Utopian Socialism and Scientific Socialism - A Simple Overview Book By M. Sivalingam கற்பானாவாத சோசலிசமும் விஞ்ஞான சோசலிசமும் - ஓர் எளிய முன்னோட்டம் - மு. சிவலிங்கம்

கற்பானாவாத சோசலிசமும் விஞ்ஞான சோசலிசமும் – ஓர் எளிய முன்னோட்டம் – சு. பொ. அகத்தியலிங்கம்[1]
“நாம் வாழும் இந்த உலகம் உண்மைதான். ஆம். உலகம் யாரோ சொல்வது போல வெறும் கனவல்ல. மெய்யாகவே இருக்கிறது.

எதை உண்டால் சாவே வராதோ, அதை அமிர்தம் என்பார்களே, தேவலோக இந்திரர்களுக்கு மட்டுமே அது கிடைக்கும் என்பார்களே, அந்த அமிர்தமே கிடைத்தாலும் தானே தனித்து உண்ணமாட்டார்; பிறருக்கும் தந்து பகுத்து உண்பார்.

எவர் மீதும் பகைமை பாராட்டவே மாட்டார். துன்பங்களை விரட்ட இடைவிடாது பாடுபடுவார்.

புகழ் எனில் உயிரையும் கொடுப்பார்; பழி வருமெனில் இவ்வுலையையே பரிசாகக் கொடுத்தாலும் அதனைச் செய்யமாட்டார்.

ஆசையை அறுத்து, தனக்கென வாழாமல் பிறருக்காக வாழ்வார். இப்படிப் பொதுநலனுக்காக உழைக்கிற மனிதர்களும் இருக்கிறார்களே. 

அவர்களால்தானே இவ்வுலகமும் இருக்கிறது.”

கடலுள் மாய்ந்த இளம்பெருவழுதி எனும் புலவர் எழுதிய புறநானூற்றுப் பாடலின் காட்சிதான் இது.

“உண்டால் அம்ம இவ் வுலகம் இந்திரர்
அமிழ்தம் இயைவது ஆயினும் இனிது எனத்
தமியர் உண்டலும் இலரே முனிவிலர்
துஞ்சலும் இலர் பிறர் அஞ்சுவது அஞ்சிப்
புகழ் எனின் உயிரும் கொடுக்குவர் பழி எனின்
உலகுடன் பெறினும் கொள்ளலர் அயர்விலர்
அன்ன மாட்சி அனையர் ஆகித்
தமக்கு என முயலா நோன் தாள்
பிறர்க்கு என முயலுயர் உண்மை யானே.”

என்பதே அப்பாடல்.

நாம் வாழும் உலகம் இப்படி இருந்தால் எப்படி இருக்கும்? கொஞ்சம் கற்பனை செய்து பாருங்கள். இத்தகைய கனவுகள் உலகம் முழுவதும் நிறைந்து கிடந்தன.

சோசலிசம் என்கிற சொல் வேண்டுமானால் அண்மை நூற்றாண்டுகளுக்கு உரியதாக இருக்கலாம், ஆனால் சமத்துவம், பொதுமை வேட்டல் மனித குலத்தின் ஆகப்பெரும் பழங்கனவே!

‘பறவையைக் கண்டான் விமானம் படைத்தான்’ என்பது மெய்யே. ஆயின் அதற்கான நெடும்பயணம் வலிமிகுந்தது. பறக்கும் மாயக் கம்பளமும், புஷ்பக விமானமும் அது போன்ற கற்பனைகளும் பறக்க வேண்டும் என்கிற மனிதர்களின் கனவின் ஆக்கம்தானே.

அதுவே விமான தொழில் நுட்பத்தின் தொடக்கமல்ல. அது கனவு, கற்பனை. ஆனால் அது தூண்டு கோலானது. அங்கேயே நின்றுவிட்டால் விமானம் வந்திருக்காது. நூற்றுக் கணக்கான முயற்சிகள் தோல்வியில் முடிந்தன. ஆனால் அவை ஒவ்வொன்றும் ஒரு பாடம் சொல்லிச் சென்றன. படிப்பினை கற்ற மனிதர் முயன்று விமானம் படைத்தார் என்பது அறிவியல் வரலாறு.

அதைப்போலவே எல்லோரும் சமம். எல்லோருக்கும் எல்லாம் கிடைக்க வேண்டும். பசியும்,பிணியும் இல்லாத வாழ்க்கை எல்லோருக்கும் வேண்டும். உணவு, உடை,உறையுள் மூன்றும் மானுடர் எல்லோர்க்கும் கிடைக்க வேண்டும். இவை எல்லாம் கனவாய், கற்பனையாய், வேண்டுதலாய், பிரார்த்தனையாய் காலங்காலமாக இருந்து வருகின்றன.

ஒரே ஒரு வேறுபாடு பறவையைப் போல் பறக்க வேண்டும் என ஆசைப்பட்டது போன்ற கனவோ, எதிர்பார்ப்போ அல்ல. இழந்த ஒன்றின் மீதான இடைவிடாத தேடல்.

கூட்டாக வேட்டையாடி, கூட்டாக உண்டு, கூட்டாக வாழ்ந்ததே ஆதிமனித குலம். கிடைத்ததைப் பங்கு போட்டு வாழ்ந்த காலம் அது. பட்டினியே பங்குபோடக் கிடைத்தது என்பது மெய்யே.

காலகதியில் புதிய உற்பத்திக் கருவிகளும் அது சார்ந்த உறவுகளும் அந்தப் பழம் வாழ்க்கைக்கு மெல்லக் கொள்ளி வைத்துவிட்டது. இழந்த அந்த வாழ்க்கையை மீண்டும் பெற முடியாதா?

அந்தப் பழைய வாழ்க்கையின் நல்ல கூறுகளை நினைவு கூர்ந்தும், கெட்ட கூறுகளைக் களைந்தும் கற்பனை செய்வது புலவர்க்குப் புதிது அல்லவே! உலகெங்கும் எத்தனை கனவுகள்  நல்ல வண்ணம் வாழ!

இந்தக் கனவுகளுக்கு இறக்கை பொருத்தினார்கள் பலபேர். ஆனாலும் பறக்க முடியவில்லை. அறிவியல் இயந்திரம் பொருத்தியதும் பறந்தது.

கற்பனாவாத சோசலிசம் விஞ்ஞான சோசலிசமானதும் அப்படித்தான்.

மார்க்ஸ் இருநூற்றாண்டைத் தொடர்ந்து, எங்கெல்ஸ் இருநூறாண்டும் வந்து போனது. அவரை நினைவுகூரவும், மார்க்சியத்தை உயர்த்திப் பிடிக்கவும் என்ன செய்யலாம்?

அவரது படைப்புகளோடு பயணிக்கலாம். முதலில் “கற்பனாவாத  சோசலிசமும் விஞ்ஞான சோசலிசமும்” எனும் நூலைச் சேர்ந்து வாசிக்கலாம். சேர்ந்து சிந்திக்கலாம்.

அந்த மாபெரும் முயற்சிக்கு உறுதுணையாக அந்நூலை முன்வைத்து ஒரு முன்னோட்டம் செய்ய விழைகிறேன். இது தொடக்கநிலை வாசகருக்கானதே. ஆழந்த வாசிப்பு விரும்பிகளும், அறிவுஜீவிகளும் மூலத்தைத் தேடி வாசியுங்கள் என்பதே என் வேண்டுகோள்.

ஆதிக் கவிஞர்கள், காவியங்கள், தொடங்கி தாமஸ் மூர், காம்பெனெல்லா, வின்ஸ்டான்லி, ஜெயிண்ட் சைமன், சார்லஸ் போரியர், ராபர்ட் ஓவன்  எனப் பலரும் கனவில், கற்பனையில் மலர்ந்த சோசலிசம், மார்க்ஸ் எங்கெல்ஸ் உழைப்பில் விஞ்ஞான சோசலிசமாக உருப்பெற்றதை, அதன் கதையை, வரலாற்றைக் கொஞ்சம் பார்ப்போமா?

[2]
“யான் பெற்ற இன்பம் இவ்வையம் பெறுக” என்கிற பரந்த நோக்கமும், “யாதும்  ஊரே யாவரும் கேளிர்” என்கிற உலகளாவிய பார்வையும் கொண்டவர் தமிழர் எனப் பொதுவாய் நாம் நெஞ்சு நிமிர்த்தலாம். 

“எல்லாரும்   எல்லாப் பெருஞ்செல்வம் எய்த லாலே
இல்லாரும் இல்லை உடையாரும் இல்லை மாதோ!” 

எனக் கம்பன் வரைந்து காட்டினான் என பெருமைப்பட்டுக் கொள்ளலாம்.

ஆனால் சமூகம் எப்படி இருந்தது? பகுத்துண்டு பல்லுயிர் ஓம்புதலை நல்லறமாகக் கருதிய மக்கள் வாழ்ந்த பூமி – சங்க இலக்கியம் தொட்டு இன்றைய இலக்கியம் வரை ஒரு பயணம் போனால்…

உப்பில்லாத கீரையை கதவை அடைத்துக் கொண்டு  உண்ட காட்சி முதல், வெள்ளிக் கிண்ணத்தில் பால்சோறு சாப்பிட்ட காட்சிவரை நிறைய மாறுபட்ட காட்சிகள் உண்டு.  “பிச்சை எடுத்துத்தான் உயிர்வாழ வேண்டியிருப்பின் எம்மைப் படைத்த இறைவனே ஒழிக!” என முதலில் முழக்கமிட்டது வள்ளுவர்தாம்.

பசிப்பிணியைப் போக்கும்  அட்சய பாத்திரத்தை மணிமேகலை வரைந்து காட்டும். அது மாபெரும் மனிதக் கனவின் வெளிப்பாடல்லவா? பசியும் பிணியும் சமூக ஒடுக்குமுறையும் அங்கே இருந்ததினால்தான் அவை இல்லாத உலகைக் கவிஞன் கனவு கண்டிருப்பான் இல்லையா?

உறுபசியில் மானுடர் வாடக் கண்டு வருந்தி கலங்கியவர் வள்ளலார். “ஒத்தாரு முயர்ந்தாருந் தாழ்தாருமெவரும் ஒருமையுளாராகி உலகியல் நடத்த வேண்டும்.”   என்கிற சமத்துவ வேட்கை கொண்டு உலவிய மாபெரும் மனிதர் அவர்.

ஆக, எல்லோரும் இன்புற்றிருந்த காலம் ஒன்று வரலாற்றில் எப்போதும் இருந்ததில்லை. ஆனால், அப்படி ஒரு கனவு காலந்தோறும் வெளிப்பட்டுக் கொண்டே இருந்தது. இக்கனைவை சோசலிசம் என்றோ கம்யூனிசம் என்றோ சொல்லிவிட முடியாது. ஆயினும், அதன் ஏதோ ஒரு கூறு இக்கனவில் உள்ளுறையாக இருந்தது என்பதை மறுக்கவும் முடியாது.

இது ஏதோ நம் பெருமை மட்டுமல்ல, உலகம் முழுவதும் எல்லா இன மொழிக் குழுக்களிலும் இத்தகைய கனவு ஏதோ ஒரு வடிவத்தில் உலவிக்கொண்டே இருந்தது. ஆனால் அந்தக் கனவு எதுவுமே அடிப்படையில் சுரண்டல் அமைப்பைத் தகர்க்காமல் அதனுள் ஏதோ ஓர் தர்மப்பிரபுவின் கருணைக்குக் காத்திருக்கும் பிச்சைக் காரர்களாகவே வறியோரைக் கருதியது.

மகாபலி கொடூர அரக்கனென்றும் மகாவிஷ்ணு வாமண அவதாரம் எடுத்து அவரை அடக்கியதாக நம்மிடம் உலாவரும் புராணக் கதை கேரள மண்ணில் தலைகீழாக அறியப்படுகிறது.

அங்கு மாவலிச் சக்கரவர்த்தி மக்களை சமமாக மதித்து ஒரு சமத்துவ ஆட்சி நடத்திவந்தார். அவரின் பெருமை எங்கும் பரவியது. இந்திர லோகம் மிரண்டது. இவரைக் கட்டுப்படுத்தி வைக்க மகாவிஷ்ணு பிராமணர் வேடத்தில் பூமிக்கு வருகிறார். அவர் வழியில் பார்க்கிற ஒவ்வொருவரும் மாவலி தர்மப்பிரபு எனப் புகழக் கேட்டு எரிச்சலடைகிறார்.

மாவலியை நேரில் சந்திக்கிறார் மகாவிஷ்ணு. தினசரி எவ்வளவு பேருக்கு அன்னதானம் செய்வீர் எனக் கேட்கிறார். அன்னதானம் எனும் வார்த்தையே புரியாத நாடு அது. அங்கு எல்லோருக்கும் ஒரு துண்டு நிலமிருக்கும். உழுது உழைத்து சாப்பிடுவர். அங்கே தானம் செய்வாரும் இல்லை. பெறுவாரும் இல்லை. அதற்கான சமூகத் தேவையே இல்லை. உடை தானம், பசுதானம் எதுவும் அங்கே நடைமுறையில் இல்லை. சுயதேவையை நிறைவுசெய்த கிராம அமைப்பாக அது உள்ளது. இதையே மாவலி பதிலாகத் தருகிறார்.

மகாவிஷ்ணு கோபப்படுகிறார். குள்ள அவதாரம் – வாமண அவதாரம் எடுத்து மூன்றடி நிலம் தானமாகக் கேட்கிறார். அங்கு உழுபவருக்கு நிலம் சொந்தம். நிலதானம் வழக்கில் இல்லை. ஆயினும் கேட்டதால் எடுத்துக் கொள்ளச் சொல்கிறார்.

வாமணர் விஷ்வ ரூபமெடுத்துப் பூமி முழுவதும் ஒரு அடி, வானம் இரண்டாவது அடி, மன்னர் தலை மூன்றாவது அடி என வஞ்சகமாய் மாவலியை அழிக்கிறார்.

ஆண்டு தோறும் தன் புண்ணிய பூமியைத் தரிசிக்க மாவலி வருவார். அதுவே ஓணம் பண்டிகை.

இக்கதை,  அதன் வரலாற்று வேர்  இவை இப்போது நம் விவாதப் பொருளல்ல. ஆனால், ஒருவித சமத்துவ சமுதாயக் கனவு அது. இதுபோல்  உலகெங்கும் நிறையக் கனவுகள் உண்டு. கிறித்துவத்திலும் உண்டு. கம்யூனிஸ்டு அறிக்கையில் மார்க்சும் எங்கெல்சும்  இது பற்றிச் சொல்லுவார்கள்,

“கிறித்துவத் துறவு மனப்பான்மைக்கு சோசலிச சாயம் பூசுவதைவிட எளியது எதுவும் இல்லை. கிறித்துவ மதம் தனிச் சொத்துடைமைக்கு எதிராகவும், திருமணத்துக்கு எதிராகவும், அரசுக்கு எதிராகவும் முழக்கமிடவில்லையா? அவற்றுக்குப் பதிலாக அது தர்மத்தையும், தரித்திரத்தையும், பிரம்மச்சாரியத்தையும், புலனடக்கத்தையும், மடாலய வாழ்க்கையையும், புனிதமாதா ஆலயத்தையும் பரப்புரை செய்யவில்லையா? கிறித்துவ சோசலிசம் என்பது, சீமன்களின் மனப் புகைச்சலைப் புனிதப்படுத்த மதகுரு தெளிக்கும் புனித நீரன்றி வேறென்ன?”

பறக்க வேண்டும் என்கிற ஆசை மாயக் கம்பளக் கதையாக மட்டுமே நீண்டநாள் இருக்கவில்லை. முறத்தை இறக்கைபோல் இடுப்பில் கட்டிக்கொண்டு உயரத்திலிருந்து குதித்துப் பறக்க முயன்றதுபோல் சமத்துவக் கனவை ஏதோ ஒரு வடிவில் செய்ய முயன்று தோற்ற கதைகள் சுவரசியமானது. படிப்பினை மிக்கது.

[3]
ஏற்பது இகழ்ச்சி” எனக் குழந்தைகளுக்கு ஆத்திசூடியில் போதித்த ஒளவையார் அதோடு நிற்காமல், “ ஐயம் இட்டு உண்” எனவும் போதிக்க வேண்டி ஏன் வந்தது?

