நூல் அறிமுகம்: சாமிகளின் பிறப்பும் இறப்பும் – முனைவர் சு.பலராமன்
ச.தமிழ்ச்செல்வனின் “ஒரு சாப்பாட்டு ராமனின் நினைவலைகள்” – ராஜேஷ் நெ.பி
ஒரு சாப்பாட்டு ராமனின் நினைவலைகள்
ச.தமிழ்ச்செல்வன் (ஆசிரியர்)
பாரதி புத்தகாலயம்
₹90
புத்தகம் வாங்க கிளிக் செய்க : https://thamizhbooks.com/
மூத்த எழுத்தாளர் தோழர் ச.தமிழ்ச்செல்வன் அவர்களின் “ஒரு சாப்பாட்டு ராமனின் நினைவலைகள்” புத்தகம் வாசித்தேன். சமையல் செய்வது பெண்களுக்கானதல்ல, ஆண்களுக்கானது என்று உரக்கக் கூறும் நூல். அடுக்களையில் அவர் அடி எடுத்து வைத்த நாள் முதல் இன்றுவரை அவருடைய அனுபவங்களையும் நினைவுகளையும் ருசியாக வாசகருக்கு பரிமாறி உள்ளார். பாரபட்சம் இல்லாமல் அனைவரும் சமைக்க வேண்டும்.குறிப்பாக ஆண்கள் சமையல் செய்ய வேண்டும் என்றும் அதற்கான காரணங்களையும் அவருக்கே உண்டான முற்போக்கு பார்வையில் எடுத்துரைக்கிறார்.அவருடைய அனுபவங்களிலிருந்து பல்வேறு விதமான உணவுகளை ருசித்த விதமும் ரசித்த விதமும் சுவைபட குறிப்பிடுகிறார்.புத்தகத்தில் அவர் கையாண்ட விதம் நகைச்சுவையாகவும் சிந்திக்கத் தூண்டும்படியாக உள்ளது.
‘உதாரணமாக ராணுவத்தில் துப்பாக்கி சுடுவதைவிட கஷ்டமான வேலை இந்த ரொட்டி சுடுவது’,
‘கண்ணீரே வந்துவிட்டது. கருவாட்டுக் கண்ணீர்’
‘சேவும்,முறுக்கும் தின்ற வாய் அல்வாவை இயல்பாக நிராகரித்தது’,
‘ஒருத்தர் குணத்தை பந்தியில் பார்த்துவிடலாம்’ போன்றவை.
வரலாற்றில் சமையலின் பங்கு புத்தகத்தில் பல்வேறு இடங்களில் பரிமாறப்பட்டுள்ளது. இடையில் தொட்டுக்கொள்ள ஊறுகாய் போல சில அரசியல் நையாண்டியும் உள்ளது கூடுதல் சிறப்பு.சமையல் என்பது ஒரு கலை, அதை அனுபவித்து செய்யும்போது யாராலும் எளிமையாக சுவையாக சமைக்க முடியும் என்றும் கூறுகிறார். வரும் நாட்களில் நானும் முயற்சி செய்து பார்க்கலாம் என்று தோன்றுகிறது. தோழர் ச.தமிழ்ச்செல்வன் அவர்களை நேரில் சந்தித்தபோது “வீடு கட்டும்போது சமையலறையை பெரிதாக கட்ட வேண்டும்” என்று கூறியதற்கான காரணத்தை இப்போது உணர்கிறேன். தோழர் அவர்களின் அருமையான சமையல் குறிப்புகளும் அதை அவர் எழுத்துக்களை கோர்த்து கூறும்போது வாசகனுக்கு பல இடங்களில் நாக்கில் கப்பலோடும் என்பது உறுதி. சிறப்பான நூலினைப் படித்த திருப்தி கிடைத்தது. இதற்கு காரணமான எழுத்தாளருக்கும், பதிப்பகத்தாருக்கும் மனமார்ந்த நன்றி.
