நூல் அறிமுகம்: கனவும், இயற்கையும், வாழ்வின் பொருளும் – ச. வின்சென்ட்
கனவின் முற்றத்தில் தரையிறங்கும் தாரகைகள்
சக்தி ஜோதி
டிஸ்கவரி புக் பேலஸ்
பக்கம்: 80 விலை: ரூ 100
குழந்தைப் பருவத்தில் அன்பைத் தேடுகிறார்கள்; இளவயதில் காதலுக்கான பொருளைத் தேடுகிறார்கள். இடைப்பட்ட வயதுக்காரர்கள் வாழ்க்கைக்கு அர்த்தத்தைத் தேடுகிறார்கள். முதுமை எய்த எய்த இதுவரைக் கண்ட பொருளினால் என்னபயன் என்று தேடுகிறார்கள். சக்தி ஜோதியும் வாழ்க்கைக்கான பொருளைத்தான் தேடுகிறார். அதனைப் பலவழிகளில், பல இடங்களில் தேடுகிறார்: நிலத்தில், பயிர் முளைத்தலில், வானத்தில் பறக்கும் பறவைகளில், காலில் குத்திய முள் வடித்த இரத்தத் துளியில், கதைகளில் வரலாற்றில் தேடுகிறார்.
கவிஞர் ஜோதி அண்மையில் வெளியிட்டிருக்கும் கவிதைத் தொகுப்பான கனவின் முற்றத்தில் தரையிறங்கும் தாரகைகள் அறுபது கவிதைகளைக் கொண்டது. அவற்றில் பெரும்பான்மையானவை இயற்கையையும் இயற்கை சார்ந்த பயிர்த்தொழில் நுட்பங்களையும் பாடுபவை. பயிர்த்தொழில் செய்வதில் ஆணென்ன பெண்ணென்ன? ஆனால் பெண் குழந்தைதான் தான் போட்ட விதை முளைத்திருப்பதைக் கண்டு குதிக்கும். சிறுமிதான் தான் நட்ட செடியில் மலரும் ரோஜாவை உயிர்போல நேசிப்பாள். கழனிதிருத்தி விதை விதைத்து வளர்த்த முள்ளங்கியைத் தோண்டிப்பார்க்கும் அந்தப்பெண்ணின் கையில் தவழும் வெண்கிழங்குதான் கண்களில் நீர்திரட்டும். இது அன்பின் நெகிழ்ச்சியில் புன்கணீர் வரும் .
இயற்கையின் அதிசயம் சிறுவிதை முளைத்து மரமாவது. கவிஞருக்கு அந்த விதையினுள் உறங்குகிறது மரத்தின் கனவு. ( கவிதைகளில் அடிக்கடி கனவு வரும், கற்பனையே கனவு; மரங்களின் கூட்டம் கனவாவது எப்போது? வனம் எதை வேண்டுமென்று கேட்கும், மழையையும் வெய்யிலையும் தவிர? (இரண்டும் வேண்டும் வாழ்க்கைக்கு). இவையிரண்டும் சிலவேளைகளில் அழிவையும் தரும். நீரின்றி வறண்ட நதியில் எப்போது வெள்ளம் வரும் , மீன்கள் துள்ளும் என்று கனவுகண்டுகொண்டு பறக்கிறது செங்கால் நாரை. ஆனால் எதிர்பாராது கொட்டும் மழை அணையையும் நிரப்பி உடைத்துவிடும்.
இயற்கையோடு இயைந்தது உழவு; சக்தி ஜோதி இரண்டும் ஒன்றியிருப்பதைப் பாடிவிட்டு இயற்கையைமட்டுமே பலபாடல்களில் கனவுகளாய், கனவுகளில் காட்டுகிறார்; அவற்றில் கனவு வரும், நம்பிக்கையும் வரும். பருவம்தோறும் துளிர்த்து, பூத்து அடுத்த பருவத்தில் மண்ணில் ஈரத்தைக் காத்துத் துளிர்விடுவோம் என்று தாவரத்திடம் இருப்பது நம்பிக்கை; ஆனால் அது கனவாகிவிடுமோ என்ற அச்சமும் இழையோடுகிறது. லூயிஸ் க்ளக்கின் ‘The Wild Iris’ கவிதையை நினைவுபடுத்துகிறது.
