நூல் அறிமுகம்: ச. சுப்பாராவின் மதுரை போற்றுதும் – சுரேஷ் காத்தான்
மதுரை ஒரு வரலாற்றுத் தொடர்ச்சியுடைய நகரம்… உலக வரலாற்றில் நகரமாகவே நிர்மாணிக்கப்பட்டு நகரமாகவே வரலாறெங்கும் அறியப்பட்டு, இப்பொழுதும் நகரமாகவே நீடிக்கிற நகரங்கள் இரண்டு. ஒன்று ஏதென்ஸ். மற்றொன்று மதுரை. மதுரைக்காரர்கள் என்கிற சொல் மதுரை நகரைச் சுற்றியிருக்கிற அத்தனை கிராமங்களுக்கு மட்டுமல்ல… மதுரையை மையமாகக் கொண்டு சுமார் 150 கிமீ சுற்றளவுக்கு ஒரு வட்டம் வரைந்து கொள்ளுங்கள். வட்டத்திற்குள் வருவோர் அனைவரும் நாங்கள் மதுரைக்காரர்கள் என்று சொல்வதில் தாளாப் பெருமையும், தீராக் காதலும், மாளாக் கர்வமும் கொண்டவர்கள். மதுரையின் பெருமையை மதுரைக்காரன் யார் சொன்னாலும் ஆமோதித்து, ஆர்ப்பரித்து, ஆரவாரித்து, அணைத்துக் கேட்டுக் கொள்வான் இன்னொரு மதுரைக்காரன். காரணம் ஒவ்வொருவனுக்கும் ஒவ்வொரு மதுரை. அவரவர் மதுரை அவரவர்க்கு. ஆனால், அதை அடுத்தவர் சொல்லிக் கேட்பதில் அத்தனை பெருமிதம். அவ்வளவு சுகம். அளவிலா ஆனந்தம். நிறைவான ஏகாந்தம். அப்படித்தான் தன் மதுரையை இந்தத் தொன்மதுரையை தான் பார்த்த மதுரையை நம்முன் எழுத்துக்களால் வரைந்து காட்டுகிறார், எழுத்தாளர் ச.சுப்பாராவ். நம்மோடு உட்கார்ந்து பேசிக் கொண்டிருக்கிறார். எத்தனை பேசினாலும் அலுக்கவே அலுக்காத மதுரையின் சிறப்புகளை, தான் வாழ்ந்த காலத்துப் பெருமைகளை, தான் வாழ்கிற காலத்துப் புதுமைகளை அருவி போலக் கொட்டிக் கொண்டே போகிறார், சுப்பாராவ்.
ஆரம்பத்துலேயே ஆரம்பிச்சுட்டாய்ங்கெளா என்ற மதுரைக்கார வடிவேலுவின் சேட்டையைப் போல கம்பனின் பாடலை தனக்கேற்றாற் போல மாற்றி லந்தைத் தொடங்குகிறார், சுப்பாராவ்.
ஒசை பெற்று உயர் பாற்கடல் உற்று ஒரு
பூசை முற்றவும் நக்கு புக்கென
ஆசை பற்றி அறையலுற்றேன் மற்றுஇக்
காசு இல் கொற்றத்து மதுரைக் கதை அரோ
மதுரையின் பெருமைகளை நானொருவன் சொல்லிவிட இயலுமா என்று சந்தேக லந்தோடு தொடங்கும் எழுத்தாளர், மதுரையின் குணம் உளி தீட்டப்பட்ட நெருப்பின் குணம். பிறர் துன்பத்தைக் கண்டு பொங்கும் நெருப்பு. அந்தத் துயரைப் பொசுக்கும் நெருப்பு என்கிறார். இலக்கியத்தில் ஆழங்காற்பட்ட சுப்பாராவ் கம்பனையும் இளங்கோவையும் துணைக்கு அழைத்துக் கொள்கிறார். மதுரை தமிழ்நாட்டின் ஆக்ஸ்போர்டு அல்லது குறைந்தபட்சம் தென்மாவட்டங்களின் ஆக்ஸ்போர்டு என்கிறார். தான் பார்த்த மதுரையை அணுகி, நுணுகிப் பார்த்திருக்கிறார். காலர் அழுக்காகாமல் இருக்க காலரில் கர்ச்சீப் வைக்கும் அண்ணன்கள் என்கிறார். மதுரையின் அரசியலை காய்த்தல் உவத்தலின்றி அப்படியே பதிவு செய்கிறார். அவரது கால படிப்பகங்கள் பற்றியும், படித்துறைகள் பற்றியும், பொதுக்கூட்டங்கள் குறித்தும் சுவாரசியமாக பல தகவல்களைச் சொல்லிக் கொண்டு போகிறார். கூடவே தகவல்களைச் சேகரிக்க, சரிபார்க்க தான் பட்ட பாடுகளையும்.
