விவாதங்களில் ஈடுபடும் ஆர்வத்துடன் கல்லூரிக்கு வந்த என்னால் அங்கே சுய தணிக்கையை மட்டுமே காண முடிந்திருக்கிறது – எம்மா கேம்ப் | தமிழில்: தா. சந்திரகுரு
வர்ஜீனியா பல்கலைக்கழகத்தில் சீனியராக உள்ள எம்மா கேம்ப் ‘கல்வியில் தனிநபர் உரிமைகளுக்கான அறக்கட்டளை’யில் பயிற்சி பெற்றவர். கல்வி வளாகத்திற்குள்ளே சுதந்திரமான பேச்சு குறித்து பல்கலைக்கழகத்திலிருந்து வெளியாகின்ற ‘தி கவாலியர் டெய்லி’ என்ற மாணவர்களுக்கான செய்தித்தாளில் அவர் கட்டுரைகள் எழுதியுள்ளார்.
ஒவ்வொரு வாரமும் நான் பாலினம், பாலுறவு குறித்த பாடத்தில் எழுகின்ற அறநெறி சார்ந்த சிக்கலான கேள்விகளை என்னுடன் விவாதிக்கத் தயாராக இருக்கின்ற தத்துவவியல் துறைப் பேராசிரியரின் அலுவலக நேரத்திற்காகக் காத்துக் கிடப்பேன். நாங்கள் பேசுவதை எவரேனும் ஒட்டுக் கேட்டு விடக் கூடாது என்பதைப் போன்று பெரும்பாலும் குரலைத் தாழ்த்தியே நாங்கள் பேசிக் கொள்வோம். இறுதிக்கட்ட படிப்பை நான் முடித்துக் கொண்டிருக்கும் அந்த வர்ஜீனியா பல்கலைக்கழக வளாகத்தில் நடைபெறுகின்ற பல உரையாடல்களையும் மிகவும் அமைதியான குரல்களும், கவலையான தோற்றங்களுமே இப்போது ஆக்கிரமித்துக் கொண்டிருக்கின்றன.
மாணவர் மன்றத்தில் நடைபெறுகின்ற பன்முகத்தன்மை பயிற்சியின் போது மிகவும் பொருளுள்ளதாக ஆனாலும் லேசாகப் புண்படுத்தும் வகையில் ஏதோவொன்றைச் சொன்ன மாணவனை ஒதுக்கி வைத்ததற்காக வருத்தப்பட்ட என்னுடைய தோழி தன் குரலைத் தணித்துக் கொள்ள வேண்டியிருந்தது. சமகாலத்து விமர்சனத்திலிருந்து தாமஸ் ஜெபர்சனைப் பாதுகாக்கும் வகையிலான விரிவுரை பற்றி குறிப்பிட்ட போது தன்னுடைய படுக்கையறை கதவை மூடி வைத்த என்னுடைய மற்றொரு நண்பர் ‘நாம் பேசுவதை என்னுடைய ரூம்மேட் கேட்டு விடப் போகிறார்’ என்று விளக்கம் கூறினார்.
பேராசிரியர்கள், சகமாணவர்களிடமிருந்து கற்றுக் கொள்ள வேண்டும் என்ற ஆவலுடனே நான் இந்தக் கல்லூரிக்கு வந்தேன். அறிவார்ந்த பன்முகத்தன்மை, கடுமையான கருத்து வேறுபாடுகளை வென்றெடுக்கும் சூழல் குறித்து உண்மையில் எனக்கு மிகுந்த மரியாதை இருந்தது. ஆனால் என்னுடைய கல்லூரி அனுபவமோ முற்றிலும் மாறாக மிகவும் கடுமையான கருத்தியல் இணக்கம் கொண்டதாகவே வரையறுக்கப்பட்டது. அனைத்து அரசியல் சார்புடைய மாணவர்களும் – தங்களுடைய வகுப்பறை விவாதங்களில், நட்பு உரையாடல்களில், சமூக ஊடகங்களில் – தாங்கள் உண்மையில் என்ன நினைக்கிறோம் என்பதைச் சொல்வதை மறைத்துக் கொள்ளவே செய்கிறார்கள். கருக்கலைப்பு உரிமைப் போராட்டங்களில் கலந்து கொண்டவளாக, இனவெறிக்கு எதிராக நிற்க வேண்டியது பற்றி எழுதிய தாராளவாதியாக இருந்த போதிலும் சில சமயங்களில் நானும் என் மனதில் இருப்பவற்றை அப்படியே முழுமையாகப் பேசுவதற்கு அச்சப்படுபவளாகவே இருந்து வருகிறேன்.
