“சந்துருவின் சைக்கிள்” (சிறுகதை) மரு உடலியங்கியல் பாலா.
” கமான்! சந்துரு! கமான்!
உங்களால முடியும்! இன்னும் ஐந்து சுற்றுகள்தான் பாக்கி” என்று கூட்டத்தின் முன் வரிசையில், பாவாடையை தூக்கி சொருகியபடி, கைதட்டி விசில் அடித்து “சந்துருவை” ஊக்குவிக்கிறாள் அவன் பள்ளி தோழி தாரா!
“சந்துரு” தன் தாயின் உயிரை காக்கும் பொருட்டு முழுசக்தியை செலுத்தி, “24 மணிநேர தொடர் சைக்கிள் மிதிக்கும் சாகச போட்டியில்” ஒருவழியாக வெற்றிபெற்று, பரிசு தொகை ரூ3000த்தை தாராவிடம் கொடுத்து ஆஸ்பத்திரியில் இருக்கும் தன் தாயின் உயிரை காக்கும்படி வேண்டுகிறான்! அவன் ஆலையிட்ட கரும்புபோலாகி சோர்ந்துவிழ…
அவன் நினைவுகள் பின் நோக்கி பயணிக்கின்றது.
“எனக்கு மூணு சக்ர சைக்கிள் வாங்கி கொடுங்க. இல்லாட்டி நான் சாப்ட மாட்டேன்”என்று ஏழ்மையில் உழலும்
தன் இளம் விதவைத்தாயிடம், கேட்டு ஒரு நாள் முழுக்க அழுது அடம் பிடிக்கிறான் ஆறு வயது சிறுவன் சந்துரு.!
பாவம் தினமும் கழனியில் கூலி வேலைக்கு சென்று சந்துருவை
காப்பாற்றும் அவளால் எப்படி அவ்வளவு காசு கொடுத்து அதை வாங்கித்தர இயலும்.?
அவள், டீ குடித்து பசியை போக்க, முந்தானையில் முடிந்து, வைத்திருந்த 5 பைசா நாணயத்தை எடுத்து கொடுத்து “போய் உனக்கு புடிச்ச பஞ்சு மிட்டாய் வாங்கி சாப்டு நய்னா! அறுவடை முட்ச்ச கையோட, உனுக்கு புது சைக்கிள் வாங்கித்தாறேன்” என சமாதானம் செய்ய முயல..
அவனோ “போம்மா நீ இப்படித்தான் ஒவ்வொரு வாட்டியும் பொய் சொல்ற” என்று அந்த நாணயத்தை வாங்க மறுக்கிறான்!
அவன் 10 வயதிருக்கையில், ஒருமுறை சென்னை பிராட்வே வழியாக அவன் பாட்டி வீட்டுக்கு பஸ்ஸில் செல்லும் போது…
வரிசையாக சைக்கிள் கடைகளில் பற்பல வண்ணங்களில் மிளிரும் குட்டி சைக்கிள்களை, ஆசையுடன் நோக்கி, வாங்கித்தருமாறு அழுது அடம் பிடிக்க…
அவனை சமாதான படுத்த அவள் பட்ட பாடு சொல்லி மாளாது.
தன் குழந்தைக்கு சைக்கிள் நிராசையை தூண்டும் , தன் தாய் வீட்டு சென்னை பயணத்தை, அத்தோடு அவள் நிரந்தரமாக
நிறுத்தியே விட்டாள். அவள்
சுடுமூஞ்சி அண்ணியின் கடுகடுப்பான விருந்தோம்பலும் அதற்கு வேறொரு காரணம் என்றால் அது மிகையாகாது!
ஒருநாள் மாலை அவன் தாயிடம் மூச்சுமுட்ட ஓடிவந்து “அம்மா அம்மா, நம்ப நடேசன் அண்ணா சைக்கிள் கடைல, புத்தம் புதுசா
ரெண்டுசக்கர குட்டி சைக்கிள் வாங்கி வெச்சிருக்கார்மா..
