சார்பட்டா பரம்பரை திமுக ஆதரவுப் படமா? | தி வயர் இதழ் – தமிழில்: மு இராமனாதன்
‘சார்பட்டா பரம்பரை’ திரைப்படம் ஜூலை இறுதியில் வெளியானது. ரசிகர்கள், விமர்சகர்கள் இரு தரப்பினரின் பாராட்டுதலையும் ஒருங்கே பெற்றது. சார்பட்டா பரம்பரை என்பது வட சென்னையில் இயங்கிய ஒரு பிரபலமான குத்துச் சண்டைக் குழுவைக் குறிக்கிறது. கதை எழுபதுகளில் நடக்கிறது.
மூன்று மணி நேரம் நீளும் இந்தப் படம் எதனால் பெருமதி பெறுவது எதனால்? சென்னை நகரம் இப்போது மறந்துவிட்ட குத்துச் சண்டைக் கலாச்சாரத்தைப் படம் நினைவூட்டுகிறது. படத்தின் ஒளிப்பதிவு ஒவ்வொரு ரசிகனையும் கோதாவிற்கு வெளியே நிற்கும் பார்வையாளனாக மாற்றுகிறது. பாத்திரங்களும் அவர்களுக்கு இடையிலான உறவும் சிரத்தையாக உருவாகியிருக்கிறது. மிக முக்கியமாக, தமிழ் நாட்டின் கட்சி அரசியலும் வட சென்னைக் குத்துச் சண்டைப் பராம்பரியமும் எப்படிப் பின்னிப் பிணைந்திருந்தன என்பதைப் படம் வெளிக்கொணர்கிறது.
அரசியல், தமிழ் சினிமாவிற்குப் புதிதன்று. ஆனால் இந்தப் படம் கட்சிகளையும் ஆளுமைகளையும் நேரடியாகச் சுட்டுகிறது. அது புதிது. குறிப்பாக, சி.என். அண்ணாதுரை, மு. கருணாநிதி முதலான திமுக தலைவர்களின் எழுத்தில் உருவான படங்கள் அரசியலை மையங் கொண்டிருந்தன. ஐம்பதுகளில் பெருங் கவனம் பெற்ற திராவிட இயக்கத் திரைப்படங்களின் எண்ணிக்கை எழுபதுகளில் மெல்லக் குறைந்தது. ஆனால் அரசியல் படங்கள் தொடர்ந்து வெளியாகவே செய்தன. சில உதாரணங்கள்: அச்சமில்லை, அச்சமில்லை (1984), முதல்வன்(1999), அமைதிப் படை(1994), சர்க்கார்( 2018), எல்.கே.ஜி(2019). இந்தப் படங்களில் அரசியல் கட்சிகள் இடம் பெற்றன. முதலமைச்சரும் எதிர்க்கட்சித் தலைவரும் இடம் பெற்றார்கள். ஊழல் அரசியலும் ரவுடி ராஜ்ஜியமும் இடம் பெற்றன. ஆனால் அனைத்தும் புனைவு. எந்த அரசியல் கட்சியோ தலைவரோ நேரடியாகச் சுட்டப்படவில்லை. படத்தில் இடம் பெற்ற கட்சிக் கொடிகளும் அவற்றின் நிறங்களும் எந்தக் கட்சியின் நிறத்தையும் சுட்டாதவாறு கவனமாகப் பார்த்துக் கொண்டார்கள். சார்பட்டா பரம்பரை இதை மாற்றி விட்டது. படத்தின் பிரதான பாத்திரங்கள் திமுக, அதிமுக, அல்லது காங்கிரஸ் கட்சிக்குச் சார்பானவர்களாக வருகிறார்கள். பெரியார், அம்பேத்கார், கருணாநிதி, எம்.ஜி.ஆர், இந்திரா காந்தி, மு.க.ஸ்டாலின் ஆகிய தலைவர்கள் கதைப் போக்கில் பேசப்படுகிறார்கள். கதை நெருக்கடி நிலைக் காலத்தில் நடக்கிறது.
படம் பரந்துபட்ட ரசிகர்களால் கொண்டாடப்பட்டது. விமர்சகர்களால் பாராட்டப்பட்டது. ஆனால் அரசியல் களத்தில் கருத்துகள் மாறுபட்டன. படம் வெளியானதும் திமுகவின் நட்சத்திர எம்.எல்.ஏ-வும் திரைப்பட நட்சத்திரமுமான உதயநிதி ஸ்டாலின், படத்தின் இயக்குநர் பா.இரஞ்சித்தையும் அவரது குழுவினரையும் வாழ்த்தினார். திமுகவும் தலைவர் கலைஞரும் எப்படி நெருக்கடி நிலையை உறுதியாக எதிர்த்து நின்றார்கள் என்பதைப் படம் சிறப்பாகக் காட்சிப்படுத்தி இருக்கிறது என்று பாராட்டினார் உதயநிதி. இன்னொரு புறம், அதிமுகவின் முன்னாள் அமைச்சரும் அக் கட்சியின் அமைப்புச் செயலாளருமான டி. ஜெயக்குமார், படம் எம்.ஜி.ஆரையும் அதிமுகவையும் சிறுமைப்படுத்தி விட்டதாகச் சொல்லி இயக்குநரை விமர்சித்தார். எம்.ஜி.ஆர், விளையாட்டுப் போட்டிகளை, குறிப்பாகக் குத்துச் சண்டையை ஊக்குவித்தவர் என்றும் சொன்னார் ஜெயக்குமார். மேலோட்டமாகப் பார்க்கிறவர்களுக்கு இந்தப் படம் திமுகவை ஆதரிப்பதாகவும் அதிமுகவை விமர்சிப்பதாகவும் தோன்றலாம். ஆனால் வடசென்னைக் குத்துச் சண்டை வரலாற்றில் பல இழைகள் இருக்கின்றன. அவற்றைக் கவனமாக ஆராய வேண்டும். நாம் 1942இல் தொடங்கலாம்.
