நூல் அறிமுகம்: சமயவேலின் ‘கண்மாய்க்கரை நாகரிகம்’. கோ.வசந்தகுமாரின் ‘அரூப நர்த்தனம்’ – ச.வின்சென்ட்
கண்மாய்க்கரை ஆட்டங்களும் அரூப நர்த்தனங்களும்
சமயவேலையும் வசந்தகுமாரனையும் ஒன்றாகச் சேர்த்து விமர்சனம் செய்வதற்கு இருவரிடமும் என்ன ஒற்றுமைகளைக் கண்டீர்கள் என்பன போன்ற கேள்விகளுக்குப் பதில் சொல்ல இது ஓர் ஒப்பாய்வுக் கட்டுரை இல்லை. ஆனால் இரண்டு கவிஞர்களின் கவிதைத் தொகுப்புகளையும் ஒன்றாக அறிமுகத்திற்கு எடுத்துக் கொண்டதற்கு ஒரு காரணம் இருக்கத்தான் செய்கிறது.
இன்று தமிழில் நவீனத்துவக் கவிதைகள் எழுதுகிறவர்கள், பின் நவீனத்துவக் கவிதை எழுதுகிறவர்கள், பின் பின் நவீனத்தில் சோதனைக் கவிதைகள் என்றெல்லாம் தங்களை அடையாளப்படுத்திக் கொண்டிருக்கும்போது, நான் உண்டு என் அனுபவம் உண்டு என்று இப்படிப்பட்ட மாயவலைகளில் சிக்கிக் கொள்ளாமல் எழுதுகிறவர்கள் இவர்கள். நான் இதை உணர்கிறேன், எனது மனம் இப்படிச் சொல்கிறது. அதை நான் கவிதையாகச் சொல்கிறேன் என்று கூட இவர்கள் சொல்லிக் கொள்ளமாட்டார்கள். இவர்களிடம் புதுவகையான, சிக்கலான படிமங்கள் இருக்காது, குறியீடுகளை இவர்கள் தேடமாட்டார்கள். இவர்களிடம் உள்ளது இந்தப் பொதுத் தன்மைதான்.
முதலில் கவிஞர் சமயவேலின் கண்மாய்க்கரை நாகரிகம் என்ற கவிதைப் படைப்பை எடுத்துக் கொள்வோம்.
நீங்கள் கிராமத்துக் குளக்கரையில் உட்கார்ந்திருக்கிறீர்கள். இன்னும் குளங்கள் இருக்கின்றன. அவற்றில் உட்காருவதற்குக் கரைகளும் இருக்கின்றன என்பது ஓர் அனுமானம். என்ன பார்ப்பீர்கள்? தண்ணீர் இருக்கிறது. ஓரத்தில் புதர்கள். ஒரு சில மரங்கள்; என்ன மரங்கள்? எப்போதாவது வந்துஅமரும் பறவைகள்; என்ன பறவைகள்? யாருக்குத் தெரியும். வேறு என்ன? அவ்வளவு தான். காற்றாட உட்கார்ந்து விட்டு இருட்டுவதற்கு முன்னர் எழுந்துவிடுவீர்கள். நம்மால் முடிந்தது அவ்வளவு தான்.
ஆனால் இந்தக் கவிஞர் முன் கண்மாய்க்கரையில் எத்தனை காட்சிகள் விரிகின்றன? நீர்ப்பரப்பு சிற்றலைகளாய்ச் சுருளுகின்றது. துள்ளி வரும் கெண்டையைப் பிடிக்காமல் ஏமாறும் புள் பரவசத்துடன் பறந்து போகிறது. கரம்பையைத் தொடும் அலைகள் இவர் கால்களையும் நனைக்கின்றன. அந்தி ஒளியில் தீப்பிடிக்கும் நீர்ப்பரப்பு, துவைத்த துணியைத் தோளில் போட்டு நிற்கும் பெண் – சிலைபோல,- செம்மறியாடுகளின் கண்களில் ஒளிரும் மரகதப்பச்சைப் பளிங்குப் புள்ளிகள், மந்தைப் புளுக்கை வாசம் (!) இவை எல்லாம் உட்கார்ந்திருக்கும்போது காணக் கிடைப்பவை. எழுந்து இச்சி மரத்தில் சாய்ந்தாயிற்று. இப்போது துணிவெளுக்கும் ஆண் பெண்கள் வெள்ளாவி எல்லாம் தெரிகின்றன. இப்போதெல்லாம் இந்தக் காட்சி தெரியாது. எந்திரம்தான் தெரியும். இச்சி மரமும் தெரியாது. புள்ளும் தெரியாது; கூகுளில் தேடவேண்டும்.
