The importance of the Muzaffarnagar Farmers Rally Peoples Democracy Article Translated By Sa. Veeramani. Book Day, Bharathi Puthakalayam

முசாபர்நகர் விவசாயிகள் பேரணியின் முக்கியத்துவம்



சம்யுக்த கிசான் மோர்ச்சா (Samyukt Kisan Morcha) என்னும் அனைத்து விவசாயிகள் முன்னணி, செப்டம்பர் 5 அன்று ஏற்பாடு செய்திருந்த முசாபர்நகர் மகா பஞ்சாயத்து, நாட்டின் விவசாய இயக்கத்தில் வரலாற்று முத்திரை பதிக்கும் விதத்தில் மாறியிருக்கிறது. இப்பேரணியில் லட்சக்கணக்கான விவசாயிகள் உத்தரப்பிரதேசம், ஹர்யானா, பஞ்சாப் ஆகிய மாநிலங்களிலிருந்து வந்து கலந்து கொண்டார்கள். மேலும் பல்வேறு மாநிலங்களிலிருந்து கணிசமான அளவிற்கும் விவசாயிகள் வந்து பங்கேற்றார்கள்.

விவசாயிகள் மகாபஞ்சாயத்திற்கான அறைகூவல், ஆகஸ்ட் 26-27 தேதிகளில் சிங்கூ எல்லையில் நடைபெற்ற சம்யுக்த கிசான் மோர்ச்சாவின் தேசிய சிறப்புமாநாட்டில் விடுக்கப்பட்டது. மகாபஞ்சாயத்து உத்தரப்பிரதேசத்திலும், உத்தர்காண்டிலும் விரைவில் நடைபெறவுள்ள சட்டமன்றத் தேர்தல்களில் அங்கே ஆட்சிபுரியும் பாஜக அரசாங்கங்களை அகற்றுவதற்கான பிரச்சாரத்தின் தொடக்கமாக அமைந்திருந்தது. சிறப்பு மாநாடு வரும் செப்டம்பர் 25 அன்று பாரத் பந்த் அனுசரித்திடவும் (பின்னர் அது செப்டம்பர் 27 என மாற்றப்பட்டது) அறைகூவல் விடுத்தது.

தேசிய மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள், ஒன்பது மாதங்களாக நடைபெற்றுவரும் விவசாய இயக்கத்தின் விரிவான அம்சங்களைக் காட்டியது. இங்கே நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள், மூன்று வேளாண் சட்டங்களை ரத்து செய்தல், மின்சார திருத்தச் சட்டத்தைத் திரும்பப்பெறுதல் மற்றும் சி2+50 சதவீத உயர்வுடன் குறைந்தபட்ச ஆதார விலையை நிர்ணயித்தல் ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்திய அதே சமயத்தில் தொழிலாளர் வர்க்கம், விவசாயத் தொழிலாளர்கள், கிராமப்புறத் தொழிலாளர்கள் மற்றும் பழங்குடியினர் போன்ற இதர உழைக்கும் மக்கள் பிரிவினரின் கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தியும் ஒட்டுமொத்த தொழிலாளர் வர்க்க – விவசாயிகள் வர்க்கத்தின் ஒருங்கிணைந்த கண்ணோட்டத்தைக் காட்டும் விதத்தில் அமைந்திருந்தன. தொழிலாளர் சட்டங்களை தொழிலாளர் விரோத சட்டங்களாக மாற்றியுள்ள நான்கு தொழிலாளர் சட்டங்களையும் ரத்து செய்ய வேண்டும் என்றும், மகாத்மா காந்தி தேசியக் கிராமப்புற வேலைவாய்ப்பு உறுதிச் சட்டத்தின்கீழ் ஊதியங்களை உயர்த்த வேண்டும் என வலியுறுத்தியும், வன உரிமைகள் சட்டத்தை அமல்படுத்தக்கோரியும், பெண்களுக்கு எதிரான அட்டூழியங்களுக்கு எதிராகவும், பெட்ரோல், டீசல் மற்றும் அத்தியாவசியப் பொருள்களின் விலை உயர்வுகளைக் கட்டுப்படுத்திடக் கோரியும் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களில் இவை பிரதிபலித்தன.

