நூல் அறிமுகம் : ஜே.சி.டேனியலின் திரையில் கரைந்த கனவு : ( திருத்தி எழுதப்பட்ட வரலாறு கட்டுரை ) – பாவண்ணன்

நூல் அறிமுகம் : ஜே.சி.டேனியலின் திரையில் கரைந்த கனவு : ( திருத்தி எழுதப்பட்ட வரலாறு கட்டுரை ) – பாவண்ணன்



திருத்தி எழுதப்பட்ட வரலாறு
பாவண்ணன்

ஒரு பழைய வரலாற்றுச் செய்தி. முதலாம் நூற்றாண்டில் தோன்றிய காளிதாசர் சமஸ்கிருத மொழியில் சாகுந்தலம், மேகதூதம் போன்ற மிகமுக்கியமான நாடகங்களை எழுதியவர். முதல் நாடக ஆசிரியர் என்று அனைவராலும் பாராட்டப்பட்டவர். ஆனால் அவருடைய காலத்துக்கு முன்பாகவே பஸன் என்னும் நாடக ஆசிரியர் வாழ்ந்தார். அவருடைய நாடகங்களுக்கு அவர் வாழ்ந்த காலத்தில் நல்ல வரவேற்பு இருந்தது. எனினும் பஸன் எழுதிய எந்தப் பிரதியும் கிடைக்கவில்லை. காவ்யமீமாம்சையில் பஸனைப்பற்றிய ஒரு சிறுகுறிப்பு மட்டுமே கிடைத்தது. அந்தக் குறிப்பை மட்டும் வைத்துக்கொண்டு பஸனுக்கு முதல் நாடக ஆசிரியர் என்னும் புகழை அளிக்க ஆய்வாளர்கள் விரும்பவில்லை. ஆதாரமான நாடகப்பிரதி எதுவும் இல்லாத நிலையில் பஸனை யாராலும் எந்த அவையிலும் முன்வைக்க இயலவில்லை.

ஏறத்தாழ இரண்டாயிரம் ஆண்டுகளுக்குப் பிறகு, 1913இல் கணபதி சாஸ்திரி என்பவர் பஸன் எழுதிய சமஸ்கிருத நாடகங்கள் அனைத்தையும் மலையாளத்தில் எழுதிவைக்கப்பட்டு கொடியாட்டமாக அரங்கேற்றப்பட்டு வருவதைக் கண்டுபிடித்தார். அவர் எழுதிய பதின்மூன்று நாடகங்களும் உடனடியாக மீட்டெடுக்கப்பட்டு புத்தக வடிவம் கண்டன. தேசமெங்கும் அரங்கேற்றப்பட்டு பஸனுடைய புகழ் நிறுவப்பட்டது. உடனடியாக பஸனுடைய நாடகங்கள் எல்லா இந்திய மொழிகளிலும் மொழிபெயர்க்கப்பட்டன. அவரே முதல் நாடக ஆசிரியர் என்னும் உண்மை வரலாற்றில் திருத்தி எழுதப்பட்டது. பஸன் எழுதிய நாடகப்பிரதிகள் ஒன்றுகூட எஞ்சாதபடி எப்படி மறைந்தன என்பது ஒருவராலும் புரிந்துகொள்ளமுடியாத புதிராகவே உள்ளது.

தென்திருவிதாங்கூரில் முதன்முதலாக திரைப்படம் எடுக்கும் கனவில் தன் செல்வத்தையெல்லாம் இழந்து வறுமையில் வாடியவர் ஜே.சி.டேனியல். ஆனால் அவருடைய பெயர் திரைப்பட வரலாற்றிலேயே இல்லை. அவர் உயிருடன் வாழ்ந்த காலத்திலேயே அவருடைய பெயரை ஆய்வாளர்கள் மறந்துவிட்டனர். அவருக்குப் பிறகு எட்டு ஆண்டுகள் இடைவெளியில் படமெடுத்த மாடர்ன் தியேட்டர்ஸ் டி.ஆர்.சுந்தரத்தின் பெயர் மலையாளத்திரைப்பட உலகின் தந்தை என்ற அடைமொழியுடன் வரலாற்றில் பதிவு செய்யப்பட்டது. முப்பது ஆண்டு கால இடைவெளியில் ஒருவர் உயிருடன் இருக்கும்போதே அவர் ஆற்றிய பணிக்குரிய அங்கீகாரமும் அடையாளமும் மறுக்கப்பட்டன.