சமூக எதார்த்தம் அப்படித்தான் இருந்தது. மறுக்கவோ மறைக்கவோ முடியவில்லை. ஆகவே பிச்சை எடுத்தலை இழிவெனச் சொன்னவர், பிச்சை போட்டுவிட்டுச் சாப்பிடுங்கள் எனவும் சொல்ல நேர்ந்ததோ!

“மக்கள் தேவர் என இருசாரார்க்கும்
ஒத்த முடிவின் ஓர் அறம் உரைக்கேன்
பசிப்பிணி தீர்த்தல்….”

என அறவண அடிகள் சொல்லுவதாய் மணிமேகலை காப்பியத்தில் வருகிறது. யாராயினும் பசிப்பிணி தீர்த்தல் என்பது எவ்வளவு உயர்ந்த மானிடப் பண்பு!

இந்தக் கனவு, பண்டைக் காலத்தோடு ஓயவில்லை. நவீன காலத்திலும் தொடர்ந்தது. மேலும் புதிதாய்ச் சமத்துவமாய்க் கனவு விரிந்தது.

“உட்டோப்பியன் சோசலிசமும் சயிண்டிபிக் சோசலிசமும் “ அல்லது “உட்டோபியன் சோசலிசமும் விஞ்ஞான சோசலிசமும்” என்ற சொற்றொடர் முதல் தலைமுறை தமிழகக் கம்யூனிஸ்ட்டுகளிடம் புழங்கும்.

இந்த உட்டோப்பியன் என்பது யாது? புனித தாமஸ் மூர் என்பவர் எழுதிய நூலுக்கு லத்தின் மொழியில்  “உட்டோப்பியா” எனப் பெயர் சூட்டியிருப்பார். அந்நூல் ஒருவகையான சோசலிசத்தைக் கற்பனை செய்திருக்கும். அதனை ’உட்டோப்பியன் சோசலிசம்’ என்பார் மார்க்சும் எங்கெல்சும். அதிலிருந்தே ’உட்டோப்பியன்’ எனும் சொல் புழங்கலாயிற்று.

“கற்பனைத்தீவு” எனும் நூல் தாமஸ் மூரால் தீட்டப்பட்டு 1516-இல் லத்தீன் மொழியில் வெளிவந்தது.

அந்நூல் மூன்று பேரின் உரையாடலாய் விரியும். தம் நண்பர் ஏகியஸோடு நடத்தும் உரையாடலில் போர்ச்சுக்கீசிய மாலுமியான ராபேல் ஹாத்லோட்டேய் என்னும் கற்பனைப் பாத்திரத்தையும் இணைத்திருப்பார். அவர்மூலம் கற்பனைத் தீவு ஒன்றைப் படைத்துக் காட்டுவார். 

அவரின் கற்பனைத் தீவில் பணத்துக்கு எந்த மரியாதையும் கிடையாது. தங்கமும் வெள்ளியும் மதிப்பற்றவை. குற்றவாளிகளின் கைகால்களைப்  பிணைக்கும் விலங்கு செய்யவே தங்கமும் வெள்ளியும் பயன்பட்டன. குழந்தைகள் விளையாடும் பொம்மைகளிலேயே முத்தும் பவளமும் பதிக்கப்பட்டன. அந்தத் தீவில் நிலம் தனிப்பட்ட யாருக்கும் சொந்தமாக இருக்காது. அனைவரும் தினசரி ஆறு மணிநேரம் உழைக்க வேண்டும். அனைவரும் உண்ண வேண்டும். அந்தத் தீவில் அடிமைகளும் கிரிமினல்களும்கூட இருந்தனர். அவர்கள் கடுமையாக உழைக்கும்படி கட்டாயப்படுத்தப்பட்டனர். 

இந்த நாவலைத் தொடர்ந்து 1517-ஆம் ஆண்டு ஜெர்மனியில் ஒரு நிலச் சீர்திருத்த இயக்கம் தோன்றியது. அதில் வன்முறை தலைதூக்கியது. தாமஸ் மூர் வன்முறையைக் காரணம் காட்டி அதனை ஏற்க மறுத்தார்.

இந்தத் தாமஸ் மூர் 1478-இல் கத்தோலிக்கக் குடும்பத்தில் பிறந்தவர். கத்தோலிக்க மதகுருவின் உதவியாளராய் இருந்தார். தந்தையின் விருப்பத்தை மீறிச் சட்டம் பயின்றார். தன் வருவாயை ஏழைகளுகே செலவிட்டார். இவர் எப்போதும் ஆடம்பரத்தை எதிர்ப்பவராகவும் மனித நேயராகவும் இருந்தார்.

இவருடைய நண்பர் எராஸ்மஸ். அவர், இவர் வீட்டில் தங்கி இருந்தபோதே “பொய்மையின் விலை” எனும் நூலை எழுதினார். டச்சு மனிதாபிமானி பீட்டர் ஏகிடியஸ் நட்பும் கிடைத்தது. இவ்விருவர் ஊட்டிய மனிதநேயமும் கனவுமே இவரை “கற்பனைத் தீவு” நாவலைப் படைக்கத் தூண்டியது. அந்நாவல்கூட நண்பர் ஏகிடியாஸோடு விவாதிப்பதாகவே நீளும்.

28 வயதில் காமன் சபைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார். இவர் இளவரசர் ஆர்தரின் கேளிக்கைக்கு அதிக நிதி கோரும் தீர்மானத்தை எதிர்த்ததால் பதவி இழந்தார். மன்னர் மரணத்துக்குப் பின் மீண்டும் காமன் சபைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

இவர் கவிதையாகத் தீட்டிய ரிச்சர்ட் மன்னரின் வரலாறு, இளவரசர் முடிசூட்டு விழாவையொட்டித் தீட்டிய கட்டுரை அனைத்துமே இவரின் கற்பனைத் தீவின் நீட்சியாக மனிதம் பேசின. மன்னருக்கு வரும் மனுக்களைப் படித்து அரசரின் உரிய கவனத்துக்கு கொண்டு போகும் பணியைத் திறம்படச் செய்தார். 1529-இல் லார்டு சான்சலர் எனும் பதவியும் பெற்றார்.

இளவரசரோ ஸ்பெயின் நாட்டு இளவரசியை மணமுடிக்க ஒப்பந்தம் செய்துவிட்டுப் பின்னர் அதை ரத்து செய்து, வேறொரு அழகிய பெண்ணை மணமுடிக்கப் போப்பிடம் அனுமதி கேட்டார். போப் அனுமதி மறுத்தார். இளவரசர் வெகுண்டார். போப்போடும் வாடிகனோடும் உள்ள உறவைத் துண்டித்து இங்கிலந்தில் உள்ள கத்தோலிக்கப் பிரிவை ’ஆங்கிலேயன் கத்தோலிக்கப்’ பிரிவாகத் தனியாக மாற்றினார். இன்றுவரை இங்கிலந்து கிறித்துவம் போப்புக்குக் கட்டுபடாத தனிப்பிரிவே!

தாமஸ் மூர் கத்தோலிக்க ஆதரவு நிலை எடுத்தார். ஆடம்பரத் திருமணத்தை எதிர்த்தார். ஆகவே தாமஸ் மூரைச் சித்திரவதை செய்து கொல்ல மன்னர் ஆணை பிறப்பித்தார். ஆயினும் மன்னரோடு உள்ள நெடுநாள் நட்புக் கருதி சித்திரவதை செய்யாமல் சிரச்சேதம் செய்து கொல்ல ஆணையிட்டார்.

லெனின் ரஷ்யப் புரட்சிக்கு வித்திட்ட சிந்தனையாளர்களின் பட்டியலில் இவரையும் சேர்த்திருப்பார்.

தாமஸ் மூர்  ‘உட்டோப்பியா’ நூலில் வரைந்து காட்டிய கற்பனாவாத சோசலிசம் அவரோடு முடியவில்லை. கனவும் கற்பனையும் தொடர்ந்தன. மார்க்சும் எங்கெல்சும் அதனை விஞ்ஞான சோசலிசமாக வடித்தெடுக்கும் வரை அந்தக் கனவுகள் எப்படியெல்லாம் முகம் காட்டின?  தொடர்ந்து பார்க்கலாம் …

[4]
“உவவுமதி உருவின் ஓங்கல் வெண்குடை …” அதாவது முழுமதிபோல் விளங்கும் வெண்கொற்றக் குடையின் கீழ்.. எனுத் தொடங்கும் 26 வரி புறநானூற்றுப் பாடலில் கருங்கை ஒள்வாள் பெரும்பெயர்வழுதி என்கிற பாண்டிய மன்னனைப் புலவர் இரும்பிடர்த் தலையார் புகழ்ந்து பாடும் பாடல் நினைவுக்கு வருகிறது. அப்பாடலில் வெறுமே புகழ்ச்சி மட்டுமல்ல. ஒரு சமூகச் செய்தியும் அதனுள் இருக்கும்.

இன்றைக்கும் சட்டசபையில்கூட முதல்வரை ஐந்து நிமிடம் புகழ்ந்துவிட்டுத்தான் சொல்லவந்த செய்தியைச் சொல்ல முடிகிறது. அன்றைய புலவர் நிலை கேட்கவா வேண்டும். முதல் 16 வரி புகழ்ந்து பாடிவிட்டுக் கடைசி பத்து வரிகளில்தான் செய்தியைச் சொல்லுவார். அச்செய்தி இதுதான்:

”பொலங் கழற்காற்,புலர் சாந்தின்
விலங் ககன்ற வியன் மார்ப!
ஊர் இல்ல, உயவு அரிய,
நீர் இல்ல, நீள் இடைய,
பார்வல் இருக்கைக், கவிகண் நோக்கிற்,
செந்தொடை பிழையா வன்கண் ஆடவர்
அம்புவிட, வீழ்ந்தோர் வம்பப் பதுக்கைத்
திருந்துசிறை வளைவாய்ப் பருந்திருந்து உயவும்
உன்ன மரத்த துன்னருங் கவலை,
நின்நசை வேட்கையின் இரவலர் வருவர்! அது
முன்னம் முகத்தின் உணர்ந்து, அவர்
இன்மை தீர்த்தல் வன்மை யானே.”

“அதாவது, பொன்னாலான வீரக் கழலைக் காலில் அணிந்தவனே! ஈரமான சந்தனத்தைத் தன் அகன்ற  மார்பில் பூசியவனே! உன்னைத் தேடி  இரவலர்  வருவர். ஆம், உதவி கேட்டு வருவர். அப்படி வருபவர் எப்படிப்பட்டவர் தெரியுமா? சொந்த ஊர் இல்லாதவர், வாழ முடியாதவர், நீர்நிலை இல்லாமல் வறண்டு கிடக்கும்   நீண்ட வழியைக் கடந்து வருபவர். அங்கே வன்கண் ஆடவர் எனப்படும் ரவுடிகள் பதுங்கியிருந்து அம்பு விடுவர். அதில் வீழ்ந்தவர்களை  உண்ணப் பருந்து உன்னமரத்தில் காத்திருக்கும். அந்த வழியில்தான் அவர்கள் வந்தாக வேண்டும். முகத்தைப் பார்த்ததுமே உணர்ந்து, அவர்களின் நிலைமையை எண்ணிப்பார்த்து, வறுமையைப் போக்க உதவுவதுதான் உன்னுடைய உண்மையான வலிமை ஆகும்.”

இன்றைக்கு கொரானாத் தொற்றுநோய் ஊரடங்கால் வாழ வழியற்றுக் கிடக்கும் மக்களுக்கு உதவுவதே அரசின் கடமை என மோடிக்கும் எடப்பாடிக்கும் எந்த ஊடகம் இதுபோல் உபதேசம் செய்யும்?

அது கிடக்கட்டும். வாழ வழியற்ற ஒரு பெருங்கூட்டமும், அவர்களை வாழவைக்க வேண்டிய பெரும் பொறுப்புள்ள அரசும் என இரு வேறுபட்ட காட்சியை இப்பாடல் சுட்டிக்காட்டுகிறது.

எல்லாக் காலத்திலும் ஒரு நல்லரசை, நல்ல சமூகத்தைக் கனவு காண்பவர் இருந்தே வந்துள்ளனர். அவர்களின் கனவு, அவர்கள் வாழ்ந்த காலத்தின் வரையறைக்கு உட்பட்டது. சென்ற அத்தியாயத்தில் தாமஸ் மூரின் உட்டோப்பியா எனும் கற்பனைத் தீவுபற்றிப் பார்த்தோம். அன்றைக்கு அது பலரின் கனவை மேலும் கிளர்த்தியது.

இத்தாலியில் ஸ்டெப்பியானோ கிராமத்தில் செருப்புத் தைக்கும் தொழிலாளியின் மகனாய் 1568-இல் பிறந்தவர்தான் தொம்மாசோ கம்பானெல்லா. 71 ஆண்டுகள் வாழ்ந்தவர். 27 ஆண்டுகள் சிறையில் கழித்தார். இளமையிலேயே தத்துவ ஈடுபாடு கொண்ட கம்பானெல்லா வழக்கமாய் அரிஸ்டாட்டிலைக் கொண்டாடும் பாதையை நிராகரித்து, பட்டறிவு சார்ந்து பேசிய தெலோசியாப் பக்கம் நின்றார். மதபீடங்கள் வெகுண்டன. கைது செய்யப்பட்டார். சிறையிலடைக்கப்பட்டார். நிபந்தனையின் பேரில் விடுவிக்கப்பட்டார். புருனோ, கலிலியோ எனப் பலரைக் கற்றறிந்தார். “கடவுள் மனிதனைப் படைக்கவில்லை; மனிதன்தான் கடவுளைப் படைத்தான்” என முழங்கினார். மீண்டும் கைது செய்யப்பட்டார்.

பைத்தியமாக நடித்தார், பைத்தியம் எனில் விடுதலை செய்து விடுவார்கள் என நம்பி. ஆனால் நடக்கவில்லை. சிறையில் அவர்  “ஸ்பெயினின் முடியாட்சி”, “நாத்திகம் வென்றது” உள்ளிட்ட பல நூல்களை எழுதினார். 1623-இல் புகழ் பெற்ற “சூரிய நகரம்” நூலை இத்தாலியிலும், லத்தீனிலும் எழுதினார். நூல் 1638-இல்தான் பாரீசில் வெளியிடப்பட்டது. அதாவது தாமஸ் மூரின் கற்பனைத் தீவு வெளியாகி 117 ஆண்டுகளுக்குப் பிறகு சூரிய நகரம் காம்பெனெல்லாவால் எழுதப்பட்டது. மேலும் ஐந்து ஆண்டுகள் கடந்த பின்பே வெளிவந்தது.

நெடிய கடற்பயணம் முடித்து திரும்பிய ஒரு கேப்டன் தன்னுடன் தங்கி இருக்கும் ஒரு விருந்தாளியோடு உரையாடும் போது, தான் கண்ட சிறிய தீவான சூரிய நகரத்தை விவரிக்கும் பாங்கில் எழுதப்பட்டிருக்கும் இந்நூல். 

அந்த நகரம் ஒரு மலைமீது இருந்தது. ஏழு வட்டங்களாகப் பிரிக்கப்பட்டிருந்தது. ’சூரியன்’தான் ஆட்சித் தலைவர். அவரோடு சம அதிகாரத்தில் ’வலிமை’, ‘அறிவு’, ‘அறம் அல்லது ‘அன்பு’ என மூன்று பேர் இருந்தனர். 

சூரியனே  மதகுருவாகவும் லெளகீக விவகாரங்களில் வழிகாட்டுபவராகவும் இருப்பார். இராணுவம் பாதுகாப்புக்கு ‘வலிமை’ பொறுப்பு கல்வி, மருத்துவம் போன்றவற்றை ‘அறிவு’ கவனிக்க,  விவசாயம்,  கால்நடை போன்றவற்றை ‘அன்பு’ கவனித்தது. 

20 வயதான அனைவருக்கும் வாக்குரிமை – புகார் செய்ய விமர்சிக்க உரிமை -ஆண், பெண் இருவருக்கும் சம உரிமை, சம வாய்ப்பு, கல்வி, வேலை.  சுயவிருப்பத் தேர்வாக அனைவரும் மனமுவந்து பங்கேற்கும் ஏற்பாடு.