கண்மாய்க் கரையில் இருந்தால் காசுக்கரட்டி பார்க்கலாம், நேற்றுப்பெய்த மழையில் இன்று முளைத்த குடைக்காளான்களைப்பார்க்கலாம். அவை வீட்டிலும் சமையலாகின்றன. சொடக்குத் தக்காளிச் செடியின் மணக்கும் முத்துப் பழங்கள், மண்ணில் ஆட்டம்போடும் சிறார் கூட்டம், தியானம் செய்யும் கொக்குகளும் காக்கைகளும், கோடையில் வறண்டுபோன கண்மாயில் இளைஞர்களின் ஆட்டம், சின்னக்குருவம்மாவின் ஓலைப்படகு விளையாட்டு, பொற்கொல்லனின் கைவண்ணம்போன்ற புளியம்பூ, மஞ்சள்பூ பூசிய கடுகுச்செடி, கருநிற மூளைகளாய் மஞ்சனத்திப் பழங்கள்—எத்தனை விதமான விபரங்கள்! கண்மாய்க்கரையில் மனிதருக்கும் குறைவில்லை. துவைத்தவேட்டியைக் குடையாகப் பறக்கவிடும் ஆதிமூலம், மழைக்காக ஏங்கும் குருசாமி அய்யா, முதல் கல்லூரி மாணவி வேணி வரையில் சுரைக்காயைக் காக்கும் தாத்தா முதல் மடை திறக்கும் குடும்பர் வரையில், சாவதற்கென்றே கண்மாய்க்கரைக்கு வந்த பால்பாண்டி முதல் எல்லாம் போனபிறகும் ’கம்மாத்தண்ணி இருக்கும் வரை இருப்போம்’ என்று சமாதானம் சொல்லும் மாமா வரையில் மனிதர்கள், கண்மாய்க்கரைக்காரர்கள்.
எத்தனை நாளைக்கு? கண்மாயில் தண்ணீர் வற்றுகிறது, தவளைகள் தற்கொலை செய்துகொள்கின்றன. வடக்கே வந்த பெரிய மில் நீரைக் குடித்துவிட நீர்வருவதில்லை. கிடங்குகளும் வேலிக்கருவேல் முள்ளுக்காடும் என ஆகிப்போகிறது கண்மாய்.. இவ்வாறு கவிஞர் சமயவேல் ஒரு சமுதாய வரலாற்றையே படமாய்ப் பிடித்துக் காட்டிவிட்டார். இன்றில்லாமல் போய்விட்ட அந்தக் கண்மாய்க்கரை நாகரிகத்தை ஏக்கத்துடன் வாசிக்கத்தான் முடியும்..
சமயவேலின் குட்டிக் கவிதைகள் இயற்கையின் மெய்நிலைகளை அவற்றின் இன்றைய சரிவுகளை ஆதுரத்துடன் சொன்னால் வசந்தகுமாரனின் குறுங்கவிதைகள் காதலைச் சொல்கின்றன. தனிமனித அவலங்களைச் சுட்டிக்காட்டுகின்றன. காதலை ஒரு வரியிலும் சொல்லலாம், ஒரு காப்பியமாக்கவும் செய்யலாம். நெடுங்காலமாய் பலரும் பாடிவரும் காதல் கவிதைகளை விட்டுவிட்ட மற்ற கவிதைகளைப் பார்ப்போமே!