கோடை வானத்து மழையில் நெகிழும் நிலம் விதைகளைத் தேடுகிறது. ஆனால் மழையின் கதை எப்படிப்பட்டது? அதைக் காற்று அழித்தல்லவா எழுதிக் கொண்டிருக்கிறது? இயற்கை நம்பிக்கைதருவது போலவே ஏக்கத்தையும் தருகிறது என்கிறார் கவிஞர். கானகம் அவருக்குப் பிடித்த ஒன்று. சிறுவயதில் கம்பம் பள்ளத்தாக்கு மலையில் ஏறி வனத்தை அடையும்போது அது எத்தனை புதிராக இருக்கிறதோ அதே புதிரைத் தான் பல்முறை அவர் எதிர்கொள்கிறார். வயது கூடினாலும் யாருடன் சென்றாலும் கானகம் புதுப்புதுக் கதைகள் சொல்லும்போலும். அவரது கனவுகளின் ஏக்கம்கூட சுனையின் ஆழத்திலிருந்துதான் பிறக்கிறது
எப்போதும் நாம் சக்தி ஜோதியிடம் பார்த்து மகிழ்பவை அவருடைய நம்பிக்கை ஒளிக்கீற்றும், இனிய மென்மையான பெண்ணியமும்தான். வாழ்க்கையை அவர் தீராத பாசத்தோடு பார்க்கிறார். காலம் அவரை ஒன்றும் செய்வதில்லை. கணப்பின் நெருப்பை சிரமங்களுக்கு இடையில் காத்து வரும் அப்பெண் குளிரிலும் காத்திருப்பது வழிதவறிய போக்கனுக்காக. குவளையளவு பச்சைத் தேயிலையைக் கொதிக்க வைக்க அவ்வளவு ஒன்றும் அதிகமாய்த் தேவைப்படாது சுள்ளிகள் என்று தன்னையே ஊக்கப்படுத்தி க்கொள்கிறாள். பயணப்படாத சாலையைக் கவிஞன் பேசுவான். மயக்கம் மனிதனுக்குத்தான், பறவைக்கு இல்லை, வானத்தில் பறவைக்கு திசையென்று ஏதும் இல்லை என்று காரணம் காட்டுகிறார் நமது கவிஞர். வாழ்க்கைக்கும் காலத்திற்கும்தான் எவ்வளவு தொடர்பு? சாவி கொடுக்க மறந்த பழைய கடிகாரத்தின் முட்களின் அடியில் முறுக்கவிழ்ந்த சுருள்வில் நடுவே சுருண்டு படுத்திருக்கும் காலத்தின் சூட்சுமம் – வாழ்க்கையின் சூட்சுமமும்தான். நல்ல படிமம். நாம் யார் எங்கே இருக்கிறோம் என்ற கேள்விகள் எழாதவர் யாரும் இருக்க முடியாது. அது இடத்தில் தோன்றி காலத்தில் மறைந்திருக்கிறது என்று கண்டுபிடிக்கிறார் கவிஞர். நம்பிக்கையைச் சொல்லும் கவிதைகள் நிறையவே இருக்கின்றன. இளவயதில் மென்மையாய் காலில் குத்திய முள்ளை எடுத்த நண்பைனின் கரமோ அயிரைமீன் உண்ணுகையில் தொண்டையில் சிக்கிய முள்ளைக் கீழிறக்க சோற்றுருண்டையைத்தந்த அம்மாவின் கரமோ மாயமுட்களை நீக்கவும் ஒரு பிடி சோறு தரவும் இன்றும் மாயமாய் நீளும் என்று காத்திருக்கிறார் அப்பெண். எனினும் வாழ்க்கை பற்றிய குழப்பமும் இல்லாமல் இல்லை.
உள்வெளி
முழுக்க அறைந்து மூடவும்
தெரியவில்லை
முற்றிலுமாகத் திறந்து வைக்கவும் இயலவில்லை
பாதி திறந்தும்
மீதி மூடியும்
நிற்கும்
கதவின் பின் இருக்கிறது
கொள்ள முடிந்ததும்
தள்ள முடியாததுமானதொரு
வாழ்வு.
பெண்மையைச் சுட்டும் பாடல்கள் சிலவாக இருந்தாலும் மனத்தில் தைக்குமாறு இருக்கின்றன. குறிப்பாக ”ஓராயிரத்து ஒருத்தி”, ”விழிப்பின் திசை” ஆகியவற்றைச் சொல்லலாம்.
