*சரலிக் காடு* சிறுகதை – இதயநிலவன்
“அண்ணே ரெண்டு பெர்சண்ட்ண்ணே”
“என்னண்ணே நார்மலா ஒரு பெர்சண்ட்டு தான”
“அதெல்லாம் கொரணாவுக்கு முன்னாடி”
“இனிமே கோ.மு, கோ.பி தாம் போல”
“அப்படித்தே ஆயிப் போச்சுண்ணே ”
“ஆக்கிட்டிங்க, சரி சரி தம்பிபிட்ட பேசுறேன். கமிஷனப் பத்தி தே பேசறிங்க எடத்தப்பத்தி ஒண்ணுஞ்சொல்லல”
“அண்ணே 5 ஏக்கர் 95 செண்டு தனி கெணறு ஒண்ணு பங்கு, ஆத்தோரம் ஒறகெணறு ஒண்ணு”
“ஒறகெணறு எத்தன பங்கு”
“பதமான அருவாவுல சதக்குண்டு வெட்டுன மாதிரி ரெண்டே பங்கு”
“சரிண்ணே நாளைக்கி எடத்த காட்டுங்க”
புரோக்கர் சென்றபின் செல்வம் ஒரே யோசனையில் இருந்தார். இந்த கொரோனா காலகட்டத்தில் உலக பொருளாதாரமே தலைகீழாக போய்க் கொண்டிருக்கையில் இந்தியாவில் குறிப்பாக தமிழ்நாட்டில் அதிலும் குறிப்பாக தேனி மாவட்டத்தில் ரியல் எஸ்டேட் தொழில் கொடிகட்டிப் பட்டொளி வீசிப் பறக்கிறது.
எங்கு பார்த்தாலும் விளைநிலங்கள் தருசாக்கப்பட்டும், புல்டோசர் கொண்டு கண்ணாடியாகப் பரப்பப்பட்டும், கற்களை நட்டும், சாக்கடையோடு ரோடுகளைப் போட்டும் பிலிம் காட்டுகிறார்கள்.
தன் போனில் தம்பியை அழைத்தார் செல்வம்.
“சொல்லுண்ணே”
“அதாம்பா ஒரு ஆறு ஏக்கர் நெறுக்கத்துல ரெண்டு பம்பு செட்டு கெணறோட ஒரு எடஞ் சொல்றாம்பா”
“நீ பாத்திட்டையாண்ணே”
“காலைல போய்ப் பாத்துட்டுச் சொல்றேன்”
“சரிண்ணே பாத்துட்டுச் சொல்லு, ரேட்டு என்ன சொல்றாய்ங்க’
“அந்தாளு ரேட்டுன்னு ஆரம்பிச்சாரு..நாந்தே எடத்த பாத்துக்கிறேன் அப்புறம் ரேட்ட சொல்லுன்னு சொல்லிட்டேன்’
“எடம் எங்கண்ணே”
“கண்டமனூர் பக்கம் கோவிந்தநகரம்”
“ம் சரிண்ணே பாத்துட்டுச் சொல்லு’
தம்பி நீண்ட நாட்களாக செல்வத்திடம் ஒரு தோட்டம் வாங்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டிருக்கிறான். செல்வத்தின் சித்தப்பா மகன், சொந்தத் தம்பி போலத்தான்.
அவனும் அவனது மனைவியும் அரசு ஊழியர்கள். பெரிய குடும்பத்தில் அதிகார பீடத்தில் இருந்த குடும்பத்திலிருந்து வந்திருந்தாலும் செல்வமும், தம்பி சுரேஷ் குமாரும், மற்றும் அந்த குடும்ப வாரிசுகளும் குருவி சேர்த்ததைப் போன்று கொஞ்சம் கொஞ்சமாக சேர்த்து இடம் வீடு என அமைக்கிறார்கள். எதிர்காலத்தைச் சற்றும் சிந்திக்கத் தேவையில்லாத குடும்பத்தில் பிறந்தவர்கள் அத்தனை சிரமங்களையும் பட்டு எழுந்து நிற்கிறார்கள்.
‘அண்ணே நமக்குண்ணு ஒரு எடம் வாங்கணும்ணே. நம்ம பாட்டே பூட்டே அப்படி இருந்தாய்ங்க இப்படி இருந்தாய்ங்கண்டு பெரும பீத்திக்கிட்டு திரிஞ்சம்னா நம்ம புள்ளக மசுத்துக்கு கூட மதிக்காதுண்ணே” என்று அடிக்கடி சொல்வான்..
