நூல் அறிமுகம்: சிறகடித்துப் பற – வே.சங்கர்
நூல் அறிமுகம்: கலைக்கோவனின் ‘மருளாடி’ – வே.சங்கர்
“பொழைக்கத் தெரியாத பைத்தியக்காரனுங்க, ஆளும், அவன் தலையும், துணிமணியும், வந்துட்டானுங்க, இந்த பூமிக்குங் கேடா” என்று இச்சமூகத்தின் வார்த்தைத் தெறிப்புகளை எளிதாகச் செறிக்கத் தெரிந்தவன் மிக விரைவாகக் கலைஞனாகிவிடுகிறான்.
எல்லா திசைகளிலும் முட்டி, மோதி, திமிறி எழுந்து தன்னை அடையாளப்படுத்திக் கொள்வதற்குள் காலம் பல கலைஞர்களைச் சின்னாபின்னமாக்கி விடுகிறது.
அப்படி அடையாளம் தெரியாமல் மண்ணுக்குள் சென்றவர்களைவிட தினம் தினம் மனதிற்குள்ளேயே புழுங்கி வெந்து நொந்து நடைபிணமாய்ப் போனவர்கள்தான் ஏராளம்.
நீண்டகாலமாக உறங்கிக் கொண்டிருக்கும் விதை ஏதோ ஒருநாள் பெய்யும் மழையில் மண்ணைப் பிளந்துகொண்டு எட்டிப்பார்ப்பதைப் போல எங்கோ ஒரு கலைஞன் தன் உயிர்ப்பை பிடித்துவைத்திருந்து அவ்வப்போது இச்சமூகத்திற்கு உணர்த்திக்கொண்டே இருக்கிறான்.
அப்படிப்பட்ட உணர்ச்சிவயமான கலைஞன் யாரும் எதிர்பாராததொரு தருணத்தில் தவிர்க்கமுடியாத கலைஞனாகக் கொண்டாடப்படவும் செய்கிறான். அதற்காக அவன் கொடுக்கும் விலையும் தியாகமும் அர்ப்பணிப்பும் மிக அதிகம்.
அப்படிக் கொடுங்காலத்தின் கரங்களில் இருந்து தப்பிப் பிழைத்த கலைஞர்கள் சிலரின் வாழ்வைக் கொஞ்சம் தொட்டுத்தான் காட்டுவோமே என்று களம் காண முயற்சித்திருக்கிறார் “மருளாடி” நூலின் ஆசிரியர் கலைக்கோவன்.
மருளாடி நூலில் காணப்படும் பலதரப்பட்ட கலைஞர்களைப் போல தீராப் பெரும் பசியையும் கலைப் பசியையும் தன் வாழ்நாள் எல்லாம் தன் அங்கமாகக் கொண்டவர்கள் இன்றும் ஏராளம்.
பெரும் கொடையாய்க் ‘கலை’ தாய் கொடுத்த தீராத் தாகத்தை, வியர்வையால் குளித்துக் குதூகலிக்கும் கலைஞர்களின் படைப்புகளை இப்போது மட்டுமல்ல எப்போதுமே மேட்டுக்குடியினருக்கு ஏளனமாகத்தான் தெரிந்திருகின்றன.
அதைவிடப் பெரும் சோகம், அந்த மகத்தான கலைஞர்கள், எல்லோருடைய கண்களுக்கும் தெரிந்தாலும் தெரியாததைப் போல காட்டிக்கொள்வதில் இச்சமூகம் போடும் வேடம் மேடையில் ஒரு தேர்ந்தெடுத்த கலைஞனால்கூட வெளிப்படுத்த முடியாததொரு நடிப்பு.
அதனால்தான், வயிற்றுப் பசியையும் கலைப் பசியையும் ஒன்றெனக் கொண்டாடத் தெரிந்தவனின் உணர்ச்சியின் வேகமும், உள்ளக்குமுறலின் கொந்தளிப்பும் யாராலும் எதிர்கொள்ளமுடியாத அளவுக்கு மாறிவிடுகிறது.