பத்திரிகையில் திரைப்படம் சார்ந்த கட்டுரைகளை எழுதிவந்த சேலங்காட்டு கோபாலகிருஷ்ணன் என்பவர் ஒரு பெட்டிக்கடை வாசலில் தற்செயலாக டேனியலைப் பார்த்தார். கடைக்காரர் வழியாக அவர் திரைப்படம் எடுத்து பொருளை இழந்த கதையை அறிந்தார். பிறகு அவருடைய இருப்பிடத்துக்கே தேடிச் சென்று உரையாடி, அவர் திரைப்படம் எடுத்த வரலாற்றை அவர் வழியாகவே கேட்டறிந்தார். பிறகு அதை நிறுவும் வகையில் ஆவணங்களைத் தேடித் தொகுத்து ஊடகங்களோடும் அரசு அதிகாரிகளோடும் போராடி, ஜே.சி.டேனியலே மலையாளத் திரைப்பட உலகின் தந்தை என நிரூபித்தார். பத்து ஆண்டுகளுக்கும் மேலாக அவர் அதற்காக உழைக்கவேண்டியிருந்தது. துரதிருஷ்டவசமாக டேனியல் அப்போது மறைந்துவிட்டார். வரலாற்றை மாற்றி எழுதிய அந்தக் கால அனுபவத்தை ஜே.சி.டேனியல்: திரையில் கரைந்த கனவு என்னும் தலைப்பில் ஒரு புத்தகமாக எழுதி வெளியிட்டார் சேலங்காட்டு கோபாலகிருஷ்ணன். அடூர் கோபாலகிருஷ்ணன் முன்னுரையோடு அது மலையாளத்தில் வெளிவந்தது. அந்தப் புத்தகத்தை தமிழில் இப்போது மொழிபெயர்த்திருப்பவர் செ.புஷ்பராஜ்.

அகஸ்தீஸ்வரத்தை பூர்விகமாகக் கொண்டு தென்திருவிதாங்கூரில் வாழ்ந்து வந்த கிறித்துவநாடார் குடும்பத்தைச் சேர்ந்தவர் ஜோசப் செல்லையா டேனியல் என்கிற ஜே.சி.டேனியல். கேளிக்கை என்பதையே அனுமதிக்காத சமயப்பிரிவின் குடும்பத்தைச் சேர்ந்தவர் அவர். அவருடைய குடும்பத்தினர் அனைவரும் வழிவழியாக மருத்துவர்களாகப் பணிபுரிந்து செல்வமீட்டியவர்கள். ஜே.சி.டேனியலுக்கு மருத்துவத்தில் ஆர்வமில்லை. அதனால் திருவனந்தபுரத்தில் பட்டப்படிப்பைப் படித்துமுடித்தார். படிக்கும் காலத்திலேயே அவருக்கு சிலம்பாட்டக்கலையின் மீது ஆர்வம் இருந்தது. அதைத் தொடர்ந்து அவர் களரிப்பயிற்சியையும் மேற்கொண்டார். பிரபலமான ஆசான் ஒருவரிடமிருந்து அடிமுறைகளைக் கற்றுத் தேர்ந்தார். வெளிநாட்டிலிருந்து இறக்குமதியாகும் சண்டைக்காட்சிகள் நிறைந்த படங்களைப் பார்த்த அனுபவத்தில், களரி அடிமுறைகளை முன்வைத்து தாமும் ஓர் ஆவணப்படம் எடுக்கவேண்டும் என்று விரும்பினார். அப்போது அவருக்கு திரைப்படம் பற்றிய எந்தத் தெளிவும் இல்லை