எப்படியும் ஒரு இடத்தை இவனுக்கு அமைத்துக் கொடுக்க வேண்டும் என்று செல்வம் அலையாய் அலைந்து கொண்டு இருக்கிறார். இது தம்பிக்காக பார்க்கும் ஏழாவது இடம். இதையாவது அமைத்து கொடுக்க வேண்டும். முதலில் இந்த இடம் மனசுக்குப் பிடித்ததாய் இருக்க வேண்டும்.
செல்வம் தன் இருசக்கரவாகனத்தை எடுத்துக் கொண்டு வீட்டுக்கு புறப்பட்டு சென்றார். வீட்டிற்குள் நுழைந்ததும் புரோக்கரிடமிருந்து கால் வந்தது.
“சொல்லுங்கண்ணே”
“அண்ணே அந்த நிலம் விசாரிச்சேன். ஆறு லட்சத்து அம்பதுண்ணு பேசி பத்தாயிரம் டோக்கன் அட்வான்ஸ் போட்டுருக்காய்ங்க கண்டமனூர்காரய்ங்க, மேல் குண்டல் 85 செண்டுக்கு மட்டும் பாதையிருக்கு. மிச்சம் நாலேக்கர் சொத்துக்கு பாதை இல்லைன்னு அட்வான்ஸ் திருப்பி வாங்கிட்டாய்ங்களாம்.”
“நமக்கும் அதேண்ணே பிரச்சனை”
“அண்ணே அவிய்ங்க கூறு கெட்டவய்ங்கண்ணே. ஒரு குண்டலு ஊடால காத்தாடிகாரய்ங்கது அதுக்கு மேக்கால காத்தாடி பாத அத ஒட்டி வடக்கு ஒரு ஆளு நெலம், அவகிட்ட நெட்டுக்கு இருவதடிக்கு பாதைய அமச்சிருவோம்ணே”
“இருவதடியில மெயின் ரோடா”
“அட காத்தாடி பாதை”
“காத்தாடி பாதையில நம்மல எப்படி விடுவாய்ங்க”
“கவருமண்டு ரோட்டுல பூராம் காத்தாடிகாரங்க வண்டி தே ஓடுது. அவிய்ங்க பாதைல நம்மல விட மாட்டாய்ங்களா? அப்படி விடமாட்டாய்ங்கண்டா-காத்தாடி பாத மெயின் ரோட்ல ஏர்றப்போ – நம்ம பழைய சேர்மன் நெலம் இருக்கு… அவர்ட்ட சொல்லி ரெண்டு இரும்பு போஸ்ட்ட ஊண்டிருவோம். நூறடிக்கு றெக்கைய ஏத்திட்டு வருவாய்ங்க அப்ப போயி அங்கன நின்னு அடியே மாப்ள இரும்பு போஸ்ட்ல றெக்க பட்டுச்சு அம்புட்டு தேன்டின்னு வண்டிய போட்டு நின்னுக்வோம். இப்படி ஒவ்வொரு நெலத்துக்காரனும் மறிச்சு நின்னா, காத்தாடி றெக்க ஆடமுடியாது அசைய முடியாது மேல ஒக்காந்து சுத்த முடியாது.”
“சரி சரி அத அப்புறம் பாப்பம் மொதல்ல எடத்த பாப்பம்”
இன்று தேனி மாவட்டத்தில் சுற்றும் காத்தாடி கம்பெனிகாரன் பாதை போட்ட பின்பு நிறைய சம்சாரிகளின் நிலத்திற்கு பாதை கிடைத்திருக்கிறது. மேற்சொன்ன வில்லங்கம் வரும் என்பதால் அவர்கள் பாதையை பயன்படுத்த யாரையும் மறுப்பதில்லை.
மறுநாள் காலை நிலத்தைப் பார்த்ததுமே செல்வத்திற்கு கப்பென பிடித்து விட்டது. மெல்லிய அதிர்வு தன்னை வாங்கு என்று சொல்வதாய் செல்வம் உணர்ந்தார்.
எண்பத்தைந்து செண்ட் இடத்தில் குத்தகைக்கு வாங்கியவர் அகத்தி போட்டுருந்தார் அகத்தி நன்றாக செழித்து வளர்ந்திருந்தது.
