கவிதைகள் : சசிகலா திருமால்
உயிர் துளியாகிறேன் கவிதை – சசிகலா திருமால்
மனம் கொத்திப் பறவையாய்
மனதினைக் கொத்திக் கொத்தியே
உயிர் திருகும் வலியில்
என் உணர்வுகளைக்
கடத்திச் செல்கிறாய்…
உறங்கியும் உறங்காமலும்
இருக்கின்ற விடியலை
மொத்தமாய் குத்தகை எடுத்துக்கொள்கிறது
உந்தன் நினைவுகள்..
எந்தன் உடலெங்கும் வழிந்தோடும்
குருதி மட்டுமே உணரும்
உந்தன் ப்ரியமொழியின் குளிர்ச்சியினை..
இதோ இப்பொழுதும்
உந்தன் விரலிலிருந்து கசியும்
வார்த்தைகளில்
உயிர் துளியாகிறேன் நான்..
சசிகலா திருமால் கவிதை
காயங்களையும் ஏற்கத் துணிகின்றேன்…
ப்ரியங்கள் மட்டுமே குவிந்திருந்த
நம் உறவின் நடுவே
அர்த்தமற்ற புரிதல்களால்
மனதில் உண்டான விரிசலினூடே…
புதிதாய் முளைத்தெழுகிறது
பிரிவின் கோடொன்று…
மௌனம் எனும் கோடரி கொண்டு
மனதினைப் பிளக்கின்றாய்
நிராகரிப்பு எனும் ஆயுதமேந்தி
நிற்கும் உன்னிடம்
என் இதயத்தின் வலியுணர்த்த இயலாமல்
வெற்றுச் சடலமென
வீழ்ந்து கிடக்கிறேன் நான்…
உயிர் கொண்ட உறவுகள் ஓர்நாள்
நம்மை உயிரோடு கொல்லும் என்பதை
உணர்த்திச் செல்கிறாய்..
நீ கொடுத்த காதலை ஏற்றுக் கொண்டவள்
நீ கொடுக்கும் காயங்களையும்
ஏற்கத் துணிகின்றேன் இன்று…
என்றேனும் என்நிலை உணர்வாய்
என்ற நம்பிக்கையில்…
காத்திருக்கிறேன் நான்..
உன் மனகசப்புகள் தீரும் வரை
கண்ணீரோடும் கனத்த மனதோடும்…
சசிகலா திருமால்
கும்பகோணம்.