நூல் அறிமுகம்: மார்கெரித் யூர்ஸ்னாரின் கீழை நாட்டுக் கதைகள்: (பொறுப்புக்கும், சுதந்திரத்திற்குமான போராட்டம். விதியின் வசமே முடியும் அவலம்!) – சந்தானமூர்த்தி
ஒரு படைப்பு என்ன செய்ய முடியும். பிரபஞ்சத்தின் அடியாழத்தில் மூழ்கிக் கிடக்கும் சிறு துளி ஆன்மாவை வெளிக்கொண்டு வரமுடியும். உருண்டை வடிவமோ, சதுரமோ, செவ்வகமோ, எதுவோ ஒன்று, அதனை அப்படியே நாம் படுத்துறங்கும் திண்ணையில் வைத்து உருட்டி விளையாடவும் மேன்மை பொருந்தியதொரு படைப்பால் சாத்தியமே. கனமான பொழுதுகளை இலகுவாக்கவும், துயரங்களில் சஞ்சரிக்கும் ஆகச்சிறந்த தருணங்களை மீட்டுருவாக்கம் செய்யவுமான வல்லமை, ஆகச்சிறந்த படைப்புகளுக்கு உண்டு. அதற்கு இணையான தகுதி அதை உருவாக்கிய படைப்பாளிக்கும் உண்டு.
வெறும் அழகியலை மட்டுமே ஆதாரமாகக் கொண்ட படைப்புகள், அழகியல் குறித்த பார்வைகளும், வியாக்கியானங்களும் மாறுகிறபோது, ஒன்று அது தன் இயல்பை மாற்றிக்கொள்ளலாம், இல்லை, நீர்த்துப்போகலாம். இவை இரண்டுக்குமே நிறையச் சாத்தியங்கள் உண்டு., முன்வைக்கும் அழகியலைப் பொறுத்து அவை அமைந்துவிடுவதற்கும் அநேக சாத்தியங்களும் இருக்கின்றன.
ஆனால் விளிம்புநிலை மக்களின் வாழ்வியலை அதற்கு ஆதாரமாக விளங்குகின்ற கலாச்சார, பண்பாட்டு விழுமியங்களைச் சுமந்து நீள்கிறதொரு படைப்பானது, அம்மக்களின் வாழ்வியல் தேவைகளோடும், அவர்தம் நடைமுறை அழகியலோடும், ஒருசேர பிணைந்திருப்பதால், அதனுடைய ஆயுள் என்பது வேர் சார்ந்ததும், அது பற்றி மேலழெ தவிக்கும் மண்ணோடும் தொப்புள்கொடி உறவு கொண்டது.
கீழை நாட்டுக்கதைகளுக்கும், அதன் உயிருக்கும் உடமைவாதியாகிய மார்கெரித் யூர்ஸ்னாரின் படைப்புகளின் மைய ஓட்டம் விளிம்புநிலை மக்களையும், அவர்கள் தெரிந்தோ, அறியாமலோ ஏற்றுக்கொண்ட ஒரு வாழ்வியல், அது முன்வைக்கும் மகிழ்வு, அதனூடாக வந்திறங்கும் துயரம், இரண்டின் நீட்சியாக கேள்விகளற்று பயணிக்கும், அம்மக்களின் ஆழமான நம்பிக்கை, இவற்றை எள்ளி நகையாடாமல், அதன் பின்னால் ஒளிந்திருக்கும் அதிகார மையத்தின் பிடிப்பையும் போகிற போக்கில் தொன்மங்களினூடாக அடித்தளமிட்டுப் பேசி செல்வதோடு ஆகப்பெரிய விவாதத்தையும் அறுதியிடுகிறது.
மார்கெரித் கதைகளினூடாக பிரவேசிக்கும் கதாபாத்திரங்கள், தான் நேசித்த அதி உன்னதமான ஒன்றுக்காக, தங்களை, முழுமையாக விடுதலை செய்துகொள்ளும் மனோபக்குவம் வாய்ந்தவர்களாகவே அநேகமான கதைகளினூடாக வாழ்கிறார்கள். அல்லது வாழ முயற்சித்துக் கொண்டிருக்கிறார்கள்.
