சுயம் சிறுகதை – சக்தி ராணி
விறகுகளையும், சுள்ளிகளையும் சுமக்க முடியாமல் சுமந்து கொண்டு வந்தாள் காளியம்மாள்.
“என்ன காளியம்மா ஆச்சி…இன்னிக்கு இன்னும் வேலை ஆரம்பிக்கலையா, இவ்வளோ நேரம் ஆச்சு?”
“ஆமாம்மா…சுள்ளி எடுத்து வரவே இவ்வளோ நேரம்…
ரொம்ப தூரம் நடந்து வாறீக…இந்தாங்க கொஞ்சம் நீச்சத்தண்ணீர் குடிச்சுட்டுப்போங்க”.
ராசாத்தி…அருமைப்புள்ளையத்தான் உங்கப்பன் பெத்துருக்கான். நல்லாயிருக்கு ஆத்தா…களைப்பு நீங்கி புது தெம்பு வந்துருச்சுமா”.
“அதெல்லாம் இருக்கட்டும். மத்தியானம் வீட்டுக்கு வருவேன். குழாய் புட்டு ரெடியா எடுத்து வைச்சிருக்கணும்”
“ஓ..கோ…அப்படி சொல்ல வாறீயா….உனக்கு இல்லாமலா… வாடி என் தங்கப்புள்ள…”
“சரி நான் வாரேன்”.
புதுத்தெம்பின் வேகத்தில் வேகமாக வீட்டிற்குச்சென்றாள் காளியம்மா. எடுத்து வந்த விறகுகளை சின்னச்சின்னதாக உடைத்தாள். புட்டு தயாரிக்க அரிசி மாவு, கேப்பை மாவு எடுத்து பாத்திரத்தில் தண்ணீர் எடுத்து வெளியில் அமர்ந்தாள்.
காளியம்மா வீடு ரொம்ப சின்னது. படுத்து எந்திரிக்க மட்டும் தான் இடம் இருக்கும். அதன் வெளியில் சின்னதா ஒரு மண் அடுப்பு மழைநீர் விழாம பாதுகாப்பான அரண் அமைச்சு அமைந்திருக்கும்.
பாத்திரத்தில் மாவு இட்டு சிறிது நீரை கலந்து தேவையான பதம் பார்த்து பிசைந்து கொண்டிருந்தாள்.
மாவு ரெடியாகும் முன்னே, பக்கத்தில் வசிப்பவர்கள் எனக்கு ஐந்து…ஆறு…பத்து என முன்பதிவு செய்து கொண்டிருந்தனர். ஏன்னா, காளியம்மா செய்யும் புட்டு அவ்ளோ மணமா…சுவையா…நா விரும்புவதாக இருக்கும்.
“எல்லாருக்கும் கண்டிப்பா இருக்கும். கொஞ்ச நேரம் கழிச்சு வாங்க. நானே சொல்றேன்” என்றாள்.
“காளியம்மா ஆச்சி…நான் வந்துட்டேன்” என்றே ஓடி வந்தாள் அகல்யா…
“அதுக்குள்ள வந்துட்டியா…எதுக்கு இம்புட்டு வேகமா வார புள்ள?”
“புட்டு தீர்ந்திருச்சுனா…அதான் வேகமா வந்தேன்”.
“அட கழுத உனக்கு இல்லாமலா, நான் வியாபாரம் செய்யப்போறேன்”.
“அதெல்லாம் தெரியாது. சரி…சரி…நீ பேசாம புட்டு அவிச்சு கொடு. நான் உனக்கு எதும் உதவி பண்ணட்டுமா?”
“இந்த தேங்காய் மட்டும் சீவி கொடு”.
“ம்ம்….பண்றேன்”.
புட்டு வாசம் தெரு முழுதும் மணக்க…பக்கத்து வீட்டுக்காரங்க முதல்ல வந்தாங்க.
“என்ன…இசக்கியம்மா…மதிய வேளை முடிஞ்சதோ…முதல்ல வந்துட்ட.”
“வேலையா முக்கியம்…புட்டு தான் முக்கியம்”.
