Kalvi Or Arasiyal Book By Vasanthi Devi Bookreview By Saguvarathan நூல் அறிமுகம்: வே.வசந்தி தேவியின் கல்வி ஓர் அரசியல் - சகுவரதன்

நூல் அறிமுகம்: வே.வசந்தி தேவியின் கல்வி ஓர் அரசியல் – சகுவரதன்




நூலின் பெயர் :கல்வி ஓர் அரசியல்
ஆசிரியர் : வே.வசந்தி தேவி
பதிப்பகம் : பாரதி புத்தகாலயம்
விலை : ரூ. 220/
புத்தகம் வாங்க இங்கு க்ளிக் செய்யவும்: thamizhbooks.com

மனிதனை
மனிதன்
விரும்பும்
போட்டி உலகுக்கு
குழந்தைகள்
பலியிடப்பட்ட வரலாறு.

வே.வசந்திதேவி.

“இன்றைய தாழ்வுகள், கேவலங்கள், கொடுமைகள், ஊழல்கள், வன்முறைகள் இவற்றிற்கெல்லாம் மாற்று எங்கிருந்தாவது தோன்ற முடியும் என்றால் அது கல்வியிலிருந்து தான் பிறக்க முடியும் என நான் நம்புகிறேன்” என்று நிமிர்ந்து பேசும் வசந்திதேவியின் வார்த்தைகளில் சக்தியும் சத்தியமும் ஒருங்கிணைந்து மிளிர்கின்றன.

கல்வி என அவர் குறிப்பிடுவது வகுப்பறைக்குள் கல்வி, வகுப்பறைக்கு வெளியே வாழ்க்கை வெளியில் கிடைக்கும் கல்வி இரண்டையும் சேர்த்து தான்.

பேராசிரியர் ச. மாடசாமி அவர்களின் மதிப்புமிகு முன்னுரையில் இருந்து எடுத்தாளப்பட்ட வரிகளிலிருந்து புத்தகத்தின் வாசிப்பு பகிர்வை தொடங்குகின்றேன்.

1938 ல் பிறந்த பேராசிரியர் வே. வசந்தி தேவி திண்டுக்கல்லை சேர்ந்தவர் வரலாற்றில் முதுகலைப் பட்டமும் பிஎச்டி பட்டமும் பெற்றவர். கல்லூரிப் பேராசிரியராகவும் முதல்வராகவும் பணியாற்றியுள்ளார். 1992 முதல் 1996 வரை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராக பணியாற்றியுள்ளார். 2002 முதல் 2005 வரை தமிழ்நாடு மாநில மகளிர் ஆணையத்தின் தலைவராக பணியாற்றியுள்ளார். மேலும் மனித உரிமை கல்வி நிறுவனத்தின் தலைவராகவும் பணியாற்றியுள்ளார்.

கல்வி மற்றும் மகளிர் சார்ந்த ஏராளமான கட்டுரைகளையும் எழுதியிருக்கிறார். கணக்கற்ற உரைகளையும் நிகழ்த்தியுள்ள பேராசிரியர் வே. வசந்திதேவி பல்வேறு இதழ்களில் எழுதியுள்ள கல்வி பற்றிய கட்டுரைகளின் தொகுப்புதான் “கல்வி ஓர் அரசியல்” என்னும் புத்தகம்.

பாரதி புத்தகாலயம் இதை விரிவுபடுத்தப்பட்ட புதிய பதிப்பாக கொண்டுவந்துள்ளது.
வலுவான சிந்தனைகளுக்கு பொருத்தமான மேடை பாரதி புத்தகாலயம் . பல்வேறு அரிய நூல்களை பதிப்பித்து ஏராளமான வாசகர்களையும் கல்வியாளர்களையும் அடையச் செய்ததில் தொடர்ந்து வெற்றிப் பெற்று வருகிறது.

பேராசிரியர் வே. வசந்திதேவி அவர்களின் முதல்பதிப்பு மற்றும் இரண்டாம் பதிப்பின் முன்னுரைகள் அப்படியே இப்புத்தகத்தில் சிறப்புற அமைக்கப்பட்டுள்ளது.

மொத்தம் இருபத்தி ஒன்பது கட்டுரைகள். அனைத்தும் பல்வேறு இதழ்களில் வெளி வந்தவை. நிறைய விமர்சனங்களையும் விவாதங்களையும் பெற்றவை. இக்கட்டுரைகளின் ஒருசேர அமைக்கப்பட்ட இத்தொகுப்பு கல்வியல் ஆய்வாளர்களுக்கும் ஆசிரியர் பெருமக்களுக்கும் இன்றைய கல்வி நிலை குறித்து கவலைப் படுபவர்களுக்கும் ஒரு தீர்வாக இப்புத்தகம் அமையக்கூடும்.

“கல்வி ;யாரால், யாருக்காக?” என்னும் கட்டுரையில் சமுதாயத்தின் ஒவ்வொரு பொருளாதார மட்டத்திற்கும் ஒரு வகைப்பட்ட பள்ளியை , வெவ்வேறு பொருளாதார நிலைகளை சேர்ந்த குழந்தைகளுக்கும் வெவ்வேறு தரமுடைய கல்வி அளிக்கும் பல்வழி கல்வி வசதிகளை அரசு வடிவமைத்து அனுமதிக்கிறது என்றும் இன்றைய கல்வி மனித ஆற்றலைப் போற்றி வளர்க்கும் சமுதாய சாதனமாக இல்லாமல் கொடுக்கும் விலைக்கு ஏற்ப கிடைக்கும் கடை சரக்காக மாறிவிட்டிருக்கிறது என்றும் கவலைப்படுகிறார்

இன்றைய வணிக உலகில் பள்ளிகளும் உயர் கல்வி நிலையங்களும் அறிவு உற்பத்தி நிலையங்களாகவும்,மாணவர்கள் நுகர்வோர்களாகவும், உற்பத்தியாளர்களும் நுகர்வோரும் சந்திக்கும் இடம் சந்தையாகவும் உருமாறி ஜனநாயக தன்மையற்ற ஓர் அமைப்பாக மாறிவிட்டிருப்பதை சுட்டிக்காட்டுகிறார்.

உண்மைதானே…!!! அச்சுறுத்தும் தேர்வுகளும் பல பள்ளிகளில் வழங்கப்படும் கடுமையான தண்டனைகளும் குழந்தைகளிடம் பள்ளி பற்றிய பயத்தை உருவாக்கி தன்னம்பிக்கையை சிதைத்து விடுவதைஅன்றாடம் நாம் காண்கிற துயரச் செய்தி அல்லவா இருக்கிறது . பல தற்கொலைகள், இடைநிற்றல்கள் இதற்கு பெரும் சாட்சிகளாக அல்லவா இருக்கிறது.

“சக்தி பிறக்கும் கல்வி” பற்றிய கட்டுரையில் மாணவர்களுக்கு இருக்கவேண்டிய இயல்பான ஆய்வுத் தன்மையை இன்றைய கல்வி அமைப்பு சிதைத்து விட்டிருப்பதை மிக ஆழமாக விவரிக்கிறது.

“காற்று எங்கும் பரவி உள்ளது” என்பதை “இறைவன் எங்கும் இருக்கிறான்” என்பதோடு ஒப்பிட்டு கேள்விகளுக்கு அப்பாற்பட்ட ஒரு பதிலாக பாடம் நடத்துவதை வன்மையாக கண்டிக்கிறார்.

முடிவு பெற்றுவிட்ட உண்மைகள், சான்றுகள், தேவையற்ற நம்பிக்கைகள் ஆகியவற்றின் தொகுப்பாக அறிவியல் கற்றுத்தரப்படுகிறது.

சூத்திரங்களாக, மந்திரங்களாக அது ஓதப்படுகிறது. தேடி, பரிசோதித்து, சான்றுகளின் அடிப்படையில் புரிந்துகொண்ட உண்மைகளே குழந்தைகள் அறிவியல் கண்ணோட்டம் கொண்டவர்களாக ஆக்க முடியும் என்பதை ஒரு உதாரணம் கொண்டு இக்கட்டுரையை கொண்டு செல்கிறார்.

ஒரு சிற்றூர் . அந்த ஊரில் திடீர் பீதி கிளம்புகிறது . பச்சை இலைகளில் எல்லாம் படமெடுத்த பாம்பின் வெளிறிய வடிவம் தென்படுகிறது என்பதுதான் . அது நாக தேவதையின் சாபம். ஒரு ஆண் பாம்பின் மீது லாரி ஒன்று ஏறி கொன்றுவிட்டது. பெண் பாம்பு சாபமிட்டதால் பச்சை இலைகளில் பாம்பின் வடிவம் தோன்றியுள்ளது என்பது ஒரு வதந்தியாக பரவிக் கொண்டிருந்த நேரம்.

இந்த நேரத்தில் சோனி என்கிற ஒரு சிறுமி அவளுடைய வகுப்பு தோழிகளுடன் சந்தித்து ஒரு சிறு குண்டூசி துணையோடு அந்த இலைகளை ஆய்வுசெய்ய, அதற்கு காரணம் ஒரு புழு என்பதை கண்டறிந்து ஊருக்குள் சொல்கிறார். இந்த கண்டுபிடிப்பு பணியை பள்ளியும் ஊரும் பெரும் ஆரவாரத்துடன் கொண்டாடியது. ஆனால் அதே ஊரில் இருந்த ஆசிரியர்களுக்கும் கல்லூரி மாணவர்களுக்கும் ஏன் இந்த ஆய்வு மனப்பான்மை ஏற்படவில்லை என்பதை வினாவாக முன்வைக்கிறார் வசந்தி தேவி அவர்கள்.

