நூல் அறிமுகம் : சம்சுதீன் ஹீரா வின் மயானக்கரையின் வெளிச்சம் – பீட்டர் துரைராஜ்

நூல் அறிமுகம் : சம்சுதீன் ஹீரா வின் மயானக்கரையின் வெளிச்சம் – பீட்டர் துரைராஜ்



மதவெறி அரசியலில் தொலைந்திடும் மனிதம் பேசும் கதைகள்!

நூல்: மயானக்கரையின் வெளிச்சம்
ஆசிரியர்: சம்சுதீன் ஹீரா
வெளியீடு: பாரதி புத்தகாலயம்
விலை: 120
தொடர்புக்கு :044- 24332424

புத்தகம் வாங்க இங்கு க்ளிக் செய்யவும்: thamizhbook.com

சமகால சமூக அரசியல் பிரச்சினைகளைகளுக்கு உயிர்ப்புள்ள இலக்கிய வடிவம் தந்துள்ளார் சம்சுதீன் ஹீரா! மதக் கலவரங்களில் எளிய மனிதர்களும், அவர் தம் குடும்பங்களும் படும் சொல்லொண்ணா துயரங்களை படிக்கும் யாருக்குமே வெறுப்பு அரசியலை பொறுப்போடு அணுகும் அனுபவம் கைகூடும்!

‘மயானக்கரையின் வெளிச்சம்’ என்ற சிறுகதைத் தொகுப்பை சம்சுதீன் ஹீரா எழுதியுள்ளார். இதில் ஒன்பது சிறுகதைகள் உள்ளன. பாரதி புத்தகாலயம் வெளியிட்டுள்ள இக்கதைகள் வெறுப்பு அரசியலிலின் குரூர முகத்தைக் காட்டுகின்றன. எளிய வார்த்தைகளில், இதில் விவரிக்கப்படும் சித்திரங்கள் மனித மனசாட்சியை உலுக்குகின்றன; குற்ற உணர்ச்சியை ஏற்படுத்துகின்றன.

இரண்டாம் உலகப் போர் சமயத்தில் யூதர்களுக்கு எதிரான நடவடிக்கைகளை ஹிட்லர் திட்டமிட்டு செய்தான். முதலில் அவர்களுக்கு எதிரானப் பிரச்சாரத்தை செய்தான். பிறகு யூதர்களின் வியாபாரத்தை தடைசெய்தான். அவர்களை அரசாங்க பதிவேட்டில் கணக்கிட்டு, பின்னர் முகாம்களில் அடைத்தான்; பின்னர் கும்பல், கும்பலாக இனப்படுகொலை செய்தான். வியாபாரிகளாலும், ஊடகங்களாலும், ஜெர்மனி நாட்டு மக்களாலும் ஓகோவென்று புகழப்பட்ட ஜெர்மனியின் சர்வாதிகாரி இரண்டாம் உலகப்போரின் இறுதியில் தற்கொலை செய்து கொண்டான். அவனை ஒரு கொடுமைக் காரனாகத்தான், இப்போது ஜெர்மனி நாட்டு மக்களே நினைக்கின்றனர். அப்போது நடந்த சித்திரவதைகளை, வெறுப்பு அரசியலை, இனப் படுகொலைகளையும்; அதற்கு எதிராக துளிர்த்த மனிதாபிமான குரல்களையும் காட்சிப்படுத்தி ஷிண்டலர்ஸ் லிஸ்ட், ஜோ ஜோ ரேபிட், தி பியானிஸ்ட் போன்ற எண்ணற்ற திரைப்படங்கள் வெளிவந்துள்ளன. பல கதைகள் வெளிவந்துள்ளன.

ஜோ ஜோ ராபிட்- ஒரு பாஸிச பரவலை நகைச் சுவையோடு சித்தரிக்கும் படம்!

சமகாலத்தில் நடைபெறும் சம்பவங்கள் படைப்புகளாக வெளிவருவது இயல்பானதே. ஏனெனில் இலக்கியங்கள் காலத்தின் கண்ணாடியாகும். யதார்த்தங்களை பிரதிபலிக்கும் படைப்புகள் வெற்றிபெறும்; வரலாற்றில் நிலைபெறும். உண்மையான படைப்பாளிகளால் மனித குலத்திற்கு எதிராக யோசிக்க முடியாது. எந்த அரசியலை பேசுகின்ற அமைப்பாக இருந்தாலும், ஒரு கட்டத்தில் படைப்பிலக்கியவாதிகள், மக்களுக்கு பாதிக்கும் அரசுக்கு எதிராகத் திரும்பி விடுவார்கள்.

