குடியரசு தினத்தன்று தில்லியில் பட்டப்பகலில் இளம்பெண் கொடூரமாகத் தாக்கப்பட்ட நிகழ்வு – பொறுப்புள்ள குடிமக்களின் பங்கு என்ன? – பிருந்தா காரத் | தமிழில்:
இரண்டு வயது குழந்தைக்குத் தாயான இருபது வயது பெண் ஒருவர் மீது நடத்தப்பட்ட காட்டுமிராண்டித்தனமான அந்த வன்முறை – தில்லியில் அந்த இளம்பெண் சந்தித்த சித்திரவதை வீடியோ அதிகமாகப் பகிரப்பட்டதை அடுத்து பரவலான கோபத்தை மக்களிடம் ஏற்படுத்தியுள்ளது. தன்னுடைய வீட்டிலிருந்த அந்தப் பெண்ணிடமிருந்த குழந்தையைப் பறித்துக் கொண்ட பிறகு அவர் கடத்தப்பட்டு வலுக்கட்டாயமாக வேறு பகுதிக்கு அழைத்துச் செல்லப்பட்டார் என்று ஊடகங்களில் வெளியாகியுள்ள முதல் தகவல் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் பாலியல் பலாத்காரத்திற்கு உள்ளாக்கப்பட்டு, கொடூரமான முறையில் தாக்கப்பட்டதுடன் மொட்டை அடித்து, முகத்தில் கருப்பு சாயம் பூசப்பட்டு, கழுத்தில் காலணிகளை மாலையாக அணிவித்து அவமானப்படுத்தப்பட்டு அந்தப் பெண் கேலி செய்யப்பட்டார் எனவும், அந்தப் பகுதியில் இருந்த தெருக்களில் அவர் இழுத்துச் செல்லப்பட்டதாகவும் அந்த அறிக்கையில் கூறப்பட்டிருந்தது.
வெளியான அந்த வீடியோ அந்தப் பெண் எதிர்கொண்ட வன்முறையின் ஒரு பகுதியை மட்டுமே நமக்குக் காட்டியுள்ளது. அந்தப் பெண்ணைத் தள்ளும் போதும், தலையைப் பிடித்து இழுத்து அறையும் போதும் கைதட்டி கேலி செய்கின்ற ஆண்களும், பெண்களும், குழந்தைகளும் அவரைச் சூழ்ந்து நிற்பதைக் காண முடிகிறது. மற்றொரு வீடியோ இளைஞன் ஒருவன் அந்தப் பெண்ணைத் தரையில் தள்ளி உதைப்பதையும், கொடூரமாக பெல்ட்டால் அடிப்பதையும் காட்டுவதாக இருக்கிறது. அது உண்மையில் மிகவும் பயங்கரமானது. இந்த நிகழ்வுகள் அனைத்துமே பட்டப்பகலில் நடந்தவையாகும். அந்தக் கொடுமை ஏறத்தாழ ஒரு மணி நேரத்திற்கும் மேலாக நீடித்திருக்கிறது. இவ்வாறு மிகவும் மோசமாக அந்தப் பெண் தாக்கப்பட்டு இழுத்துச் செல்லப்பட்டது எங்கோ ஒரு தொலைதூரக் கிராமத்தில் நடந்திருக்கவில்லை. இந்தியத் தலைநகரின் கிழக்கு பகுதியில் எப்போதும் பரபரப்பாக உள்ள ஒரு பகுதியிலேயே அந்த நிகழ்வு நடந்தேறி இருக்கிறது.