”எதற்கும் ஆகாத உதவாக்கரைகள். வேலைக்குப் போயி நாலு காசு சம்பாதிக்கத் துப்புக்கெட்டவனுங்க”, என்று குடும்பத்தில் உள்ளவர்களே வீசிச் செல்லும் வசைச்சொற்களே பெரும்பாலான கலைஞர்களின் சிறகுகளை முறித்துப் போட்டிருக்கின்றன.
மருளாடி வாசிப்பாளர்களுக்கு வெறும் கட்டுரைத் தொகுப்பு என்ற ரீதியில் அத்தனை எளிதாகக் கடந்துவிடமுடியாது. கட்டுரைக்குள் ஊடாடும் பல வரிகள் கண்ணீரை வரவழைக்கின்றன.
முதல் கட்டுரை ‘தனியாவர்த்தனம்’ தோல் பாவைக் கூத்துக் கலைஞர்களின் வாழ்வியலை மேலோட்டமாகச் சொல்வதோடு நின்றுவிடாமல், தோல் பாவைக்கூத்தின் பிரதானமான தோல் பொம்மை எப்படியெல்லாம் செய்யப்படுகிறது என்பதை விவரிக்கிறது.
அதைவிட நவீனம் ’கலையின் கருவை’ எவ்வாறெல்லாம் சிதைத்திருக்கிறது என்பதற்கு முத்துசந்திரன் வீட்டின் மாடியில் தனியொருவனாக எங்கோ இருந்துகொண்டு ஆன்லைன் மூலம் கண்டுகளிக்கும் பார்வையாளர்களுக்காக நடத்தும் கூத்தை பதிவுசெய்கிறது.
’மருளாடி’ என்ற கட்டுரை சாமானிய மனிதனின் பார்வையிலிருந்தும், அறிவியலாளனின் பார்வையிலிருந்தும், உளவியலாளனின் பார்வையிலிருந்தும் அணுக முயற்சித்திருக்கிறது. ஆனால், மருளாடியும் கலைஞன்தான் என்ற வரிசையில் நின்று கொண்டிருப்பதுதான் சற்றே சந்தேகத்தை விதைக்கிறது. .
சாமியாடுபவர்களை, சாமியாடி, மருளாடி, அருளாடி என்று பலபெயர்களில் அழைக்கப்படுவதைச் சுட்டிக்காட்டி, அதன் ஒரு பெயரை இந்நூலுக்குத் தலைப்பாக்கி இருக்கிறார் கலைக்கோவன்.
அன்புராஜின் வாழ்க்கையை மிகச்சுருக்கமாக “உண்மைக் கலைஞனின் ஒரு துளி அன்புராஜ்-1” கட்டுரையில் கவிதை நடையில் சொல்லப்பட்டிருக்கிறது. ஆனால், அவர் நடித்த நாடகத்தின் பெயரை கட்டுரையின் நடுவில் ஏதேனும் ஒருவரியில் சொல்லியிருக்கலாம்.
மகத்தான மனிதர்களையும் அவர்களின் வீரியத்தையும் பத்மஸ்ரீ நா.முத்துசாமி அவர்களின் கூத்துப்பட்டறையில் உருக்கி வார்க்கப்பட்ட ’ஈரோடு நாடகக் கொட்டகை’ சதீஸ் பற்றிய கட்டுரை தலைப்பிற்கேற்றார்போல் ”மரணமில்லை”
ஒரு கலைஞன் சககலைஞனின் சோகச்சுமையையும் சேர்த்தே சுமக்கப் பழகியிருக்கிறான் என்பதற்கு ’மரணமில்லை’ என்ற கட்டுரை சான்று. இன்னும் சற்றே ஆழமாகப் பதிவு செய்திருக்கலாம்.
