திரை விமர்சனம் : சகில் ரவீந்திரனின் காடா களம் – இரா. இரமணன்
காடா களம்
செப்டம்பர் 2021ல் வெளியான மலையாள திரைப்படம். அமேசான் பிரைம் தளத்தில் பார்க்கலாம். பெரியார் வேலி கிரியேஷன் என்கிற நிறுவனம் தயாரித்துள்ளது. ஜின்டோ தாமஸ் என்பவரும் சகில் ரவீந்திரன் என்பவரும் இணைந்து எழுதியுள்ள கதையை சகில் ரவீந்திரன் இயக்கியுள்ளார். ரெஜி ஜோசப் ஒளிப்பதிவாளர். பின்னணி இசை பி.எஸ்.ஜெயஹரி. மைய பாத்திரமான குஜ்ஜாப்போ என்கிற சிறுவனாக டா வின்சி சதீஷ் என்பவரும் அவரது தந்தை முருகன் பாத்திரத்தில் சதீஷ் குன்னோத் மற்றும் பலரும் நடித்துள்ளனர்.
காட்டிற்கு நடுவில் வாழும் பழங்குடி இன மக்களுக்கு முருகன் என்பவர் தலைவர். அவர் காட்டை மிகவும் நேசிப்பவர். காடுகளின் குணங்களையும் விலங்குகளின் இயல்புகளையும் தேன் எடுப்பது, மீன் பிடிப்பது மருந்துப் பொருட்கள் சேகரிப்பது ஆகியவற்றில் சிறந்தவர். அவரது மகன் குஜ்ஜாப்பு அவரைப்போலவே வரவேண்டும் என்று விரும்புகிறான். ஆனால் அவரோ அவன் வெளியே சென்று படிக்க வேண்டும் என்று நினைக்கிறார். அவரது விருப்பப்படி நகரத்திற்கு சென்று படிக்கிறான். அங்குள்ள வசதிகளையும் புதுமைகளையும் உணவு வகைகளையும் ஆச்சரியத்துடன் பார்க்கிறான். அவன் நண்பன் பாபியோ நகரத்தில் விளையாடக் கூட இடம் இல்லை; காட்டிற்கு சென்றால் விருப்பம்போல் விளையாடலாம் என்று நினைக்கிறான். திடீரென்று குஜ்ஜாப்புவின் தந்தை இறந்துவிடுகிறார். அவரது இறுதி சடங்குகளை அவர்களது குல வழக்கப்படி செய்துவிட்டு முருகன் நகரத்திற்கு திரும்பாமல் காட்டிலேயே தங்கி விடுகிறான். அவனது தந்தையின் பாத்திரத்தை ஏற்றுக்கொள்ளும்படி அவனது குல மக்கள் கேட்டுக்கொள்கிறார்கள். அவனும் அதை ஏற்கிறான்.
காட்டு வாழ்க்கை, அவர்களது குடியிருப்பை அடைவதற்கே கரடு முரடான பாதையில் ஜீப் பயணம், பிறகு பழங்கால முறையிலான இழுவை தெப்பத்தில் பயணம், அதன் பின் காட்டுப் பாதையில் கால்நடை என எவ்வளவு சிரமங்கள், தேனை எந்த மாதங்களில் எடுக்கலாம் எந்த மாதத்தில் எடுக்கக்கூடாது என்கிற கட்டுப்பாடு, இயற்கை மருத்துவம், இறந்தவர்களை அவர்கள் வழிபடும் முறை ஆகியவற்றை சிறப்பாகக் காட்டியிருக்கிறார். அதற்கு மாறாக நகரத்து மக்கள் மரங்களை வெட்டி காட்டை அழிப்பதையும் அதற்கு முருகன் கோபப்படுவதையும் சூசகமாக காட்டுகிறார். முருகனின் இறப்பு கூட யானையினால் அல்ல என்று குஜ்ஜாப்பு சொல்லும்போது மரம் வெட்டுபவர்களாலேயே அவர் கொல்லப்பட்டிருக்க வேண்டும் என்பதை ஊகிக்கிறோம்.