ஒரு ஹவருக்கு 50காசு வாடகையாம்(அன்று 50 காசுக்கு ஒரு வாரத்துக்கான காய்கறிகள் வாங்கிய சல்லீசு காலம்).. ஒரு அம்பது காசு குடும்மா!” என கெஞ்சி கூத்தாட , அவன் தாய் “மோகனாவோ” “என்னது ஹவருக்கு 50பைசாவா.. என்ன அநியாயமா இருக்கே, பெரிய சைக்கிளுக்கே ஹவர்க்கு நால்ணாதானே வாடகை” என அங்கலாய்த்தபடி …
“அதெல்லாம் குடுக்க முடியாது” என நிராகரிக்க அவன் முகம் சுட்ட கத்தரிக்காய் போல் சுருங்கி
” புது சைக்கிளும் வாங்கி தரமாட்ட, ஹவர் சைக்கிளுக்கும் காசு தரமாட்ட.. அப்ப எப்டிதாம்மா நான் சைக்கிள் கத்துக்கறது” என மில்லியன் டாலர் வினா எழுப்பி ஓவெனா அழுதபடி
“பக்கத்து வீட்டு ,காய்கறி விக்கற பொன்னம்மா பையன் கூட அத,
ஓட்டிட்டான்! சே நா ஏந்தான் உங்க வைத்தில வந்து பொறந்தேனோ தெரியல ” என அன்று முழுவதுமாக அழிச்சாட்டியம் செய்தான். ஒரு 50 காசை கூட அந்த குழந்தைக்கு தன்னால் குடுக்க முடியாத தன் குடும்ப பொருளாதர நிலையை நினைத்து, அவளும் கண்ணீர் சிந்தி வருந்தினாள்.
அடுத்த நாள்,…
பொன்னம்மாள் மகனுடன், ஆளுக்கு நால்ணா போட்டு அவனுடன் பாட்னர் ஷிப் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டு, தன் தாயிடம் நாலணாவை அழுது புரண்டு பெற்று, ஒருவழியாக அந்த புத்தம்புது குட்டி சைக்கிளை, ஏதோ வானத்து தேவதையை தொடுவதுபொல் தொட்டு தடவி , சைக்கிள் பழக ஆரம்பித்தான்!
இவ்வாறு ஆரம்பித்த அவன் சைக்கிள் சிநேகம்,..
விழுந்து எழுந்து, முட்டிமோதி,
முட்டி உராய்ந்து, அதனால் வரும் இரத்தக்கசிவை நிறுத்த எச்சில் தடவிய (அக்கால ஆன்டிபயாடிக் களிம்பு ) பேப்பர் ஒட்டி, நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாக வளர்ந்தது… ஒருவழியாக சைக்கிள் ஓட்டுவதில் அவன் பெரும் வல்லவன் ஆனான். அவன் சைக்கிளில் ஏறினால் அது ஜெட் விமானம் போல் பறக்கும்.,
ஊரில் நடக்கும் சைக்கிள் போட்டிகளில் ஒன்றுவிடாமல் கலந்துகொண்டு அதில் கிடைத்த சொற்ப பரிசு பணத்தை, சிறிது சிறிதாக சேர்த்து வைத்து, ஒரு புது “ஹெர்குலஸ்” சைக்கிள் வாங்கிய அந்நாளை அவன் வாழ்க்கையின் பொன்னாளாக கொண்டாடினான்.
அந்த பளபளக்கும் புது பச்சை நிற சைக்கிளை , பச்சிளம் குழந்தை போல் கொஞ்சி குலாவி,. அதை தினமும் பிரத்யேக துணி கொண்டு துடைத்து, ஆயில் போட்டு சக்கரங்களில் காத்தடித்து, பராமரிப்பது..
அவன் முழுநேர வேலையாய் மாறிப்போனது.