“சரியா சொன்னீங்க…அதான் நானும் வந்தேன்” என்றே பின்குரல் கொடுத்தாள் சீனித் தாயக்கா…
ஆவி பறக்க…வாழை இலையில் புட்டு பரிமாறி அனைவருக்கும் கொடுத்தாள்.
எனக்கு…எனக்குனு கொஞ்ச நேரத்துல இருந்த புட்டெல்லாம் காலிபண்ணியாச்சு.
பாத்திரங்களைக் கழுவி எடுத்துக் கொண்டிருந்தாள் காளியம்மா…
“ஏன் ஆச்சி எல்லா வேலையும் நீங்களே செய்றீங்க… உங்களுக்கு ஒத்தாசைக்கு உங்க புள்ளைங்க இல்லையா?”
“ஏன் இல்ல….எனக்கு மூணு பொம்பளைப்புள்ளைங்க… மூணையும் கட்டிக்கொடுத்து இப்போ எல்லாம் ஒரு ஒரு திசைக்கும் குடும்பம் குழந்தைக னு சந்தோஷமா இருக்குங்க”.
“அப்புறம் என்ன ஆச்சி…நீங்க அங்க போய் இருக்கலாம் ல?”
“கேட்க நல்லாத்தான் இருக்கு.ஆனா…வாழ்ற வரைக்கும் யாருக்கும் பாரமா வாழக்கூடாதுனு என் நினைப்பு. என் புருஷன் இருந்த வரை ஹோட்டல் நடத்தினோம். அவரு போனதுக்கப்புறம் என்னால அத சமாளிக்க முடியலை. புட்டு அவிச்சு இப்போ என் சுய சம்பாத்தியத்துல வாழ்க்கை ஓடுது”.
“என்னது ஹோட்டலாம் இருந்துச்சா?”
“இப்போ இருக்குற கீழ வாசல் தெருவுக்கு முன்னாடி ஒரு ரயில்வே கேட் வருதே அங்கதான். ஊருக்கு போறவுக… வாரவுக எல்லாம் சாப்பிட்டு போவாக. நல்ல வருமானம் தான் அப்போலாம்”
“ம்ம்…புரியுது ஆச்சி”
“இவா ஒருத்தி பெரிய மனுஷி போல பேசுவா பேசிக்கிட்டே இருந்தா…நான் கிளம்பனும் இப்போ”
“எங்க ஆச்சி போறீங்க…?”
“அது சினிமா பார்க்கத்தான்”
“சினிமாவா!”
“சம்பாதிச்ச காசை நமக்காக கொஞ்சம் செலவு பண்ணனும்னு சின்ன வயசுல எங்க அப்பா சொல்லிருக்கார்”.
“அதுக்காக…போறீங்களா?”
“ஆமா…ஆமா…எங்க சின்ன வயசுல நினைச்சப்போ எதும் கிடைக்கல…சினிமா போக முடியாது. கடைத்தெருக்கு போக முடியாது. இப்போபாரு. நான் சொந்தமா கடை வைச்சிருக்கேன். நினைச்சப்போ சினிமா பார்ப்பேன்” என்றே பல் இல்லா பொக்க வாயை காட்டி சிரித்தாள்.
அகல்யாவிற்கு சிரிப்பதை விட சிந்தனை அதிகமானது ஆச்சி வாழ்க்கையை நினைத்து…
“சரி ஆச்சி…எப்போதும் நீ தனியா தான் போற. இன்னிக்கு நான் வரட்டுமா?”
“உனக்கென்ன புத்தி கெட்டு போச்சா…வயசான என் கூட வரேன்ற. உம் அம்மா சம்மதிப்பாளா…இதுக்கு?”
“அதைப்பத்தி ஏன் நீ கவலைப்படுற…நாம போறோம்…நீ வேலையை முடி.நான் அஞ்சு நிமிஷத்துல ஓடியாறேன்”.
கைப்பையில் தின்பண்டம் கொஞ்சம் எடுத்துக்கிட்டு வேகமாக நடை நடந்தாள் காளியம்மா.