பெரும்பாலும் விரும்பப்படாத கருத்துக்களுக்கு வகுப்பறைகளுக்குள் ஏற்பட்டிருக்கின்ற பின்னடைவு மிகவும் சாதாரணமானதாகவே உள்ளது. மாணவர்கள் பலரும் அதுபோன்ற கருத்துகளுக்கான ஆதரவு அளிப்பதை நிறுத்திக் கொண்டு விட்டனர். தங்களுடைய பேச்சுகளைத் தணிக்கை செய்து கொள்ளாவிட்டால் குறைவான மதிப்பெண்கள் (கிரேடுகள்) வழங்கப்பட்டு விடும் என்று அவர்கள் சில சமயங்களில் அச்சப்படவும் செய்கிறார்கள்.
‘காலேஜ் பல்ஸ்’ மூலம் 159 கல்லூரிகளில் 37,000க்கும் மேற்பட்ட மாணவர்களைக் கொண்டு 2021ஆம் ஆண்டு நடத்தப்பட்ட கணக்கெடுப்பில் எண்பது சதவிகித மாணவர்கள் குறைந்தபட்சம் சில நேரங்களிலாவது தங்களை இவ்வாறு சுய-தணிக்கை செய்து கொள்கிறார்கள் என்று தெரிய வந்திருக்கிறது. சர்ச்சைக்குரிய தலைப்பில் தங்களுடைய கருத்துக்களை வெளிப்படுத்திய போது ‘சற்று சங்கடமாக’ அல்லது ‘மிகவும் சங்கடமாக’ இருப்பதை வகுப்பறைகளில் உணர்ந்தோம் என்று நாற்பத்தெட்டு சதவிகித இளங்கலை மாணவர்கள் விவரித்திருந்தனர். அதுபோன்ற கருத்துடன் வர்ஜீனியா பல்கலைக்கழகத்தில் கணக்கெடுக்கப்பட்டவர்களில் ஐம்பத்தியேழு சதவிகிதம் பேர் இருந்தனர்.
என்னைப் பொறுத்தவரை ஒரு வகுப்பறை விவாதம் மோசமாக இருக்கும்போது அதை என்னால் சொல்ல முடியும். இரண்டாம் ஆண்டு பெண்ணியக் கோட்பாடு வகுப்பில் இந்திய விதவைகள் மேற்கொள்கின்ற தற்கொலையாக உள்ள ‘சதி’ எனப்படுகின்ற சடங்கின் வரலாற்று நடைமுறையை இந்தியரல்லாத பெண்கள் விமர்சிக்கலாம் என்று நான் கூறினேன். அதுபோன்ற சிந்தனை கல்வி விவாதத்திற்காக ஏற்றுக் கொள்ளத்தக்கதாகவே இருக்கிறது என்றாலும் அது என்னுடைய வகுப்புத் தோழர்கள் பலருக்கும் ஆட்சேபணைக்குரியதாகவே இருந்தது.
எனது கருத்தைக் கேட்ட அந்த வகுப்பறை பதற்றமானது. அங்கிருந்தவர்கள் தங்கள் இருக்கைகளில் இருந்து மாறி அமர்ந்து கொள்வதைக் கண்டேன். யாரோ ஒருவர் மிகவும் கோபமடைந்தார். அதற்குப் பின்னர் அங்கிருந்த அனைவருமே கோபமடைந்தனர். பேராசிரியர் அந்த விவாதத்தை முன்னகர்த்த முயன்ற போது நான் மிகவும் சங்கடமாக உணர்ந்தேன். தொடர்ந்து அதுகுறித்து பேசுவதற்கான வாய்ப்புகள் குறைவாக இருப்பதைக் காண முடிந்தது. சொந்தக் கருத்துகளின் மீதே நம்பிக்கையிழந்தவளாக நான் மாறியிருந்தேன்.
