தொடர் -13: சமகால சுற்றுசூழல் சவால்கள் – முனைவர். பா. ராம் மனோகர்
யானைகள் வாழ்விடம்! அழித்திட்ட மானுடம்!!
யானைகள் என்றால் பிரமிப்பு, கம்பீரம், காடுகள் வளர்ச்சி பெற உதவி செய்யும் ஒரு அரிய பிரம்மாண்ட வன விலங்கு, சிறு குழந்தைகள் முதல், பெரியவர்கள் வரை வியப்புடன் நோக்கி அதிசயிக்கும் அற்புத உயிரினம் அல்லவா!!? அழியும் அபாய நிலையில் உள்ள பாலூட்டி யானை நம் நாட்டில் திருவிழா, ஆன்மீக சடங்குகள், போன்ற நிகழ்ச்சிகளில் போற்றப்படுகின்றன. ஆனால் அவை காடுகளை விட்டு உணவு, நீர் தேடி அண்டை கிராமங்களில் புகுந்து விட்டால், மக்கள் துன்பங்கள் அடைவது ஒரு புறம்!அவை ஏன் காட்டை விட்டு வெளியே வருகின்றன!? என்பது பற்றி நாம் சிந்தனை செய்வதில்லை! அவர்கள் இடத்தில் நாம் இருக்கிறோம் என்பதை மறந்து விடுகிறோம். மனித இனம் இந்த இயற்கை, பூமி , காற்று, நீர், அனைத்தும் தனக்காக மட்டும் படைக்கப்பட்டவை என தொன்று தொட்டு சுயநலம் கொண்டு எண்ணிக் கொண்டிருப்பது ஒரு தவறான நடை முறை ஆகும்.
உலக முழுவதும் ஏறத்தாழ 45,000 முதல் 50,000 வரை காணப்படும் ஆசிய யானைகள் , பல நூற்றாண்டுகளாக தம் இயற்கை வாழிlடங்களை இழந்து வருகின்றன. காடுகள் அழிப்பு, சுரங்க தொழில், அணைகள் கட்டுதல், நெடும் சாலைகள் அமைத்தல், சுற்றுலா மையங்களில் கட்டிடங்கள், என மனித இனம் தம் பேராசைக்காக, யானைகளின் நடமாடும் நிலபரப்புகளை ஆக்கிரமிக்கும் போக்கு தொடர்கதையாகும்.
சமீபத்தில், கலிபோர்னியா பல்கலைக்கழக ஆய்வாளர்கள், உலகம் முழுவதும் வனவிலங்கு வாழிடங்கள், துண்டு, துண்டு ஆக பிரிந்து போய்விட்ட அவல நிலைகளுக்கு துல்லியமான காரணங்கள் அறிய முற்பட்டனர். ஆசிய நாடுகளில் யானைகளுக்கு ஏற்ற வாழ்விடம் பற்றி நூற்றாண்டு முன்னர் இருந்து வந்த நிலை, அவற்றை உள்ளூர் மக்கள் மேலாண்மை செய்து வந்த வழக்கம் ஆங்கிலேயர் காலனி காலத்தில் கூட தொடர்ந்து வந்திருக்கிறது. ஆனால் எவ்வகையில் மனித தாக்கம் காடுகளில் விலங்குகள் பாதிக்க செய்து வந்தது என்பதற்கு உரிய தரவுகள் தெளிவாக கிடைக்கும் நிலை இல்லை. அருங்காட்சியகங்கள் வேட்டையாடப்பட்ட விலங்குகளின் “அடைக்க ப்பட்ட மாதிரி பொம்மைகள் ” கொண்ட ஒரு பொழுது போக்கு பகுதியாக மட்டுமே இருந்தது. வரலாற்று பூர்வ தகவல் அங்கு ஆய்வாளர்களுக்கு கிடைக்கவில்லை.
