நா. அருள்முருகனின் *நேமிநாதம் காலத்தின் பிரதி* – முனைவர் பா. இளமாறன்
இன்றியமையாத நூல் ஒன்று இன்று கைக்கு வந்து சேர்ந்தது. அந்த நூல் நா. அருள்முருகன் ஐயாவின் நேமிநாதம் காலத்தின் பிரதி என்னும் நூல்.
நேமிநாத இலக்கணம் குறித்து தமிழ்ச்சூழலில் பெரிதும் ஆய்வளவில் முன்னெடுக்கப்படாத சூழலில் அருள்முருகன் ஐயாவின் இந்த நூல் குறிப்பிடத்தக்கதாக அமைகிறது. நன்னூலுக்கு முந்தைய நூலாகத் தோற்றம் பெற்ற நேமிநாதம் நன்னூலுக்கு முன்னத்தி ஏராக அமைந்த போதிலும் இருபதாம் நூற்றாண்டின் பிற்பகுதியிலிருந்து வாசிப்பிலிருந்து விலகிவிட்டது. 19 ஆம் நூற்றாண்டுப் பதிப்புச் சூழலில் நன்னூல் அதிக அளவில் முதன்மைப்படுத்தப்பட்ட போதிலும் நேமிநாதத்திற்கான இடம் விட்டுப்போகவுமில்லை.
நேமிநாதம் 19 ஆம் நூற்றாண்டின் தொடக்கக் காலத்திலேயே பதிப்பிக்கப்பட்டது என்றாலும் அது காலப் போக்கில் பாடத்திட்டத்திலிருந்து விலகியதால் ஆய்வுத்தளத்திலிருந்தும் விலகிப் போய்விட்டது. நன்னூல் குறைவுடைய நூல் இல்லையென்றாலும் நேமிநாதமும் தகுதியற்ற நூல் இல்லை. ஒரு தகுதியுடைய நூல் காலாந்தரத்தில் பல்வேறு காரணங்களால் வாசிப்பாரற்றுப் போதலுக்குத் தள்ளப்படும். அப்படி ஒரு சூழலே நேமிநாதத்திற்கும் நடந்துவிட்டது.
நேமிநாதம் குறித்த தனி ஆய்வுகள் பெரிதும் முன்னெடுக்கப்படவில்லை. இலக்கண வரலாற்று ஆய்வுகளின் போக்குகளில் ஒரு சிறு பகுதியாக மட்டுமே நேமிநாதம் முன்னெடுக்கப்பட்டு வந்த சூழலில் நா. அருள்முருகன் ஐயாவின் நேமிநாதம் காலத்தின் பிரதி என்னும் நூல் முழுக்க முழுக்க நேமிநாதம் என்னும் ஒற்றைப் பனுவலை மையம் கொண்டு ஆராய்ந்து எழுதப்பட்டுள்ளது.
நேமிநாதம் அமைப்பு, நேமிநாதம் பெயர்க்காரணம், நேமிநாத ஆசிரியர், நேமிநாத உரையாசிரியர் உரை வகை, நேமிநாத ஓலைச்சுவடிகள், நேமிநாத பதிப்புகள், நேமிநாத காலம், நேமிநாத காலச் சமுதாயம், பா வடிவம், நூலாக்கத்திட்டம், நேமிநாதம் வீரசோழியத்திலிருந்து மாறுபடு முறை, நேமிநாதச் சிந்தனை மரபு, காலந்தோறும் நேமிநாதம் என நேமிநாதம் தொடர்பான அத்தனை தரவுகளும் சேகரிக்கப்பட்டு ஆராய்ந்து இந்நூல் எழுதப்பட்டுள்ளது.
ஒரு இலக்கண நூல் குறித்த ஆய்வில் என்னவெல்லாம் கவனத்தில் கொள்ளப்பட வேண்டும் என்ற ஆய்வுச்சிந்தனைப் போக்கை விதைத்து ஒரு வழிகாட்டி நூலாக இந்நூல் எழுதப்பட்டுள்ளது.
நேமிநாதம் ஓலைச்சுவடிகள் பகுதி குறிப்பிடத்தக்கதாக அமைகிறது. பொதுவாகப் பதிப்புகளை மட்டுமே முன்னிறுத்திச் செல்லும் ஆய்வுப் போக்கில் சுவடிகள் குறித்த விளக்கம் பிற்கால ஆய்வாளர்களுக்குப் பெருந்துணை புரிவதாக அமைகின்றது.