அடுத்ததாக காந்தியக் கல்வி பற்றி கூறுகிறார். காந்தியக் கல்வி என்பது உழைப்பும் அறிவு வளர்ச்சியும் ஒருசேர இணைந்த கல்வி ; உழைப்பு உலகையும் அறிவு உலகையும் ஒன்றிணைக்கும் கல்வி; மூவகைப் பட்ட திறமைகளை, சிந்தனை, திறன், உணர்வு, செழுமை, உழைப்புத் திறன் அனைத்தையும் அளிக்கும் வளர்ச்சிக் கல்விதான் காந்திய வழிக்கல்வி என்று பேராசிரியர் வசந்திதேவி கூறுகிறார்.

ஆனால் வாழ்வாதாரமான உழைப்பிலிருந்து இந்தியக் கல்வி முற்றிலும் அன்னியப்பட்டு கிடக்கிறது என்று பதிவு செய்கிறார்.

கல்வி நிலையங்களில் கயமை இருள் ஒரு முக்கியமான கட்டுரை. குழந்தைகளின் மேல் நிகழ்த்தப்படும் பாலியல் வன்முறை குறித்த ஆய்வுக் கட்டுரை இது . எல்லா கோணங்களிலும் இந்த கட்டுரை அணுகுகிறது.

தொடரும் பாலியல் துயரச் சம்பவங்கள், பள்ளிகளின் அவலநிலை, குற்றங்கள் நடப்பதற்கு ஆதரவான சூழ்நிலை, பெண் குழந்தைகளுக்கு பாதுகாப்பற்ற சூழல், குழந்தைகளின் இயற்கையான இயலாமையையும் அறியாமையையும் பயன்படுத்தி பாய காத்திருக்கும் வக்கிரங்கள், பள்ளிகளில் இங்கிலீஷ் மீடியங்களையும் தேர்ச்சி விகிதம் களையும் கண்டு பெருமிதம் கொண்டு குழந்தைகளை காவு கொடுக்கும் பெற்றோர், பள்ளிகளின் மேல் எந்த கண்காணிப்பும் செலுத்தாத கல்வித்துறை, குழந்தைகளின் வளர்ச்சியில் அக்கறையற்ற சமூகம், என பன்முகத்தையும் உற்றுநோக்கி அதன் காரண காரியங்களை அலசி ஆய்கிறது இக்கட்டுரை. இக் கட்டுரையை வாசிக்க இன்னும் இந்த அவலம் தொடர்கிறதே என்கிற வேதனை நெஞ்சைச் சுடுகிறது.

“தவிப்பில் இருந்து திறமைக்கு” என்னும் கட்டுரையில் பேராசிரியர் வேறுவிதத்தில் குழந்தைகளின் கல்வியை அணுகுகிறார்.

ஐந்தாம் வகுப்பு மாணவர்களில் பாதிப்பேர் கூட தங்களின் தாய்மொழியில் சிறு பத்தி கூட வாசிக்க இயலாதவர்களாக உள்ளனர். இதற்கு காரணம் என்ன என்பது குறித்தான கட்டுரை தான் இது.

குழந்தைகளின் வாசிப்புத் தன்மை பெறுவதற்கு முதல் தேவை, ஒவ்வொரு குழந்தைக்கும் தேவையான தனிப்பட்ட அணுகுமுறையும் கவனிப்பும் தான். நடுத்தரக் குடும்பங்களில் இத்தகைய அணுகுமுறை ஓரளவுக்கு இருக்கிறது. ஆனால் கிராமப்புற விளிம்பு நிலை மக்களுக்கு இது கை கூடுவதில்லை.

மேலும் கற்றலின் கசப்பை அகற்றி இனிமையான அனுபவமாகும் கல்வி உத்திகள் கடைபிடிக்கப்படவேண்டும். படங்களும் பாடல்களும் விளையாட்டுகளும் சிறு குழுக்களாக பிரிந்து கற்றல் கற்பித்தலில் ஆசிரியரின் பங்கும், கதை வாசிப்பும் குழந்தைகளை மேலும் கற்கத் தூண்டும் இனிய சூழல் ஆகும்
என் வலியுறுத்துகிறார்.

இந்நாட்டின் கடைசி விளிம்புநிலை மக்களின் குழந்தைகள் கனவு காணும் தெம்பையும் திறமையையும் நம்பிக்கையளிக்கும் புனித பொறுப்பை நாம் அனைவரும் ஏற்க வேண்டுமென உறுதிபட கூறிகிறார்.

மனித உரிமை கல்வியின் அவசியம் பற்றி பாகுபாடு பாடலாமா என்கிற தலைப்பில் கூறுகிறார்

இன்றைய கல்வியின் மாபெரும் குறை சுற்றிலுமுள்ள உலகில் இருந்து மாணவர்களை அன்னிய படுத்துகிறது என்பதாகும்.

இன்றைய கல்வி மாணவர்களை பிரிக்கிறது. பாகுபடுத்துகிறது. துண்டாடுகிறது . அறிவுத் தேடலில் மோசமாக தோல்வி அடைய வைக்கிறது. அருகிலிருக்கும் மாணவனது சமுதாயத்தை காண விடாத கடிவாளமாய் இழுத்து பிடிக்கிறது . மாணவனுக்கு தன் சமுதாயத்தைப் பற்றிய கொடிய உண்மைகள், அதன் உரிமை மறுப்புகள், ஏழ்மை, இதயமற்ற சுரண்டல்கள், இழப்புகள், பாகுபாடுகள் ஆகியவற்றுடன் எந்த உறவுகளும் இல்லாமல் தனித்தே கிடக்கிறான்.

மனித உரிமைகளுக்கான கல்வி திட்டம் தொடக்கக் கல்வியில் இருந்து தொடங்கப்பட வேண்டும் என்பதுதான் பேராசிரியரின் கருத்து.

அது எவ்வாறு அமைய வேண்டும் அந்தக் கல்வி எந்த குழந்தைகளுக்கு கற்பிப்பது ? போன்ற விவரங்களுடன் முதன் முதலில் தமிழ் நாட்டில் அமல்படுத்தியமை, அதன் விளைவாக எழுந்த தாக்கம், அதன் காரணமாக மற்ற மாநிலங்களுக்கு வழிகாட்டியாக அமைந்த விதம் போன்றவற்றையும் அலசி ஆராய்கிறது.

இதயமற்ற உலகை மாற்றுவதே மனித உரிமை கல்வியின் குறிக்கோளாக இருக்க வேண்டும் .அது உலகின் தலைவிதியை நிர்ணயிக்கும் சக்தி கொண்ட வகுப்பறையில் தான் தொடங்க முடியும் என்பதே பேராசிரியரின் நம்பிக்கை.

பெற்றோர்களின் ஆங்கில மோகம் குறித்த கட்டுரை மிக முக்கியமானது. பயிற்று மொழி தமிழ் என்னும் கட்டுரையில், “தாய்மொழி வழிக் கல்வியை இயற்கையானது என்பது நவீன அறிவின் முடிவு .கற்கும் மனதின் ஆளுமையை விரிக்க துணை நிற்பது தாய்மொழிவழிக் கல்வியே. கல்வியாளர்கள் இடையே உலகளவில் இன்று பெருமளவிற்கு கருத்தொற்றுமை கொண்ட முடிவு இது”. என்கிறார் பேராசிரியர் வே. வசந்தி தேவி.

தங்கள் குழந்தைகளுக்கு ஆங்கிலம் தான் நடைமுறை சார்ந்த வெற்றியைத் தரும் என்னும் எண்ணம் மத்தியத்தர பெற்றோர்களுக்கு மட்டுமல்ல, ஏழைப் பெண்களின் மனங்களில் கூட ஆழமாக பதிந்து இருக்கிறது. இதற்கு யார் பொறுப்பு .?இந்த எண்ணங்களை அவர் மனங்களில் விதைத்து யார் ?
போன்ற வினாக்களுக்கு விடையளிக்கும் விதமாய் கட்டுரையை நகர்த்துகிறார்.

ஆங்கிலம் இன்று முக்கியமான வர்க்க குறியீடாக மாறி இருக்கிறது. ஆயிரக்கணக்கான இளைஞர்கள் நல்ல அறிவுத்திறன் பெற்றிருந்தாலும் ஆங்கிலத்தில் பேச இயலாமல் பெரும் தவிப்பிற்கும் ஏக்கத்திற்கும் தள்ளப் பட்டிருக்கின்றனர். தாழ்வு மனப்பான்மை இன்றைய இளைஞர் பெரும்பாலோரை தின்று கொண்டிருக்கிறது. ஆங்கிலம் அவர்களது கனவு, ஏக்கம் .

கிராமத்திலிருந்து வந்த முதல் தலைமுறை, தலித்,ஆதிதிராவிடர் மற்றும் பிறசாதிகளில் பிறந்த வசதியற்றோர் இவர்கள் அனைவருமே இதில் அடங்குவர் என வேதனைப்படுகிறார் வசந்திதேவி அவர்கள்.

இது ஏதோ தமிழ்நாட்டில் மட்டும் இந்த தாக்கம் இருப்பதாக கருதக்கூடாது. ஆங்கில மொழியின் ஆதிக்கம் இன்று உலக அளவில் பெரும் விவாதத்தை கிளப்பியிருக்கிறது. அதன் ஆதிக்க வேட்டைக்கு உலகின் பல மொழிகள் இன்று பலியாகிவிட்டன. கொலைகார மொழி என்று கூட உலக நாடுகள் அழைக்கத் தொடங்கி விட்டன.
என்கிற பரபரப்பான தகவல்களும் இதில் அடக்கம்.

சமீபகாலமாக தொடர்ந்து பள்ளிகளில் நடந்து கொண்டிருக்கும் நிகழ்வுகள், பல அரசு சாரா நிறுவனங்களின் ஆய்வுகள், விசாரணைகள், மூலம் மக்களின் பொது விசாரணையாக அரங்கேறின.

அந்த விசாரணையில் நெஞ்சை உருக்கும் , முதுகுத்தண்டை சில்லிட உறையச் செய்யும் பல தகவல்கள் இருந்தன. குழந்தைகளுக்கு பள்ளியில் அளிக்கப்படும் தண்டனைகளும் சித்திரவதைகளும் ஒரு வரையறைக்குள் கொண்டு வரப்பட வேண்டும் என்கிற அழுத்தமான கோரிக்கை வைக்கும் அளவிற்கு பள்ளிகளின் போக்கு இருந்துள்ளது.அது இன்னமும் தொடர்கிறது.