பரந்து விரிந்த சமூகப்பரப்பில், அது வரையறுத்து ஒழுங்கமைத்த எந்தவொரு முகாந்திரத்தின் எல்லைகளுக்குள்ளும், பிரவேசிக்க மறுக்கும் சுதந்திரமான மனிதர்கள், மார்கெரித்தின் கதை மாந்தர்களாகச் சஞ்சரித்துக்கொண்டே இருக்கிறார்கள். எந்தவொரு திட்டவட்டமான வாழ்க்கையும், உறுதி செய்யப்பட்ட கொள்கைகளும், சார்பு நிலைகளும் இவரது கதாபாத்திரங்களை எதுவும் செய்யமுடிவதில்லை.
அதி உன்னத புத்திசாலிகளும், வெறும் கிராமத்து யதார்த்தமான மனிதர்களும், அவர்களது உணர்வுகளும் எல்லாமுமே ஒரு வாழ்வியலை முன்வைத்தும், அதனை எதிர்கொள்ளும், அல்லது விட்டு விடுதலையாகி ஓடும் இரண்டு விதமான மனநிலை வாய்க்கப்பெற்றவர்களாகவே இருக்கிறார்கள். இவருடைய கதாபாத்திரங்கள் எல்லாவற்றிற்கும் அவரவரளவில் எல்லையற்ற சுதந்திரம் இருந்து கொண்டே இருக்கிறது.
அதே சமயம் செய்து முடிக்கவேண்டிய பொறுப்புகளும் ஏராளமாய் நிறைந்து கிடக்கிறது. சுதந்திரத்திற்கும், பொறுப்புக்குமான இடைவெளியைச் சிறிதாக்கிக்கொள்ள இவர்களின் மன்றாடுதல் நீடிக்கிறது. அதே நேரத்தில் கீழைநாட்டுக்குறிய விதிகளின் கைப்பிடிக்குள் சிக்கி, இம்மனிதர்களின் சுதந்திரமும், பொறுப்பும் சிக்கித் தவிக்கத்தான் செய்கிறது. ஆக இருத்தலும், இருத்தல் சார்ந்த வியாபித்தலும் எல்லாக் கதைகளிலுமே வாழ்வியலாகவே நீடிக்கிறது. பொறுப்பு , சுதந்திரம், விதி மூன்றில் எதனை தேர்வு செய்வது என்ற குழப்பமும், அச்சமும், இறுதியில் விதி வசமே தங்களை ஒப்புவித்து , அதன் போக்கிலே நகர்ந்துகொள்கின்றது.
நாம் ஒவ்வொரு கதையாக வாசித்தகளுகிறபோது. இத்தொகுப்பின் முதல் கதையான உயிர் தப்பிய வாங்ஃபோ நம்மைக் கடைசிவரை தொடர்ந்துகொண்டே இருக்கிறது. எல்லாவற்றிற்கும் மேலாக, வாங்ஃபோவின் ஓவியத்தின் மீதும், அந்த ஓவியங்களை நேர்த்தியாய் பிரசவிக்கும் தூரிகையின் மீதும், மேலதிகமாக வாங்ஃபோவின் எளிமையின் மீதும், தீராத காதலும், அபரிமிதமான வேட்கையும் கொண்டு வாழ்தலை அதன் பொருட்டு ஒப்படைத்த அவரது சிஷ்யன் லிங் நம்மை ஆட்கொண்டு விடுவதில் ஆச்சரியம் ஒன்றுமில்லை தான்,
இருந்தபோதிலும் லிங்கின் பின்னணி, அவன் வாழும் எதற்கும் பஞ்சமில்லாத சூழல், ஒரு செல்வ சாம்ராஜ்யத்தின் ஒரே வாரிசு, எல்லாவற்றையும் விட்டொழிந்தவனாய், சொற்களிலில்லை, செயலில் நிறைவேற்றிய விதம். லிங்கை, நாம் கெளதமப்புத்தரின் ஞானத்தோடு தொடர்புப்படுத்தி விவாதிக்கத் தோன்றுகிறது.
