நூல் அறிமுகம்: த. போ. விஜய கோஷ் வங்கத்தில் எழுதிய *சமரம்* நாவல் – கருப்பு அன்பரசன்
சமரம்
வங்கம் மூலம் த. போ. விஜய கோஷ்
தமிழில் ரவிச்சந்திரன் அரவிந்தன்
சப்னா வெளியீடு
இயற்கையின் அனைத்து உன்னதங்களும் மேன்மைகளும் அழகுகளும் கண்ணிமைக்கும் நேரத்தில் மாறிக்கொண்டே இருக்கிறது. வறியவர்களை உழைப்பாளிகளை எளிய மக்களை கருத்தாலும் உடல் பலத்தாலும் வஞ்சகததாலும் உழைக்காமலேயே ஏமாற்றி வரும் ஒரு சிறு கூட்டம் பெரும் கூட்டத்தை அடக்கிக் கொண்டே இருக்கிறது அதிகாரத்தின் மஞ்சத்தில் படுத்துக் கொண்டு. அனுபவித்துக்கொண்டிருக்கும் சுக வாழ்க்கைக்கு எந்தப் பக்கத்திலிருந்தும் தீங்கு வராமல் கவனமாக, எச்சரிக்கையாக, நேரடியாக, மறைமுகமாக அதிகாரத்தில் இருந்துகொண்டு ஜனநாயகத்தின் பேரில் ஒரு பெரும் கூட்டத்திற்கு எதிராக சர்வாதிகாரப் போரை தினமும் நிகழ்த்திக் கொண்டிருக்கிறது. அவர்களின் ஜனநாயகத்திற்கு ஆபத்து என்றால் மஞ்சத்தை எவருக்கும் பங்கு போட்டுக் கொடுக்கக்கூட அது ஒரு நாளும் தயங்கியது கிடையாது, இனி தயங்கவும் தயங்காது.
அந்த சிறு கூட்டத்திற்குத் தேவை என்பதெல்லாம் அதிகாரமும், ஏமாற்றி சேர்த்து வைத்திருக்கும் செல்வங்களை காத்து நிற்பது இன்னும் பெருக்குவது மட்டுமே. அதற்காக அது எந்த எல்லைக்கும் செல்லத் தயாராகவே இருந்து கொண்டு எப்பொழுதும். இப்படி ஒரு சிறு கூட்டத்தால் காலமெல்லாம் வழிவழியாக ஏமாற்றப்பட்டு வஞ்சிக்கப்பட்டு கொலை செய்யப்பட்டு பிணமாக்கப்பட்டு வரும் பெருங்கூட்டம் நிமிர்ந்து நின்று அதிகாரத்தை எதிர்த்துக் கேள்விகேட்க முற்படும் பொழுது; திட்டமிட்டே செயற்கையாக உருவாக்கப்பட்ட ஏற்றத்தாழ்வு நிறைந்த இந்தச் சமூகத்தை மாற்றம் காண ஓரணியில் திரளும் பொழுது; அவர்களை சாதியின் பெயராலும் மதத்தின் பெயராலும் இனத்தின் பெயராலும் இன்னும் பிற அடையாளங்களின் பெயரால் பிரித்து சிதைத்து, இப்படியெல்லாம் நீங்கள் இருப்பதற்கு காரணம் முற்பிறவி, பாவ-புண்ணியம், தர்மம், அதர்மம், எல்லாமும் கடவுள் செயல், இருப்பவனும் இல்லாதவனும் கடவுளின் படைப்புகள், ஏற்றத்தாழ்வுகளை மாற்ற முடியாது.. அஞ்சு விரலும் ஒன்றாகவா இருக்கிறதா என்கிற கருத்துக்களை ஏமாந்தவரின் மூளைக் குள்ளும் இருதயத்திற்குள்ளும் வலுவாக ஆழமாக பரப்பி
தங்களின் சுகபோக வாழ்க்கைக்கு சிறிதேனும் தீங்கு வராமல் பாதுகாப்போடு வாழ்ந்து வருகிறார்கள்..
