சசிகலா திருமால் கவிதைகள்
சசிகலா திருமால் கவிதைகள்
விடுதலையின் வாசல்..
கவிஞனின் கவிக்குள்
மென்பூக்களாய் வாசம் வீசினாலும்
நிஜமதில் சுடும் பூக்களெனவே
கருகிக் கொண்டிருக்கிறோம்..
பேருந்து நெரிசலில்
கழுத்தருகே கழுத்தறுக்கும்
பெருமூச்சுகளுக்கும்
காதருகே கேட்டிடும் கொச்சைச் சொற்களுக்கும் இடையில்
சிக்கித் தவிக்கிறதெங்கள் பெண்மை..
பச்சிளம் பிள்ளைகளைக்
குறிவைக்கும் கயவர்களுக்கு
என்னவென்று பெயரிட்டுரைக்க..
வக்கிரபுத்தியின் உக்கிரம் தாளாமல்
தொலைவில் மயான வெளியில்
ஒற்றைப் பிணமென எரிந்துக்கொண்டிருக்கிறது
எங்களது மனம்
ஆற்றாமை தாளாமல்…
காலம் காலமாய்
எங்களுக்குள் விதைக்கப்பட்ட
அடிமை உணர்வை அறுத்தெறிந்தே
விடுதலையின் வாசல் தேடியே
விரதமிருக்கிறோம் நாங்கள்…
நினைவுகளின் நெடுஞ்சாலை
நினைவின் ஆழியில்
அலையும் கயல்களாய்
வீச மறந்த தென்றலாய்
தூண்டிவிடும் கனவிலும்
உறக்கத்தின் உறக்கம் பறிக்கிறாய்…
கடல் உறிஞ்சும் வானவில்லோ
மழைத்துளிகளாய்க் கொட்டிவிடும்
என்னை உறிஞ்சும் நின் நினைவுகளோ
காதல் மழையில் மலர்ந்துவிடும்…
சற்றே நான் சதையாகிறேன்
உன் நினைவுகளோ
என் சுவாசத்தை உட்கொண்டு
சுவாச அறைகளைச் சுற்றி வளைத்து
உயிர் குடித்துக் கொண்டிருக்கிறது..
இப்படித் தான்.. அனுதினமும்
உன் நினைவுகளின் நெடுஞ்சாலையில்
நகர்ந்து போகிறதென் மனம்
நின் நினைவுகளை அசைபோட்டப்படி…
சசிகலாவின் கவிதைகள்
கர்பத்தில் கரைந்திடவே ஆசை
*************************************
பத்து மாதம் பத்திரமாய்
பாதுகாத்தாயே உந்தன் கருவறையில்….
இருட்டறை என்றாலும்
இன்பமாய்தான் இருந்தேன்
உந்தன் இதயத்துடிப்பில் இசையறிந்தேன்…
உந்தன் உணவில் எந்தன் பசி மறந்து
உணவின் ருசி அறிந்தேன்
உந்தன் அன்பின் வாசம் அறிந்தேன்….
பத்துத் திங்கள் கழித்து
பத்திரமாய் வெளிக் கொணர்ந்தாய்
வெளிச்சமாய் காட்சியளிக்கும் வெளியுலகிற்கு…
பார்ப்பதற்கு பளிச்சென்று இருந்தாலும்
இங்கு எல்லாமே
பகட்டாய்தான் இருக்கிறது…
மனம் மாறும்
பச்சோந்திகளாய் மனிதர்கள்
கொலை, கொள்ளை, வன்மம், வன்முறை, கற்பழிப்பு, துரோகம்…. என
மனிதம் மறந்த உலகில் மானுடனாய்
பிறக்க வைப்பதற்கு பதிலாக
உந்தன் கர்ப்பத்திலேயே கரைத்திடுவேன்
நான் உன்னுள் உருவாகி
உன்னுள்ளேயே மடிந்து போகிறேன்…..
உன்னில் நனைந்த பொழுதுகள்…
****************************************
உளிபட்ட கல்லெல்லாம்
சிலையென மாறுமாம்
இதோ நானும் சிலையாகிறேன்
உந்தன் சிந்தனை உளிக்கொண்டு
நீ என்னை செதுக்கியதால் …
உலகில் விலை கொடுத்து
வாங்க முடியாத சிம்மாசனமாம்
உன் தோள்களில் அமர வைத்து
உயரத்தைக் காட்டியதும் நீதானே அப்பா…
நீ கற்பித்த பாடங்களெல்லாம்
என் வாழ்வின் பாலங்கள்….
உனது வீரத்தையும்
எனக்கே உரிமையென
அடிமைசாசனம் எழுதியதும்
நீதானே அப்பா..
ஆழ்கடலெனவே
அப்பா உனதன்பு…
மறுஜென்மமொன்றில்
உன்னை கருவறையில் சுமந்திடவே
ஆசையப்பா…
இதோ.. உன்னில் நனைந்த
பொழுதுகளெல்லாம்
இன்னமும் இனித்தே கிடக்கின்றன
இதயத்தின் துடிப்புகளில்..