புத்தரின் ஞானத்திற்குக் குறைவில்லாத ,அதே அளவுக்குச் சமமான, இல்லை, இல்லை இன்னும் அதிகப்படியான ஞானத்தைப் பகிர்ந்தளித்து இருக்கிறான் என்றே சொல்லத்தோன்றுகிறது.
வாங்ஃபோவின் தீட்டப்பட்ட ஓவியங்கள் அடங்கிய முடிச்சுகளைச் சுமந்து செல்வதில் லிங்கிற்கு எப்பொழுதுமே ஒரு அலாதி பிரியம் இருந்துகொண்டே இருக்கிறது. இந்த குருவும், சிஷ்யனும் ஹான் பேரரசின்(கி.மு 206 லிருந்து, கி.பி.220 வரை சீனாவில் ஆதிக்கம் செலுத்திய அரசம் பரம்பரை) தெருக்களைக்கடந்து எங்கோ சென்றுகொண்டிருக்கிறார்கள்.
தூரிகைகள், கொஞ்சம் சைனா மை, அரக்கும் அடங்கிய ஒரு டப்பா, சுருட்டிவைக்கப்பட்ட பட்டுத்துணி, அரிசி மாவினால் செய்யப்பட்ட காகித உருளைகள், ஆகியவற்றைத்தவிர உலகில் வேறு எந்தப் பொருளுமே உடைமையாக்கிக்கொள்ளத் தகுதியானது அல்ல என்று வாங்ஃபோவிற்கு தீர்மானமான எண்ணம். அவரது சிஷ்யன் லிங்கிற்கு, தனது குருவிற்கு உண்மையான, விசுவாசமான சீடனாக இருப்பதை தான் தனது ஆகச்சிறந்த பொறுப்பாக, ஏற்றுக்கொண்டு வாங்ஃபோவின் சொத்துக்களை, நேசத்திற்குரிய காதலியை சுமந்துசெல்வதுப்போல சென்றுகொண்டிருக்கிறான்.
வாங்ஃபோவும், லிங்கும், தங்களுக்கான சுதந்திரத்தைத் தேர்வு செய்துவிட்டார்கள். ஆனால் ஒரு சிறு வித்தியாசம், வாஃங்போவின் சுதந்திரம் இயற்கையுடனும், அதன் தன்னிச்சையான போக்குடனும் கட்டமைக்கப்பட்டு முன்னகர்ந்துகொண்டே இருக்கிறது. ஆனால் லிங்கின் சுதந்திரம் வாங்ஃபோவை மையங்கொண்ட நகர்கிறது. இரண்டாவதாக லிங் தனது பொறுப்பு என்று வாங்ஃபோவிற்கு சேவை செய்வதைத் தெரிவு செய்தும் நகருகிறான், அதன் படியே செயல்புரிந்தும் போகிறான். அவனது ஆழ்மனதிற்கு மட்டும் இதுதான் விதி என்ற உணர்வும் சீராக நீந்திக்கொண்டிருக்கின்றன.
தன் குருவிற்காகத் தனது சொத்துக்களை எல்லாம் இழக்க துணியும் லிங், இனி ஒன்றுமே இழப்பதற்கு இல்லை என்றான பிறகுதான் இப்படி போய்க்கொண்டிருக்கிறான். எல்லாப்பொலிவுகளும் அற்றுப்போன அந்தப் பிராந்தியத்தில் கற்றுக்கொள்ள ஏதுமில்லை என்ற பொழுதுதான் அவர்கள் ஹான் பேரரசிற்கு போனார்கள்.