தண்டனை என்னும் பெயரில் மாணவர்களுக்கு நடக்கும் குரூரங்கள் ஏராளம். ஆசிரியரின் அன்றைய ஆத்திரத்தின் கொதிநிலை, கையில் கிடைக்கும் ஆயுதம், மாணவனின் பலவீனத்தை பற்றிய கணிப்பு , பள்ளியில் வெளியில் நிலவும் கேட்பாரற்ற சூழ்நிலை என பல காரணங்கள் தண்டனையின் தன்மையை நிர்ணயிக்கின்றன.

நாவால் சுடுதல் அனைத்துப் பள்ளிகளிலும் நடக்கும் கைவந்த கலை. அவமானப்படுத்தப்படும் மாணவர்கள் ஏராளம். இதனால் இடைநின்ற மாணவர்களும் கணிசம்.

மேல்தட்டு மற்றும் மத்தியதர குழந்தைகளுக்கும் இதே நிலைமைதான் . செல்ல குழந்தைகளாக அவதரிக்கும் இவர்களுக்கும் பல தண்டனைகளும் உண்டு. வன்முறைகளுக்கும் ஆட்படுவதுண்டு . காரணம் பெற்றோர்களின் வானுயர கனவுகளை நிஜமாக்கும் கடவுள்கள் இவர்கள்.மார்க், ரேங்க் என இடைவிடாத போட்டிகளில் இவர்கள் வென்றாகவேண்டுமே.டீயூஷன் கோச்சிங் கிளாஸ் என நேரமின்றி பறத்தல் கூட தண்டனைதானே!!

தமிழ்நாட்டில் முடங்கிக் கிடக்கும் மாணவர் பேரவைகள் பற்றியும் மாணவர்களின் பொது விஷயங்களில் அக்கறை , சமுதாய அரசியல் உணர்வுகளோடு சேவையில்
ஈடுபடுதல்,சித்தாந்தங்கள் அறிதல் போன்றவற்றில் மாணவர்களின் அறியாமை மற்றும் அதற்கு காரணமான தாராளமைய கொள்கைகள் பற்றியும் ” மாணவர் ஜனநாயகம் ” என்னும் கட்டுரையில் விரிவாக விளக்குகிறார்.

நிதியின்றி நலியும் இந்திய கல்வி பற்றியும் இலவச கட்டாய கல்வி உரிமைச் சட்டம் பற்றியும் தலித் கல்வி பற்றியும் கடைபிடிக்கவேண்டிய பொதுப்பள்ளி நடைமுறைகள் குறித்தும் பல்கலைக்கழகங்களை காப்பது குறித்தும் மிக விரிவான அளவில் கட்டுரைகள் வாயிலாக ஆய்ந்து எழுதி இருக்கிறார்.

நீட் தேர்வு குறித்தும் பல தகவல்களை அருமையாக கூறி விளக்கி இருக்கிறார்.

“அனைத்து வளர்ந்த நாடுகளிலும் உள்ளதைப்போல அனைத்து குழந்தைகளுக்கும் சமமான தரமுடைய கல்வியை இலவசமாக தரும் ஜனநாயக கல்விக் கொள்கை இன்றேனும் உருவாக வேண்டும்.”

பேராசிரியரின்வேண்டுகோளில் நாமும் பங்குகொள்வோம்.

தமிழக மக்கள் அல்ல உலக மக்களே உணரக் கூடிய அளவில் மிக தரமான ஆலோசனைகளோடு உருவாக்கப்பட்டுள்ள இந்தப் புத்தகத்தை அச்சிட்டு வெளிக்கொணர்ந்து எல்லோர் கைகளிலும் சேர்த்திருக்கிற பாரதி புத்தகாலயத்திற்கு வாழ்த்துக்கள் கூறி முடிக்கிறேன்

Kuzhanthaigalin Nooru Mozhigal Book By Sa Madasami Bookreview By Saguvarathan நூல் அறிமுகம்: ச.மாடசாமியின் குழந்தைகளின் நூறு மொழிகள் – சகுவரதன்

நூல் அறிமுகம்: ச.மாடசாமியின் குழந்தைகளின் நூறு மொழிகள் – சகுவரதன்




நூலின் பெயர் ; குழந்தைகளின் நூறு மொழிகள்.
ஆசிரியர் ச.மாடசாமி
பதிப்பகம் ; பாரதி புத்தகாலயம்.
விலை ; ரூ.90/
புத்தகம் வாங்க இங்கே க்ளிக் செய்யவும்: thamizhbooks.com

தமிழகத்தின் முன்னணிக் கல்விச் சிந்தனையாளர்களில் ஒருவர் பேராசிரியர் ச. மாடசாமி. பல்லாண்டுகாலம் கல்லூரிப் பேராசிரியராகவும், அறிவொளி இயக்கத்தின் உந்து சக்திகளில் ஒருவராகவும், பள்ளிக் கல்வி முறைபாடுகள் குறித்த நிபுணராகவும் பழுத்த அனுபவம் பெற்ற பேரா. மாடசாமி அவர்கள் கல்வி உளவியல் குறித்து தனது பிரத்யேகமான மெல்லிய நகைச் சுவையோடும், ஆழத்தை எளிதில் வெளிக்காட்டாத எளிய சொல்லாடலோடும் விளக்குகின்றார்.

மாணவர்களைச் சமூகத்திற்குப் பங்காற்றுபவர்களாக உருவாக்குவதில் பள்ளிகள் பெரும்பங்கு வகிக்கின்றன. மாணவர்களிடம் சமூக உணர்வை வளர்த்தெடுப்பதில் ஆசிரியர் மாணவர்களுக்கிடையயேயான உரையாடல் இன்றியமையாததாக இருக்கிறது. இதனை வலியுறுத்தும் விதமாக தான் பேராசிரியர் மாடசாமி அவர்கள் குழந்தைகளின் நூறு மொழிகள் என்கிற இந்த இனிய புத்தகத்தின் மூலம் மொழி பண்பாடு கல்வி குறித்தும் அறிவொளி இயக்க பொற்காலங்கள் குறித்தும் சுமார் 14 கட்டுரைகளில் கூறியிருக்கிறார்.

ஒரு சமூகம் தன்னைத்தானே புதுபித்துக்கொள்ள வித்தினை உருவாக்கும் இடமே பள்ளி தான். பள்ளியில் பயிற்றுவித்தலின் நோக்கம், மாணவர்கள் சீரான வளர்ச்சி அடைதலை மட்டுமல்ல ஒரு சிறந்த அறிவார்ந்த சமூகத்தையும் உருவாக்குவதும்தான்.

குழந்தைகளின் நூறு மொழிகள் என்னும் முதல் கட்டுரையில் குழந்தைகளிடத்து ஆசிரியர்,பெற்றோர் எப்படி நடந்து கொள்கின்றனர்,எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்று ஆழமானப் புரிதலை இக்கட்டுரை பேசியுள்ளது.

ரெக்கியோ எமிலியா. வாய்க்குள் நுழையாத பெயர் ;ஆனால் நாம் தெரிந்து வைத்திருக்க வேண்டிய பெயர் ;அது வெறும் பெயர் அல்ல. அது ஒரு இயக்கம். குழந்தை கல்விக்கான சிந்தனையின் வடிவம் என்கிறார் மாடசாமி அவர்கள்.

ஐரோப்பிய வகுப்பறைகள் வற்புறுத்திய சுதந்திரம்; சோசலிச நாட்டு வகுப்பறைகள் முன்னுரிமை தந்த சமூக சிந்தனை – இரண்டின் இணைப்பு என ரெக்கியோ எமிலியாவை சொல்லலாம் என்கிறார். ரெக்கியோ எமிலியோ குழந்தைக் கல்விக்கான சிந்தனை,வடிவம், செயல்பாடு என்று விரிவாக பதிவு செய்துள்ளார் ஆசிரியர்.

குழந்தைகளே கூட்டாகச் செய்யும் ஆய்வுத்திட்டம் ,ஆவணப்படுத்தும் அழகு ,ஆய்வுத்திட்டத்திற்கான கருக்களை குழந்தைகளே தேர்ந்தெடுத்து செய்கின்ற பாங்கு, ஆசிரியர் ஒத்துழைப்பு என அனுபவம் சார்ந்த கல்வி செயல்பாடுகள் என அனைத்தையும் இக்கட்டுரை பேசுகிறது.

இக்கட்டுரையின் இறுதிப்பகுதியில் ஒரு கவிதை நீங்களும் படித்துப் பாருங்களேன்

குழந்தையிடம்
நூறு மொழிகள்.
நூறு சிந்தனைகள்.!!!
குழந்தைகள்
விளையாடுவதும்
கற்றுக் கொள்வதும்
நூறு வழிகளில்
அவர்களின் ஆச்சரியம்!!!
நூறு விதம்
மகிழ்ச்சி நூறு விதம்
புரிந்து கொள்ள
கண்டுபிடிக்க
கனவு காண
அவர்களுக்கு
நூறு உலகங்கள்!!!
கண்கள் உங்களைத்தான் கவனிக்கின்றன என்கிற இரண்டாம் கட்டுரை. முழுக்க முழுக்க ஆசிரியர்களைப் பற்றிய கட்டுரை இது.

ஆசிரியரை பல கண்கள் கவனிக்கின்றன. அசட்டையாக சில கண்கள். ஆதங்கத்துடன் சில கண்கள். எப்போதும் விமர்சனத்துடன் சில கண்கள். ஆனால் எதிர்காலத்தின் கண்கள் நம்பிக்கையுடன் பார்ப்பது ஆசிரியரை மட்டுமே. தங்களையும் தங்கள் திறன்களையும் கண்டுபிடித்துக் கொடுக்க இவரால் முடியும் என்ற எதிர்பார்ப்புடன் கவனிக்கின்றன. ஆசிரியரின் பெருமை இந்த கண்களும் கண்களில் எதிர்பார்ப்புகளும் தானே!!!