தான் எடுக்க நினைத்த ஆவணப்படத்துக்கு எவ்வளவு தொகை தேவைப்படும் என்று தெரிந்துகொள்வதற்காக அவர் சென்னையில் ஸ்டுடியோ வைத்திருந்த ஒருவருக்கும் பம்பாயில் ஸ்டுடியோ வைத்திருந்த ஒருவருக்கும் கடிதம் எழுதினார். ஒருவர் இருபதாயிரம் ரூபாய் கேட்டார். மற்றொருவர் நாற்பதாயிரம் ரூபாய் கேட்டார். தயாரிப்பு செலவு குறித்து பேசுவதற்காக டேனியல் சென்னைக்கும் பம்பாய்க்கும் சென்றார். ஸ்டுடியோ செயல்பாடுகளையெல்லாம் நேரில் பார்த்துவிட்டுத் திரும்பியபோது அவர் மனம் மாறியது. திருவனந்தபுரத்திலேயே ஒரு ஸ்டுடியோவைத் தொடங்க முடிவெடுத்தார். தனக்குச் சொந்தமான 108 ஏக்கர் நிலத்தை முப்பதாயிரம் ரூபாய்க்கு விற்று திருவனந்தபுரத்தில் இடம் வாங்கி ஸ்டுடியோ கட்டினார். 1928இல் திருவாங்கூர் நேஷனல் பிக்சர்ஸ் என்ற பெயரில் அந்த ஸ்டுடீயோ தொடங்கியது.

இந்தியாவில் முதல் மெளனப்படத்தை தாதாசாகிப் பால்கே 1913இல் எடுத்து வெளியிட்டார். தமிழ்நாட்டில் எடுக்கப்பட்ட முதல் மெளனப்படம் 1918இல் வெளிவந்தது. இந்தியாவின் முதல் பேசும் படமும் தமிழ்நாட்டின் முதல் பேசும் படமும் 1931இல் வெளிவந்தன. ஆனால் அதற்கான பூர்வாங்க வேலைகள் 1928இலேயே தொடங்கிவிட்டன. சமகாலத்தில் பிற நகரங்களில் தொடர்ச்சியாக மாறிக்கொண்டிருந்த திரைப்படச் சூழல் டேனியலின் நெஞ்சில் ஒரு கிளர்ச்சியை உருவாக்கியது. களரி ஆவணப்பட எண்ணம் பின்தங்கிவிட கதையம்சம் கொண்ட ஒரு மெளனப்படத்தை உருவாக்கும் ஆசையாக அது மாறியது.

விகதகுமாரன் என்னும் படத்துக்குரிய கதையை அவரே உருவாக்கினார். மேடை நாடகங்களில் பெண் பாத்திரங்களையும் ஆண்களே ஏற்று நடித்துக்கொண்டிருந்த காலம் அது. பெண் பாத்திரத்தை ஒரு பெண்ணே ஏற்று நடித்தால்தான் நன்றாக இருக்கும் என்று நினைத்தார் டேனியல். ஆனால் சாதி இறுக்கமும் மத இறுக்கமும் கொண்ட கேரளசமூகத்தில் அவரால் பெண் பாத்திரத்தை ஏற்று நடிக்க ஒரு பெண்ணை எங்கும் கண்டுபிடிக்கமுடியவில்லை. செய்தித்தாளில் விளம்பரம் கொடுத்து தேர்வு செய்யப்பட்டு வரவழைக்கப்பட்ட ஒரு ஆங்கிலோ இந்தியப் பெண், ஏராளமான பொருளிழப்பை டேனியலுக்கு ஏற்படுத்திவிட்டு ஒரு காட்சிகூட நடிக்காமல் பம்பாய்க்குத் திரும்பிச் சென்றுவிட்டார். இறுதியாக, கத்தோலிக்கக் கிறித்துவத்தைத் தழுவிய ஒரு தலித் குடும்பத்தைச் சேர்ந்த ரோசி என்ற பெண்ணைச் சந்தித்துப் பேசி ஏற்றுக்கொள்ள வைத்தார். படம் பிடிப்பதற்கு அவரால் பெரிய நகரங்களில் இருந்து கேமிராமேனை வரவழைக்க முடியவில்லை. அதனால் வெளிநாட்டிலிருந்து ஒரு கேமிராவை வாங்கி, கையேடுகளைப் படித்து, இயக்கும் முறைகளைக் கற்றுக்கொண்டு, அவரே படம் பிடிக்கத் தொடங்கினாறார். ஒவ்வொரு நாளும் எடுத்துமுடித்த படச்சுருளை அவரே இரவு வேளையில் கழுவினார். ஏறத்தாழ இரு ஆண்டுகள் முடிவில் 1930இல் திரைப்பட வேலை முடிந்தது.

