குறுஞ்செய்தி மின்னி சிணுங்கியது. நடுவுலவள் மனம் துள்ளிக் குதித்தது . அவனை வரச்சொல்லி பதிலை அவள் சொடுக்கிவிட்டு அம்மாவிடம் ஓடினாள். “அம்மா, அவர் வந்திருக்கிறாரும்மா; வாம்மா, வந்து பார்த்துப் பேசுமா “ என்று அம்மாவின் முகவாயைப் பற்றிக் கெஞ்சினாள்.
“சீ, விடுடி. ஒன் அண்ணன் எவளோ ஒருத்தியோட ஓடுனதுனால மகள்களை கட்டிக்க இனி சொந்த சாதிக்காரன் எவன் இந்த ஓடுகாலு குடும்பத்தில சம்பந்தம் பண்ண வரப்போறான்னு, அப்பங்காரரு நொந்து மண்டையைப் போட்டுடாரு. எப்படியாவது, உன்னையும், ஒந்தங்கச்சியையும் கரை ஏத்திறவரை உசிரைவிட்டுறக் கூடாதுன்னு மூச்சை இழுத்துப் பிடிச்சிக்கிட்டு கிடக்கேன். இந்த லட்சணத்தில நீயும் ஒருத்தனை இழுத்துட்டு வந்து பாருங்கிற. நான் பார்க்க வரமுடியாதுடி. அவனைப் போகச் சொல்லு.”
ஆசையாய் வைத்த சுடுபாயசத்தை முகத்தில் ஊற்றியதும் வடிந்த பால்போக கன்னத்தில் ஒட்டிய சேமியா நெருப்பாக காந்துவதுபோல் அம்மாவின் ஒவ்வொரு சொல்லும் சுட்டது. கண்துளிர்ப்பைத் துடைத்து, முகத்தை மலர்த்தி அண்ணியிடம் ஓடினாள். “மதினி, நீங்க அது யாரு, எவருன்னு பார்வையால துளைச்சீங்களே, அவரு வந்துருக்காரு. நீங்களும் அண்ணனும் நல்லபடியா பேசுங்க மதினி “ கொஞ்சலும் கெஞ்சலும் இசைந்தகுரல் மதினி மனத்தை குளிர்வித்தது. இருவரும் வாசலுக்கு போய்க் கதவைத் திறந்தனர். அவன் புன்னகையுடன் கைகூப்பினான். வாங்க என்று அழைத்தபடி மதினி முன்னே செல்ல, பிந்திய அவளும், அவனும் நொடிப்பார்வையிலே நூறு விசயங்களைப் பரிமாறினர் .
“ உக்காருங்க. அவுங்க அண்ணனை வரச்சொல்றேன் “ஷோபவைக் காட்டினாள். அவன் விளிம்பில் உட்கார்ந்தபடியே காதலி கண்ணோடு கதைத்துக் கொண்டிருந்தான். அவள் பேசுவது இமைத் துடிப்புகளில் தெரிந்தது. அவன் கேட்பது அவனது விரிந்த கண்களில் புலனாகியது. வலப்பக்க அறையின் ஒருச்சாய்த்த கதவு இடைவெளியில் அம்மா அவனை ஊடுருவினாள்.
மதினி தன் கணவனிடம், “உங்க பெரிய தங்கச்சி முகத்தில் புதுப்பொலிவு தெரியுதுன்னு மூணுமாசமா சொன்னேன்; நீங்க காதில போட்டுக்கலை. அவ இப்ப ஒருத்தனைக் கூட்டியாந்திருக்கா. நல்லவனாத்தான் தெரியுது. பார்த்து நிதானமா பேசுங்க.” கணவன் அதிர்ந்த பார்வையோடு நெஞ்சைத் தடவியபடி , “ போ, வர்றேன் “ என்று கைப்பெசியோடு கழிவறைக்குப் போனான்.