உண்மையில் அதிர்ந்து போனேன் என்றாலும் பேசாமல் இருக்கக்கூடாது என்றே நான் தீர்மானித்தேன். சகமாணவர்களின் வெறுப்பு என் மீது தொற்றிக் கொண்டது. அந்தக் குழுவில் வரவேற்கத்தக்க உறுப்பினராக இருந்த என்னால் அதற்குப் பின்னர் அவ்வாறாக இருக்க இயலவில்லை.
மற்ற மாணவர்களின் கருத்துகளுக்கு எதிர்வினையாற்றுவதிலும் அதே போன்ற எதிர்வினைகளையே அந்த செமஸ்டர் முழுவதும் என்னால் காண முடிந்தது. மிகவும் குறைவான வகுப்புத் தோழர்களே பேசுவதைக் கேட்க முடிந்தது. இறுதியில் எங்களுடைய விவாதங்கள் அனைத்தும் ஒரே மாதிரியான குரலை எதிரொலிக்கின்ற வகையிலே மாறிப் போயின. செழுமையான, உறுதியான விவாதங்கள் இல்லாததால் நாங்கள் சமூக ரீதியாக மிகவும் பாதுகாப்பான கருத்துகளுக்குள்ளாக மட்டுமே மூழ்கிப் போனோம்.
மிகவும் கடினமான விவாதங்களின் போது விமர்சிக்கப்படுவது – அது மிகவும் கடுமையாக இருந்தாலும்கூட – என்னை ஒருபோதும் தொந்தரவு செய்ததில்லை. ஆற்றல்மிக்க விவாதங்கள் நிறைந்த வகுப்பறைகளே நமக்குத் தேவைப்படுகின்றன. ஆனால் விமர்சனம் என்பது பொதுவெளியில் அவமானப்படுத்துவது என்று மாறும் போது அது கற்றல் செயல்பாட்டை முடக்குவதாகி விடுகிறது.
தங்கள் வகுப்பறைகளில் ஏற்பட்டிருக்கும் மாற்றத்தை பேராசிரியர்களும் கவனித்துள்ளனர். இவ்வாறான சுய-தணிக்கை மாணவர்களிடம் பரவியிருப்பதற்கு இரண்டு காரணிகள் காரணமாக இருப்பதாக தான் நம்புவதாக இங்குள்ள சமூகவியல் பேராசிரியரான பிராட் வில்காக்ஸ் என்னிடம் கூறினார். ‘முதலாவதாக சமூக ஊடகங்களில் தங்கள் சகாக்களால் விமர்சிக்கப்படுவது குறித்து மாணவர்கள் பயப்படுகிறார்கள்’ என்று கூறிய அவர் ‘இரண்டாவதாக, ஆசிரியர்கள், நிர்வாகிகள், ஊழியர்களிடமிருந்து மாணவர்கள் கேள்விப்படுகின்ற பெரும்பாலான செய்திகள் முற்போக்கானவையாக இருப்பதால், வகுப்பறை மற்றும் வளாக உரையாடல்கள், விவாதங்களில் அவ்வாறான செய்திகளுக்கு இணக்கமாக இருக்க வேண்டும் என்ற மறைமுக அழுத்தத்தை அவர்கள் உணர்கிறார்கள்’ என்றார்.
விதிமுறைக்குப் புறம்பாக எதையாவது சொல்வதால் ஏற்படும் விளைவுகள் மிகவும் மோசமாகவே இருக்கும். எங்கள் விவாதக் கழகத்தில் ஸ்டீபன் வீசெக்கை நான் சந்தித்தேன். படித்து முடித்து வெளிச்செல்கின்ற, முதலாம் ஆண்டு வலுவாக விவாதம் செய்பவராக இருக்கும் அவர் கூட்டங்கள் முடிந்த பிறகு சுத்தம் செய்ய அடிக்கடி உதவுவார். அவரும் பழமைவாதிதான். தங்களை வலுவான குடியரசுக் கட்சிக்காரர் அல்லது பலவீனமான குடியரசுக் கட்சிக்காரர் என்று வர்ஜீனியா பல்கலைக்கழகத்தில் கணக்கெடுக்கப்பட்ட மாணவர்களில் ஒன்பது சதவிகிதம் பேர் மட்டுமே விவரித்துக் கொண்டிருப்பது அவரை மிகவும் சிறுபான்மையினராகவே இனம் காண்கிறது.