ஆய்வாளர்கள், யானைகளுக்கு தேவையான நுண்ணிய சூழல் காரணிகள், உணவூட்ட தாவரங்கள் போன்றவை பற்றி அறிந்து கொண்டனர். எனினும் நம் ஆசிய யானை பல்வேறு சூழல் அமைப்புகளுக்கு ஏற்ற தகவமைப்பு பெற்ற விலங்குகள் ஆகும். வறண்ட காடுகள், புல்வெளி, மழை காடுகள் ஆகிய வெவ்வேறு சூழல் வாழிடங்களில் யானைகள் மகிழ்வாக வசிக்கும் சிறப்பு தன்மை பெற்றவை ஆகும். அவற்றின் வாழிட எல்லை சில நூறு கிலோமீட்டர் அளவு கொண்டு இருப்பது, தவிர்க்க முடியாதது, ஏனெனில்,மூன்று மீட்டர் உயரம், ஆறு மீட்டர் அளவு நீளம் கொண்டும்,6000 கிலோமீட்டர் எடை கொண்ட ஒரு மிக பெரிய விலங்கின் அன்றாட வாழ்க்கை நடைமுறை மிக சாதாரண மான ஒன்று அல்ல. ஒவ்வொரு நாளும் 200 கிலோ உணவு,200 லிட்டர் நீர் குடிக்கும் இந்த விலங்குகள் பற்றிய உண்மைகள் நம் ஆர்வத் திற்கும் பிரமிப்புக்கும் மட்டும் உட்பட்டது அல்ல, அவற்றின் பாதுகாப்பு, காடுகளில் யானைகளின் முறையான இனத்தொகை பராமரித்தல் பற்றிய சிந்தனை தூண்டுவதற்கு உகந்தது என்பதை நாம் உணரவேண்டும்.
ஆய்வுக் குழுவினர் யானைகளுக்கு நல்ல வாழிடம், எதிர்கால பருவ கால மாற்றங்களுக்கு உரிய தகவமைப்பு அமைவதற்கு, ஆராய்ச்சி மேற்கொண்டு வந்தனர்.மேரிலாண்ட் பல்கலைக்கழகம் தயாரித்த நிலப் பயன்பாட்டு ஒருங்கிணைப்பு செயலி (LAND USE Harmonization -LDH 12) மூலம் ஆய்வுக்குழு 850 B C ஆண்டுகள் முதல் 2015 ஆம் ஆண்டு வரை, 13 நாடுகளில் சென்று யானைகள் மற்றும் மனிதர்கள் நில பயன்பாடு பற்றிய தகவல்கள் சேகரித்தனர். பங்களா தேஷ், பூடான், சைனா, இந்தியா, இந்தோனேஷியா, லாவோஸ், மலேசியா, மையன்மர், நேபாளம், ஸ்ரீலங்கா, தாய் லாந்து, வியட்நாம், கம்போடியா ஆகிய நாடுகள் யானைகள் இயற்கையாக தம் வாழிடங்களில் வசிக்கும் பகுதி ஆகும்.இங்கு யானை மனித மோதல் நிகழ்விடங்கள் தவிர்க்க பட்டது. மனித தாக்கம் குறைவு பகுதி, குறிப்பாக மரம் வெட்டும் காடுகள், ஆய்வுக்கு உட்படுத்த பட்டது.
கருவி கற்பிக்கும் அல் காரிதம் முறை (MACHINE LEARNING ALGORITHM) பயன்படுத்தி வரைபடம்மூலம்,, ஆய்வு குழு , நிலங்களை நம் மனித சமுதாயம் எவ்வாறு, வெவ்வேறு முறைகளில் பயன்படுத்தி வந்துள்ளது என்பதை ஆராய் ந்தனர். தொழில் புரட்சி ஆரம்பம் ஆனது முதல், காலனி ஆதிக்க காலம் தொடர்ந்து, தற்போது 20ஆம் நூற்றாண்டு கடந்த வரையில் யானை போன்ற விலங்குகள் வாழிடம், நடமாட்ட எல்லை பகுதி 64% சதவீதம் குறைந்துள்ள நிலை தெளிவாகியுள்ளது.