‘யார் வித்வான்’ கட்டுரையின் துவக்கம் ஒரு மிருதங்கம் எப்படி உருவாகி பார்வையாளனை மயக்குகிறது என்பதைச் சொல்லிச் செல்லும் அதே வேளையில், ஒரு மிருதங்கம் உருவாகிய பிறகு நடக்கும் நுட்பமான அரசியலை ஆசிரியருக்கே உரிய தனித்துவமான மொழியில் சொல்லியிருக்கிறார்.
இந்நூலில் காணப்படும் சில கட்டுரைகளுக்குள் நலிவடைந்த கலைஞர்களின் அடக்க முடியாத கண்ணீரும், அவற்றை மீறி அவர்கள் மீண்டு எழுந்து நிரூபிக்கும் உயிர்த்துடிப்பையும் மிக அழகாக பதிவுசெய்யப்பட்டிருக்கிறது.
சில கட்டுரைகள் சிறுகதையின் சாயலில் தொடங்கி கொஞ்சம் நெளிவு சுளிவுகளுக்குள் நுழைந்து வட்டமடித்து மீண்டும் கட்டுரை வடிவத்திற்குள் பரிணமித்திருக்கிறது. எடுத்துக்காட்டாக, “நாட்டுப்புறக் கலைஞர்கள்” மற்றும் ”தீராத் தீ” போன்ற கட்டுரைகள்.
கொரோனா பெருந்தொற்றின் முதல் அலை சாமானிய மக்களின் வாழ்க்கையைப் புரட்டிப்போட்டதோடு நின்றுவிடாமல் நிமிர்ந்து மூச்சுவிட்டுக்கொள்வதற்குள் இரண்டாம் அலை பூதாகரமாய் மேலெழும்பி வலம்வந்தது அனைவருக்கும் தெரியும்.
அந்த நேரத்தில் குத்துயிரும் குலை உயுருமாய் வாடிய பதினைந்து கூத்துக் கலைஞர்களுக்கு இந்நூலின் ஆசிரியர் சக ஆசிரியர்களின் துணைகொண்டு ஓடோடி (பணம் கொடுத்து) உதவியதை மிகைப்படுத்தாமல் அப்படியே பதிவு செய்கிறது “இரண்டாம அலை” என்ற கட்டுரை.
சொல்லப்போனால், இது கண்ணுக்கு எட்டிய தூரத்தில் தெரிந்த ஒரு சில மனிதர்களைத் தேர்ந்தெடுத்து அவர்களின் வாழ்வியலையும் அவர்கள் கடந்துவரும் வெற்றியையும் ஒற்றை நூலுக்குள் பலமுயற்சிகளுக்குப் பின் ஆவணப்படுத்தப்பட்டிருக்கிறது.
இந்நூலில் காணப்படும் எல்லாக் கட்டுரையையும் விவரமாகச் சுட்டிக்காட்ட ஆசைதான். ஆனால், வாசிப்பளர்களின் யூகத்திற்காக சில கட்டுரைகளைத் தொட்டுக்காட்டாமல் விட்டிருக்கிறேன். அவ்வளவுதான்.
இத்தனை சிறப்பான கட்டுரைத் தொகுப்பைக் கொடுக்கும் பதற்றத்தில் பக்கம் பக்கத்திற்குக் காணப்படும் எழுத்துப் பிழைகளையும், பல இடங்களில் இடரும் பத்திக் கோர்வையையும் ஆசிரியர் ஏன் தவறவிட்டார் என்று தெரியவில்லை.
அதுமட்டுமல்ல, உக்கிரமாக ஆடவேண்டிய ‘மருளாடி’ வாசிப்பாளர்களின் மனதிற்குள் புகுந்து ஆழ்ந்த தாக்கத்தை ஏற்படுத்த முயற்சிக்காமலும், நவீன யுகத்தின் நளினத்திற்கு ஏற்றார்போல் ஆழ்ந்து செல்லாமலும் அழகியல் தன்மையோடு மிகஎளிதாக நகர்ந்து செல்வது, களப்பயணத்தில் ஏற்பட்ட களைப்பினாலா அல்லது வாசகர்கள் மீதியைத் தேடிக்கண்டுகொள்ளட்டும் என்ற எண்ணத்தினாலா? என்று யோசிக்கவைக்கிறது.