“ஏண்டா இப்டி சைக்கிளையே 24 மணி நேரமும் நோண்டிக்கிட்டு இருக்கே, படிச்சி பாசாகி வேலைக்கு போய் பெத்த் ஆத்தாளுக்கு ஒருவாய் கஞ்சி ஊத்த மாட்டியாடா ராசா” என அவன் தாய் அங்கலாய்க்க அவன் அதை காதில் வாங்கி கொள்வதே இல்லை.
எங்கு சைக்கிள் போட்டி நடந்தாலும் அங்கு ஆஜராகிவிடுவான். பல சமயங்களில் வெற்றியும் பெற்று
பரிசுகளை அள்ளிக்கொண்டும் வருவான். சைக்கிளின் மேல் அவன் கொண்ட அதீத மோகத்தால், பள்ளி படிப்பை பாதியலேயே நிறுத்திவிட, அவன் தாய் ஒரு நாள் முச்சூடும் அழுது அரற்றி ,அவனை திட்டி தீர்த்தாள்.
அவ்ன் பள்ளித்தோழி தாரா, ஏனோ இவன் மீதும் இவன் “சைக்கிள் சாகசம்” மீதும் மதி மயங்கி காதல் வயப்பட்டாள். அவனுக்கும், தன் பச்சை சைக்கிளை காட்டிலும் அவள் மீதும் அதீத உயிர்.
ஒருநாள் அவன் தாய்க்கு காய்ச்சல் வந்திட, வீட்டு வைத்தியம் எதுவும் வேலைக்கு ஆகாததால், நிலமை மோசமாக, அவளை பெரிய ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். பணம் தண்ணீராக செலவாகியது. கையில் காசின்றி அவன்தன் தாயை காப்பாற்ற துடி துடிக்க,
தாரா அடுத்த ஊரில் நடக்க இருக்கும் அந்த 24 மணி நேர சைக்கிள் ஒட்டும் சாகச போட்டியை நினைவு படுத்துகிறாள்.,
அவனும் உடனே அதில் கலந்து கொள்ள,
தன் பச்சை சைக்கிள், தெய்வமாய் அவனுக்கு துணை நின்று , இடையில் மக்கர் எதுவும் பண்ணாமல், அவனுக்கு வெற்றி வாகை சூட்டி! போதிய பணமும் பெற்று தந்து! அவன் அம்மாவின் ஆருயிரையும் காப்பாற்ற உதவி புரிந்தது.
அவன் தாய் உயிர் பிழைத்து மறுபிறவி எடுத்து வர, அவன் அடைந்த ஆனந்தத்துக்கு அளவே இல்லை.
இப்பெல்லாம் சந்துரு தினமும் அதிகாலையிலேயே எழுந்து, சைக்கிளில் சென்று, நகரத்தில் பேப்பர் போடுவது, பால் பாக்கெட் போடுவது முதல், ஐஸ் கிரீம், தின்பண்டங்கள், உப்பு, அரப்பு பொடி ,கோலமாவு என சீசனுக்கு தகுந்தாற்போல் சகல பொருட்களையும் தெருத்தெருவாக, வியாபாரம் செய்து , நிறைய காசு சம்பாதிக்கிறான்.
சைக்கிள் பந்தயத்தை தன்
உபதொழிலாக மாற்றி, அதனால் ஆத்ம திருப்தியும் அடைகிறான்.
அவனுக்கும் தாராவுக்கும், திருமணம் நடத்த நிச்சயிக்கப்பட்டபோது,
அவன் தாயிடம் மெல்ல “அம்மா மாப்பிள்ளை அழைப்பில் நானும் தாராவும் சைக்கிளில் ஊர்வலமாக செல்ல உங்கள் உத்தரவு வேண்டும்” என கெஞ்சி கூத்தாட. அவள் சிரித்தபடி”என் புள்ள
“சைக்கிள் ராஜா” சைக்கிளில் ஊர்வலம் செல்ல ஏண்டா மறுப்பு சொல்லப் போறேன்!” என்று அவனை கட்டி அணைத்து உச்சிமோர்ந்து ஆனந்த கண்ணீர் உகுத்தாள்.
– மரு உடலியங்கியல் பாலா