சதைப் பிண்டம் கவிதை – ச. இறைமொழி

சதைப் பிண்டம் கவிதை – ச. இறைமொழி




பிறக்கையிலே வந்ததிதுவோ? அன்று
இடையில் வாலிபத்தின் விளக்கமாய்
ஒன்று கூடித் திரிந்த காலத்தைக் கூறுபோட்டது
நண்பர்கள் வட்டாரத்தையும் சேர்த்தே!

அம்மா சொன்னாள் ஆகாதினி பழக்கம்
வாலிபத்தின் வாசம் தொட்டதால்
நண்பன் கூடத்தானே அவ்வாறு?
அசரணை அவக்கில்லையே!

கொஞ்ச நஞ்சமல்லவே கட்டுப்பாடு
மேலாடை எனது சொத்தானது
மாராப்பு பெட்டகமானது என்றும்
எதற்காம் இந்தவேடிக்கை?

நாவிலும் பேனாமையிலும் பெண்புரட்சி
பேசுவோரில் பலரும் வர்ணனை வடித்தனர்
இயல்பாய் கடக்கவியலாது நொந்தேன்
கண்களுக்கு விருந்தாம் என் சதைப் பிண்டம்!

தன் பெண்டீர் பாதுகாவல கணவான்களும்
அயலாரின் அவையவங்களை உரசவே எத்தனித்தனர்
வேறுபாடு வேட்கையின் உச்சம்காட்டும்
பெண்களின் மார்பகங்கள்! ஆம் மார்பகங்கள்!

தன்னைச் சுருக்கிப் பொதுவெளியில்
பெண்ணைக் கடக்கச் செய்கிறது
பச்சிளம் பிள்ளைகளின் பசிபோக்கும் படைப்பு
இனி இல்லாதொழியட்டும், இல்லாதொழியட்டும்!

அழகென்று அலட்டும் பெண்டீராயின்
அங்கத்தில் நீர் ஓர் சுமைதாங்கியே!

வௌவால் நீங்கி பறவையாய்
மாறாதோ மனித இனம்!

இயல்பாயிருக்க தடையாய் இருக்கும் சதைப் பிண்டமே
இல்லாதொழியட்டும் இனி, அன்றி
பசி போக்குங்காலம் முடிவுற வற்றிப் போகட்டும்!

வழியே இல்லையெனில் என் இயற்கை அன்னையே!
அறுத்தெறியுங்கள் என் மார்பை!

– ச. இறைமொழி