மதினி ரெண்டு பிஸ்கட்டையும் , ரெண்டு முறுக்கையும் ஒரு தட்டில் வைத்து காபியோடு கூடத்திற்குப் போனாள். இருவரும் கண்கள் கவ்வ, மூச்சுக்காற்று மட்டும் உயிர்ப்பை உணர்த்த உறைந்திருந்தனர். அவனது மேனியில் அரும்பிக் கொண்டே இருக்கும் வேர்வை மொக்குகளை மேலே சுழலும் மின்விசிறியால் முற்றாகத் துடைக்க இயலவில்லை. நாள்காட்டித்தாள்கள் படபடத்தன. மாதம் காட்டித்தாள்கள் கால்களைத் தூக்கி ஆடின. சுவர்க் கடிகாரம் இதயங்களை எதிரொலித்தது . மதினியின் கால்சுவட்டு அதிர்வுகேட்டு இருவரும் தன்னிலைக்கு வந்தனர்.
“தம்பி இதைச் சாப்பிடுங்க. இதோ அவரு வந்திருவார். ஏன் நீ மசமசன்னு நின்னுகிட்டிருக்கே. வந்தவருக்கு தண்ணி யாவது தந்தியா. போய் அம்மாவை வரச்சொல்லு. அவுங்களும் பார்த்து பேசட்டும்.” மதினியின் சொற்பொறித் தெறிப்பில் அவள் அதிர்ந்து ஓடி குளியலறைக்குள் அடைக்கலம் புகுந்தாள் . அம்மா படுக்கையில் தூங்குவது போலிருந்தாள். வந்தவன் இனிப்பை தின்னவும் முடியாமல் ஒதுக்கவும் முடியாமல் தண்ணீரை மிடறு மிடறாய் குடித்து காத்திருப்பின் புளுக்கத்தைத் தணித்துக் கொண்டிருந்தான். மதினி கணவனை அழைக்கப் போனாள். அவன் கழிவறையில் இருந்தான்.
இவள் பலமுறை கவனித்திருக்கிறாள் , வீட்டில் குடும்ப விசயங்களைப் பேசத்தொடங்கினால் கணவன் செல்லை எடுத்து பதற்றத்தோடு நோண்டிக் கொண்டு இருப்பான்; சிலசமயம் கழிவறைக்குள் நுழைந்து கொள்கிறான். ‘என்ன விவரம் என்று தெரியவில்லை. தப்பித்தல் தந்திரமா, பேசுவதைத் தாமதப்படுத்தும் நோக்கமா, இல்லை , இதுக்கு பின்னணியில் வேறேதுவும் இருக்கானு புரியவுமில்லை. இந்த மனுஷன் வெளியே எப்ப வருவாரோ… பாவம், அந்தப் பையன் தனியே சுவத்தைப் பார்த்துக்கிட்டுருப்பான். ‘அந்தப் பையனிடம் தொலைவியக்கியைக் கொடுத்து “ இந்தா தம்பி, உங்களுக்கு பிடிச்ச சேனலைப் பார்த்துக் கிட்டுருங்க. அவரு பாத்ரூம் போயிருக்கிறார் சீக்கிரம் வந்துருவார்.” சொல்லிவிட்டு அடுப்படிக்குள் நுழைந்தாள்.
இவளுக்கு அடுப்படியில் வேலை ஓடவில்லை. ‘ இன்னக்கி ஞாயிறுனு அவரு ஆட்டுக்கறி எடுத்து வந்திருக்கிறார் . வீட்டில சம்பந்தம் பேசும்போது கசாப்பு சேர்க்கக் கூடாதுன்னு அம்மா அடிக்கடி சொல்லும். இப்ப கறி சமைக்கலாமா , அது நல்லதா ? அத்தை குணமும் தெரியாது; அத்தை எங்கிட்டயாவது கொஞ்சம் நஞ்சம் பேசிக்கிறாங்க. இவரைப் பார்த்தா பச்சைநாவியா வெறுக்கிகிறாக . இவரு குணமும் முழுசா தெரியாது ; எந்நேரம் ராட்சசனா கொதறுவாரு ,எப்ப மனுசனா கொஞ்சுவாருனு தெரியாது. என்ன சமைக்கிறது ? ஞாயித்துக்கிழமைனு ராத்தலா இருக்க முடியுதா ?
