*சாரல் மழை* சிறுகதை – சாந்தி சரவணன்
பேருந்து ஜன்னல் ஓரத்தில் அமர்ந்து கொண்டு மேக கூட்டங்கள் அமைத்த மேடைகளைப் பார்த்தவண்ணம் பேருந்தில் பயணம் செய்து கொண்டு இருக்கிறாள் கமலி.
மேகங்களைக் கொண்டு வெள்ளை நிற தூண்களை இரும்புக் கம்பிகள், செங்கற்கள், சிமெண்ட் என எதுவும் இல்லாமல் இத்தனை நுட்பமாக சித்தரிக்கும் திறன் கொண்ட அந்த ஓவிய பிரம்மா யாராக இருக்கும்?. பிரம்மாண்ட மாளிகை, முகப்புக் கதவு என சிறுவயதில் பாட்டி சொன்ன கதைகள் நினைவுகளில் மழைத் துளி போல சிதறல்களாகச் சிதறிய வண்ணமிருந்தன.
மழைக்குப் பின்னர் வரும் இந்த மாளிகையைப் பார்த்து, வண்ணம் பூசித் தன் திறமைகளை மேம்படுத்திக் கொண்டவர் பலர்.
சில பக்தகோடிகளுக்கு கணபதி, சாய்பாபா, அம்மன் என காட்சி கொடுக்கும் மேகக் கூட்டங்களும் உண்டு. இயற்கை ஆர்வலர்களுக்கு மரங்களாகவும் கொடிகளாகவும் காட்சி கொடுக்கும் மேகக் கூட்டங்களும் உண்டு.
காலை நேரச் செய்திகளில் இன்று மேகங்கள் அடர்த்தியாக உள்ளது. பலத்த மழை வரலாம் என்று வெளியான வானிலை அறிவிப்பு மகன் ரித்விக்குக்கு பெரும் கொண்டாட்டம். குதிக்க ஆரம்பித்து விட்டான். ‘அய் ஜாலி ஜாலி ஸ்கூல் லீவு…’ என. அவன் நினைத்தபடி அவனுக்குப் பள்ளி விடுமுறை அறிவித்து விட்டனர். கணவன் கமல் அன்று டே ஆஃப். கணினித் துறையில் மேலாளராக அம்பத்தூரில் பணி புரிகிறான்.
அவர்கள் இருவரும் கமலியை விடுமுறை எடு என்று கட்டாயப்படுத்தினார்கள். ஆனால் கமலி செங்கல்பட்டில் இருக்கும் தனியார் நிறுவனத்தில் மேலாளராக பணி புரிகிறாள். இன்று ஆடிட்டிங் என்பதனால் அவசியம் அலுவலகம் செல்ல வேண்டிய சூழல். மனம் இல்லாமல் தான் காலையில் அலுவலகம் சென்றாள். வழக்கம்போல வானிலை அறிக்கை அன்றும் பொய்யானது என நினைக்கையில் மாலை திடீரென கருமேகம் சூழ ஆரம்பித்தது. லேசாக மழை ஆரம்பித்தது..
சில இடங்களில் பலமாகவும் சில இடங்களில் மழை இல்லாமலும் இருந்தது. இதே போன்ற காட்சியை சென்னை மெரினா சாலையை கடக்கும் போது பலமுறை பார்த்து இருக்கிறாள். அடையாரில் இருந்து பயணிக்கும் போது “லைட் ஆவுஸ்” வரை நல்ல மழை இருக்கும். சாலைகள் மழைச் சாரலில் கழுவி சுத்தம் செய்யப்பட்டு இருக்கும். அதன் பின்னர் லேடி வெலிங்டன் கல்லூரி வரை சாலையில் ஒரு துளி கூட மழை துளி இருக்காது. சிறிது இடைவெளி விட்டு விவேகானந்தர் இல்லம் ஆரம்பித்து மழை பெய்து கொண்டு இருக்கும்.
அதே போன்ற காட்சிகள் இன்று செங்கல்பட்டிலிருந்து வரும் வழியில் காண முடிகிறது. நல்ல மழை. வண்டலூரில் மழை இல்லை. அதன் பின்னர் சென்னை வரையில் நல்ல அடர்ந்த மழை.
