Book Review Suthish Minni's NaragaMaligai in tamil translated by K.Sathasivan book review by Pichumani. சுதீஷ் மின்னியின் நரகமாளிகை தமிழில்: கே.சதாசிவன் - பிச்சுமணி

நூல் அறிமுகம்: சுதீஷ் மின்னியின் நரகமாளிகை | தமிழில் கே.சதாசிவன் – பிச்சுமணி



ஓடும் பஸ்சில் இருந்து வலுக்கட்டாயமாக ஒருவரை இறக்கி வெட்டிக் கொல்லப்படுகிறார் அவரின் வயிற்றைக் கோடாரியால் பிளந்து குடலை வெளியே எடுத்துவிட்டு வயிற்றில் மண் அள்ளிக் போட்டு மிக கொடூரமான முறையில் கொலை செய்யப்படுகிறார். கொல்லப்பட்டவர் ஒரு தடகள வீரர். கொலைக்கான உண்மையான காரணம் அவர் ஆர் எஸ் எஸ் அமைப்பை சார்ந்த தலைவர் தாசன் என்பவன் ஆர் எஸ் எஸ் ஊழியர் மனைவியிடம் ரகசிய தொடர்பு வைத்திருந்ததை யதேச்சையாக பார்த்தால். ஆனால் அந்த அமைப்பு அந்த தடகள வீரர் மீது அந்த ஊழியரின் மனைவியை தவறான முறையில் பார்த்தார் என்று குற்றம்சாட்டி அவதூறு பரப்பி இருக்கிறது.

அஸ்வின் குமார் என்ற விஷ்வ ஹிந்து பரிஷத் அமைப்பின் மாநில நிர்வாகி கொலை செய்யப்படுகிறார். கேள்விப்பட்ட சுயம் சேவகர்கள் பத்தாயிரம் பேர் ஒன்றாகத் திரண்டார்கள். எதிர்ப்புகள் பல இடங்களில் பல கடைகளை வீடுகள் தீக்கிரையாகப்படுகிறது. கலவர சூழலை கட்டுபடுத்த சம்பவ இடங்களுக்கு காவல்துறை வருகிறது. இறுதி ஊர்வலம் நடக்கிறது முஸ்லிம்களுக்கு சொந்தமானது என்று தோன்றி எல்லா உடைமைகளும் எரிக்கப்படுகிறது. ஆனால் பல முஸ்லிம் வீடுகளுக்கு முன்னால் சுயம்சேவர்கள் சிலர் காவலுக்கு நிற்கிறார்கள் அந்த வீடுகளை தாக்ககூடாதென அறிவுறுத்துகிறார்கள்.

(என்னடா.. இது சுயம் சேவகர்கள் அவ்வளவு நல்லவர்களா என நினைத்துவிட வேண்டாம்.) இறுதி ஊர்வலம் முடிவடைந்ததும் காவல்துறை சென்று விடுகிறது. அந்த சுயம் சேவகர்கள் பாதுகாத்து நின்ற வீட்டுகளில் காவல்துறை போனபிறகு கொள்ளையடிக்கப்படுகிறது மோட்டார், டீவி, பிரிட்ஜ், மிக்சி, கிரைண்டர், அயன் ஃபாக்ஸ், தங்க நகை, பணம், நாற்காலி என அனைத்து பொருட்களும் கொள்ளையடிக்கப்படுகிறது. கொள்ளையடித்தது யார் என்றால். காவலுக்கு நின்ற அதே சுயம் சேவகர்கள்தான். ஒரு தாயின் முன்னாலேயே அவளது நான்கு பிள்ளைகளையும் செப்டிக் டேங்குக்குள் தள்ளிக் கொன்றதோடு அந்த தாயைப் பாலியல் பலாத்காரம் செய்து தலையில் பெட்ரோல் ஊற்றிக் கொளுத்துகிறார்கள்.

இரண்டு சம்பவங்கள் கேரளத்தில் நடந்தது மற்றொன்று குஜராத்தில். இப்படி மத்தியபிரதேசம் உத்திரபிரதேசம் மும்பை மதுரை என இந்தியா முழுவதும் நடந்த பல சம்பவங்களை இந்த நூலில் குறிப்பிட்டுள்ளார் சுதீஷ் மின்னி.

