட்டால் மரணம் பிடித்துக்கொண்டு போய்விடுமோ என்பதுபோல் அந்தத் தாய் குழந்தைகள் இருவரையும் இறுக்கி அணைத்திருந்தார். செஸ் விளையாட்டில் மார்க்ஸ் காட்டிய ஈடுபாடு குறித்து இவ்வாறு கூறுகிறார்.

மார்க்ஸ் செஸ் விளையாட்டில் இக்கட்டான நிலையில் மாட்டிக்கொண்டால் எரிச்சலடைவார். தோற்றுப்போனால் கடுப்பாகி விடுவார். புதுப்புது உத்திகளோடு களமிறங்குவார். வெற்றிபெற்றால் அறையே எதிரொலிக்கும் அளவிற்கு சத்தமிட்டு சிரிப்பார் பால் லஃபார்கே வின் நினைவலைகள் இன்னும் பல செய்திகளைக் கூறுகிறது.

நான் இந்த உலகத்தின் குடிமகன் என அடிக்கடி கூறிக் கொள்வாராம். பிரான்ஸ், பெல்ஜியம், இங்கிலார்ந்து என எந்த நாட்டிற்கு துரத்தப்பட்டாலும் அந்நாட்டில் உருவாகிக் கொண்டிருந்த புரட்சிகர இயக்கத்திற்கு இவரே காரணமாக இருப்பாராம். தான் மார்க்ஸூடன் வேலைபார்த்து வந்ததாகவும் அவரது படைப்புகளை எழுதும் வாய்ப்பு கிடைக்கப்பெற்றவன் என்றும் அதே சமயத்தில் அது கடினமான பணி என்றும் பால் லஃபார்கே கூறுகிறார்.

நூலக அறையில் புத்தகங்கள் தாறுமாறாக சிதறிக் கிடைக்குமாம். யாரையும் சரிசெய்ய அனுமதிக்கமாட்டாராம். அந்தந்த புத்தகத்தை அதனதன் இடத்திலேயே அமர்ந்து படிப்பாராம். அவருடைய சொந்த உறுப்புகளைப்போல் பாதுகாப்பாராம். விஞ்ஞானம் ஒரு சுயநலமான இன்பமாக இருக்கக்கூடாது. மனித சமூக தேவைக்கு தங்களின் விஞ்ஞான அறிவை பயன்படுத்துவதில் விஞ்ஞானிகள் முன்னிற்கவேண்டும். விஞ்ஞானம் பற்றிய மார்க்சின் ஜனநாயகப் பூர்வமான கருத்தாக லஃபார்க் கூறுகிறார்.

சாதாரண மனிதனின் வாழ்க்கையைத்தான் மார்க்ஸ் வாழ்ந்துள்ளார். இன்பம் துன்பம் வரவு செலவு இழப்புகள் பொருளாதார சிக்கல்கள் கையறுநிலைமைகள் என அத்தனை அம்சங்களும் நம் வாழ்வைப்போலவே அவர் வாழ்விலும் கடந்து சென்றிருக்கின்றன. ஆனால் அவர் அப்படியே மாய்ந்துவிடவில்லை. நிலையான வீடு மட்டுமல்ல நிலையான நாடே இல்லாமல் அகதியாய் உலகை சுற்றினாலும் இந்த உலகத்திற்கான பொன்னுலகம் மின்னிக்கொண்டிருப்பதை மக்களுக்கு காட்டியவர்.

இரு நண்பர்களின் பார்வையில் என்ன தெரிந்துகொண்டோம்.?

அசாதாரண நிலையிலும் தன் வாழ்க்கையின் பெரும்பகுதியை ஒட்டு மொத்த மக்களின் வாழ்க்கைக்கான உயரிய தத்துவத்தை வரையறுப்பதிலும் நடைமுறைபடுத்துவதிலும் செலவிட்டார் என்பதே ச.சுப்பாராவ் அவர்களுடைய மொழிபெயர்ப்பு, மொழிபெயர்ப்பு போலவே தெரியவில்லை. விறுவிறுவென, எளிமையாக, புரியும் நடையில் வாசிப்பு நகர்கிறது. மிக அற்புதமான பணி. பாரதி புத்தகாலயம் இப்புத்தகத்தை நல்ல அட்டையில், நல்ல தாளில், நல்லமுறையில் அச்சிட்டு வெளியிட்டுள்ளது.

நூலின் பெயர் ; நண்பர்களின் பார்வையில் மார்க்ஸ்.
மொழிபெயர்ப்பு.: ச.சுப்பாராவ்
பதிப்பகம் : பாரதி புத்தகாலயம்
விலை ரூ : 70/