தேர்வு என்ற ஒன்றை நோக்கி பிள்ளைகளை துரத்துவதும் குழந்தைகளுக்குள் இருக்கும் கலைஞர்களையும் விஞ்ஞானிகளையும் வீராங்கனைகளையும் பிரித்து வெளியேற்றுவதும் உக்கிரமாய் தொடர்கிறது என்றும் ,இதே பாணியில் ஆற்றல்களை பறிகொடுத்த ஆசிரியர்களும் உள்ளனர் என்றும் பேராசிரியர் வெகு கவலையோடு பதிவு செய்திருக்கிறார். ஆளுக்கொரு கிணறு என்னும் மூன்றாம் கட்டுரை ஆசிரியர் எப்படி நடந்து கொள்கின்றனர் என்பதைக் கூறுகிறது.

ஆசிரியை பச்சையம்மாள் அவர்களின் முற்போக்கான செயல்பாடுகள் குறித்தும் அதிகம் பேசியிருக்கிறார். மாணவர் மாணவியர் பழகும் தன்மை , அவர்களுக்குள் இருக்கும் கேலி கிண்டல், அவர்களோடு சமமாகப் பழகும் ஆசிரியை பச்சையம்மாள் என விறுவிறு நடையில் ஓடி பச்சையம்மாள் தாண்டாத கிணற்றில் முட்டிமோதி நிற்கிறது.நமக்கான கிணறு எது.? நம்மால் கண்டறிய முடியுமா? போன்ற வினாக்கள் ரொம்ப அதிகமாகவே யோசிக்கவைக்கின்றன.

கொலையும் கொண்டாட்டமும் என்னும் நான்காம் பகுதியில் பெண்தெய்வமாக மாறிய பெண்களைப் பற்றியது. அறிவொளி இயக்க காலங்களில் மக்களோடு பழகிய தருணங்களில் கிடைத்த பல அரிய தகவல்களில் ஒன்றாக பெண்தெய்வ வரலாறுகளை சேகரித்த விவரங்களை கூறுகிறது.

பெண் தெய்வமான பெண்கள் யாரும் மகிழ்ச்சியாய் இருந்ததில்லை. குறும்பு செய்யும் குறும்புக்காரி களாகவும் இல்லை. எல்லோருமே அழுது கண்ணீர் சிந்திய பெண்கள் . அடியும் மிதியும் பட்டவர்கள். கொலையானவர்கள். தற்கொலைக்குத் தள்ளப்பட்டவர்கள் .
வினோதமாய் மாண்டவர்கள். இக் கட்டுரையின் இறுதி இரண்டு வரி என் மனதை என்னவோ செய்துவிட்டது.

“தெய்வங்களப் பின்னால் தேடலாம் .அவமானப்படுத்தப் படாத பெண்களை முதலில் தேடுங்கள்”

நாற்றம் அடிக்கும் வகுப்பறை என்னும் கட்டுரையில் ஆசிரியர்கள் பிரயோகிக்கும் அதிகாரங்களைப் பற்றி பேசுகிறது.

“லேட்டா வந்தா வெளியே நிறுத்தி ஏற இறங்க பாக்குற அதிகாரம்.

‘கெட் அவுட்’ சொல்லற அதிகாரம் லேப்ல பிரக்டிகல் நோட்டை விட்டெறியிற அதிகாரம்.

பிரின்சிபால் கிட்ட சொல்லவா அப்படின்னு பயமுறுத்துற அதிகாரம்”

அப்பப்பா…. விதவிதமான அதிகாரங்கள்.

ஆசிரியர்கள் அதிகாரம் செலுத்த வேண்டுவது தவறு என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. பக்குவப்பட்ட ஆசிரியர் இனமே வகுப்பறையின் நறுமணத்திற்கு உத்தியாகும் என வலியுறுத்துகிறார். காந்திஜியின் வகுப்பறை என்னும் கட்டுரை டால்ஸ்டாய் கூறிய கல்விக்கொள்கை ,பண்ணைக்கல்வி ,டால்ஸ்டாய் பண்ணையில் பாடம் நடத்திய அனுபவம் உள்ளவராக காந்திஜி இருந்த சூழல் சொல்லப்பட்டுள்ளது. அங்கு தமிழ் மொழி சொல்லித்தந்ததே தமிழ் மொழி மீது காந்திக்கு மதிப்பு ஏற்பட காரணமாக இருந்திருக்கும் என எண்ணத் தோன்றுகிறது.

ஆசிரியர் மாணவர் என மொத்த வகுப்பறையும் பாடப் புத்தகத்துக்கு அடிமையாக இருப்பதையும் ஏறக்குறைய நூறு ஆண்டுகளுக்கு முன்பே காந்தி விமர்சனம் செய்திருக்கிறார்.

” குறைவான புத்தகம்: சிறந்த கல்வி” என்பது காந்தியின் கோட்பாடாக இருந்து வந்துள்ளது.

அடுத்ததாக டால்ஸ்டாய் பண்ணை. ஆசிரியர்கள் செய்யாத எந்த வேலையையும் பிள்ளைகளுக்கு செய்யச் சொல்லி வற்புறுத்தக் கூடாது என்பது பண்ணையின் விதி. ஆசிரியர்கள் செருப்பு தைத்தார்கள் ;கக்கூஸ் அலசினார்கள்; சமையல் செய்தார்கள்;விறகு வெட்டினார்கள்; பிள்ளைகளும் அவருடன் சேர்ந்து கொண்டார்கள். ஆனால் தற்போது பள்ளிகளில் கம்ப்யூட்டரே முதன்மை இடத்தை பிடித்துள்ளது. கம்ப்யூட்டரை விட வேறு எது பெரிசு;? என்று வினாவோடு இக்கட்டுரையை முடித்திருக்கிறார் மாடசாமி அவர்கள்.

அகங்காரத்தமிழ் என்னும் பகுதியில் தமிழின் பன்முகத்தன்மை, பாடப்புத்தகங்கள், மாணவர்களுக்கான பாடநூல்,ஆசிரியர் குழுவின் செயல்பாடு, குறுக்கீடு, ஆசிரியர் மத்தியில் ஆசிரியர் கலந்துரையாடி பெறப்பட்ட அனுபவங்கள் போன்றவை கூறப்பட்டுள்ளன. நியூசிலாந்தில் மாவோரி ஆதிவாசிக் குழந்தைகளுக்குக தொடக்கக்கல்வி தந்த ஸில்வியா என்ற ஆசிரியர் செயல்பாடு,சமச்சீர் பாடநூல் குறித்து கருத்துரை போன்றன இதனுள் எடுத்துக்கூறப்பட்டுள்ளன.

அறிவொளியும் இடதுசாரிகளும் என்னும் கட்டுரையில் அறிவொளி இயக்கத்தில் பணியாற்றியவர்கள் குறித்து பதிவு செய்யப்பட்டுள்ளது. வட்டம் என்ற அமைப்பை ஏற்படுத்தியது; Dr.சுந்தர ராமன் ஆலோசனை; நடைப்பயணம்; மக்கள் வாசிப்பு இயக்கம்; எட்டாம் வகுப்பு மாணவி வாசித்த நல்லதங்காள் கதையை 300 பேரும் அமைதியாக கேட்ட விதம்;வாசிப்புக்கான மொழிநடையை உருவாக்குவதற்கு பெரும் பங்காற்றிய தமிழ்ச்செல்வன், கமலாலயன், வேல.ராமமூர்த்தி போன்றோரை நினைவுபடுத்தியது; கல்வி தருவதென்பது எழுதப்படிக்கக் கற்றுத்தருவதே என கூறியும், இறுதியில் இப்பணியில் இன்னும் ஆக்கம் செலுத்தியிருக்கலாமே என்கிற ஏக்கம்; என எல்லாமே என் நாடி நரம்புகளில் உணர்ச்சியேற்றிவிட்டது. காரணம் வேலூர் மாவட்ட அறிவொளி இயக்க பணிகளில் நானும் இருந்திருக்கிறேன்.

“கல்வியும் கலாச்சாரமும்”
“வகுப்பறையில் இடஒதுக்கீடு ” –
“இணைக்கவா விலக்கவா?” “எதற்காக ஆசிரியர்கள்”
“நியாய வகுப்பறை”போன்ற கட்டுரைகள் இந்நூலுக்கு பெருமை சேர்க்கும் விதமாக பல்வேறு கருத்து தரவுகளுடன் அமைந்திருக்கின்றன.

வருத்தம் இருந்தாலும் பிணக்கு இருந்தாலும் நம்பிக்கை வைத்து அவரிடம் நாம் பேச்சை நிறுத்துவதில்லை; தொடர்ந்து பேசுகிறோம்; நாம் பேசுவதும் அப்படித்தான். இங்கேதான் நியாயம் தோன்றி சமூகம் எங்கும் பரவக்கூடும். யார் மறுக்க முடியும்? சகிப்புத்தன்மை பொறுமை என விளை நிலமும் வகுப்பறை தான். பாரபட்சமற்ற அன்பின் ஊற்றுக்கண் இதுதான். தொடர்ந்து பேசுவோம் என முடித்திருக்கிறார் மாடசாமி அவர்கள்.

அழகுற வெளியிட்ட பாரதி புத்தகாலயத்திற்கு வாழ்த்துகள்.