சம்சுதீன் ஹீரா இரும்புப் பட்டறை ஒன்றை நடத்தி வருகிறார். திருப்பூர் நகரைச் சார்ந்தவர். ‘மௌனத்தின் சாட்சியங்கள்’ என்ற நாவலில் கோயமுத்தூர் குண்டு வெடிப்பை ஒட்டியச் சம்பவங்களை காட்சிப்படுத்தி இருப்பார். அந்த நாவலில் பாதிக்கப்பட்டவர்கள், அலைகழிக்கப்பட்ட அப்பாவிகள், நின்று போன திருமணங்கள், சிதிலமடைந்த குடும்பங்கள், பாரமுகமான அரசு இயந்திரம், குண்டு வெடிப்பின் பேரால் ஒரு இனத்திற்கு எதிராக நடந்த வன்முறைகள் போன்றவை உள்ளன. இந்த நாவலுக்கு வாசகசாலை விருது, கலை இலக்கியப் பெருமன்றம் விருது, தமுஎகச விருது , சமூக நீதி விருது, முற்போக்கு கலை இலக்கிய மேடை விருது கிடைத்துள்ளன. இஸ்லாமிய சிறைவாசிகள் விடுதலை தொடர்பாக நடந்த ஒரு கருத்தரங்கில் ‘இந்த நாவலை தெருவெங்கும் எடுத்துச் சொல்லுங்கள்’ என்று இந்திய கம்யூனிஸ்டு கட்சியைச் சார்ந்த இரா.முத்தரசன் தெரிவித்தார்.

சம்சுதீன் ஹீரா, தனது இரண்டாவது படைப்பாக, மயானக்கரையின் வெளிச்சம்’ என்ற சிறுகதைத் தொகுப்பைக் கொண்டு வந்துள்ளார். பெரிய சொல்லாடல்கள் இல்லை; இலக்கியத் தோரணை இல்லை. யதார்த்தமாக, ஒருவர் பேசும் வார்த்தைகளில் கதைகளைச் சொல்லி இருக்கிறார்.

Mayanakkaraiyiṉ Velicham Book By Samsutin Hira BookReview By Pittar Thurairaj - நூல் அறிமுகம் : சம்சுதீன் ஹீரா வின் மயானக்கரையின் வெளிச்சம் - பீட்டர் துரைராஜ்அகமதாபாத், கோத்ரா காவல் நிலையத்தில் சைக்கிளின் பின்புறம் டீ பாய்லரை வைத்து வியாபாரம் செய்யும் ரபீக்கைப் பற்றிய கதை ‘நரோடா காவ்ன்’. கலவரம் நடந்த இரயில் நிலையத்திற்கு, ‘நான்கு மணி நேரம் சபர்மதி எக்ஸ்பிரஸ் தாமதமாக வந்தது ஏன் ? ஐந்து நிமிடம் அந்த இரயில் நிலையத்தில் நிற்க வேண்டிய இரயில் அன்று அரைமணி நேரம் நின்றது ஏன் ? இரயிலின் அபாயச் சங்கிலியை மூன்று முறை பிடித்து இழுத்து நிறுத்தியது யார் ? காலை எட்டு மணிக்கு வைக்கப்பட்ட தீ மாலை வரை எரிய அனுமதிக்கப்பட்டது எப்படி? கூப்பிடும் தூரத்தில் காவல் நிலையம் இருந்தும் ஏன் போலீஸ் அங்கே வரவில்லை. பிணங்களை எடுத்துக் கொண்டு இந்து அமைப்பினர் ஏன் நகரம் முழுவதும் ஊர்வலமாகச் சென்றார்கள் ? இரவு முழுவதும் பேரல், பேரலாக பெட்ரோல் சேகரிக்கப்பட்டது எதற்கு?’ என்ற கேள்விகளை, சந்தேகங்களை பத்திரிகைகள் வாயிலாக அனைவரும் அறிந்திருக்கக் கூடும். ஆனால் ரபீக்கின் மகன் யார் ? சிறுவன் இம்ரானின் கால்கள் செயலிழந்தது ஏன் ? அது எப்படி இந்தக் கதைக்கு பொருத்தமானது ! அவனுடைய மனைவி சாயிரா என்ன ஆனாள் ! அவர்கள் குடியிருந்த வீடு எங்கிருந்தது ! இது போன்ற சிறு, சிறு விவரங்கள் எப்படி மனித வாழ்க்கையை புரட்டிப் போடுகின்றன என்பதை மிக பொறுப்போடு விளக்கி இருக்கிறார். இந்தக் கதையைப் படித்தவுடன், என்னால் அடுத்த கதையைத் தொடர முடியவில்லை.

