சமகால நடப்புகளில் மார்க்சியம் தொடர் 7 – என்.குணசேகரன்
மார்க்சின் கருத்தை ஏன் திரிக்கிறார்கள் ?
என்.குணசேகரன்
ரஷ்யா – உக்ரைன் போர் தெற்காசிய நாடுகளில், கடுமையான பொருளாதார பாதிப்பினை ஏற்படுத்தியுள்ளது. உணவு மற்றும் ஆற்றல் பற்றாக்குறை காரணமாக பல நாடுகளில் வர்த்தக பாதிப்பு ஏற்பட்டுள்ளது. உணவுப் பாதுகாப்பின்மையால் பசிப்பிணி அதிகரித்துள்ள நிலையில் உணவுப் பொருட்கள் விலை அதிகரித்து வருகிறது. “இந்த ஆண்டின் முதல் காலாண்டில் சர்வதேச பணவீக்கம் அதிகரித்துள்ளது” என உலக வர்த்தக அமைப்பின் தலைவர் ரால்ஃப் ஒசா போரின் உலக தாக்கத்தைப் பற்றி குறிப்பிட்டார்.
இந்தப் போரில் ரஷ்யாவை குற்றம் சாட்டும் செய்திகள் ஏராளமாக ஊடகங்களில் வெளி வருகின்றன. ஆனால் இந்தப் போரின் மூல காரணமான அமெரிக்க, ஐரோப்பிய நாடுகளின் உள்நோக்கத்தைப் பற்றி கார்ப்பரேட் ஊடகங்கள் பேசுவதில்லை. ராணுவ கூட்டணியான நேட்டோவினை ஆசியாவில் விரிவுபடுத்த அமெரிக்க, ஐரோப்பிய நாடுகளின் முயற்சிகள்தான் போருக்குக் காரணம் என்பதை ஊடகங்கள் பேசுவதில்லை. போரை உக்கிரமாக நடத்த அமெரிக்கா ஆயுதங்களை உக்ரைனுக்கு சப்ளை செய்யும் செய்திகளும் மறைக்கப்படுகின்றன.
இந்தப் போர் நிறுத்தப்பட வேண்டும். நமீபியா நாட்டின் பிரதமர் சாரா குகான்கெல்வா உக்ரைன் போரினைப் பற்றி பேசுகிறபோது குறிப்பிட்டார்:
“நாங்கள் இந்த மோதலை நிறுத்துவதற்கு அமைதி வழி தீர்வு காண முயற்சிக்கிறோம். அத்தகைய அமைதி வழி தீர்வுதான் இந்த உலகத்தினுடைய அனைத்து வளங்களையும் மக்களின் வாழ்க்கை நிலையை மேம்படுத்துவதற்கு, பயன்படுத்துவதற்கான சூழலை ஏற்படுத்தும். உலகத்தின் வளங்கள் அத்தனையும் ஆயுதங்கள் வாங்குவதற்கும், மக்களை கொல்வதற்கும், மேலும் மேலும் பகைமையான முரண்பாடுகளை உருவாக்குவதற்கும் பயன்படுத்துவது நிறுத்தப்பட வேண்டும்.”
இது ஏழை நாடுகளின் குரல் மட்டுமல்ல; உலக உழைக்கும் மக்களின் குரல். உலகை சூறையாடி வருகிற ஏகாதிபத்திய கார்ப்பரேட் சாம்ராஜ்யத்தின் வெறியாட்டத்தை ஒடுக்க வேண்டும். இதனை உலக உழைக்கும் மக்களின் ஒற்றுமையே சாதிக்கும்.
ஒற்றுமையை உடைக்க அடையாள திரட்டல்
ஆனால், இந்த ஒற்றுமை அவ்வளவு எளிதாக ஏற்படுவதில்லை. இதற்கு ஏராளமான தடைகள் உள்ளன. அதில் ஒன்று, அடையாள அரசியல். மதம், சாதி, இனம், நிறம் என பல வகைகளில் அடையாள அடிப்படையிலான மக்கள் திரட்டல்கள் நடக்கின்றன. இவை ஏகாதிபத்தியத்தை குறி வைப்பதில்லை. மாறாக மக்களிடையே இருக்கிற வேறுபாடுகளை பயன்படுத்தி, “நாம்”- இந்தப் பிரிவு;”அவர்கள்” அந்தப் பிரிவு” என சக உழைக்கும் மக்களுக்கு எதிராக ஒரு பகுதி உழைக்கும் மக்கள் திரட்டப்படுகின்றனர். வர்க்க ஒற்றுமையை பிளவுபடுத்துகிற வேலையை அடையாள திரட்டல்கள் செய்து வருகின்றன.
அடையாள அரசியல் இயக்கங்கள் உலகம் முழுவதும் செயல்பட்டு வருகின்றன. இந்தியாவில் “நாம்-அவர்கள்”என்ற பிளவு மதத்தை அடிப்டையாகக் கொண்டு “நாங்கள் இந்து-அவர்கள் சிறுபான்மை“ என்று கூறு போடுகிற வேலையை இந்துத்துவா உள்ளிட்ட வகுப்புவாத இயக்கங்கள் செய்து கொண்டிருக்கின்றன.
“பசு காவலர்கள்” என்ற பெயரில் வன்முறை, படுகொலைகள் நடக்கின்றன. சமீபத்தில் பெங்களூரிலும் இத்தகைய படுகொலைகளை செய்துள்ளனர். கடந்த மூன்று ஆண்டுகளில் ஏராளமாக இது போன்ற சம்பவங்கள் நடந்து, சுமார் 44 பேர் கொலைவெறிக் கூட்டத்தினால் படுகொலை செய்யப்பட்டிருக்கிறார்கள்.