இப்படிக்கு
ராஜேஷ் நெ.பி
சித்தாலப்பாக்கம்,
சென்னை
எச்சமும் சொச்சமும் – அருண்மொழி வர்மன்
ஒரு சாப்பாட்டு ராமனின் நினைவலைகள்
ச.தமிழ்ச்செல்வன் (ஆசிரியர்)
பாரதி புத்தகாலயம்
₹90
புத்தகம் வாங்க கிளிக் செய்க : https://thamizhbooks.com/
சூரியகாந்தியில் நான் எழுதிவந்த பத்தியில் 90களில் யாழ்ப்பாணத்தில் இருந்த சாப்பாட்டுக் கடைகள் பற்றியும் அவற்றுடனான எனது நினைவுகள் குறித்தும் ”நான் கடந்த நளபாகம்” என்ற தலைப்பில் எழுதியிருந்தேன். கடைகளில் சாப்பிடுவதுடன் ஒவ்வொரு கடைகளுக்கும் இருக்கக்கூடிய சிறப்பான உணவுகள், உணவுத் தயாரிப்பு முறை, உபசரிப்பு என்பன குறித்து கவனிப்பதும் இயல்பாகவே எனக்குப் பழக்கத்தில் வந்திருக்கின்றது என்றே நினைக்கின்றேன். மிக எளிமையான உணவுப் பழக்கத்தை வழமையாகக் கொண்ட, உணவு பற்றியும் அதன் சுவை குறித்தும் அதிகம் பேசும் வழக்கத்தைக் கொண்டிராத அப்பம்மா வீட்டில் சிறு வயதில் வளர்ந்து வந்த எனக்கு எப்படி இந்த இயல்பு வந்தது என்பது இப்போதும் எனக்குத் தெரியவில்லை. ஆனால் தனிப்பட்ட முறையில் எனது ரசனைகளைக் கூர்மைப்படுத்தியதிற்கு மேலாக நண்பர்கள் வட்டத்துடனான உறவுகளை மேம்படுத்தவும், பரவலாக்கவும் நண்பர்களுடன் சேர்ந்து உணவுண்ணல், உணவு தயாரித்தல், சமைத்தலையும் அதற்கான திட்டமிடலையும் முன்னின்று செய்தல் ஆகிய குணாம்சங்கள் உதவின என்றே சொல்லவேண்டும்.
எமது நோக்கு நிலையையும் நாம் எம்மைச் சுற்றி நடப்பவற்றை எவ்வாறு புரிந்துகொள்கின்றோம் என்பதையும் அவற்றுக்கு எப்படியாக எதிர்வினையாற்றுகின்றோம் என்பதையும் எமது வாசிப்பும் அனுபவமும் நனவிலி மனதில் இருந்துகொண்டு தீர்மானிக்கின்றன என்றே கருதுகின்றேன். குறைந்தபட்சம் என்னளவில் அப்படித்தான் இருக்கின்றது. மாறிவரும் உணவுப்பழக்கங்கள், சடங்குகளில் பரிமாறப்படும் உணவுகளில் ஏற்பட்டிருக்கின்ற மாற்றங்கள், உணவகங்களின் பட்டியலில் ஏற்பட்டு வருகின்ற மாற்றங்கள், நான் வாழ்கின்ற ரொரன்றோவில் நிலவுகின்ற “பல்கலாசார சூழலின்” காரணமாக உருவாகி இருக்கின்ற புதிய உணவுகளும், உணவுப் பழக்கங்களும் என்பன குறித்து நண்பர்களுடன் நீண்ட நேரம் உரையாடியிருக்கின்றபோதும் அவை பெரிதளவில் எழுத்தாக்கப்படவில்லை.