கவிஞர் இயற்கையைப் பாடும் போதும் சரி, நம்பிக்கையை வெளிப்படுத்தும்போதும் சரி, வாழ்க்கைத் தத்துவத்தை முன்வைக்கும்போதும் சரி பல படிமங்களைப் பதிக்கிறார். ஒரு சில கொஞ்சம் பழசாக இருந்தாலும் பெரும்பாலானவை புதுமணம் வீசுகின்றன. மேலே எடுத்தாண்டிருக்கும் செய்யுளில் பாதி திறந்த கதவுப் படிமம் நன்றாகவே இருக்கிறது. ”விழிப்பின் திசை”யில் காலை விடியும்போது குயில்பாட்டில் கண்விழித்த அந்தப் பெண்
சுறுசுறுப்பான பறவையெனத்
தனது சிறகுகளை
அவிழ்த்தவள்
தனக்கான திசையினைத்
தெரிவு செய்கிறாள்
தீர்மானமாக.
சிறகுகளை அவிழ்ப்பது எதன் படிமம்?
சக்தி ஜோதியின் இந்தக் கவிதைத் தொகுப்பு கனவில் இறங்கிவரும் விண்மீன்களாகக் கண்ணுக்கும் கருத்துக்கும் விருந்து படைக்கின்றது. சுவைத்து மகிழுங்கள்.
‘ஆண் நன்று பெண் இனிது’ கவிஞர் சக்திஜோதியின் நினைவலைகள் – பெ. விஜயகுமார்
தமிழகம் நன்கறிந்த சங்க இலக்கிய அறிஞரும், ஆய்வாளருமான சக்திஜோதி தன் நினைவலைகளை எழுத்தோவியமாக்கிக் கொடுத்துள்ளார். எளிய இயல்பான மொழியில் எழுதப்பட்டுள்ள ’ஆண் நன்று பெண் இனிது’ கட்டுரைத் தொகுப்பு சக்திஜோதியின் ஆழ்மனதில் உறைந்திருக்கும் நினைவின் குறிப்புகளாகும். ஆங்கில அறிஞர் சாமுவேல் ஜான்சன் தன்னுடைய கட்டுரைகளை ”மனதின் உலா” (Loose sally of the mind) என்றழைப்பார். சக்திஜோதியின் உள்ளக்கிடக்கையும் கட்டுரைகள் வழி உலாவருவதைப் பார்க்கிறோம். ‘நிலம் புகும் சொற்கள்’. தொடங்கி ‘கனவின் முற்றத்தில் தரையிறங்கும் தாரகைகள்’ வரை பனிரெண்டு கவிதைத் தொகுப்புகள் மூலம் தமிழின் புதுக்கவிதை வெளியில் காத்திரமான பங்களிப்பு செய்துள்ள சக்திஜோதியின் இரண்டாவது கட்டுரைத் தொகுப்பிது. ’சங்கப் பெண் கவிஞர்கள்’ எனும் கட்டுரைத் தொகுப்பில் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட சங்கப் பெண் கவிஞர்கள் 45 பேரை இன்றைய தமிழ்ச் சமூகம் புரிந்து கொண்டாடிடும் வண்ணம் அழகு தமிழில் எழுதிப் பரவசப்படுத்தினார். ’ஆண் நன்று பெண் இனிது’ தொகுப்பின் முப்பது கட்டுரைகள் வழி சக்திஜோதியின் நினைவோடை தெள்ளிய நீராகத் ததும்பி ஓடுகிறது.