“கெணறு எத்தன அடி ஆழம்ணே”
“என்ன ஒரு அறுவதடி இருக்கும்”
செல்வம் கிணறை எட்டிப் பார்த்தார் கிணறு ஒரு சந்தோஷ சிரிப்பை சிரித்து வானம் காட்டியது. ஆதில் மேகங்கள் பளிச்சென நகர்ந்து நகர்ந்து சென்று கொண்டிருந்தது. விருந்தாடி வந்தவர்களை பார்த்துச் சிரிக்கும் குழந்தையென.
‘காலைல தண்ணி பாச்சிருக்காக, ஆனாலும் 20 அடிக்கி தண்ணி நிக்குது இந்த சரத்தே நல்ல தண்ணிண்ணே அதில்லாம இவிக நெலத்துக்கு பாத்தியப்பட்ட ஒற கெணறு, அந்தா ஒரு பீ நாரி மரம் தெரியுது பாருங்க, அதுக்கு வடக்காம ஒரு ஏர்பைப்பு திண்டு தெரியுதா? அதுதே கெணறு, அங்கிருந்து ரெண்டு குண்டலுக்கும் நேரடி பாச்சல் 5 எச்பி மோட்டார் பிரி சர்வீஸ் இந்தா இந்த தொட்டியை முடிவிட்டா அங்க தெறந்து பாய்ச்சிக்கலாம். அங்க மூடி விட்ட இங்க. ஒற கெணறு ரெண்டு பங்கு, நாலு நா இவுக, நாலு நா அவுக, செலவைட்டம் பவ்வாதி, நாலாயிரம்டா ரெண்டாயிரம் இங்கிட்டு, ரெண்டாயிரம் அங்கிட்டு’
செல்வம் பார்த்துக் கொண்டிருக்கும் போதே தம்பியிடம் இருந்து போன்.
“வந்துட்டையா – கோவிந்தநகரம் வெங்கடாசலபுரம் ரோடு இருக்குல்லா, வந்துட்டே இருக்கப்ப தெக்க அழகாபுரின்னு பிரியும், அதுல ஏறி வா – நேரா அங்கனயே வரும்”.
போனை கட் செய்து விட்டு,”தம்பி வர்றாப்டி.. ஒரேதா அவனும் பார்த்துட்டா பெறச்சன இல்ல இல்லண்ணா மறுபடியும் நான்தே கூப்பிட்டு வரணும்.”
தம்பி வந்து இறந்கி நிலத்துல் கால் வைக்கும் போதே அவன் மனதில் மலர்ச்சி தோன்றியது.
“இது 85 செண்டு – ஒரு குண்டல் எடையில இவிக பங்காளிகது – அதஒட்டி மிச்சம் நாலு ஏக்கர் 15 செண்டு.”
தம்பி கெணறு நிலம் எல்லாம் பார்த்தான். இடை குண்டலைக் கடந்து அந்த பெரிய குண்டல் முழுதும் செல்வமும் தம்பியும் சுற்றி வந்தார்கள். மூதாதையர்கள் விற்றுத் தொலைத்த ஒரு நிலத்தை சொந்தமாக்கும் உணர்வு நெஞ்சமுழுதும் நிறம்பி வழிந்தது இருவருக்கும்.
‘ஏண்ணே சரலிக்காடா இருக்கே?”
“சரலிக் காட்டுக்குன்னு வெள்ளாம இருக்கு சுரேசு”
இருவர் மட்டும் தனியாக நிலத்தை சுற்றி வந்தார்கள். புரோக்கர்கள் தனியாக நின்று கொண்டார்கள்.
“அண்ணே அட்வான்ஸ் போட்டுருவோம்ணே”
“நல்லா பாத்துக்க பாதை இல்லண்ணு சொல்றாய்ங்க”
‘அண்ணே இந்த நெலம் நமக்கு அமையணும்னா அமையும்ணே நெலம் அமஞ்சா பாத தன்னால அமையும்ணே” நாளைக்கே டோக்கன் அட்வான்ஸ் போட்டு பேப்பர வாங்கிருவோம். பேப்பர் சரியா இருந்தா அக்ரிமெண்ட் போட்டிருவோம்.”