இவைகளையும் மீறி ஒடுக்கப்பட்டவர்கள் ஏமாற்றப்பட்டவர்கள் வஞ்சிக்கப்பட்டவர்கள் அறிவு சார்ந்தும் உடல் உழைப்பு சார்ந்தும் அணி திரளும் பொழுது, அங்கே தேசப் பாதுகாப்பின் பெயரில்.. தேசப்பற்றின் பெயரில் செயற்கையாக யுத்த முஸ்தீபை பேச வைத்து அணி திரட்டப்பட்டு இருக்கும்
ஒடுக்கப்பட்டவர்கள் மீது அரச அதிகாரத்தின் துணைகொண்டு அரச பயங்கரவாதத்தின் கடும் தாக்குதலை தொடுப்பது.. கொலைகளைச் செய்வது.. செய்திடும் கொலைகளை நியாயப்படுத்துவது.. கொலைகளுக்கான அங்கீகாரத்தை ஏமாற்றப்பட்ட மக்களின் நாவிலிருந்தே குயுக்தியாகப் பெறுவது. இதுவே பன்னெடுங்காலமாக குறுநில மன்னர்கள், ராஜாக்கள், ஏகாதிபத்திய அரசுகள், மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட குடியரசுகளாக.. அவர்களின் தொடர்ச்சியாக இன்றளவும் இந்தியாவில் அதிகார மமதையில் ஆட்சியில் அமர்ந்து கொண்டு ஜனநாயகத்தின் பெயரில் உழைக்கும் மக்களுக்கு எதிரான, ஒடுக்கப்பட்ட மக்களுக்கு எதிரான, எளிய மக்களுக்கு எதிரான சர்வாதிகாரத்தை நிகழ்த்தி வேட்டை ஆடிக் கொண்டிருக்கிறார்கள் எல்லோரையும்.
எல்லாமும் மாறும் என்பதனை இயற்கை நமக்கு தினம் தினமும் வழிகாட்ட; எளிய மக்களின் உழைப்பால் வலுத்தவர்களின் வஞ்சத்தால் நிர்மாணிக்கப்பட்ட இந்த ஏற்றத்தாழ்வு மிகுந்த சமூகத்தையா புரட்டிப் போட முடியும் என்பதற்கு உலகம் முழுவதிலும் பல நாடுகளின் வரலாறுகள் நமக்கு ரத்த சாட்சியாக நின்றுகொண்டிருக்கிறது.. அப்படியான ஒரு மாற்றத்தை இந்தியா முழுவதிலும் நிர்மாணித்திட கம்யூனிஸ்டுகள் முனைந்த பொழுது வங்கத்தில் நடந்த நிஜங்களை மெய்யான உண்மைகளை வீரம் செறிந்த போராட்டங்களை.. வீதிகள் அதிர்ந்த ஊர்வலங்களை… முறுக்கேறிய முஷ்டிகளை மடக்கி முழங்கிட்ட முழக்கங்களை..
பூமி அதிர கருத்த பாதங்களை உதைத்து முன்னேறிய, அலை அலையாய் திரண்ட விவசாயிகளின் கருப்பேறிய கரங்களினால் உயர்த்தப்பட்ட செம்பதாகைகளால் விண்ணும் சிவப்பேறிய ரத்தச் சூட்டின் நாட்களை.. அதிகாரத்தால் கொலை செய்யப்பட்டவர்களை.. ஆட்சியாளர்களின் துப்பாக்கிச்சூட்டில் இறந்து போனவர்களை
பட்டினியால் செத்து அழிந்த பலநூறு உயிர்களை.. கொஞ்சமும் அழுக்கில்லாத கம்யூனிஸ்டுகளை.. அவர்களின் சமரசம் இல்லாத தியாகங்களை “சமரம்” நாவல் நமக்கு உணர்ச்சிப் பெருக்கோடு கொடுத்திருக்கிறது.
வாசித்து முடித்தவுடன் இந்த நாவல் சாதாரண வாசகனை யோசிக்க வைக்கும்.. வாசிக்கும் சிவப்பு சிந்தனை கொண்டவர்களின் உடலுக்குள் வீரம் மிகுந்த இளம் சூடான புது ரத்தத்தைப் பாய்ச்சும்.
வங்க மொழியில் த.போ.விஜய் கோஷ் எழுதியிருக்கும் உணர்ச்சி மிகுந்த இந்த நாவல் முதலில் மலையாளத்தில் மொழிபெயர்க்கப்பட்டு பிறகு அதனை கடும் முயற்சியினால் 2017ல் மலையாளத்திலிருந்து எழுத்தாளர் ரவிச்சந்திரன் அரவிந்தன் அவர்கள் எளிய வார்த்தைகளைக் கொண்டு தமிழ் மண்ணிற்கு கொடுத்திருக்கிறார்.
தமால், அவன் ஒரு இளம் கம்யூனிஸ்ட்..