அச்சுப்பரவலாக்கச் சட்டம் வந்த ஆண்டினை அடுத்து பெரும் புகழ்பெற்ற பதிப்பாசிரியர் நயநப்ப முதலியார் இதனை 1836 ஆம் ஆண்டில் பதிப்பித்து வெளியிட்டார். அது தொடங்கி இருபத்தோராம் நூற்றாண்டு வரை வெளிவந்த பதிப்புகளைக் கால வரிசையில் வைத்து ஆவணப்படுத்தியுள்ளார் நூலாசிரியர்.
ஆவணப்படுத்தியதோடு மட்டுமல்லாமல் கழகப் பதிப்பு, சீனிவாசனார் பதிப்பு, ச.வே.சு.ஐயாவின் பதிப்பு ஆகிய பதிப்புகளில் உள்ள சிக்கல்கள் குறித்தும் விவாதித்து அவற்றின் தரத்தையும் மதிப்பீடு செய்துள்ளமை நேமிநாதப் பதிப்புகள் குறித்த பார்வையை விளக்கி நிற்கின்றது.
பிற்காலச் சோழர்காலத்தில் தோன்றிய நேமிநாதம் அந்தக் காலகட்டத்தை எவ்வாறு பிரதிபலிக்கிறது என்ற பகுதி குறிப்பிடத்தக்கது. இலக்கண நூலை வெறும் மொழிக்கான இலக்கண ஆய்வாக மட்டும் கொள்ளாமல் அது சமூக வரலாற்றோடு எவ்வாறு பின்னிப்பிணைந்திருக்கிறது என்பதும் ஆராயப்படவேண்டும். அந்த ஆய்வும் இதில் செய்யப்பட்டுள்ளது.
பாட்டியல் நூல்கள் வருணப்பாகுபாடு குறித்து அதிகம் பேசிய காலகட்டத்தில் தோன்றிய நூலாதலின் அந்த நூலிற்கான உரை அதே காலத்தைச் சார்ந்தது என்பதால் உரையாசிரியர் வருணப்பாகுபாட்டுச் செய்திகளைப் பதிவு செய்துள்ளதை அடிப்படையாகக் கொண்டு ஆராய்ந்து மதிப்பிட்டுரைக்கின்றார் நூலாசிரியர் நா. அருள்முருகன் அவர்கள்.
நூலின் நிறைவாக நூலாசிரியர் காலந்தோறும் நேமிநாதம் என்னும் பகுதியில் நன்னூல் தோன்றியதால் நேமிநாதம் வழக்கிழந்தது என்று சொல்வது ஆதாரமற்றது என்று கூறுவதோடு நேமிநாதம் எவ்வாறெல்லாம் வாசிப்பில் இருந்தது என்பதை ஆதாரத்துடன் முன்வைக்கிறார். நேமிநாதம் தோன்றியது தொடங்கி 1975 வரை பரவலான வாசிப்பில் இருந்தது. அதற்குப் பிறகே அது வாசிப்பற்ற நிலைக்குத் தள்ளப்பட்டது என்று கூறி ஏன் அது பயிற்சி குன்றியது என்றும் காரண காரியங்களோடு விளக்குகிறார். புத்துரைகள் எழுதப்படாமை, பாடத்திட்டப் பின்புலத்தில் நேமிநாதத்தின் இடம் ஆகியவை நேமிநாத வாசிப்பிற்குப் பின்னடைவை ஏற்படுத்தின என்று ஆசிரியர் கூறும் காரணங்கள் தகுதியுடையனவாக இருக்கின்றன.
பின்னுக்குத் தள்ளப்பட்ட நேமிநாதத்தையும் அதன் உரையையும் தக்க நிலையில் மதிப்பிட்டு ஆராய்ந்து அதை முன்னுக்கு கொண்டு வரும் ஒரு சிறந்த ஆய்வு நூலாக நா. அருள்முருகன் ஐயாவின் நேமிநாதம் காலத்தின் பிரதி என்னும் நூல் அமைகிறது.
வாங்கி வாசிப்பவர்களுக்கு எளிய மொழியில் செறிவான தரவுகளோடு ஒரு தரமான ஆய்வு நூலை வாசித்த அனுபவம் கிடைக்கும். அந்த அனுபவம் எனக்குக் கிடைத்தது. உங்களுக்கும் கிடைக்க வேண்டும் என்றால் சந்தியா பதிப்பகம் வழியாக சிறப்பான கட்டமைப்புடன் வெளியிடப்பட்டுள்ள இந்த நூலை வாசியுங்கள் எனப் பரிந்துரை செய்கிறேன்.
முனைவர் பா. இளமாறன் ( ஜெய்கணேஷ்)