வாங்ஃபோ தன் வண்ணக் கலவைகளால் அள்ளித்தெழித்த ஓவியங்கள் பேரரசின் இளவரசனை எப்பொழுதும் அச்சுறுத்திக்கொண்டே இருந்திருக்கிறது. ஆனால் வாங்ஃபோவோ, எந்தவொரு அரசவைக்கோ, அந்தப்புரத்திற்கோ போனது இல்லை.,
பேரரசர்களின் அவைக்கு அவர் சென்றதே இல்லை. குடியானவர்களின் குடிசைகள், நாட்டியக்காரிகள் இருக்கும், புறநகர் பகுதிகள் அல்லது கூலியாட்கள் சண்டைபோட்டுக்கொண்டு இருக்கும் இடங்கள் போன்றவற்றிற்கு எல்லாம் வாங்ஃபோவின் கால்களும், பசியோடிருக்கும் மனமும் சர்வகாலமும் பயணித்துக்கொண்டே இருக்கிறது. அவரது தூரிகை, வண்ணம் குழைந்து தீட்டியது என்னவோ, இந்த விளிம்பு நிலை பிரதிகளின் வாழ்வியலையும், அதன் அழகியலையும் தான்.
ஹான் பேரரசின் இளவரசன் உள்ளிட்ட, சகலருக்கும் இருந்தது பத்தாயிரம் வாழ்க்கை, ஆனால் வாங்ஃபோவிற்கு இருந்ததோ ஒரே ஒரு வாழ்க்கை, அதுவும் முடியும் தருவாயில். இதனை நினைத்து அவர்கள் இருவருமே ஒருபோதும் வருந்துவதேயில்லை.
மரணத்தின் பால், என்ற மற்றுமொரு கதை, ஆசியநாடுகளின் மிக ஆழமான கூட்டுக்குடும்ப வாழ்க்கையும், அதற்குள்ளாக நிகழ்கிற சம்பவங்களுமாகப் பயணிக்கிறது. மனிதர்கள் உயிரின் கட்டுப்பாட்டுக்குள் அடங்கியும், தங்களுக்குறிய தேவைகள் அதிகரிக்கிற போதும், சுயம் சார்ந்தும், சுயநலம் சார்ந்தும் எடுக்கும் முடிவுகள், மனிதர்களை தனிதனித்தீவுகளாக மாற்றத்தொடங்குகிறது. அதே சமயம், குரூரங்களையும், வஞ்சகத்தையும், சுமக்கும் பிரதிகளாகவும் பிரகாசிக்க ஆரம்பித்து விடுகிறார்கள்.
ஒரு ஊரில் மூன்று சகோதரர்கள் என்று தொடங்கும், இந்தக் கதை, நம்மூர் வாய்மொழிக்கதைகள் மாதிரியே நீண்டு, இறுதியில் ஒரு அப்பாவி, புத்திசாலிப்பெண்ணின் மரணத்தில் முற்றுப்பெறுகிறது. ஆனால் பால் குடி மாறாத, பசி பொறுக்காத அவளது குழந்தைக்காக, மட்டும் அவளது உயிரற்ற உடலில், இருந்து பால் சுரந்துகொண்டே இருக்கிறது. இது அல்பேனிய நாட்டு வழக்காறு கதையினை மையமாகவைத்து மார்கெரித்தால் அதன் ஈரம் கசியாமல் சொல்லமுடிகிறது.
துருக்கியைக் கொள்ளைக்காரர்களை வரவிடாமல் கண்காணிப்பதற்காக ஒரு கோபுரத்தை அந்த மூன்று சகோதரர்களும் கட்டிக்கொண்டிருக்கிறார்கள். ஆட்கள் கிடைப்பது அரிதாக இருந்ததாலோ, கூலி அதிகமாக இருந்ததாலோ, அல்லது சிறந்த குடியானவர்களுக்கே உரித்தான வகையில் தங்கள் கைகளை மட்டுமே நம்பியிருந்ததாலோ, கட்டட வேலையைத் தாங்களே பார்த்துக்கொண்டார்கள். அவர்களுடைய மனைவிகள் ஒவ்வொருவரும் தத்தம் முறைப்படி அவர்களுக்குச் சாப்பாடு எடுத்து வந்தார்கள்.