பெங்களுருல இருந்த ஆறுமாசமும் சனிக்கிழமை ராத்திரியிலிருந்தே றெக்கை விரிச்சுப் பறந்தோம். மாமனார் இறந்தாருன்னு வேலையை மதுரைக்கு மாத்தி வந்தோம் கல்யாணங்கிறது கழுதைக்குப் போட்ட கால்கட்டாயிருச்சு.தன் இஷ்டத்துக்கு ஓடியிறாம முதுகில ஏத்தின சுமையை சுமந்து மெல்ல நகர்ந்தாகணும். சொந்த அத்தைன்னா கூடக்குறையப் பேசி சமாளிச்சுக்கலாம், நாமலே ஓடியாந்து புருசனைத் தேடிகிட்டவ. மாமனாரு குடும்பத்தோட பேச்சு வார்த்தை இல்லாம இருந்த நிலையிலே அவரு போனதுக்கப்புறம் இவரு குடும்பப் பொறுப்பை விரும்பி எத்துகிட்டாரு . கூட்டுக்குடும்பத்தில சிக்கினதுக்கப்புறம் அனுசரிச்சுப் போனாத்தானே நம்ம நிம்மதியா குடும்பம் நடத்த முடியும். அப்பத்தானே நம்மளை தலைமுழுகின பெத்தவங்களும் நம்ம நல்லா வாழறதை கேட்டு நிம்மதியாக இருப்பாக.
மாமனார் இறந்ததுக்குப் பின்னால அத்தை கறி புளி திங்கிறதில்லை. அதனால அவுங்களுக்கு கத்தரிக்காய் முருங்கைக்காய் சாம்பார் வச்சுக்கிட்டு இருப்போம். இவரு அந்தப்பையன் கிட்ட பேசுறதை வச்சு கறிக்குழம்பு வைக்கிறதைப் பிறகு பார்த்துக்குவோம். ‘ வேலையைத் தொடர்ந்தாள்.
கழிவறைக்குள் போனவன் கண்ணீர் பொங்க விம்மினான். அப்பா , தலைமகன் தன் குடும்பப் பொறுப்பை பகிர்ந்து கொள்வான் என்று சிறுவயதிலிருந்தே தான் பட்ட இன்ப துன்பங்கள் , ஏற்ற இறக்கங்கள் , தானுணர்ந்த சமூக நியதிகள் எல்லாம் சொல்லி வளர்த்தார். இவன் விரும்பிய படிப்பை படிக்க வைத்தார். இவனுக்கு பின் பிறந்த தங்கைகளிடம் அக்கறையும் அனுசரனையும் காட்டப் பழக்கியிருந்தார். பொறியியல் முடித்ததும் பெங்களூரில் வேலை கிடைத்து தனது சம்பளத்தில் பாதியை அப்பாவுக்கு அனுப்பிய மகனை நினைத்து பூரித்திருந்தார்.
ஒரு நாள் அதிகாலை , தன்னுடன் வேலை செய்யும் பெண்ணைக் கல்யாணம் பண்ணிக்கிறேன்ப்பா , எங்களை வாழ்த்துங்கள் என்று சொல்லி வந்தவனை, ” செத்தாலும் எம்மூஞ்சியிலே முழிக்கக்கூடாது”னு விரட்டி விட்டுட்டார். அப்புறம் விடுதியில் தங்கி நண்பர்கள் உதவியுடன் பதிவுத்திருமணம் செய்து , மீனாட்சியம்மனை கும்பிட்டு பெங்களூர் திரும்பினர் .
கல்யாணத்துக்குப் பின்னும் அப்பா கணக்குக்கு இவன் பணம் அனுப்பினான். அப்பா ஒவ்வொரு மாதமும் அப்பணத்தை திருப்பி இவன் கணக்குக்கே அனுப்பினார். பென்சன் வாங்குறோம், மக பேங்குல வேலை பார்க்கிறானு திண்ணக்கம் !. அப்பாவின் இறுக்கத்தை தளர்த்த முடியவில்லை. தங்கைமார்களின் வங்கிக் கணக்குக்கு , அப்பாவுக்கு அனுப்பும் தொகையை இருபாதிகளாக இரு தங்கைகளுக்கும் அனுப்பி வந்தான். இதை வேறு எவருக்கும் தெரியாமல் மறைத்தனர் .
