நூல் அறிமுகம் : ஜா.மாதவராஜின் சே குவேரா அமெரிக்க உளவுத்துறையின் ரகசிய குறிப்புகளின் பின்னணியிலிருந்து – சபீர் அலி
நூல்: சே குவேரா அமெரிக்க உளவுத்துறையின் ரகசிய குறிப்புகளின் பின்னணியிலிருந்து
ஆசிரியர்: ஜா.மாதவராஜ்
வெளியீடு: பாரதி புத்தகாலயம்
விலை: 110
தொடர்பு எண்; 044 24332924
புத்தகம் வாங்க இங்கே க்ளிக் செய்யவும் : thamizhbooks.com
சே என்றால் புரட்சி. சே என்றால் போராட்டம். சே என்றால் உரிமை. சே என்றால் சுதந்திர தாகம். சே என்றால் ஏகாதிபத்தியத்தின் வீழ்ச்சி. சே என்றால் மக்களின் நம்பிக்கை.
சே, 20ம் நூற்றாண்டின் மிகத்தீவிரப் புரட்சியாளராவார். அரசியல், சமூக சிந்தனையாளர். தணியாத லட்சிய தாகம் கொண்டவர். அமெரிக்க ஏகாதிபத்தியத்திற்கு எதிராக குரல் எழுப்பியவர். அநீதிக்கு எதிராக தன் துப்பாக்கி ரவைகளை ஓயாது செலுத்தியவர். கோடான கோடி மக்களின் புரட்சி நாயகன். போராட்ட மாவீரர். இறந்து போனாலும் இன்னும் உலக மக்களின் மனதில் வாழும் மாமனிதர். இனியும் வாழவிருப்பவர்…
இங்கு சேவை பற்றி அறியாதோர் யாரும் இருக்க முடியாது. வாசிப்பவர்கள் மட்டும் அல்லாமல் அனைவராலும் அறியப்பட்டு போற்றப்படும் புரட்சி வீரர் தான் சே. சேவை பற்றி
நான்கு / ஐந்து புத்தகங்கள் வாசித்திருக்கிறேன். சில நூறு வீடியோக்களும் பார்த்திருக்கிறேன். ஆனால் இன்னமும் சேவை பற்றி அறிந்து கொள்ள வேண்டும் என்று தான் தோன்றுகிறது. அறிய இன்னும் பல ஆயிரம் விடயங்கள் இருக்கின்றன என்பது தான் உண்மையும் கூட. அதனால் தான் என்னவோ எங்கு சேவை பற்றிய புத்தகங்களை பார்த்தாலும் வாங்கி விடுகிறேன்.
இப்புத்தகம் அமெரிக்க உளவுத்துறையின் ரகசிய குறிப்புகளின் பின்னணியிலிருந்து கிடைக்கப் பெற்ற தகவல்களின் அடிப்படையில் இருந்து எழுதப்பட்டதாகும். இதில் சே வின் கடைசி நாட்களைப் பற்றியும் அவரின் மரணம் பற்றியும் சற்று விரிவாகக் கூறப்படுகிறது. சேவின் மரணத்தின் சாட்சிகளின் வாக்குமூலங்களும் பதிவு செய்யப்பட்டிருக்கின்றன. சே, தன் மனைவி, மகள்கள், பெற்றோர்கள் மற்றும் பிடலுக்கு எழுதிய கடிதங்களும் சேர்க்கப்பட்டுள்ளன.
இதில் பிடல் மற்றும் சே விற்கு இடையிலான உறவும் தெளிவாக்கப்பட்டிருக்கிறது.
சே இல்லை எனில் இன்றைய கியூபாவை பிடல் காஸ்ரோ உருவாக்கியிருப்பாரா என்பதும் சந்தேகமே.
லத்தின் அமெரிக்க நாடுகள் மட்டுமன்றி அனைத்து உலக நாடுகளிலும் ஏகாதிபத்தியத்திற்கு எதிரான போராட்டத்திற்கு வித்திட்டவர் சே. அவர் வாழ்ந்த காலம் சொற்பம் என்றாலும் மக்களுக்காக செய்த வேலை அளப்பரியதும் மகத்தானதும். சேவை பின்பற்றி போராட்டம், புரட்சி செய்வோர் அதிகமதிகம். சே மறைந்தாலும் சேவின் புரட்சியும் எண்ணங்களும் சுதந்திர தாகமும் இன்னும் தணியவில்லை. தணியப்போவதும் இல்லை. எங்கெல்லாம் அநீதி தலை தூக்குகிறதோ அங்கெல்லாம் சேவின் துணிச்சலும் கம்பீரமும் கொண்ட இன்னுமொரு சே கை தூக்கிக் கொண்டேதான் இருப்பான்.
சேவை பற்றி இன்னும் சற்று அதிகம் அறிந்து கொள்ள விரும்பினால் நீங்களும் இப்புத்தகத்தை வாசித்துப் பாருங்கள்.
சபீர் அலி
Sabeer Ali,
Akkaraipattu, Sri Lanka