புத்தகம் பேசுது தமுஎகச மாநாடு சிறப்பிதழிலிருந்து: கலை இரவும் நானும் – சைதை சா.துரைசாமி

புத்தகம் பேசுது தமுஎகச மாநாடு சிறப்பிதழிலிருந்து: கலை இரவும் நானும் – சைதை சா.துரைசாமி




தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கத்தை 1993 முதல் அறிவேன். இந்த அறிதலுக்குக் காரணமானவர் தோழர் வைகி எனும் வை.கிருஷ்ணமூர்த்தி. 1972 முதல் 1980 வரையிலானகாலகட்டங்களில், அண்ணா திமுக கூட்டணியில் வைகியோடு இணைந்து பணியாற்றும் வாய்ப்பு ஏற்பட்டது. சைதாப்பேட்டையில் தேரடித்திடலில் முதன்முதலாக 1993ல் டிசம்பர் 31ல் தொடங்கப்பட்ட கலை இரவு எனும் நிகழ்வின் வழியாக இதனை நடத்திய இந்த எழுத்தாளர் சங்கத்தை அறிவேன். இந்த கலைஇரவு நிகழ்விற்கு ஆண்டுதோறும் மேடை ஒலி ஒளிச் செலவை நான் உபயமென ஏற்றிருந்தேன்.

பொன்மனச்செம்மல் எம். ஜி. ஆர். அவர்கள் தன் பாடல்களில் புரட்சிகரமான பாடல்களை வைத்திருப்பார். அது போன்ற முற்போக்கு கருத்து கொண்ட கலை இரவு விழாவின் பாடல்கள் இருப்பதை நான் அறிந்திருக்கிறேன். ஐந்தாயிரம் பேர் தேரடியில் திரண்டு நடத்தப்பட்ட கலை இரவு நிகழ்ச்சி அந்தக் காலங்களில் பேசு முக்கிய பொருளாக இருந்தது. இதன் வழியாக இந்த சங்கத்தின் தலைவர்கள் அட்வகேட் செந்தில்நாதன், கோமல் சாமிநாதன், இரா.தெ.முத்து போன்றோரை அறிவேன். சில ஆண்டுகளுக்கு முன் சென்னை ராஜீவ்காந்தி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட மேலாண்மை பொன்னுசாமிக்கு நல்ல சிகிச்சை அளித்திட அன்றைய டீனோடு பேசியவை இன்று ஞாபகத்திற்கு வருகின்றன. தமுஎகசவில் திறமையான நல்ல கலைஞர்கள், பாடகர்கள், எழுத்தாளர்கள், கலைக்குழுக்கள் இருக்கின்றன; இருக்கிறார்கள். இவர்கள் காலமுறைப்படி பயிற்சி எடுத்து சமூக மேம்பாட்டின் விழிப்புணர்விற்கு தொடர்ந்து வலு சேர்த்து வருகிறார்கள்.

– சைதை சா.துரைசாமி