மற்றபடி, இந்த இரண்டாவது நூலான ‘மருளாடியில்’ கலைக்கோவன் அவர் இஷ்டத்திற்கு ரசிக்கும்படிதான் ஆடியிருக்கிறார்.
– வே.சங்கர்
நூலின் பெயர் : மருளாடி
ஆசிரியர் : கலைக்கோவன்
வெளியீடு : வம்சி
பக்கங்கள் : 136
விலை : ரூ.130
தொடர்புக்கு : 044 – 24332424 /24330024/
விற்பனை : 24332924
அவர் சிறுகதை – பூ. கீதா சுந்தர்
டீக்கடையில் மூன்று டீ சொல்லி விட்டு வந்தான் சங்கர். அவன் முகம் சற்று குழப்பத்தில் இருந்தது.
” அண்ணே, நான் எப்டி அவர கூட்டிட்டு போறது ? எனக்கு அவர யாருன்னே தெரியாது. கொஞ்சமும் பழக்கம் இல்லை… அது கூட பரவாயில்ல, எங்க வீட்டுல ஒரு வாரம் தங்க வைக்கிறது கொஞ்சம் சிரமம் தாண்ணே… வீட்ல அம்மா ஏதாவது சொல்லுவாங்களோன்னு தோனுதுண்ணே… ”
” சங்கரு, நீ குழம்பற அளவுக்கு ஒன்னுமே இல்லப்பா .. சும்மா ஃபிரியா வுடுப்பா .. ” டீ யை சுவைத்தபடி சாவகாசமாக சொன்னார் ராமு.
‘ என்னங்கண்ணே இவரு இப்டி சொல்றாரு ? நீங்க கொஞ்சம் எடுத்து சொல்லுங்களேன்.. ‘ என்பது போல குமாரைப் பார்த்தான் சங்கர்.
‘ இரு, இரு பேசறேன் ‘ என்று ஜாடை காட்டினார் குமார்.
ஒரு வாரத்திற்கு முன்பு,
” அண்ணே.. வாங்க, வாங்கண்ணே.. உள்ள வாங்க… எப்படி இருக்கீங்க, பார்த்து ரெண்டு வருஷம் இருக்கும் இல்லண்ணே… வீட்டுல எல்லாரும் செளகரியமாண்ணே… ” ராமுவின் ஊருக்காரர் வந்து இருந்தார்.
” பத்மா.. இங்க வா. யார் வந்திருக்காங்கன்னு பாரு..” உள்ளே இருந்து தன் மனைவியை அழைத்தார்.
” வாங்க அண்ணே, நல்லா இருக்கீங்களா… ” நலம் விசாரித்து விட்டு உள்ளே சென்று ஜூஸ் கொண்டு வந்து கொடுத்தாள்.
” ராமு.. ஊர்ல வீடு கட்டி இருக்கேன் பா, நீ குடும்பத்தோட புதுமனை புகுவிழாவுக்கு வந்துடணும் பா.. ” என்று பத்திரிக்கையை கொடுத்தார்.
” கண்டிப்பா வந்துடுறோம்ணே.. ”
” நம்ம சங்கருக்கும் பத்திரிக்கை வச்சி இருக்கேன் பா… சேர்ந்தே வந்துடுங்க.. ” என்று கூறிவிட்டு கிளம்பி விட்டார்.