சில நேரங்களில் ஒரு விருந்தில் அல்லது கேப்பெல்லா ஒத்திகையில் அல்லது வகுப்பறையில் மோதலைத் தவிர்ப்பதற்காக தன்னுடைய நம்பிக்கைகள் குறித்து நேரடியான பொய்களை அடிக்கடி தான் சொன்னதாக அவர் என்னிடம் கூறினார். அரசியல் என்று வரும்போது ‘அதிலிருந்து தப்பிக்கும் வழிக்கே நான் சென்றிருக்கிறேன்’ என்று கூறிய அவர் ‘விஷயங்களை எந்த வார்த்தைகளில் சொல்வது என்பது பற்றி மிகவும் கவனமாக சிந்திக்க வேண்டும் என்பதால் நான் எப்போதும் மிகுந்த பதட்டத்துடனே இருந்திருக்கிறேன். அது கவலையைத் தூண்டுவதாக இருக்கிறது’ என்றார்.
அதுபோன்ற கவலைகள் பழமைவாதிகளை மட்டுமே பாதிப்பதில்லை. முற்போக்கான நான்காம் ஆண்டு மாணவியான அபி சாக்ஸுடன் பேசினேன். ஊடகங்களில் பாலினப் பாகுபாடு குறித்து நடைபெற்ற வகுப்பறை விவாதத்தின் போது எல்லோருமாகச் சேர்ந்து கொண்டு நியாயமற்ற வகையில் தன்னை விமர்சித்ததை தான் அனுபவித்ததாக அவர் என்னிடம் கூறினார். கேப்டன் மார்வெல்’ திரைப்படத்தை பெண்ணியத் திரைப்படம் என்று கூறிய தன்னுடைய பேராசிரியருடன் அவரால் உடன்பட முடியவில்லை. திரைப்படத்தின் தலைப்புக் கதாபாத்திரத்தின் உள்மோதல், உணர்வுகளுக்குப் பதிலாக அந்தக் கதாபாத்திரத்தின் உடல் வலிமையையே அந்தப் படம் வலியுறுத்தியது என்ற கருத்தே சாக்ஸிடம் இருந்தது. தன்னுடைய கருத்து தனது பேராசிரியையை விரக்தியடையச் செய்ததாகவே தனக்குத் தோன்றியது என்று சாக்ஸ் கூறினார்.
அபி சாக்ஸ்
தன்னுடைய வகுப்புத் தோழர்கள் அதைக் கவனித்ததாகக் கூறிய சாக்ஸ் ‘என்னுடன் உடன்படுவதை ஒருவர் பின் ஒருவர் என்று தொடர்ச்சியாக அங்கிருந்த பலரும் மிகவும் தீவிரமாக மறுக்கத் துவங்கினர்’ என்றார். தான் திணறுவதை சாக்ஸ் உணர்ந்தார். ‘அனைவரும் ஒன்று சேர்ந்தது அந்த அறையை உற்சாகப்படுத்தியது. அவர்கள் அனைவரும் சரியான கருத்து கொண்ட குழுவின் ஒரு பகுதியாக இருக்க விரும்பினர்’ என்று கூறிய சாக்ஸ் அந்த அனுபவம் தன்னை மீண்டும் வகுப்பிற்குச் செல்ல விருப்பமற்றவளாக்கியது என்றார். வகுப்பில் தொடர்ந்து கலந்து கொண்ட போதிலும் விவாதங்களில் மிகவும் குறைவாகவே தான் பங்கேற்றதாகவும், கண்ணுக்குத் தெரியாதவளாகி விட்டதைப் போல தன்னை உணர்ந்ததாகவும் அவர் சொன்னார்.