Unmai Manithanin Kathai book Written by Parish polevoy bookreview by Saguvarathan. நூல் அறிமுகம்: பரீஸ் பொலேவோயின் உண்மை மனிதனின் கதை - சகுவரதன்

நூல் அறிமுகம்: பரீஸ் பொலேவோயின் உண்மை மனிதனின் கதை – சகுவரதன்




நூலின் பெயர் : உண்மை மனிதனின் கதை
ஆசிரியர் : பரீஸ் பொலேவோய்
தமிழில் : பூ.சோமசுந்தரம்
வகை : நாவல்
பதிப்பகம் : பாரதி புத்தகாலயம்
விலை :270/
புத்தகம் வாங்க இங்கு க்ளிக் செய்யவும். thamizhbooks.com

பரீஸ் பொலேவோய் புகழ்பெற்ற நூலாசிரியர், பத்திரிகையாளர். இரண்டாம் உலகப்போரில் பொலெவோய் பரீஸ்‘பிராவ்தா’ செய்தித் தாளின் போர்முனை நிருபராகப் பணியாற்ற செல்கிறார்.

அப்போதுதான் உண்மை மனிதனின் கதையின் கதைமாந்தரான செஞ்சேனையின் வீரமிக்க விமானி அலெக்சேய் மெரேஸ்யெவைச் சந்திக்கிறார். போர்முனையில் மிகச்சிறந்த விமானி எனப் பெயர் வாங்கியிருப்பதைக் கேள்விப்பட்டு, பரீஸ் அவரை பேட்டி காண விரும்புகிறார்.

அலெக்சேய் மெரேஸ்யெவிற்கும்( கதாநாயகன்) மாஸ்கோவிலிருந்து வந்துள்ள ‘பிராவ்தா’ செய்தியாளரிடம் நாட்டில் நடந்துவரும் நிகழ்வுகள் அனைத்தையும் கேட்டுத்தெரிந்துகொள்ள வேண்டும் என்கிற ஆசை. எனவே இரவு தன்கூடவே தங்குமாறு கூறி அழைத்துச் செல்கிறான். அதன்பின்னர் அலெக்சேய் மெரேஸ்யெவ் தன் கதையை பரீஸிடம் கூற, அவர் கேட்டுப் பதிவு செய்து, நமக்கு அளித்துள்ள கதைதான் உண்மை மனிதனின் கதை.

நாவல் சுருக்கம்
இருபத்திரண்டு வயது அலெக்ஸேய் ஒரு விமானி. அதுவும் போர் விமானி. இரண்டாம் உலகப்போரில் ஊடுருவும் ஜெர்மானியர்களை வீழ்த்த விமானம் போட்டி செல்கிறான்.
ஆனால் அவனோ ஜெர்மானியர்களால் சுட்டு வீழ்த்தப்படுகிறான் . அந்த விபத்தில் இரண்டு கால்களும் முறிந்து போகின்றன . அடர்ந்த காட்டின் ஊடே கடுமையான பனிப்பொழிவில் அவன் தவழ்ந்து தவழ்ந்து நெடுந்தூரம் பயணிக்கிறான் .

பல்வேறு விதமான இன்னல்களை சந்திக்கிறான் .கரடி போன்ற மிருகங்களின் தாக்குதல்களில் இருந்து தப்பித்து ஒரு கிராமத்தில் வந்து சேருகிறான். கிராமமக்கள் அவனுக்கு உதவி ராணுவ மருத்துவமனையில் சேர்த்து விடுகிறார்கள். அவளது இரு கால்களும் அழுகிப் போனதை மருத்துவர்கள் கண்டறிகிறார்கள். அவனது இரு கால்களும் துண்டிக்கப்படுகின்றன.

தாய்நாட்டைக் காக்கும் யுத்தத்தில் அவனால் ஒரு முடவன் போல முடங்கிக் கிடக்க முடியவில்லை. மீண்டும் விமானி ஆகி எதிரிகளின் விமானங்களை சுட்டு வீழ்த்த வேண்டும் என்ற கடமை உணர்ச்சி அவனை வாட்டுகிறது. அவனுக்கு இரண்டு கட்டை கால்கள் பொருத்தப்படுகிறது . அந்தக் கட்டை கால்களில் ராணுவ பூட்சுகளை மாற்றி தனது முழங்கால்களில் பொருத்தி நடைப் பயிற்சியில் ஈடுபடுகிறான்.

அவனுக்கு வீரம் விளைந்தது என்கிற நாவலும் அதன் கதாநாயகன் பாவேலும் நினைவுக்கு வருகிறார்கள். தொடர்ந்து கடுமையான பயிற்சிக்கு பின் கட்டை கால்களோடு விமானியாகி மீண்டும் பறக்கிறான். ஜெர்மானியர்களின் விமானங்களை மீண்டும் சுட்டு வீழ்த்துகிறான் .

நாவல் அமைப்பு
உண்மை மனிதனின் கதையை நான்கு பாகங்களாக பரீஸ் எழுதியிருக்கிறார். முதல் பாகத்தில் ஜெர்மானியர்களுடன் நடந்திடும் சண்டையில் அலெக்சேய் மெரேஸ்யேவின் விமானம் பொருக்கி விழுகிறது. அதிலிருந்து எப்படியோ தப்பிப்பிழைத்த அலெக்சேய், பனிப்புயலில் அடர்ந்த காட்டில் 18 நாட்கள் தவழ்ந்து செல்கிறான். அவன் வருவதைக் கண்ணுற்ற இரு சிறுவர்கள், ஊருக்குள். சொல்ல, மிஹாய்லா தாத்தா, கிராமத்துப் பெண்கள், ‘கொரில்லா’ கோழி சூப் வைத்துக்கொடுத்த கிழவி உட்பட அனைவரும் இவனை அன்புடன் கவனிக்க முதல் பாகம் நிறைவடைகிறது.

இரண்டாம் பாகத்தில் மருத்துவமனையில் அலெக்சேய்க்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது. அலெக்சேய் மருத்துவமனையில் அனுமதிக்கப்படும்சமயத்தில்
கால் விரல் எலும்புகள் நொறுங்கியிருந்தன. இரண்டு பாதங்களிலும் தசையழுகல் ஏற்பட்டிருந்தது. அளவுகடந்த சோர்வு வேறு.

இவ்வாறு மிகவும் மோசமான நிலைமையில் அனுமதிக்கப்பட்ட அலெக்சேயை அங்கே அவனுடன் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்த கமிஸாரும், மருத்துவத்தாதிகளும், தலைமை மருத்துவர் வஸீலிய் வஸீலியெவிச்சும் அவனுக்குத் தைரியம் கொடுத்து அறுவைச் சிகிச்சையின் மூலம் கால்களை அகற்றிவிடுகிறார்கள்.
இனி விமானியாக முடியாதே என்ற கவலையில் அலெக்சேய் நொறுங்கிப் போய்விடுகிறான்.

அந்த சமயத்தில், ஒருநாள் ஒரு பத்திரிகையில் ஒரு செய்தி வருகிறது. ஒருவன், தனக்கு ஒரு கால் இல்லாத நிலையிலும், பொய்க்கால் பொருத்திக்கொண்டு, விமானத்தை ஓட்டியதாகக் கூறுகிறது, இதைக் கேள்விப்பட்டவுடன் அலெக்சேய் உற்சாகம் கொள்கிறான். அதன்பின் தலைமை மருத்துவர் வஸீலிய் வஸீலியெவிச் மூலம் தனக்கு அளிக்கப்பட்ட பொய்க்கால்கள் மூலமாக கடுமையாகப் பயிற்சி பெற்று, இயல்பானவர்கள் நடப்பதைப்போலவே பொய்க்கால்களுடன் நடக்கும் அளவிற்குத் தன்னை உருவாக்கிக்கொண்டான். இவை அனைத்தையும் இரண்டாம் பாகத்தில் நாம் படித்திடலாம்.

கதையின் மூன்றாம் பாகத்தில் மீண்டும் போர் விமானியாவதற்காக அலெக்சேய் மேற்கொள்ளும் முயற்சிகளைப் பார்க்கிறோம். ஒவ்வொருவரும் அவனிடம் உள்ள அசாத்திய திறமையைக்கண்டு ஆச்சர்யப்படுவதும், இறுதியில் அவனுக்குக் கால்கள் கிடையாது என்று தெரியவருகிறபோது தங்கள் கையறுநிலையைத் தெரிவிப்பதும், எல்லாவற்றையும் வெற்றிகொண்டு அலெக்சேய் போர் விமானியாவதையும் மூன்றாவது பாகத்தில் நாம் பார்த்திடலாம். நான்காவது பாகத்தில் போர் விமானிகளிலேயே முன்னுதாரணமாகத் திகழும் அலெக்சேயை நாம் பார்க்கிறோம்..

ரசித்த பகுதிகள்
இந்நாவலின் சிறப்பம்சம் இயற்கை காட்சிகளையும் மனித நடவடிக்கைகளையும் வான போர் காட்சிகளையும் ஒரு திரைப்படம் போல காட்டுவதாகும்.

அற்புதமான வர்ணனைகள் பக்கத்துக்குப் பக்கம் மெய்சிலிர்க்கும் காட்சிகள். பறவைகள் மிருகங்களின் நடமாட்டம், இலைகள் கிளைகளின் அசைவுகள் ,நம்மை காட்டிற்குள் இழுத்துச் சென்று வனவாசியாக்கி விடுகின்றன. காட்டைப் பற்றிய ஒரு வர்ணனை பாருங்களேன்.

“காடு இரைந்தது. முகத்தில் வெக்கை அடித்தது. ஆனால் முதுகுப்புறமிருந்து வந்தது முள்ளாய் குத்தும் குளிர். இருளில் கோட்டான் கூவிற்று. நரிகள் கத்தின. நெகிடியின் பக்கத்தில் அணையும் தருவாயில் கண்சிமிட்டி கொண்டிருந்த கங்குகளை சிந்தனையுடன் நோக்கியவாறு முடங்கியிருந்தான்.