தொழில் நுட்பம் புகுத்தப்படுவதால் வேலைப் பளு குறைய, வேலை நேரமும் நான்கு மணி நேரமானது. கருத்தால் உழைப்போரும், கரத்தால் உழைப்போரும் சமமாக நடத்தப்பட்டனர். சொத்துடமையே பல தீங்குகளின் மூலம் என்பதால், தனிச் சொத்துரிமை அகற்றப்பட்டு, சமூகத்துக்கே அனைத்தும் பொதுவானதாக இருக்கும் வகையில் நகரம் வடிவமைக்கப்பட்டிருந்தது. 

சூரியனின் ஒளி பாரபட்சமின்றி எல்லோரையும் குளிப்பாட்டுவதுபோல் ஒரு  சமூகத்தைக் கற்பனை செய்து அதற்குச் சூரிய நகரமென்று பெயருமிட்டார். மொத்தத்தில் ஒரு கற்பனா சோசலிசச் சொர்க்கமாக இதனை வரைந்து காட்டினார். 

திருமணம் போன்ற உறவுகளில் மதகுரு சூரியனுக்கு அதிக அதிகாரம் வழங்கப்பட்டது; மதம் தொடர்பான மூடநம்பிக்கைகளை அனுமதித்தது; ஆன்மா அழிவற்றது என்ற நம்பிக்கை போன்ற சில மோசமான கூறுகளும் இவரது சூரிய நகரத்தில் இடம் பெற்றிருந்தன. 

மதத்துக்கு இடம் கொடுத்தே இவர் சூரிய நகரை  வடிவமைத்த    போதிலும் கம்பானெல்லா தொடர்ந்து கடவுளைக் கேள்விக்குள்ளாக்கினார். ‘கடவுள் எல்லையில்லா பரம்பொருளானவர் – நல்லவர் – கருணையானவர் எனில் துன்ப துயரங்களும், துரதிர்ஷ்டங்களும் மழையெனப் பொழிவதேன்? பஞ்சத்தை, நோய்களை, போர்களை கடவுள் ஏன் தடுக்கவில்லை?’ எனத் தொடர்ந்து கேள்வி எழுப்பினார்.

போப்பின் மரணநாள் குறித்து ஒரு சோதிடன் அறிவிக்க போப் மிரண்டார். சிறையிலிருந்த கம்பானெல்லா தந்திரமாக இதனைப் பயன்படுத்தி நாடகமாடி போப்பின் சலுகையைப் பெற்று விடுதலையானார். சிறைவாசமும் சித்ரவதையும் அவர் சிந்தனையை, கனவை கிஞ்சிற்றும் சிதைக்க முடியவில்லை.

பிரெஞ்சு நாட்டுக்குப் போன அவர் அங்கு புனித ஜேக்கப் மடாலயத்தில் தங்கினார்; கல்வி சபைகளுக்கு தலைமை ஏற்றார்; அறிவுப் பசியோடு புதியனவற்றைக் கற்றுக்கொண்டே இருந்தார். இவர் தன் கனவு நகரம் பூக்கும் என நம்பினார். 1639-இல் மரணமடைந்தார். 

அது வெறும் கனவாகவே முடிந்தது. ஆனால் இதேபோல் இன்னும் பலரை இவ்வாறு கனவு காணவும் அதன்வழி கொஞ்சம் பரிசோதித்துப் பார்க்கவும் முயன்ற கதைகளை கொஞ்சம் பார்ப்போம்!

 [5]
ராஜாஜி முதலமைச்சராக இருந்தபோது தமிழக சட்டசபையில் ஒரு பெரும் விவாதம் நடைபெற்றது. விவாதம் விவசாய நிலம் குறித்தது. ஏனெனில், அப்போது கம்யூனிஸ்டுகள் வழிகாட்டலின்படி நாடு முழுவதும் “உழுபவனுக்கே நிலம் சொந்தம்; நிலச் சீர்ந்திருத்தத்தை அமுலாக்கு!” என்கிற கோரிக்கையோடு விவசாயிகள் சங்கம் பெரும் கிளர்ச்சிகள் நடத்திய காலம்.

தோழர் ராமமூர்த்தி காரசாராமாக விவாதம் செய்து கொண்டிருந்த போது முதல்வர் ராஜாஜி தலையிட்டுச் சொன்னார்: ”காம்ரேட் பிஆர்! நிலம் என்பது விவசாயிக்கு மனைவி மாதிரி; அதனை அடுத்தவருக்குக் கூறுபோட்டுக் கொடுக்க ஒருபோதும் சம்மதிக்கமாட்டார்.”

பிஆர் சற்றும் தாமதிக்காமல், “மிஸ்டர் சிஎம்! ஆனால் மனைவியைக் குத்தகைக்கு விடலாம், வாரத்துக்கு விடலாம், ஒத்தி வைக்கலாம், அடகு வைக்கலாம் அப்படித்தானே …” எனத் திருப்பி அடித்தார். ராஜாஜி மவுனமானார்.

உழுபவனுக்கு நிலம் என்பது சோசலிசமா? கம்யூனிசமா? இரண்டுக்கும் முந்தைய கட்டமா? இதுகுறித்து விவாதம் தனி. இதை இத்தொடரின் பின்னால் வாய்ப்பிருப்பின் பார்ப்போம். ஆனால் நிலம் குறித்த விவாதம் இல்லாமல் சோசலிசம் குறித்த விவாதம் சாத்தியமே அல்ல.

1999 ஆம் ஆண்டு லண்டனில் ஒரு விழா கொண்டாடப்பட்டது. அது ஒரு நிகழ்வின் முன்னூற்றி ஐம்பதாம் ஆண்டுவிழா. அவ்விழாவில் நாயகனின் படம் ஏதும் இல்லை. ஏனெனில் கிடைக்கவில்லை. ஆனால், அவரின் எழுத்துகளை மொத்தமாகச் சேகரித்து ஆக்ஸ்போர்டு பதிப்பகம் நூலாக வெளியிட்டது.

அவர்தான் ஜெர்ராடு வின்ஸ்டான்லி. அவர் செய்த குற்றம் லண்டனில் இருந்து தொலைவிலுள்ள சர்ரேவில் மலையடிவாரத்தில் கொஞ்சம் விவசாயிகளைச் சேர்த்துகொண்டு, புறம்போக்கு நிலத்தைக் கொத்திப் பண்படுத்திக் கொண்டிருந்ததுதான்.

இப்படிப் புறம்போக்கைக் கைப்பற்றி உழுவதை குற்றமாகக் கருதி அவரையும் அவரைச் சார்ந்தவர்களையும் வேட்டையாட ராணுவத்தை ஏவியது ஆட்சி அதிகாரம். இவர்கள் நிராயுதபாணியாக இருந்ததால் பேச்சுவார்த்தைக்கு லண்டனுக்கு அழைக்கப்பட்டார். கிழிந்த கந்தல் உடையுடன் இருந்த இவருக்குத் தங்கும் விடுதியில்கூட இடம் ஒதுக்கவில்லை. இவர் பின்னர் தன் நோக்கத்தை உலகுக்குச் சொல்லப் பேனா எடுத்தார்.

இவரையும் இவரைச் சார்ந்தவர்களையும் ‘தோண்டுவோர்’ (Diggers) என்றே வரலாறு பதிவு செய்துள்ளது. சமூகத்தை சமப்படுத்தவே தாங்கள் தோண்டுவதாக அவர்கள் அறிவித்தனர். ஜெர்ராடடு வின்ஸ்டான்லி 1609-இல் லங்காஷையரில் பிறந்தவர், 1630- களில் லண்டனில் வியாபாரம் செய்ய முயன்றவர், 1640-இல் சூசன் என்கிற மங்கையை மணந்தவர் என்பன போன்ற சில தகவல்களைத் தவிர அவரது சொந்த வாழ்க்கையைப் பற்றிய தகவல்கள் அதிகம் கிடைக்கவில்லை. 

அவர் அதிகம் படித்தவரில்லை; அவரது எழுத்துகளில் பைபிள் மேற்கோள்கள் மட்டுமே இடம் பெற்றாலும், அவருடைய எழுத்தின் வீச்சை வைத்து ஷேக்ஸ்பியரை அவர் படித்திருப்பார், தாமஸ் மூரின் ‘கற்பனைத்தீவை’யும், கெம்பனெல்லோவின் ‘சூரியநகரத்தை’யும் வாசித்திருப்பார் என யூகிக்கின்றனர் ஆய்வாளர்கள்.

1649-இல் அந்த மலையடிவாரத்தில் புறம்போக்கு நிலத்தில் இறங்கி மண்ணைப் பண்படுத்த கிராமம் கிராமமாகச் சென்று விவசாயிகளை அழைத்தார்; நிலத்தை சமூகத்தின் பொதுச்சொத்தாகப் பாவித்து கூட்டாக உழைக்க அழைப்பு விடுத்தார். யாரையும் கட்டாயப்படுத்தித் தன்னோடு சேர்க்கவில்லை; விருப்ப அடிப்படையில் இணைக்க முயன்றார்.

இங்கிலாந்தில் முதலாளித்துவப் புரட்சியில் மன்னரும் கிரஹாம்பெல் தலைமையில் நாடாளுமன்றமும் மோதிக்கொண்டிருந்த காலம். அங்கு நடந்த மாறுதல்களால் ஏழை விவசாயிகள் உள்ளதையும் இழந்து வாடிய காலம். 1648-இல் ‘பக்கிம்காம்ஷயரில் ஒளி வீசுகிறது’ என்ற ஒரு பிரசுரம் யாருடைய பெயருமின்றி வெளிவந்தது. சிறிது நாளில் மறுபதிப்பும் வந்தது. அப்பிரசுரம், ‘நாடாளுமன்றம் முடியாட்சியின் அதிகாரத்தைத்தான் வலுப்படுத்தியது; மக்கள் சுதந்திரத்தை இழந்துவிட்டனர்’ என வாதிட்டது.

இந்தச் சூழலில், சிலர் அரசு புறம்போக்கு நிலத்தைக் கைப்பற்றி உழுவது என்பது அரசுக்கு விடப்படும் சவாலாக, வருங்காலத்தில் பெரும் விளைவுகளை உருவாக்கும் போக்காகிவிடுமெனப் பயந்தே ராணுவத்தை இவர்மீது ஆட்சியாளர் ஏவினர். 

”தனிச் சொத்துரிமையும், இது என்னுடையது, இது உன்னுடையது என்கிற பாகுபாடும்தான் அனைத்து தீமைகளுக்கும் மூலகாரணமாகும். தனியார் சொத்துரிமையே மக்களைக் குற்றம் இழைக்கத் தூண்டுகிறது. அவர்களைக் குற்றவாளியாக்கிக் கொல்கிறது. நிலத்தைக் கூட்டாகப் பயன்படுத்துவதிலும், கூட்டாக உழைப்பதிலும்தான் இதற்குப் பரிகாரம் அடங்கி இருக்கிறது. இவையே ஒவ்வொருவரையும் வறுமையிலிருந்து மீட்டு அனைவருக்கும் ஆனந்தமயமான வாழ்க்கையையும் சமாதானத்தையும் அளிக்கும்” என்பதையே 1649-இல் வின்ஸ்டான்லி வெளியிட்ட ‘நேர்மையின் புதிய விதி’ பிரசுரம் பிரகடனப்படுத்தியது.

‘இங்கிலாந்து ஒரு சிறைச்சாலை’ என இப்பிரசுரம் வர்ணித்தது. 1648-இல் எழுதியவர் பெயரின்றி வந்த பிரசுரத்திலும் இதுபோன்ற வாசகங்கள் இடம் பெற்றதையொட்டி அதையும் வின்ஸ்டான்லியே தயாரித்திருக்கக்கூடும் எனக் கருதுகின்றனர்.

பைபிள் மீது பற்றுக்கொண்ட இவர், எல்லாம் சட்டத்திற்கு உட்பட்டே நடக்க வேண்டும், கலகம் கூடாது, விரும்பி இணைந்து செய்ய வேண்டுமென்றார். இவரும் இவரது தோழர்களும் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தின் முன் நிறுத்தப்பட்டனர். நீதிமன்றமோ அவர்கள் வாதத்தைக் கேட்காமல் அபராதம் விதித்ததோடு, இவர்கள் பண்படுத்தத் தொடங்கிய இடத்தைவிட்டும் விரட்டியடித்தது. காரணம், இதை இப்படியே அனுமதித்தால் பெருகிவரும் ஏழைகள் தரிசு நிலங்களையும் புறம்போக்கு நிலங்களையும் தாங்களே எடுத்துக் கொள்வார்களென அரசு பயந்தது.

வின்ஸ்டான்லி தொடர்ந்து தன் கருத்தை பரப்புரை செய்ய,  வரிசையாகப் பிரசுரங்கள் வெளியிட்டார். இவரின் கடைசிப் படைப்பு, ‘சுதந்திரத்தின் விதி’ 1652-இல் வெளிவந்தது. விவசாயிகளின் கம்யூனை அதில் கனவு கண்டார்.

”அனைத்து நிலங்களும் அவற்றின் ஆதாயங்களும் அரசுக்கே சொந்தம்; சர்ச்சுக்கு சொந்தமான நிலங்கள், பூங்காக்கள், மன்னனிடமிருந்து கைப்பற்றப்பட்ட காட்டு நிலங்கள் ஆகிய அனைத்தையும், அவற்றைப் பெறுவதற்காக இரத்தம் சிந்தி தங்கள் உடைமைகளை எல்லாம் தியாகம் செய்தவர்களுக்கு இலவசமாக வழங்க வேண்டும். அவர்கள் கூட்டாக வாழ்வதற்கு கம்யூன்கள் அமைக்க வேண்டும்” எனப் பிரதமர் கிரஹாம்பெல்லுக்கு வேண்டுகோள் விடுத்தது இப்பிரசுரம்.

”நிலத்தில் உழுது பயிரிட ஒவ்வொருவருக்கும் உரிமை உண்டு; உழைப்புக்கு தரப்படும் மரியாதை மட்டுமே செல்வச் செழிப்பின் தோற்றுவாய்” என்றார்.  ‘தனியார் உடைமை இல்லாத, ஏழைகளுக்கான ஒரு குடியரசை’ முன்மொழிந்தார். சுருக்கமாக ‘விவசாயிகளை முன்னிறுத்திக் கம்யூனிச சமுதாயம்’ பற்றிய கனவுகளை விதைத்தார்.

அரசு இதனைக் கண்டு வெகுண்டது. இவருடைய மற்றும் இவரது தோழர்களுடைய குடியிருப்புகளை உடைத்தெறிந்தது. இவர் எப்போது எப்படி இறந்தார் என்கிற விவரம்கூடத் தெரியவில்லை .1652-லேயே இறந்திருக்கக்கூடும் என யூகிக்கப்படுகிறது. இவரது புகைப்படமோ இவரை வரையத் தேவையான வர்ணனைகளோகூடக் கிடைக்கவில்லை.

ஆனால், ’நிலம், ரொட்டி, சமாதானம்‘ என்கிற முழக்கம் ரஷ்யப் புரட்சியின் மையமானது வரலாறு. இந்தியாவிலும் தெலுங்கானா, புன்னப்புரா வயலாறு, சந்தோலி, வோர்லி பழங்குடியினர் போராட்டம், வெண்மணி என இன்னும் பல. எங்கும் நிலத்தைச் சுற்றியே கங்குகள் கனந்து கொண்டிருப்பது வரலாறு.

விவசாயிகளின் கனவுக்கும் சோசலிசத்துக்கும் எப்போதும் நெருங்கிய தொடர்புண்டு. தொடர்ந்து பார்ப்போம்…. 

[6]
வால்டேர், ரூஸோ  போன்ற பெயர்கள் தமிழகத்தில் பரவலாகப் புழங்கக் காணலாம். பெரியாரைப் பெயர்சூட்டச் சொன்னால் இப்படிப் பிறநாட்டு நல்லறிஞர்கள் பெயரைச் சூட்டுவார். திராவிட இயக்க மாநாடுகளில் ‘பிரெஞ்சுப் புரட்சி’ பற்றிய உரை நிச்சயம் இடம்பெறும்.