உணவு பற்றியும் சாப்பிடுவது பற்றியும் பேசுவதே கூட மரியாதைக் குறைவானதாக பார்க்கப்படுகின்ற சூழலில், அவை குறித்து பெரியளவில் நூல்களும் வரவில்லை. நாவல்கள், சிறுகதைகளில் கூட உணவு குறித்த மிகச்சில விபரமான வர்ணிப்புகளே சட்டென்று நினைவுக்கு வருகின்றன. உணவென்றவுடன் உடனே நினைவுக்கு வருவதே அ. இரவியின் எழுத்துகள் தான். எனக்கு அதிகம் பிடித்திராத அவரது 1956 நாவலில் கூட கிடாய் அடித்துச் சமைப்பது குறித்தும் அன்றைய நாட்களில் உண்ட உணவுகள் குறித்ததுமான வர்ணனைகளை திரும்பத் திரும்ப வாசித்திருக்கின்றேன். அவரது எழுத்துகளூடாக மாத்திரம் அல்லாமல் தனிப்படவும் புதிய புதிய உணவு தயாரிப்பு முறைகளுடன் உரையாடுபவர் தமயந்தி. அவரது புழுங்கலரிசிச் சோறுடன் குஞ்சுக்கணவாயின் புளி அவியல் என்பதை நினைக்கும்போதெல்லாம் கணவாய்ப்பசி வரும். புலம்பெயர் வாழ்வின் உத்தரிப்புகளையும் வேலத்தளங்களில் நிகழும் சுரண்டல்களையும் சிறப்பாகப் பதிவுசெய்த முக்கிய நாவல்களில் ஒன்றான ஜீவமுரளியின் லெனின் சின்னத்தம்பி கேட்டரிங்குகளில் பணிபுரிவோரின் வாழ்வைச் சொல்வதோடு உணவுக்கலாச்சாரம் குறித்தும் பேசியிருந்தது. வீரபாண்டியன் எழுதிய பருக்கை என்கிற நாவல் கிராமங்களில் இருந்து உயர்கல்வி கற்பதற்காக சென்னைக்கு வரும் ஏழை மாணவர்கள் செலவுகளுக்காக கேட்டரிங்க் தொழிலில் ஈடுபவதைக் கதையாகக் கொண்டிருந்தது. எஸ் பொவும், சாரு நிவேதிதாவும், ரமேஷ் பிரேமும் கூட உணவுகள் குறித்து எழுதியவற்றை அனுபவித்து வாசித்தது இப்போது நினைவுக்கு வருகின்றது.
தற்போது தமிழகத்து இதழ்களில் வெவ்வேறு உணவுகள் குறித்தும் உணவுக்கடைகள் குறித்தும் பத்திகள் தொடர்ந்துவருகின்றன. 90களின் இறுதிவரை தமிழகத்து இதழ்களில் சமையல் குறிப்புகள் வெளியாகும்போது மிகமிகப் பெரும்பான்மையாக மரக்கறி உணவுகளுக்கான குறிப்புகளே வெளிவரும். தற்போது இந்நிலை மாறி மச்ச, மாமிச உணவுகளுக்கான தயாரிப்பு முறைகளும் சேர்ந்துவெளிவருவது முக்கியமானதோர் பண்பாட்டு அசைவு. ஆனால் ஈழத்தவர்கள் மத்தியில் உணவுடனான அனுபவங்களை எழுதும் வழக்கம் ஒப்பீட்டளவில் குறைவாகவே இருக்கின்றது. தனிப்பட்ட முறையில் எனக்குத் தெரிந்த பல எழுத்தாளர்களும் செயற்பாட்டாளர்களும் ரசனையுடன் கூடிய புத்தாக்கபூர்வமாக சமைக்கும் ஆற்றல்களைப் பெற்றவர்களாக இருக்கின்றனர். கற்சுறா, அவ்வை, சக்கரவர்த்தி, சேரன், தீபன் சிவபாலன் என்போருடன் எனக்குத் தெரியாத பலரும் இருக்கக்கூடிய நீண்ட பட்டியல் இது. ஆயினும் பொதுவாக உணவு குறித்தும் உணவுப்பண்பாடு குறித்தும் நவீன, சமகால தமிழ் இலக்கியங்களில் அதுவும் குறிப்பாக ஈழத்தவர்களின் எழுத்துகளில் குறைவான பதிவுகளையே காணமுடிகின்றது.
