சிறுகதை விமர்சனம்: சந்தினி ப்ரார்த்தனா தென்னகோனின் முற்றுப்பெறாத கதையின் இருள்வெளி – தமிழில்: எம்.ரிஷான் ஷெரீப் | பாரதிசந்திரன்
உண்மையில் பல மணி நேரங்களாக உள்ளுக்குள் ஊசி தைத்தவாறு ரணத்தைப் பீறிட்டுத் தெறிக்க விட்டுக் கேட்க முடியாத அதிபயங்கரமான ஓசையால் துடித்துக்கொண்டுத் தவிக்கத் தவிக்க மனம் வாடி, ஒரு போர்வைக்குள் அசாத்தியமாய் முடங்கிக் கொண்டு நெருடலோடு இருக்கின்றன எண்ணங்கள் முற்றுப்பெறாமல்…
காற்றுவெளி தை மாத மொழிபெயர்ப்பு சிறப்பிதழில் (01/2022) வெளிவந்த ”முற்றுப்பெறாத கதை” எனும் இந்தச் சிறுகதை உண்மையில் இந்த ஆண்டின் மிகச் சிறந்த சிறுகதையாகச் சொல்லலாம். அந்த அளவிற்கு ”எம்.ரிஷான் ஷெரீப்” செய்த மொழிபெயர்ப்பும், ”சந்தினி ப்ரார்த்தனா தென்னகோனின்” மூலக்கதையும் அமைந்திருக்கின்றன.
இந்தச் சிறுகதைக்குள், நவீனமான பல நயங்கள் கொட்டிக் கிடக்கின்றன. ஐந்து காட்சிகள் தான் இக்கதையில் உள்ளன. ஆனால், ஐந்து மணி நேரப் படம் தருகின்ற உணர்வுகளை மனவெளி எங்கும் பரப்பி விட்டுச் செல்லுகிறது.
ஒரே ஒரு மையக்கோடு. அங்கிருந்து பிரிந்து செல்லும் பாதைகளில் எண்ணற்ற பயணங்களை மேற்கொள்ள வழி நீளுகின்றன. தொட்ட இடமெல்லாம் உளவியலின் வெளிப்பாடுகள். எவ்வித ஆரவாரமும் இல்லாத வகையில் கதை கூறும் முறைகள்.
வலியை உணரத்தான் முடியும். அதைச் சொல்லில் வடித்து உலவ விட முடியுமா? என்றால், முடியும் என்கிறது இச்சிறுகதை. உளவியல் முறையில் அணுகும் பொழுது இச்சிறுகதை நமக்கு வாழ்வியலின் மேம்பட்ட கருத்துருவாக்கங்களைத் தருகிறது.
எதார்த்த இயல்பினதாய்ச் செல்லும் நிகழ்வுகளின் அடிஆழத்தில் படு பயங்கரமான நெருப்புக் குழம்புகள் உடனான வெப்பமும், சொல்ல முடியாத இருள் கவ்விக் கொண்டு இருக்கின்றன. மனம் எவ்வளவு வித்தியாசமானதும் கொடூரத் தன்மை கொண்டதாகவும் இருக்கின்றது. அதில் இல்லாமல் உடல் செயல்பட முடியுமா என எண்ணவும் தோன்றுகிறது
உளவியல் முறையில், நனவோடைப் பாங்கில் சிறுகதையை அணுகும் பொழுது, ”நனவோடை மனதோடு, நனவிலி மனம் தொடர்ந்து போராடிக் கொண்டிருக்கிறது. பொதுமையில் இருந்து தூல படுத்துதலை நோக்கி அது தொடர்ந்து தாவுகிறது. அப்போது தூலமான அற்பங்களை அது காண்கிறது. இத்தகைய நனவிலி மனம் ஒரே சீராக நேர்கோட்டில் அமைவதில்லை. ஒன்றினைத் தொட்டு ஒன்று படர்வதாக அமைகிற அதன் திசைகள் எண்ணிறந்தன. வேகம், அளவு கடந்தது” எனும் டாக்டர் தி சு நடராஜனின் கூற்றையும் உடன் அழைத்துக் கொண்டு செல்ல வேண்டி இருக்கிறது.
கதை நயம்:
கதையின் முதலில், நிர்மலா சிவப்பு ”இக்ஸோரா” செடியின் கிளையை ஒடித்துக் கொண்டு வந்து, பிறிதொரு பூச்சாடியில் பதியமிட்டாள். இக்ஸோரா செடியை எப்படியும் வளர்த்து விட வேண்டும் என முயற்சி செய்தாள். அதனோடு தன் ஆழ்மனம் கொண்டு பேசினார். அதை வாஞ்சையோடு தடவிக் கொடுத்தாள்/ தனிமையில் விட்டு விடக் கூடாது என்று துணைக்கு மற்றொரு ரோஜா செடியைக் கொண்டு வந்து வைத்தாள்.
அச்செடி வளரும் என ஆவலுடன் இவள் இருந்தாலும், அச்செடி நீரை உறிஞ்சாமல் எவ்வித முன்னேற்றத்தையும் காண்பிக்காமல், ”செத்து விடுவதற்கே நினைத்தது”. ஆனால், அச்செடி செத்துவிடாமல் தாங்கித் தாங்கி எப்படியோ வளர்த்து விடுகிறாள்.