இப்படி பொக்கை வாய் கிழவி ஒருத்தி, நம்வீட்டுத் திண்ணையில் அமர்ந்துகொண்டு, மழலை மாறாத தனது பேரப்பிள்ளைகளுக்குக் கதைசொல்வது போல எந்த சிரமமும் இல்லாமல், ஒரு கதை சொல்லியாக மார்க்கெரித் சொல்லிக்கொண்டே போகும் போது, ம்..ம்..ம் என்று சொல்லத்தோன்றுகிறது. அதே வேளை இறுதியை நெருங்கும் போது நம்மை ஒரு அமானுஷ்யம் சூழ்ந்துக்கொள்ளத்தொடங்குகிறது.
சகோதரர்கள் ஒவ்வொருவரும் தங்கள் பணியைச் சிறப்பாகச் செய்துமுடித்துவிட்டுக் கோபுரத்தின் கூரையின் மேல் மூலிகைக் கொத்து ஒன்றை வைக்கப் போகும் போகும் ஒவ்வொரு சமயத்திலும் இரவில் வீசும் காற்றும், மலையில் வசிக்கும் சூனியக்காரிகளும், அதைக் கலைத்து விட்டுக்கொண்டிருந்தனர். ஒரு கோபுரம் இடிந்து விழுவதற்கு அநேக காரணங்கள் உண்டு. தொழிலாளர்களின் திறமையின்மை, பூமியின் விருப்பமின்மை, கற்களைப் பிணைக்க போதுமான அளவு காரைக்கலவை இல்லாதது என்று பல காரணங்களைச் சொல்லமுடியும் அல்லது கட்ட ஒதுக்கிய நிதியில், முக்கால் வாசியைப் பொறுப்பு வகிப்பவர்கள், தங்களது வங்கிக்கணக்கில் ஒதுக்கிவிடுவது இப்படி ஏராளமான விஞ்ஞானப்பூர்வமான காரணிகள் பலவும் உண்டு.
ஆனால் அதிகார வர்க்கம் மக்களுக்கு ஒரு போதும் விஞ்ஞானத்தைச் சொல்ல முயலுவதில்லை, காரணம் விஞ்ஞான ரீதியாக மனிதன் யோசிக்கத்தொடங்கிவிட்டால், அதிகாரத்தின் மையம் அந்தக் கோபுரங்களைப் போல சரிந்து விழ ஆரம்பித்துவிடும் என்பதுதான். இந்த ஆண்டு விக்ரதி வருடம், இந்த வருடத்திற்குச் செவ்வாய் என்ற கிரகம்தான் அதிபதி, செவ்வாய்க்கு ஆயுதம் நெருப்பு, அதனால்தான் காளஹஸ்தி கோபுரம் வீழ்வதற்கு முன்னால், இடி விழுந்து எச்சரிக்கை மணியடித்தது. இது நம்மூர் நம்பிக்கைகள்.
ஆனால் செர்பிய, அல்பேனிய, பல்கேரியக் குடியானவர்கள் இந்த அசம்பாவிதத்திற்கு ஒரு காரணத்தைத்தான் கண்டார்கள். கட்டடம் இடிந்து விழாமல் அதன் அடிப்பகுதியில் ஒரு ஆணையோ, பெண்ணையோ நிற்கவைத்து அவர்களைச்சுற்றி சுவர் எழுப்பிவிட்டால் அவர்களுடைய எலும்புக்கூடு கற்களின் பளுவான சதையை இறுதி நாள் வரை தாங்கிக்கொள்ளும் என்று நம்பினார்கள்.