23.10.1930 அன்று திருவனந்தபுரம் கேப்பிடல் திரையரங்கில் திரைப்படம் வெளியானது. முதல் காட்சியைக் காண்பதற்காக அதிகாரிகளும் நம்பூதிரி, நாயர் தறவாடுகளைச் சேர்ந்த உயர்சாதியினரும் வந்திருந்தனர். கட்டியங்காரன் திரைக்கு ஓரமாக நின்று காட்சிவிளக்கம் அளித்தபடி இருந்தான். சரோஜினி நாயர் என்னும் பாத்திரத்தில் ஒரு தலித் பெண் நடித்திருப்பதை பார்வையாளர்களால் ஏற்றுக்கொள்ளமுடியவில்லை. படம் பாதியில் நிறுத்தப்பட்டது. அரங்கம் சிதைக்கப்பட்டது. அனுமதி மறுக்கப்பட்டதால் திரையரங்கத்துக்கு வெளியே நின்றிருந்த ரோசி, பார்வையாளர்களின் தாக்குதலுக்கு ஆளாகி, நகரத்தைவிட்டு வெளியேறி மறைந்தாள். திரையரங்கம் தாக்கப்பட்டது. ஏராளமான பொருளிழப்புக்கு ஆளான டேனியல் தனக்குரிய எல்லாச் சொத்துகளையும் விற்று கடனை அடைத்துவிட்டு குடும்பத்துடன மதுரைப்பக்கம் சென்றார்.

திரைப்படக் கனவுகளைத் துறந்துவிட்டு இரு ஆண்டுகள் பாடுபட்டு பல்மருத்துவம் படித்து பட்டம் பெற்றார் டேனியல். மதுரையிலேயே ஒரு கிளினிக் திறந்து மருத்துவம் பார்த்தார். குடும்பம் சற்றே தலைநிமிர்ந்து நிற்கத் தொடங்கிய காலத்தில் மருத்துவம் பார்த்துக்கொள்வதற்காக வந்த நடிகர் பி.யு.சின்னப்பாவின் தூண்டுதலால் மீண்டும் திரைத்துறையின் பக்கம் சென்றார் டெனியல். இறுதியில் உழைத்துச் சேர்த்த சிறு செல்வத்தையும் இழந்து வறுமையில் வாடினார். வேறு வழியில்லாமல் உறவினர்களின் கருணையால் அகஸ்தீஸ்வரத்தில் ஒரு பழைய பரம்பரை வீட்டில் வாழ்ந்து மறைந்தார்.

திரைப்படம் என்பதையே தீயொழுக்கச்செயலாக நினைக்கும் பின்னணியைக் கொண்ட குடும்பம் என்பதால், அவருடைய குடும்பத்தினர் அனைவருமே அவர் வாழ்க்கையையும் செயல்களையும் ஒரு கறையென நினைத்து ஒதுக்கினர். தன்னை ஒரு கட்டத்திலும் நிரூபித்துக்கொள்ளமுடியாத தோல்வியுணர்ச்சியால் அவரும் எந்த இடத்திலும் தன்னை முன்னிறுத்திக்கொள்வதில் நாட்டமின்றி ஒதுங்கிவிட்டார்.

டேனியல் படமெடுத்தார் என்பதற்குச் சாட்சியாக அவரிடம் எஞ்சியதெல்லாம் ஒரு துண்டு பிலிம் சுருள். சில திரைக்கதைக் காட்சிகளை விவரிக்கும் படங்கள். சில புகைப்படங்கள். அவ்வளவுதான். ஓர் ஆவணமாக அவற்றை ஊடகங்களின் முன் காட்டி சேலங்காட்டாரால் டேனியலின் இடத்தை நிறுவமுடியவில்லை. அதற்கிடையில் டி.ஆர்.சுந்தரம் இயக்கிய பாலன் திரைப்படமே முதல் திரைப்படம் என ஆவணங்கள் உருவாகி நிலைபெற்றுவிட்டன.