அப்பா இறந்த செய்தி நண்பர்கள், பக்கத்து வீட்டுக்கார்கள் மூலம் தெரிந்தே வந்தனர். சொந்த பந்தங்களிடையே வாதாடித்தான் அப்பாவுக்கு மகன் செய்ய வேண்டிய சடங்குகளைச் செய்தான். அம்மா முகம் கொடுத்துப் பேசவில்லை. தங்கைமார் மட்டும் அம்மாவுக்குத் தெரியாமல் பேசினர்.
மூன்றாம்நாள் பால் தெளித்து புதைகுழி சூடாற்றி அஸ்தி சேகரிக்க முக்கியமான உறவுகள் நட்பு சூழப் போனார்கள்.
மயானத்தொழிலாளி; “ மனுசரு சாகும்போது எப்படி எமன்கிட்ட போராடினாரோ, அப்படியே வேகும் போதும் அவருடல் போராடியது. எத்தனை தடவை நரம்புகள் விடைச்சு எந்திருச்சாரு மனுசர். அவரு மனசில இருந்த கவலைகள நிறைவேத்துங்க சாமி. அப்பத்தான் அவராத்மா சாந்தி அடைஞ்சு தெய்வமா நின்னு குடும்பத்தில பிறந்த பிள்ளைக, பேரன் பேத்திகளைக் காப்பாத்தும். “ என்றபடி காலிலிருந்து தலை வரை ஒவ்வொருபிடி சாம்பலாக அள்ளி மண்கலயத்தில் சேகரித்துக் கொண்டே வந்தார்; நெஞ்சுப் பகுதியில் பெருநெல்லிக்காய் தண்டி நான்கு பிண்டங்கள் வேகாமல் கிடந்தன.
“மனுசர் என்ன கவலையில் செத்தாரோ, நெஞ்சு வேகலையே சாமி. மகன்மாரு, யாரு சாமி, இங்கே வாங்க சாமி “அழைத்தார் மயானத் தொழிலாளி. இவன் விசும்பலுடன் அருகில் போய், சவ்வுப்படலம் போர்த்திய அந்தப் பிண்டங்களை பார்க்கையில் ரெண்டு சொட்டு கண்ணீர் அவற்றின் மீது சொரிந்தது. மயானத் தொழிலாளி இரண்டு விராட்டிகளை நெஞ்சுக்குழி பகுதியில் கிடத்தி அதன்மீது அந்தப் பிண்டங்களை வைத்து சுற்றிலும் நெருக்கமாக விராட்டிகளை கூடுபோல் அடுக்கினார். மண்ணெண்ணெய் ஊற்றி இவனை தந்தையின் கவலைகளைத் தீர்த்து வைப்பேன் என்று வேண்டிக் கொண்டு நெருப்பு வைக்கச் சொல்லி தீபெட்டியைக் கொடுத்தார்.
இவன் அப்பாவை நினைத்து, நெஞ்சுருகக் கண்ணீர் பெருக்கெடுத்து வழிய தீ வைத்தான் .மண்ணெண்ணெய் குப்பென்று தீ பற்றி நீலமும் , சிவப்பும் , மஞ்சளுமாய் தலைகீழ் இதயவடிவில் எரிந்து பத்து நிமிடத்தில் சாம்பலானது. இவன் கூப்பிய கை கூப்பியவாறு கண்ணீர் பெருக்கி உடலெங்கும் ரோமம் சிலிர்க்க கும்பிட்டபடி நின்றான். இவனது மனதில் பதிந்த இளம் பருவத்திலிருந்து முதிர்பருவம்வரை அப்பாவின் பல்வேறு தோற்றங்கள் நினைவில் ஆடின . உடன் வந்தவர்கள் அன்னம்பாரித்து உறைந்திருந்தனர்.
