சமகால நடப்புகளில் மார்க்சியம் – 10 – என்.குணசேகரன்
டார்வின் மீதான வெறுப்பு ஏன் ?
அறிவியலுக்கு ஒவ்வாத, பகுத்தறிவை முடமாக்குகிற பாடத்திட்டங்களை புகுத்துவதும்,அறிவியலையும் பகுத்தறிவையும் வளர்க்கிற பாடங்களை அகற்றுவதும் ஒன்றிய அரசின் இந்துத்துவா நிரல். இந்த முயற்சிகள் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
தற்போது,தேசிய கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் குழுமம் (என்சிஇஆர்டி) பல பாடங்களை நீக்கியுள்ளது.அனைத்து உயிரியல் பாடங்களுக்கும் அடிப்படையாக விளங்கும் டார்வினது பரிணாம வளர்ச்சி கோட்பாடு பாடத்திட்டத்திலிருந்து நீக்கப்பட்டுள்ளது.
இதனை நீக்குவதைக் கண்டித்து,1,800 விஞ்ஞானிகள் மற்றும் கல்வியாளர்கள் இந்திய அரசுக்கு எழுதியுள்ள கடிதத்தில், “பரிணாமம் பற்றிய அத்தியாயத்தை அகற்றுவது விஞ்ஞான பகுத்தறிவு மற்றும் பகுத்தறிவு சிந்தனையின் கொள்கைகளுக்கு எதிரானது” என்று குறிப்பிட்டிருந்தனர்.இதனை நீக்குவதால் மாணவர்கள் தங்களைச் சுற்றியுள்ள உலகத்தைப் பற்றிய புரிதல் ஏற்படுத்திக் கொள்வதில் பாதிப்பு ஏற்படும் என்று அவர்கள் எச்சரித்துள்ளனர்.
அப்படிப்பட்ட புரிதல் ஏற்படக் கூடாது என்பதே அரசின் நோக்கம்.இளம் தலைமுறை உலகத்தைப் பற்றியும் இயற்கை மற்றும் உயிரினங்களின் இயக்கம் பற்றியும் அறிந்து கொள்வதை தடுக்க வேண்டும்;இயற்கை மற்றும் உயிரினங்களின் இயக்கம் அனைத்தும் மனித சிந்தனைக்கு அப்பாற்பட்டது என்ற கண்ணோட்டத்துடன் அறிவுத் தேடலை இளம் தலைமுறை கைவிட வேண்டும்.இந்த நோக்கத்தின் அடிப்படையில்தான் இந்த பாடத்திட்டங்கள் அகற்றப்பட்டுள்ளன.இது மூடநம்பிக்கைகள் நிறைந்த, வளர்ச்சி குன்றிய ஒரு சமூகமாக எதிர்கால இந்தியா உருமாறுவதற்கு இட்டுச் செல்லும்.
டார்வின் எதிர்ப்பாளராகத் தமிழக ஆளுநர்
டார்வின் பாடம் நீக்கப்பட்டது திடீரென்று நிகழ்ந்தது அல்ல. ஏற்கனவே மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சர் சத்திய பால் சிங் டார்வின் கோட்பாடுகள் தவறானவை என்று விமர்சித்து வந்தார்.டார்வின் எதிர்ப்பாளர் வரிசையில் தமிழக ஆளுநரும் உண்டு.
தமிழக ஆளுநர் மார்க்சியத்தை அவதூறு செய்து பேசிய அதே உரையில் டார்வின் கோட்பாடுகளும் இந்தியாவை சீரழித்து விட்டதாக பேசினார்.”ஒருவர் பிழைக்க வேண்டுமானால் வலுவாக இருக்க வேண்டும்; கபடத்தனமாகவும், தந்திரமாகவும் இருக்க வேண்டும்” என்று டார்வின் சொன்னதாக ஆளுநர் பேசினார்.வலியது வாழும், தக்கனத் தப்பி பிழைக்கும் என்று டார்வின் சொன்னதாக ஆளுநர் குறிப்பிட்டார். இந்த அடிப்படையில் பலவீனமானவர்களும், ஏழைகளும் வாழத் தகுதியற்றவர்கள் என்பது டார்வின் கருத்து என ஆளுநர் பேசினார். பரிணாம வளர்ச்சி, இயற்கைத் தேர்வு உள்ளிட்ட டார்வின் கோட்பாடுகளை மலினப்படுத்தும் வகையில் ஆளுநர் பேசியுள்ளார்.
உண்மையில் தக்கனத் தப்பி பிழைக்கும் என்ற சொற்றொடர் டார்வின் சொன்னது அல்ல. டார்வின் கோட்பாட்டை மாற்றி அமைத்து ஹெர்பர்ட் ஸ்பென்சர் என்பவரால் சொல்லப்பட்ட கருத்து. இயற்கை சூழலுக்கு ஏற்றவாறு தகவமைத்துக் கொண்ட உயிரினத்தை இயற்கை தொடர்ந்து இனப்பெருக்கம் செய்திட வாய்ப்பை ஏற்படுத்துகிறது என்பது டார்வின் கருத்து.
ஆனால் இதைத் திருத்தி சொத்தைக் குவிக்கிற திறமையும் வழிமுறையும் பரம்பரையாக தொடர்கிறது என்று கூறி இதில் தகுதி உடையவர்கள் சொத்து உடையவர்களாக இருப்பது நியதி என்கிற வகையில் ஸ்பென்சர் கூறினார். இந்த சொற்றொடரை டார்வின் பெயரால் எடுத்துக் கூறி டார்வின் தத்துவமும் இந்தியாவை சிதைத்து விட்டதாக ஆளுநர் கூறுகிறார்.
டார்வினின் கருத்துக்கள் மிகப் புரட்சிகரமானவை.இயற்கைக்கு ஒரு வரலாறு உண்டு. உயிரினங்கள் உயிர் வாழ்வதும் ,மாற்றத்திற்கு உள்ளாவதும் ,பிறகு மறைந்து போவதும் இடையறாமல் நிகழ்ந்து வருகின்றன. இவையெல்லாம் இயற்கை நிகழ்வுபோக்குகள். டார்வினின் இந்த கருத்துக்கள் மார்க்சிய சோசியலிச சிந்தனைக்கு உரமூட்டுகிற கருத்துக்கள். உயிரினம் பிறந்து,வாழ்ந்து, வளர்ந்து,மறைவது போன்றே முதலாளித்துவ வரலாறும் உள்ளது.