சமைப்பது என்பது சிறுவயது முதல் எனக்குப் பிடித்தமான வேலைகளில் ஒன்று. சமைக்கிறேன் என்ற பெயரில் நிறைய வீணடிப்புகளை சிறுவயதில் செய்திருக்கின்றேன். பத்து வயதளவில் இருந்தே இயந்திரங்கள் எதையும் பயன்படுத்தாமல் கேக் செய்யத் தொடங்கிவிட்டேன். சீனி முழுதாக கரையாமல் இருக்கும் என்பதால் அம்மாவும் கடைசியில் கை கொடுக்கவேண்டியிருக்கும். அம்மா செய்யும் கேக் மிகவும் மென்மையாக இருக்கும். அதுபோல வரவேண்டும் என்பதற்காக, ஒருமுறை ஒரு கரண்டி பேக்கிங் பவுடருக்குப் பதிலாக நான்கைந்து கரண்டி பேக்கிங் பவுடரைக் கலந்துவிட்டேன். கேக் ஏன் இப்படி கசக்கின்றது என்று எல்லாரும் யோசிக்கத்தான் தயங்கித் தயங்கி உண்மையைச் சொன்னேன். ஆனால் பின்னாட்களில் சமையல் கைவந்துவிட்டது. கோகுலன் என்று எனக்கு நண்பன் இருந்தான், மிகவும் கைதேர்ந்த சமையல் கலைஞன். அவன் சொல்வான், ஒரு சாப்பாட்டை ஒருமுறை சாப்பிட்டால் அதை எப்படி சமைப்பது என்பதும் தெரிந்துவிடும் என்று. சமையலைப் பொறுத்தவரை அதுவே மந்திர வார்த்தை. கூட இருந்த நண்பர்களில் நிறையப் பேருக்கு சமைக்கத் தெரியாது என்பதும் எனக்கு சமைப்பதில் ஆர்வம் அதிகம் என்பதும் சமையலில் நான் மேலும் மேலும் தேர்ச்சியடைய உதவியிருக்கலாம். அதன் தொடர்ச்சியே வீட்டிலும் சமையலை துணைவியாருடன் பகிர்ந்துகொள்வதிலும் துணைவியாருக்கு காத்திராமல் நானே சமையல் செய்வதிலும் உதவியது. வீட்டில் நண்பர்கள், உறவினர்களுடனான சந்திப்புகளும் விருந்துகளும் நடைபெறும்போது உணவினை சமைத்து மேசையில் அடுக்கிவைத்துவிடாமல் அவர்களுடன் பேசிக்கொண்டே சமைப்பது என்வழக்கம். நவீன அடுப்புகளினதும் புகைபோக்கிகளினது உதவியால் இவ்வாறு சமைப்பது வசதியானதாகவும் சாத்தியமானதாகவும் இருந்துவிடுகின்றது. தொழினுட்பத்தின் வளர்ச்சியும் சாத்தியங்களும் வாழ்க்கைமுறையையும் அசைவுகளையும் மாற்றியே இருக்கின்றன. அது இயல்பானதும் விருப்பத்துடன் செய்யும் ஒன்றாகவும் ஆனதாலோ என்னவோ, ஆண்கள் சமைப்பது என்பதை இழிவாகவோ புரட்சியாகவோ பார்க்கும் வழக்கம் எனக்கு அறவே இல்லாமல் இருக்கின்றது. குளித்தலைப்போல, உண்பதைப்போல மிக இயல்பான ஒன்றாகவே சமையல் எனக்குத் தோன்றுகின்றது.
