விழியனின் “குறுங்…“ அனுபவ பகிர்வு – மு.ஜெயராஜ்
நான் ஆசிரியராக இருந்தபோதிலும் சரி தற்போது தலைமையாசிரியராக இருக்கும் போதும் சரி கடந்த இருபது வருடங்களாக நான் பழகிக் கொண்டிருப்பது வளரிளம் பருவ மாணவர்களோடு தான்.
எட்டாம் வகுப்பு வரையில் உள்ள மாணவர்களை கையாளுவது எளிது. எந்த எதிர் கேள்வியும் இல்லாமல் சொல்படி நடப்பார்கள். ஆனால் ஒன்பது, பத்து, மற்றும் அடுத்த இரண்டு வருடங்களில் மாணவர்களின் நடத்தையில் பெரிய மாற்றம் ஏற்படும்.
நல்லது-கெட்டது, சரி-தவறு, வேண்டியது-வேண்டாதது போன்ற அனைத்திலும் குழப்பமே எஞ்சி நிற்கும்.
நமது சமூக கட்டமைப்பில் வளரிளம் பருவ பெற்றோரில் பெரும்பாலானோர் பிள்ளைகள் சிறப்பாக படித்து மதிப்பெண்களை வாரி குவிக்க வேண்டும், எதிர்கேள்வி எதுவும் இன்றி சொல்பேச்சு கேட்டு நடக்க வேண்டும் என்று அவர்களின் வயதுக்கான இயல்புகளுக்கு முரணாக எதிர் பார்க்கிறார்கள். இந்த முரண்கள் நெகிழ்வுத்தன்மை இன்றி முற்றும் இடங்களில் எல்லாம் பிரச்சனைகள் முளைவிடுகின்றன.
பெற்றோர்கள் வளரிளம் பருவ குழந்தைகளின் பிரச்சனைகளை புரிந்து கொள்ள முயல்வதோ தோழமையோடு அனுகுவதோ மிக மிக அரிது.
ஆகவே, அவர்களுக்கான விஷயங்களை சினேகமான மொழியில் தோளில் கைபோட்ட படி உரையாடும் தொனியில் சொல்ல வேண்டிய தேவை உள்ளது. விழியன் அவர்கள் எழுதியுள்ள “குறுங்…“ என்கிற இந்த நூல் நான் மேற்கூறியிருக்கும் அந்த தேவையை நூறு விழுக்காடு முழுமையாக நிறைவு செய்கிறது.
இந்த நூல் வளரிளம் பருவத்தினருக்கு மட்டுமன்றி வளரிளம் பருவத்தினரோடு தொடர்பில் உள்ள அனைவருமே வாசிக்க வேண்டிய ஒன்றாகும்.
விழியன் அவர்கள் தொடர்ந்து மாணவர்களோடு உரையாடி வருபவர். பள்ளி மாணவர்களை சந்திக்க தொடர்ந்து பயணித்த வண்ணம் உள்ளார். மாணவர் மையக் கற்பித்தல் சார்ந்து தொடர்ந்து களமாடி வருகிறார். அவரது பேச்சிலும் சரி எழுத்திலும் சரி ஒரு சினேகமான மொழி இழைந்தோடும்.
இந்த நூல் தொடராக “ தி இந்து தமிழ் வெற்றிக்கொடி “ மாணவர் நாளிதழில் வந்த போதே சில பகுதிகளை வகுப்புகளில் வாசித்து காண்பிக்குமாறு ஆசிரியர்களிடம் கேட்டுக் கொண்டேன்.
அறிவியலை மாணவர்கள் அனுகும் விதம் பற்றி அழகாக கூறியிருந்தார் ஆசிரியர். சக்கரம் உருண்டோடி சைக்கிளாக மாறி நமது தோள்களில் சுதந்திரம் என்கிற சிறகை பொருத்துவதை எல்லாம் தொட்டுக் காட்டி கூர்ந்து கவனிப்பதன் தேவையையும் அறிவியல் கற்பதன் அவசியத்தையும் அழகாக உணர்த்தி இருப்பார். தொழில்நுட்பங்களின் முக்கியத்துவம் மற்றும் மாணவர்கள் அறிவியல் கண்காட்சியில் கலந்து கொள்ள வேண்டியது பற்றி எல்லாம் அழகாக கூறியிருந்தது “மலைப்பூ“வாக மணத்தது.
