Urakkathai Thedi Kavithai By Sakthi உறக்கத்தை தேடி....!!! கவிதை - சக்தி

உறக்கத்தை தேடி….!!! கவிதை – சக்தி




யார்
களவாடிப்போனது
என் உறக்கத்தை?
எப்படிக்
களவாடப்பட்டது
என் உறக்கம்?
எப்போது
களவாடப்பட்டது?
எதுவும் தெரியவில்லை
கதவு
உள்புறமாகப் பூட்டப்பட்டுள்ளது
சன்னல்களும்
சாத்தப்பட்டிருக்கின்றன

மெதுவாய்க்
கதவைத் திறந்து
வெளியே
வந்து பார்க்கிறேன்,
நட்சத்திரங்கள்
மேகங்களுக்குள்
மறைந்து
தூங்கிக்கொண்டிருக்கின்றன,
செடிகளில்
மாலையில்
மலர்ந்த பூக்கள்
இலைகளின் மீது
தலைவைத்துத்
தூங்கிக்கொண்டிருக்கின்றன,
எப்போதேனும்
குரைக்கும்
எதிர்வீட்டு நாயும்
தூங்கிக்கொண்டிருக்கிறது
உடலுக்குள் தலைவைத்து

வேறு
எந்த அறையிலாவது
ஒளிந்திருக்கிறதா
என
வீட்டுக்குள் வந்து
குளியலறை
சமையலறை
பூஜையறை
என
எல்லா அறைகளிலும்
தேடிப்பார்த்தேன்
கிடைக்கவில்லை

இன்று
படித்த புத்தகங்களின்
எழுத்துக்களுக்குள்
விழுந்து தொலைந்ததா
என
வாசித்த
புத்தகங்களையெல்லாம்
அவசர
அவசரமாய்ப்
புரட்டிப்பார்த்தேன்
அகப்படவில்லை

ஊருக்குச்
சென்றுவிட்டதா
என
வீட்டுக்கு
அலைபேசியில் போனேன்
அலைபேசியின்
அலறலைக் கேட்காமல்
எல்லோரும் உறங்கிக்கொண்டிருந்தார்கள்,

புகார் தெரிவித்தால்
கட்டாயம் கண்டுபிடித்துத் தருவார்களென
இருபத்து நான்கு மணி
நேரக்காவல் நிலையம் சென்றால்
வெளிச்சமாய் விளக்குகளைப் போட்டுவைத்துவிட்டு
காவலர்கள் உறங்கிக்கொண்டிருந்தார்கள்,

சோர்ந்துபோய்
வீட்டுக்குத் திரும்பி
படுக்கையில்
படுத்தபடி யோசிக்கிறேன்
யார் களவாடியது தூக்கத்தை?
எங்கே தொலைந்து போனது தூக்கம்?
கண்டேபிடிக்கமுடியவில்லை,

களவாடப்பட்ட
தூக்கத்தையோ
அல்லது
தொலைந்த தூக்கத்தையோ
கண்டுபிடித்தல்
அவ்வளவு
சுலபமான காரியம் அல்ல,

Sakthiyin Kavithaigal 4 சக்தியின் கவிதைகள் 4

சக்தியின் கவிதைகள்

கடவுளும் கந்தசாமியும்
****************************
இரவு
முழுவதும் மூட்டையை
சுமக்கிறான்
ஓடாய் தேந்து
போன கந்தசாமி,

மூட்டையை
சுமந்த கந்தசாமிக்கு
முதுகுவலி ஏற்படுகிறது
அழுது கொண்டே கோவிலில்
உள்ளே உள்ள சிலையை
வனங்குகிறான்,
சிலையும் அழுகிறது
நானும் பல ஆண்டுகளாக
இங்கேயே கிடக்கிறேனென்று,