“என்ன டிக்கெட் கொடுக்குறவரே…டிக்கெட் கொடுங்க”
“என்ன காளியம்மா…டெய்லி தியேட்டர் பக்கம். உனக்கு பொழுதுபோகலையோ?”
“அது எதுக்கு தேவையில்லாத வேலை… கொடு டிக்கெட்” என்றே வெடுக்கென பிடுங்கினாள்.
“ஆச்சி…ஆச்சி”
“அடியாத்தாடி இங்கயும் வந்துட்டியா?”
“நான் வாரேன் சொன்னேன்ல. விட்டுட்டு வந்துட்ட…இந்தாங்க எனக்கொரு டிக்கெட்”
“என்ன கைத்துடுப்பா…இது?”
“வேலையைப் பாருமய்யா…சும்மா கேள்வி கேட்குற?”
“ஓடியாடி…உள்ள படம் போட்டுருப்பாங்க”
“எவ்ளோ…ஜில்னு இருக்கு பார்த்தியா?”
“ஆமா…இது ஏசி தியேட்டர்ல?”
“வா வா.”
இருக்கையில் அமர்ந்தனர்.
“ஏன் ஆச்சி உனக்கு இவ்வளோ ஆசை…படம் பார்க்குறதுல”
“படம் பார்க்குறதுலயா….இப்போ பாரு”ன்னு தூங்க ஆரம்பித்தாள்.
“அட என்ன ஆச்சி படம் பார்ப்பன்னு வந்தா”
“நான் நிம்மதியா தூங்குற இடமே இது தான்டி. என் வீட்ல ராவெல்லாம் கொசுக்கடி…ஏதோ தனிச்சிருக்கறது என்னை தூங்க விடாது. இப்போ பாரு. என்னை சுத்தி எத்தனை பேர் இருக்காங்கனு நிம்மதியா தூங்குவேன்”.
“இப்போ கூட புரிஞ்சது ஆச்சி”
“ஆமா நீ பெரிய மனுஷி எல்லாம் புரியும். இப்போ கொஞ்சம் தொந்தரவு பண்ணாத…”
ம்ம்…” என்றே படம் பார்த்துக் கொண்டே ஆச்சியையும் பார்த்துக் கொண்டாள். படம் முடியும் நேரம்.
“ஆச்சி எழுந்திரு…எழுந்திரு” என்றாள்.
“அதுக்குள்ள முடிஞ்சா…சரி வா போலாம்” என்றே நடக்கத் தொடங்கினர்.
“என்னடி…இன்னிக்கு முழுத்தும் என் கூடவே இருக்க?”
“என்னவோ உங்கூடவே இருக்கனும் போல இருக்கு…ஏன் ஆச்சி…தனிமைன்னு சொன்னியே..நீ எத்தனை வருஷமா தனியா இருக்க?”
“நான் பத்து வருஷமா தனியா தான் இருக்கேன். வாரம் ஒருமுறை எம் பேர புள்ளைக…புள்ளைங்க எல்லாம் வருவாங்க…சந்தோஷமா பேசிட்டு போயிடுவாங்க”.
“உங்க வீடு சின்னதா இருக்கே…எப்படி அவங்க வந்தா இடம் பத்தும்?”
“இடம் மனசுல நிறையா இருக்குடி…நீ நினைச்சது போல நினைக்கல”
ம்ம்…என்றே மௌனமாக நடந்தாள்.
“கொஞ்ச நேரத்தில் எங்க வீடு ரொம்ப பெருசு. ஆனா எங்க வீட்ல நீ சொல்ற மாதிரி யாரும் இல்லை. நான் எங்க அம்மா மட்டும் தான் இருக்கோம்”.
“வசதியா இருக்குறது விட மனசு சந்தோஷம் தான் இந்த வாழ்க்கைல முக்கியம். நீ கேட்டது போல என் பெரிய மவ வீட்ல…ஒரு வாரம் …சின்ன மவ வீட்ல ஒரு வாரம் இருக்கலாம். ஆனா…எவ்ளோ நாள் ஏத்துப்பாங்க! என்னிக்காவது பிரச்சனை வரும். ஆனா இப்போ பாரு நான் உண்டு என் வேலை உண்டு ஓடுறேன். முடியாத வயசுல எம் புள்ளைங்க என்ன பார்த்தா போதும். அதுவரை நான் எனக்கு ராணி தான்”.
