நூல் அறிமுகம்: அம்பையின் ‘அம்மா ஒரு கொலை செய்தாள்’ – சரிதா
அம்மா ஒரு கொலை செய்தாள் இந்த தலைப்பே நம்மைக் கேள்வி கேட்க வைக்கிறது. அம்மா அப்படி என்ன கொலை செய்துவிட்டாள்? உடலைக் செய்தால்தான் கொலையா? மனதைச் செய்தாலும் கொலையே.
ஆயிரமாயிரம் ஆசைகளோடு அம்மாவின் வருகைக்காகக் காத்திருக்கும் ஒரு பெண் குழந்தையின் மனநிலையை இதைத்தாண்டி எப்படி எழுதிவிட முடியும். பருவம் என்றால் என்ன என்ற கேள்வியை யோசிக்காத சிறுமிகளே இருக்க முடியாது. இந்தக் கேள்வி எனக்குள்ளும் சிறுவயதில் இருந்து பருவ வயது எட்டிய போது நான் அடைந்த பதட்டம் இனி விளையாட முடியாதா? இனி எங்கும் தனியாக வெளியில் செல்ல முடியாதா? இனி பாவாடை சட்டை போட முடியாதா? என்னவாகும்? இப்படியான ஆயிரம் குழப்பங்கள் இவ்வளவு வருடங்கள் கடந்தும் என்னை சிறுவயது பதற்ற நிலைக்கு உள்ளாக்கிய கதை.
சிறகுகள் முறியும் இந்த கதையைப் பற்றி மட்டும் நாள் முழுவதும் பேசிக்கொண்டு இருக்கலாம். எப்படியான மனநிலைகொண்டிருக்கும் பெண் பல சட்டங்களை போடுவாள்?
ரோமம் இல்லாத வழவழத்த மார்பு உள்ள ஆண்கள் மணக்கக்கூடாது என்று ஒரு சட்டம்.
வெற்றிலை சாப்பிட்டு சாப்பிட்டு தகரம் போல் நசுங்கிக் கிடக்கும் பற்களை உடைய ஆண்கள் முத்தமிடக் கூடாது என்று சட்டம்.
ஆவலுடன் மனைவியின் கண்கள் ஒரு பொருளின் மீது படியும் பொழுது பர்சை கெட்டியாக மூடி கொள்ளும் கணவனின் பர்ஸ் பறிமுதல் செய்யப்பட வேண்டும் என்று சட்டம்.
இப்படியாக மனதிற்குள் மட்டுமே சட்டங்களை இயற்றிக் கொண்டு இருக்கும் பெண் ஒரு கட்டத்திற்கு மேல் அனைத்தையும் கடந்து ஒரு விடுதலை அடையப் போகிறோம் என்ற குதுகலத்துடன் இருக்கும் நேரத்தில் ஒரு பேரிடியாக வந்து விழுகிறது அவளுடைய வாழ்க்கையில் அடுத்த… அடுத்த….
வாசித்து தெரிந்து கொள்ளுங்கள்.
எந்த இடத்திலும் மிகைப்படுத்தப்படாத எழுத்து .ஏதாவது ஒரு கட்டத்தில் பெண்கள் இதனை யோசிக்காமல் இருந்திருக்க முடியாது தங்களுடைய வாழ்க்கையில் .
வாசிக்க வாசிக்க ஒவ்வொரு பெண்ணும் தன்னுடைய வாழ்க்கையில் பொருத்திப் பார்த்துக் கொள்ளும் வரிகள் கிட்டத்தட்ட நான்கு ஐந்து முறைக்கு மேல் இந்த கதையை திரும்பத் திரும்ப வாசித்து முடித்தாயிற்று. ஒவ்வொரு முறை வாசிக்கும் பொழுதும் என்ன மாதிரியான ஒரு கதை எவ்வளவு சுலபமாக அள்ளித் தெளித்து விட்டீர்கள். எப்படி இதிலிருந்து கடந்து வருவது என்று யோசித்துக் கொண்டே இருக்க வைக்கிறது.
வீட்டின் மூலையில் சமையலறை பெண்ணியம் பற்றி பெண்கள் பற்றி பேசும் எந்த ஒரு பெண்ணும் இந்த கதையை கூறாமல் இருக்க முடியாது. சில நாட்களுக்கு முன்பு வந்த கிரேட் இந்தியன் கிச்சன் கதையை நினைவுபடுத்துகிறது. சமையல் அறைக்குள்ளேயே தன்னுடைய வாழ்க்கையை தொலைத்த பெண்கள் எப்படி ஆப்பிள் கீழே விழுவதைப் பார்த்திருக்க முடியும்.
காட்டில் ஒரு மான் மெய்சிலிர்க்க வைக்கும் கதை. மனதை கட்டிப்போட்ட ஒரு கதை. ஆயிரம் கேள்விகள் குழந்தைகள் மனதிற்குள் ஒரு பூப்பெய்தாத பெண்ணைப்பற்றி.
கைலாசம் இப்படியான ஒரு கதையை எப்படி எழுதியிருக்க முடியும். மனதிற்குள் ஒரு பெண்ணை நினைத்து விட்டால் அந்தப் பெண்ணை ஆத்மார்த்தமாக அன்பு செய்யும் ஒரு ஆணால் என்னவெல்லாம் செய்ய முடியாது என்பதை விளக்கியிருக்கும் கதை.
பொதுவாகவே அம்பையின் கதைகளில் பெண்களின் மன உணர்வை அப்பட்டமாக படம் பிடித்து காட்டி இருக்கும் என்பார்கள். அதை தாண்டியும் பயணங்கள் அம்பையின் கதைகளில் அதிகமாகக் காணப்படுகிறது. இவ்வளவு பயணங்கள் செய்து அதனாலோ என்னவோ அவ்வளவு கதைகளில் பயணங்களை கொண்டு வந்திருக்கிறார்.
பயணம் என்றால் சற்றே விலகி இருக்கும் எனக்கு இனி வாழ்க்கையில் தொடர்ந்து பயணிக்க வேண்டும் பயணங்களின் வழியாக பல்வேறு மனிதர்களையும் பல்வேறு ஊர்களையும் பல்வேறு நாடுகளையும் அவர்களுடைய மொழிகளையும் அவர்களின் பழக்கவழக்கங்களையும் குணாதிசயங்களையும் கண்டுணர வேண்டும் என்ற ஆவலை ஏற்படுத்தியுள்ளது.
சாகித்ய அகாடமி நாயகி அம்பை கதைகளின் நாயகி தான்.
நூல் : அம்மா ஒரு கொலை செய்தாள்
ஆசிரியர் : அம்பை
விலை : ரூ.₹325
வெளியீடு : காலச்சுவடு பதிப்பகம்
தொடர்புக்கு : 044- 24332924