பிரெஞ்சுப் புரட்சியில் ஒலித்த  “சுதந்திரம், சமத்துவம், சகோதரத்துவம்” என்னும் முழக்கம் தமிழ்மண்ணுக்குப் பெரும் ஈர்ப்பான ஒன்றானது. ஆனால், இம்முழக்கத்தில் இடம்பெறும் சமத்துவமும், சோசலிசம் என்கிற சமத்துவக் கண்ணோட்டமும் ஒன்றா? இதனைச் சற்று பார்த்த பின்னரே நாம் அடுத்த கட்டத்துக்கு நகர இயலும். ஆகவே, பிரெஞ்சுப் புரட்சி குறித்துச் சில செய்திகளை முதலில் புரட்டுவோம்.

பிரெஞ்சுப் புரட்சி [1789 – 1799] பத்தாண்டுகள் பிரெஞ்சு வரலாற்றையே தலைகீழாக மாற்றியது. இப்புரட்சி பகுத்தறிவை முதன்மைப்படுத்தியது. இப்புரட்சிக்கு வித்திட்ட அறிஞர் பலர்.

மெஸ்லியரின் ‘மரணசாசனத்தை’ சுருக்கி வால்டேர் வெளியிட்டார்; மேலும் வால்டேரின் வீரியமிக்க எழுத்துகள் கிறித்துவ மதசபையை, பிரபுக்களைத் தாக்கின. ரூஸோவின் ‘சமுதாய ஒப்பந்தம்’ எதேச்சதிகாரத்தை எதிர்த்தது,  சமத்துவக் குரலை எழுப்பியது. தத்துவவியலாளர் மாண்டெஸ்கியூ சட்ட வடிவிலான அரசாங்கம் வேண்டுமென்றார்.

வால்டேர், ரூஸோ, தஆலம்பேர் உதவியுடன் ஒரு கலைக்களஞ்சியத்தை 1751-இல் தீதரே தயாரித்தார். அது அறிவியல், தொழில், விவசாயம், கலைகள் இவற்றின் பிரச்சனைகளைப் பேசியது. மதபீடத்தைத் தாக்கித் தீதரே எழுதியதும் இடம்பெற்றது. கலைக்களஞ்சியத்தின் முதல் தொகுதியை மதபீடம் எரித்தது. ஆயினும் மீண்டும் வெளிவந்தது. மதபீடத்தை எதிர்த்தாலும் மதத்தை எதிர்க்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இவர்களின் எழுத்துகளும் உரையும் சிந்தனையைக் கூரேற்றின. “சுதந்திரம், சமத்துவம், சகோதரத்துவம்” எனும் லட்சியப் பதாகையை உயர்த்திப் பிடித்தன.

அதிகாரத்தின் குறியீடாக இருந்த 100 அடி உயரமும் 80 அடி அகழியும் கொண்ட பாஸ்டில் சிறையை நோக்கி 1789 ஜூலை 14-இல் பாரீஸ் நகரில் மக்கள் திரண்டனர். ஹோட்டல் திஸ்லா வேலிட்டில் கைப்பற்றப்பட்ட பீரங்கியை மக்கள் இழுத்துவந்தனர். மோதலில் 83 பேர் கொல்லப்பட்டனர். சிறை தகர்க்கப்பட்டது. அங்கிருந்த ஆயுதங்கள் மக்கள் கைக்கு மாறின. கிளர்ச்சி பரவியது.

1789 ஆண்டில் கடைசி ஆறு மாதம் மட்டிலும் 250 பத்திரிகைகள் வெளியிடப்பட்டன. ரோபஸ்பியர் தலைமையில் ஜாக்கோபின் கிளப், டாண்டன், ஹெபர்ட் இடம்பெற்ற கோர்டிலேயர் கிளப், கிராண்டோன் தலைமையிலான குழு, ஜான் போல் மாராவின் மக்கள் நண்பன் கிளப், ‘சகோதரக் கழகம்’ மனித உரிமைக் கழகம் எனப் பலவும் செயல்படலாயின.

“மனிதர்கள் சுதந்திரமாகப் பிறக்கிறார்கள்; சுதந்திரம், சமத்துவம் உரிமை கொண்டவர்களாக வாழ்கிறார்கள்” என்கிற புகழ்பெற்ற வாசகங்களுடன், தனியுடைமையைப் பாதுகாத்துக் கொண்டே, எல்லோருக்கும் வாக்குரிமையோடு ஒரு முதலாளித்துவ சுதந்திரத்தை ஃபிரான்ஸ் 1792 செப்டம்பர் 20-ஆம் நாள் உறுதி செய்தது.

ஆதிக்கப் போட்டியில் ஜேக்கோபின், கிராண்டோன் என மாறி மாறி கில்லட்டினுக்கு இரையாக்கினர். அரசியல் கொந்தளிப்பும் விறுவிறுப்புமாய் நிகழ்ச்சிகள் தொடர்ந்தன. 1799-இல் நெப்போலியன் போனாப்பார்ட் அரியணை ஏற வழிவகுத்தது.

வரலாற்றாசிரியர் கிறிஸ் ஹார்மன் கூறுகிறார், “உலக வரலாற்றில் புரட்சியின் ஒட்டுமொத்தத் தாக்கத்தை மிகச்சரியாகப் பார்க்கும் வரலாறுகள், பாரீஸின் அதிநெருக்கடியான ஏழைகள் வாழும் பகுதிகளில், அதன் குறுகிய தெருக்களில் நடந்தவற்றைக் குறைத்துக் கூறும் அபாயம் உள்ளது. இந்த இடங்களில்தாம் மக்கள் தம் அமர்வுகளில் மாரா, ஹெபர்ட் ஆகியோரின் எழுத்துகளை மணிக்கணக்கில் படித்து விவாதித்தனர். உணவுப் பதுக்கல்காரர்களை வேட்டையாடினர். அரச விசுவாசிகளைத் தேடினர். ஈட்டிகளைத் தீட்டிக்கொண்டு பாஸ்டில் சிறைநோக்கி அணிவகுத்தனர். அரசியலமைப்புச் சட்டரீதியான முடியாட்சிக்குப் பதிலாக கிராண்டோன்களையும்  கிராண்டோன்களுக்குப் பதிலாக ஜோக்கோபின்களையும் பதவியிலமர்த்தி எழுச்சிகளுக்குத் திரண்டனர். ஆயிரக்கணக்கில் போர்முனைக்குச் சென்றனர். கிராமங்களில் புரட்சியைப் பரப்பினர்.”

மேலும், ”1796-இல் கொல்லப்பட்ட கிராக்குஸ், பாசூப்பைச் சுற்றி ஒரு புரட்சியாளர் குழு உருவாயிருந்தது. இவர்களின் சமூகப் பொருளாதாரப் பார்வைதான் 19-ஆம், 20-ஆம் நூற்றாண்டுகளின் சோசலிச இயக்கங்களுக்கு அடித்தளமானது” என்கிறார் கிறிஸ் ஹார்மன். இதனை நினைவில் நிறுதுங்கள்.

“பிரெஞ்சுப் புரட்சி ஒடுக்கப்பட்ட போதிலும், வரலாற்றைப் படிக்கும் ஒவ்வொருவரும் அதை வெற்றிகரமானதென்றே கருதுகின்றனர். இந்தப் புரட்சி பூர்ஷ்வா ஜனநாயகம். பூர்ஷ்வா சுதந்திரத்திற்கு அடித்தளம் இட்டது” என்றார் லெனின்.

“பிரெஞ்சுப் புரட்சி ஒரு முதலாளித்துவப் புரட்சிஎன்பதில்  ஐயமில்லை. அதனுடைய தன்மை முதலாளித்துவ அடிப்படையில் அமைந்ததால், உழைக்கும் மக்களை அது சுரண்டலிலிருந்து விடுவிக்கவில்லை” என்று தெளிவாகச் சொன்னார் மார்க்ஸ். 

எங்கெல்ஸின்  “கற்பனாவாத சோசலிசமும் விஞ்ஞான சோசலிசமும்” எனும் நூலின் முதல் அத்தியாயம்  இப்பிரெஞ்சுப் புரட்சி பற்றிய விமர்சனத்துடனேதான் தொடங்கும்.

“பிரெஞ்சு நாட்டில் மனிதர்களின் மனதை, வரப்போகும் புரட்சிக்காகத் தயார் செய்த அந்த மாமேதைகள், தாங்களே தீவிரப் புரட்சியாளர்களாகவும் திகழ்ந்தனர்.

எப்படிப்பட்டதாக இருப்பினும் எந்த வகையான புறநிலை அதிகாரத்தையும் அவர்கள் அங்கீகரிக்கவில்லை .மதம், இயற்கை விஞ்ஞானம், சமுதாயம், அரசியல் நிறுவனங்கள் – இவை ஒவ்வொன்றுமே தயவுதாட்சண்யமின்றி விமர்சனத்துக்கு உட்படுத்தப்பட்டன.

பகுத்தறிவு, தீர்ப்பு மேடை முன்னே தன் இருப்பை நியாயப்படுத்தியாக வேண்டும் அல்லது இல்லாது ஒழிந்தாக வேண்டும். பகுத்தறிவுக்கு உகந்தது ஒன்றே அனைத்துக்கும் அளவுகோல் ஆயிற்று.

ஹெகல் சொல்லுவது போல் உலகம் தலையால் நின்ற காலம் அது.”

என்பார் எங்கெல்ஸ்.

அதாவது காலில் நிற்காமல், எதார்த்தத்தில் காலூன்றாமல்  வெறும் சிந்தனையை மட்டும் அடிப்படையாகக் கொண்டு, இதுவரை நிலவிய சமுதாயம், அரசாங்கம் என அனைத்தையும் குப்பைக் குழியில் வீசி எறிய முயன்றது.

மேலும் தெளிவாக வரையறுப்பார்,

“இந்தப் பகுத்தறிவின் ஆட்சி என்பது முதலாளித்துவ வர்க்கத்தின் மிகைப்படுத்திக் கூறப்பட்ட ஆட்சியே அன்றி வேறொன்றில்லை.

இந்த நித்தியமான நீதி என்பது முதலாளித்துவ நீதியாகத் தன்னை நிறைவேற்றிக் கொண்டது.

இந்தச் சமத்துவம் என்பது சட்டத்தின் முன்பாக முதலாளித்துவ சமத்துவமாகக் குறுகிவிட்டது.

முதலாளித்துவச் சொத்துடைமை என்பது இன்றியமையாத மனித உரிமைகளில் ஒன்றாகப் பிரகனப்படுத்தப்பட்டுள்ளது.

பகுத்தறிவின் அரசாங்கம், ரூஸோவின் சமூக ஒப்பந்தம் ஒரு ஜனநாயக முதலாளித்துவக் குடியரசாகத்தான் நடைமுறைக்கு வந்தது.”

என்கிற எங்கெல்ஸ், 

“அது அவ்வாறுதான் வரமுடியும்; அவர்களின் சகாப்தம் விதித்த வரம்புகளுக்கு அப்பால் அவர்களால் ஒருபோதும் செல்ல முடியாது” எனத் தெளிவுபடுத்தினர்.

வர்க்கச் சலுகைகளை வழங்கினால் போதாது, வர்க்கப் பாகுபாட்டையே ஒழிக்காமல் அடுத்த கட்டத்துக்குப் போக முடியாது என்ற முடிவுக்கு மார்க்சும் எங்கெல்சும் வந்தனர். அவர்களின் முன்னே மூன்று மாபெரும் கற்பனா சோசலிஸ்டுகள் காட்சி அளித்தனர். அவர்களைப் பரிசீலிக்க முயன்றனர்.

“சித்தாந்த ரீதியான ஜெர்மன் நாட்டு சோசலிசம் ஒருபோதும் அவர்களை மறவாது; மாறாக, அந்த மூவரின் தோள்மீதுதான் அது நிற்கிறது.” என எங்கெல்ஸ் புகழாரம் சூட்டிய மூவருள் செயின்ட் சைமன் முதலில் இருப்பார். ஃபூரியேவும், ஓவனும் அடுத்தடுத்து வருவர். அவர்களை அடுத்து பார்ப்போம்.

[7]
பணப் பரிவர்த்தனை எல்லாம் பின்னர் வந்தவையே. ஆதியில் தானியம் அல்லது ஏதேனும் பொருள்தான் கூலியாக வழங்கப்பட்டது. விவசாயத் தொழிலாளிக்கு தானியமாகவே கூலி தரப்படும். அதிலும் மரக்கால் எனப்படும் அளவீட்டில். அந்த மரக்காலில் மோசடி செய்து கூலியைக் குறைத்துக் கொடுப்போர் அன்றைக்கே இருந்துள்ளனர். அப்படி அரை மரக்கால், குறை மரக்கால் அளந்தவர்களை  நரகத்தில் எண்ணைக் கொப்பரையில் போட்டு வறுப்பார்கள் என்கிற சமூக உளவியல் பயம் நிலவியது. அந்தக் காலத்தில் அத்தகைய மிரட்டல் தேவையாக இருந்திருக்கிறது.

“வியர்வை உலரும் முன்பு கூலியைக் கொடுத்துவிடு!” என பைபிளில் உபதேசம் உண்டு. போதனைகளால் சமூகம் திருந்தியதும் இல்லை, நல்வழிப் பட்டதும் இல்லை என்பதுதான் அனுபவம் நெடுக நாம் காண்பது. ஆயினும் ஆதிக்கம் செய்வோரை நல்வழிப்படுத்தப் போதனைகள் தொடர்ந்த வண்ணமே இருந்தன.

கற்பனாவாத சோசலிசமும் விஞ்ஞான சோசலிசமும் என்ற தம் நூலில் எங்கெல்ஸ் எழுதுகிறார்:

“சுருங்கக் கூறின், ’பகுத்தறிவின் வெற்றி’யிலிருந்து உதித்தெழுந்த சமூக, அரசியல் நிறுவனங்கள் தத்துவ அறிஞர்களின் ஆரவாரமான வாக்குறுதிகளோடு ஒப்பிடுகையில் கொடுமையான ஏமாற்றம் தரும் கேலிக் கூத்துகளாகிவிட்டன. வல்லுநர்கள் இல்லாதது குறைபாடாக இருந்தது. நூற்றாண்டின் இறுதியில் அவர்களும் வந்து சேர்ந்தனர். 1802-இல் செயின்ட் சைமனின் ஜெனிவாக் கடிதங்கள் வெளியாயின. ஃபூரியேயின் கொள்கைக்கான அடிப்படைக் கருதுகோள்கள் 1799 முதலே உருவாகிவந்த போதிலும் அவருடைய முதலாவது நூல் 1808-இல் வெளிவந்தது. 1800 ஜனவரி 1-இல் ராபர்ட் ஓவன் நீயூ லனார்க்கின் [மாதிரி நகரின்] மேலாண்மைப் பொறுப்பை ஏற்றார்.”

இப்போது செயின்ட் சைமனை முதலில் பார்ப்போம்.

செயின்ட் சைமன் என்பவர் 1825-இல் நிலைத்த புகழுக்குரிய “புதிய கிறித்துவம்” நூலைப் படைத்தார். முற்றுப்பெறாத அந்நூலில் முதலாளித்துவ சமுதாயத்தைப் புலன் விசாரணை செய்தார்.

அனைத்துத் தீமைகளுக்கும் காரணம் எதுவெனக் கேள்வி எழுப்பினார். புரட்சியைத் தீர்வாகக் காண மறுத்தார். பண ஆதிக்கம், சுரண்டல், போலித்தனம், ஏமாற்று ஆகியவற்றைக் கொண்ட சமூக அமைப்புக்கு மாற்றாக ஒரு கற்பனைச் சமூகத்தை வரைந்து காட்டினார். வேலை செய்வது அனைவருக்கும் கட்டாயக் கடமை யாக்கப்பட்ட சமூகம்; அதில் தொழிலாளிகள், கைவினைஞர்கள், முதலாளிகள் எல்லோரும் இருப்பர். பணம் படைத்தோர் மக்கள் சேவகர்களாக விளங்குவர்.

புதிய தொழில்மய ஆட்சியில் மக்கள் நலன் பேண விஞ்ஞானிகள், தொழிலாளர்கள் ஒருபுறமும், முதலாளிகள் இன்னொரு புறமுமாய் ஒத்திசைவோடு செயல்படுவர். கிறித்துவத்தின் மனிதாபிமானக் கூறுகளோடு திருச்சபையை ஒழுங்குபடுத்தும் கருவியாக்க முனைந்தார்.