“சரியா தான் இருக்கு உன் சிந்தனை ஆச்சி…ஆனா…”
“உன் ஆனா…எனக்கு தெரியும். இருந்தாலும் இப்போ இது தான் சரின்னு என் மனசுக்கு தோணுது”.
“ம்ம்,.” என்றாள்.
“என் வீடு வந்துருச்சு. நான் போறேன். நீயும் பத்திரமா வீட்டுக்குப் போ” என்றே நின்றாள்.
‘சரி’ என்றே திரும்பிப் பார்க்காமல் அகல்யா நடந்தாள்.
வாசலில் நின்றவாறே அகல்யா செல்வதை பார்த்துக்கொண்டே இருந்தாள். மனம் முழுதும் தெளிவாகத்தான் இருந்தது அகல்யாவின் நினைவில்…
“அம்மா…ஆச்சி வீட்ல விட்டுட்டேன்…பத்திரமா வந்துட்டாங்க…”
“ஏன்டி…நீ எங்க அம்மாவை பத்திரமா பார்த்தியா…வந்தேன் அடி தான்…”
இருவரும் ஓடி சிரித்துக்கொண்டே ஜன்னல் வழியே பார்த்தனர் காளியம்மாள் இளைப்பாறுவதை…
– சக்தி ராணி
காணாமல் போன புன்னகை சிறுகதை – சக்தி ராணி
‘லேட் ஆச்சே ஆபிஸ் போகணுமே…’ என்று அவசர அவசரமாகப் படுக்கையில் இருந்து எழுந்தான் ராம்.
அலாரம் வைத்த கைபேசியைத் தேடினான். படுக்கையில் இல்லை. அதைத் தேடுவதற்கும் அவனுக்கு நேரம் இல்லை. பல் துலக்கிக் கொண்டே பாத்ரூமிற்குள் ஓடினான்.
.” பிரியா…டவல் எடுத்துட்டு வா” என்று குரல் கொடுக்க, “வருகிறேன்…வருகிறேன்” என்று மெதுவாக வந்தாள்.
“லேட்…லேட்….எல்லாம் லேட்…ஏன்டி இப்படி பண்ற, சீக்கிரம் எழுப்பியிருந்தா நான் இப்படி ஓட வேண்டியிருக்குமா?” என்றான்.
“உங்களுக்குத் தான் உங்க கைப்பேசி இருக்கே அப்புறம் என்ன நான் ? அது தான் எப்போதும் உங்களோட பேசிக்கிட்டே இருக்கும்”.
“அதைத் தான்டி காணோம்…ரவிக்கு போன் பண்ணி கார் கொண்டு வரச் சொல்லணும். அப்போ தான் ஆபிஸ்க்கு போக முடியும்…மீட்டிங் வேற கரெக்ட் ஆ ஆரம்பிச்சுருவாங்க” என்றபடி தேடத் துவங்கினான்.
“எங்கு தேடியும் கைப்பேசி காணவில்லை. கார் ஸ்டாண்ட்ல போய் பார்த்துக்கிறேன் கார் இருக்குதானு…ம்ம்..” என்று ஓட ஆரம்பித்தான்.
சுட்டெரிக்கும் வெயிலில் வேகமாக ஓடினான். வியர்வை சட்டையை நனைத்தது. எதையும் பொருட்படுத்தவில்லை. காரில் ஏறி, ‘அம்பத்தூர் செல்ல வேண்டும்’ என்றான்.
டிரைவரும், ‘சரி சார்!’ என்று புறப்பட்டார். கொஞ்ச தூரம் பயணித்ததுமே போக்குவரத்து நெரிசலில் கார் புகுந்தது.
“என்ன சார்… இப்படி நெரிசல்ல போறீங்க. வேற வழி இல்லையா…நான் சீக்கிரமா போகணும்” என்றான்.
“எல்லா பாதையும் இப்படி தான் சார் இருக்கு. இருங்க சார்… சீக்கிரம் போய்டலாம்” என்றார் அவர்.