சுதிஷ் மின்னி தாயார் தன்னை ஐந்து வயதில் இடுப்பில் சுமந்து ஆர் எஸ் எஸ் சாகாவுக்கு கொண்டு விடப்பட்ட நினைவோடு இந்த புத்தகத்தை தொடங்குகிறார். இந்துக்கள் பாதுகாப்பு, தேசபக்தி, ஒழுக்கம், பண்பாடு இயக்கம் என்று கடவுள் மற்றும் மதநம்பிக்கையுள்ள சாமானியனை நம்பவைத்து ஆர்எஸ்எஸ் அமைப்பு தன்னை அடையாளப் படுத்திக்கொள்கிறது. ஆனால் அதன் உண்மையான முகம் அதுவல்ல என்பதை அவ்வியக்கத்தில் குழந்தை பருவம் முதல் தொடர்ந்து 25 ஆண்டுகள் செயல்பட்ட சுதீஷ் மின்னி அதன் குரூர முகத்தையும் மனித தன்மையற்ற செயல்களையும் இந்நூலில் படம்பிடித்துக் காட்டுகிறார்.

பாரதமாதா கி ஜே பாரதமாதா கி ஜே என்று மூச்சுக்கு முன்னூறு தடவை வெற்றுக் கோசமிடும் ஆர் எஸ் எஸ் அமைப்பு மற்றும் சங்பரிவார இயக்கங்கள் பெண்களை வன்புணர்வு செய்வதையும் அவர்களை பாலியல் தொழிலுக்கு தள்ளுவதையும் தன் முகம் மறைத்த கொள்கையாக வைத்திருக்கிறது. பொய்களை கட்டமைப்பது அதை பரப்புவது திட்டமிட்டு கலவரங்களை நடத்துவது. கலவரங்களில் கொள்ளை அடிப்பது. கொலை செய்வது ஆயுதங்கள் தயாரிப்பது வெடிகுண்டுகள் தயாரிப்பது மிரட்டி பணம் பறிப்பது தன் அரசியல் எதிரிகள் மீது பழி சுமத்துவது என அனைத்து விதமான ஆர் எஸ் எஸின் நயவஞ்சக செயல்களை நேரடி சாட்சியாக அடையாளம் காட்டுகிறது இந்நூல்.

இந்த புத்தகத்தில் சுதீஷ் மின்னி ஆர் எஸ் எஸ் அமைப்பு நடத்திய வன்செயல்களையும் கொலை கொள்ளைகளை பற்றி சொல்வதோடு அந்த அமைப்பு கல்விதளத்தில் சமூக அமைப்புகளில் அரசு துறைகளில் மத்தியதர வர்க்கத்திடம் பழங்குடி மக்களிடம் எப்படி பல்வேறு பெயர்களில் செல்கிறது என்பதை தெளிவாக சுட்டிக்காட்டியுள்ளார். சுதீஷ் மின்னியை வட மாநிலங்களுக்கு பயிற்சியாளராக அனுப்பும் போது பூநூல் அணிவித்தே அனுப்பி வைக்கிறார்கள். அதானி முதல் பெரும் செல்வந்தர்கள் உயர் அதிகாரிகள் என்று பலரும் அமைப்புக்கு நெருக்கமான உறவு இருப்பதை இந்நூல் மூலம் உணரமுடியும்.

கோடிக்கணக்கான ரூபாய் சொத்து மதிப்புள்ள மிகப்பெரிய அமைப்பு. குரு தட்சணை என்ற சடங்கில் மட்டும் வருடத்திற்கு கோடிக்கணக்கான ரூபாய்களை வசூல் செய்யபடுகிறது. கேரளத்தில் ஒரு மாவட்டத்தில் மட்டும் 17 கோடி ரூபாய் வசூலாகிறது. கேரளத்தில் மாநில முழுவதும் 250 கோடி ரூபாய் நாக்பூர் தலைமையகத்துக்கு செல்கிறது. இந்த குரு தட்சணை சடங்கில் குஜராத்தில் தான் அதிகமாக வசூல் செய்கிறார்கள். வருடத்திற்கு 1000 கோடி ரூபாய்.
இதுமட்டுமின்றி அவர்களின் சார்பு அமைப்புக்கள் நடத்துகிற கல்வி நிறுவனங்கள் மூலம் வெளிநாட்டவர்களிடமும் வசூல் செய்யபடுகிறது.
இப்படி கிடைக்கிற பெருந்தொகைளைப் பயன்படுத்திதான் ரகசிய சதி ஆலோசனை செயல்பாடுகளை இந்திய முழுவதும் நடத்தி வருகிறார்கள்.