‘எனக்கும் நெலம் ரொம்ப புடிச்சுப் போச்சுப்பா, சரி வா, புரோக்கர்கிட்ட சொல்லிருவோம்”
இருவரும் பழைய இடத்திற்கு வந்தார்கள்.
மறு நாளே பத்தாயிரம் டோக்கன் அட்வான்ஸ் போட்டு விட செல்வமும் தம்பியும் நிலத்தின் உரிமையாளர் வீட்டிற்கு சென்றார்கள் மூன்று புரோக்கர்கள் சகிதமாக தம்பியின் காரில் தான் பயணம். இன்றோடு டோக்கன் அட்வான்ஸ் போட்டு அக்ரிமெண்ட்டுக்காக ஒரு வாரம் டைம் கேட்டு வந்தார்கள். இதோ எழு லட்சத்துடன் அக்ரிமெண்ட்டு போட பயணம்.
தம்பி பத்து பதினைந்து ஆண்டுகளுக்குப் பிறகு தேனி வருகிறான். மதுரை ரோட்டில் தேனியைக் கடந்து கார் சென்று கொண்டிருக்கிறது. கட்டிடங்கள், கட்டிடங்கள், கட்டிடங்கள் மயக்கும் முகப்போடு.
“என்னண்ணே இது மெட்ரிக் ஸ்கூல்தான, யப்பா கேம்பிரிஜ் யுனிவர்சிட்டி மாதிரி தெரியது?”
“ என்ன செய்ய சார் – பயபள்ளய வம்பாடுபட்டு சம்பாரிச்சு இவிய்ங்களுக்கு தான கொண்டு போயி கொட்றாய்ங்க”
“நீ வேறயப்பா, வெளிநாட்டு காசப்பா அம்புட்டும் வெளிநாட்டு காசு தெரியும்ல”
‘நீங்க வேற டிரஸ்ட் ஸ்கூலுன்னுதே பேரு எத்தன பிள்ளக ஒசியா படிக்குதுன்னு தெரியல. அதெல்லாம் வருமானவரிய ஏமாத்துற வேலை, கவுருமெண்ட் 25 சதவீதம் எழை பிள்ளைகளுக்கு பீச கட்டிருது, இவிய்ங்களா 25 சதவீதம் பிள்ளய பேர எழுதிக் குடுத்து கவுருமெண்டுலயும் காசு வாங்கிர்றாய்ங்க, புள்ளய கிட்டயும் காச புடுங்கிக்கிறாய்ங்க. அந்த காசு கவுருமெண்டு பள்ளிக் கூடத்துல ரெண்டு கக்கூச, எச்சுமச்சா கட்டிவிட்டாய்ங்கண்டா, பாவம் பொம்பள புள்ளக ஒதுங்க வசதியா இருக்கும். ஒரு பள்ளிக்கூடத்துல வெட்ட வெளி காட்டுக்குள்ள போகுது கண்டு பேப்பர்ல போடுறாய்ங்க”
“அண்ணே அந்த பூக்கட முன்னாடி நிப்பாட்டுங்க”
வண்டி நிற்க ஐந்து பேராக இறங்கினார்கள். வண்டி நிற்கும் போதே நில உடைமையாளர்கள் பக்கம் பேசும் புரோக்கர் கோவிந்தராஜ் நின்றிருந்தார். அவர் முகமே சரியில்லாமல் இருந்தது.