திண்டுக்கல் மாவட்டம் அய்யம்பாளையத்தில் வாழும் சக்திஜோதி சங்க இலக்கியத்தில் ஆழ்ந்த ஈடுபாடு கொண்டவர். சங்க இலக்கியத்தில் முனைவர் பட்டம் பெற்றதோடு சங்க இலக்கியத்தின் நயம், பெருமை, தொன்மை, மேன்மைகளை தமிழ் கூறும் நல்லுலகிற்கு பரப்புரை செய்து நற்பணியாற்றி வருகிறார். சங்க இலக்கியப் பாடல்களை சாதாரண மக்களும் புரிந்துகொள்ளும் வண்ணம் சக்திஜோதி தெள்ளுதமிழில் விளக்கிடும் உரைகள் காணொளிக் காட்சிகளாக (YouTube) வலம் வருகின்றன. சங்க இலக்கியப் பெருங்கடலில் நீந்தி முத்தெடுக்கத் தவறியவர்கள், சங்க இலக்கியச் செழிப்பினை முறையாகப் படித்துப் பயனடையும் வாய்ப்பை இழந்தவர்கள் ’கற்றலில் கேட்டல் நன்றே’ என்ற கூற்றிற்கிணங்க சக்திஜோதியின் இனிய உரைகளைக் கேட்டு மகிழலாம். தன்னுடைய இலக்கியச் சாதனைகளுக்காக சக்திஜோதி தமிழக அரசின் நூலக விருது, திருப்பூர் தமிழ்ச் சங்க விருது. சிற்பி இலக்கிய விருது ஆகிய விருதுகளைப் பெற்றுள்ளார். இவரின் கவிதைகள் கல்லூரிகளிலும், பல்கலைக்கழகங்களிலும் பாடத்திட்டத்தில் இணைக்கப்பட்டுள்ளன. இலக்கியப் பணிகளைத் தாண்டி இயற்கை வேளாண்மை, நீர் மேலாண்மை, சுற்றுச்சூழல் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வூட்டல் ஆகியவற்றிலும் சக்திஜோதி ஆர்வத்துடன் செயல்படுவது போற்றுதலுக்குரியது. பெண் கல்வியை முன்னெடுத்துச் செல்லும் சமூகச் செயற்பாட்டாளராகவும் மிளிர்கிறார்.
தி இந்து குழுமம் வெளியிடும் காமதேனு இதழில் ’ஆண் நன்று பெண் இனிது’ என்ற தலைப்பில் முப்பது வாரம் தொடராக வெளிவந்து வாசகர்களின் வரவேற்பைப் பெற்றன இக்கட்டுரைகள். சக்திஜோதி தற்செயலாகச் சந்தித்த அல்லது தன்னுடன் நெருங்கிப் பழகிய மனிதர்களைப் பற்றிய நினைவுகளையே சொற்சித்திரமாகத் தீட்டியுள்ளார். முப்பது கட்டுரைகளில் நூற்றுக்கும் மேலான மனிதர்களின் சலனங்கள், சஞ்சலங்கள், சாதனைகள் பதிவாகியுள்ளன. பயணங்கள் தரும் அனுபவங்கள் அலாதியானவை. தன்னுடைய பல்துறை பணிசார்ந்து இந்தியாவின் பல பகுதிகளுக்கும், உலகின் பல நாடுகளுக்கும் சக்திஜோதி பயணித்துள்ளார். அன்றாட வாழ்வில் தான் சந்தித்த மனிதர்களின் மன ஆழத்தில் அமிழ்ந்து கிடக்கும் எண்ணவோட்டங்களையும், உணர்ச்சிகளையும் சக்திஜோதி காணத் தவறவில்லை.
’ஆண் நன்று பெண் இனிது’ எனும் பாரதியாரின் கவித்துவமான சொற்றொடரையே தொகுப்பின் தலைப்பாகத் தேர்ந்தெடுத்துள்ளது சாலப் பொருந்துகிறது. சக்திஜோதியின் பெண்ணியம் எவ்வளவு மென்மையானது என்பதையும் தலைப்பு புலப்படுத்துகிறது. ஆண்களை எதிராகக் கொள்வதல்ல பெண்ணியம்; ஆணும் பெண்ணும் நிகரெனக் கொள்வதே பெண்ணியம் என்ற உயர்ந்த கோட்பாடு வெளிப்படுகிறது. ஆம்; கட்டுரைகளில் காணப்படும் ஆண்கள் யாரும் கொடிய வில்லன்கள் அல்ல. மனிதர்களுக்கே உரிய பலங்களையும் பலவீனங்களையும் கொண்ட சாதாரண மனிதர்களே. மிகை உணர்ச்சிகள் ஏதுமற்ற ரத்தமும் சதையுமான நிஜ மனிதர்களையே காண்கிறோம். இன்னும் ஒரு படி மேலே சென்று ஆண்மையின் நல்ல அடையாளங்களாக விளங்குபவர்களை மட்டுமே சித்தரிக்கிறார். பெண்களை அவமதிக்கும் அல்லது அவலத்திற்குள்ளாக்கும் ஆண்கள் பற்றிய சித்தரிப்பை தவிர்க்கிறார். ஒரு சில பாதிக்கப்பட்ட பெண்கள் வழியாகவே ஆண்களின் குற்றம் குறைகளைச் சுட்டிக்காட்டுகிறார்.
