சமகால சுற்றுச்சூழல் சவால்கள்: தொடர் 11 – முனைவர். பா. ராம் மனோகர்
கட்டிடக் கழிவு மாசுக்கள்!
குறையா சுற்றுச் சூழல் பிரச்சினைகள்!
கடந்த வாரம் நம் சென்னை மாநகரில் முக்கிய சாலை ஒன்றில் நடக்கையில், ஆங்காங்கே மண் குவியல், செங்கல் அடுக்கு, இடையூறு ஏராளம். ஏன்!? ஆனாலும் ஒரு சிந்தனை என்னில் தோன்றிய நிலை……. ஆம்!இயற்கை, பல்வேறு நன்மைகள் செய்கிறது, அதனை ரசிப்பது, அரிய தன்மைகள் பற்றி அறிந்து பாதுகாப்பு பற்றிய திட்டங்கள் அரசு, தனியார்த் துறைகள் , மேற்கொண்டு வருகிறது. அவற்றைத் தொடர்ந்து செயல்படுத்தி வந்தாலும், வளர்ச்சி என்று கிராமங்கள் கொஞ்சம், கொஞ்சமாக மறைந்து நகரங்களாக மாறி வருகின்றன. நகரங்கள், மாநகரங்களாக புதிய தோற்றம் பெறுவது தவிர்க்க இயலாத நிலை!இந்நிலையில் நகர மயம் என்றால் புதிய கட்டிடங்கள் உருவாதல் , பழைய கட்டிடங்கள் நவீன மயமாய் மாறுதல் என்பது முக்கிய அம்சம் ஆகும். ஆனால் அவற்றின் கட்டுமானப் பணிகள் நடைபெறும் போது ஏற்படும் சூழல் பிரச்சனைகள் பற்றிய எண்ணம், சிந்தனை, பாதிப்புகள் தீர்வுகள், போன்றவை இன்றும் அதிகம் பேசப்படாத பொருள் ஆக உள்ளது.
இத்தகைய கட்டிடக் கழிவுகள் (C&D WASTES -Construction and Demolition wastes ) பிரச்சனை, மேலாண்மை சமீப காலமாக இந்தியாவில் மிகப் பெரும் சவாலாக விளங்குகிறது. புதிய இந்தியா என்று, தீவிர விரைவாக, ஆங்காங்கே நகர்களில் மேம்பாலங்கள்,2022 ஆம் ஆண்டுக்குள் 11.2 பத்து லட்சம் வீடு கட்டும் திட்டம், சீர்மிகு நகர் திட்டம் (SMART CITY MISSION )நகர் மயமாக்கம் (ATAL REJUVENATION MISSION FOR URBAN TRANSFORMATION ) ஆகிய அரசு திட்டங்கள்,1.5. லட்சம் கோடி டாலர் மதிப்பு கொண்டு பிரதமர் பொருளாதாரப் பகுதி இணைக்கும் பெரும் கட்டுமான திட்டம்,எனவும், தனியார்த் துறைகளின் திட்டங்கள் போன்றவை மூலம் வளர்ச்சி காரணம் கொண்டு சூழல் பாதிக்க நிறைய வாய்ப்புகள் தொடர்ந்து இருக்கின்றன.
ஆம், இந்தக் கட்டுமானக் கழிவு மாசுகள் மூலம், அதிகம் காற்று மாசு பரவி, மனிதச் சுகாதார கேடுகள், சூழல் பிரச்சனை தோன்றிவிடும் நிலை உள்ளது. ஆனால் இந்தக் காற்று மாசு தூசு, கட்டுப்பாடு பற்றிய முறையான வழிகாட்டுதல் இல்லை என்பது மிகவும் வருந்ததக்கது.
மேலும் இந்த மாசு கட்டுப்படுத்த, முறையாக அறிவியல் பூர்வ மேலாண்மை செய்ய, தொழில் நுணுக்க அறிவு நம்மிடம் இல்லை. கட்டிடக் கழிவு மறு சுழற்சி செய்து உற்பத்திப் பொருளாக நம் நாட்டில் மாற்றம் செய்யும் நிலை, ஒப்பு நோக்கினால் உலக அளவினை மிகக் குறைவு ஆகும். பழைய கட்டிடக் கழிவுகளிலிருந்து, மணல், கற்கள், உலோகம் ஆகிய பொருட்கள் பிரித்து எடுப்பது நம் நாட்டில் அதிகம் ஆகும். குறிப்பாக ஒரு ஏக்கர் பரப்பளவில் உலக அளவில் 450 டன் என்றால், இங்கு 1580டன் என 2019 ஆம் ஆண்டு தேசிய வளத்திறன் கொள்கை வெளியீடு சுட்டி காண்பிக்கிறது.
நகரங்களில் கட்டுமானப் பணிகள் செயல்பாடுகள், தவிர்க்க இயலாத ஒன்று எனினும், அதன் மூலம் உருவாகும் காற்று மாசு பெரும் சூழல் தீங்குகள் விளைவிக்கும் என்பது உண்மை. கட்டுமான செயல், அதற்கான பொருள் போக்குவரத்து, இடித்த கழிவு, அவற்றை சேகரித்து வெளியேற்றம் செய்தல்,குறிப்பிட்ட இடங்களில் கொட்டி வைத்தல் எனப் பல்வேறு செயல்பாடுகளின் மூலம் பொது மக்கள், கட்டுமானப் பகுதி அருகில் வசிப்பவர்கள் ஏராளமான பாதிப்புகளைச் சந்தித்து வருகின்றனர். டெல்லியில் உள்ள டாடா ஆற்றல் ஆய்வு மையம் (TERI) தகவலின் படி சாதாரண நிலையில் காற்றில் கட்டுமான தூசு (2.5 P/M) 38% அளவுக்கு இருப்பதும், கோடை காலத்தில் இந்த தூசு (10 P/M) 41%அளவுக்கு இருப்பது அதிர்ச்சி அளிக்கிறது. மேலும் கட்டுமானக் கழிவுகள் அத்து மீறி, நீர் ஆதாரங்களில் மற்றும் சூழல் முக்கியத்துவம் உள்ள இயற்கை, வனப் பகுதிகள், நிலங்களில் கொட்டும் வழக்கம் உள்ளது. இதனால் சுற்றுச்சூழல் மாசு அடைவது நாம் கண்டு வரும் பரிதாப நிலை தொடர்கிறது.
