சசிகலா திருமால் கவிதைகள் sasikala thirumal kavithaikal

சசிகலா திருமால் கவிதைகள்


சசிகலா திருமால் கவிதைகள்

விடுதலையின் வாசல்..

கவிஞனின் கவிக்குள்
மென்பூக்களாய் வாசம் வீசினாலும்
நிஜமதில் சுடும் பூக்களெனவே
கருகிக் கொண்டிருக்கிறோம்..

பேருந்து நெரிசலில்
கழுத்தருகே கழுத்தறுக்கும்
பெருமூச்சுகளுக்கும்
காதருகே கேட்டிடும் கொச்சைச் சொற்களுக்கும் இடையில்
சிக்கித் தவிக்கிறதெங்கள் பெண்மை..

பச்சிளம் பிள்ளைகளைக்
குறிவைக்கும் கயவர்களுக்கு
என்னவென்று பெயரிட்டுரைக்க..

வக்கிரபுத்தியின் உக்கிரம் தாளாமல்
தொலைவில் மயான வெளியில்
ஒற்றைப் பிணமென எரிந்துக்கொண்டிருக்கிறது
எங்களது மனம்
ஆற்றாமை தாளாமல்…

காலம் காலமாய்
எங்களுக்குள் விதைக்கப்பட்ட
அடிமை உணர்வை அறுத்தெறிந்தே
விடுதலையின் வாசல் தேடியே
விரதமிருக்கிறோம் நாங்கள்…

 

நினைவுகளின் நெடுஞ்சாலை

நினைவின் ஆழியில்
அலையும் கயல்களாய்
வீச மறந்த தென்றலாய்
தூண்டிவிடும் கனவிலும்
உறக்கத்தின் உறக்கம் பறிக்கிறாய்…
கடல் உறிஞ்சும் வானவில்லோ
மழைத்துளிகளாய்க் கொட்டிவிடும்
என்னை உறிஞ்சும் நின் நினைவுகளோ
காதல் மழையில் மலர்ந்துவிடும்…

சற்றே நான் சதையாகிறேன்
உன் நினைவுகளோ
என் சுவாசத்தை உட்கொண்டு
சுவாச அறைகளைச் சுற்றி வளைத்து
உயிர் குடித்துக் கொண்டிருக்கிறது..
இப்படித் தான்.. அனுதினமும்
உன் நினைவுகளின் நெடுஞ்சாலையில்
நகர்ந்து போகிறதென் மனம்
நின் நினைவுகளை அசைபோட்டப்படி…

Sasikala's Poems சசிகலா கவிதைகள்

சசிகலா கவிதைகள்




1
கருவறை காவியம்…
***************************
கருவறை காவியமாய்
இப்பூமியில் பூத்தப் பூவே…..
மலரினும் மெல்லிய மழலையே
உதிரத்தில் உதித்த உயிரே…..

நீ என்னுள் கருவான அன்றே
ஈருயிர் கொண்டேன்
உன்னுருவைக் காண
பத்துமாதம் பத்திரமாய் பாதுக்காத்தேன்
பத்தியங்கள் பல ஏற்றேன்
உருவம் தெரியா உன்னை நினைத்து
அதிர்ந்து நடக்கக்கூட மறந்தேன்….

என் தொப்புள்க்கொடியில்
மலர்ந்த மலரே….
இன்று உயிர்ப்பெறுகிறேன்
உன்னைக்கண்டு….
பெண்ணாய் பிறந்தப்பலனை அடைந்து
தாய்மை உணர்வில்
நிறைவடைகிறேன்……

2
ஊமை விழிகள்…
************************
இதயம் கவரும் காந்த விழிகள்
வலிகளைப் பேசுகையில் ஊமை விழிகளாகிறது…
ஊமை விழிகளும் கவிதை பேசும்
சில சமயம் கண்ணீரால் காவியம் வரையும்
காதலை மறைத்திட நினைக்கையில்
நாணத்தால் ஓவியம் வரையும்…

சில சமயங்களில்
நெருப்பைக் குடித்து தண்ணீரின் தாகம் தீர்த்துக்கொள்ள எத்தனிக்கும்…
சில சமயங்களில்
இரவின் இறுதி சொட்டு தீர்ந்து போகும் வரை
விடியலை தேடி அலையும்…
சில சமயங்களில்
விழிகள் தேடும் மொழிகளாய்
இவளின் ஊமை விழிகள்…