மலையாளத் திரையுலகின் தந்தையென ஜே.சி.டேனியல் அடையாளப்படுத்தப்பட வேண்டும் என்கிற ஆதங்கத்தோடு சேலங்காட்டார் பத்திரிகைகளில் பல கட்டுரைகளை எழுதி வெளியிட்டார். பல அதிகாரிகளையும் அமைச்சர்களையும் சந்தித்து உரையாடினார். ஏறத்தாழ இருபதாண்டு காலம் இந்த முயற்சியில் ஈடுபட்டிருந்தார் சேலங்காட்டார். அவர் எடுத்த திரைப்படம் மெளனப்படம் என்பதால் அதை மலையாளத்திரைப்படமாக கருதத் தேவையில்லை என ஓர் அதிகாரி நிராகரித்தார். தமிழகத்தைச் சேர்ந்த அகஸ்தீஸ்வரம் என்னும் பகுதியில் டேனியல் வசித்து வந்ததால், அவருடைய குறைகளை தமிழக அரசிடம்தான் முறையிட வேண்டுமே தவிர, கேரள அரசிடம் சொல்வதில் பொருளில்லை என்று நிராகரித்தார் மற்றொரு அதிகாரி. ஒரு தலித் பெண்ணை நாயர் பெண்ணாக நடிக்கவைத்தவர் என்னும் வெறுப்பில் டேனியலைப்பற்றி உரையாடுவதையே தவிர்த்தனர் சிலர். அவர் கிறித்து மதத்தைச் சேர்ந்தவர் என்னும் காரணத்தால் சிலர் தவிர்த்தனர். கிறித்துவத்துக்குரிய ஒழுக்கத்தை அவர் பின்பற்றாததால், கிறித்துவர்களும் அவரை ஆதரிக்கவில்லை. எல்லா முனைகளிலிருந்தும் வெறுப்பையும் புறக்கணிப்பையும் மட்டுமே எதிர்கொண்ட டேனியல் தீராக்கசப்பில் மூழ்கி விலகிச் சென்றுவிட்டார். எவ்விதமான பெருமையையும் பெறாமலேயே 1975இல் இந்த உலகத்தைவிட்டு மறைந்தார் டேனியல். தன் முயற்சிகளிலிருந்து சற்றும் பின்வாங்காத சேலங்காட்டாரின் தொடர் போராட்டத்தின் விளைவாகவும், மேலும் சில ஆவணங்கள் கிடைத்ததன் விளைவாகவும் அரசு தன் ஆவணத்தைத் திருத்தி எழுதியது. மலையாளத் திரையுலகத்தின் தந்தையாக டேனியல் அறிவிக்கப்பட்டார். திரையுலகச் சாதனையாளருக்குரிய விருதுக்கு அவருடைய பெயர் சூட்டப்பட்டது.

புஷ்பராஜின் மொழிபெயர்ப்பில் வெளிவந்திருக்கும் இப்புத்தகம் வழியாக கனவுகள் நிறைந்த ஜே.சி.டேனியலையும் உண்மையை உலகுக்கு அறிவிக்கவேண்டும் என்கிற முனைப்பு நிறைந்த சேலங்காட்டு கோபாலகிருஷ்ணனையும் அறிந்துகொள்ள முடிகிறது. ஒரு வாசகனாக, நமக்கு இவ்விருவரும் சாதனையாளர்களாகவே தோன்றுகின்றனர்.

(ஜே.சி.டேனியல்: திரையில் கரைந்த கனவு. சேலங்காட்டு கோபாலகிருஷ்ணன், தமிழாக்கம்: எ.புஷ்பராஜ், சென்னை பிலிம் ஸ்கூல் பதிப்பகம், 4/16, முதல் குறுக்குத்தெரு, 9-வது பிரதான சாலை, சாமிநாதன் நகர், கொட்டிவாக்கம், சென்னை 600041. விலை. ரூ.100 )