நம் நாட்டில் கட்டுமானப் பணி கழிவுகள் பற்றிய தனித் துறை, கண்காணிப்பு இல்லை. நகரத் திடக் கழிவுகளுடன் பெரும்பாலும் கட்டுமானக் கழிவுகள் சேர்க்கப் படுகிறது. ஆனால், டெல்லியில் 2010 ஆம் ஆண்டு அதற்குத் தனியாக ஒரு பராமரிப்பு கருவி , துவக்கத்தில் ஒரு நாளைக்கு 500 டன்கள் பதப்படுத்தப்பட்டது. பின்னர் பத்து மடங்கு அதிகம், தற்போது 5150 டன்கள் அளவுக்குச் செயல்படும் நிலை உள்ளது. மேலும் 2500 டன்கள் கழிவு சரி செய்யும் அளவில் மாற்றம் எதிர் காலத் தில் வரும் என எதிர் பார்க்கின்றனர். ஹரியானா மாநில குறுகிராம் பகுதியில் 1500 டன்கள் அளவுக்கும், ராஜஸ்தானில் 20%கட்டுமான கழிவு பராமரிக்கும்,300டன்கள் ஒரு நாளைக்குப் பராமரிப்பு மேற்கொள்கின்றனர்.
நம் தமிழ் நாட்டில் சென்னை மாநகரத்தில், கொடுங்கையூர், பெருங்குடி ஆகிய இடங்களில் இந்த மீள் சுழற்சி செய்யும் இயந்திரங்கள் நாள் ஒன்றுக்கு 300 டன்கள் கட்டுமானக் கழிவு பராமரிக்கின்றன.மொத்தம் 15 இடங்கள் மாநகராட்சி நிர்வாகத்தால் தேர்வு செய்து அங்குக் கட்டுமானக் கழிவுகள் கொட்ட அனுமதி தந்துள்ளது. ஆனால் பொதுமக்கள், ஒப்பந்த தாரர்கள், இது பற்றிய அக்கறை, சிந்தனை இல்லாமல் செயல்படுகின்றனர். இதனால் 2017-19 ஆம் ஆண்டுகளுக்கு இடையில் ரூபாய் 1.17 கோடி தொகை மாநகராட்சி நிர்வாகம் அபராதம் வசூல் செய்த தகவல், நிச்சயம் நம் குடிமக்களின் “சூழல் பாதுகாப்பு அலட்சியம் “ஆகியவற்றிற்குச் சான்று எனில் மிகையாகாது. 2013 ஆம் ஆண்டு மட்டும் சென்னை நகரில் இந்தக் கழிவுகள் 1.14 பத்து லட்சம் டன்கள் என்பது தகவல் ஆகும்.
இந்தியத் தேசியத் தூய்மை காற்று திட்டம்(NCAP), ஒன்றிய அரசு வகுத்த 27 செயல் குறிப்புகள், தெரு தூய்மைப் பணி, தூசி குறைப்பு, நீர் தெளிப்பான், காற்று தரக் கண்காணிப்பு சுத்திகரிப்பு நிலையம், மரம் நடுதல், நடைபாதை அமைத்தல், விழிப்புணர்வு, பயிற்சி என்ற பல பகுதிகள் உள்ளது. இதில் கட்டுமான பணி கழிவுகள் அகற்றுதல் செயல் பாடுகளுக்கு 2%நிதி மட்டும் ஒதுக்கப்பட்ட நிலை கவலைக்குரியது. குறிப்பிட்ட கழிவு பிரச்சினை தீர்வுகள் பெறக் குறைத்தல், மீள் சுழற்சி, மீள் பயன்பாடு பற்றிய கொள்கை, திட்டம், கட்டுமான நிறுவனங்கள், பொறியாளர்கள், விஞ்ஞானி, தொழிலாளிகள், போக்குவரத்து நிறுவனம்,பொதுமக்கள், உள்ளாட்சி அமைப்பு அலுவலர்கள் ஒருங்கிணைத்துத் தொலை நோக்கு பார்வை கொண்டு உருவாக்க அரசு முயற்சி செய்யவேண்டும்.இதில் ஒவ்வொரு கட்டுமான பணி கழிவுகள் மேலாண்மையில் அறிவியல் பூர்வ அணுகுமுறை இருப்பது அவசியம் ஆகும்.
பெருநகரங்களில், இந்த கட்டுமான கழிவு, மாசு, காற்று மாசு, போக்குவரத்து இடையூறு போன்றவை தொடர்ந்து இருந்து வரும் நிலையில், நம் நாட்டில் வளர்ந்து வரும் சிறு நகரங்களில், எதிர்காலத்தில் பல திட்டங்கள் உருவாகும் நிலை, வழிகாட்டுதல்கள் வர, அரசு, தொண்டு நிறுவனங்கள் முயற்சி செய்ய வேண்டும். பொதுமக்களுக்கும் போதிய விழிப்புணர்வு பெறச் சூழல் ஆர்வலர்கள் செயல்பட வேண்டிய நிலை இன்றியமையாதது.