மனதில் ஏந்திய லட்சியத்திற்காக கடைசி வரையிலும் உழைக்கும் மக்களின் வாழ்க்கைத்தரம் மேம்படுத்துவதற்காக வஞ்சகமாக கை மாற்றப்பட்ட சுதந்திரத்தின் ஜனநாயகத்தின் பெயரில் நிகழ்த்தப்பட்ட, பெரும் சுரண்டலை மட்டுமே சாசுவதமாக மாற்ற முனைந்து கொண்டிருக்கும் ஆட்சி அதிகாரத்திற்கு எதிரான பெரும் போராட்டத்தை எளியவர்களை தொழிலாளர்களை விவசாயிகளை இளைஞர்களை அணிதிரட்டி தலைமையேற்று நிகழ்த்திக் கொண்டிருக்கும் பல ஆயிரக்கணக்கான கம்யூனிஸ்டுகளின் அடையாளம் அவன்.
தங்களின் பிறப்பே எளிய ஏழை மக்களை ஒடுக்கப்பட்டவர்களை தொழிலாளர்களை விவசாயிகளை அடக்கி ஆளத்தான் என்கிற மமதையில்.. அனுபவித்துக் கொண்டிருக்கும் சுக வாழ்க்கைக்கு பங்கம் வந்து விடாமல் தம் சந்ததிகளுக்கும் கொண்டு போகவேண்டும் என்கிற பேராசையில் ஆட்சி அதிகாரத்தின் துணைகொண்டு கொலை செய்வதற்கும் அஞ்சாத சிறு கூட்டத்தின் அடையாளமாக இருந்திடும் ஜெய்சங்கர் என்பவனால் ஒரு இரவுப் பொழுது கொலை செய்யப்படுகிறார் தமால்.
இந்த நாவலை வாசிக்கும் பொழுது தமாலின் கொலை நிகழ்த்தப்படும் அந்தக் கணத்தில் தமிழகத்திலே ஆட்சி அதிகாரத்திற்கு எதிராக.. தினம் தினமும் வகை வகையான சுரண்டல்களை நடத்திக் கொழுத்துக் கிடக்கும் சமூகத்திற்கு எதிராக.. சமூக விரோதிகளுக்கு எதிராக.. சாதிவெறிக்கு எதிராக..
மூடப்பழக்க வழக்கங்களுக்கு எதிராக.. விவசாயிகளை விவசாயத் தொழிலாளர்களை.. ஆலைத் தொழிலாளர்களை அரசு ஊழியர்களை இளைஞர்களை மாணவர்களை அணிதிரட்டும் போதிலே களப்பலியான கம்யூனிஸ்டுகள் பலர் நமக்குள் வந்து நிழலாடுவார்கள்.
எதார்த்த வாழ்வு என்ன என்பதையே அறியாமல் பெரும் பகல் கனவில் வாழும் கூட்டத்தில் இருப்பவர்களை, ஒரு கம்யூனிஸ்ட் அவர்களை தன்வயப்படுத்திட; அதற்குரிய வாழ்வுதனை தன்னிடத்தில் ஏற்படுத்திக் கொள்கிறான்.. தன்னலம் கருதாமல் ஒளிபொருந்திய நேர்மை மிகுந்த ஒரு வாழ்வினை வாழ்கிறான் என்பதற்கு முன்னுதாரணமாக தமால்.. அப்படியான வாழ்முறையால் தன்னை அறியாமல் இயல்பாகவே ஈர்க்கப்பட்டு தமால் தலைமறைவு வாழ்க்கை வாழ்ந்திடும் பொழுதினில் அவருடைய பணிகளை மிகச் சிறப்பாக மேற்கொண்டு வரும் அழகேசன்.
தமாலின் போராட்ட குணத்தாலும், எளிய மக்களின் பால் கொண்ட பேரன்பாலும்.. அதிகாரத்தை நெஞ்சுரத்தோடு எதிர்த்து நிற்கும் தைரியத்தாலும் திரும்பிப் பார்த்திட்ட அழகேசன் தங்கை நந்திதா.. அழகேசனுக்கு தெரியாமல் எப்படி ஒரு கம்யூனிஸ்டாக பரிணமிக்கிறார்.. தமால் மீது தனக்கு ஏற்பட்டிருக்கும் ஈர்ப்பு என்பது காதல்தானா என்பதை உணர்ந்தும் உணர முடியாமலும் தவிக்கும் உணர்ச்சி மிகுந்த பெண்ணாக..
கம்யூனிஸ்டுகளின் மீது திட்டமிட்டு பரப்பப்படும் பொய்யால் ஈர்க்கப்பட்டவர் அழகேசன்-நந்திதா இருவரின் அப்பா..
கம்யூனிஸ்டுகளோடு தன் மகன் தொடர்பு வைத்துக்கொண்டால் தன்னுடைய வேலைக்கே பிரச்சினை ஆகிவிடும் என்று நினைக்கும் பல அரசு ஊழியர்களின் அடையாளமாக அவர். தான் வாழும் காலம், சமூகம் சந்தித்து விடும் நெருக்கடியான சூழலில் கம்யூனிஸ்டுகளின் செயல்பாட்டில் நம்பிக்கை கொண்டவராக மாறுகிறார் என்பதற்கு உதாரணமாக நாவலில்.
அனுபவச் செறிவு நிறைந்த கம்யூனிஸ்ட் தன் வாழ்வை எப்படி அமைத்துக் கொள்வார்.. சந்திக்க நேரிடும் பிரச்சனைகளை முன்னும் பின்னும் ஆராய்ந்து இயக்கத்தின்பால் நம்பிக்கையுடன் தனிமனித ஈர்ப்புடன் அணிதிரண்டு நிற்பவர்களை சரியான திசைவழியில் எப்படி ஒருங்கிணைப்பது அவர்கள் அனைவரையும் அரவணைத்து ஆற்றல் மிகுந்தவர்களாக மாற்றுவது என்பதினை முன்னத்தி ஏராக இருக்கும் தோழர் ஜெகத் வல்லப் வழியாக நாவலை நகர்த்திச் செல்வார்.
நாவல் வங்கத்தில் கம்யூனிஸ்டுகள் ஐக்கிய முன்னணி தந்திரத்தை பயன்படுத்தி ஆட்சியிலிருந்த முதல் காலத்திலும், ஆட்சி கவிழ்க்கப்பட்ட பிறகு ஜனாதிபதி ஆட்சி அறிவிக்கப்பட்ட சூழலிலும்; இந்திய சீன, இந்திய பாகிஸ்தான் போர் நடைபெற்ற காலங்களில்.. விலைவாசி உயர்த்தப்பட்டு கடும் பஞ்சத்தை வங்கம் சந்தித்தபோது கம்யூனிஸ்டுகள் நடத்திய வீரம் செறிந்த போராட்டங்களை.. ஐக்கிய முன்னணியால் நடத்தப்பட்ட ஆட்சியின் பொழுது நிலச்சுவான்தார்களிடமிருந்து பறிமுதல் செய்யப்பட்ட நிலங்கள் ஏழை விவசாயிகளுக்கு வழங்கப்பட்டது, பல தொழிற்சாலைகளில் தொழிலாளர்களுக்கான உரிமைகள் மீட்டெடுக்கப்பட்டது, ஆட்சியில் இருப்பவர்களின் அதிகாரத்தின் ஏவல் நாயாக இருந்து காவல்துறையின் வாய் கட்டப்பட்டது.. இப்படியான காலங்களில் நாவல் புனையப்பட்டு இருக்கிறது.
1946 இல் நடைபெற்ற கப்பற்படை புரட்சி எப்படி காங்கிரஸ்காரர்களால், முஸ்லிம் லீக்கால் காட்டிக் கொடுக்கப்பட்டது.. போராட்டம் அடுத்த கட்டத்தை நோக்கி நகரும் என்றால் இந்தியா முழுவதிலும் அது கம்யூனிஸ்ட்டுகளின் கைகளுக்கு சென்று விடும் என்கிற அச்சத்தால் காந்தி, வல்லபாய் பட்டேல் உள்ளிட்ட காங்கிரஸ் தலைவர்கள் வெளிப்படையாகவே போராடுபவர்களை கண்டித்தது. பிரிட்டிஷ் ராணுவத்திற்கு எதிராக ராணுவத்தில் இருக்கும் இந்திய வீரர்களும் மும்பையில் இருக்கக்கூடிய தொழிலாளிகளும் பொதுமக்களும் வீரம் செறிந்த போராட்டத்தை நிகழ்த்திக் கொண்டிருக்கிறார்கள். கப்பற்படை போராட்டம் இந்தியா முழுவதிலும் மிகப்பெரிய அளவிற்கு பேசப்படுவதாக மாறிவரும் சூழலில் போராட்டத்தை கைவிடச் சொல்லி வலியுறுத்தியது காங்கிரஸ் தலைமை. போராடக்கூடிய இந்திய ராணுவத்தினரை பிரிட்டிஷ் அரசிற்கு உண்மையாக கட்டுப்பட்டு இருக்க வேண்டும் அதுதான் தன்னை ஆளும் அரசுக்கு ராணுவம் செய்யக்கூடிய உண்மையான மரியாதை என்று வலியுறுத்தியது.. அரச தர்மம் பேசியது காங்கிரஸ் தலைமை அன்று
போராடும் போராளிகளுக்கு எதிராக. இப்படியான நிகழ்வுகள் எப்படி வரலாற்றில் இருந்து மறைக்கப்பட்டு இருக்கிறது என்பதை நாவலுக்குள் சொல்லி இருக்கிறார் கதை நகரும் சூழலில் நாவலாசிரியர்.