கடந்த ஆண்டு நவம்பர் மாதம் தற்கொலை செய்து கொண்ட இளைஞர் ஒருவரின் குடும்பத்தினரின் பழிவாங்கும் நடவடிக்கையாகவே அந்தப் பெண் மீது தாக்குதல் நடத்தப்பட்டது என்று தற்போது தெரிய வந்துள்ளது. அந்த இளைஞரின் மரணத்திற்கு இந்த இளம்பெண்தான் காரணம் என்று இளைஞரின் குடும்பத்தினர் குற்றம் சாட்டியிருந்தனர். அன்றிலிருந்தே அந்தக் குடும்பத்தினர் அந்தப் பெண்ணுக்கும், அவரது குடும்பத்தினருக்கும் தொடர்ந்து தொல்லை கொடுத்து வந்திருக்கின்றனர். அந்தப் பெண் வேலை செய்து வந்த கடைக்குச் சென்றும் அவர்கள் தகராறு செய்ததால் வேலையை விட்டு அந்தப் பெண் வெளியேற வேண்டியதாயிற்று. தொடர்ந்து விடுக்கப்பட்ட வன்முறை அச்சுறுத்தல் காரணமாக அவர் தனது கணவர், குழந்தையுடன் வீட்டை மாற்றிக் கொள்ள வேண்டியதாயிற்று. அவரின் தங்கையும் மிரட்டப்பட்டார். தில்லி காவல்துறையிடம் பலமுறை புகார் அளித்தும் எந்தவொரு நடவடிக்கையையும் யாரும் எடுக்கவே இல்லை.
அந்த வீடியோ வெளியான பிறகு, அந்தப் பெண்ணைத் தாக்கியவர்களை ‘விலங்குகள்’ என்று குறிப்பிட்ட தில்லி மகளிர் ஆணையத்தின் தலைவர் தாக்கியவர்கள் சட்டவிரோத மதுபான வியாபாரத்தில் ஈடுபட்டுள்ளனர் என்றும் அவர்கள் நன்கு அறியப்பட்ட குற்றவாளிகள் என்றும் தெரிவித்திருந்தார். அவர் காவல்துறை நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று அதற்கான கெடுவையும் விதித்தார். தேசிய மகளிர் ஆணையத்தின் முன்னாள் தலைவர் பெண்ணைத் தாக்கியவர்களை அசுரர்கள் என்று குறிப்பிட்டார். பாதிக்கப்பட்ட அந்தக் குடும்பத்தை நேரில் சென்று சந்தித்த பாஜக நாடாளுமன்ற உறுப்பினர் கெளதம் காம்பீர் குற்றவாளிகளை கொடூரமான மிருகங்கள், விலங்குகள் என்று குறிப்பிட்டதுடன் தில்லி குடிமக்களுக்கு நீதி வழங்கப்படும் என்றும் உறுதியளித்தார். சம்பவம் நடந்து நான்கு நாட்களுக்குப் பிறகு, ஏழு பெண்கள் உட்பட ஒன்பது பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இப்போது அந்த மிருகங்களும், அசுரர்களும் சிறைக்குள் அடைக்கப்பட்டு விட்டதால், அந்த விஷயம் அத்துடன் முடிந்து விட்டதா என்ன?
நீதிக்காகவும், பெண்களுக்கு எதிரான குற்றங்களைத் தடுப்பதற்காகவும் போராடிக் கொண்டிருப்பவர்கள் நன்கு அறிந்தவையாகவே இதுபோன்று எழுகின்ற கேள்விகள் இருக்கின்றன. அந்தப் பெண்ணின் மீதான தாக்குதலுக்கு ஒரு வாரத்திற்கு முன்பாக அவருடைய தங்கையால் அளிக்கப்பட்ட புகாரின் மீது தில்லி காவல்துறை ஏன் எந்தவொரு நடவடிக்கையும் எடுக்கவில்லை? உரிய நேரத்தில் காவல்துறையினர் நடவடிக்கை எடுத்திருப்பார்கள் என்றால் நிச்சயம் அந்த இளம்பெண்ணைக் காப்பாற்றியிருக்க முடியும்.