மனிதர்கள் இரட்டை முகம் கொண்டவர்கள். புகைப்படத்திற்கு என்று ஒருமுகம், வெளி மனிதர்க்குக் காட்டுவதற்கு என்று அந்த முகம்; ஆனால் உள்ளே இருப்பது? தனிமனித நிலையை – மனத்தைக் காட்டும் கவிதைகள் சில; கடவுளாகப் பிறந்து பாவம் செய்து பாவம் செய்து மனிதராகத் தேய்ந்து போகிறோம். மனிதன் தன்னை அறியாமல் செய்த குற்றமும் தீமை விளைவிக்கும். காலில் இடறிய கல்லைத் தூக்கிப் புதரில் எறிந்தாலும் புதரிலுள்ள காட்டுப் பறவையின் மேல் பட்டால் வலிக்கத்தானே செய்யும்? துன்பங்களை அனுபவிக்காதவர் யார்? எல்லாத் துன்பங்களுக்கும் மருந்து வேண்டுமா? கிடைக்குமா? சிலர், கவிஞரைப் போல, காயங்களால் சுவாசிக்கிறவர்களும் இருப்பார்கள்- துன்பமே உயிர் மூச்சாய். வெற்றியைத் தேடித்தான் அனைவரும் ஓடிக்கொண்டிருக்கிறோம். வெற்றி நிழலா? நிழலையா தேடி அலைகிறோம்? வெற்றிக்கோட்டை அவன் தொடுவதற்கு முன் அவன் நிழல் அதனைத் தொட்டுவிடுகிறதாமே? கவிஞர் சொல்லும் இந்த மெய்ஞானம் எல்லாம் இருக்கட்டும். அவை எல்லாம் எப்போது பயன்படுமென்றால், மனிதன் தன்னை அறிந்து கொள்ளும்போதுதான்:
அவனைத் தெரியும்
இவனைத் தெரியும்.
எல்லாம் சரிதான்.
உன்னைத் தெரியுமா
உனக்கு?
அப்படித் நம்மை ஆராயும்போதுதான், நாம் மற்றவர்களைப் போல நடித்துக் கொண்டிருக்கிறோம் என்பது புரிந்து நம்மைப்போல இருக்க முடியவில்லையே என்று உணர்ந்து கொண்டு நமக்கு மட்டுமாவது உண்மை உள்ளவர்களாக இருப்போம்.
கவிஞருக்கு இயற்கையின் மேல் அக்கறையும் உண்டு. சுற்றுச் சூழல்பால் பற்றும் உண்டு.
ஒரே நேரத்தில்
இரண்டு பாவங்கள் செய்கிறான்
மனிதன்
மரத்தையும் மரத்தின் நிழலையும்
வெட்டிச் சாய்த்து.
பட்டாம் பூச்சியைத் துரத்தும் நேரத்தில் இரண்டு பூச்செடிகளை நட்டுவைத்தால் பட்டாம் பூச்சிகள் தாமாக வந்து சேரும் என்பது கவிஞர் கூறும் அறிவுரை. சிறகுகள் முறிக்கப்பட்டு உயிருக்குத் துடிக்கும் வண்ணத்துப்பூச்சிக்கு அவர் என்ன உதவி செய்யமுடியும். கையாலாகாத தனது கவிதையைத்தான் சவத்துணியாகப் போத்தமுடியம் என்று அங்கலாய்க்கிறார். காடுகளை அழித்து விட்டோம். இனி வருந்தி என்ன பயன்? மரத்தை வெட்டிக் காகிதம் செய்து அதில் காடுகளைக் காப்பாற்றுவோம் என்று கவிதைதான் எழுதுகிறோம்.
தன்னைப்பற்றியும் தன்னைச்சுற்றிய உலகைப் பற்றியும் குறும் கவிதைகளில் சொல்லும் வசந்தகுமாரன் எப்படி இருந்தாலும் இல்லாமல் போவதிலும் இருக்கத்தான் செய்கிறது ஏதோ ஒன்று என்று நம்புகிறார். இத்தனையூண்டு நக்கக் கிடைத்த ஊறுகாய் இந்த வாழ்க்கை என்று தேற்றிக் கொண்டு காயங்களை எண்ணி நேரத்தைச் செலவிடாமல் போய்க்கொண்டே இருப்போம் என்பது கவிஞரின் இப்போதைய மன நிலை;. தனது கண்ணீரைத் தானே குடித்துக் கொண்டு பயணத்தைத் தொடர்கிறார்.
இந்த இரண்டு நூல்களையும் படித்து முடித்தபிறகு நம்மிடம் எஞ்சியிருப்பது இந்த எந்திர உலகின் மேல் எரிச்சலா, சினமா, வருத்தமா? மனிதர் தங்களையும் காத்துக்கொண்டு இயற்கையையும் காப்பார்கள் என்ற நம்பிக்கை துளியேனும் கிடைக்கிறது என்று நான் கருதுகிறேன். உங்கள் கருத்தென்ன? நூல்களை வாங்கி வாசித்து தெளிவு பெற அழைக்கிறேன்.
ச.வின்சென்ட்
சமயவேல். கண்மாய்க்கரை நாகரிகம். தமிழ்வெளி, 2023
பக்கம்: 80 விலை ரூ 100
கோ. வசந்தகுமாரன். அரூப நர்த்தனம். தமிழ் அலை, 2023
பக்கம்: 160 விலை ரூ 100