‘தவணை முறை வாழ்க்கை’ எனும் முதல் கட்டுரையில் ‘பாத்திரக்கார பாய்’ என்றழைக்கப்படும் அரிய மனிதர் ஒருவரைச் சந்திக்கிறோம். தள்ளுவண்டியில் பாத்திரங்களை ஏற்றிக்கொண்டு கிராமங்களில் அலைந்து தவணை முறையில் வியாபாரம் செய்யும் அந்த எளிய மனிதருக்குத்தான் எத்துணை பெரிய மனது! ”உங்களிடம் பாத்திரம் வாங்கி தவணைகளை ஒழுங்காகக் கட்டாமல் யாரேனும் உங்களை ஏமாற்றியிருக்கிறார்களா?” என்ற கேள்விக்கு அவர் தரும் பதில் நம்மை வியப்பில் ஆழ்த்துகிறது. ”தவணைகளைக் கட்டாதவர்கள் உண்டு; ஆனால் அவர்கள் என்னை ஏமாற்றிவிட்டார்கள் என்று சொல்ல மாட்டேன். ஏதோ பாவம்! பணக் கஷ்டம்! கட்டவில்லை” என்று சொல்லி பெருமனதுடன் அவர்களை மன்னிக்கிறார்; மறக்கிறார். இத்தகு உயர்ந்த குணத்திற்கு இணையாக தி.ஜானகிராமனின் ‘கடன் தீர்ந்தது’ என்ற சிறுகதையில் வரும் கதாபாத்திரத்தை வாசகர்களுக்கு சக்திஜோதி நினைவுகூர்வது பொருத்தமாகிறது. ‘கடன் தீர்ந்தது’ கதையில் சுந்தரதேசிகர் என்ற வெள்ளந்தியான மனிதருக்கு வயல் வாங்கித் தருவதாகச் சொல்லி ராமதாஸ் என்பவன் இருபதாயிரம் ரூபாயை ஏமாற்றி எடுத்துக் கொள்கிறான். எவ்வளவோ முயன்றும் அவனிடமிருந்து பணத்தை திரும்ப வாங்க முடியாது போய் விடுகிறது. அவன் சாகும் தருணத்தில் சுந்தரதேசிகர் ”உன்னிடம் என்ன இருக்கோ அதைக் கொடு; சாகப் போற நேரத்துல நீ கடனோட சாக வேண்டாம்” என்று சொல்லி அவன் கையிலிருந்த ரெண்டணாவை வாங்கிக் கொண்டு “பராசக்தி கேட்கச் சொல்கிறேன் உன் கடன் பூராவும் தீர்ந்து போச்சு” என்று சொல்லிவிட்டுப் போகிறார். கதையும் முடிகிறது. தி.ஜானகிராமனின் ‘கங்கா ஸ்நானம்’ சிறுகதையும் இது போன்ற உயர்ந்த உள்ளம் கொண்ட மனிதரைச் சித்தரிக்கிறது. தனக்கு துரோகமிழைத்த கயவனை மன்னித்து அவன் செய்த பாவத்துக்காகவும் கங்கா ஸ்நானம் செய்கிறார் அந்த மாமனிதர்.
ஆணாதிக்க மனோபாவம் இயல்பாகவே சில ஆண்களின் மனதில் ஏறி விடுகிறது. ”சாண் பிள்ளையானாலும் ஆண் பிள்ளை”. ’பொம்பள சிரிச்சா போச்சு’, ‘ஆண் பிள்ளை சிங்கம்’ என்பது போன்ற உலுத்துப் போன பழமொழிகள் இன்னும் வழக்கில் இருக்கத்தானே செய்கின்றன. ‘சக்கரங்களின் பின்னே….’ கட்டுரையில் ஆணாதிக்க மனோபாவம் எவ்வாறு ஆண்களை அலைக்கழிக்கிறது என்பதைச் சுட்டிக்காட்டுகிறது. கார், ஸ்கூட்டர் ஓட்டுவது ஆண்களின் அடையாளமாகக் கருதப்பட்ட காலமெல்லாம் மாறிவிட்டது. ஆனால் இன்றும் கார், ஸ்கூட்டர் ஓட்டும் பெண்களை ஆணவம் மிக்கவர்களாகப் பார்ப்பது அவலமே. தெருக்களில் வாகனம் ஓட்டிச் செல்லும் பெண்கள் சிரமத்துக்குள்ளாகிறார்கள். விரைந்து செல்லும் பெண்களின் வாகனத்துக்கு வழிவிடுவதை ஆண்கள் இழிவு என்று கருதுகிறார்கள். வழிவிட மறுப்பதுடன் உரசிச் சென்று முந்துவது ஆபத்தாகவும் முடிகிறது. சாலையில் கூட தன்னையொரு பெண் முந்திச் செல்வதை விரும்பாத ஆண்கள் இச்சமூகத்தில் இருப்பது எவ்வளவு துயரமானது!