அந்த ஆண்டில்தான் டெர்ரி எனும் ஆங்கிலேய பாக்சர், அருணாச்சாலத்தைத் தோற்கடித்தார். அருணாச்சலம் சார்பட்டா பரம்பரையின் பிரபல குத்துச் சண்டை வீரர். அதற்குப் பிறகு சார்பட்டாவின் கித்தேரி முத்து வெல்ல முடியாத டெர்ரியைத் தோற்கடித்து சார்பட்டா பரம்பரைக்கு நேர்ந்த கறையை அகற்றினார்.பெரியார் முத்துவிற்கு ‘திராவிட வீரன்’ எனும் பட்டத்தை வழங்கினார், என்பதை நினைவு கூர்கிறார் முத்துவின் பேரனான ஜாக்சன். அந்நாளில் குத்துச் சண்டை வீரர்களை மக்கள் நட்சத்திரங்களாகக் கொண்டாடினார்கள். ஆகவே அரசியல் கட்சிகள் அவர்களின் புகழை தங்கள் இயக்கத்திற்குச் சாதகமாகப் பயன்படுத்திக் கொள்ளும் வாய்ப்பை இழக்க விரும்பவில்லை. இந்தியா விடுதலை அடைந்ததும் காங்கிரஸ் கட்சி குத்துச் சண்டையைப் போற்றியது. அப்போதைய முதல்வர் காமராஜ், சுந்தர்ராஜன் எனும் புகழ் பெற்ற பாக்சருக்கு ‘தேசிய மாவீரன்’ எனும் பட்டத்தை வழங்கினார். இதை நினைவு கூர்பவர் மூத்த பத்திரிகையாளரும் வட சென்னைக்காரருமான நக்கீரன் பிரகாஷ். தொடர்ந்து குத்துச் சண்டை அரங்கம் மெல்ல மெல்ல திமுக வசமானது என்பதையும் நக்கீரன் பிரகாஷ் குறிப்பிடுகிறார்.
படத்தில், சார்பட்டா பரம்பரை வீரர்களைப் பயிற்றுவிப்பவர் வாத்தியார் ரங்கன் (பசுபதி). அவர் ஒரு முன்னாள் குத்துச் சண்டை நட்சத்திரம், திமுக செயல்பாட்டாளர், ஊர் மக்களின் மதிப்பிற்கு உரியவர். அவரது உடை எளிமையானது. திமுக அடையாளத்தை வெளிப்படுத்துவது. கறுப்பு-சிவப்புக் கரை வேட்டி, வெள்ளை ஜிப்பா, முக்கியமாகத் தோளை அலங்கரிக்கும் மடிப்புக் குலையாத, கறுப்பு-சிவப்புக் கரையுடன் கூடிய வெள்ளைத் துண்டு. பிற்படுத்தப்பட்டவர்கள் தங்கள் துண்டை இடுப்பைச் சுற்றித்தான் கட்டிக் கொள்ள வேண்டும் என்பது கட்டாயமாக இருந்த காலத்தில் தனது இயக்கத் தோழர்களைத் தோளிலே துண்டணியச் சொன்னார் பெரியார். விரைவில் அது திராவிட இயக்கத்தின் அடையாளமாகியது. படத்தில் வாத்தியார் ரங்கன் தனது துண்டை மிகுந்த பெருமிதத்தோடு தோளில் அணிந்திருப்பார்.
மேலும், ரங்கன் தனது மகனுக்கு என்ன பெயர் சூட்டியிருக்கிறார் என்பதிலும் ஒரு உள்ளார்ந்த செய்தி இருக்கிறது. குழந்தைகளுக்குக் கடவுள்களின் பெயர்களும் புராணப் பெயர்களும் சூட்டப்பட்ட காலமது. அப்போது திமுக தலைவர்கள் தங்கள் இயக்கத்தினரின் பிள்ளைகளுக்குச் சங்க இலக்கியப் பெயர்களைச் சூட்டுமாறு ஊக்குவித்தார்கள். தமிழரசன், பொய்யாமொழி, கலைச் செல்வி போன்ற புதியத் தமிழ்ப் பெயர்களையும் சூட்டினார்கள். ரங்கன் தனது மகனுக்குச் சூட்டிய பெயர் வெற்றிச் செல்வன். இந்தப் பெயர் சூட்டலில் அரசியல் இருக்கிறது. அதில் ரங்கனின் பாத்திரமும் துலக்கம் பெறுகிறது.