பட்டினியால் நோயுற்ற, களைப்பால் செத்துக்கொண்டிருந்த மனிதன். பிரம்மாண்டமான இந்த அடர் காட்டில் அவன் தன் தனியன். இருளில் அவன் முன்னே இருந்தது தெரியாத எதிர்பாராத ஆபத்துகளும் சோதனைகளும்தான். “பரவாயில்லை, பரவாயில்லை” எல்லாம் நலமாக முடியும் என்று திடீரென சொன்னான். இந்த மனிதன் தனது ஏதோ பழைய நினைவால் தூண்டப்பட்டு வெடிப்பு கண்ட உதடுகளால் அவன் புன்னகைத்தது நெகிடியின் செவ்வொளிர்வில் தெரிந்தது.” பனிபடர்ந்த காட்டில் கதாநாயகன் தவழ்ந்து தவழ்ந்து செல்லும் போது ஒரு காட்சியை அருமையாக வருணிக்கிறார்.

“மெதுவாக மிக மெதுவாக ஒரு கண்ணை திறந்து பார்த்தவன் அக்கணமே அவற்றை இறுக மூடிக் கொண்டு விட்டான். அவனுக்கு எதிரே பின் கால்களில் குந்தி இருந்தது ,பெரிய, மெலிந்த, கரடி. கரடி பசித்திருந்தது எரிச்சல் கொண்டிருந்தது . ஆனால் பிணங்களின் இறைச்சியை கரடிகள் உண்பதில்லை. பெட்ரோல் நெடி சுள்ளென்று அடித்த அசைவற்ற உடல்.உடல் நெடுக மோந்த அந்த கரடி சோம்பலுடன் திரும்பிப்போக முக்கலும் முனகலும் அதை திருப்பி வரச் செய்தன.” ஒருகணம் ஆடிப்போகிறோம்.

இன்னொரு சுவையான காட்சி. “தவழ்ந்து தவழ்ந்து சென்ற கதாநாயகன் ஒரு கிராமத்தை அடைகிறான். முதலில் அவன் ஜெர்மானியன் என்று சந்தேகப்பட்ட கிராமத்துப் பெண்கள் பின்பு அவன் சோவியத் வீரன் என்று தெரிந்ததும் அவன் மீது அக்கறை கொண்டு கவனிக்கிறார்கள் . அவனுக்கு கோழிச்சாறு கொடுத்தால் தெம்பு வரும் .ஆனால் கிராமத்தில் இருந்த எல்லா கோழிகளையும் வாத்துகளையும் ஜெர்மானியர்கள் பிடித்து தின்று விட்டார்கள். ஒரே ஒரு கோழி மட்டுமே பதுங்கி தப்பிவிட்டது .ஜெர்மானியர்கள் போனபின் பெண்கள் அந்த கோழியை,’கொரில்லாக் கோழி’ என்று பெயரிட்டு அழைக்கின்றனர்.

அந்த கோழி எஜமான் ஒரு பெண் . அவள் அந்தக் கோழியை பலரும் கேட்டு தர மறுத்துவிட்டவள்.ஆனால் அந்தப் பெண்மணி சோவியத் வீரனுக்கு என்றதும் தனது கொரில்லா கோழியை அறுத்து சூப் வைத்து கொடுக்கிறாள். பெண்கள் மகிழ்ச்சியில் ஆரவாரம் கிறார்கள்.” நாவல் முழுக்க பல காட்சிகள் நம்மை ‘அட’. போடவைக்கின்றன.
வர்ணனைகள் மெய்சிலிர்க்க வைக்கின்றன. போர்க்காட்சிகளில் வீரம் கொப்புளிக்கின்றன.

காதல் காட்சிகளில் மனம் இறக்கைகள் கட்டி பறக்கின்றன. பூ.சோமசுந்தரம் அவர்களின் மொழிபெயர்ப்பு, உணர்வுகளை உணர்ச்சிகளை அப்படியே நமக்குள் மடைமாற்றம் செய்ததில் நூறு சதம் வெற்றியடைந்துள்ளது. அனைவரும் வாசித்து இன்புறவேண்டிய நல்ல நூல்.

நன்றி: வாசிப்போம் – தமிழ் இலக்கியம் வளர்ப்போம் முகநூல் குழு

Saguavarathan Poems. சகுவரதன் கவிதைகள்

சகுவரதன் கவிதைகள்




பின் புத்தி
=========
தலைப்பைப் பற்றி
தலையை
சொரிந்துகொண்டிருக்கையில்
கவிதை வரிகளில்
அலைந்துகொண்டிருந்த
எறும்பு
சுருக்கென கடித்துவிட்டது.
நசுக்கிய பிறகுதான்
யோசித்தேன்.
என்ன சொல்ல வந்திருக்கும் ?

கார்ப்பரேட்
=========
விலை அதிகமென்று
வேண்டாமென
உதறி நடந்தேன்.
வாங்கச் சொல்லி
நச்சரித்தபடியே
வருகிறது
மல்லி வாசனை.

ஆறுவது சினம்
=============
உரோமங்கள் சிலிர்ப்பதை
நன்கு உணர்கிறேன்.
உதடுகள் துடிக்க
குத்தீட்டியாய்
நிற்கிறது மீசை.
சிவந்த கண்களுடன்
நறநறவென
பற்களைக் கடிக்கிறேன்.
ஆயினுமென்ன…
நிரப்பிய பெட்ரோலுக்கான
விலையை
புன்முறுவலுடன்தான்
கொடுக்கிறேன்.

கௌரவம்
=========
பசிக்கிறதா என்றேன்.
இல்லை.
இப்போதுதான்
தின்று முடித்தேன்
பசியை
என்றான்.

மெய் பிம்பம்
=============
மிஸ்ஸைப்போலவே
அபிநயம் பிடிக்கிறாள்
சிறுமி.
பார்க்கப் பயந்து
கண்ணை
மூடிக் கொண்டது
கண்ணாடி.

Saguvarathan Poems 2 சகுவரதன் கவிதைகள்

சகுவரதன் கவிதைகள்




1
இதய கமலம்
============
மாதம்
மும்மாரி பெய்தபோதும்
வெயில்
சூட்டில் காய்ந்தபோதும்
தன்னிறத்தை
மாற்றிக்கொண்டேதேயில்லை
சந்திரனை
ராகு விழுங்குவதுபோல்
மெல்ல கிராமத்தை விழுங்கியது
நகரம்.
வானளவு நின்று
எல்லோர் கண்களையும்
உறுத்துகிறது.
யோசித்து யோசித்து
பெயர் சூட்டினாராம்
தாத்தா
இதயகமலமென்று.
அப்பாவின் பெருமிதம்
எனக்கு புன்னகையைத் தரும்.
புன்னகையை விற்றால்
புண்ணாக்கும் கிடைக்காதென
பெயரை மாற்றி
பலகையைத்
தொங்கவிட்ட மகன்
பிழை திருத்தம் பார்த்தான்.
“வீடு விற்பனைக்கு ”

2
பிழைப்பு
=========
கிடுகிடுவென ஏறி
கிடுகிடுவென கீழிறங்குவார்
அப்பா.
அவர் வந்தால் போதும்
அத்தனை மரங்களும்
தலைவிரித்தாடும்.
வலியில்லாமல் வெட்டி
உடையாமல் கீழிறக்கும் வித்தை
அவருக்கு மட்டுமே உரியது.
லாரி லாரியா ஏற்றிவிட்டு
வாங்கிய கூலியோடு
உறிஞ்சிக்குடிப்பார்
கடைசி இளநீரை.
வயசானாலும்
உடலென்னவோ திடகாத்திரம்தான்.
இப்போதும்
விறுவிறுவென மேலேறி
விறுவிறுவென கீழிறிங்குகிறார்
தோப்பழித்து
கட்டும் கல்லூரியில்
சித்தாள் வேலை கிடைத்த
மகிழ்ச்சியில்.

Book Review: Nanbargalin Parvayil Marx Written by Sa.Subbarao book review by Saguvarathan நண்பர்களின் பார்வையில் மார்க்ஸ்

நூல் விமர்சனம்: ச.சுப்பாராவின் நண்பர்களின் பார்வையில் மார்க்ஸ் – சகுவரதன்




மொழிபெயர்த்து எழுதியவர் ச. சுப்பாராவ் அவர்கள். சிறந்த மொழிபெயர்ப்புக்கான பல விருதுகளை பெற்றுள்ளார். “நிகழ்ந்த போதே எழுதப்பட்ட வரலாறு” இந்திய பொருளாதார தேசியத்தின் தோற்றமும் வளர்ச்சியும்” உள்ளிட்ட பல நூல்களை மொழிபெயர்த்துள்ளார்.

23 ஆண்டுகாலம் நூலகத்திலேயே வாழ்க்கையை கழித்து, நாற்பதாயிரம் புத்தகங்களைப் படித்துக் குறிப்பெடுத்து, தான் புகைத்துப்போடும் போடும் சுருட்டுக்குக்கூட தான் எழுதும் புத்ககத்தின் வருவாய் போதாது எனத் தெரிந்தும் மூலதனம் என்னும் நூலை உலக மக்களுக்குத் தந்த காரல்மார்க்ஸ். உறவுகளை நிர்ணயிப்பதே பொருளாதாரம்தான் என்று சொன்னவர்.

வாழ்நாள் முழுக்க பொருளாதாரச் சிக்கலில் தவித்தாலும் மனிதகுல சமூக மாற்றத்திற்கு புதியதொரு விடியலுக்காக இறுதிவரை சிந்தித்த மாமனிதனின் வாழ்க்கை அம்சங்களை அவருடன் பயணித்த இரு நண்பர்களின் வாக்குமூலம்தான் இந்நூல். ஒருவர் ஜெர்மன் சோஷலிஸ்டும் ஜெர்மன் சோசலிஸ்டு டெமாக்ரஸி கட்சித் தலைவருமான கார்ல் லீப்னெஸ்ட். மற்றொருவர் பிரெஞ்ச் புரட்சியாளரும் மார்க்சின் இரண்டாவது மகளை மணந்தவருமான பால் லஃபார்கே.