மதுரையின் கோவில்கள், திருவிழாக்கள் பற்றி விரிவாக, ஆழமாகப் பேசுகிறார். தேரோட்டத்தின் போது பல குடும்பங்களுக்கு பரம்பரையாக ஒரே வீட்டு வாசலில் உட்காரும் பழக்கம் இருந்ததை மிகச் சரியாகக் கவனித்திருக்கிறார். ஆடி வீதிகளில் நடக்கும் வாரியார் சொற்பொழிவுகளை சிலாகிக்கிறார். இலக்கியப் பரிச்சயம் நிறைய இருப்பதால் மு.சுயம்புலிங்கத்தின் கவிதைகளெல்லாம் இடையில் வருகிறது.
அவரது கால புத்தக நிலையங்களான மீனாட்சி, அன்னம், NCBH ஆகியவற்றோடு அவரது தொடர்புகளை, புத்தகங்களுக்காக அலைந்து திரிந்ததை… சோவியத் நூல்கள் தன் சிந்தனையைப் புரட்டிப் போட்டதை… பழைய புத்தகக் கடைகளில் தான் கண்ட புதையல்களை வரிசைப்படுத்திக் கொண்டே போகிறார். பெரும் இசை ரசிகரான சுப்பாராவ் மதுரையின் இசை வரலாற்றை விரிவாகச் சொல்கிறார். இசைக் கச்சேரிகள், பாட்டுக் கச்சேரிகள், இசைக் கலைஞர்கள் பற்றி நிறைய தகவல்கள் எஸ்.ஜி. கிட்டப்பா தொடங்கி ஜான் சுந்தரின் நகலிசைக் கலைஞனில் வந்து முடிக்கிறார். ஜலதரங்கக் கச்சேரி ஒன்றை மிக அருகில் இருந்து பார்த்திருக்கிறார். இசைக் கலைஞர்களது பழக்க வழக்கங்கள், அவர்கள் வாழ்ந்த வீடுகள், தெருக்கள் பற்றி விஸ்தீரணமாகச் சொல்கிறார். மதுரையின் புகழ்பெற்ற நாடகத் தெருவான சுண்ணாம்புக்காரத் தெருவில் அவர் கண்ட நாடக நடிகர்கள், அவர்களது இன்றைய நிலை பற்றி அக்கறையோடு பதிவு செய்கிறார். அவர்களில் பலருக்கும் கலைஞர் மேல் மரியாதை இருப்பதைச் சுட்டிக்காட்டுகிறார். வள்ளி திருமணம் நாடகத்தில் வள்ளிக்கும், நாரதருக்கும் நடக்கும் வாதப் பிரதிவாதம், பாட்டுப்போட்டி, எசப்பாட்டுகளை படம் பிடித்துக் காட்டி விடுகிறார்.
காமராஜர் மதிய உணவுத்திட்டம் கொண்டு வருவதற்குக் காரணமாக இருந்த செளராஷ்டிர இன மக்களின் பள்ளி பற்றி புள்ளிவிவர தகவல் சொல்கிறார். ஆரியங்காவில் நடக்கும் புஷ்கலா தேவி – ஐயப்பன் திருமணத்திற்கு மதுரையில் இருந்து செளராஷ்டிர இன மக்கள் பாண்டியன் முடிப்பு என்ற சீர் கொண்டு சென்று திருமணம் முடித்து வருவதை அழகாகச் சொல்கிறார், சுப்பாராவ். அவர்களின் உணவு வகைகளையும் விட்டுவைக்கவில்லை. முள் முருங்கை வடை ( பங்கரப்பான் பைரி ), லெமன் பொங்கல், தக்காளிப் பொங்கல்… சாம்பாரும் சட்னியும் எவ்வளவு கேட்டாலும் சுணங்காமல் சுளிக்காமல் சட்டியைக் கொண்டுவந்து நம் பக்கத்தில் வைத்துவிட்டுப் போய்விடுகிறார்கள் இன்றைக்கும்.