படத்தின் துவக்கக் காட்சியில், சார்பட்டா பரம்பரையின் குத்துச் சண்டை வீரனான மீரான் (சாய் தமிழ்) அணிந்திருக்கும் அங்கியில் கறுப்பு-சிவப்புப் பட்டையும் உதய சூரியன் சின்னமும் இருக்கும். எதிராளி இடியாப்பப் பரம்பரையைச் சார்ந்த வேம்புலியின் (ஜான் கோக்கென்) அங்கியில் காங்கிரஸ் கட்சியின் மூவர்ணம் இருக்கும். வேம்புலிதான் அந்தப் போட்டியில் வெற்றி பெறுவான். ஆனால் பரிசை வழங்குவது உள்ளூர் திமுக தலைவராக இருப்பார். இது களம் திமுக வசமாகிறது என்பதைக் குறிப்புணர்த்தும். பிற்பாடு, இன்னொரு போட்டியில், கபிலன்(ஆர்யா) அரங்கிற்குள் வரும்போது உதய சூரியன் படம் பொறித்த அங்கி அணிந்திருப்பான்.
நெருக்கடி நிலைக் காலத்திலும் அதற்குப் பின்பும் எம்.ஜி.ஆர் அடுத்தடுத்து வந்த ஒன்றிய அரசுகளை ஆதரித்தார். அதனால் அவர்களது அதரவு எம்.ஜி.ஆருக்குக் கிடைத்தது. இதனால் அவரது கட்சிக்காரர்கள் செல்வாக்கு மிக்கவர்களாக விளங்கினார்கள். இந்தக் காலகட்டத்தில் குத்துச் சண்டைக் கோதா மெல்ல அதிமுக வசமாகத் தொடங்கியது. ஆனால் இந்த மாற்றம் சுமுகமாக நடக்கவில்லை. ஏனெனில் விளையாட்டு கோதாவிற்கு வெளியேயும் நீண்டது. அப்போதைய வடசென்னை அதிமுக தலைவர் ஒருவரும் அவரது சகாக்களும் குத்துச் சண்டை வீரர்களைக் கள்ளக் கடத்தல் முதலான நிழலான காரியங்களுக்குப் பயன்படுத்தத் தொடங்கினார்கள், என்கிறார் நக்கீரன் பிரகாஷ். தொழில் முறைக் குத்துச் சண்டை வீழ்ச்சியடையத் தொடங்கியது. ஒரு கட்டத்தில் இது எல்லை மீறிப் போனது. 1991இல் ஜெயலலிதாவின் ஆட்சியில் தொழில் முறைக் குத்துச் சண்டை தடை செய்யப்பட்டது.
படத்தில் அதிமுக உறுப்பினர்கள் கள்ளச் சாரயம் காய்ச்சுகிறவர்களை ஆதரிக்கிறார்கள். கபிலன் இந்த வணிகத்திற்குள் இழுக்கப்படுகிறான். அப்போது தமிழகத்தில் மதுவிலக்கு அமலில் இருந்தது. இந்தப் படம் திமுகவைப் போற்றுவதாகவோ அதிமுகவை தூற்றுவதாகவோ நான் நினைக்கவில்லை. எழுபதுகளின் மத்தியில், வட சென்னைக் குத்துச் சண்டைக் கலாச்சாரத்தை, அப்போது நிலவிய கட்சி அரசியல் இல்லாமல் சொல்லிவிட முடியாது. ஆகவே இந்தக் கதையில் காங்கிரஸ், திமுக, அதிமுக ஆகிய கட்சிகள் – அதே வரிசைக் கிரமத்தில்- இடம் பெறுகின்றன. இயக்குனர் வரலாற்றுக்கு நேர்மையாக இருக்கிறார். அது கதையில் வெளிப்படுகிறது. மற்றபடி திமுகவை உயர்த்துவதோ அதிமுகவைத் தாழ்த்துவதோ இயக்குநரின் நோக்கமில்லை என்று நினைக்கிறேன்.
வருங்காலங்களில் தயாரிப்பாளர்கள் அரசியல் கட்சிகளையும் தலைவர்களையும் நேராகச் சுட்டும் திரைப்படங்களை எடுக்கலாம். அதற்கு இந்தப் படம் தூண்டுகோலாக அமையலாம். அரசியல் எப்போதும் தமிழ் சினிமாவின் அங்கமாக இருந்து வந்திருக்கிறது. அது அடுத்த கட்டத்தை நோக்கி நகர வேண்டும்.
(தி வயர் இதழில் 10.10.2021 அன்று வெளியான கட்டுரையின் தமிழ் வடிவம். ஆங்கிலத் தலைப்பு: Politics Comes Out Full Frontal in the Tamil Film ‘Sarpatta Parambarai’. Link:https://thewire.in/film/politics-comes-out-full-frontal-in-the-tamil-film-sarpatta-parambarai )