Hundreds of thousands of Indian farmers rally against farm laws | Reuters

முசாபர்நகர் பேரணி விவசாயிகள் பெரும்திரளாகக் கலந்து கொண்டதால் மட்டுமல்லாமல், மற்றுமொரு அரசியல் முக்கியத்துவத்தாலும் குறிப்பிடத்தக்கதாகும். எட்டு ஆண்டுகளுக்கு முன்னால், 2013இல், இதே முசாபர்நகர் மாவட்டத்தில்தான் முஸ்லீம்களுக்கு எதிராக மதவெறி வன்முறை வெறியாட்டங்கள் கட்டவிழ்த்துவிடப்பட்டது. இதில் 80க்கும் மேற்பட்டவர்கள் பலியானார்கள், பல பெண்கள் பாலியல் வன்புணர்வுக்கு உள்ளாக்கப்பட்டார்கள், நூற்றுக்கணக்கான வீடுகள் இடித்துத் தரைமட்டமாக்கப்பட்டன. இது மக்கள் மத்தியில் வகுப்புவாதப் பிளவினை உருவாக்கியது, குறிப்பாக இங்கே ஆதிக்கம் செலுத்தி வந்த ஜாட் இனத்தினர் மற்றும் முஸ்லீம்களுக்கு இடையே ஏற்படுத்தியது. இதனை பாஜக 2014 மக்களவைத் தேர்தலில் முழுமையாகப் பயன்படுத்திக் கொண்டது. மேற்கு உத்தரப்பிரதேசத்தில் தேர்தலில் முழுமையாக வெற்றிபெற்றது. இவ்வாறு மதவெறித் தீயை உருவாக்கி மக்கள் மத்தியில் பிளவினை ஏற்படுத்தியது, ஹர்யானா மற்றும் ராஜஸ்தானில் சில பகுதிகளிலும் அதன் தாக்கத்தை ஏற்படுத்தியது.

அந்த சமயத்திலும்கூட ஒரு “மகா பஞ்சாயத்து” நடந்தது. 2013 செப்டம்பர் 7 அன்று முசாபர்நகர் அருகே சிகாரா கிராமத்தில் நடந்த அந்த மகா பஞ்சாயத்தில் நரேஷ் திகாயத், ராகேஸ் திகாயத் போன்ற கிராமக் கட்டப்பஞ்சாயத்து (khap leaders) தலைவர்கள் கலந்துகொண்டனர். இதில் பங்கேற்ற பாஜக எம்எல்ஏக்கள் சங்கீத் சோம் மற்றும் சுரேஷ் ரானா போன்றவர்களும், சாமியார் பிராச்சி போன்றவர்களும் முஸ்லீம்களுக்கு எதிராக விஷத்தைக் கக்கி உரையாற்றினார்கள். இதன் காரணமாக அப்போது முஸ்லீம்களுக்கு எதிராக மதவெறித்தீ விரிவான அளவில் இவர்களால் எடுத்துச்செல்லப்பட்டது.

ஆனால் இப்போது முசாபர்நகரில் நடைபெற்றுள்ள இந்த விவசாயிகள் மகாபஞ்சாயத்து முற்றிலும் வித்தியாசமானதாகும். சம்யுக்த கிசான் மோர்ச்சாவின் முன்னணித் தலைவர்களில் ஒருவரான ராகேஸ் திகாயத், பேசுகையில் மக்களிடையே மதவெறி அடிப்படையில் ‘அல்லாஹு அக்பர்’ என்றும் ‘ஹர் ஹர் மகாதேவ்’ என்றும் பிளவினை ஏற்படுத்தும் மதவெறியர்களின் உரைகளுக்கு இரையாகிவிடக்கூடாது என்று அறிவித்தார்.

பேரணியில், பெரும் திரளாக முஸ்லீம்கள் பங்கேற்றதைப் பார்த்தபின், உரைநிகழ்த்திய ஒவ்வொரு பேச்சாளரும் உத்தரப்பிரதேசத்தில் பாஜக-விற்கு எதிராக விவசாயிகள் அனைவரும் தங்கள் மதமாச்சர்யங்களை ஒதுக்கிவைத்துவிட்டு ஒன்றுபட்டுநின்று போராட வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்திப் பேசினார்கள்.

முஸ்லீம்களைக் குறிவைத்துத் தாக்கும் விதத்தில் ‘புனித ஜிகாத்’ போன்ற சட்டங்களைக் கொண்டுவந்துள்ள ஆதித்யநாத் அரசாங்கம் மற்றும் ஆர்எஸ்எஸ்/பாஜக கூட்டணியின் வெறிபிடித்த மதவெறி நிகழ்ச்சிநிரலுக்கு முற்றிலும் முரணான விதத்தில் அனைத்து விவசாயிகளும் ஒற்றுமையுடனும் மத நல்லிணக்கத்துடனும் ஒன்று சேர்ந்திருப்பதை இந்த மகாபஞ்சாயத்து நன்கு வெளிப்படுத்தியது. இவ்வாறு இந்த மகாபஞ்சாயத்து, பாஜக ஆட்சியாளர்களின் பிளவுவாத மற்றும் முஸ்லீம்களுக்கு எதிரான வெறித்தனமான அரசியலுக்கு சவால்விடும் விதத்தில் அமைந்திருந்தது.