இந்தியா தேசத்தின் விடுதலை போரில் துளியளவு கூட பங்கேற்காத ஆர் எஸ் எஸ் அமைப்பு தேசத்துக்காக போராடியவர்களை தேசவிரோதி என்று சொல்லும். இந்திய பொதுநிறுவனங்களை தனியாருக்கு கொடுக்கும் போது மூச்சு கூட விடாது. அனைத்து சாதிகளையும் ஒன்றினைந்து இந்து இந்து தேசியம் உருவாக்கபோதாய் சொல்லும்.ஆனால் ஒடுக்கப்பட்ட இந்துக்களுக்கு இட ஒதுக்கீடு என்றால் எதிர்த்து நிற்கும். அனைத்து சாதியினரும் அர்ச்சகர் என்றால் கூடாதென்று கொந்தளிக்கும்.

1925 ல் ஆரம்பிக்கப்பட்ட ஆர் எஸ் எஸ் அமைப்பு இதுவரையில் இந்துக்கள் நலனுக்காக ஏதேனும் செய்திருக்கிறதா என்றால் தேடித்தான் பார்க்கவேண்டும்.
எல்லா சாதி இந்துக்களையும் சமமாக பாவிக்காத ஆர் எஸ் எஸ் அமைப்பு. பார்ப்பனிய வர்ணாசிரம தர்மத்தை நிலைநாட்ட துடியாய் துடிக்கும்.
ஆனால் சாதிஇந்துகளிடமும் பட்டியல் இன மக்களிடமும் இந்து இந்துதேசமென்று கடவுள் நம்பிக்கை பயன்படுத்தி இஸ்லாமியர்கள் கிறித்தவர்கள் கம்யூனிஸ்ட்களை விரோதிகளாக கட்டமைக்கும். அவர்களுக்கு எதிராக வன்முறைகளை செய்ய தூண்டி விடும். கம்யூனிஸ்டுகளை கொல்வதும் முஸ்லிம்களை வன்புணர்வு செய்வதையும் கிறித்தவர்களை கொளுத்துவதும் அவர்கள் உடைமைகளை அழிப்பதும் தேசநலனென்று சொல்லி மனித தன்மையற்ற கொடூம் செயல்பாடுகளை உளவியல் ரீதியாக மடைமாற்றி செய்யவைக்கும்.

பாபர் மசூதி இடிப்பும் ராமன் கோவில் போன்ற இந்துத்துவ அஜென்டாவில் கலவரங்களில் தலித் மக்களே அதிகமாக பங்கெடுக்க வைத்தனர். தலித் மக்களே கலவரங்களில் பழி ஆனார்கள். நன்கு திட்டமிட்டபட்ட கலவரங்களும் குழப்பங்களும் உருவாக்கப்படும் போது அந்த சுழலுக்குள் விழுந்து சிக்கிக் கொள்வது பெரும் பாலும் ஏழைகளும் தலித் மக்களும் தான் என்பதை வட இந்திய பயணங்கள் சுதீஷ் மின்னிக்கு தெளிவாய் புரியவைக்கிறது.

சின்னஞ்சிறு வயதிலேயே ஆர் எஸ் எஸ் சாகாவுக்கு சென்ற சுதீஷ் மின்னி. ஆர் எஸ் எஸ் இயக்கத்தில் தன்னை முழுமையாக ஈடுபடுத்திக் கொள்கிறார். சாகா பயிற்சியாளராகவும் கருத்துரை பிரச்சாராகவும் நிர்வாகியாகவும் ஆர் எஸ் எஸ்’ன் பல்வேறு சார்பு அமைப்புகளிலும் பொறுப்பாளராகவும் செயல்பட்டுயிருக்கிறார். மத்திய பிரதேசம் உத்திரபிரதேசம் குஜராத் என பல மாநிலங்களிலும் ஆர் எஸ் எஸ் பணிக்காக சென்று செயல்பட்டிருக்கிறார்.