நாவலின் கதையோட்டத்திற்கு நான் செல்ல விரும்பவில்லை.. அப்படி சென்று விட்டால் நாவலை வாசிக்கும் உற்சாகம் உங்களுக்கு குறைந்துவிடும்.. நாவல் நடைபெறும் கதைக்களத்தை மட்டும் உங்களுக்கு அறிமுகப்படுத்தி இருக்கிறேன்..
நாவலின் முக்கிய கதாபாத்திரங்கள் ஷிகா, அசோக், சதாசிவம் டாக்டர், சுகுமாரன், காவல்துறையின் தடியடிக்கு முதல் பலியான சாஹேப்.. ஹாரிபத்
கம்யூனிஸ்டுகள் நடத்திடும் பொதுப் பள்ளியின் தாளாளர், அழகேசன்- நந்திதா இருவரின் அப்பா அம்மா, செருப்புத் தைக்கும் மக்கள் அடித்தாடும் பறை வழியாக.. அவர்களின் வாக்கு மூலங்களாக அவர்களின் அனுபவத்திலிருந்து பேசப்பட்ட வார்த்தைகளின் வழியாக கம்யூனிஸ்டுகளின் திட்டமிட்ட போராட்டங்களும், தலைமறைவு வாழ்க்கைகளும், தியாகங்களும் பேசப்பட்டிருக்கிறது.
கம்யூனிஸ்ட் கட்சி பிளவுபட்டது எதன் காரணமாக என்பது பேசப்பட்டிருக்கிறது. கம்யூனிஸ்ட் கட்சியில் இருக்கும் சீர்திருத்தவாதிகள் எப்படிப்பட்டவர்களாக இருந்தார்கள் சித்தாந்த ரீதியாக தவறியவர்கள் எங்கு போய் யாருக்கு ஆதரவாக என்பதும் அதி தீவிரவாதிகள் எங்கு இருக்கிறார்கள் என்பதும் சுட்டிக் காட்டப்பட்டிருக்கிறது நாவலின் வழியாகவே.
அவசியம் வாசியுங்கள். ஒரு க்ரைம் நாவலை போல் தொடங்கி இருப்பார்.. போகப்போக நிஜம் நிறைந்த ரத்தம் பிசுபிசுக்கும் வரலாற்று உண்மை சம்பவங்களுக்குள் உங்களை அழைத்துச் சென்றுவிடுவார் நாவலாசிரியர்.
தமால் சுட்டு படுகொலை செய்யப்பட்டு
கீழே விழுந்து தன் உயிர் மூச்சு நின்று போகும் அந்த கடைசி நிமிடமதில்
அவன் கரம் நீட்டி மடக்கி வானத்தை நோக்கி உயரும்.. அப்படி உயரம் போது
அவனுடைய கரங்களை பற்றிக்கொள்ள வாசிக்கும் நமது கரங்களும் துடிக்கும்..
எனக்கு என்னவோ
அந்த நேரத்தில் கருப்பு கருணா நினைவுக்குள் வந்து போகிறான்.
“ஐ அம் எஸ் கருணா..
ஐ அம் மெம்பர் ஆப் தி
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் பார்ட்டி..”
கருணாவின் மூச்சு நின்று போகிறது.
“நேசிப்பது என்றால் இந்த மாதிரி
ஆட்களைதான் நேசிக்க வேண்டும்.
இவர்கள் உயிரோடு இருக்கும்போது
எப்படி வாழ வேண்டுமோ அப்படி வாழ்கிறார்கள்.
இறந்து போனாலும் இவர்கள் வாழ்கிறார்கள்.
இவர்களை நேசித்தால்
அந்தக் காதல்
ஒருபோதும் அழியாது”.. ஷிகா.
கருப்பு அன்பரசன்