குறிப்பாக மூன்று மில்லியன் சதுர கிலோ மீட்டர் பரப்பளவு, பகுதியில் தோட்டங்கள், தொழிற் சாலைகள்,நகர்புற வளர்ச்சி போன்றநடவடிக்கைகள் காரணமாக வன பரப்புகளில், மனிதர்களின் ஆக்கிரமிப்பு அதிகம் ஆகிவிட்டது.இந்தியா மற்றும் சீனா ஆகிய நாடுகளில் 80% சதவீதம் இந்நிலை உள்ளது என்பது அதிர்ச்சி ஆகும்.
தென் கிழக்கு ஆசியாவின், மத்திய தாய் லாந்து நாட்டில் மனித நடவடிக்கைகள், குறிப்பாக விவசாயம் யானை வாழ்விட பகுதிகளை குறைத்துள்ளது.1700 ஆம் ஆண்டில் யானைகள் 40%சதவீதம் நிலபரப்பினை பயன்படுத்தி வந்த நிலையில், தற்போது 2015 ஆம் ஆண்டு 7%கிடைப்பது அரிதாகிவிட்டது.
மேலும் மனிதர்கள், காட்டு யானைகளிடம் நடந்து கொள்ளும் முறை, அவற்றின் நடத்தை விரும்பத்தகாத மாறு பாடுகள் ஏற்படும் நிலை உருவாக காரணம் ஆகும். சுற்றுலா பயணிகள் வன விலங்குகளை தொலைவில் இருந்து ரசித்து மகிழ்வதை மறந்து அருகில் செல்லுகையில் விபரீத விபத்து, மனித உயிரிழப்புகள் நேரிடுகின்றன. குறிப்பாக சத்திய மங்கலம் -மைசூரு வனத்தின் நடுவில் உள்ள சாலையில் இத்தகைய நிகழ்ச்சிகள் ஏராளம்.
யானைகளுக்கு பாதுகாப்பு தரும் காடுகள் உள்ளது என்பதை விட அவற்றின் நடமாட்டத்திற்கு அவசியமான காடுகளை சுற்றியுள்ள, இயற்கை பகுதியில் மனித ஆக்கிரமிப்பு, செயல்பாடுகள் போன்றவற்றை தவிர்க்க முயற்சி செய்யும் நிலை வரவேண்டும். யானைகளின் உண்மையான தேவைகள், நிலபரப்பு, உணவு, நீர் ஆதாரங்கள் அறியப்பட்டு அதற்கு உகந்த திட்டங்கள் மேற்கொள்ளவேண்டும். ஆஸ்கர் விருது பெற்ற யானை குட்டிகள் திரைப்படம் கண்டு மகிழ்ச்சி கொள்வது ஒரு புறம் இருந்தாலும், அவற்றை பராமரிப்பு செய்தவர்கள் பாராட்டப்படுவது வரவேற்கத்தக்கது. எனினும் “யானை வசிக்கும் பகுதி, நில மேலாண்மை, உள்ளூர் வன மக்கள், பழங்குடி இனத்தவர் , ஒருங்கிணைந்த, முழு அக்கறை கொண்ட (வன உயிரினங்கள் மற்றும் மனித இனம் இரண்டும் பாதிக்காத நிலையில் )திட்டம் நிறைவேற்ற அரசு த் துறைகள் முடிவு எடுக்க வேண்டும். அப்போது தான், நம் காடுகளில் வசிக்கும் ஆசிய யானை, அரிய உயிரினங்கள் ,வனவிலங்குகள் இனத்தொகை சீராக பராமரித்து இயற்கை சூழல் பாதுகாக்க இயலும்.