மரணத்தைத் தழுவதற்கு சில நொடிகள் முன்னால்கூட தனது லட்சிய சமுதாயம் கைகூடும் என் சைமன் நம்பினார். “நாளை நமதே” என்பதே அவரின் கடைசி வார்த்தையாகும். இன்றும் அதே நம்பிக்கையோடுதான் நம் போன்ற நாடுகளில் நாட்கள் நகர்கின்றன.

1825-இல் சைமன் இறந்த பிறகே அவரது சிந்தனை தீவிரமாகப் பரவியது. குறிப்பாக 1826-28, 30-ஆம் ஆண்டுகளில் செயின்ட் சைமனிஸ்ட் என்றழைக்கப்பட்ட அறிவுஜீவிகளும் போராளிகளும் பிரெஞ்சுச் சமூகத்தில் மட்டுமின்றி ஐரோப்பா முழுவதும் குறிப்பிடத்தக்க பாத்திரம் வகித்தனர். அவரது கற்பனாவாத சோசலிசத்தில் பல பித்துக்குளித்தனங்கள் இருப்பினும், அவர் தலைசிறந்த சிந்தனாவாதி என எங்கெல்ஸ் கொண்டாடினார்.

இந்த செயின்ட் சைமன் யார்? 1760-இல் பாரீஸில் ஒரு தளபதிக்கு முதல் மகனாய் – செல்வச் செழிப்போடு பிறந்தவர் கிளாட் – ஹென்றி – டி செயின்ட் சைமன். பள்ளிப் பருவத்திலேயே மேதைகளின் தொடர்பைப் பெற்றவர். ஜீ அலெம்பர்ட்டின் தொடர்பு அவருள் மறுமலர்ச்சி விதையைத் தூவியது, பதிமூன்று வயதில் கடவுள் மறுப்பு பேசினார். தேவாலயத்தில் ஞானஸ்தானம் பெற மறுத்தார். அதிர்ச்சி அடைந்த தந்தை சிறை வைத்தார். திருந்துவார் என நினைத்தார். ஆனால், சிறைக்காவலரை கத்தியால் குத்திவிட்டுத் தப்பித்தார்.

17 வயதில் ராணுவத்தில் சேர்ந்தார். விரைவில் இளநிலை அதிகாரியானார். அமெரிக்கா சென்று ஜார்ஜ் வாஷிங்டனோடு விடுதலைப் போரில் பங்கேற்றார். அதற்காகப் பாராட்டும் விருதும் பெற்றார். ஆனால் பிரிட்டிஷ் அரசு மன்னிக்கத் தயாரில்லை. சைமன் நாடு திரும்பும் வழியில் அவரைக் கைது செய்து ஜமைக்காவில் காவலில் வைத்தது. 1784-இல்தான் நாடு திரும்ப முடிந்தது.

ராணுவத்தில் பணியாற்றிய சைமன்; 1789-ஆம் ஆண்டு புரட்சிக் கனல் மூண்டதும் அதனை ஆதரிக்கத் தொடங்கினார். பிரெஞ்சு மொழியில் விவசாயிகளை ‘சாமானியன்’ எனும் பொருள் தரும் ‘பான் ஹோம்’ எனக் குறிப்பிடுவர். சைமன் தனக்குப் பான் ஹோம் என பெயர் சூட்டிக் கொண்டது அலங்காரத்துக்கல்ல; அவரது உள்ளம் சாமனியர் நோக்கியே நகர்ந்தது.

தான் கனவு கண்டது போல் புரட்சிக்குப் பின்னர் நாட்டு நிலை இல்லை என்பதால், தன் பாணியில் தன் கனவுக்கு உயிர் கொடுக்க முயன்றார். ஸ்பெயின் நாட்டு நண்பர் பாரன் ரிட்டர்னுடன் இணைந்து திருச்சபை, பிரபுக்களின் நிலத்தை வாங்கி ஏழை விவசாயிகளுக்கு மிகக்குறைந்த விலையில் விற்றார்.

மறுபுறம் புரட்சியின் ஒரு பிரிவினரான ஜாக்கோபின்களின் சர்வாதிகாரப் போக்கைக் கண்டித்தார். கைது செய்யப்பட்டு காற்றும் வெளிச்சமும் இல்லாத லக்ஸம்பர்க் சிறைக் கொட்டடியில் அடைக்கப்பட்டார். 1794-இல்தான் விடுவிக்கப்பட்டார். வியாபாரக் கூட்டாளி ரிட்டர்ன் எடுத்த முடிவால் சைமன் பெரிதும் நட்டப்பட்டார்.

அவருக்குத் திருமணம் நடந்தது; அதுவும் மனமுறிவில் முடிந்தது. சொந்த வாழ்விலும் பொதுவாழ்விலும் நம்பிக்கை நொறுங்கிப் போனது. “மனித சமுதாயத்தின் ரணங்களைக் குணமாக்கப் புரட்சி அல்ல, விஞ்ஞானமே வழி” என அவரது சிந்தனை விரிந்தது. 

ஐரோப்பா முழுவதும் பயணித்தார். பல விஞ்ஞானிகளோடு உரையாடினார். தெளிவற்ற கற்பனாவாதத் திட்டங்களாலான – “ஜெனிவாவில் வசிக்கும் ஒருவர் சமகாலத்தவருக்கு எழுதிய கடிதம்” என்கிற தன் முதல் படைப்பை 1803-இல் வெளியிட்டார்.

கையிலிருந்த பணம் கரைந்ததால் அடகுக் கடையில் குமஸ்தா வேலை செய்து கொண்டே இரவில் விஞ்ஞானம் சார்ந்த கட்டுரைகள் எழுதினார். பழைய நண்பர் டியார்ட்டின் உதவியோடு “19-ஆம் நூற்றாண்டு விஞ்ஞானப் படைப்புகளுக்கு ஓர் அறிமுகம்” எனும் நூலை வெளியிட்டார்.

டியார்ட்டின் திடீரென இறந்துவிட, செல்வத்தில் பிறந்தவர் தன்னுடைய உடையை விற்று ரொட்டி வாங்கும் நிலைக்குத் தள்ளப்பட்டார். முழுமையான ஈர்ப்பாற்றல், மனிதனுக்கான விஞ்ஞானம், இயந்திரத் தொழில் அமைப்பு எனப் பல கட்டுரைகளை எழுதினார்.

“இன்றைய துன்ப துயரங்களுக்குக் காரணம் நிலப்பிரபுத்துவ அமைப்பிலிருந்து இயந்திர விஞ்ஞான அமைப்புக்கு மாறுவதில் உள்ளது. புதிய அமைப்பு தோன்றும்வரை இது தொடரும்” என்றார். இவரின் “அறிமுகம்” நூல் இதனை விவரித்தது. அறிமுகத்தின் இரண்டாம் பாகத்தில் பிரெஞ்சுப் புரட்சி முற்றுப் பெறாமல் இருப்பதையும், அதன் காரணங்களையும் இயல்பாக அலசினார். தொடர்ந்து “மனிதாபிமானிகளுக்கு எழுதிய கடிதம்” உள்ளிட்டவை புதிய அமைப்பு உருவாக வேண்டிய தேவையைச் சொல்லின.

ரஷ்ய டிசம்பரிஸ்ட் இயக்கத்தைச் சார்ந்த லியூன் உடன் ஏற்பட்ட தொடர்பு சைமனிடம் பெரும் மாற்றத்தை விளைவித்தது. சமூகத்தைப் புனரமைக்கச் செய்யும் முயற்சிகள் எல்லாம் பயனற்றுப் போவதையும் தன் படைப்புகளுக்கு தொடர்ந்து தடை விதிக்கப்படுவதையும் தாங்கிக்கொள்ள முடியாமல் 1823-இல் துப்பாக்கியால் சுட்டுத் தற்கொலைக்கு முயன்றார். ஒரு கண் பார்வையை இழந்தார். மீண்டு எழுந்தார்.

“தொழிலதிபர்களுக்கான குறிப்புரை”, “இலக்கியத் தத்துவத் தொழில் பேருரைகள்” நூல்களை 1823-24-ஆம் ஆண்டுகளில் வெளியிட்டார். அதன்பின் அவரை நிரந்தரமாகப் புகழேணியில் ஏற்றிய “புதிய கிறித்துவம்” நூலை இயற்றினர். இக்கட்டுரையின் முன்பகுதியில் இந்நூல் குறித்துச் சொல்லியுள்ளோம்.

அவரின் அமைப்பு கற்பனாவாதமாகவே இருந்தது  ஏன்? எங்கெல்ஸ் மிகச் சரியாகச் சுட்டிக்காட்டினார்:

“ஆனாலும் அந்தக் காலகட்டத்தின் முதலாளித்துவ உற்பத்தி முறையும், அதோடுகூட முதலாளி வர்க்கத்துக்கும் பாட்டாளிவர்க்கத்துக்கும் இடையிலான பகைமையும் இன்னும் அரைகுறை வளர்ச்சியையே கண்டிருந்தன.”

இன்னும் சொல்லப்போனால் இங்கிலந்தில் தோன்றியிருந்த நவீனத் தொழில்துறை ஃபிரான்சில் அறியப்படாததாகவே இருந்தது. இதைச் சுட்டிய எங்கெல்ஸ் ஒரு வரையறை வழங்குவார்:

“இந்த வரலாற்றுச் சூழ்நிலை சோசலிசத்தின் நிறுவனர்களின் மீதும் செல்வாக்குச் செலுத்தியது. முதலாளித்துவ உற்பத்தி முறையிலான உற்பத்தியின் முதிர்ச்சியுறா நிலைமைகளுக்கும், முதிர்ச்சியுறாத வர்க்க நிலைமைகளுக்கும் ஒத்திசைவான முதிர்ச்சியுறாக் கொள்கைகளே முன் வைக்கப்பட்டன.”

ஃபூரியே, ஓவனைப் பார்க்கும்போது இது இன்னும் தெளிவாகும். பார்ப்போம்.

 [8]
“கருணை இலா ஆட்சி கடுகி ஒழிக
அருள்நயந்த நன்மார்க்கர் ஆள்க – தெருள்நயந்த
நல்லோர் நினைத்த நலம்பெருக நன்றுநினைத்
தெல்லோரும் வாழ்க இசைந்து!

அச்சம் தவிர்த்தே அருளிற் செலுத்துகின்ற
விச்சை அரசே விளங்கிடுக – நச்சரவம்
ஆதிக் கொடியஉயிர் அத்தனையும் போய்ஒழிக
நீதிக் கொடிவிளங்க நீண்டு!”

எல்லோரும் இசைந்து, ஆம் ஒன்றுபட்டு ஒத்துழைத்து வாழும் ஓர் உலகம்; நல்லவர் எண்ணியபடி நலம் ஓங்கும் உலகம்; மிரட்டலுக்கோ அதிகாரத்துக்கோ பணியாமல் ஒருவரை ஒருவர் புரிந்து உடன்பட்டு வாழும் உலகம் என்பது ’பெரிதினும் பெரிதான பெருங்கனவே’! வள்ளலார் அத்தகைய கனவு கண்டார். கருணையில்லாத ஆட்சி விரைந்து ஒழிக என முழங்கினார்.

1824-இல் பிறந்த வள்ளலார் அதுபோன்ற ஒரு வாழ்வைக் கற்பனை செய்துள்ளார். 1874 வரை வாழ்ந்த வள்ளலார்  மனிதாபிமான கனவைத் தாண்டி, பசிப்பிணி போக்க முயற்சியும் செய்துள்ளார். மணிமேகலையின் அட்சய பாத்திரம் ஒரு குறியீடுதான் என உணர்ந்து வடலூரில் அணையா அடுப்பை மூட்டினார். பசித்து வருவோர்க் கெல்லாம் உணவளிக்கச் செய்தார்.

சார்ல்ஸ் ஃபூரியே எனும் பிரெஞ்சு நாட்டு சோசலிசச் சிந்தனையாளர், வள்ளலார் பிறப்பதற்கு 16 ஆண்டுகள் முன்பே  ஒரு சமத்துவ சமூகக் கனவைத் தீட்டினார். அதை வள்ளலார் படித்தாரா? தெரியாது. அதற்கான வாய்ப்பு மிகக்குறைவே. ஆனால் உலகெங்கும் ஒருவிதமான சமத்துவக் கனவு அக்காலகட்டத்தில் முளைவிட்டது எனில் அது மிகை அல்ல.

விலையை ஏற்ற, பதுக்கிவைத்த ஆயிரம் டன் அரிசியைக் கடலில் தூக்கி எறிய உத்தவிட்ட வியாபாரியை மார்ஸெயில்சிலும்; மண்டியில் விற்பதைவிடப் பலமடங்கு விலையில் ஆப்பிள் விற்கப்படுவதை பாரீஸ் விடுதியிலும் கண்டார் சார்லஸ் ஃபூரியே     மிகவும் மனம் நொந்தார்.   முதலாளித்துவம் பணத்துக்காக எதையும் ஈவு இரக்கமின்றிச் செய்யும் என்கிற உண்மையை அறிந்தார்.

மனித சமூகம் கடந்து செல்ல வேண்டிய நான்கு கட்டங்கள் குறித்துப் பேசிய, – 56 வரிகள் கொண்ட “உலகளாவிய ஒத்திசைவு” (எல் ஹார்மோனி யூனிவர்ஸல்) கட்டுரையை 1803-இல் எழுதினார். இதனை விரிவாக்கி 1808-இல் “நான்கு இயக்கங்களின் சித்தாந்தமும் பொதுவான லட்சியங்களும்” (தியரி டெஸ் குவாட்ரி மூவ்மெண்ட்ஸ் எட் டெஸ் டெஸ்ட்னிஸ் ஜென்ரல்) என்னும் நூலாக வெளியிட்டார்.

இந்நூல் வியாபாரம், திருமணம், கட்டற்ற காதல், கல்வி போன்றவற்றிலுள்ள முதலாளித்துவ லாபவெறியை அம்பலப்படுத்தியது. “பாலன்க்ஸ்” (Phalanxes) என்றழைக்கப்பட்ட ஒரு “கூட்டு வாழ்வு முறையை” அல்லது ஓர் அமைப்பைப் பற்றிய கனவை விதைத்தார், எழுதினார், பேசினார். 

பொது இடத்தில் 1500 அல்லது 1600 பேர் – குறிப்பாக விவசாயிகள் கூடிவாழ்ந்து –வேலைகளில் உளப்பூர்வமாக ஈடுபட்டு – உற்பத்தியைp பெருக்கி – வயிறார உண்டு – உடுத்து – மாளிகை போன்ற இடத்தில் வசித்து – தேவைகளை நிறைவுசெய்து கொண்டு – லாபத்தைப் பங்கிட்டுக்கொண்டு – பால், இன பேதம் ஒடுக்குமுறையற்று – இன்பம் துய்த்து வாழ வழி சொன்னார்; அதற்கென திட்டம் தயாரித்தார்.

“இதில் உறுப்பினராயிருக்கும் தனிநபர்கள் தங்களுக்காகவும், சமுதாயத்திற்காகவும் தங்கள் திறமையை, உழைப்பைs சிக்கனமாக, கட்டுக்கோப்புடன் பயன்படுத்தி எல்லோரும் உற்சாகம் பெறலாம்” என்றார்.

இதற்கு நிதி உதவி செய்யp பெரும் செல்வந்தர்களை வேண்டினார்; தம் சொந்த சேமிப்பை இதில் கொட்டினார்; இவரும் இவரது சீடர்களும் 1832-இல் சோதனை முயற்சியாக ஃபிரான்ஸில் ஒரு ’பாலன்க்ஸ்’ அமைக்க முயன்றனர். உறுப்பினர்களைச் சேர்த்தனர்; சந்தா சேகரித்தனர்; சோதனை முயற்சி வெற்றி பெறவில்லை.

1772-இல் ஃபிரான்ஸில் பெசன்ட்கானில் ஒரு வியாபாரக் குடும்பத்தில் சார்லஸ் ஃபூரியே    பிறந்தார். “பொய் சொல்லக்கூடாது” என்கிற மதபோதனையால் கவரப்பட்டார்; வியாபாரமோ பொய்மை மிக்கதாய் இருப்பதால் அதை வெறுத்தார்.