“கோவிந்தா போத்தமா” என்று தெலுங்கில் செல்வத்தோடு வந்த விநாயகம் கேட்க,அவர் செல்வத்தைப் பார்த்து
“அண்ணே அன்னக்கி நாம ஏக்கர் இம்புட்டுன்னு பேசி அட்வான்ஸ் போட்டம்லண்ணே”
“ஆமா”
‘அண்ணே அவிய்ங்க எட்டுபேரு பங்கு, நாம ஒருஆள்ட்ட தான்ணே அட்வான்ஸ் போட்டோம்? அவிய்ங்க தம்பிக மூணு பேரு அதுல்லாம இன்னொரு தம்பி கேரளாவுல இருக்கான். அம்மா, பொம்பளப்புள்ள ஒண்ணு மொத்தம் எட்டு பேரு. இதுல இங்க இருக்குற மூணு தம்பிகளும் இந்த ரேட்டு கட்டுபடியாகாது ஏக்கருக்கு ஒரு லட்சம் எச்சா வேணம்னு வந்து ஒக்காந்திருக்காய்ங்க”
செல்வம் தன்னை அழைத்து வந்த புரோக்கரை பார்த்துப் பேசும் முன்பாகவே,
‘சார் இதுமாதிரி ஏழர எட்டரயல்லாம் ஊருப்பட்ட கேசு பாத்தாச்சு, வாங்க சார் உள்ள போயி உட்கார்ந்து பேசுவோம். அவிய்ங்க கேப்பாங்க லட்சத்துக்கு சைபர் தெரியாத பசங்க நீங்க வாங்க சார்”
தம்பிக்கு இது புதுசு, ரியல் எஸ்டேட் தொழிலில் ஒரு புரோக்கர் ஒரு நிலத்தை பேசி முடித்து விட்டால் அதைப் பிடிக்காத மற்றொரு புரோக்கர் சென்று இவ்வளவு போகும் .. இவ்வளவு போகும் என்று தட்டிவிடுவது வாடிக்கையான ஒன்றுதான்.
“என்ன பகவானே, நாம எம்புட்ட தட்டியிருப்போம். நம்ம கிட்டயேவா? ஆத்து நெறயா தண்ணி போனாலும் ஊத்தத் தோண்டி குண்டி கழுவுறவய்ங்க இவிய்ங்க, பாத்துக்குடுவோம்”
படியேறி வீட்டின் முன் நுழையும் போதே டோக்கன் அட்வான்ஸ் வாங்கியவரின் மூஞ்சி செத்துத் தொங்கியது. கொஞ்சநேரம் அனைவரும் அமைதியாய் உட்கார்ந்திருந்தார்கள். செல்வத்தோடு ஐந்துபேர். முதல் அண்ணன் வந்தார். எல்லாரும் சேரில் அமர்ந்திருக்க தம்பிகள் மூவரும் தரையில் அமர்ந்திருந்தார்கள்.
விநாயகம் மௌனத்தை உடைத்தார்.
“அண்ணே, கோவிந்தராசு ஒருவிசயம் சொன்னாப்டி. நீங்க பெரிய படிப்பு படிச்சு பெரிய வேல பாக்குற ஆளு, உங்க தம்பிகதே வெவரமில்லாம பேசுனா நீங்க பேச்சு மாறலாமா?”
‘ நான் என்ன செய்யட்டும் இவிய்ங்க ஒத்துக்கிற மாட்டன்றாய்கல்ல’
எங்கள் சைட்டில் பகவான்”
“அப்ப நீங்க எதுக்கு கைநீட்டி அட்வான்ஸ் வாங்குனீங்க”
“வாங்கிட்டா? அவிய்ங்க ஒத்துக்கலைன்னா நானு என்ன செய்யிறது?”
மீண்டும் அமைதி
செல்வம் பேசினார்.
‘அண்ணே நாங்க பெரியகுடும்பம் எங்க அப்பே பாட்டே, பூட்டன்லா வாக்குமாறி பேசியிருந்தா எங்கண்ணந்தே இப்ப நாட்டுக்கே நிதியமைச்சரு-வாக்கு மாறாம இருந்தாங்காட்டியும சொத்தெல்லாம் போச்சு. இப்ப காசு இல்லண்ணாலும் அதே கௌவரத்தோட இருக்கோம். தப்புண்ணே பெரியவக நீங்கதே எடுத்து சொல்லணும்.”
பேசி முடிக்கவும் விநாயகம் எழுந்தார். அவர்கள் மூவரும் ஏதோ ஒரு குற்ற உணர்ச்சியில் அமர்ந்திருந்தார்கள்.
“கோவிந்து வாள்ணே பிளிசின் றா பைட்ட போயி மாட்டாட்டுத்தாம்”
(அவர்களை வெளியே அழைத்து வா பேசிவிட்டு வரலாம்)
என்று தெலுங்கில் அழைக்க அவர்கள் நாய்குட்டி போல் எழுந்து வெளியே போனார்கள்.
தம்பியும் செல்வமும் வீட்டின் பால்கனியில் நின்றார்கள். கொஞ்சநேரம் அமைதியாக,
“என்ன சுரேசு … டென்சனா இருக்க”
“இல்லேண்ணே.. என்னண்ணே சாதாரணமா குடுத்த வாக்க மாத்தி பேசுறாய்ங்க”
“உனக்கு புதுசு… நானெல்லாம் தெனைக்கும் இவியிங்க கூடதே கட்டி பொறண்டு மல்லுக்கட்டிக் கிருக்கேன்.”