காவல்துறையினர் யாருமே இல்லாத நிலையில் ஏராளமான மக்கள் பார்த்துக் கொண்டிருக்கும் போது பொது இடத்தில் வைத்து இளம்பெண் ஒருவரை அடித்து தாக்குகின்ற அளவிற்கான குற்றம் ஏன் நிகழ்ந்தது? பகிரங்கமாக தன்னை இழுத்துச் சென்ற அவர்கள் தன்னை ஓர் அறைக்குள் அடைத்து வைத்ததாகவும், அங்கே தான் மிகவும் கொடூரமாகத் தாக்கப்பட்டதாகவும் பாதிக்கப்பட்ட அந்தப் பெண் கூறியுள்ளார். காவல்துறை சரியான நேரத்தில் வந்திருந்தால், நடத்தப்பட்ட வன்முறையின் ஒரு பகுதியிலிருந்தாவது அந்தப் பெண்ணைக் காப்பாற்றியிருக்க முடியும். இந்த வழக்கில் காவல்துறையின் பங்கு – பல வழக்குகளைப் போலவே – நம்மைப் புண்படுத்துவதாகவே இருக்கிறது. ஆனாலும் காவல்துறையின் உடந்தை அல்லது அதன் கடமை தவறிய செயல் குறித்து எந்தவொரு விசாரணையும் நடத்தப்படவில்லை. மற்றொரு அதிர்ச்சிகரமான, கொடூரமான உண்மை என்னவென்றால், ஒருவேளை அந்த வீடியோ பகிரங்கப்படுத்தப்பட்டிருக்கவில்லை என்றால் அந்த வன்முறையில் ஈடுபட்டவர்களால் அந்தக் குற்றத்திலிருந்து எளிதாகத் தப்பியிருக்கவும் முடியும். இந்த வழக்கில், இதுபோன்ற பலவற்றில் ஏற்கனவே நிரூபிக்கப்பட்டுள்ளவாறு, பாதிக்கப்பட்டவர் மீதான தங்கள் அதிகாரத்தின் நீட்டிப்பை உறுதிப்படுத்திக் கொள்ளும் வகையில் அந்த வீடியோ வன்முறையை நிகழ்த்தியவர்களாலேயே படமாக்கப்பட்டிருக்கலாம்.
அந்தப் பெண் தாக்கப்பட்ட போது அங்கே பார்வையாளர்களாக நின்றவர்கள் அனைவரும் அந்த நிகழ்விற்குப் பொறுப்பானவர்கள் இல்லையா? சதி வழிபாட்டிற்கு எதிரான சட்டம் 1987ஆம் ஆண்டு இயற்றப்பட்ட நேரத்தில், சதியின் பெயரால் கொலை நடப்பதற்கு அனுமதிக்கின்ற பார்வையாளர்களிடம் இருக்க வேண்டிய பொறுப்பு பற்றி சமூக ஆர்வலர்களிடையே விவாதம் எழுந்தது. அந்தக் கொலை நடக்கப் போகிறது என்று தெரிந்திருந்தால், அத்தகைய குற்றத்தைத் தடுக்க வேண்டிய சட்டப்பூர்வமான கடமை குடிமக்களுக்கு இருக்க வேண்டும் என்றே அப்போது ஏற்றுக் கொள்ளப்பட்டது. ‘அதிகாரிகள் மட்டுமின்றி, அத்தகைய பகுதியில் வசிப்பவர்கள், தங்களுடைய பகுதியில் சதி நடக்கவிருக்கிறதா, அல்லது சதி நடத்தப்பட்டுள்ளது என்று நம்புவதற்கு காரணம் என்று ஏதாவது இருந்தால் அல்லது அது குறித்து அறிந்திருந்தால், உடனடியாக அருகில் உள்ள காவல் நிலையத்தில் அந்த உண்மையைத் தெரிவிக்க வேண்டும். அவ்வாறு செய்யாவிட்டால், அவர்கள் அபராதம் அல்லது இரண்டு ஆண்டுகள் வரை சிறைத்தண்டனையைச் சந்திக்க நேரிடும்’ என்ற சட்டப்பிரிவு சேர்க்கப்பட்டது.