கோபத்தின் உச்சியில் இருந்தாலும் மனதின் படபடப்பு அடங்கவே இல்லை… ‘போக்குவரத்து நெரிசலும் குறையவில்லை. கையில் போன் இல்லையே… எந்த தகவலும் சொல்லவும் முடியல. என்ன நடக்குனு தெரிஞ்சுக்கவும் முடியல…’ என முணுமுணுத்துக்கொண்டே அமர்ந்திருந்தான்.
ஓரளவு நெரிசல் குறைய…ஆபிஸ் வந்தடைந்தான். காருக்குப் பணம் கொடுத்துவிட்டு வேக வேகமாக ஓடினான். அவன் கதவைத் திறக்கும் நேரம் மீட்டிங் முடிந்திருந்தது.
‘ஐயோ…’ எனத் தலையில் கை வைத்தவனாய் தரையில் அமர்ந்தான்…மிகுந்த கோபத்துடன் அலுவலக உரிமையாளர் “அப்படியே…வீட்டிற்கு போய்விடு.. ஒரு வேலை கொடுத்தா அதைப் பண்ண வழியில்லை” என்று கடிந்து கொண்டார்.
எவ்வளவோ மன்னிப்பு கேட்டும் உரிமையாளர் மனம் கொஞ்சமும் இறங்கவில்லை…மனம் நொந்தவனாய் வெளியில் வருகிறான்.
கைப்பேசி இல்லாமல் எவ்வளவு நஷ்டம் என நினைத்துக்கொண்டே நடக்க ஆரம்பிக்கிறான். கஷ்டம்…அவமானம் மனதிற்குள் இருந்தாலும் தனிமையில் அவனை உணர அவனுக்கே நேரம் கிடைத்தது போல் உணர்கிறான்.
லேசான புன்னகை…அருகேயிருக்கும் டீ கடையில் அமர்ந்து டீ குடிக்கிறான்…அங்குள்ள தொலைக்காட்சியில் கிரிக்கெட் ஒளிபரப்பப்பட்டிருக்கிறது.
தோனியின் இரசிகனாய் சிறுவயதில் பார்ப்பது போல் உணர்வுப் பூர்வமாய் பார்க்கத் துவங்குகிறான்.
கைப்பேசியில் அலுவல் நேரங்களில் மறைத்து மறைத்து ஸ்கோர் மட்டும் தான் பார்த்தோம் நேத்து வரை…இன்னைக்கு இப்படி பார்க்கமுடியுது என்று எண்ணியவாறே புன்னகைத்தான்.
மேட்ச் முழுவதும் பார்த்துவிட்டு சிறுவன் போல துள்ளிக்குதித்து வீட்டிற்கு வந்தான்.
“என்னங்க அதுக்குள்ள ஆபிஸ் முடிஞ்சா…?” என்று மனைவி கேட்க நடந்ததைக் கூறுகிறான்.
நம்மை எதுவும் குற்றம் சொல்வாரோ என்ற எண்ணத்தில் பிரியா அவனைப் பார்க்க… அதைப் புரிந்து கொண்டவனாய்… வா.. நாம சேர்ந்து சமைக்கலாம். காய்கறிலாம் நானே கட் பண்றேன் என்று செய்ய ஆரம்பித்தான்…
ஆச்சர்யமாய்ப் பார்த்த பிரியா, “நீங்களா இது…முகம் கொடுத்து பேசுறதுக்கே நேரம் இல்லைன்னு சொல்வீங்க. இப்ப என்னனா , எனக்கு உதவிலாம் செய்றீங்க!” எனக் கேட்டாள்.
“எல்லாம் அப்படித்தான்” என்றான்.
இருவரும் புன்னகையும், உரையாடலுமாய் சமைத்துக் கொண்டிருக்கும் போது கைப்பேசியின் சிணுங்கல் எங்கிருந்தோ கேட்க வேகமாய்த் தேடி ஓடினான்.