இதே போன்று மற்ற வளாகங்களும் போராடியவாறே இருக்கின்றன. சாரா லாரன்ஸ் கல்லூரியின் அரசியல் துறைப் பேராசிரியரான சாமுவேல் ஆப்ராம்ஸ் என்னிடம் ‘கருத்துகள் குறித்த பன்முகத்தன்மை கொண்ட பார்வை இப்போது உயர்கல்வியில் மிகவும் புனிதமான, முக்கியமான விழுமியமாகக் கருதப்படுவதில்லை’ என்று கூறினார். அதை நேரில் உணர்ந்தவராகவும் அவர் இருக்கிறார். பல்கலைக்கழக நிர்வாகிகளுக்கிடையே கருத்தியல் பன்முகத்தன்மை இருக்கவில்லை என்று தான் கருதியதைக் கொண்டு விமர்சித்து 2018ஆம் ஆண்டில் தி டைம்ஸுக்கு அவர் கட்டுரையொன்றை எழுதினார். அதற்குப் பிறகு, அவரது அலுவலகக் கதவு உடைத்து நொறுக்கப்பட்டது. அவரது பதவிக்காலத்தை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை முன்னிறுத்தி மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களுடைய முயற்சிகள் தோல்வியுற்ற போதிலும் சக ஆசிரியர்களின் எதிர்வினைகளால் மிகுந்த அதிருப்தியுடனே டாக்டர் ஆப்ராம்ஸ் இருந்து வருகிறார். அந்தச் சம்பவத்திற்கு பதிலளிக்கும் விதமாக கருத்து சுதந்திரத்தை ஆதரிக்கும் விதத்தில் தயாரிக்கப்பட்ட அறிக்கையில் அந்தக் கல்லூரியில் உள்ள ஆசிரியர்களில் பத்து சதவிகிதத்திற்கும் குறைவாக இருபத்தியேழு ஆசிரியர்கள் மட்டுமே கையெழுத்திட்டிருந்தனர்.
டாக்டர் ஆப்ராம்ஸ் இன்றைய வளாகங்களில் உள்ள சூழல் தன்னுடைய இளங்கலை படிப்பு அனுபவத்திலிருந்து முற்றிலும் வேறுபட்டதாக இருக்கிறது என்கிறார். தன்னுடைய இளங்கலை படிப்புகளின் போது சக மாணவர்களுடன் நடந்த இரவு நேர விவாதங்களை நினைவு கூர்ந்த அவர், அந்த விவாதங்கள் சில சமயங்களில் தன்னைக் காயப்படுத்தினாலும் அவையே தன்னுடைய மனதைப் புதிய சிந்தனைகளுக்குத் திறந்து விட்ட பரவசத்திற்கு வழிவகுத்துக் கொடுத்தன என்கிறார். அதுபோன்ற சூழலை இந்த சுய-தணிக்கை அச்சுறுத்திக் கொணடிருக்கிறது என்று கவலைப்படுகின்ற ஆப்ராம்ஸ் கல்லூரி நிர்வாகங்கள் ‘கீழ்ப்படிதல் மற்றும் பயம் சார்ந்த கலாச்சாரத்தை’ மாணவர்களிடம் உருவாக்கி நடைமுறைப்படுத்தி வருகின்றன என்ற வாதத்தை முன்வைக்கிறார்.
மேலும் தைரியமாக இருங்கள் என்று மாணவர்களை ஊக்குவிப்பது மட்டுமே சுய- தணிக்கைக்கான தீர்வாக இருக்கப் போவதில்லை. பலராலும் விரும்பத்தகாத ஒன்றைச் சொல்லி சமூக நிலையைப் பணயம் வைப்பது தைரியமாகுமா? ஆமாம் – கல்லூரி மாணவர்களிடம் – எங்களில் நாற்பத்தியெட்டு சதவிகிதம் பேர் எங்களுடைய கருத்துக்களைப் பகிர்ந்து கொள்வதை மிகவும் சங்கடமான காரியமாகவே உணர்கின்றோம் – நீங்களே இந்தப் பிரச்சனையைச் சுதந்திரமாகத் தீர்த்துக் கொள்ளுங்கள் என்று எங்களிடம் கேட்டுக் கொள்வது நியாயமானதா? அதுகுறித்த முயற்சிகளை மேற்கொண்டு பார்த்திருக்கிறேன் என்பதால் அவ்வாறு இருக்க முடியாது என்று என்னால் உறுதியாகச் சொல்ல முடியும் – என்னை நம்புங்கள்.