கிறித்துவக் கல்லூரியில் பயின்றார். பொறியியல் கல்லூரியில் சேர ஆசைப்பட்டு, இடம் கிடைக்காமல் வேலைக்குச் சென்றார். பாரீசுக்கு அடுத்த வியாபார நகரான லியோன்ஸில் தன் விருப்பத்துக்கு மாறாய் வியாபாரத்தில் ஈடுபட வேண்டியதாயிற்று.

பிரெஞ்சுப் புரட்சி காலகட்டத்தில் ஜாக்கோபின்களுக்கு எதிராக நடந்த எதிர்புரட்சி சக்திகளோடு 1793-இல் ஃபூரியே இணைந்து போரிட்டார்; கைது செய்யப்பட்டார்; ஆயினும் தண்டனையிலிருந்து தப்பினார்; ராணுவத்தில் சேர்ந்து சிறப்பாகப் பணியாற்றினார்; 1796-இல் உடல் நலம் கருதி ராணுவத்திலிருந்து விடுவிக்கப்பட்டார்.

வேறு வழியின்றி மீண்டும் வியாபாரத்தில் ஈடுபட்டார். வியாபாரப் பிரதிநிதியாகவும் வேறுபல பணியிலுமாய் இயன்றவரை 30 வயது வரை உலகைச் சுற்றி அனுபவத்தைப் பெற்றார். இந்த வியாபாரத்தின் போதே அரிசியைக் கடலில் தூக்கி எறியும் நிலை குறித்தும், ஆப்பிள் விலை குறித்தும் அறிந்தார். அவருடைய சொற்களில் கூறுவதானால், “நீயூட்டனைப்போல் ஆப்பிளிலிருந்து புது விதி கண்டேன், அது சமுதாய விதி” என்றார்.

தன் மாணவர்களின் உதவியோடு “லா ரிபார்ம் இண்டஸ்ட்டிரியல்” எனும் ஏட்டைத் தொடங்கினார். ஓர் ஆண்டே அதுவும் தாக்குப் பிடித்தது. முயற்சிகள் தோல்வி அடைந்த போதிலும், இறுதிவரை தன் கனவுகளுக்கு வடிவம் கொடுப்பதிலும் முதலாளித்துவத்தை எதிர்ப்பதிலும் உறுதியாய் இருந்தார். திருமணமே செய்து கொள்ளாமல் தன் வாழ்வை சமூக நலனுக்கு அர்ப்பணித்துக் கொண்ட ஃபூரியே  1837 அக்டோபரில் இறந்தார்.

ஃபூரியே மறைவுக்குப் பின், இவரின் பிரதான சீடரான விக்டர் கான்ஸிடெரண்ட் முயற்சியால் அமெரிக்காவில் 1848-இல் டெக்சாஸ்,வ்ஜெர்ஸி உட்படச் சில இடங்களில் ஃபூரியே பண்ணைகள் உருவாக்கப்பட்டன. குறுகிய காலமே நீடித்தன எனினும் பெரும் நம்பிக்கையை விதைத்தன.

இவரின் மறைவுக்குப் பின்னால் இவருடைய எழுத்துகள் அனைத்தும் தொகுக்கப்பட்டு “உலகு தழுவிய ஒற்றுமையின் சித்தாந்தம்” (தியரி டி யூனிடி யுனிவர்ஸ்) என்கிற ஒரே நூலாக வெளிவந்தது. முதலாளித்துவ அமைப்பைத் “தலைகீழ் உலகம்” என வர்ணித்த ஃபூரியே, முதலாளித்துவத்தின் அராஜகம், ஒழுங்கின்மை, போர் முதலிய பல கேடுகளைச் சுட்டிக்காட்டினார்.

“ஒரு சமுதாயம் பெற்றுள்ள சுதந்திரத்தின் அளவை, அச்சமூகத்தில் பெண்களுக்குக் கூடுதலாகவோ, குறைவாகவோ வழங்கப்பட்டுள்ள சுதந்திரத்தைக் கொண்டுதான் அளக்க வேண்டும்” என்று முதலில் சொன்ன பெருமை ஃபூரியேவையே சாரும்.

சமுதாயத்தின் வரலாறு பற்றிய கருத்தமைவில் ஃபூரியே உச்சத்தில் நிற்கிறார். அதன் போக்கைப் பரிணாம வளர்ச்சியின் நான்கு கட்டங்களாகப் பிரிக்கிறார். அடிமை சமுதாயம், தந்தைவழிச் சமுதாயம், காட்டுமிராண்டி சமுதாயம், நாகரிக சமுதாயம். “கடைசியாகக் குறிப்பிட்டது இன்றைய முதலாளித்துவ சமுதாயம் போன்றது” என்பார் எங்கெல்ஸ். மனித சமுதாயத்தின் இயக்க விதிகளையும், சமூகத்தை, உலகை ஆட்கொள்ளும் விதிகளையும் முதலில் கண்டு சொன்னவர் ஃபூரியேவே என்பார் மார்க்ஸ்.

“முதலாளித்துவத்தை அதன் நச்சுத்தன்மை கொண்ட சமூக அமைப்புகளோடு ஒழித்துக் கட்ட வேண்டும்; அரைகுறை நடவடிக்கை மூலம் அதனைத் திருத்த முடியாது” என்பார் ஃபூரியே. 

அவர் ஒரு பொருள்முதல்வாதி அல்ல. ஆயினும் “அரசு, தத்துவம், மதம், விஞ்ஞானம், நன்னெறி என அனைத்தும் ஆளும் வர்க்கத்துக்கே தொண்டூழியம் புரிகின்றன” என எடுத்துக்காட்டத் தவறவில்லை.

முதலாளித்துவ சமுதாயத்தில் சமூக சுதந்திரம் நிலவுகிறது என்பது முழுமையாகத் தவறாகும் என வாதிட்டுத் தனக்கு முந்தைய தத்துவஞானிகளைவிட உயர்ந்து நின்றார் ஃபூரியே.

முதலாளித்துவ சமூகத்தின் உள்முரண்பாடுகளைச் சொன்னாலும்; சுரண்டலுக்கான அடிப்படைக் காரணத்தைச் சொல்ல இயலவில்லை. ஆயினும், முதலாளித்துவத்தைக் கண்டித்து, காலில் போட்டு மிதித்தது என்கிற வகையில் ஃபூரியே உள்ளிட்ட கற்பனா சோசலிஸ்டுகளின் பங்கு மகத்தானது என்பார் மார்க்ஸ்.

“ஃபிரான்ஸில் புரட்சிச் சூறாவளி நாடெங்கும் சுழன்றடித்த போது, இங்கிலந்தில் அதைவிட அமைதியான, ஆனால் அதனாலேயே பேராற்றலில் எந்த விதத்திலும் குறைந்துவிடாத ஒரு புரட்சி நடைபெற்றுக் கொண்டிருந்தது” என்கிற எங்கெல்ஸ் மிகச்சரியாக ஒன்றைச் சுட்டுவார்.

“இந்தச் சூழ்நிலையில் 29 வயதான ஆலையதிபர் சீர்திருத்தவாதியாக முன்னணிக்கு வந்தார்” என ராபர்ட் ஓவன் வருகையைச் சொன்னார் எங்கெல்ஸ்.

[9]
புலால் மறுப்பு சார்ந்த ஜீவகாருண்யம்” என்ற ஒரு சிறிய வட்டத்துக்குள் மட்டுமே தமிழ்ச் சமூகத்தின் பொதுப்புத்தியில் வள்ளலார் பதிய வைக்கப்பட்டுள்ளார். திருவள்ளுவரும் புலால் மறுப்பு, கள்ளுண்ணாமை போன்றவற்றைப் பாடியுள்ளார். ஆயின், அவரது ஞானம் அந்த இரண்டுக்குள் சுருங்கியதாகப் பார்க்கப்படவில்லை.

“பசியினால் இளைத்து வீடுதோறும் இரந்தும், பசி அறாதயர்ந்த வெற்றரைக் கண்டு உளம் பதைத்தேன்” என்று வள்ளலார் வலியுறுத்தும் முதன்மையான ஜீவகாருண்யம், வறியோர்க்கு உதவி செய்தல், பசிப்பிணியால் வருந்தும் ஏழை மக்களின் வாழ்க்கையை மாற்றுதல், மக்களிடம் சாதிமத பேதம் பாராட்டாமல் எல்லோரும் ஒன்றெனக் கொள்ளல், கண்மூடிப் பழக்கங்கள் மண்மூடிப் போகச் செய்தல் போன்றவையேயாகும்.

ஆகவே அவர் மற்ற துறவியரைப் போலக் காவி அணியவில்லை, வெள்ளுடை தரித்தார். மடம் நிறுவி சாதிப் பரம்பரை பேணாமல் சாதிமத பேதமற்று எல்லோரையும் ஏற்கும் வகையில் சங்கமே அமைத்தார். 1. சமரச சுத்த சன்மார்க்க சங்கம், 2. சத்ய தருமச் சாலை, 3. சத்ய ஞான சபை, 4. சித்திவளாகம் ஆகியவற்றை வடிவமைத்தார். அவரின் கனவு பெரும் தாக்கத்தை ஏற்படுத்தவில்லை. ஏனெனில் அவை சமூகப் பொருளாதாரத் தேவைக்கு ஈடுகொடுக்கவில்லை; அதற்கொப்ப காலமும் களமும் கனியவில்லை. இது அவரின் குறைபாடல்ல, அவர் வாழ்ந்த காலத்தின் குறைபாடே.

“… வெறுமே கொடையாளியாக மட்டுமே ஓவன் இருந்தவரை அவருக்குச் செல்வமும், பாராட்டும், மதிப்பும், புகழுமே வந்து குவிந்தன. ஐரோப்பியாவிலேயே மிகவும் செல்வாக்குப் பெற்ற மனிதராகத் திகழ்ந்தார். அவரின் வர்க்கத்தைச் சார்ந்தவர்கள் மட்டுமின்றி அரசியல் வல்லுநர்களும், பிரபுக்களும் அவரின் கருத்துகளை ஆமோதித்து வரவேற்றனர். அவர் தம்முடைய கம்யூனிசக் கொள்கையை முன்வைத்தபோது, நிலைமை முற்றிலும் வேறானது” என்பார் எங்கெல்ஸ்.

அவர்தான் ‘பிரிட்டனின் சோசலிசத் தந்தை’ என போற்றப்படும் ராபர்ட் ஓவன் (Robert Owen). பிரிட்டனின் நியூடவுன் நகரில் 1771 மே 14 அன்று பிறந்தவர். தந்தை குதிரைச் சேணம், இரும்புச் சாமான்கள் தயாரித்து விற்றுவந்தார்.  10 வயதுவரை மட்டுமே கல்வி பெற்ற ராபர்ட் ஓவன், பிறகு ஒரு ஜவுளி வியாபாரியிடம் 4 ஆண்டுகள் உதவியாளராகப் பணியாற்றினார்.

அந்த வேலையை விட்டுவிட்டு, மான்செஸ்டர் சென்றவர் சொந்தமாகப் பருத்தி வியாபாரம் செய்தார். வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டதால், நண்பர்களுடன் சேர்ந்து  ஒரு சிறு பருத்தி ஆலையை வாங்கி நடத்தினார்.

சிறு வயது முதலே ஏழைகள், தொழிலாளர்கள் மீது அக்கறை கொண்டிருந்தவர், ஆலை நிர்வாகத்தில் பல சீர்திருத்தங்கள் கொண்டுவந்தார். 2 ஆண்டுகளில் இன்னோர் ஆலையை வாங்கி நடத்தினார். 1799-இல் அன்னே கரோலின் எனும் மங்கையை –  மில் உரிமையாளரின் மகளைக் காதல் திருமணம் செய்து கொண்டதால், அதன் மேலாளர், பங்குதாரராக மாறினார். மான்செஸ்டர் லிட்ரரி அண்ட் ஃபிலாசஃபிகல் சொசைட்டி உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

மாபெரும் சீர்திருத்தவாதிகள், சிந்தனையாளர்கள், தத்துவவாதிகளின் கருத்துகள் அங்கு விவாதிக்கப்பட்டன. ராபர்ட் ஓவன் கம்யூனிசக் கனவோடு கற்பனா சோசலிச வாதங்களை முன்னெடுத்தார். தொழிலாளர்களின் ஆரோக்கியம், பணியிடச் சூழலுக்கு முக்கியத்துவம் தந்தார். நாடு முழுவதும் தொழிற்சாலைகளின் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண இவர் அழைக்கப்பட்டார்.

1800-லிருந்து 1829 வரை  ஸ்காட்லாந்தில் நீயூ லனார்க் எனும் நகரில் அமைந்த மாபெரும் பஞ்சாலையின் மேலாண்மைக் கூட்டாளியாக இருந்து கொண்டு, அந்த ஆலையைச் செயல்படுத்திய விதம் குறித்து எங்கெல்ஸ் கூறுவார்:

“தொடக்கத்தில் மிகவும் மாறுபட்ட தன்மைகொண்ட, பெரும்பகுதியும் நம்பிக்கையற்றுப்போன மனிதர்கள் கொண்ட ஒரு மக்கள் தொகுதியை, படிப்படியாக 2,500 பேராக வளர்ச்சி பெற்ற மக்கள் தொகுதியை, ஓவன் ஒரு முன்மாதிரிக் குடியிருப்பாய் மாற்றிக் காட்டினார். அந்தக் குடியிருப்பு, குடிப்பழக்கம், போலீஸ், நீதிபதிகள், வழக்குகள், ஏழ்மையர் சட்டங்கள், அறக்கட்டளை பற்றி அறிந்ததில்லை” 

மனிதர்கள் வாழ்வதற்கு உகந்த நிலைமைகளில் மக்களை வைத்திருப்பதன் மூலமும், இன்னும் வளர்ந்துவரும் தலைமுறையைக் கவனமாக வளர்த்து ஆளாக்குவதன் மூலமும் இதனைச் சாதித்தார். குழந்தைகளுக்கு இரண்டரை வயது முதலே பள்ளி; மற்ற ஆலைகளில் 13, 14 மணி நேரம் வேலை வாங்கப்பட்ட போது பத்தரை மணிநேர வேலை; பருத்தி பற்றாக்குறையால்  வேலை நிறுத்தப்படும்போது மற்ற ஆலைகளில் சம்பளம் கிடையாது, இங்கு முழுச்சம்பளம் உண்டு. இப்படி முன் மாதிரியானார் ஓவன்.

ஆலை வெற்றிகரமாக இயங்கியது. தொழிலாளர்களுக்குச் சம்பளத்தைப் பற்றுச் சீட்டாகவும், பொருளாகவும் தந்தார். ‘ட்ரக் சிஸ்டம்’ முறையை மேம்படுத்தினார். அதன்மூலம், பொருட்களை மொத்த விலையில் வாங்கி தொழிலாளர்களுக்குத் தரும் கூட்டுறவு முறையை உருவாக்கினார். இந்தக் கூட்டுறவு முறை பிரிட்டன் கூட்டுறவு அமைப்புகளுக்கு அடிப்படையாக அமைந்தது. 

தொழிலாளர்களின் குழந்தைகளைத் தொழிற்சாலையே பராமரிக்கும் முறையை அறிமுகம் செய்தார். பல தொடக்கப் பள்ளிகளைத் தொடங்கினார். தொழிலாளர்களுக்கு 8 மணிநேரப் பணி என்ற முறையைக் கொண்டுவரப் பாடுபட்டார். நகரத் திட்டமிடலுக்கும் அரசுக்கு உதவினார்.

தான் சேமித்த பணத்தைக் கொண்டு, அமெரிக்காவில்  இன்டியானா மாநிலத்தில் வாபாஷ் நதி அருகில் 1,000 பேரை உறுப்பினராகக் கொண்ட ஒரு காலனியான நியூ ஹார்மனி என்ற சமூகத் தன்னிறைவு அமைப்பை நிறுவினார். லட்சியவாத சோசலிசத்தை (Utopian Socialism) தோற்றுவித்தவர்களில் முதன்மையானவராகப் போற்றப்படும் ராபர்ட் ஓவன் தொடர்ந்து அதற்காகப் பேசினார், எழுதினார்.