இந்த நம்பிக்கையின் விளைவுதான் மரணத்தின் விளிம்பில் கற்களுக்கு நடுவில் நின்றுகொண்டு இருக்கும் அந்த அப்பாவி, புத்திசாலிப்பெண். ஆனால் அவள் கேட்டுக்கொண்டதற்கு, வஞ்சகம் பொருந்திய அந்த இரண்டு ஆண்களும், அதாவது அவளுடைய கொழுந்தன் மார் இருவரும், அவளது மார்பகத்தை மட்டும் சில காலங்களுக்குக் கற்களை வைத்து மூடாமல் விட்டுவைத்திருந்தனர். அந்த தாயின் எல்லா உறுப்புகளும், மரணித்துப்போய்க்கொண்டே இருந்தாலும், அவளது குழந்தைக்காக அந்த மூடப்படாத மார்பகத்திலிருந்து சுரந்துகொண்டேயிருந்தது பால். குழந்தை பால் குடி மாறியதும். கற்களால் மூடிக்கொண்டது அவளுடைய மார்பகங்களும்.
மரணத்தின் பால் கதை விதியின் பொருட்டு எதையும் இழக்கும் மனம் வாய்க்கப்பெற்ற மனிதர்களையும், இது விதி என்று தெரிந்தபிறகு, அந்த விதிக்கு மற்றவர்களைப் பலி கொடுத்து,தங்களைக் காப்பாற்றிக்கொள்ளும் மனிதர்களையும் அவரவர் சார்ந்து பேசுகிறது.
மூன்று சகோதரர்களும் நிர்ணயிக்கப்பட்ட ஒரு விதியின் பொருட்டே செயலாற்றத்தொடங்குகிறார்கள். மூத்தவன் தன் மனைவியை ரகசியமாக வெறுக்கிறான். அவளை எப்படியாவது இந்தத்திட்டத்தின் மூலம் கழித்துக்கட்டிவிட்டு, செம்பட்டை நிறக்கூந்தலுடன் இருக்கின்ற ஒரு அழகான கிரேக்கப் பெண்ணை அடைந்துகொள்ள இந்த வாய்ப்பை சாதகமாக்கிக்கொள்ளத் திட்டமிடுகிறான். இரண்டாமவனும் தன்னுடைய மனைவியை எச்சரிப்பதாகச் சொல்லிக்கொண்டே வீட்டுக்கு வருகிறான். கடைசி சகோதரன் மட்டும் அல்பேனிய, பல்கேரிய மூதாதையர்களின் நம்பிக்கையை, நிறைவேற்றும் நோக்கத்தோடு பெருத்த சோகத்துடன் வீட்டுக்குத் திரும்புகிறான்..
இப்படியாக மார்கெரித்தின் மரணத்தின் பால் கதை முடிகிறபோது நம்மை சூழ்ந்துகொண்ட அமானுஷ்யங்கள் விலகி. வாழ்வின் யதார்த்தம் முகத்தில் அறைகிறது. பூமிப்பந்தின் எல்லா பாகங்களிலுமே பெண் என்பவள் பொறுப்புகளுக்கும், சுதந்திரத்திற்குமான போராட்டங்களில் மட்டும் சிக்கித்தவிக்கவில்லை. ஆணாதிக்க கரங்களுக்குள்ளும், அதுவே விதி என்றும் மரணித்துப்போன கோடாணு கோடி பெண்கள்.இன்றும் உலக விளிம்புநிலை சமூகத்தின் பெண் தெய்வங்களாக மாறிப்போய் இருக்கிறார்கள்.
இவ்வாறு அநேக கதைகளும் கீழை நாட்டுத் தொன்மங்களுடனும், அதன் எச்சங்களுடனுமே பயணிப்பது வியக்கவைக்கிறது. மார்க்காவின் மோசமான நடவடிக்கைகளாகத் துருக்கியர்கள் பார்ப்பது, வழிவழியாக சொல்லப்பட்டு வந்த செர்ப்பியன் மோசமானவன் என்ற பார்வைதான். ஆனால் துருக்கிய மனிதர்களுக்கும் சுதந்திரமானவர்களும், ஈரம் நிரம்பியவர்களும் இருக்கிறார்கள் என்பது கதையை மட்டுமில்லை. பூமியைக்கூட சமநிலையில் வைத்துப்போகிறது.