ச. தமிழ்ச்செல்வனின் ”ஆண்கள் சமைப்பது அதனினும் இனிது” நூல் வெளியாகி, அது தொடர்பான உரையாடல்கள் இடம்பெற்றுக்கொண்டிருந்தபோது ஆண்கள் சமைப்பது என்பதை அவ்வளவு பெரியவிடயமாகப் பார்க்கவேண்டுமா என்றே தோன்றியது. பெண்கள் வேலைக்குபோவது பொருளாதார ரீதியில் அவசியமாக மாறிவருவதால் ஆண்கள் சமையலில் பங்கேற்பது அவசியமாகி வருவதும் சமையல் என்பது தொழினுட்பங்களின் சாத்தியங்களினால் இலகுவாகிவருவதாலும் இயல்பாகவே பெண்கள்தான் சமைக்கவேண்டும் என்ற நிலைமாறிவிடும், ஏன் இதை பெரியவிடயமாகப் பேசுவான் என்றே நம்பினேன். ஆனால், இப்போது பார்க்கின்றபோது அந்த நூலினை ஆண் சமையல் என்பதைவிட சமையல், உணவுப் பழக்கம் என்பதனூடாக பேணப்படும் அரசியல் / அதிகாரம், பண்பாட்டு அசைவுகள் என்பன குறித்ததான கோணத்தில் அணுகியிருக்கவேண்டும் என்று தோன்றுகின்றது. ச. தமிழ்ச்செல்வன் எழுதியிருக்கும் இன்னொரு நூலான “ஒரு சாப்பாட்டு ராமனின் நினைவலைகள்” அந்த வகையில் சுவாரசியமானதோர் வாசிப்புக்குரியது.
தென்னாசியர்கள் அதிகளவில் நீரிழிவு நோயினாலும் இதயநோய்களாலும் பாதிக்கப்படுபவர்களாக இருக்கின்றார்கள் என்று புள்ளிவிபரங்கள் திரும்பத் திரும்பக் கூறுகின்றன. அதற்கான பரிகாரமாக “ஆரோக்கியமான உணவுகளுக்கு” மாறும்படியான மருத்துவ அறிவுறுத்தல்களும் விளம்பரங்களும் நிறைந்திருக்கின்றன. முக்கியமான ஒரு பரிகாரமாக அவர்கள் முன்வைப்பது சிறுதானியங்களை உணவாக்குவது குறித்தது. இயல்பாகவே எமது உணவுப்பழக்கத்தில் இருந்த சிறுதானியங்களின் பாவனை எவ்வாறு குறைந்து, அவை சுவை குறைந்தவை என்றும் நாகரிகம் இல்லாதவை என்றும் ஒரு கற்பிதம் ஏற்பட்டு கோதுமை மாவுக்கும் நெல்லரிசிக்கும் நாம் குறுதிய காலத்தில் அடிமையாகிப்போனோம் என்பதை இந்த நூலில் உள்ள பல கட்டுரைகளின் வாயிலாகக் காணக்கூடியதாக இருக்கின்றது.
1970களின் தன் இளவயதுக் காலத்தை நினைவுகூறும் தமிழ்ச்செல்வன் பரோட்டா ஒரு சத்தான உணவு என்ற நம்பிக்கை அப்போது பலமாக இருந்தது என்று கூறுகின்றார். எமது பாரம்பரிய உணவுப்பழக்கத்தில் இருந்த விடயங்களுக்கு பதிலாக புதிதாகப் புகுத்தப்பட்ட புதிய பழக்கங்கள் பலவும் இப்படியான கவர்ச்சியான விளம்பரங்களுடன் தானே புகுத்தப்பட்டன. சில ஆண்டுகளுக்கு முன்னர் எமது குடும்ப வைத்தியராக இருந்த ஒரு ஜெர்மானியர், எமது மகன் பிறந்தபோது மரபான உங்கள் உணவுப்பழக்கத்தையும் உணவுகளையுமே உங்கள் மகனுக்கும் பழக்குங்கள் என்று பரிந்துரைத்து, அதற்கான காரணங்களைக் கூறியபோது அவர் பொரிப்பதை மட்டும் விட்டுவிட்டால் உங்கள் உணவு தயாரிப்புமுறைகள் ஒப்பீட்டளவில் ஆரோக்கியமானவை என்று சொன்னார். அண்மையில் இறந்த நாட்டாரியல் அறிஞர் தொ. பரமசிவன், சங்க இலக்கியங்களைச் சுட்டிக்காட்டி தமிழர் வாழ்வில் உணவுத்தயாரிப்பில் அவித்தல், வறுத்தல், அரைத்தல் என்பன உண்டு; பொரித்தல் இருக்கவில்லை என்று சுட்டிக்காட்டியுள்ளார். தொ.பவின் மரணத்தின் பின்னர் அவரது அனைத்து நூல்களையும் மீள வாசித்தபோது, மேற்சொன்ன அவரது கருத்தை வாசிக்கின்றபோது எமக்கு எமது குடும்ப வைத்தியர் சொன்னதே நினைவுக்கு வந்தது.