அவரின் பேச்சுக்களும் எழுத்துக்களும் சோதனை முயற்சிகளும் அவரைப் பின்பற்றுபவர்களால் தொகுக்கப்பட்டதும். முன்னெடுக்கப்பட்டதும் வரலாறு. 87-வது வயதில் (1858) மறைந்தார்.

  • ஓவனின் தொடர்  முயற்சியில் 1819-இல் பெண்குழந்தைத் தொழிலாளிக்கு குறைந்தபட்ச வயது ஒன்பது என்கிற சட்டம் வந்தது.
  • கூட்டுறவுக் கழகங்களை அறிமுகப்படுத்தியதும்  உழைப்பு–நோட்டுப் பரிவர்த்தனை என்கிற முறையையும், ஒரு மணிநேர உழைப்பு அலகே அந்த நோட்டு மதிப்பாகவும் கொண்ட சோதனை முயற்சி செய்தார். அதற்கான உழைப்புக் கடை வீதிகளையும் அமைத்தார். 1849-இல் பாரிசீல் புரூதோன் அமைக்க முயன்று தோற்ற மக்கள் வங்கி இதன் எதிரொலியே!
  • இங்கிலந்தின் அனைத்து தொழிற் சங்கங்களும் இணைந்து நடத்திய மாமெரும் அமைப்பின் தலைவராகவும்  கொஞ்சகாலம் இருந்தார்.

தனிநபர் லாபம் கொழிக்கவும்,  உழைப்பாளிகளை அடிமைப்படுத்தவும் பயன்படுத்தப்பட்ட உற்பத்தி சக்திகளை  ஒட்டுமொத்தச் சமூக வளர்ச்சிக்குப் பயன்படுத்திய ஓவன் தோற்ற இடம் எது?

தனிச் சொத்துரிமை, மதம், திருமணத்தின் தற்போதைய வடிவம் இவற்றைத் தொட்டால் எதிர்ப்பு அதிகம் இருக்கும் என்பதை ஓவன் அறிவார். ஆயினும் இழப்பைப் பற்றிக் கவலைப்படாமல் துணிந்தார். விமர்சித்தார். மாற்றி அமைக்க முயன்றார். என்ன ஆனது? எங்கெல்ஸ் சொல்கிறார்:

“பத்திரிகைகளின் மெளனச் சதியுடன் கூடவே, அதிகாரபூர்வ சமூகத்திலிருந்து விலக்கி வைக்கப்பட்டார். தம் செல்வம் அனைத்தையும் பலியிட்டு அமெரிக்காவில் அவர் நடத்திய வெற்றிபெறாத கம்யூனிசப் பரிசோதனைகளால் தம்முடைய செல்வத்தை எல்லாம் இழந்து நொடிந்துப் போனார். நேரடியாகத் தொழிலாளி வர்க்கத்திடம் வந்து சேர்ந்தார். தொடர்ந்து அவர்களிடையே முப்பது ஆண்டுகள் பணியாற்றினார். அக்காலகட்டத்தின் இங்கிலாந்தில் தொழிலாளர் சார்பிலான ஒவ்வொரு சமூக இயக்கமும், ஒவ்வொரு மெய்யான முன்னேற்றமும் ராபர்ட் ஓவன் பெயருடன் தன்னை இணைத்துக் கொண்டன.”

இந்த முயற்சிகள் கனவாய் கற்பனையாய் இருந்த சமத்துவச் சிந்தனைக்கு உயிர்கொடுக்க முயன்றன. அவை எவ்வளவு பலவீனமாக இருந்த போதிலும் அடுத்த கட்ட அடிவைப்பைத் தீர்மானகரமாக்கியது. பார்ப்போம்.

[10]
பொய் சொல்லாதே! ஏமாற்றாதே! இப்படி எல்லாம் பொதுவாகச் சொல்லும் போதனைகள் எல்லாக் காலத்திலும் பொருந்திவிடக்கூடும். ஆயின் ஆட்சி, அதிகாரம் சார்ந்து சொல்லப்படுபவற்றை அப்படியே நகலெடுக்க  முடியுமா?

முடியாட்சி, மன்னராட்சி நிலவிய காலத்தில் தோன்றியதே திருக்குறள். சுமார் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கும்மேல் முற்பட்டது. வள்ளுவர் காலத்தின் அரசியல் நெறிகள் இன்றைய ஜனநாயக யுகத்துக்குப் பொருந்துமா? நாளைய சோசலிச சமூகத்துக்கு நெருக்கமாகுமா? இக்கேள்வி நியாயமானதுதான்.

ஆயின், திருக்குறளைப் படிப்பவர்கள் வேறுமாதிரியான அனுபவம் பெறுவர். அதன் அறத்துப்பால், இன்பத்துப்பால் ஒரு வாழ்வியலைப் பேசினால், பொருட்பால் மனிதரின் வாழ்நிலையை செம்மைப்படுத்தப் பேசும். பொருட்பாலில் மட்டும் எழுபது அதிகாரங்கள். எழுநூறு குறள்கள். இவற்றின் ஒட்டுமொத்தச் சாரமும் இன்றைக்கும் பேசுபொருளாக இருப்பதே அதன் சிறப்பு. கல்வி, கல்லாமை, வலியறிதல், காலம் அறிதல், செங்கோண்மை, கொடுங்கோன்மை, சொல்வண்மை, வினைத்தூய்மை, வினைத்திட்பம் என நீளும் அதிகாரங்கள் பலவும் காலத்தை மீறிய பொதுச் செய்திகள். பொருந்தாதனவும் சில இருக்கக்கூடும்.

“இயற்றலும் ஈட்டலும் காத்தலும் காத்த
வகுத்தலும் வல்ல(து) அரசு”

என்ற குறளும்,

“படைகுடி கூழ்அமைச்சு நட்புஅரண் ஆறும்
உடையான் அரசுருள் ஏறு”

எனும் குறளும், இன்னும் பல குறள்களும், பொருட்பால் முழுவதும் ஒரு லட்சிய அரசை நம் கண்முன் வரைந்து காட்டும்.

வள்ளுவரும் காலத்தின் படைப்புதானே! காலத்தை மீறி அவர் சோசலிசத்தை படைத்தளித்திருக்க முடியாது; நாமும் அப்படி தேடக்கூடாது. அதேவேளையில் வள்ளுவர் வரைந்து காட்டிய லட்சிய அரசின் சித்திரத்தை முழுதாய் உள்வாங்காமல் இந்தியாவில், குறிப்பாக தமிழகத்தில் சோசலிசக் கனவுக்கு உயிர்கொடுக்க முடியாது.

விஞ்ஞான சோசலிசத்தைக் கற்பனையிலிருந்தோ, கடவுளின் அருள் பெற்றோ மார்க்ஸ் எங்கெல்ஸ் படைக்கவில்லை. முந்தைய சான்றோரின் கனவுகளைப் பரிசீலித்துக் குறைகளை நேர்செய்து உருவாக்கியதே விஞ்ஞான சோசலிசம்.

“ஃபிரான்சையும் இங்கிலாந்தையும் சேர்ந்த பிரபுக் குலத்தோருக்கு, அவர்களின் வரலாற்று நிலை காரணமாக, நவீன முதலாளித்துவ சமுதாயத்தை எதிர்த்துப் பிரசுரங்கள் எழுதுவது அவர்களின் வாழ்க்கைத் தொழில் ஆனது” என்பார் மார்க்சும் எங்கெல்சும் கம்யூனிஸ்டுக் கட்சி அறிக்கையில்.

  • நிலப்பிரபுத்துவ சோசலிசம்
  • குட்டி முதலாளித்துவ சோசலிசம்
  • பழமைவாத சோசலிசம் அல்லது முதலாளித்துவ சோசலிசம்

என, அன்றையச் சூழலில் எழுந்த போக்குகளைப் பொதுமைப்படுத்தி விமர்சிப்பார்கள். நிலப்பிரபுத்துவ சோசலிசம் குறித்துச் சொல்லுவதைக் கேளீர்:

“பாதி புலம்பல், பாதி வசைப்பாட்டு, பாதி கடந்த காலத்தின் எதிரொலி, பாதி எதிர்காலம் பற்றிய அச்சுறுத்தல். சில நேரங்களில் அதன் கசப்பான, கிண்டலான, சுருக்குக்கெனத் தைக்கும் விமர்சனத்தின் மூலம் முதலாளித்துவ வர்க்கத்தின் நெஞ்சக்குலை மீதே தாக்குவதாக இருந்தது. ஆனால் நவீன வரலாற்றின் முன்னேற்றத்தைப் புரிந்து கொள்ளும் திறன் கொஞ்சமும் இல்லாத காரணத்தால், எப்போதுமே அதன் விளைவு பரிகசிக்கத் தக்கதாகவே இருந்தது.”

அதேவேளையில், மக்களைத் தம் பக்கம் திருப்பும் பொருட்டு, பாட்டாளியின் பிச்சைப் பாத்திரத்தைப் பிரபுக் குலத்தோர் பதாகைபோல் பிடித்ததையும், ஆனால் பாட்டாளிகள் அவர்கள் பின்னால் திரண்டபோது ஏமாற்றப்பட்டதையும், அதனால் அவர்களைவிட்டு வெளியேறுவதையும் குறிப்பிடுகின்றனர்.

முதலாளித்துவ வர்க்கத்துக்கும் பாட்டாளி வர்க்கத்துக்கும் இடையே உருவாகி நிற்கும், ஊசலாடி நிற்கும் வர்க்கம் குட்டி முதலாளித்துவ வர்க்கம் ஆகும். முதலாளித்துவ சமுதாயத்தின் வால்பகுதி என மார்க்ஸ் எங்கெல்ஸால் வர்ணிக்கப்படும் குட்டி முதலாளித்துவம், மேலேயும் போக முடியாமல் கீழே விழுவதைப் பொறுக்கவும் முடியால் அல்லாடும் வர்க்கம். இந்த வர்க்கத்தின் தனிப்பட்ட உறுப்பினர்கள் வணிகப் போட்டியால் பாட்டாளி வர்க்கத்துள் தூக்கி எறியப்பட்டு வருகின்றனர். இந்த வர்க்கத்தினர் பேசியது “குட்டி முதலாளிதுவ சோசலிசம்” ஆகும்.

இந்த வர்க்கம் சமூகத்தை உற்றுப் பார்த்தது. செல்வ வளங்களின் ஏற்ற தாழ்வான விநியோகத்தையும், தேசங்களுக்கு இடையேயான சர்வநாச வணிகப் போட்டியையும், பாட்டாளி வர்க்கத்தின் கடுந்துயரையும் கண்ணீர் சொரியப் பேசியது. ஆனால், சொத்துடைமையை, பழைய குடும்ப உறவுகளைப் பாதுகாக்கவே விளைந்தன. கூட்டுறவு அமைப்புகள், தர்மகர்த்தா பார்வை என பலதும் முழக்கமாயின. இந்த வகை சோசலிசம் மார்க்ஸ், எங்கெல்ஸ் சுட்டுவதுபோல், ”பரிதாபமான மன உளச்சலில் மூழ்கி முடிந்து போயிற்று.”

பொருளாதார வல்லுநர்கள், மனிதாபிமானிகள், கருணை இல்லம் நடத்துவோர், குடிவெறிக்கு எதிராய்த் திருளுவோர், விலங்கு வதைக்கு எதிராய்க் குரல் கொடுப்போர், தொழிலாளி வர்க்கத்துக்குச் சலுகைகளைப் பெற்றுத் தருவோர், மூலை முடுக்குச் சீர்திருத்தப் பேர்வழிகள் எனப் பலர்  ஒருவிதமான சோசலிசம் பேசுகின்றனர். இதனைப் பழமைவாத சோசலிசம் அல்லது முதலாளித்துவ சோசலிசம் என்கின்றனர் மார்க்சும் எங்கெல்சும். புருதோன் எழுதிய “வறுமையின் தத்துவம்” நூலும் இவ்வகைப்பட்டது என்பர் நம் ஆசான்கள்.

அவர்களுக்குப் போராட்டங்கள் கசக்கும். இந்தச் சுரண்டல் அமைப்பை மிகப்பெரும் சேதாரமின்றிப் பாதுகாக்க இவர்கள் விரும்புகின்றனர். இற்றுச் சிதிலமடைந்து நொறுங்கி விழும் கட்டிடத்தை முட்டுக்கொடுத்து வண்ணமடித்து அழகுபடுத்துவது போன்ற வேலையே அது. 

கட்டற்ற வணிகமும் இருக்கும், தொழிலாளி வர்க்க நலனுக்காகக் காப்புச் சுங்கவரிகளும் இருக்கும்; முதலாளி முதலாளியாவும் தொழிலாளி தொழிலாளி யாகவும் தொடர்வர். ஆனால், பொருளாதாரச் சலுகைகள் சில கிடைக்கும். இப்படி வெறும் சொல் அலங்காரமாய் அமைந்தததுதான் பழமைவாத சோசலிசம். 19-ஆம் நூற்றாண்டிலும் நீண்டகாலம் ஜெர்மன், இங்கிலந்து சோசலிஸ்டுகளிடம் இத்தகைய சோசலிசப் போக்கே ஓங்கி நின்றது என்பார் எங்கெல்ஸ்.

இவர்களிடம் சோசலிசம் குறித்த மயக்கம் நிலவியது. தெளிவு இல்லை. சோசலிசம் என்பது அறுதி உண்மை (absolute truth) என்பது இவர்களின் பார்வை. பகுத்தறிவு, நீதி போன்றதே சோசலிசமும். இந்த உண்மையானது காலம், இடம், வரலாற்றுச் சூழல் எதையும் சார்ந்திருக்கவில்லை. தற்செயலாக வெளிப்படுகிறது. ஒவ்வொருவரின் அகவயப் புரிதல், மதிநுட்பப் பயிற்சி இவைமூலமே இதனை அடையலாம் என்பது இவர்களின் கருத்து. இதனைச் சுட்டிய எங்கெல்ஸ் சொல்வது மிக முக்கியமானது. அதனை அவருடைய சொற்களில் பார்ப்போம்,

“இது பன்முகக் கருத்துச் சாயல்களுக்கு இடம்தரும் குழப்பமூட்டும் ஒரு கதம்பக் கூட்டு. வேறுபட்ட குழுவினரால் வழங்கப்பட்ட, குறைந்தபட்ச எதிர்ப்பைத் தூண்டும்படியான விமர்சன அறிக்கைகள், பொருளாதாரக் கொள்கைகள், வருங்காலச் சமூகம் குறித்த சித்திரங்கள்  ஆகியவை அடங்கிய குழப்பமூட்டும் கதம்பக் கூட்டு. [பல்வேறு சிந்தனைகளில் அடங்கியிருந்த] தனிப்பட்ட உள்ளடக்கக் கூறுகளின் மிகத்தெளிவான கூர்முனைகள், நீரோடையில் உருண்டு மழுங்கிய கூழாங்கற்களைப் போல், விவாத நீரோட்டத்தில் மழுங்கடிக்கப்பட்டு. மிக எளிதில் கலந்து உருவாக்கப்பட்ட குழப்பமூட்டும் ஒரு கதம்பக் கூட்டு.”

சோசலிசத்தை ஒரு விஞ்ஞானமாக்க, முதலில் அதைக் கற்பனை அல்லாத ஓர் உண்மையான அடித்தளத்தின் மீது இருத்த வேண்டிய சவாலை மார்க்சும் எங்கெல்சும் ஏற்றனர். அதனைப் பார்ப்போம்.

 [11]
“ஆற்றோரம் தழைமரங்கள் அடர்ந்தஒரு தோப்பில்
இளமங்கை ஆடுகின்றாள் ஊஞ்சல்…” 

எனத் தொடங்கும் பாரதிதாசன் கவிதை நினைவில் மோதுகிறது. அந்தச் சிறுமியின் தம்பி பொம்மை செய்து விளையாடிக் கொண்டிருக்கிறான். அவனுக்கும் அடுத்து பிறந்த குழந்தையோடு தாய் படுத்திருக்கிறாள். கடன்தொல்லை தாங்காத குடும்பத் தலைவன் திடீரெனக் கத்தியபடி மயங்கி வீழ்கிறான். மனைவி அலறுகிறாள். அண்டை வீட்டாரெல்லாம் கூடிவிட்டனர். ஆளுக்கொரு ஆறுதல் வார்த்தை சொல்லி அவனை எழுப்ப முயல்கின்றனர். உன் கடனை எல்லாம் நாங்கள் பார்த்துக் கொள்கிறோம் என்றெல்லாம் சொல்லிப் பார்த்தும் அவன் எழும்பவில்லை.