மதுரையின் கேசட் கடைக்காரர்களுடன் தனக்கும் தன் காலத்தவர்க்கும் இருந்த உறவை விளக்க தனி அத்தியாயம். ஐம்பது வயதுக்காரர்களைக் கேட்டால் தங்கள் வாழ்வின் பொற்காலம் என்று அந்த கேசட் காலத்தைத்தான் சொல்வார்கள். அவரது அலுவலகத்திற்கு அருகில் சிறுநீர் கழிக்கும் இடத்தை மக்கள் திறந்த வெளிப் புல்வெளிக் கழகமாக மாற்றிவிட்டனர் என்கிறார். சொல் விளையாட்டு. கட்டபொம்மனைத் தூக்கிலிட்ட ஜாக்சனின் கல்லறையும், அமெரிக்கன் கல்லூரியை இப்போது உள்ள நிர்மாணித்த ஜம்புரோ அவர்களின் கல்லறையும் ஒரே இடத்தில் இருப்பதைப் பதிவு செய்கிறார். கூட்டம் கட்டி ஏறும்… கூட்டம் குமியுது என்ற மதுரைக்கே உரிய வட்டாரச் சொற்கள் வந்தவண்ணம் இருக்கின்றன. படிக்கும்போது அப்படி ஒரு நெருக்கம் வந்து உட்கார்ந்து கொள்கிறது.
36 சின்னஞ்சிறு குழந்தைகள் பள்ளிக் கட்டிடம் இடிந்து விழுந்து இறந்ததற்காக, அதைத் தடுக்காது வேடிக்கை பார்த்ததற்காக, அரசி மீனாட்சியை மதுரை மக்கள் இன்று வரை மன்னிக்கவே இல்லை என்று சொல்கிறார். சரியான அவதானிப்பு.
மதுரை நகரின் தற்கால களப் போராளிகளை, செயல்பாட்டாளர்களை வெளிச்சத்துக்கு கொண்டு வந்துவிடுகிறார். பசுமை நடை முத்துக்கிருஷ்ணன், கலகல வகுப்பறை சிவா, ஓவியர் லோகு போன்றோர்களை பொருத்தமான இடத்தில் அறிமுகம் செய்துவிடுகிறார்.
புத்தகங்களில் எந்த வரியையும் படித்துவிட்டு அப்படியே கடந்து போனோம் என்றால் அந்த வரி நமக்குச் சொல்லிய தகவல் மட்டும் மனதில் நிற்கும். குறிப்பிட்ட ஒரு வரியைக் கடந்து போகாமல், அது தொடர்பான செய்திகளைத் தேடிப் போனால் அந்த ஒற்றை வரி ஒரு தனி உலகமாக விரியும். அதுவும் அந்த ஒற்றை வரி ஒவ்வொரு பகுதிக்கும், தெருவிற்கும், வீட்டிற்கும், அந்த வீட்டின் ஒவ்வொரு மனிதருக்கும் சொல்வதற்காக ஒரு கதையை வைத்திருக்கும் மதுரை நகரத்தைப் பற்றியது என்றால் சொல்லவே வேண்டாம். அந்தத் தேடல் முடிவற்று சென்றுகொண்டே இருக்கும்…. என்று எழுதுகிறார், சுப்பாராவ். மதுரைக்கு மிகச் சரியாகப் பொருந்தும் கச்சிதமான வார்த்தைகள்.
நூல் : மதுரை போற்றுதும்
ஆசிரியர் : ச.சுப்பாராவ்
வெளியீடு : Sandhya Pathippagam
விலை : ₹200