தங்கியிருக்கும் அறைக் கதவுகளில் ஒட்டக் கூடிய சுவரொட்டிகளின் அளவு குறித்து எடுக்கப்பட்ட பல்கலைக்கழகத்தின் கொள்கை முடிவை அரசியலமைப்பின் முதல் திருத்தம் குறித்திருந்த மிகப் பெரிய தாளை கதவில் ஒட்டி வைத்ததன் மூலம் நான் எதிர்த்து நின்றேன். நான் ஒட்டிய அந்த தாளை பல்கலைக்கழகம் அகற்றியது. அதற்குப் பதிலளிக்கும் விதமாக நிர்வாகிகளுடன் இணைந்து குறைவான கட்டுப்பாடுகள் கொண்ட கொள்கையை உருவாக்கும் வகையில் நான் பணியாற்றினேன். பல்கலைக்கழகப் பத்திரிகையின் கட்டுரையாளர் என்ற முறையில் கருத்துச் சுதந்திரத்தைத் தழுவிக் கொள்ளுமாறு மாணவர்களிடம் கேட்டுக் கொண்டேன். அதற்கு எதிர்வினையாக நண்பர்களை இழந்ததுடன் ட்விட்டரில் அதிக விமர்சனங்களையும் நான் எதிர்கொள்ள வேண்டியிருந்தது. மிகவும் தைரியமாகவே இருந்தேன் என்றாலும் ஆதரவு எதுவுமில்லாத என்னைப் போன்ற ஒரு சில மாணவர்களின் செயல்பாடுகள் ஓரளவிற்கு மாறவே செய்திருக்கிறது.
நம்மிடையே உள்ள சமூகத் தொடர்புகளை பல்கலைக்கழகங்களால் மாற்ற முடியாது என்றாலும் அவற்றால் கல்விச் சூழல்களில் கருத்தியல் பன்முகத்தன்மையை வளர்த்தெடுக்க முடியும். கருத்துச் சுதந்திரத்தை ஆதரிக்கும் பொது அறிக்கைகளை வெளியிடுவதைக் காட்டிலும் பல்கலைக்கழகங்கள் செய்ய வேண்டியவை அதிகம் இருக்கின்றன. கருத்தியல் பன்முகத்தன்மைக்கு முன்னுரிமை அளிக்கின்ற வளாக கலாச்சாரமும், வகுப்பறையில் கருத்து வெளிப்பாட்டைப் பாதுகாக்கிற வலுவான கொள்கைகளுமே நமக்குத் தேவைப்படுகின்றன.
சர்ச்சைக்குரிய பேச்சாளர்களை ரத்து செய்ய அல்லது நியாயமற்ற மாணவர் கோரிக்கைகளை ஏற்றுக் கொள்ள பல்கலைக்கழகங்கள் மறுக்க வேண்டும். வகுப்பறை விவாதங்களில் அறிவுசார் பன்முகத்தன்மை, இணக்கமின்மைக்கு வெகுமதி அளிக்குமாறு அவை பேராசிரியர்களை ஊக்குவிக்க வேண்டும். மிக முக்கியமாக பேச்சுகள் மீது கட்டுப்பாடுகளை விதிக்கின்ற விதிகளை, கருத்தியல் மோதலை அசாதாரணமாகக் கருதுகின்ற ஒரு சார்பு எதிர்வினைக் குழுக்களை அவை உடனடியாக நிராகரித்திட வேண்டும்.
எங்களுடைய கருத்துக்கள் மீதான – எங்களை வளர அனுமதிக்கும் வழிகளில் – எதிர்ப்புகள் இல்லாமல் பல்கலைக்கழகக் கல்வியின் முழுப் பலன்களையும் எங்களால் அனுபவிக்க முடியாது. சாக்ஸ் என்னிடம் கூறியதைப் போல் ‘நம்முடைய கருத்துகளுக்காக ஒருவரையொருவர் தண்டித்துக் கொள்ளாமல் இந்தப் பிரச்சனைகள் குறித்த உரையாடல்களை நடத்திட வேண்டும்’.
https://www.nytimes.com/2022/03/07/opinion/campus-speech-cancel-culture.html
நன்றி: நியூயார்க் டைம்ஸ்
தமிழில்: தா.சந்திரகுரு