தமிழர்களிடையே வாசிப்புப் பழக்கம் அரிதாகவே இருக்கிறது. தமிழர்கள் நெல்லை சென்றால் அல்வா வாங்குவார்கள், மணப்பாறை சென்றால் முறுக்கு வாங்குவார்கள், ஒவ்வொரு ஊரிலும் ஏதேனும் வாங்குவதற்கு ஒரு பொருள் வைத்திருப்பார்கள், ஆனால் எந்த ஊர் போனாலும் புத்தகம் வாங்க மாட்டார்கள் என்று அறிஞர் அண்ணா கேலியாகச் சொல்வாராம்! ஆங்கிலேயர்கள் மத்தியில் வாசிக்கும் பழக்கம் நிறைந்திருக்கிறது. ரெயில், விமான நிலையங்களில் காத்திருக்கும் நேரங்களில் புத்தகத்தில் மூழ்கிக் கிடப்பதைக் காணலாம். சக்திஜோதியின் ‘நல்ல அப்பா… நல்ல புத்தகம்… நல்ல தலைமுறை’ கட்டுரை வாசிப்பை நேசிக்கும் பெரியவர் ஒருவரை அறிமுகப்படுத்துகிறது. கு.இலக்கியனின் ‘சாபத்துக்குள் பயணிக்கும் ரயில்’ கவிதைத் தொகுப்பு வெளியீட்டு விழாவில் சந்திக்கும் கவிஞரின் அப்பா குமணன் தான் அந்தப் புத்தகக் காதலர். தன்னுடைய வீட்டு வறுமையையும் மீறி தன் மகனுக்கு புத்தகங்களைப் பரிசாகக் கொடுத்து வளர்த்தவர். தமிழகத்தில் திராவிட இயக்கத்தையும், பொதுவுடைமை இயக்கத்தையும் சார்ந்தவர்கள் ஓரளவு படிக்கும் பழக்கத்தை வளர்த்துள்ளார்கள். இருப்பினும் தமிழின் மிகச் சிறந்த புத்தகங்களும் கூட ஆயிரம் பிரதிகளுக்கு மேல் விற்பதில்லை என்ற குறையினை கவிஞர் சக்திஜோதி குறிப்பிடுகிறார். சொந்த அனுபவத்தில் நிகழ்ந்ததாகவும் இருக்கலாம்.
’பார்வதி சூழ் உலகு’ கட்டுரையில் பாரதி கண்ட புதுமைப் பெண்கள் இருவரை சக்திஜோதி அறிமுகம் செய்கிறார். அமலா, பார்வதி எனும் இவ்விரு பெண்களின் திண்மை பாராட்டுதலுக்குரியது. ”முட்டி/ மோதிச் சிதறடிக்க/ முயலுபவர்கள்/ அறிவதில்லை/ உள்ளுக்குள்/ உடைந்து தேறிய/ பெண்ணொருத்தியின்/ உள்ளம் தீட்டவும் தீராத/ திண்மை கொண்ட/ வைரம் என்பதை”. எனும் சக்திஜோதியின் கவிதை வரிகளுக்கு அவர்கள் சாட்சியாய் விளங்குகிறார்கள். கவிஞர் சக்திஜோதி தன் பால்ய காலச் சிநேகிதி அமலாவை பல ஆண்டுகளுக்குப் பிறகு ஒரு கல்லூரி விழாவில் சந்திக்க நேருகிறது. அமலா இளம் வயதில் கணவனை இழந்து மறுமணம் முடிக்காமல் தனிமையில் வாழ்ந்து வருகிறார். கணவனின் மரணத்திற்குப் பிறகு இன்னொரு ஆணின் துணையுடன் மட்டுமே வாழ்ந்திட முடியும் என்று அமலா நினைத்திடவில்லை. தனித்தும் பெண்ணால் வாழ முடியும் என்று வைராக்கியத்துடன் நம்புகிறார். கணவன் இறந்து போனதால் தனித்து வாழும் பெண்களை மட்டுமா சமுதாயத்தில் பார்க்கிறோம். மனைவி குழந்தைகளை விட்டுவிட்டு ஓடிப்போகும் எத்தனையோ ஆண்களும் இருக்கத்தான் செய்கிறார்கள்! அதனையும் எதிர்கொண்டு வைராக்கியத்துடன் வாழும் பெண்களையும் பார்க்கிறோமே! அமலா தன் தோழியிடம் இத்தகு சோகத்தைச் சுமந்து வாழும் பார்வதி எனும் பெண்ணை அன்று காலை சந்தித்ததையும், அவள் தன்னுடன் பகிர்ந்து கொண்ட துயரக் கதையையும் சொல்கிறாள். மூன்று குழந்தைகளுக்குத் தகப்பனான கணவன் வேறொரு பெண்ணிடம் தொடர்பு கொண்டிருப்பதை அறிந்ததும் அவனைப் பிரிந்து தனித்து வாழ்ந்து சாதித்துக் காட்டியுள்ளாள் பார்வதி. இன்று தன்னுடைய ஐம்பது வயதில் மூன்று குழந்தைகளையும் வளர்த்து ஆளாக்கி வெற்றி பெற்றுள்ளதை பெருமிதத்துடன் பார்க்கிறார். நம் சமூகம் பார்வதி சூழ் உலகுதானே! என்று அமலாவும், தோழி சக்திஜோதியும் சோகத்துடன் அங்கலாய்ப்பது நம் காதுகளில் கேட்கிறது.
சக்திஜோதியின் உரைநடை தெளிந்த நீரோடை போல் ஓடுகிறது. கட்டுரைகளை வாசிக்கும் போது அவர் நம்முடன் உரையாடுவது போல் உணர்கிறோம். வாசகர்களுடன் கலந்துரையாடல் வழி கட்டுரையை நகர்த்திச் செல்லும் உத்தியை ஆங்கில இலக்கியத்தில் சார்ல்ஸ் லாம் (Charles Lamb) என்ற எழுத்தாளர் கையாண்டுள்ளார். அவருடைய எலியாவின் கட்டுரைகள் (Essays of Elia) வாசிப்பதற்கு இன்பம் பயப்பன. சக்திஜோதியின் கட்டுரைகளும் படிக்கும் போது தெவிட்டாத இனிமையுடன் இருக்கின்றன. எவ்வளவு கனமான விஷயங்களையும் தன்னுடைய மென்மையான வாதங்கள் மூலம் எளிதாக்கிவிடுகிறார். மனித உறவுகளின் நுட்பங்களையும், வாழ்வியல் சிக்கல்களையும், உளவியல் பிரச்சனைகளையும் தனக்கே உரித்தான எளிய மொழியில் விளக்கிடும் தேர்ந்த படைப்பாளியாக பரிணமிக்கிறார் சக்திஜோதி, தான் சந்தித்த, பழகிய மனிதர்களைப் போல் வாசகர்களும் பல மனிதர்களைச் சந்தித்தும், பழகியும் இருப்பார்கள் எனில் அதுவே நன்று. அதுவே இனிது. என்று முத்தாய்ப்பாக தொகுப்பை முடிக்கிறார்.
உலகில் வாழும் கோடிக்கணக்கான மனிதர்களும் கோடிக்கணக்கான விதங்களில் வாழ்கிறார்கள். எந்தவொரு மனிதனும் மற்றொரு மனிதனைப் போல் இருப்பதில்லை என்பதே இயற்கையின் விநோதம். மனித மனத்தின் ஆழத்தை யாராலும் கண்டுகொள்ள முடியாது. அன்பு ஒன்றே மனிதர்களை இணைக்கும் பாலமாகும். வாழ்வை அர்த்தமுள்ளதாக்குவதாகும். இனம், மதம், நாடு, மொழி, சாதி எனும் வேறுபாடுகளை எல்லாம் கடந்து மனித குலம் அன்புடன் வாழ்ந்திட முடியும் என்பதை தன் கவிதைகள், கட்டுரைகள் வழி உணர்த்தி வெற்றி பெற்றுள்ளார் சக்திஜோதி.
–பெ. விஜயகுமார்.
—————————————————————————