அந்த புதுமணை புகுவிழா நடைபெற இருக்கும் தேதிக்கு ஒரு வாரத்திற்கு முன்பே சங்கர் ஊருக்கு போவதாக ராமுவிடம் கூறினான். அப்போது ராமு,
” சங்கரு.. அன்னிக்கி தேதிக்கு என்னால வர முடியுமான்னு தெரியல.. இத சொன்னா அண்ணன் ரொம்ப கோச்சிக்குவாரு.. நீ போகும் போது உங்கூட ஒருத்தர அனுப்பறேன்.. அவரு ரொம்ப முக்கியமானவரு பா… அவரை அண்ணனுக்கு நல்லாத் தெரியும்.. நீ ஒரு வாரத்துக்கு அவரை உங்க வீட்டுல வச்சி பாத்துக்கோ பா.. அப்புறம் விசேசத்துக்கு கூட்டின்னு போப்பா ” என்றார்.
அதைத் தான் இப்போது குமாரிடம் சொல்லி புலம்பினான் சங்கர்.
” ஏண்ணே… அவனுக்கு யானுன்னே தெரியாத ஆள எப்டிண்ணே கூட்டிட்டு போக முடியும்..? அது கூட பரவாயில்ல வீட்டுல எப்டி தங்க வைக்க முடியும் ? ”
” ஏம்பா அதெல்லாம் நான் யோசிக்க மாட்டனா.. அவரால ஒரு தொந்தரவும் வராது பா… அவரு வீட்டுக்கு போனா அவங்க அம்மாவே சந்தோசப்படுவாங்க பா.. நீ வேணா பாறேன்.. ”
” சரிண்ணே… நீங்க இவ்ளோ தூரம் சொல்றீங்க.. நீங்க சொல்றத பாத்தா அவரு ரொம்ப மரியாதையான ஆள் மாதிரி தான் தெரியுது.. சரி, அவரு சைவமா..? அசைவமா. ? ன்னு சொல்லுங்க . அதுக்கேத்த மாதிரி எங்க அம்மாகிட்ட சொல்லி சமைக்க சொல்றேன்… ”
” எப்பா… அவரு சைவம் தான்… ஆனா சாப்பாட்டு விஷயத்துல அவரு உங்களுக்கு எந்த சிரமமும் தர மாட்டாரு பா … ”
” சரிங்கண்ணே… நான் போய் ஊருக்கு போறதுக்கு ரெண்டு டிக்கெட் போடறேன்… ” என்றான் சங்கர்.
” அட ஏம்பா ரெண்டு டிக்கெட் ? . உனக்கு மட்டும் டிக்கெட் போடுப்பா.. ” குழப்பமாக பார்த்தான் சங்கர்.
” ஏண்ணே… அவருக்கு டிக்கெட் போடனும்ல.. ” இப்போது குமாரும் குழப்பாகி போனார்.
” வேணாம்பா… ”
” ஏண்ணே… ? ”
” அவரு எல்லா எடத்துக்கும், டிக்கெட் எடுக்காம போக கூடிய அளவுக்கு பெரிய ஆளுப்பா… அவரு அவ்ளோ ஃபேமஸ் பா.. அவருக்கு டிரெய்ன்ல டிக்கெட் எல்லாம் கேக்க மாட்டாங்க பா… ”
” ஓ.. அவரு அவ்ளோ பெரிய ஆளாண்ணே… ” என்று வியப்பாக கேட்டான் சங்கர். ” எங்க வீட்டுக்கு வேற கூட்டிட்டு போறேன் … எனக்கு பயமா இருக்குண்ணே.. எதுக்காகவும் கோச்சிக்க மாட்டாரு இல்லண்ணே… ” என்று கலக்கத்துடன் கேட்டான் சங்கர்.
” அதெல்லாம் ஒண்ணும் இல்லப்பா.. அவரு ரொம்ப சாந்தமானவரு .. ”
” அண்ணே.. நீங்க சொல்றத பார்த்தா அவரு நம்மள மாதிரி சாதாரண ஆளா தெரியலையே .. அவரு சாமியாரா… ? ”
” கரெக்டா சொல்லிட்டப்பா.. சாமியார் தான்… நம்ம பெரிய குருசாமிப்பா அவரு… ஆனா அவரு உனக்கு எந்த தொந்தரவும் பண்ண மாட்டாரு.. நீ ஒன்னும் பயப்படாத… ”
சங்கர் மனம் ஓரளவுக்கு சரியாகி விட்டது.. அவன் அவரை தன்னுடன் அழைத்து போக தன்னை தயார்படுத்திக் கொண்டான்.