நகரத்தில் மாணவர் விடுதி – அது அரசு விடுதியாகத்தான் இருக்க வேண்டும்- சுத்தமாக இருப்பதாகவும் குளிக்க, படுக்க நல்ல வசதியுடன் இருப்பதாகவும் ஆசிரியர்களும் விடுதிக் காப்பாளரும் பரிவுடன் இருப்பதாகவும் காட்டுகிறார்கள். மாணவர்களும் ஒற்றுமையாக இருக்கிறார்கள். இப்படி ஒரு நிலைமை இருந்தால் எவ்வளவு மகிழ்ச்சியாக இருக்கும்? ஒரு வேளை கேரளாவில் அவ்வாறு இருக்கிறதோ என்னவோ?நாம் எதிர்பார்ப்பது ஒரு பழங்குடி இன மாணவன் என்கிற முறையில் அவன் எதிர்கொள்கிற சிக்கல்கள், கேலிகள், ஆகியவற்றை. அவன் பள்ளிக்கு சேர்ந்து ஆறு மாதங்களுக்குப் பிறகு என்று காட்டுவதால் இதெல்லாம் நடந்து முடிந்து விட்டதாக எடுத்துக் கொள்ளவேண்டுமோ?
முக்கிய பாத்திரத்தில் நடிக்கும் சதீஷ் குன்னோத் அற்புதமாக நடித்திருக்கிறார். ‘காடுதான் நம் அம்மா’ ‘நீ உனக்கான தனிப் பாதையை அமைத்துக் கொள்ள வேண்டும்’ போன்ற வசனங்களும் சிறப்பாக இருக்கின்றன. காட்டில் விலங்குகள் என்று காட்டும் வித்தியாசமான அணில், கிளி ஆகியவை வேறு எங்கிருந்தோ எடுத்து இதில் காட்டப்படுவதாக தோன்றுகிறது. முடிவும் சற்று நெருடுகிறது. குஜ்ஜாப்பு இருந்துதான் காட்டை காப்பற்ற வேண்டும் அவன் படிப்பை தியாகம் செய்ய வேண்டும்; இல்லாவிட்டால் காடு அனாதையாகிவிடும் என்று காட்டப்படுகிறது. அதுவும் அவன் பதின்பருவ சிறுவன். அவனை தலைமை தாங்க அந்த இன மக்கள் அழைப்பது சரியாக இல்லை. மேலும் காட்டை காப்பாற்றுவதில் பழங்குடி இன மக்களுக்குள்ள அக்கறை,உரிமை, அறிவு ஆகியவற்றை மறுக்க முடியாது. ஆனால் நகரத்திலுள்ளவர்களுக்கும் காடு முக்கியமானதுதான். மழை பொழிவிற்கு, மண் அரிப்பை தடுப்பதற்கு, சுத்தமான காற்று கிடைப்பது, பல்லுயிர் சூழல் பாதுகாப்பு ஆகியவை நகர மக்களுக்கு அவசியமானதுதானே? ஆகவே காட்டைக் காப்பாற்றுவதற்கு பழங்குடி மக்கள் பிள்ளைகள் படிப்பை தியாகம் செய்ய வேண்டும்; நகர மக்கள் ஒன்றும் செய்ய வேண்டாம் என்கிற முடிவுக்கு போக வேண்டுமா ? அல்லது முருகனின் இறுதி சடங்கில் கலந்து கொள்ளும் ஆசிரியரும் அவரது மகனும் அதை நகரங்களில் பரப்புவார்கள் என்று எடுத்துக் கொள்ளலாமா?
25 இலட்சம் செலவு செய்து எடுத்த படமாம். பல விருதுகளும் பெற்றுள்ளதாம். ஒளிப்பதிவும் நடிப்பும் விறுவிறுப்பான இயக்கமும், பாடல்களும் பாராட்டப்பட வேண்டும். சுற்று சூழல் விழிப்புணர்வை ஊட்டும் பாடம்.