இதிலுள்ள கதைகள் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்தவை. தகவல்களைத் திரட்டி இதனை எழுதியிருக்கிறார். கதைகளில் இலேசான ஆவணத்தன்மை தென்படுகிறது. ஆனாலும் இது ஒரு முக்கியமான படைப்பு. இதனை வெளியிட்டமைக்காக பாரதி புத்தகாலயம் பெருமைப்பட்டுக் கொள்ளலாம்.

“எழுதத் தேர்ந்திடும்/ நிராகரித்திடும் கருப்பொருள், களம், கதை மாந்தர், மொழி எல்லாவற்றையும் தீர்மானிப்பதாய் ஒருவரது தற்சார்பும், அகநிலையுமே இருப்பது அரசியலன்றி வேறென்ன ?” என்று அணிந்துரையில் ஆதவன் தீட்சண்யா குறிப்பிடுகிறார். ‘தன் காலத்தை எழுதுதல்’ என்று அணிந்துரைக்கு, பொருத்தமான தலைப்பிட்டுள்ளார்.

‘மயானக்கரையின் வெளிச்சம்’ என்பது இந்த நூலின் இறுதிக் கதை. இது குடியுரிமை திருத்தச் சட்டம் அமலானால் என்ன நடக்கும் என்பதைச் சொல்லும் கதை. நம்மில் பலர் இந்தச் சட்டத்தை எதிர்த்து போராடியிருக்கக் கூடும். ஆனால், இது அமலானால் எப்படியெல்லாம் நபர்களை பொறுக்கியெடுத்து, முகாமிற்கு அனுப்ப முடியும் என்பதை அவதானித்து இக்கதை எழுதப்பட்டுள்ளது. ஒரு குறிப்பிட்ட ஆவணம் இல்லையென்றால் மற்ற அனைத்து ஆவணங்களும் செல்லாததாகிவிடும். வங்கிக் கணக்கு முடக்கப்படலாம். பள்ளியில் சேர்க்க முடியாது. கணவன், மனைவி ஒரே முகாமில் இருக்க முடியாது. ஆதரவளிக்கும் சக நபர்கள் மீது குற்றவியல் நடவடிக்கை வரும். இப்படிக் கொஞ்சம் கொஞ்சமாக அரசின் சுருக்குக் கயிறு இருகுகிறது. அரசு தனது குடிமக்களை ‘எண் பொறிக்கப்பட்ட விலங்காக’ மாற்றுகிறது.

இதுபோல ‘புனிதச் சமர்’ என்ற கதையில் ஒரு பொறுக்கி தான் செய்த கொலையை, ‘லவ் ஜிகாதில்’ கொண்டு வந்து, அதனை மத மோதலாக்குகிறான்; வசூலிக்கிறான். ஏற்கனவே தான் செய்த ‘சம்பவத்தை’, அவரச சிகிச்சைப் பிரிவில் இருக்கும் தனக்கு, தன்னுடைய சீடன் செய்வதை ‘நிகழ்தகவு’ கதை சொல்கிறது. இதைப் போலவே மற்ற கதைகளும் உள்ளன.

“நாட்டில் நடப்பதைச் சொல்லியிருக்கிறேன். இதில் உங்களுக்குப் பிடிக்காதது இருந்தால் ” இப்படியெல்லாம் ஏன் நடக்கிறது?” என்று வேண்டுமானால் கேளுங்கள்; இதையெல்லாம் ஏன் எழுத வேண்டும்? ” என்று கேட்டுத் தப்பித்துக் கொள்ள பார்க்காதீர்கள்” ‘ என்று எழுத்தாளர் ஜி.நாகராஜன் கூறுவார். இதைப் படித்து முடிக்கையில், ஜி.நாகராஜன் சொன்னது தான் நினைவுக்கு வருகிறது.

நூல் விமர்சனம்; பீட்டர் துரைராஜ்
பாரதி புத்தகாலயம்/ரூ.120/ 120 பக்கங்கள்/

நன்றி : அறம்