உரிமையாளரின் அழைப்பு, மீண்டும் உடனே அலுவலகம் வா என்றழைக்க, “கிடைத்து விட்டது கைபேசி. என் புன்னகை தொலைந்து விட்டது” என புறப்பட்டான்.
– சக்தி ராணி
நாடிய உள்ளம் கவிதை – சக்தி ராணி
எங்கிருந்தோ…வந்த பறவை…
என் மீதுள்ள
நம்பிக்கையால்…
என் இல்லத்தில் கூடு அமைக்க…
வராத விருந்தினர்…
வருகை புரிந்தது போல்
ஒவ்வொரு நாளும் அதன்
நலம் விசாரித்தே…
அன்பாய்…உறவாட…
சுற்றங்களின் எண்ணிக்கை
அதிகரித்தது போல்…
முட்டையிட்டு…அடைகாக்க
காத்தலின் பயனாய்…
குஞ்சுகளும் ஒவ்வொன்றாய்
புது உலகைக் காண…வெளி வர
ஒவ்வொன்றிற்கும் பெயர்
வைத்தே…அன்போடு உறவாடி
தாய்ப்பறவை ஊட்டும் அழகை…
இமைக்காமல் ரசித்தே…
பொழுதைக் கடத்திட…
வளர்ந்த பறவைகளும்…
சிறகு விரித்த பயனாய்…தன்
வாழ்க்கை தேடிச்சென்றே…
வலசை போக…
கூடும்…நானுமாய்…
காத்திருக்கிறோம்…என்
இல்லம் நாடி வராவிடினும்…
என் உள்ளம் நாடும் என்றே…
–சக்தி
குப்பை மனம் சிறுகதை – தெ. சக்தி ராணி
விசில் சப்தம்… காதைப் பிளந்தது… நல்ல கனவு… அதை கெடுக்குற மாதிரி… இப்படி ஒரு சத்தம் என்று புலம்பிக் கொண்டே எழுந்தாள் அகல்யா…
“அம்மா… குப்பை போடுங்க…”
“காலங்காத்தால உன் வேலையை ரொம்ப நல்லா பாக்குற…”
“ஆமா அம்மா… நேரமாச்சுல… இப்போ ஆரம்பிச்சா தான்… மத்த தெருவுக்கெல்லாம் போக முடியும்…”
நெற்றி நிறைய விபூதி… சந்தனம்.. குங்குமம்… என பக்தியின் அடையாளமாய் காட்சி அளித்தான்… குமார்.
“சரி… சரி… இந்தா குப்பை”
“ என்ன அம்மா… குப்பையை பிளாஸ்டிக் தனியா… காய்கறி தனியா… இப்படி எல்லா குப்பையும் தனித்தனியா கொடுங்கனு சொன்னேனே…”
“ அட… ஆமா… மறந்துடுச்சி எனக்கு… இருக்குற வேலையில் இதெல்லாமா பார்த்து பார்த்து போட முடியும்…”
“அப்படியெல்லாம் சொல்லாதீங்க அம்மா… ஆபிஸர் பார்த்தா என்னைத்தான் திட்டுவார்..”
“சரி… நாளைக்கு பிடிச்சு போடுறேன். இன்னிக்கு நீ பிரிச்சுக்கோ…”
“ம்ம்… சரிமா… மறந்துடாதீங்க…”
அடுத்த வீட்டை நோக்கி வண்டியை நகர்த்துகிறான்.
எல்லா வீட்லையும் ஒரே பதில் தான்… நாளைக்கு… நாளைக்கு என்று…
நாளைக்கு பிரிச்சு வைச்சா தான் குப்பையை வாங்குவேன்… என்று கூறிக்கொண்டே நகர்ந்தான். குப்பை வாங்குவதில் மட்டுமின்றி… வீட்டு வேலை செய்வதிலும் கெட்டிக்காரன் தான் குமார். தன் வேலை முடிந்தவுடன் ஓய்வென்ற பேச்சுக்கே இடம் அளிக்காமல்… அடுத்தடுத்த வேலைகளை செய்து கொண்டே இருப்பான்.