மழையின் காரணமாக வெளியே சென்ற அலுவலக வாகனம் மழையில் மாட்டிக் கொண்டு வர தாமதமானதால் அலுவலகத்தில் இருந்து அரசு பேருந்தில் பயணித்துக் கொண்டு இருக்கிறாள் கமலி.
செங்கல்பட்டிலிருந்து சென்னை செல்லும் சாலை கட்டிடங்களையும் காணலாம். இயற்கை அரங்கேற்றத்தையும் காணலாம்.
மழை வேகமாக வர வர காகங்கள் தன் கூட்டை நோக்கி வேகமாகப் பறந்து சென்று கொண்டிருந்தன தூக்கணாங்குருவி தன் கூட்டுக்குள் கதகதப்பில் சென்று அமர்ந்து கொண்டது..
மீன்கள் ஆற்றில் ஷவர் பாத் எடுத்துக் கொண்டு இருந்தன. கொக்குகள் அந்தக் காட்சியை ரசிப்பது போல வந்து மீன்களை உணவாக்கிக் கொண்டன.
வழியில் சாலையோரத்தில் பிழைத்திருந்த என்று கூட சொல்ல முடியாது எட்டு வழி சாலையில் தப்பித்த மரங்கள் அனைத்தும் தலை குளித்தன.
சிறுவயதில் காகிதத்தில் சாதா கப்பல், கத்திக் கப்பல் செய்து விளையாடியது எல்லாம் கமலியின் நினைவுகளை ஆட்கொண்டது.
சாலைத் தொழிலாளி பிள்ளைகள் குடிசையில் இருந்த சிறு சிறு ஓட்டையின் வழியே வரும் மழை துளிகளை சின்ன சின்ன பாத்திரம் வைத்து மழை தண்ணீரை பிடித்துக் கொண்டு இருந்தார்கள். இன்று அவர்களுக்குப் புதிய அனுபவம். இத்தனை நாள் அந்த ஓட்டைகளின் வழியே இரவில் வானத்தில் இருக்கும் நட்சத்திரங்களைக் கணக்கெடுப்பு செய்து கொண்டு இருந்தவர்கள் இன்று தண்ணீர் பிடிக்கும் பணியில் மும்முரமாக இருந்தனர். இதில் ஒருவர் மீது ஒருவர் மழை நீரைப் பிடித்து அடித்து விளையாடிக் கொண்டு இருந்தனர்.
ஐஸ் கட்டிகள் வானத்தில் இருந்து அங்காங்கே விழுந்த வண்ணம் இருந்தது. மொட்டை மாடியில் சிறுவயதில் மழையில் நனைந்தபடி அந்த ஐஸ் கட்டிகளைப் பிடிக்க முயற்சி செய்தது அவளின் நினைவுகளில். அப்படி அவள் செய்யும் போது அம்மா, ‘புது மழை ஜோரா வரப் போகுது. கீழே இறங்கி வா’ என கத்திக் கொண்டே இருப்பார்கள்.
பயணத்தில் நினைவுகள் முன்னும் பின்னும் கடல் அலைகள் போல பின் போய் முன்வந்து கொண்டு இருந்தது.
வழக்கமான நேரத்தை விட இன்று பயண நேரம் கூட தான்.
கமல் இரண்டு முறை அலைபேசியில் அழைத்து விட்டான். ஆனால் போக்குவரத்து மழை நீரின் தேக்கத்தால் அங்காங்கே தடைபட்டது. கோயம்பேடு பேருந்து நிலையத்தில் கமல் வந்து காத்துக்கொண்டு இருந்தான். இனி இதற்குமேல் வீட்டுக்குப் போய் சமைக்க வேண்டுமே என்ற கவலை கமலியை ஆட்கொண்டது. அலுவலகப் பணி இன்று வழக்கத்தைவிட அதிகம் தான்.