இது முதல் காட்சி. இக்காட்சிப் படிமமாக மீதி நான்கு காட்சிகளில், நிகழ்ச்சியைச் சொல்வதாக அமைந்திருக்கிறது. நவீனமான சிறுகதை அமைப்பு இதுவாகும். இதுபோல் இதற்கு முன்னர் காப்பிய இலக்கியத்தில் தான் செய்து பார்க்கப்பட்டது. அதற்குப் பின் சில நவீனமான திரைப்படங்களில் இதுபோன்று கதை சொல்லப்பட்டன. (சுருளி எனும் மலையாள படம் மற்றும் மாறா எனும் தமிழ் படம்)
நிர்மலா, சிறிதுங்க இருவரும் கணவன் மனைவி ஆவார்கள். இவர்களின் மகன் போதைப் பொருள் வைத்திருந்தமையால் கைது செய்யப்பட்டுள்ளான். சிறையில் இருக்கின்றான். இதை அறிந்து சிறிதுங்க பலமுறை இறப்பதற்கு முயற்சி செய்து, உடல்நிலை மோசமாகி, நினைவு இழந்து, கோமா நிலைக்குச் சென்று, கொஞ்சம் கொஞ்சமாக எதார்த்தமான நினைவு நிலைக்குத் திரும்புகிறார். நிர்மலா தான் காரணமாக இருந்தாள். அவர் முழுமையாகக் குணம் அடைவதற்கு. அவரை ஒரு மனிதராக உலவ விடுவதற்குப் பெரும் கஷ்டங்களை அவள் அனுபவித்து இருக்கிறாள்.
தற்பொழுது, மகனை அவ்வப்பொழுது தேடுவார். ஆனால், அடுத்தக் கணமே மறந்து விடுவார் அவரை அறியாமலேயே. தன் மகன் குறித்த எண்ணங்கள் அவரிடமிருந்து அழிந்து போய் விட்டது. இதேபோல் இவர் இருந்தால் போதும் என அவரை ஒவ்வொரு நொடியும் தாங்கித் தாங்கி வளர்க்கிறாள் அந்த இக்சோரா செடியைப் போல் நிர்மலா.
மேற்கண்ட கதை எதுவும் இச்சிறுகதையில் கூறப்படவில்லை. நிர்மலா டாக்டரிடமும், தன் கணவரிடமும், பேசும் சில பேச்சுக்கள் தான் இக்கதையைக் வாசகருக்குக் கூறுகிறது. இக்கதையை நாம் தான் யூகித்துக் கொள்ள வேண்டும். ”சொல்லாமல் சொல்லும் வித்தை” என்பார்களே, அதுதான் இது. எங்கும் கதை நேரடியாகக் கூறப்படாத சிறப்பை உடையது இக்கதை.
கதையின் கடைசியில், ”இக்ஸோரா” செடி துளிர்க்கும். அதைக் கம்பளிப்பூச்சி ஒன்று, தின்பதற்கு ஏறிக்கொண்டிருக்கும். அதையும் நிர்மலா கண்டு பிடித்துத் தூக்கி எறிந்து விடுகிறார். செய்தித்தாளில் தன் மகனைப் போன்று போதைப் பொருள் வைத்திருந்த ஒரு இளைஞனைப் பற்றிய செய்தி வந்து இருக்கும். அதைக் கணவர் படித்து விடாமல், அந்தப் பேப்பரை மட்டும் தனியாக எடுத்து விடுவாள். பின் தன் கணவரிடம் படிக்கக் கொடுப்பாள், அந்தக் கம்பளிப்பூச்சியை எடுத்ததைப் போல்.
இக்கதையைச் சமூக நோக்கில் பார்த்தால், போதைப் பொருளினால் எத்தனை குடும்பங்கள் பாதிக்கப்படுகின்றனர் என்பதையும் அதன் சோகம் எப்படிப்பட்டது என்பதையும் இனம் காணமுடியும்.
கணவனை, மகன் இல்லாத சோகத்தை, மறந்து, காப்பாற்ற வேண்டும். எத்தகு சோகம். நிர்மலா சிறு பூச்செடியைக் கூட உணர்வோடு பார்த்து வளர்க்கின்ற மனதை உடையவள். அவளுக்கு இப்பேர்பட்ட துன்பம் வரலாமா? என்பதான கேள்விகள் சிறுகதை படித்து முடித்ததும் நம்மை வாட்டி வதைக்கின்றன.
கணவனை மனைவியும், மனைவியைக் கணவனும், கடைசிக் காலத்தில் எப்படிக் கவனித்துக் கொள்கின்றனர். புரிந்து கொள்கின்றனர் என்பதை இருவரின் செயல்பாடுகள் அழகுற எடுத்துக் கூறுகின்றன. இதைவிடச் சொர்க்கம் வேறுண்டோ? எனும்படியான புரிதல்கள், பேச்சுக்கள், நடத்தைகள்.
மென்மையும், மேன்மையும் கொண்ட இவர்களின் வாழ்வில், சுகம் பாழ்பட்டு நிற்பதையும், சோகமும் துன்பமும் தலைதூக்கி ஆடிக் கொண்டிருப்பதையும் உலக இயல்பு என்று கூறி அழுவதை விட வேறு என்ன கூறிவிட முடியும்?
நிர்மலா சிறிதுங்க இருவரின் வாழ்வு, அவர்களின் நேசம், ஒருவருக்கு ஒருவர் கவனித்துக் கொள்ளும் தன்மை என்பதைப் படிக்கும் போது, நாம் பூரணத்துவமாய் வாழ்வை உணர்ந்துகொண்டால், என்னதான் கஷ்டமும், துன்பமும் வந்தாலும், அன்போடு வாழும் வாழ்வை மறந்து விடக்கூடாது என்பதைப் புரிந்துகொள்ள முடியும்.
பாரதிதாசனுக்குப் பிறகு, இன்னொரு ”முதியோர் காதல்” இலக்கியமாய் ஆகியிருக்கிறது.