ஸ்கூட்டாரி நகரத்தின் பாஷாவின் விதவை, மார்க்கோவைப் பற்றி இரவுகளில் கனாக்காண்பதிலும், பகலில் அவனுக்காகக் காத்திருப்பதிலும் பொழுதைக் கழித்தபடி இருக்கிறாள். கடலின் மென்மையான முத்தங்களால் உறைந்துபோயிருந்த மார்க்கோவின் உடலுக்கு எண்ணெய் தேய்த்துவிடுகிறாள். வேலைக்காரிகளின் பார்வையில் படாமல் தன் படுக்கையில் அவனுக்குக் கதகதப்பூட்டுகிறாள். இப்படி மார்க்கெரித் மார்க்கோவின் புன்சிரிப்பு என்ற கதையினூடாக துருக்கிய, செர்பிய நாட்டார் மரபுகளைப் பிணைத்துக் கொண்டு செல்கிறார்.
துருக்கியில் சிறைபிடிக்கப்பட்ட மார்க்கோவை, எப்படியும் பார்ஷாவின் விதவை காப்பாற்றிவிடுவாள். என்று நினைக்கத்தொடங்கிய சிறு வினாடிகளுக்குள் மார்க்கோவின் எதிராக பாஷாவின் விதவை மாறிவிடுவதும் எல்லோருக்குமான சமூக எதார்த்தம்.செத்தப்பிணமாய் கிடக்கும் ஒரு செர்பியனின் முகத்தில் லேசாக, மெலிதாக ஒரு புன்சிரிப்பு பிரவேசித்தால் சும்மாய் இருப்பார்களா? துருக்கியர்கள்,
எவர்கள் கண்களுக்கும் தெரியாத அந்த மார்க்கோவின் புன்சிரிப்பு ஹாய்ஷெவின் கண்களுக்கு மட்டும் படுகிறது. எங்கே காட்டிக்கொடுத்துவிடப்போகிறாளோ? என நம் ஆவல் மேலிட தூண்டுவது, உலகம் முழுக்க வாழ்ந்துச்சென்ற தாத்தாக்களும், பாட்டிகளும் நமக்காக நம்முடைய திண்ணைகளில் பரப்பிவைத்துவிட்டுப் போயிருக்கும் கதைகளுக்குரிய வலிமை.
மார்க்கோவின் புன்சிரிப்பை பார்த்துவிட்ட ஹாய்ஷெவினுக்கு அவன் மிகுந்த அழகாய் இருப்பதாகப்படுகிறது. அந்த புன்சிரிப்பை மறைக்கும் விதமாக அந்த துருக்கிய சுல்தான்களின் வம்சாவளிப் பெண்ணான ஹாய்செவின், தன்னுடைய கைக்குட்டையைக் கீழே தவறவிடுகிறாள். அதன் பிறகு பெருமிதத் தொனியில் சொல்கிறாள் இப்படியாக… இறந்து விட்ட ஒரு கிறித்தவனின் முன்னால் நடனமாடுவது சரியல்ல, அதனால்தான் அவனுடைய வாய் தெரியாமல் இருக்க அதை மூடிவிட்டேன் என்றும், அதைப் பார்த்தாலே பயமாயிருக்கிறது என்றும். இப்படியாக இத்தொகுப்பில் உள்ள அனைத்து கதைகளுக்குள்ளும், சுதந்திரத்துக்கும், விதிக்கும் இடையிலான போராட்டத்தில் சிக்கி தவித்துக்கொண்டுதான் இருக்கிறார்கள்.
– சந்தானமூர்த்தி
சிதம்பரம்