ஒரு கட்டத்தில் தான் என்ன செய்கிறோம்? இந்த அமைப்பு எதை நோக்கிப் பயணிக்கிறது? சில சம்பவங்கள் நடக்கும் போது எதிர் கேள்விகளுக்கு பதிலே இல்லாமல் இருக்கிறதே ஏன் என்று ஆர் எஸ் எஸ் அமைப்பை மறுபரிசீலனை செய்கிறார். அதை மனித தன்மையற்ற இயக்கமாக கருதுகிறார். ஒரு அரக்கத்தனமான மனநிலையில் தன் வாழ்வை கழிக்கிறோம் என்பதை உணர்ந்து அவ்வியக்கத்திலிருந்து வெளியே வந்து விடுகிறார். ஆர் எஸ் எஸ் மனித தன்மையற்ற செயல்களை எதிர்த்து நிற்கும் சிபிஎம்ல் தன்னை முழுமையாக இணைத்துக் கொள்கிறார்.

ஆர் எஸ் எஸின் குரூர முகத்தை வெளிபடுத்த தன் அனுபவங்களை தொகுத்து “நரக சாகேதத்தில் உள்ளறகள்” என்னும் தலைப்பில் மலையாள மொழியில் புத்தகமாக வெளியிட்டார். ஆர் எஸ் எஸ் அமைப்பின் கொடூரமான பாசிச செயல்பாடுகளை அம்பலப்படுத்தும் இந்த ஒப்புதல் வாக்குமூலம் புத்தகம். மலையாள மொழியில் ஒரு லட்சம் பிரதிகளை கடந்து விற்பனையாகி சாதனை படைத்தது. மேலும் இந்த நூல் ஆங்கிலம் இந்தி கன்னடம் போன்ற மொழிகளிலும் மொழிபெயர்க்கப்பட்டு நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. தற்போது தமிழ் மொழியில் அன்புக்குரிய தோழர் கே.சதாசிவன் மொழிபெயர்ப்பு செய்துள்ளார். குறுகிய நாட்களிலேயே முதல் பதிப்பில் 2000 புத்தகங்கள் விற்பனையாகி இராண்டாம் பதிப்புக்கும் தயாராகி அச்சில் உள்ளது.

பலதரப்பட்ட மொழிகள் பண்பாடுகள் கலாச்சாரம் என்று வாழும் மக்களிடையே ஒற்றை மொழி ஒற்றை கலாச்சாரம் என்னும் பாசிச கருத்தை நிலைநிறுத்த மனிதாபிமானமற்ற மிருகத்தனமான செயல்பாடுகளை செய்துவரும் ஆர் எஸ் எஸின் உண்மை முகத்தை படம் பிடித்து காட்டும் இந்த புத்தகத்தை சமூகநீதி பேசுவோர் சமநீதி பேசுவோர் ஆதிக்கத்துக்கு எதிராய் செயல்படும் சமூக செயல்பாட்டாளர்களும் மதம் சாதி பிரிவினைகளுக்கு எதிராய் செயல்படுவர்களும் சக மனிதனின் மீது அன்பும் அக்கறையும் செலுத்தும் மனிதநேயம் கொண்ட ஒவ்வொரு மனிதனும் கண்டிப்பாக வாசித்தல் அவசியம்.

ஆர் எஸ் எஸ் அமைப்பின் கொடூர செயல்களை ஒப்புதல் வாக்குமூலமாக அளித்த நூல் ஆசிரியர் தோழர் சுதீஷ் மின்னிக்கும் இதை தமிழ் மொழியில் மொழிபெயர்த்த தோழர் சதனுக்கும் அன்பும் வாழ்த்தும்..

ஆசிரியர்: சுதீஷ் மின்னி
தமிழில்: கே.சதாசிவன்
வெளியீடு: பரிசல் பதிப்பகம்.
விலை: 120