வரலாறை கண்டு பெரும்பாலானோர் அச்சம் கொள்ள காரணம் அதில் வரும் ஆண்டுகள் தான் என்று சரியாக கணித்து கூறியுள்ளார். வரலாறு என்றால் முதலில் “உள்ளூர் வரலாறு“ பற்றி அறிவதில் துவங்குங்கள் என்கிறார். வரலாறு படிப்பதோடு நில்லாமல் வரலாறு படைக்க வேண்டுமானால் “அரசியல் பழகு“ என்கிறார். “அய்யய்யோ அரசியலா?” என்று அலறும் பெரியவர்களே இருக்கும் காலத்தில் வளரிளம் பருவ குழந்தைகளுக்கே அரசியல் அறிவு வேண்டும் என்கிறார்.
அனைவருக்குமான உலகம் என்கிற பகுதியில் Inclusiveness பற்றி சிறப்பாக கூறியுள்ளார். எனது மாணவர்களில் ஒருவர் இரண்டு கால்களும் செயலிழந்து நடக்க இயலாதவர். அவரை மாலை வேளைகளில் தூக்கி கொண்டு செல்வதற்கு பசங்க மத்தியில் அவ்வளவு போட்டி இருக்கும். உண்மையாகவே Inclusiveness ஐ சரியாக உணர்ந்து பரஸ்பர உதவி புரிபவர்கள் பள்ளி மாணவர்கள் தான்.
நூலாசிரியர் கணிதம் பற்றி வெற்றிக் கொடியில் தொடர் எழுதுவதோடு கணிதம் சார்ந்து குழந்தைகளோடு ஆன்லைன் உரையாடல் நடத்தி வருகிறார். எனவே கணிதம் பற்றி எழுதாமல் இருப்பாரா? கணக்கோடு சில மாணவர்களுக்கு ஏற்படும் பிணக்கை தீர்க்க ”பஞ்சாயத்து” பண்ணி இருக்கிறார்.
கேள்விகள் கேட்க வேண்டியதன் அவசியம் குறித்து சிறப்பாக கூறி உள்ளார். சில கேள்விகளுக்கு உடனே பதில் கிடைத்துவிடும் சில கேள்விகளுக்கு காலப்போக்கில் பதில்கள் கிடைக்கும். சில கேள்விகளுக்கு ஒன்றுக்கு மேட்பட்ட விடைகள் வரலாம் என அவர் அடுக்கிக் கொண்டே போவது சுவாரசியமாக இருக்கிறது.
புத்தக கண்காட்சியில் புத்தகம் வாங்க செல்வது பற்றி ஒரு பகுதி எழுதியுள்ளார். அவர் கூறியுள்ள சில நுணுக்கங்கள் மாணவர்களுக்கு நிச்சயமாக பயன்படும்.
நூறு தலைமையாசிரியர்கள் கலந்து கொண்ட பயிலரங்கில் மேடைக்கு அழைத்த உடனேயே கைதூக்கியபடி நான் எழுந்து கொண்டேன். அங்கு என்னை CEO வாக (மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்) நடிக்க கூறினார்கள். அடுத்த இரண்டு நாட்களும் அனைத்து சக தலைமையாசிரியர்களும் வணக்கம் CEO சார் என்று சினேகமுடன் பேசினார்கள். ஒரு வினாடியில் அனைவருக்கும் தெரிந்தவனாகிப் போனேன். இதற்கு காரணம் உள்ளபடியே நூலாசிரியர் எழுதிய “மேடைக்கு முந்து” பகுதி தான்.
மாணவர்களை அறிவுத்தேடல் சார்ந்து முடுக்கிவிட்டு அந்த அறிவின் வடிகாலாக அவர்களை எழுதவும் ஊக்குவிக்கிறார். ஆம், பள்ளிகளில் “சிறார் இதழ்“ தொடங்குவது பற்றியும் அதில் எந்த எந்த பகுதிகள் இருந்தால் சிறப்பாக அமையும் என்பது பற்றி எல்லாம் அழகாக கூறி உள்ளார்.
எனவே இந்த நூல் குழந்தைகள் அனைவரும் படித்து அறிந்து கொள்ள வேண்டிய பொக்கிஷங்கள் நிறைந்தது. இந்த நூலை குழந்தைகள் வாசித்து முடிக்கும் போது அவர்களின் நடத்தையில் நிச்சயமாக விரும்பத்தக்க மாற்றங்கள் ஏற்படும் என அடித்துக் கூறுவேன்.
மு.ஜெயராஜ், தலைமை ஆசிரியர்,