உணவுப் பண்பாடு என்பது சமூக உறவுகளுடனும் நெருங்கிய தொடர்புகளைக் கொண்டதாகவே இருந்திருக்கின்றது. கிராமங்களில், ஒரு பெண் கர்ப்பமுற்றிருந்தால் தங்கள் வீடுகளில் சமைக்கின்ற விசேட உணவுகளை ஒரு கிண்ணம் அவளுக்குக் கொடுத்தனுப்புகிற வழக்கம் இருந்ததை குறிப்பிடுகின்றார். அதுபோல திருநெல்வேலியில் முறுக்குச் சுட்டு விற்பவர்கள் முதியவர்களுக்கு கடித்துச் சாப்பிட இலகுவாக இருக்கவேண்டும் என்பதற்காக முறுக்கை சற்று மென்மையாக இருக்கத்தக்கதாக முக்கால் பதத்திலேயே இறக்கிவிடுவார்கள் என்றும் குறிப்பிடுகின்றார். இதுபோல நிச்சயமாக ஈழத்தவர்கள் மத்தியிலும் பல்வேறு வழக்கங்கள் இருந்திருக்கும். அவைகுறித்து எழுதப்படுவது அவசியம்.
நாம் உண்ணுகின்ற உணவைத் தயாரிக்க என்னவெல்லாம் பயன்படுத்தப்பட்டிருக்கின்றது என்று தெரிந்திருப்பதோடு, அவை ஒவ்வொன்றும் எப்படி உருவாக்கப்பட்டவை, எங்கிருந்து வந்தவை என்ற அறிதலை அடைவதே பண்பாட்டு அரசியலை உணர்வதற்கான எளிமையான திறவுகோலாகிவிடும். கீரைகள் எல்லாநாட்டிலும் தாமாக வளரக்கூடிய குறைந்தவிலையில் கிடைக்கக்கூடிய உணவாகவே இருந்திருக்கும். இப்போது கனடாவில், தமிழ்க் கடைகளில் விலை கூடிய மரக்கறிகளில் ஒன்றாக பொன்னங்காணி, அகத்தி, முருங்கையிலை போன்ற கீரைகள் விற்பனையாகின்றன. இங்கே குறைந்த விலைக்குக் கிடைக்கும் கேல், லெட்டஸ் போன்றவை இலங்கையில் ஆரோக்கியமான உணவுகளாக அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. இலங்கையில் உற்பத்தி செய்யப்படும் கருவாடு வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டு வெளிநாடுகளில் இருந்து தரங்குறைந்த கருவாடு இலங்கைக்கு இறக்குமதி செய்யப்படுவது குறித்து தமயந்தி பதிவுசெய்திருக்கின்றார். பாலின சமத்துவத்தை மட்டுமல்ல, பண்பாட்டு அரசியல் பற்றி அறிவதையும் நாம் சமையலறைகளில் இருந்தே தொடங்கலாம்.