மறுநாளும்… இதே போல் குப்பை வாங்க வந்தான். சிலர் மட்டுமே குப்பைகளை மட்கும் குப்பை… மட்காத குப்பை என பிரித்து வைத்திருந்தனர். சிலர் என்ன சொன்னாலும் பரவாயில்லை… இதற்கெல்லாம் நேரமில்லை என்பது போலவே, மொத்தமாக வைத்திருந்தனர்.
‘இவங்க செய்யும் வேலைக்கு நாம திட்டு வாங்கணுமே’னு அவனால முடிஞ்ச அளவு அவனே பிரிச்சு வைக்க ஆரம்பிச்சான்.
இருந்தாலும்… எல்லார் வீட்டு குப்பையும் சேர்த்தா… இதெல்லாம் எப்படி சரிக்கட்டுவது என்றே சிந்திக்க ஆரம்பிச்சான். நம்ம சொல்லி இவங்க கேட்கணும்னா… முதல்ல எல்லார்கிட்டையும் அதிகாரமாக பேசணும். இல்லைனா… அடிபணிந்து பேசணும்.
முதல்ல அடிபணிந்து பேசுவோம்னு… ஒவ்வொரு வீட்லையும் குப்பை கொட்ட வரும் நபர்களிடம் சாதாரணமாக பேச்சு கொடுத்தான்.
சினிமா… முதல் அரசியல் வரை என் ஒவ்வொன்றையும் அத்துபடியாக பேசத்துவங்கினான். குமாரிடமிருந்து கருத்துக்கள் கேட்பதற்கென்றே பெண்கள் கூட்டம் கூடியது. இன்னிக்கு குமார் என்ன சொல்லப்போறான் என்றே பலரது சிந்தனை இருந்தது. வெறும் செய்திகள் மட்டுமின்றி அப்பப்போ புரணிகளும் பேசப்பட்டது.அதனால் பேசாமல் இருந்த பெண்கள் கூட பேச ஆரம்பித்தனர்.
எல்லாம் சரியாப் போயிட்டு இருக்கும் போதே குமார் தன்னுடைய எண்ணத்தை செயல்படுத்த ஆரம்பிச்சான்.
நல்லா பேசிக்கிட்டு இருந்த குமார்.. தீடீரென்று பேச்சை குறைக்க ஆரம்பிச்சான்…
எல்லாருக்கும் ஆச்சர்யம்… ஏன் இவன் பேச மாட்டிக்குறான்… ஒரு விஷயமும் தெரியலையே… என மண்டையைக்குடைந்தனர். ஏன் குமார் இப்போலாம் கடந்து போறதுல ரொம்ப ஆர்வமா இருக்க என்று கேட்க…
“ஆமா… ஆமா… நிறைய வேலை இருக்கு… நீங்க தர்ற ஒட்டு மொத்த குப்பையும் பிரிச்சு… எடுக்க மத்தியானம் ஆகுது… இப்படி பேசிட்டே போனா… இன்னும் நேரம் தான் போகுது…” என்றே சடைப்பாக பதில் கூறினான்…
“என்ன குமார்… இதுக்கெலாமா… இப்படி பண்ற… இரு… இனி… நாங்களே எல்லாம் பிரிச்சு வைச்சிடுறோம்… உனக்கும் வேலை குறையும்ல…”
“இதெல்லாம் கேட்க நல்லாத்தான் இருக்கு… ஆனா பண்ணனுமே நீங்கள்ளாம்”
“அதெல்லாம் சிறப்பா பண்ணுவோம்… நீ சரியான நேரத்துக்கு மட்டும் வந்துடு… வேலை சீக்கிரம் முடியும்” என்றே சொல்ல…
மனதிற்குள் சிரித்தவனாய்… அப்பாடா… இவங்கள ஒருவழியா நம்ம எண்ணத்துக்கு செயல்பட வைச்சாச்சு என்றே கூறிக் கொண்டாலும்…
‘அந்த பதினைந்தாம் வீட்ல உள்ளவங்க … பொண்ணுக்கு ஏதோ பிரச்சனைனு சொன்னாங்க. உனக்கு ஏதும் தெரியுமா’னு கேட்க…
‘தெரியலையே… விசாரிச்சு சொல்றேன்…’ என்றே நகர்ந்தான்… விசில் சப்தத்துடன்… மனநிம்மதியுடன்…
அதிர்ஷ்டம் சிறுகதை – சக்தி ராணி
“நம்ம நிறுவனம் ரொம்ப பெருசு… உலகளவில் பெயர் வாங்கியிருக்கு… இந்தப் பெயரைக் காப்பாற்ற வேண்டியது நம்ம பொறுப்பு…” என மீட்டிங்கில் முக்கியமான உரையாடல் நடந்து கொண்டிருக்கும் போதே…
“ஏம்பா, குமார்” நம்ம டேட்டா என்ட்ரில கார்த்திக்னு யாரும் வேலை பார்க்குறாங்களா?”