Bhakyu Mahapanchayat In Muzaffarnagar, Farmers Agitated Against Administration - मुजफ्फरनगर: भाकियू की महापंचायत में शासन, प्रशासन के खिलाफ भड़का किसानों का आक्रोश, देखें ...

விவசாய இயக்கம் தன்னுடைய வீர்யத்தை இழந்துவிடவில்லை என்பதையும், அதன் நலன்களைத் தீவிரமான முறையில் பாதுகாத்துக்கொண்டிருக்கிறது என்பதையும் ஹர்யானாவில் நடைபெற்ற நிகழ்வுகளும் தெளிவுபடுத்தி இருக்கின்றன. ஹர்யானாவில் ஆட்சி செய்யும் பாஜக அரசாங்கம் கடந்த ஒன்பது மாதங்களாக விவசாயிகளுக்கு எதிரகப் பல்வேறுவிதங்களில் நடவடிக்கைகளை எடுத்துவந்துள்ளது. போராடிவரும் விவசாயிகளுக்கு எதிராக, காவல்துறையினரின் முற்றுகைகள், தடியடிப்பிரயோகங்கள், கண்ணீர்ப்புகை குண்டுவீச்சுகள் வீசியபோதிலும், 40 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வழக்குகள் பதிவு செய்துள்ளபோதிலும் அவற்றையெல்லாம் துச்சமெனத் தூக்கி எறிந்து தீவிரமானமுறையில் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அங்கே ஆட்சி செய்யும் கட்டார் அரசாங்கம் விவசாயிகள் போராட்டத்தை நசுக்குவதற்கு எண்ணற்ற விதங்களில் சூழ்ச்சிகளை மேற்கொண்டபோதிலும், அதனால் எதிலும் வெற்றிபெற முடியவில்லை. காவல்துறையினரின் அடக்குமுறை நடவடிக்கை ஒவ்வொன்றும், விவசாயிகளின் உணர்வுமிக்க கிளர்ச்சிப் போராட்டங்களின் மூலமாக முறியடிக்கப்பட்டுள்ளன.

ஆகஸ்ட் 28 அன்று கர்னாலில் போராடிய விவசாயிகள் மீது ஏவப்பட்ட தடியடிப் பிரயோகம் கொடுங்கோன்மையின் புதிய உச்சத்திற்கே சென்றது. தாக்குதலில் காயங்களுக்கு ஆளான சுஷில் கஜல் என்னும் விவசாயி, அக்காயங்களினால் ஏற்பட்ட மாரடைப்பு காரணமாக உயிர்நீத்தார். ஆயுஷ் சின்கா என்கிற ஐஏஎஸ் அதிகாரியான கோட்டாட்சித் தலைவர், போராடும் விவசாயிகளின் “மண்டையை உடையுங்கள்” என்று கூறியது வீடியோவில் பதிவாகி, மக்கள் மத்தியில் வைரலாகப் பரவி, விரிவான அளவில் ஆத்திரத்தை ஏற்படுத்தியது. முசாபர் நகர் பேரணி நடைபெற்று இரு நாட்களுக்குப்பின்னர், ஆயிரக்கணக்கான விவசாயிகள் திரண்டு, கர்னாலில் உள்ள சிறிய தலைமைச் செயலகத்தின்முன்பு பேரணியாகச் சென்று, மேற்படி ஐஏஎஸ் அதிகாரி சஸ்பெண்ட் செய்யப்பட வேண்டும் என்று கோரியும், விவசாயிகளுக்கு எதிராக தடியடிப் பிரயோகம் நடத்திய காவல்துறையினர்மீது நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் என்று கோரியும், முற்றுகைப் போராட்டம் நடத்தினார்கள்.

மூன்று வேளாண் சட்டங்களையும் ரத்து செய்ய வேண்டும் என்கிற விவசாயிகளின் கோரிக்கை, மோடி அரசாங்கத்திற்கு எதிராக அமைந்துள்ள விரிவான எதிர்க்கட்சிகளின் மேடையின் ஒரு பகுதியாக மாறியிருக்கிறது. 19 கட்சிகள் இணைந்து வெளியிட்டுள்ள அறிக்கை செப்டம்பர் 20க்கும் 30க்கும் இடையே நடைபெறவுள்ள கிளர்ச்சிப் போராட்ட நடவடிக்கைகளில் விவசாயிகளின் கோரிக்கைகளே முக்கியமான இடத்தைப் பெற்றிருக்கிறது. அதேபோன்று விவசாயிகளை விரிவான அளவில் அணிதிரட்டி செப்டம்பர் 27 பாரத் பந்த்தை மகத்தான அளவில் வெற்றி பெறச் செய்திட வேண்டும்.

பீப்பிள்ஸ் டெமாக்ரசி தலையங்கம் (செப்டம்பர் 8, 2021)
(தமிழில்: ச. வீரமணி)