சிறுகதைச் சுருக்கம் 75: ஐராவதத்தின் சாந்தா பார்த்த சினிமா சிறுகதை – ராமச்சந்திர வைத்தியநாத்
சிறுகதை ஆசிரியன் முழுமையான வாழ்க்கைத் தத்துவம் கொண்டிருக்கத் தேவையில்லை. சில காட்சிகளைச் சித்திரங்களாக்குகிற சில சலனங்களை மன ஏட்டில் பதிவு செய்கிற ரசவாத வித்தை மட்டுமே அவன் செய்வது.
சாந்தா பார்த்த சினிமா
ஐராவதம்
மாலதி சாந்தாவை அன்று பகல் காட்சி சினிமாவுக்கு வரச்சொல்லிக் கூப்பிட்டிருந்தாள். சாந்தா கல்லூரியில் சேர்ந்து மூன்று வருஷமாகிறது. ஒரு நாளாவது மட்டம் போட்டுவிட்டு சினிமாவுக்குப் போனது கிடையாது.
கல்லூரியிலிருந்து அரை மைல் தூரத்திற்குள்ளாகவே சினிமா தியேட்டர் இருந்தது.
“நடந்தே போயிடலாம். இங்கிலீஷ் பிக்சர்தானே? மூன்றரை மணிக்குத்தான் ஆரம்பம். நீ மத்தியானம் முதல் பீரிடு கூட கிளாஸுக்குப் போகலாம். அடுத்தாப்ல மிஸ் கோமதி கிட்ட மட்டும் கேட்டுண்டு வந்துடு போறும்.”
“ஆமாம். என் பாடு சரி, நீ என்ன பண்ணுவே?”
“நான் மத்தியானம் பூரா கட் அடிச்சுடறேன். அடுத்த டெர்ம் ஃபீஸ் கட்டும்போது அரை ரூபாய் ஃபைன் விழும் அவ்வளவுதானே?”
மாலதியால் முடியும் அரை ரூபாய் என்ன ஐம்பது ரூபாய் கூட கட்ட முடியும். ஆனால் எனக்கு வீட்டில் தினம் தருகிற அரை ரூபாயை வத்துக் கொண்டு என்ன செய்ய முடியும்? பஸ் சார்ஜ் போக தினம் மீறுகிற பத்து பைசா, கைப்பையில் இரண்டு ரூபாயாக இருந்தது. அவ்வளவுதான்.
மத்தியானம் இரண்டாவது மூன்றாவது வகுப்புகள் இங்கிலீஷ் பாடம். மிஸ் கோமதிதான் ட்யூடர். சாந்தா கடிகாரத்தில் சரியாக இரண்டு நாற்பத்தைந்துக்கு மிஸ் கோமதி முன் நின்றாள்.
“வாட் டூ யூ வான்ட்?”
“என் அண்ணா பம்பாயிலிருந்து பிளேன்லே வரார். மூன்றரை மணிக்கு வரது பிளேன். அதுனாலே..”
“கிளாஸுக்கு வரலையா?”
“ஆமாம்.”
“சரி, சரி போ. நோட்டை எடுத்திண்டு போய் காம்பொஸிஷனை மறக்காம எழுதிக் கொண்டு வந்துடு நாளைக்கு.”
“எஸ் மிஸ்.”
மாலதி காலேஜ் வாசற் பக்கத்து அசோக மரத்தின் நிழலில் நின்று கொண்டிருந்தாள்.
படம் பெரியவர்களுக்கு மட்டும் என்று போட்டிருந்தது. மாலதியும் சாந்தாவும் டிக்கட் வாங்கிக் கொண்டு உள்ளே நுழைந்தார்கள். மாலதி படத்தை இரண்டாவது தடவை பார்க்கிறாள். அவளுடைய மற்ற தோழிகள் அவளோடு முதல் தரம் படம் பார்த்தவர்கள் படம் நன்றாக இருக்கு, ஆனால் இரண்டாவது தரம் பார்க்க என்ன இருக்கு அதிலே? என்று சொல்லிவிட்டார்கள். இல்லையென்றால் சாந்தாவைத் தேடிக்கொண்டு மாலதி வந்திருக்க மாட்டாள்.
