நூல் அறிமுகம்: சாவித்ரி பாய் ஃபூலேவின் நானும் என் கணவரும் – தமிழில்: சாலை செல்வம் | இராமமூர்த்தி நாகராஜன்
புலே என்ற வார்த்தை எனக்கு 2010 வாக்கில் அறிமுகம். தனஞ்செய் கீர் என்பவர் எழுதிய “மகாத்மா ஜோதிராவ் புலே” என்ற நூலின் தமிழாக்கத்தை வெ.கோவிந்தசாமி செய்திருந்தார். புத்தா வெளியீட்டகம் வெளியிட்டிருந்தது.
அதுவரை மகாத்மா என்றால் அண்ணல் காந்தியையே நான் அறிந்து வைத்திருந்தேன். ஆனால் காந்திக்கு முன்னரே 1827 ல் பிறந்து எளிய ஒடுக்கப்பட்ட மக்களின் முன்னேற்றத்துக்காக தம்பதியாகப் பாடுபட்ட ஜோதிராவ் புலேவுக்கு 1888ல் பொதுமக்கள் முன்னிலையில் மகாத்மா பட்டம் வழங்கப்படுகிறது.
மகாத்மா புலேவின் வாழ்க்கை வரலாற்றையும், அவரின் தத்துவங்களையும் கொண்ட அருமையான நூல் அது. சூத்திர வாழ்க்கையின் பொருளே, அவனுக்கு மரியாதை கிடையாது, வாழ்வதற்கு மரியாதையான வழிகளும் கிடையாது என்பதுதானே. ஓர் உள்ளார்ந்த ஏக்கம் அவன் வாழ்க்கைச் சூழலை நிர்ணயித்து விடுகிறது.
மிகப்பெரிய சமூக மாற்றங்கள் தற்செயலாக நடந்து விடுவதில்லை. செயலூக்கமான மனிதர்களால் முதலில் அம்மாற்றங்கள் விரும்பப்படுகின்றன. ஒரு மனிதன் அடிமையாகும் போது அவன் தன் நற்பண்புகளில் பாதியை இழந்து விடுகிறான். கடுமையான போராட்டமின்றி இழந்து போன உரிமைகளைப் பெற முடியாது.
சிந்தனை என்பது செயலே. செயல் மட்டுமே சிந்தனைக்கு மதிப்பைக் தரும். நீதிக்கும், மனித உணர்ச்சிக்கும் மதிப்புத் தராத வெறும் படிப்பறிவின் மூலம் மேன்மை கிட்டி விடாது.
கல்விக் குறைவால், அறிவு சீரழிந்தது..
அறிவுக் குறைவால், நல்லொழுக்கம் அழுகியது..
நல்லொழுக்கக்குறைவால், முன்னேற்றம் நின்று போனது..
முன்னேற்றம் நின்று போனதால், செல்வம் மறைந்தது..
செல்வக் குறைவினால், சூத்திரங்கள் அழிந்தனர்..
கல்லாமையிலிருந்தே அனைத்துத் துயரங்களும் ஊற்றெடுக்கின்றன….
எத்தனை அருமையான கருத்துக்கள்… இத்தனை சிறந்த சிந்தனை கொண்ட ஜோதிராவ் புலே தனது பதிமூன்று வயதில் ஒன்பது வயது கொண்ட சாவித்திரி பாயை மணக்கிறார்.
திருமணத்தின் போது பள்ளியில் பயின்றார் ஜோதிராவ். படிக்காதவர் சாவித்திரி.
ஜோதிராவ் பகலில் மாணவராகவும், இரவில் ஆசிரியராகவும் தானும் படித்துக்கொண்டு, சாவித்திரிக்கும் கல்வி கற்பிக்கிறார். கல்வியில் கற்றுத் தேர்கிறார் சாவித்திரி. தன் கணவரின் ஆசைப்படி ஆசிரியர் பயிற்சி பெறுகிறார் சாவித்திரி. இந்தியாவின் முதல் பெண் ஆசிரியராகிறார் சாவித்திரி. 1848ல் பூனாவில் பெண்களுக்கான பள்ளியை பல்வேறு இக்கட்டான சூழலில் தொடங்குகின்றனர்.
“பொட்ட புள்ளைக்கு படிப்பா?” என பெரும்பாலான ஊர்க்காரர்கள் பிள்ளைகளை பள்ளிக்கு அனுப்பவில்லை.
பள்ளியிலும் சாதிப் பிரச்சினை.
சாவித்ரி பாய் பள்ளிக்கு செல்வதைத் தடுக்க பல்வேறு தடைகளை ஏற்படுத்துகின்றனர்.
அவர் பள்ளிக்கு செல்லும் போது அவர்மீது சாணத்தை எறிகின்றனர்.
மாற்றுப்புடவையை பையில் எடுத்துச் சென்று பள்ளியில் மாற்றிக்கொண்டு வகுப்பெடுக்கிறார் சாவித்திரி.
சாதி, பெண்கல்விக்குத் தடை என பல்வேறு தடைகளைத் தாண்டி வெற்றி பெறுகிறார்.
இந்தியாவின் முதல் பெண் ஆசிரியராகி வெற்றி பெற்ற சாவித்திரி பாய் வாழ்க்கை வரலாற்றை குழந்தை மொழியில் அழகுற சாவித்திரி பாயே தன் வரலாற்றைக் கூறுவது போல் தழிழில் விவரித்துள்ளார் சாவித்திரி செல்வம்.
குழந்தைகள் வாசிக்கலாம். பெரியோர்களும் வாசிக்கலாம்.
பூலே தம்பதிகள் பற்றிய மேல் அதிக வாசிப்புக்கு இந்நூல் திறப்பாக நிச்சயம் இருக்கும். வண்ணப் படங்களுடன் அழகிய எழுத்துருவில் நேர்த்தியாக நூலை இயல்வாகை பதிப்பகத்தினர் வடிவமைத்துள்ளனர். சாதி கடந்து மனிதம் நேசிக்கும் அனைவரும் தானும் வாசியுங்கள்… தங்கள் பிள்ளைகளுக்கும் வாசிக்கத் தாருங்கள். இந்நூலை வாசித்து முடிக்கும்போது தேசிய ஆசிரியர் தினம் சாவித்திரி பாய் பிறந்தநாளாக இருந்தால் நன்றாகவே இருக்கும் என என் மனம் நினைக்கிறது.
நானும் என் கணவரும்.
சாவித்ரி பாய் ஃபூலே
தமிழில்… சாலை செல்வம்.
இயல்வாகை/சுட்டியானை வெளியீடு.
விலை..70/-