“மனசு கஷ்டமா இருக்குண்ணே”
“அவிய்ங்க மூணு பேரயும் பாத்தியா? படிக்காதவய்ங்க, சுயமா முடிவு எடுக்குற அளவுக்கு வாழ்க்க அனுபவமில்ல, யாரோ தூண்டி விட்டுப் பேசுறாய்ங்க, இவரு தம்பிக நம்ம பேச்சு கேக்கலைன்னு டென்சன் ஆகுறாரு”
பேசி முடித்து வந்தார்கள் மூவரும் தலை குனிந்த படியே அவரவரிடத்தில் அமர்ந்து கொண்டார்கள்.
புரோக்கர்கள் இவர்கள் முன் வந்து நின்று,
“சார் மனுச பயபுத்தி சார் ..கொரங்க காட்டிலும் நூறு மடங்கு பல்டி அடிக்கும். புடிச்சி சத்தம் போட்டு விட்டோம். கடைசியில பேசுதை விட கூடுதலா பார்த்து ஏதாச்சும் செய்யச் சொல்லுங்ககண்ணு சொல்றாய்ங்க நீங்க ரெண்டு பேரும் சொல்றது தே”
“சரி உள்ள போங்க நானும் தம்பியும் பேசிட்டு வர்றோம்”
இப்படி நடக்கும் என்று செல்வம் யூகித்தே வைத்திருந்தார். ஆனால் அவர்கள் பணத்திற்காக எதையும் செய்யும் மனிதர்களாகப் படவில்லை அப்படிபட்டவர்களாக இருந்தால் இந்த பாரம்பரிய சொத்தை காப்பாற்றியிருப்பார்கள். இதை விற்று எட்டு பங்காகப் பிரித்தால் என்ன கிடைக்கபோகிறது என்பதை உணரத் தெரியாதவர்கள். உள்ளே சென்று கடைசியாக செல்வம் ரூபாய் ஐம்பதாயிரம் மொத்தமாக சேர்த்து குடுத்துவிடுவதாக பேசி முடித்தார்.
சுற்று அமைதிக்குப் பின் ஒத்துக் கொண்டார்கள். கையொப்பமிட்டார்கள். பெரியவர் பணத்தை எண்ணி வாங்கிக் கொண்டார்.
விடை பெற்றுக் கொண்டு காருக்கு வந்து ஏறி அமர்ந்தார்கள். செல்வமும் தம்பியும் நின்ற இடத்திற்கு, தம்பிகள் மூவரில் இரண்டாவது நபர் வந்தார்.
“சார் எங்கப்பா செத்து பதினோரு மாசம் ஆச்சு சார். நெலத்துல எங்கப்பா வேர்வ சிந்தாத எடமே கெடையாது – இவிகல்லாம் நெலத்துப்பக்கமே வரமாட்டாக. நாந்தே சார் அப்பா கூடவே சுத்துவேன். எங்கப்பா இருந்தா விக்கவிடமாட்டாரு”
“ஆமா கண்டிப்பா விடமாட்டாரு – சரி அதனால என்ன செய்ய முடியும்”
‘சார் அதனால நான் ஒண்ணு சொன்னா தப்பா நெனக்க மாட்டிங்களே நானு இந்த நெலமே கெதியின்னு கெடந்ததால எனக்கு வேற வேல ஒண்ணுந் தெரியாது சார். இப்பதே கொத்தனார் கூட நிமிர்ந்தாளா போயிட்டிருக்கேன்”
செல்வமும் தம்பியும் ஒன்றும் புரியாமல் அவனைப் பார்த்தார்கள்.
“சார் ஆரையாச்சும் ஆளப்போட்டு பாக்குறதுன்னா நானே பாக்குறேன் சார் ஏதாச்சும் பாத்து நீங்க குடுக்கறத வாங்கிக்கிறேன்.”
ஒரு நொடி சுரேஷின் அப்பாவும், செல்வத்தின் அப்பாவும் அவன் மூஞ்சியில் தெரிந்தார்கள்.
அவன் கண்கள் கலங்கியிருந்தன. இவர்கள் கண்களும்
*****