மூட்டையை சுமந்து
வாங்கிய சம்பளத்தில்
சம்பங்கி மாலை,
கற்பூரம்,
பத்தி,
இரண்டு வாழைப்பழம்,
வெற்றிலை பாக்கு,
தட்சணை பத்து ரூபாய், எடுத்துக்கொண்டுகோவிலின்
உள்ளே நுழைகிறேன்
கடவுளை காணோம்
கற்சிலை மட்டும் தெரிகிறது,

சிலையும் தெரிகிறது
கற்பூரமும் எரிகிறது,
ஊதுபத்தியும்
புகையை கக்குகிறது,
கோவிந்தா,
கோவிந்தா என
அழுதுகொண்டே
என்று குரல் எழுப்புகிறான் கந்தசாமி …..!

இருட்டு அறையும்  கருப்பு பூனையும்
*******************************************
ஜன்னல்கள் இல்லாத
பழைய பொருட்கள்
வைக்கப்பட்ட இருட்டு அறையில்
உடைந்த நாற்காலியில் மேல்
படுத்து தூங்குகிறது
கருப்பு பூனை,

இருட்டிலே படுத்த
பூனையின் கண்கள்
வெளிச்சத்தை
கொடுக்கிறது
இருட்டு அறையில் எரியும்
குண்டு பல்புகளைப்போல,

அந்த இருட்டு அறையின்
தகர கதவை திறக்கும் ஒலியினாள் தூங்கிய பூனைக்குட்டி
துள்ளிக் குதித்து ஓடுகிறது
பானை சந்தின் ஓரத்திலே

கருப்பு பூனையின்
வெள்ளை நிற மீசைகள்
தயிர் பானைகள்
முழுவதும் பரவிக்கிடக்கிறது
இரவு நேரத்திலே அடுப்பு மோடையில் நுழைவதால்,

வீடுகள் முழுவதும்
பாத்திரங்களை
உருட்டி விளையாடுகிறது
கருப்பு பூனை பாத்திரங்களை விளையாட்டு பந்துகளாக நினைத்துக்கொண்டு,

மாட்டுக்கறியின்  எலும்பு
துண்டுகளை கடித்து குதறிய
பூனைக்குட்டி
அம்மாவின் முந்தானை
துணியால் முகத்தை
துடைத்துக்கொண்டு ஓடுகிறது,
விளக்குகள் இல்லாத
இருட்டு அறையை நோக்கி….!!!!

Sakthi's Poems 3 சக்தியின் கவிதைகள் 3

சக்தியின் கவிதைகள்

மனிதனும் பறவைகளும்….!!!!
……………………………………………
எங்கள்
கிராமத்தின் சாலையோரம்
ஒரு குளக்கரை,
குளக்கரையின் ஓரம்
ஓங்கி வளர்ந்த ஒரு மாமரம்,

ஓங்கி வளர்ந்த மாமரத்தின்
கிளைகளில் ஊஞ்சல்
கட்டி ஆடுகிறார்கள் அறியாத
சிறு வயது குழந்தைகள்,

ஊஞ்சலாடும் குழந்தைகளின்
பசியைப் போக்குகின்றன
மரத்தில் பழுத்துத்
தொங்கும் மாம்பழங்கள்,

சூரியனின் வெப்பத்தை
தாங்காத தவிடனும் கலியனும்
குளக்கரை மரத்தடி நிழலில்
இளைப்பாறுகிறார்கள்
கடலில் சூரியன்
கரையும் நேரம் வரை,

கிளிகளும், ஆந்தையும்,
காகமும், மரத்தின்
கிளைகளில்
அமர்ந்தவாறு மாம்பழங்களைப்
பதம் பார்க்கின்றன
கூர்மையான அலகுகளால்,

மாம்பழங்களைப் பதம்
பார்த்த பறவைகள்
மாம்பழக் கொட்டைகளை

விசிறி விடுகின்றன குளக்கரையின் ஓரமாக
செடியாக முளைப்பதற்கு,

குளக்கரை சுற்றியும்
மரங்கள் மரக்கிளைகளில்
பறவைகளும்
குழந்தைகளும்
ஊஞ்சலாடுகின்றன
சூரியனின் ஒளியில்,

நிழல் தரும்
மரங்களில் தஞ்சம்
அடைகிறார்கள்
மனிதனும் பறவைகளும்…..!!!!!!