படத்தைப் பார்க்கப் பார்க்க சாந்தா பரவசம் ஆனாள். புதிதாய்க் கல்யாணம் ஆன இரண்டு பேர் தேனிலவுக்காக பிரான்ஸ் தேசத்தைச் சுற்றுகிறார்கள். குடும்பத்தைப் பற்றி, பணத்தைப் பற்றி கவலைப்படாமல் சூரிய வெளிச்சத்தில், பசும்புல் வயல்கள் நடுவில், மஞ்சள் பூக்கள் பூத்த வரப்புகள் ஓரமாய், அகன்று விரிந்த சாலைகளின் வழியாக ஓடுகிறார்கள். பாடுகிறார்கள். சண்டை போடுகிறார்கள். சமாதானம் அடைகிறார்கள்.
தன்னை மறந்தவளாய் படத்தைப் பார்த்தாள் சாந்தா. பார்க்கப் பார்க்க அந்த ஜோடியின் வாழ்க்கை இன்பத்தில் அவள் மனம் விரிவு கண்டது. அவர்கள் வாழ்க்கையைக் காட்டிலும் ரசமானதும் ரம்மியமானதும் இன்னொரு வாழ்க்கை இருக்கக்கூடும் என்று சாந்தாவுக்கு தோன்றவில்லை. தியேட்டரை விட்டு வெளியே வந்ததும்தான் வீட்டு ஞாபகம் வந்தது. சாந்தாவுக்கு எதிர்ப்பக்கம் போக வேண்டிய மாலதியும் அவசரமாய் விடை பெற்றுக் கொண்டாள்.
சாந்தா பஸ் ஸ்டாண்டில் போய் நின்றபோது மணி ஆறு. தினமும் சரியாக ஐந்து மணிக்கு வீட்டுக்குப் போய் விடுகிறவள் சாந்தா. இன்றைக்கு ஏதாவது சாக்கு சொல்லியாக வேண்டும், கால் மணி நேரத்திற்கொல்லாம் பஸ் ஒன்று வந்தது. ஒருவர் மட்டுமே இறங்கினார். நான்கு பேர் தொற்றிக் கொண்டதும் விசில் வேகமாய் ஒலித்தது. லேசாக இருட்டத் தொடங்கி விட்டது. ஆட்டோ ரிக் ஷாவில் போய் விடலாமா? கையில் கால் ரூபாய்தான் இருந்தது, வீட்டுக்குப் போய் கொடுக்கலாம் என்றால் அம்மா கேள்வி கேட்பாளே? சுற்றி இருந்த கடைகளில் எல்லாம் விளக்கு போட்டு விட்டார்கள். முற்றிலும் மறையாத வெளிச்சமும் பாதரச விளக்குகளின் ஒளியுமாக தெருவில் உருவமற்ற கனமான நிழலைப் பரப்பின.
சாந்தா வீட்டு வாசலை அடையும்போது மணி ஏழு அடித்தது. அம்மா வாசற் கேட்டருகிலேயே நின்று கொண்டிருந்தாள். சோபை குன்றிய சாந்தாவின் முகத்தை ஒரு தரம் பார்த்தாள்.
“என்னடி லேட்?”
“இல்லேம்மா, காலேஜிலே மீட்டிங்.”
வாசல் அறை நாற்காலியில் உட்காரப் போனாள் சாந்தா.
“சரி, சரி உள்ளே போய் கை கால் அலம்பிக்கோ.”
வாசல் அறை, நடுக்கூடம், சாமான் அறை, சமையலறை இவற்றைக் கடந்து குளியலறையில் நுழைந்தபோதுதான் சாந்தாவுக்குத் தன் வீட்டின் தனிமை நினைவில் மோதியது.