” சரிங்கண்ணே… நான் நாளைக்கு காலையில நேரா ரயில்வே ஸ்டேஷனுக்கு வந்துடறேன்.. நீங்க அவரை அங்க கூட்டிட்டு வந்துடுங்க.. நான் அவரை பத்திரமா கூட்டின்னு போறேன்.. ஒரு வாரம் எங்க வீட்டுலயே இருக்கட்டும்… அப்புறமா கிரகபிரவேசத்துக்கு கூட்டுன்னு போறேன்.. அண்ணே முடிஞ்சா விழாவுக்கு நீங்களும் வந்துடுங்கண்ணே… ” மீண்டும்,
” அண்ணே எதுக்கும் டிக்கெட் ஒன்னு போட்டுடறேண்ணே… ஒரு வேளை டிடிஆர் வந்து பிரச்சனை பண்ணா என்னாண்ணே பணறது..? ”
” ப்பா… அதெல்லாம் வேணாம்பா… அவர பாத்தா டிடிஆர் கூட டிக்கெட் கேக்க மாட்டாரு பா… அவரு அவர பாத்துக்குவாரு .. நீ வுடு பா… ”
” ஓகேண்ணே… ”
” சரிப்பா பாக்கலாம்… நீ கிளம்பு.. ”
மூவரும் கிளம்பி விட்டார்கள்.
காலை மணி பத்து இருக்கும். குமாருக்கு சங்கர் ஞாபகம் வந்தது.
‘ இந்நேரம் டிரெயின்ல போயிகிட்டு இருப்பான் இல்ல.. அவன் நேத்து எல்லாம் புலம்பிக்கிட்டே வேற இருந்தான்.. சரி, போன் பண்ணி பாக்கலாம் ‘ என்று சங்கருக்கு போன் செய்தார்.
” இன்னாப்பா.. சங்கரு, கிளம்பிட்டியா… அவரு கூட வராரா.. ? உனக்கு ஓ. கே தான ஒன்னும் பிரச்சனை இல்லையே..? ”
” அண்ணே… ” அவன் குரல் கம்மியது.
” இன்னாப்பா… இன்னாச்சி.. உன் குரலு ஏன் ஒரு மாதிரி இருக்குது … சொல்லுப்பா.. ” குமாரை சிறு பதற்றம் தொற்றியது..
” அட, அதை ஏண்ணே கேக்கறீங்க.. ராமு அண்ணன், அவர என் கையில குடுத்து வச்சிக்க சொன்னப்ப தான் நானே ஷாக்காயிட்டேன் ..”
” இன்னாது .. கையில குடுத்தாரா..? ” இப்போது குமாருக்கு குழப்பமாக இருந்தது.
” ஆமாண்ணே..ராமு அண்ணன், அவரு, அவருன்னு சொன்னது அதை தாண்ணே.. ”
” எதப்பா.. ”
” அது மூணடி விநாயகர் சிலைண்ணே .. வெள்ளி மூலாம் பூசினது… அதை தான் விசேஷ வீட்டுக்கு கிப்ட்டு குடுக்க சொல்லி, எங்கிட்ட குடுத்து விட்டு இருக்காரு… பாருண்ணே, ராமு அண்ணனுக்கு லொள்ள … ” என்றவன், ” அண்ணே… அண்ணே..” என்று அழைத்துக் கொண்டிருக்க.
குமார் கையில் ஃபோனோடு அப்படியே சேரில் அமர்ந்துக் கொண்டார். அவர் எதுவும் பேசவில்லை.