‘கௌரவம்’ என்ற பெயரிலே நடத்தப்படுகின்ற குற்றங்களுக்கு எதிரான சட்டத்திற்காக நடந்த போராட்டத்தின் போது, அப்போதைய தேசிய மகளிர் ஆணையம், பெண் ஆர்வலர்களுடன் இணைந்து தயாரித்த வரைவறிக்கையில் நடத்தப்பட்ட ‘கௌரவக் கொலை’ பற்றி புகாரளிக்காதவர்களுக்கு அபராதம் விதிக்கப்படும் என்று குறிப்பிடப்பட்டிருந்தது. இன்னும் அந்த சட்ட வரைவு நிலுவையிலே இருந்து வருகிறது. பெண்களுக்கு எதிரான குற்றங்களைத் தடுக்க வேண்டிய சந்தர்ப்பங்களில் குடிமக்களின் பொறுப்பு மிகவும் முக்கியமானது. இந்த ஷாஹ்தாரா வழக்கிலும் பாதிக்கப்பட்ட பெண்ணின் தங்கை மட்டுமே காவல்துறையினரைத் தொடர்ந்து அழைத்து தனது சகோதரியைக் காப்பாற்றியிருந்தார்.
இந்தச் சம்பவம் மற்றொரு உண்மை முற்றிலுமாகப் புறக்கணிப்படுவதை எடுத்துக் காட்டுவதாகவும் இருக்கிறது. பசுவதைத் தடுப்பு என்ற பெயரில், ‘லவ் ஜிஹாத்’ என்ற பெயரில் அல்லது தாடி வளர்ப்பதற்கு, வெள்ளைத் தொப்பி அணிவதற்கு எதிராக செயல்பட்டு வருகின்ற கும்பல்கள், பொதுவெளியில் கொலைகளை நடத்துபவர்கள், அவமானப்படுத்துபவர்கள், அடித்து உதைப்பவர்கள் எல்லாம் கொடூரமான மிருகங்கள், விலங்குகளாக இருக்க மாட்டார்களா? இதுபோன்ற குற்றச்செயல்களுக்கு ஆதரவையும் பாதுகாப்பையும் வழங்கி, கும்பல் படுகொலை போன்ற குற்றச் செயல்களை ஊக்குவித்து வருகின்ற அரசியல் தலைவர்களை கௌதம் காம்பீர் எவ்வாறாக விவரிப்பார்? ஷாஹ்தாராவில் இழைக்கப்பட்டுள்ள குற்றத்தின் மீது நமது வேதனையையும், கோபத்தையும், அச்சத்தையும் வெளிப்படுத்துகின்ற அதே வேளையில் இதுபோன்ற குற்றங்கள் அதிகாரப் பதவிகளில் அமர்ந்துள்ள தலைவர்களால் ஊக்குவிக்கப்பட்டு வருகின்ற கொடூரமான, ரத்தத்தில் தோய்ந்துள்ள கும்பல் படுகொலைக் கலாச்சாரத்தின் மூலம் மிகவும் சாதாரணமாக்கப்பட்டதன் விளைவு என்பதை நாம் ஒருபோதும் மறந்து விடக் கூடாது.
இந்திய தலைநகரில் பொதுவெளியில் இளம்பெண் அடித்து தாக்கப்பட்ட அந்தச் சம்பவம், மிகவும் மோசமான தற்செயலான நிகழ்வாக இந்திய குடியரசு தினத்தன்று நிகழ்ந்துள்ளது. நடைபெற்றுள்ள அந்தச் சம்பவம் தங்கள் எதிரிகளிடமும் பொறுப்புள்ளவர்களாக நடந்து கொள்கின்ற குடிமக்களை உருவாக்கத் தேவையான விழுமியங்களை மேம்படுத்துவதில் இருந்து விலகிப் பயணித்திருக்கும் நமது அரசியல், சமூக செயல்பாடுகளின் அடையாளமாக இருக்கிறதா?
https://www.ndtv.com/opinion/the-filmed-assault-and-lynching-of-a-young-mother-in-delhi-2741335
நன்றி: என் டிடிவி
தமிழில்: தா.சந்திரகுரு