அப்பா சரியாக ஆறு மணிக்கு ஆபீஸிலிருந்து வந்து விடுவார். ஆறரை மணிக்கு சாப்பிட்டு விட்டு கிளம்பி விடுவார். கோயிலில் கதா காட்சேபம் இருந்தால் கேட்கப் போவார். இல்லையென்றால் ராமநாதன் வீட்டில் சீட்டாடப் போவார். திரும்ப வரப் பத்து மணி ஆகிவிடும். நேராகப் படுக்கைதான். அண்ணன் ஆபீஸ் விட்டதும் நேராக வீட்டுக்கு வருவதே கிடையாது. நாடகக் பிரியன். அவன் நடிப்பு ஒத்திகை மேற்பார்வை என்ற சதா சுற்றிக் கொண்டேயிருப்பான். வீடு திரும்பும்போது இரவு மணி பத்து பதினொன்று ஆகிவிடும்.
அம்மா மட்டும் வீட்டு வாசல் அறை விளக்கைப் போட்டுக் கொண்டு ஏதேனும் படித்துக் கொண்டிருப்பாள். ரேடியோ கேட்டுக் கொண்டிருப்பாள். சாந்தா நடுக்கூடத்தில் படித்துக் கொண்டிருப்பாள். சாந்தாவுக்கு விவரம் தெரியத் தொடங்கிய நாட்களிலிருந்து தினம் தவறாமல் நடக்கிற காரியம் இது. இத்தனை நாட்களாக சாந்தாவின் மனதில் படாமலிருந்த இந்த விஷயம் இன்று சரேலெனத் தாக்கியது.
சாந்தாவின் நெஞ்சில் துக்கம் அலை மோதியது. தான் பஸ் ஸ்டாண்டில் அரைமணி நேரம் உணர்ந்த தனிமையை அம்மா வருஷக்கணக்காக உணர்ந்திருக்கிறார். மணி ஏழு, எட்டு, ஒன்பது, பத்து என்று மணி மணியாக நிமிஷம் நிமிஷமாக அளந்து தீர்த்திருக்கிறாள், கணவன் மகன் என்று. இன்று தனக்காகவும் வாசல்படியையே பார்த்திருந்திருப்பாள்.
முகத்தைத் துடைத்துக் கொண்டு அம்மா எதிரில் நின்ற சாந்தா “அம்மா” என்றாள். அவள் மடியில் விழுந்து சிறிது நேரமேனும் அழவேண்டும் போலிருந்தது. அம்மா நெஞ்சில் உரம் ஏறியிருக்க வேண்டும். சில நிமிஷங்கள் முன்னால் வாசலருகில் நின்றவளா இவள்? அவள் முகத்தில் சலனம் எதுவும் இல்லை. அவ்வளவு ஒன்றும் கவலையுடன் காத்திருந்திருக்க மாட்டாள் என்று தோன்றியது. அவளிடம் தனக்கிருந்த இறுக்கம் தளர்ந்த சிறிது இடைவெளி ஏற்பட்டது போலிருந்தது சாந்தாவுக்கு. ஒட்டுதலும் பற்றுதலும் வயது ஏற ஏற ஓயத் தொடங்குமெனத் தோன்றியது. அவை ஓய்வதில்லை. திசை திரும்புகின்றன என்பதைத்தான் அன்று பார்த்த சினிமா நிரூபித்திருந்தது,
முகத்தை சாதாரணமாக வைத்துக் கொண்டு “அப்பா கோயிலுக்கா போயிருக்கார்? என்றாள் சாந்தா.
பின் குறிப்பு:
தமிழ்ச் சிறுகதையின் வேறுபட்ட போக்குகளை வெளிப்படுத்தும்வகையில் பல்வேறு எழுத்தாளர்களின் சிறுகதைகள் சுருக்கப்பட்டு தரப்படுகிறது, அந்தந்த எழுத்தாளர்களின் படைப்புலகில் பிரவேசிக்க இது வாசகர்களுக்கு ஒரு நுழைவாயிலாக அமையும் என்ற கருத்தின் பேரில் இச்சுருக்கம் வெளியிடப்படுகிறது.