அழுக்குதுணியும்  வண்ணானும்..!!! 
……………………………………………………..
விடியற்காலையில்  வீடு வீடாக
சென்று வாசலில் நிற்கிறான்,
அழுக்கடைந்த துணிகளை
வாங்கி மூட்டையாக கட்டி தோளில்
சுமந்து செல்பவன் வண்ணான்,

தோளில் தூக்கிய அழுக்கு
மூட்டை துணிகளை  பாரம் தாங்காமல்
கழுதையின் முதுகில் ஏற்றிவிடுவான்  வண்ணான்,

மூட்டையை சுமந்த
கழுதைகள் மலைப்பாம்புகளை
போல நகர முடியாமல்
சிரமத்துடன் நகருகின்றன
ஆற்றங்கரையை நோக்கி,

சாலையில் வீசப்பட்ட
பேப்பர்களையும்
இலைகளையும் பொருக்கி
பசியாறிக்கொண்டே
ஆடி ஆடி நகருகிறது
மூட்டையை சுமந்த கழுதைகள்,

அடுப்பை மூட்டி பானையில்
அழுக்கு துணிகளை போட்டு
வெள்ளாவி வைத்து அழுக்கை
நீக்குபவன் வண்ணான்,

ஓவ்வொரு துணிகளுக்கும்
சோப்பை போட்டு ஆற்று நீரில்
அலசி வெண்மை
படுத்துபவன் வண்ணான்,

ஆற்றங்கரையில் புல்களை
மேய்ந்து கொண்டுக்கின்றன
மூட்டையை சுமந்த கழுதைகள்,

அழுக்கு துணியின்
கரைகள் கரைந்து ஓடுகிறது
ஆற்று நீரில்
வண்ணானின் முதுகுவலியால்,

அழுக்கை நீக்கிய
துணிகளை சூரியனின்
வெயிலில் காய வைத்து
மடித்து வேட்டியில் மூட்டையாக
கட்டி கழுதையின் முதுகில் ஏற்றி
ஓவ்வொரு வீடாக இறக்கி
வைப்பவன் வண்ணான்,

அழுக்கு துணிகளை
சலவை செய்த  வண்ணான்
வீடு வீடாக நிற்கிறான்
பாத்திரத்தை கையில்
ஏந்தியவாறு
இரவு நேரத்தில்
ஒருவேளை உணவுக்காக……!!!!!! 

Shakthi's Poems சக்தியின் கவிதைகள்

சக்தியின் கவிதைகள்




மகனின் கடைசி வாகனம்
*******************************
“தத்தெடுத்த
மகனை
அவனுடைய
வீட்டிற்கு அனுப்புவதற்காக
தயாராக்கி
கொண்டிருக்கிறார்கள்
ஊர் மக்கள் ,

நீண்ட
நேரமாக
காலையிலிருந்தே
வாகனமும்
வாசலில் வந்து
நின்று கொண்டிருக்கிறது ,

வழியனுப்புவதற்கு
ஊரே வீட்டின்
வாசலில் சூழ்ந்துக்
கொண்டிருக்க
மேள தாளங்களோடு
சிலப்பேர்
ஆடி பாடி கொண்டிருக்க ,

பூமியிலிருந்து
அனுப்பிய பட்டாசுகள்
மேலிருந்து
வெடித்து இடிகளாக
பொழிந்து கொண்டிருக்க

இரண்டு
நாட்களாக
குளிக்காதவனை
அத்தை வீட்டிலிருந்து
தண்ணீரை
எடுத்து வந்து
தலை முழுக குளிப்பாட்டி

புது உடை
உடுத்தியவனை
அழுதுகொண்டே
வழியனுப்பி வைக்கிறார்
அப்பாவும் அம்மாவும்
ஊரார்
உறவினர்கள்
முன்னிலையில் ,

நான்காயிரம்
நண்பர்கள்
புடை சூழ
ஆரவாரத்துடன்
ஆற்றங்கரை
நோக்கி நகர்ந்து
செல்கிறது மகன் ஏறி
படுத்துக்கொண்ட
திரும்பி
வராத கடைசி வாகனம் “……….!!!!!!