“ஆமா, சார். இருக்காங்க…பதினைந்து வருஷத்துக்கும் மேல இருக்கும். அவர் இங்க தான் வேலை பார்க்குறார்”
“அப்படியா…நான் ஒரு போதும் பார்த்தில்லையே…கொஞ்சம் வர சொல்றியா ?”
“ஏன் சார்…எதும் பிரச்சனையா…இல்ல ஏதும் உறவுக்காரங்களுக்கு தெரிஞ்சவங்களா ?”
“ம்ம்…நீ வரச் சொல்லு நான் பார்த்துக்குறேன்.”
“ஒ.கே சார்…”
“கார்த்திக்…உன்னை மேனஜர் பார்க்ககணும்னு சொல்றாரு.சீக்கிரம் போவியாம்…”
“என்ன சொல்ற குமார்…என்ன கூப்பிடுறாரா…எதும்..” அப்படின்னு சிந்திக்குறதுக்குள்ள…
“நீ எதுவும் பயப்படாத…சும்மா பார்க்கணும்னு சொன்னார் அவ்ளோ தான்…”
“அப்படியா…இப்போதே போறேன்.”
“மே ஐ கமின் சார்?”
“வாங்க கார்த்திக்…ஆர் யூ பைன்?”
“ஃபைன் சார்…சொல்லுங்க…”
“உங்க அப்பா பெயர் சேர்மமா?”
“ஆமா சார்…பெரிய நிறுவனத்துல மேனஜர் வேலை பார்த்தாங்க…”
“ம்ம்…எனக்கு ரொம்ப நல்ல பழக்கம் பா..சமீபத்தில் தான் அவரோட பையன் இங்கு வேலை பார்க்குறதா சொன்னாங்க…அதான் விசாரிச்சதுல உன்னை சொன்னாங்க…”
“ஆமா சார் நான் தான்…”
“உங்க அப்பா பெரிய திறமைசாலி… நல்லா வேலை பார்ப்பார்… என்ன, திறமையோடு அதிர்ஷ்டம் இருந்திருந்தா நல்லா இருந்திருக்கும்…அது மட்டும் அவர் வாழ்க்கையில தவறிடுச்சு…உங்க குடும்பத்தில் முன்பு எல்லாரும் பழக்கம் எனக்கு…அப்புறம் காலங்கள் மாற மாற ஆளுக்கு ஒரு திசையில அவங்க அவங்க வேலைன்னு போயிட்டோம்…”
“ம்ம் சார்…அப்பா வேலை பார்க்கும் போது..” என பேச்சுகள் விழுங்கியவனாய் கார்த்திக் நினைவுகளை அசைபோட ஆரம்பித்தான்
“சரி கார்த்திக்…உன்னைப் பார்த்தது சந்தோஷம் ..எதுவும் நினைக்காத…வேலையைப் பாரு…” என்று அனுப்பி வைத்தார்.
அறையை விட்டு வெளியில் வந்ததும்…நினைவுகளால் உடல் சிலிர்த்தது…அங்குள்ள அனைவரும் மேனேஜர் என்ன சொன்னார்…என்ன சொன்னார் எனக்கேட்க…
புன்னகையைப் பதிலாய்க் கூறி…திறமையுடன் அதிர்ஷ்டமும் வேண்டும் என்று மனதிற்குள் நினைத்துக்கொண்டான்.





