நூல் அறிமுகம்: தமயந்தியின் ஒரு வண்ணத்துப்பூச்சியும் சில மார்புகளும் – சி.சசிரேகா

நூல் அறிமுகம்: தமயந்தியின் ஒரு வண்ணத்துப்பூச்சியும் சில மார்புகளும் – சி.சசிரேகா




படைப்புகள் சில நேரங்களில் தன்னை வாசித்து அதன் வலிகளை உணரக்கூடிய வாசகனையோ அல்லது வாசகியையோ தேர்ந்தெடுக்கும் என்று இச்சிறுகதையை வாசிக்கும் போது தெளிந்தது…

தமயந்தி எழுதிய ”ஒரு வண்ணத்துப் பூச்சியும் சில மார்புகளும்” சிறுகதைத் தொகுப்பு வெளிபடையான பெண்ணிய சிந்தனையும், பெண்களின் வலிகளை கடத்த கூடிய கூர்மையான எழுத்து வடிவம் கொண்டது. பெண்களாள் நிறைந்த இத்தொகுப்பு, ஒரு பெண்ணின் அம்சம் எனில் இச்சிறுகதை தொகுப்பு என் உயிர்த்தோழியே!

“என்ன எப்ப பாரு பெண்ணியம் பேசுர லூசு மாதிரி. எது எதார்த்தமோ அதை ஏத்துக்க ” -என் தங்கை

“நீ பேசுரதல்லாம் எழுத, படிக்க நல்லா இருக்கும் ஆனா வேளைக்கு ஆகாது டீ”- என் தோழி

“உனக்கு கிறுக்கு தான் பிடிச்சுருக்கு பாப்பா நீ சொல்ர மாதிரியெல்லம் எந்த ஆம்பளயாதும் வீட்டுல இருப்பாங்களா உனக்கு வேற வேள இல்ல”- என் அம்மா

இப்படியான ஏச்சுகளுக்கு மத்தியில என் கூட கை கோர்த்து கொண்டது தமயந்தியின் எழுத்துக்கள்…

பெண் பிள்ளைகளின் ஆழகிய முகம், மார்பு, கருப்பை போன்ற பெண் உறுப்புகளை காரணம் காட்டி அவர்களின் சுதந்திரத்தை எப்படி இந்த ஆணாதிக்க புறவெளி, கடிகார நொடி முள் எத்தனை தூரம் ஓடினாலும் வெளியில் தப்பி ஓடிவிட முடியாது என்பது போல ஓடுக்கி வைத்துள்ளது என்பதை இதை விடவும் நேரடியாக எழுதிவிட முடியாது. புனைவுகள் அல்லாத மிக காத்திரமான கேள்விகள் ஆனாதிக்க புறவெளியை நோக்கி அவர்களின் சட்டையை பிடித்து பதிலை சொல்லிவிட்டு போ என்பது போல் உள்ளது…

நான்கு சுவற்றில் அடைப்பட்டு பொம்பள ஜென்மமா எவனுக்கோ துவச்சு,சமைச்சு,புள்ள பெத்து கொடுக்கணுமா?

சில நேரங்களில் சாப்பாட்டுக்கு உப்பு, காரம், புளி சரியாக போடுவதுதான் வாழ்க்கையா?

துணி மேல துணியை போட்டு மூடி வைக்கிறதுக்கு பொக்கிஷமாக மார்பு?

உள்ளாடையை சேலைக்கு அடியில் தான் துவைத்து காய போடனும் , கால ஒடுக்கி தான் உக்காரனும், நாப்கினை மறைத்து தான் பயன்படுத்தணும். எல்லாத்தையும் இப்படி மறைத்து மறைத்து பெயர் மறந்தவளாய், முகமற்றவளாய், கருப்பை கிழிந்தவளாய், மார்புகள் குதறப்பட்டவளாய் எத்தனை சாட்சிகள் அவளுக்குள் இந்த அழுக்கான ஆண் சமூகத்திடம் நியாயம் கேட்டிட?

பட்டாம்பூச்சி, பறவைகளின் சுதந்திரத்தின் மீது உள்ள ஆசையை தமயந்தி எழுத்தின் மூலம் தெரியப்படுத்துகிறார். தமயந்தி நேசிக்கும் பெண் சமூகத்திற்கும் கிடைக்க வேண்டிய சுதந்திரமல்லவா அது….

எந்த ஒரு உயிரினத்திலும் பெண் ஆண் உண்டு.ஆணுக்கு பெண் துணை பெண்ணுக்கு ஆண் துணை இரண்டும் அல்லாமல் இயற்கை விதியான இனப்பெருக்கம் நிகழாது அவ்வளவுதானே ஆனால் பெண்ணின் விருப்பம் இல்லாமல் புணரும் வக்கிரம் பிடித்த ஆண்களின் புத்தியில் தங்கள் இனப்பெருக்கத்திற்காக அல்லாமல் அவர்களின் ஆணாதிக்க வெறியும் மனநலம் குன்றிப்போன தன்மையே தெரிகிறது மனிதனிடம் மட்டுமெ….

இக்கதையில் வரும் பெண்கள் ஆணாதிக்க சமூகத்தில் நிறைய நிறைய கேள்விகளைகளை கேட்டும் அக்கேள்விகளுக்கு குற்றவாளி ஆண்களிடம் நியாயம் நிறைந்த பதில் ஏதுமில்லை என்பதை உணர்ந்து. அவள் நேசிக்கும் ஏதோ ஒன்று அவளை ஆற்றுப்படுத்த அவள் கேள்விகளுக்கு பதிலாகவும், கேள்விகளை உருவாக்கி அவளை சிந்திக்க வைப்பதாகவும் அமைகிறது…

கதவுகள் திறக்கப்பட வில்லை எனில் என்ன? இதோ சன்னல்கள் உள்ளன தப்பித்து செல்ல நானும் மார்புகள் மற்றும் கருப்பை அற்ற அழகிய வண்ணத்துப்பூச்சியாய் மாறி சன்னலின் விளிம்பில் தமயந்தியோடு…

நூல் : ஒரு வண்ணத்துப்பூச்சியும் சில மார்புகளும்
ஆசிரியர் : தமயந்தி
வெளியீடு : கருப்புப் பிரதிகள்
விலை : ரூ. 96
பக்கம் : 75
தொடர்புக்கு : 044 – 24332424 /24330024/
விற்பனை : 24332924

[email protected]