அம்மாக்களின் அன்பும் அக்கறையும்…..!!!!!
****************************************************
காற்றை விட
மிக வேகமாக
சுழன்றுக்கொண்டிருப்பவள் அம்மா,

இரவு
விடியாத
பொழுதும்
நான்கு மணிக்கே
விழித்துக்கொள்கிறது
அம்மாவின் கண்கள்,

விழித்துக்கொள்கிற
கண்களில்பசை தடவி
பேப்பரை ஒட்டிவைத்ததை
போல கண்களைமூடி மூடி
திறக்கிறது
அம்மாவின் இமைகதவுகள்,

சாணம் தெளித்தல்,
வாசலை பெருக்குதல்,
கோலம் போடுதல்,
பாத்திரம் விளக்குதல்,
தண்ணீர் பிடித்தல்,
சாப்பாடு செய்தல்,
துணி துவைத்தல்,
வீட்டை சுத்தம் செய்தல்,
மகன், மகளுக்கு தலை வாருதல்,
ஆடு, மாடுகளுக்கு புல்லை பரிமாறுதல் ,
விறகு பொருக்குதல்,
அப்பாவுக்கு பணிவிடை செய்தல்,

காற்றை விட
மிக வேகமாக
பம்பரமாக  சுழல்கிறது
அம்மாவின் உடலும்
அன்பும் அக்கறையும்,

நிலவை காட்டி
பசியாற்றிய
அம்மாவின் கைகளுக்கு
வெற்றிலையும் பாக்கும்
சுண்ணாம்பும் மட்டுமே உணவாகிறது
அப்பாவின் குடிசையின் வாசலில்,

கதை கதையாக
கூறி உறங்க வைத்த
அம்மாவின் கண்கள்
சாமம் வரை உறங்காமல்
விழித்திருக்கிறது
அடுப்பு மோடையில் ,

மகன், மகள், கணவர்
என எல்லோருக்கும்
பகிர்ந்தளித்த அம்மாவுக்கு
உணவாகிறது அப்பா மிச்சம்
வைத்த ரசமும்
கறி இல்லாத
எலும்பு துண்டுகளும்,
கொஞ்சோன்டு
சோறு மட்டும்தான்.

கடைசி கவிதை…..!!!!
***************************
இன்னும்
சற்று நேரத்தில்
எழுதப்பட இருக்கிறது
அவனுடைய
கடைசி கவிதை

ஜன்னலை
திறந்து வைத்து
மரத்தை பார்க்கிறேன் ,
அணிலொன்று
ஒரு மாம்பழத்தை முழுவதுமாக
தின்று முடித்துக் கொண்டிருந்தது ,

படுத்துக்கொண்டு
அந்தரத்தில் தொங்கும்
மின்விசிறியையே
உற்று பார்க்கிறேன்
மரம் இல்லாமல்
காற்றை எங்கிருந்து
கடன் வாங்கி
கொடுத்துக்
கொண்டிருக்கிறதென்று புரியாமல் ,

கண்ணாடியில்
என் முகத்தை பார்க்கிறேன்
மீசையும் தாடியும்
நீண்டு வளர்ந்திருந்தது
கண்ணாடியில்
தெரியும் மீசையை
முருக்கிவிட்டு
கொண்டிருந்தது
கண்ணாடியின் கைகள் ,