அப்பாவின் இதயம் செத்தபின்னும் வேகவில்லை. தனது இதயம் தான் உயிரோடு இருக்கும்போதே வெந்து கொண்டிருப்பது போல் உணர்வு தோன்றி கண்ணீர் துளிர்க்கிறது. இவனது குடும்பத்தில் உணர்ச்சிகரமான எந்தப் பேச்சு எழுந்தாலும் இப்படி உணர்வு தோன்றி இவனை அலைக்கழித்து தனிமையைத் தேடுகிறது.
நெஞ்சில் பதிந்த அப்பாவின் இதயப் பிண்டங்கள் அழியாதிருக்கையில் , இவனது நண்பன் ஒருவன் அந்தப் பிண்டங்களை கைபேசியில் ஒளிப்படமாக்கி எதோ இவனுக்கு உதவும் பேர்வழி போல் அனுப்பி விட்டான். அது வதைத்துக் கொண்டு இருக்கிறது.
தற்போது வீட்டிற்கு தங்கையின் காதலன் வந்திருக்கும் தருணத்தில் இவன் அப்பாவின் இதயத்தோடு கண்ணீர் துளிர்க்க பேசவேண்டிய நிலை .
இப்போது இவனை பிழியும் கேள்விகள் ; ‘ வீட்டை மீறி தன் இஷ்டத்துக்கு கல்யாணம் பண்ணிக்கொண்ட மகனால், அடுத்த தங்கைகளுக்கு சொந்த சாதியில் மாப்பிள்ளை அமையாது என்ற அச்சத்தில் கண்டித்து விரட்டிய அப்பாவைப்போல் தங்கையின் காதலை அணுகுவதா ; இல்லை தான் விரும்பிய பெண்ணை மணந்துகொண்ட அண்ணனைப் போல் அணுகுவதா…? தனதுமகன் தன்னை மதிக்கவில்லை என்ற அப்பாவின் தகிப்பு ; காதலித்து மணம் செய்துகொண்ட அண்ணன் தன் காதலை ஏற்பார், அம்மாவையும் ஏற்க வைப்பார் என்ற தங்கையின் நம்பிக்கை ; இந்த இருநிலையில் எதை ஏற்பது ? இதுதான் இருதலைக்கொள்ளி எறும்பின் நிலையா…?
இந்த இருநிலைகளுக்கும் பொதுவான ஓரம்சமும் உண்டு!. அப்பா விரும்பியதுபோல் சாதியில் மாப்பிளை பார்த்து கல்யாணம் செய்துவைத்தாலும், தங்கையே விரும்பியபடி மணமுடித்து வைத்தாலும் தம்பதிகள் சந்தோசமாக வாழவேண்டும் என்பதே ஒற்றை நோக்கம் !.இதை மனதில் கொள்வோம் ; இங்கே கழிவறையில் ஒளிந்துகொண்டு மேலும் தாமதப் படுத்துவது நல்லதல்ல! ‘கைப்பேசியில் ஒளிரும் அப்பாவின் வேகாத இதயத்தை அணைத்துவிட்டு வெளியேறினான். ‘ முதலில் எந்த பிடியும் கொடுக்காமல் பேசுவோம். கிடைத்த விவரங்களைக் கொண்டு பிறகு சரியான முடிவெடுக்கலாம்.’