இருவரது நினைவலைகளில் ஏராளமான செய்திகள் அறிய முடிகின்றன. மார்க்ஸ் என்ற அற்புத மனிதரை, பொருளாதார மேதையை, உலகத்திற்கே மார்க்சிய தத்துவத்தை போதித்த அறிஞரின் குழந்தைத்தனமான செய்கைகளை, இன்புற்று மகிழ்ந்த தருணங்களை, அல்லல்படும் துயரங்களை, விளையாட்டுகளை நண்பர்களிடம் கழித்த பொழுதுபோக்குகளை, விவாதங்களை, நூலக தேடல்களை என பல சம்பவங்கள் விவரித்துக் கொண்டே செல்வதை வாசிக்க பெருமூச்சு கிளம்புவது நிச்சயம். கார்ல் லீப்னெஸ்ட், மார்க்ஸைப்பற்றி கூறும்போது அடிக்கடி “மார்க்ஸ் பாணி” என்று ஒன்றைக்குறிப்பிடுகிறார்.

மார்க்ஸ் ஒரு கருத்தாக்கத்தை சாத்தியப்படும் அளவு சுருக்கமாக உருவாக்கிக் கொள்வார். அதை தொழிலாளர்களால் புரிந்து கொள்ளப்படாத வார்த்தைகள் எதுவும் வந்துவிடக்கூடாது என்று மிகக் கவனத்தோடு சொற்களைத் தேர்ந்தெடுத்து விரிவாக விளக்குவார். பிறகு பார்வையாளர்களை கேள்விகேட்கச் சொல்லுவார். யாரும் கேள்வி கேட்கவில்லை என்றால் பார்வையாளர்கள் தவறாகப் புரிந்துகொள்ளக்கூடாது, புரிதலில் எந்த இடைவெளியும் இருக்கக்கூடாது என்பதற்காக பார்வையாளர்களை கேள்வி கேட்டு பரிசோதித்துக்கொள்வார்.

உரையாடும் போது கரும்பலகையைப் பயன்படுத்துவதும் அதில் பல சூத்திரங்கள் எழுதுவதுமான செயல்பாடுகளை மார்க்ஸ் தொடர்ந்து செய்து வந்திருக்கிறார் என்கிற தகவல் நம்மை வியப்பில் ஆழ்த்துகிறது. “மார்க்ஸ் மற்றும் அவரைச்சேர்ந்தவர்களை” “கொள்ளைக்காரர்கள்” என்றும் “மனித இனத்தின் சக்கைகள்” என்றும் பிறரால் அழைக்கப்பட்டதை நகைச்சுவையாக விளக்கி, தாங்கள் ஏன் அடிக்கடி நூலகம் சென்று அங்கேயே இருந்து வாசிப்பில் ஈடுபட்டோம் என்பதையும் அழகுற கூறுகிறார்.

சில சமயங்களில் எங்களுக்கு சாப்பிட ஒரு பருக்கைக்கூட இருக்காது. ஆனால் அதற்காக நாங்கள் பிரிட்டிஷ் மியூசியம் போகாமல் இருக்கமாட்டோம். ஏனெனில் அங்கு வசதியான நாற்காலிகள் இருக்கும். குளிருக்கு கதகதப்பாக, வசதியாக இருக்கும். அது வீட்டைவிட வசதியானது. அதாவது வீடு இருந்தவர்களின் வீட்டைவிட மார்க்ஸ் வீட்டில் ஏழ்மை மட்டும் தங்கியிருக்கவில்லை. பல்வேறு ஆளுமைகள் தங்கி கற்றுச்செல்லும் பள்ளியாகவும் திகழ்ந்திருக்கிறது. இரவு முழுக்க விவாதம், நடைமுறை தந்திரங்கள் பிற நாடுகளின் அரசியல் பண்பாட்டு நிலைமைகள் என பல்வேறு விஷயங்களில் உரையாடல்கள் அமையுமாம். மார்க்ஸ் தன் குழந்தைகளிடம் காட்டும் அன்பு அபாரமானது. குழந்தைகளோடு ஓடி விளையாடுவார். அவர்களின் குழந்தைத்தனமான விளையாட்டுகளில் குழந்தையாக பங்கேற்பார்.

மார்க்சின் ஆண்குழந்தைகள் சிறுவயதிலேயே இறந்துபோனார்கள். பெண் குழந்தைகள் ஆண் குழந்தைகளைப்போலவே படு சேட்டைகளுடன் இருப்பார்களாம். மார்க்சின் மகன் இறந்தபோது அதன் சூழ்நிலையை இப்படி விவாதிக்கிறார்.

அந்த காட்சியை என்னால் மறக்கவே முடியாது. இறந்த தன் குழந்தை அருகே குனிந்து அந்தத் தாய் மௌனமாக அழுது கொண்டிருந்தாள். லென்சன் நின்றபடி அழ மார்க்ஸ் சமாதானம் சொல்வோர் மீது கடுமையாக கோபமிட்டபடி தாங்க முடியாத துக்கத்தில் இருக்க, இருபெண் குழந்தைகளும் சத்தமில்லாமல் அழுதபடி அம்மாவிடம் ஓட்டிக்கொண்டிருந்தன. அவர்களை விட்டால் மரணம் பிடித்துக்கொண்டு போய்விடுமோ என்பதுபோல் அந்தத் தாய் குழந்தைகள் இருவரையும் இறுக்கி அணைத்திருந்தார். செஸ் விளையாட்டில் மார்க்ஸ் காட்டிய ஈடுபாடு குறித்து இவ்வாறு கூறுகிறார்.

மார்க்ஸ் செஸ் விளையாட்டில் இக்கட்டான நிலையில் மாட்டிக்கொண்டால் எரிச்சலடைவார். தோற்றுப்போனால் கடுப்பாகி விடுவார். புதுப்புது உத்திகளோடு களமிறங்குவார். வெற்றிபெற்றால் அறையே எதிரொலிக்கும் அளவிற்கு சத்தமிட்டு சிரிப்பார் பால் லஃபார்கே வின் நினைவலைகள் இன்னும் பல செய்திகளைக் கூறுகிறது.

நான் இந்த உலகத்தின் குடிமகன் என அடிக்கடி கூறிக் கொள்வாராம். பிரான்ஸ், பெல்ஜியம், இங்கிலார்ந்து என எந்த நாட்டிற்கு துரத்தப்பட்டாலும் அந்நாட்டில் உருவாகிக் கொண்டிருந்த புரட்சிகர இயக்கத்திற்கு இவரே காரணமாக இருப்பாராம். தான் மார்க்ஸூடன் வேலைபார்த்து வந்ததாகவும் அவரது படைப்புகளை எழுதும் வாய்ப்பு கிடைக்கப்பெற்றவன் என்றும் அதே சமயத்தில் அது கடினமான பணி என்றும் பால் லஃபார்கே கூறுகிறார்.

நூலக அறையில் புத்தகங்கள் தாறுமாறாக சிதறிக் கிடைக்குமாம். யாரையும் சரிசெய்ய அனுமதிக்கமாட்டாராம். அந்தந்த புத்தகத்தை அதனதன் இடத்திலேயே அமர்ந்து படிப்பாராம். அவருடைய சொந்த உறுப்புகளைப்போல் பாதுகாப்பாராம். விஞ்ஞானம் ஒரு சுயநலமான இன்பமாக இருக்கக்கூடாது. மனித சமூக தேவைக்கு தங்களின் விஞ்ஞான அறிவை பயன்படுத்துவதில் விஞ்ஞானிகள் முன்னிற்கவேண்டும். விஞ்ஞானம் பற்றிய மார்க்சின் ஜனநாயகப் பூர்வமான கருத்தாக லஃபார்க் கூறுகிறார்.

சாதாரண மனிதனின் வாழ்க்கையைத்தான் மார்க்ஸ் வாழ்ந்துள்ளார். இன்பம் துன்பம் வரவு செலவு இழப்புகள் பொருளாதார சிக்கல்கள் கையறுநிலைமைகள் என அத்தனை அம்சங்களும் நம் வாழ்வைப்போலவே அவர் வாழ்விலும் கடந்து சென்றிருக்கின்றன. ஆனால் அவர் அப்படியே மாய்ந்துவிடவில்லை. நிலையான வீடு மட்டுமல்ல நிலையான நாடே இல்லாமல் அகதியாய் உலகை சுற்றினாலும் இந்த உலகத்திற்கான பொன்னுலகம் மின்னிக்கொண்டிருப்பதை மக்களுக்கு காட்டியவர்.

இரு நண்பர்களின் பார்வையில் என்ன தெரிந்துகொண்டோம்.?

அசாதாரண நிலையிலும் தன் வாழ்க்கையின் பெரும்பகுதியை ஒட்டு மொத்த மக்களின் வாழ்க்கைக்கான உயரிய தத்துவத்தை வரையறுப்பதிலும் நடைமுறைபடுத்துவதிலும் செலவிட்டார் என்பதே ச.சுப்பாராவ் அவர்களுடைய மொழிபெயர்ப்பு, மொழிபெயர்ப்பு போலவே தெரியவில்லை. விறுவிறுவென, எளிமையாக, புரியும் நடையில் வாசிப்பு நகர்கிறது. மிக அற்புதமான பணி. பாரதி புத்தகாலயம் இப்புத்தகத்தை நல்ல அட்டையில், நல்ல தாளில், நல்லமுறையில் அச்சிட்டு வெளியிட்டுள்ளது.

நூலின் பெயர் ; நண்பர்களின் பார்வையில் மார்க்ஸ்.
மொழிபெயர்ப்பு.: ச.சுப்பாராவ்
பதிப்பகம் : பாரதி புத்தகாலயம்
விலை ரூ : 70/
Book Review- T.V.Venkateshwar's Nilavukkul Payanam book review by Saguvarathan. த.வி.வெங்கடேஸ்வரனின் நிலவுக்குள் பயணம் - சகுவரதன்

நூல் அறிமுகம்: த.வி.வெங்கடேஸ்வரனின் நிலவுக்குள் பயணம் – சகுவரதன்



ஆதியில் நிலவைக்குறித்த கற்பனைகள் ஆயிரம் இருந்தன. அறிவியல் வளர்ந்த பின் புதிர்கள் மெல்ல அவிழத் தொடங்கின. நிலவில் கால் பதித்தான் மனிதன். விண்கலங்கள் ஏவப்பட்டன. நிலவைப் பிரதி எடுத்தான். குடில் அமைக்க சிந்திக்கிறான். பெரியவர் முதல் குழந்தைகள் வரை எல்லோருக்குமே ஒரு விந்தை கலந்த மகிழ்ச்சியை வழங்கியபடி தொலைவில் புன்னகைக்கிறது நிலவு.