இது இந்து மத “புனிதம்” காக்கிறோம் எனும் பெயரால் நடைபெறுகிறது. இவை குறிப்பிட்ட சில சம்பவங்களாக நடந்து முடிவதில்லை. தொடர்ந்து அந்தப் பகுதிகளில் இந்து அடையாளம் வலுவாக கட்டமைக்கும் வெறிப் பிரச்சாரம் நடக்கிறது. அது பாஜகவின் வாக்கு வங்கியாகவும், அரசியல் திரட்டலுக்கும் பயன்படுத்தப்படுகிறது.
இந்த சூழலில், மார்க்சியம் முதலாளித்துவத்தின் கொடுமைகளை அம்பலப்படுத்தி, உழைக்கும் வர்க்க ஒற்றுமையை பேசுவது, அடையாள அரசியல்வாதிகளால் பொறுத்துக் கொள்ள முடியவில்லை. அவர்கள் மார்க்சியத்தின் மீது கடும் ஆத்திரம் கொண்டு பாய்கிறார்கள்.
தமிழக ஆளுநரின் மார்க்சிய எதிர்ப்பு கருத்துக்களும் இந்த வகை சார்ந்ததே. மார்க்ஸ் இந்தியாவைப் பற்றி எழுதியுள்ள கருத்துக்களை அவர் மேலோட்டமாக படித்துவிட்டு அபாண்டமாக பல கருத்துக்களை பேசியுள்ளார்
பிரிட்டிஷார் ஏற்படுத்திய துயரம்
மனிதர்கள் பசுக்களையும் குரங்குகளையும் வணங்குவதால் இந்திய அமைப்பு இருக்கக் கூடாது என்று மார்க்ஸ் குறிப்பிட்டதாக ஆளுநர் பேசியுள்ளார். மார்க்ஸ் அவ்வாறு எழுதியதற்கான சரியான மேற்கோள் எதையும் அவர் குறிப்பிடவில்லை.
“இந்தியாவில் பிரிட்டிஷ் ஆட்சி”என்ற கட்டுரையில் பிரிட்டிஷ் ஏகாதிபத்தியம் இந்தியாவை எப்படியெல்லாம் சுரண்டி சூறையாடியது என்பதை மார்க்ஸ் விளக்கியுள்ளார்.”பிரிட்டிஷாரால் இந்துஸ்தானத்தின் மீது பலவந்தமாக சுமத்தப்பட்ட துன்ப துயரம்” என்ற மார்க்சின் சொற்றொடர் கடுமையான துயரத்தை ஏற்படுத்திய பிரிட்டிஷ் ஆட்சி அகல வேண்டுமென்ற மார்க்சின் எண்ணத்தை வெளிப்படுத்துகிறது.
மக்கள் தங்களுடைய பின்தங்கிய சூழலிருந்து விடுபட்டு கொடுமையான ஆங்கிலேய ஆட்சியை எதிர்த்து முன்வர வேண்டும்; அந்த ஆட்சியை தூக்கி எறிய வேண்டும் என்கிற எண்ணவோட்டம்தான் அந்தக் கட்டுரையின் அடிநாதமாக விளங்குகிறது.
இந்திய விடுதலையின் மீது மார்க்சுக்கு ஆழமான பற்று இருந்தது.அன்று இந்தியர்கள் தாங்கள் வாழுகிற “சமுதாய நிலையை என்றுமே மாறாத இயற்கை விதியாக” கருதி சமுதாயத்தை மாற்றுவதற்கான போராட்டத்தில் ஈடுபடுவதற்கு தயங்கிடக் கூடாது என்பது மார்க்சின் கருத்து. சாபாலன் எனும் பசு மற்றும் அனுமானை தெய்வங்களாக வணங்குதல் மட்டும் போதாது; சமூக நிலையை மாற்றுவதற்காக மக்கள் போராட வேண்டும் என்கிற கருத்தை மார்க்ஸ் வெளிப்படுத்தினார். இதனைத் திரித்து, தனது வசதிக்கேற்ப பேசியுள்ளார், ஆளுநர்.
உண்மையில் மேற்கண்ட வரிகளுக்கு அடுத்து, கட்டுரையின் கடைசிப் பத்தியில் “ஆசியாவின் சமூக வாழ்வில் ஒரு அடிப்படையான புரட்சி” ஏற்படுத்துவதைப் பற்றி மார்க்ஸ் பேசுகிறார்.
மேற்கண்ட கட்டுரை 1853-ல் எழுதியது. அதற்கு 10 ஆண்டுகளுக்கு முன்பே மதம் பற்றி ஆழமான கருத்துக்களை மார்க்ஸ் எழுதியுள்ளார். “மதம் மக்களின் அபினி” என்று அவர் எழுதுகிற போது மத நம்பிக்கையை இழிவுபடுத்தவில்லை. மாறாக மத நம்பிக்கை ஒரு தற்காலிக வலி நிவாரணி. அது வாழ்க்கை இன்னல்களின் அழுத்தத்திலிருந்து ஒரு நிம்மதியை ஏற்படுத்தினாலும், சமூக அவலங்களை மாற்றுவதற்கான வர்க்க ஒற்றுமை தேவை என்பதுதான் மார்க்சின் பார்வை.
இந்தக் கருத்துக்களை உள்வாங்கிடாமல் மனம் போன போக்கில் மார்க்சின் சிந்தனையை திரித்துப் பேசுகின்றனர். மார்க்ஸ் மீதான அவதூறுகளுக்கு அடிப்படை நோக்கம், மக்களை அடையாளம் அடிப்படையில் பிரித்து, முதலாளித்துவத்தை எதிர்த்த வர்க்க ஒற்றுமை உருவாகாமல் தடுப்பதுதான்.
(தொடரும்)