கூடத்துக்குள் இவன் நுழைந்ததும், அலைவரிசைகளில் அலைந்துகொண்டிருந்த காதலன் , எழுந்து நின்று வணங்கினான். இவன் ,அவனைக் கையசைத்து உட்காரச் சொன்னான். பையன் பார்க்க துறுதுறுன்னு ,தெளிந்த முகமும் , ஒளிர்ந்த விழிகளுமாய் ஈர்க்கும்படிதான் இருக்கிறான். அவனும், இவன் தங்கையும் ஒரே வங்கியில் வேலை செய்கிறார்கள். சமவேலை , சமவயது; மனசில உள்ளதை பிசிறில்லாமல் பேசுகிறான் என்பதை முகம் காட்டுகிறது. கடந்த ஆறுமாதமாக ஒருவரை ஒருவர் விரும்புகிறார்களாம் ! அப்போ, அப்பாவின் குணமும், இவனுக்கு ஏற்பட்ட நெருக்கடி எல்லாம் தெரிந்துதான் தங்கை அவனை காதலிக்கிறாள் என்றால் காதலின் பிடிப்பை உணர முடிகிறது. அறையினுள்ளிருந்து மல்லிகை வாசம் மிதந்து வருகிறது. தங்கை கதவுக்குப்பின் இருந்து கவனிக்கிறாள். ஐந்து நிமிடங்களுக்கொருமுறை கேட்கும் அம்மாவின் இருமல் வேறொரு செய்தியை அப்பாவின் சார்பாய் நினைவூட்டிக் கொண்டிருக்கிறது .
இவன் ; ”உங்க குடும்பத்தில் ஒரே பிள்ளைங்கிறீங்க ; உங்க காதலை ஏன் பெத்தவங்களிடம் , சொல்லாமல் , எங்ககிட்ட வந்தீங்க ? உங்க விருப்பத்தை , உங்க அப்பா அம்மா ஏத்துக்கலைன்னா , என்ன செய்வீங்க , ? நாங்களே ஏத்துக்கலைன்னா என்ன செய்வீங்க”
அவன் சிரித்த முகம் மாறாமல், “ பெண் தரப்பில் நீங்க நிச்சயம் ஏற்பீங்க . உங்க வீட்டிலும் எங்க வீட்டிலும் ஏற்கலைன்னா, எங்க முடிவை நீங்களே அப்புறம் தெரிஞ்சிக்குவீங்க “ என்று கூறி இவனது முகத்தை ஊடுருவினான்.
இவன் கவனத்தை மாற்ற ,”ஸ்நாக்ஸ் சாப்பிடலையா “
அவன்; “ நீங்க வந்ததும் சேர்ந்து சாபிடலாமுன்னு இருந்தேன்.”
மனைவி இவனுக்கும் தின்பண்டம் கொண்டுவந்து வைத்தாள். இருவரும் தின்றார்கள். மாதம்காட்டியின் தாள்கள் அசையாதிருந்தன. நாள்காட்டி அடங்கிக் கிடந்தது. சுவர்க்கடிகாரத் துடிப்பு இறுக்கத்தின் கனத்தை ஒலித்தது .
இவனே மௌனமுடிச்சை அவிழ்த்தான் ; “எனது அனுபவத்தில் சொல்றேன், பெத்தவங்க மனம்நோக செய்யக்கூடாது. முதல் கட்டமா நீங்க உங்க அம்மா அப்பாவை பேசி சம்மதிக்க முயற்சி பண்ணுங்க. அடுத்த கட்டமா நாங்களும் பேசுறோம். இதுக்கிடையில் நீங்க பண்பட்டவங்க அவுங்கவங்க எல்லைக்குள்ளே இருந்துக்குவீங்கன்னு நம்புறோம். இருங்க , நட்புரீதியா மதியம் சாப்பிட்டுட்டு போகலாம்.”
அவன் நிமிர்ந்து சுவர்க் கடிகாரத்தை பார்ப்பது போல் பார்வையை சுழலவிட்டான் .உள்ளே இருந்துவந்த மின்னல் அவன் முகத்தில் எதிரொளித்தது.
“நன்றிங்க. எனது அலுவலக நண்பருடன் மதிய உணவு சாப்பிட வர்றேன்னு ஒத்துக்கிட்டேன். இன்னொரு நாள் சாப்பிடறேன். நான் போய்ட்டு வர்றேன் “ எழுந்து வணங்கினான். வாசலை நோக்கி நகரும் அவன் முதுகில் எதோ ஊர்வதுபோல் முதுகு சிலிர்த்தது . அம்மாவின் இருமல் சத்தம் அடங்கியிருந்தது.