கோயம்பேடு பேருந்து உள்ளே செல்லும் முன்பே கண்டக்டர் பேருந்தை கேட்டின் முன் பக்கம் நிறுத்தினார்.
அவளை ஒரு மழையின் சாரலில் கூட நனையவிடாமல், கமல் குடையை விரித்து, “பார்த்து பத்திரமாக வா”, என காரின் அருகே அழைத்துச் சென்றான்.
“என்னம்மா ரொம்ப வேலையா?”
“ஆமாம் கமல், ரொம்ப சோர்வாக இருக்கு. ரித்விக் என்ன செய்றான்?”
“ராமன் அங்கிள் வீட்டில் விட்டு விட்டு வந்து இருக்கிறேன். வாண்டு என்ன செஞ்சுட்டிருக்கானோ தெரியல” என்றான்.
சிறிது நேரத்தில் வீடு வந்து விட்டது. அவர்கள் அம்பத்தூரில் இரண்டு மாடி அடுக்ககத்தில் கூடியிருக்கிறார்கள். கீழே கார் பார்க். முதல் மாடியில் ராமன் சார் வீடு. இவர்கள் வீடு இரண்டாவது மாடியில் இருக்கிறது.
இந்த ரம்மியமான நேரத்தில் முதல் மாடியில் குடியிருக்கும் தொண்ணூறு வயது இளைஞன் ராமன், 81 வயது இளைஞி ஜானுவிடம் சூடாக பஜ்ஜி வேண்டும் என்று அடம் பிடித்துக் கொண்டு இருந்தார். ரித்விக் சம்மந்தம் இல்லாமல் போகோ சானலில் ஏதோ பார்த்துக் கொண்டு இருந்தான்.
கமலியின் பேச்சு சத்தம் கேட்டவுடன், ‘மம்மி’ என ஓடிவந்து கட்டி பிடித்துக் கொண்டான்.
“ஐ செல்லம்”, என மகனைக் கொஞ்சிவிட்டு, ‘மம்மி இதோ டூ மினிட்ஸ்ல குளித்துவிட்டு வந்துவிடுகிறேன்”, என குளிக்க சென்றாள்.
வெளியே வந்தவளுக்கு ஆச்சரியம் காத்திருந்தது. கமல் இரவு உணவு தயார் செய்து பால்கனியில் வரிசைப்படுத்தி கொண்டு இருந்தான். மெழுகுவர்த்திகள் ஏற்றி வைத்துக் கொண்டிருந்தான். அனைத்து விளக்குகளையும் அணைத்துவிட்டு “இன்று, கேண்டில் லைட் டின்னர், நம்ம வீட்டில்” என்றான்.
வந்த களைப்பை மறந்தாள் கமலி.
மூவரும் வட்டவடிவில் அமர்ந்து ரசித்து ருசித்து சாப்பிட்டார்கள்.
கமலி மனதில் நினைத்துக் கொண்டாள்: “எத்தனை பெயருக்கு இப்படியான பொன்னான வாழ்க்கை அமைகிறது”.
கமலிக்கு, மழை தன்னோடு பேசுவது போல் இருந்தது. “நான் தான் மழை பேசுகிறேன். என் வருகையால் நடக்கும் குதூகுலத்தையும், மகிழ்ச்சியையும், ஆனந்தத்தையும், இன்னல்களையும் என்னைவிட யார் அளிக்க முடியும்” என…
“கமலி, இந்தா காபி” என்ற கமலின் குரல் அவளை திரும்ப செய்தது”. அட, ஃபிளாஸ்கில் காபி கூட போட்டு வைத்திருந்தான் கமல்.
காபியை கையில் எடுத்துக் கொண்டு பால்கனியில் ரித்விக்கை மடியில் வைத்துக் கொண்டு கணவன் மேல் சாய்ந்து கொண்ட அதே நேரம், சொர்க்கத்தில் இருப்பதுபோல் உணர்ந்தாள். காபி கோப்பையோடு மழைச் சாரலை மூவரும் அனுபவித்தனர். பின்புலத்தில் இளையராஜாவின் இசை ரீங்காரமாக இசைத்துக் கொண்டிருந்தது.
*****************