சமையல்
அறையிலிருந்து
யாரோ
அழுகிற சத்தம்
கேட்டு ஓடிப்போய்
பார்க்கிறேன்
அம்மாவும்
சண்டைக்கோழியொன்றும் சண்டையிட்டு கொண்டிருந்தன,

சமாதானம் செய்து
வைத்து விட்டு
ஒரு பிடி கறிச்சோற்றை
தின்றவாறே வீட்டிலிருந்து
வெளியேறுகிறேன்

எனக்கு
முன்பாகவே என் உயிர்
வாசலில் வந்து காத்து
கொண்டிருக்கிறதாம்
விடிய காலையிலிருந்தே ” …….!!!!!!!

உழைக்கும் மக்களின் உணர்வும்
உணவும்  மாட்டுக்கறி……!!!!!!

***************************************
காலையில்
ஐந்து மணிக்கே
சைக்கிளை
எடுத்துக்கொண்டு
வேகமாக மிதித்து ஓட்டிய கால்களுக்கு
ஆறுதல் கிடைத்தது
இரண்டு முட்டி
எலும்பு துண்டுகள் தான்,
பனியில்
நனைந்தவாறு
ஓட்டிக்கொண்டு
போன அப்பாவுக்கு
முட்டி எலும்பு
துண்டுகளை பொடியாக
வெட்டி சூப்பு வைத்து கொடுக்கிறாள் அம்மா,
ஞாயிற்றுக்கிழமை
காலை வேளையில்
காக்கைகளும்
நாய்க்குட்டிகளும்
தெருவெங்கும்
அலைமோதுகிறது
மாட்டுக்கறி குழம்பின்
ருசியை அறிய,
பச்சை
புற்களை தின்ற
மாடுகள்
ஞாயிற்றுக்கிழமைகளில் மல்லாக்க
படுத்துக்கொண்டு
கறி வாங்குகிறவர்களின்
முகங்களையே
பார்த்து கண்ணீரை
வடிக்கிறது ,
மாட்டுக்கறி குழம்பை
திருட்டு
தனமான ருசி
பார்க்கிறது பக்கத்து
வீட்டு பூனைக்குட்டிகள் ,
கிருஷ்ணர்
போல வேடமிட்ட
குழந்தைகள்
மாட்டு கால் எலும்பு
துண்டுகளை
புல்லாங்குழலாக நினைத்து
உறிஞ்சி இழுத்தவாறு
மூச்சு வாங்க ஓடுகின்றன கிணற்று மேட்டு தெருவெங்கும்,
கறிக்கடையெங்கும்
மக்கள் கூட்டம்
நிரம்பி வழிகிறது,
நிரம்பி வழியும்
கூட்டத்தை
கிழித்துக்கொண்டு
கறிகளை தூக்கி
கொண்டு
பறக்கிறது காக்கைகள்,
பச்சை நிற
இலை மேல்
வெள்ளை நிற சாதம்
காவி நிறம்
மாட்டுக்கறிக்குழம்பு
தேசிய கொடி பறக்கிறது
உழைக்கும் மக்கள்
வாழும் உலகம் முழுவதும் ஞாயிற்றுக்கிழமை
காலை வேளையில்,
இரவு ழுவதும்
பறை இசையை
வாசித்து
அலுத்துப் போன
அப்பாவுக்கும்
அண்ணனுக்கும் வெந்துக்கொண்டிருக்கிறது
சட்டியில் மாட்டுக்கறி
எலும்பு துண்டுகள்,
தலைகீழாக
தொங்குகிறது
மாட்டின் தொடைகள்
தொடைகளை தொட்டுப்பார்க்கிறார்கள்
மேல் தெருவு
மாணிக்கம் மகனும்
ஐய்யப்பன் மகனும்
அரை கிலோ கறி வாங்கி யாருக்கும் தெரியாமல்
சமைத்து கடித்து இழுத்திட …..!!!!