நிலவுக்குள் பயணம் புத்தக பின் அட்டையின் வைர வரிகள். முதுநிலை விஞ்ஞானி த.வி.வெங்கேடஸ்வரன் இப்புத்தகத்தின் ஆசிரியர். ஏராளமான அறிவியல் நூல்களுக்கு சொந்தக்காரர். ஆயிரக்கணக்கான கட்டுரைகளை தந்தவர். அறிவியல் மக்களுக்கே எனும் உயரிய கோட்பாட்டோடு மக்கள் களத்தில் தொடர்ந்து இயங்கி வருபவர். அறிவொளி இயக்கத்தை தமிழகம் முழுவதும் வெற்றிக்கொடி நாட்டிய தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் ஸ்தாபகர்களில் ஒருவர். பாரத்ஞான் பிரச்சார் வித்யான் அமைப்பின் முதுநிலை விஞ்ஞானி.

மொத்தம் 23 கட்டுரைகள். பக்கமோ 175. ரசனைமிக்க தலைப்புகள். சினிமா பாடல் வரிகளையே தலைப்பாக வைத்திருக்கிறார்.
1. நிலவு : பையோடேட்டா
2. வதனமே சந்திர பிரம்மமோ
3. மறைந்திருந்து பார்க்கும்
4.ஆகாயத்தில் நிறம் என்ன ?
5. நீ இல்லாமல் நான் இல்லை
6. நிலவே என்னைத் தொடாதே
7. வெண் நிலவே வெண் நிலவே
8. எங்கே கலிலியோ
9. கன்னத்தில் என்னடி காயம்
10. நிலா காயுதே
11. நிலவின் வயது
12. நிலவில் உள் அமைப்பு
13. சிறுகக்கட்டி பெருக வாழ்
14. என் இனிய பொன் நிலாவே
15. அன்று வந்ததும் அதே நிலா
16. நிலவுக்குப் போவோம்
17.இரண்டாம் தேன் நிலவு
18. சந்திராயன்
19. தொலை உணர்வு
20. சந்திராயன் 100
21. சந்திராயன் 1 ஐ நோக்கி
22. சந்திராயன் தோல்வியா ?
23. நிலவை அடைந்த விண்கலங்கள்.

பார்த்தீர்களா தலைப்புகளை!!!
ஜனரஞ்சகமான கட்டுரைகள் என்று நினைத்தால் அது தவறு.எல்லாமே ஆழமானவை.அதுவும் ஆழ்ந்து உயிர்த்த அறிவியல் கட்டுரைகள். நம் இலக்கியங்களில் நிலாவுக்கு எத்தனை பெயர்களை சூட்டியுள்ளார்கள் தெரியுமா ? சந்திரன், மதி , திங்கள் , தாலைன், அம்புலி, தண்கதிர், பைங்கதிர், புதன் தந்தை, கடகக்கோள், களங்கன், முயற்கூடு, உருக்காந்தன் என சொல்லிக்கொண்டே போகலாம்.

நிலவின் பையோடேட்டாவை முதல் கட்டுரையிலேயே அளித்துவிடுகிறார். அமைவிடம், தண்மை, அடர்த்தி சுழற்சி, வானிலை ,காலநிலை ,ஈர்ப்புச் சக்தி , நிறை என தரவுகளோடு முடித்துக்கொண்டு பிறைத்தோற்றத்தையும் சுழற்சி நாட்களையும் அடுத்த கட்டுரையில் விளக்கமளிக்கிறார்.

அமாவாசைக்கு அமாவாசை 29 1/2 நாட்கள். ஆனால் பூமியைச்சுற்றிவர நிலவுக்கு 27.3 நாட்கள். இது எப்படி என வினாவையெழுப்பி பதில் கூறத்தொடங்குகிறார். சுவாரசியம் கூட அடுத்த கட்டுரைக்கு உடனே நகர்ந்துவிடலாம். அடுத்த கட்டுரை என்னவாக இருக்கும் ! நீங்கள் நினைப்பது சரிதான்.சந்திர கிரகணம்தான். கிரகணத்தைப்பற்றிய அறிவியல் செய்திகளோடு ஆதிகுடிகளை மிரட்டிய கொலம்பஸின் கதையொன்றையும் நகைச்சுவையோடு கூறியிருக்கிறார்.

கொலம்பஸ் நான்காவது முறையாக அமெரிக்காவிற்கு கடல் வழி பயணம் மேற்கொண்டபோது ஜமைக்கா தீவில் தங்க, அங்கிருந்த ஆதி குடிகள் கப்பல் சிப்பந்திகளின் இம்சைகளை பொறுக்காமல் உணவளிக்க மறுக்க , கொலம்பஸோ கடவுளின் கோபத்திற்கு ஆளாவீர்கள். நாளை முதல் நிலா கண்ணுக்குத் தெரியாது என்று மிரட்டியுள்ளார். ஆதிகுடிகளும் பணிந்துபோனதாக ஒரு வரலாற்றை ஆசிரியர் பதிவு செய்துள்ளார். பூமிலிருந்து பார்க்க வானம் நீலநிறமாய் இருக்கிறது.சரி. நிலாவிலிருந்து பார்க்க வானம் எந்த நிறத்தில் இருக்கும் என்கிற ஆச்சரிய வினாவை முன்னிறுத்தி கட்டுரையாக்கியிருக்கிறார். நிலவு இல்லாவிட்டால் பூமி என்னவாகும் ? பூமியை நிலா கட்டுப்படுத்துகிறதா ? என்கிற கேள்விக்கு அபூர்வமான பல தகவல்களை கூறுகிறார்.

கடலின் ஏற்ற இறக்கம் நிலவின் ஈர்ப்பு விசையால் நிகழ்கிறது என்றும் புவியின் பல நிகழ்வுகளுக்கு காரணமாக உள்ளதையும் நிலம் வாழ் உயிரின தோற்றம் பூமியின் 24 மணிநேர சுழற்சி போன்றவற்றில் நிலவின் பங்கு குறித்தும் தெளிவாக அறியமுடிகிறது. நிலவின் ஈர்ப்பு விசை இல்லாவிட்டால் பூமியின் சுழற்சி கட்டுப்படுத்த இயலாமல் இரவு பகல் சிலமணிநேரங்களுக்குள்ளாகவே நிகழ்ந்துவிடும் எனவும் அதனால்உயிரின தோற்றம் மட்டுப்படுத்தப்படலாம் எனவும் வாசிக்கும் போது பயம் தொற்றிக் கொள்கிறது.

கலிலியோ ஆய்வுகள், கோபர்நிக்கல் ஆய்வுகள் , நிலவில் காணப்படும் பள்ளம் மேடுகள், விண் கற்கள் மோதிய இடங்கள், நிலவின் வயது போன்ற அரிய தகவல்கள் மளமளவென விழுந்துகொண்டேயிருக்கின்றன.

நிலவின் அமைப்பு என்ன ? நிலவுக்கு கரு உண்டா ? கரு திடநிலையா திரவ நிலையா ? முதலிய பற்பல கேள்விகளுக்கு இதுவரை விடை கிடைக்கவில்லை என்றும் தொலைநோக்கியில் மட்டுமே ஆய்ந்து விடைகள்தாம் இப்போது நாம் பேசிக்கொண்டிருப்பவை என்றும் ரஷ்யா அமெரிக்கா இந்தியா சீனா போன்ற நாடுகள் ஏவிய செயற்கோள்கள் சில புதிர்களுக்கு விடை கொண்டுள்ளன என்றும் தரவுகளுடன் விளக்கியுள்ளார் ஆசிரியர். இந்தியா ஏவிய சந்திராயன் சாதித்த சாதனைகள் ஏராளம். சுமார் 300 நாட்களில் சுமார் 3000 முறை நிலவை சுற்றி 70,000 புகைப்படங்களை அனுப்பியுள்ளது. லாலா குழம்பு படிவங்களை சந்திராயன்தான் கண்டுபிடித்தது. நிலவில் கிண்ணக்குழிகள் மட்டுமே நிரம்பியுள்ள தரைப் பகுதி என்ற கூற்றினை மறுதலித்து மேடு பள்ளங்கள் நிரம்பியுள்ள கோள் என்பதை கண்டுபிடித்துள்ளது. டைட்டானியம், மாங்கனிசு , சிலிகான் , அலுமினியம் போன்ற உலோகங்கள் உள்ளதை சந்திராயன்தான் கண்டுபிடித்துள்ளது.

இதற்கெல்லாம் சிகரம் வைத்தாற்போல் அரிய கண்டுபிடிப்பான ” நீர் ” இன்னும் பல தரவுகள் ஆய்வில் உள்ளன. அரிய செய்திகள் , எளிய விளக்கங்கள் , பக்கத்திற்கு பக்கம் புகைப்படங்கள் , விளக்கப்படங்கள் தரவுகள் என சிறப்பான முறையில் வடிவமைப்பு செய்து அச்சிட்டு பதிப்பித்துள்ளது பாரதி புத்தகாலயம். ஆசிரியர்கள் கைக்கொள்ளவேண்டிய புத்தகம் இது. கைக்கொள்வார்களா?

நூலின் பெயர் : நிலவுக்குள் பயணம்
ஆசிரியர் ; த.வி.வெங்கடேஸ்வரன்
பதிப்பகம் : பாரதி புத்தகாலயம்
விலை ரூ : 90/