இப்படி நீளும் “மாண்டவன் மீண்டான்” எனும் நாற்பது வரிக் கவிதை. அதன் கிளைமாக்ஸ்தான் அரசியல் சூப்பர்!

“…… …… மற்றொருவன் வந்து
மதிவந்து விட்டதண்ணே நமதுசர்க் காருக்கு
மக்களுக்குப் புவிப்பொருள் பொதுவென்று சர்க்கார்
பதிந்துவிட்டார் இனிப்பெண்டு பிள்ளைகளைப் பற்றி
பயமில்லை! கவலையில்லை! மெய்யண்ணே மெய்!மெய்!”

அப்புறம் என்ன நடந்தது? செத்துவிட்ட அம்மனிதன் பொத்தெனவே எழுந்து குந்தி, 

“இனி நான் சாவதற்கு அஞ்சவில்லை என்றான்
இறப்பதெனில் இனிஎனக்கு கற்கண்டென் றானே”

புவிப் பொருளெல்லாம் எல்லோருக்கும் பொதுவில் வைக்கிற, வாழ்க்கைக்கு உத்திரவாதம் தருகிற, பொறுப்பான அரசாட்சி பற்றிய கனவு இங்கு பாரதிதாசனால் விவரிக்கப்பட்டுள்ளது. அவரின் வேறுபல  கவிதைகளில் பொதுவுடைமை, சமதர்மம், சோசலிசம் எனும் சொற்களைக் காணலாம். ஆனால், இக்கவிதையில் சோசலிசம் எனும் சொல் நேரடியாகக் கிடையாது. விரிவுரை செய்வோர் இது சோசலிச சமூகம் பற்றிய கனவே என விவரிப்பர். அது மெய்யும்கூட.

பாரதிதாசன் 1964 வரை வாழ்ந்தவர். உலக ஞானம் மிக்கவர், புரட்சிகரக் கருத்துகளின் சொந்தக்காரர். எனவே, அவர் சோவியத் நாட்டின் புதிய சமூக அமைப்பின் தாக்கத்தில் இக்கவிதையைப் படைத்திருக்கக்கூடும்.

கனவாய் இருந்த சோசலிசம் ரஷ்யாவில் முதன்முதலாக நடைமுறைக்கு வந்தது எனில், அதற்கான தளம் அமைத்தவர் மார்க்சும் எங்கெல்சுமே. அவர்கள்தாம் கனவை, கற்பனையை விஞ்ஞானமாக வளர்த்தெடுத்தனர். அவர்கள் வாழ்ந்த காலத்தில் அரசியல் சமூகச் சூழல் அதற்கொப்பக் கனிந்ததும் ஒரு காரணம். இந்த மாற்றங்கள் நோக்கிய பயணத்தைத் தொடங்கி வைத்தது சாசன இயக்கமே!

ஆறு கோரிக்கைகளுடனும் அறுபது லட்சம் கையெழுத்துடனும் மக்கள் பேராதரவைப் பெற்ற கோரிக்கை சாசனம் அது. 19-ஆவது நூற்றாண்டில் பிரிட்டனில் நடைபெற்ற மிகப்பெரிய மக்கள் இயக்கமான சாசன இயக்கத்தின் மனுவே அது.

 1838 தொடங்கி பிரிட்டனைக் குலுக்கிய – மூன்றுமுறை அரசைப் பதற்றமடையச் செய்த இயக்கமாகும். 1936-இல் லண்டன் உழைக்கும் மக்கள் கழகம் நிறுவப்பட்டது. அதன் தொடர்ச்சியாக வில்லியம் லவீட் முயற்சியால் ஆறு கோரிக்கைகள் அடங்கிய மகாசாசனம் உருவானது.

21 வயது நிரம்பிய அனைவருக்கும் வாக்குரிமை, ரகசிய வாக்கெடுப்பு, சொத்துள்ளவரே போட்டியிட முடியும் என்கிற கட்டுப்பாடு நீக்கம், நாடாளுமன்ற உறுப்பினருக்கு ஊதியம், சமமான தொகுதிப் பிரிவினை, ஆண்டுதோறும் தேர்தல் என்ற முக்கிய ஆறு கோரிக்கைகள் கொண்ட மகாசாசனத்தை முன்மொழிந்தது.

1838-ஆம் ஆண்டு பர்மிங்காமிலுள்ள நியூஹாலில் கூட்டப்பட்ட கூட்டத்தில் பல அமைப்புகள் இணைந்தன. சாசன இயக்கம் உருவானது. “ஜனநாயகம் அல்லது மரணம்” என்கிற முழக்கம் எங்கும் உரக்க ஒலித்தது. “கத்தியும் முள்கரண்டியும் ரொட்டியும் வெண்ணையும் போன்றது இக்கோரிக்கைகள்” என்பார் ஜோசப் ரெய்னர் ஸ்டீபன்.

1836-இல் இந்த இயக்கம் சார்ந்தவர்களால் வெளிக்கொணரப்பட்ட “நார்த்தன் ஸ்டார்” என்ற ஏடு, ஆளும் வர்க்க ஏடான டைம்ஸுக்குச் சமமானது. ஆலை வாயில்களில், உணவகங்களில் படிப்பறிவற்ற தொழிலாளர்களுக்கு இந்த ஏட்டை உரக்க வாசித்துக் காட்டும் புதிய கலாச்சாரம் எங்கும் வேகமாய்ப் பரவியது.

கோரிக்கை சாசனத்தில் ஆர்வமுடன் உழைப்பாளிகள் கையொப்பமிட்டனர். சாசன இயக்கக் கூட்டங்களில் பல்லாயிரவர் திரண்டனர். ஆட்சியாளர் மிரண்டனர்.  1839-இல் ஜான் ஃபிராஸ்ட் நாடு கடத்தப்பட்டார். ரோபர்ட் பெடயிக் மூன்றாண்டு கடும் தண்டனைக்கு ஆளானார். 1840 ஜனவரியில் 22-க்கும் மேற்பட்ட சாசனவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர்.

உலகம் முழுவதிலும் உண்மையில் வெகுஜனத் தன்மை கொண்ட, விரிவாகத் திரட்டப்பட்ட, அரசியல் ரீதியாகத் துல்லியமாக வடிவமைக்கப்பட்ட முதல் இயக்கமாக விளங்குவது சாசன இயக்கமே என்றார் லெனின்.

“கடந்த கால வரலாறு அனைத்தையும் புதிய ஆய்வுக்கு உட்படுத்துவதை இந்தப் புதிய நிகழ்வுகள் கட்டாயமாக்கின” என்கிறார் எங்கெல்ஸ்.

“ஏடறிந்த வரலாறெல்லாம் வர்க்கப் போராட்டத்தின் வரலாறே” எனும் மார்க்ஸ் எங்கெல்சின் புகழ்மிக்க வரிகள் சத்தியமான உண்மை. இந்தப் பார்வை வரலாறு பற்றிய தத்துவத்தில் பெரும் பாய்ச்சலை, பொருள்முதல்வாதப் பார்வையை விதைத்தது. சமூக வரலாற்றைப் பற்றிய பார்வையில் ஏற்பட்ட புதிய வீச்சே விஞ்ஞான சோசலிசத்தை நெருங்க வைத்தது.

அதாவது, மனிதனுடைய உணர்வைக் கொண்டு அவனுடைய இருப்பை விளக்குவதற்குப் பதிலாக, அவனுடைய இருப்பைக் கொண்டு உணர்வை விளக்க ஒரு வழிமுறைக் காணப்பட்டது.

எங்கெல்ஸ் சொல்லுவார்: 

“மனித வாழ்வுக்கு ஆதாரமான சாதனங்களின் உற்பத்தியும், உற்பத்திக்கு அடுத்தபடியாக உற்பத்தி செய்யப்பட்ட பொருள்களின் பரிவர்த்தனையுமே சமூகக் கட்டமைப்பு முழுமைக்குமான அடித்தளமாகும். வரலாற்றில் உருவாகிவந்த ஒவ்வொரு சமுதாயத்திலும் செல்வம் விநியோகிக்கப்படும் முறையும், அந்த சமுதாயத்தில் என்ன உற்பத்தி செய்யப்படுகிறது, எவ்வாறு உற்பத்தி செய்யப்படுகிறது, உற்பத்தி செய்யப்படும் பொருட்கள் எவ்வாறு பரிவர்த்தனை செய்யப்படுகிறது என்பதைச் சார்ந்தே  சமூகக் கட்டமைப்பு உள்ளது. வரலாறு பற்றிய பொருள் முதல்வாதக் கருத்துரு இந்த வரையறைப்பிலிருந்தே தொடங்குகிறது.”

இந்தக் கண்ணோட்டம்  சார்ந்தே, ஆதிப் பொதுவுடைமை சமூகம், அடிமை சமூகம், நிலபிரபுத்துவ சமூகம், முதலாளித்துவ சமூகம் எனச் சமூக அமைப்பை பகுத்துணர்ந்து அடுத்தகட்ட வளர்ச்சிப் போக்கு சோசலிச சமூகம் எனச் சமூக அறிவியலாய்க் கணித்தனர்.

சோசலிசம் என்பது அறிவு  சான்ற மூளையின் தற்செயலான கண்டு பிடிப்பென்ற வாதம் நொறுங்கியது. முதலாளி வர்க்கம் தொழிலாளி வர்க்கம் இவற்றுக்கு இடையேயான பகைமையும் மோதலும் போராட்டமும் தவிர்க்க இயலாமல் இட்டுச் செல்லும் அடுத்த கட்டமே சோசலிசம். அது எல்லோருக்குமான நித்திய உண்மை என்கிற பாசாங்கற்றது. உழைப்பாளி வர்க்கத்தின் நலன் சார்ந்தது என்பது தெளிவனது.

விஞ்ஞான சோசலிசம் எது என்பதை நுட்பமாய் அணுகிச் செதுக்கினர் மார்க்சும் எங்கெல்சும். பார்ப்போம்.

[12]
“உழுபவனே நிலத்திற்குச் சொந்தக் காரன்!
உழைப்பவனே தேசத்தின் உரிமை யாளன்!
புழுவைபோல் கிடந்ததுவும் பிச்சை வாங்கும்
புன்மைநிலை அடைந்ததுவும் வாடைக் காற்றில்
அழுதுதுயர் அடைந்ததுவும் இனிமே லில்லை!
அடங்காத வேகமொடும் ஆர்வத் தோடும்
எழுந்துவா! உழைப்பவரின் போராட் டத்தில்
இரண்டிலொன்று கலந்துவிட இதுதான் நேரம்!”

“மாளிகையில் வாழ்ந்தவரைக் கீழே தள்ளு!
மண்குடிசை தனில்வாழ்ந்த மனிதா! உன்னை
ஏளனமாய் இதுவரையில் நடத்தி வந்த
எதிரிகளைப் பணக்கார நரிக்கூட் டத்தை
தேளனைய முதலாளித் திருடர் தம்மைச்
சிரங்கொய்து கர்ஜித்து முரசு கொட்டி

‘ஆளவந்தோம் உலகத்தை ஏழை மக்கள்
அடிபணியோம்’ எனச்சொல்லிக் கொடிஉ யர்த்து!”

1948-இல் சிவப்புக் கவிஞர் தமிழ்ஒளி எழுதிய வரிகள் இன்றும் சிந்தனையைக் கூரேற்றும் உணர்ச்சிக் கங்குகளாய் இருக்கின்றன. இந்த இடைப்பட்ட காலத்தில் சோசலிச உலகம் பல்வேறு சவால்களை எதிர்கொண்டுவிட்டது. ஆயினும் உண்மையின் வெப்பம் சூடு மாறாமல் அப்படியேதான் உள்ளது.

கொடியை உயர்த்துவோர் கொள்கையில் தெளிவுபெறல் மிக அடிப்படையாகும். எனவே, எது விஞ்ஞான சோசலிசம் என இன்னும் நுணுகி முன்செல்வோம்.

“தற்போது நிலவும் சமூக நிறுவனங்கள் நியாயமற்றவையாகவும், நேர்மையற்றவையாகவும் இருக்கின்றன. நியாயம் அநியாயமாகவும், தர்மம் அதர்மமாகவும் மாறிவிட்டன. உற்பத்தி, வினியோக முறைகளில் ஓசைப்படாமல் மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன” என்கிறார் எங்கெல்ஸ்.

பொதுவாக,  “நிலப்பிரபுத்துவ அமைப்பைத் தகர்த்தெறிந்து அதன் இடிபாடுகளின் மீது முதலாளித்துவம் சமூக அமைப்பை நிறுவியது” என்கிறார் எங்கெல்ஸ். ஆனால், அது எல்லா நாட்டிலும் ஈயடிச்சான் காப்பியாக அப்படியே நிகழவில்லை. சில நாடுகளில் நிலப்பிரபுத்துவத்துடன் முதலாளித்துவம் சமரசம் செய்து கொண்டது. இந்தியா அவ்வாறு சீரழிந்த நிலப்பிரபுத்துவ அமைப்போடும், அதன் மோசமான சமூகச் சிந்தனைகளான சாதிப்படிநிலை, பெண்ணடிமைத்தனம் இவற்றோடும் சமரசம் செய்துகொண்டதால் மோசமாகப் பாதிக்கப்பட்ட நாடாகும். அதனை மனதில் அடிக்கோடிட்டுவிட்டு நாம் பாடப்பொருளில் நுழைவோம்.

முதலாளித்துவமானது கட்டுப்பாடற்ற வணிகப் போட்டியை உருவாக்கியது. சட்டத்தின் முன் அனைவரும் சமம் என்பது நடைமுறையில் ’சொத்து உள்ளோர்’ எல்லோரும் சமம்  ’சொத்து இல்லாதார்’ அவரோடு சமமில்லை என்றானது.

நவீனக் கண்டுபிடிப்புகளால் உற்பத்தி சக்திகள் மேலும் மேலும் நவீனமாகி, ஆற்றலுள்ளதாகி வளர்ந்து கொண்டே போயின. ஆனால், உற்பத்தி உறவுகளான பல்வேறு வர்க்கங்களிடையே குறிப்பாக முதலாளி வர்க்கத்திற்கும் தொழிலாளி வர்க்கத்திற்கும் இடையே பகைமை மோதல் முற்றியது.

“இந்த மோதல் ஆதிபாவத்துக்கும் தெய்வநீதிக்கும் இடையிலான மோதலைப் போன்று சிந்தனையில் தோன்றியதல்ல” என்பார் எங்கெல்ஸ். அதாவது, பாவம், புண்ணியம் என்கிற ஆன்மீக நம்பிக்கை சார்ந்த மோதல் அல்ல. உண்மையில் மனித எண்ணத்தையும் செயல்களையும்கூடச் சாராமல் அதன் வர்க்க இயல்பிலேயே உருவானது.

“நவீன சோசலிசம் என்பது, எதார்த்தத்தில் நிலவும் இந்த மோதலினால் சிந்தனையில் ஏற்படும் எதிர்வினையே அன்றி வேறல்ல. முதற்கண், இந்த மோதலினால் பாதிக்கப்படும் வர்க்கமாகிய தொழிலாளி வர்க்கத்தின் மனங்களில் ஏற்படும் இயல்பான பிரதிபலிப்பே அன்றி வேறல்ல” என்பார் எங்கெல்ஸ்.

விளங்கவில்லையா? “வசதி படைச்சவன் தரமாட்டான், வயிறு பசித்தவன் விடமாட்டான்” எனப் பட்டுக்கோட்டை எளிமையாய்ச் சொன்னதன் அடிப்படைதான் அது. இங்கே வசதி படைத்தவன் என்பது பெரும் உற்பத்திக் கருவிகளை, சாதனங்களைத் தனிவுடைமையாகக் கொண்டவரையே குறிக்கும். அதற்கு நேர் எதிராய்த் தன் உழைப்புச் சக்தியை மட்டுமே நம்பி இருக்கும் ஏழைகள். இவர்தம் உழைப்புச் சக்தியை முதலாளிக்கு விற்றாலும் அதற்கு விலையை – கூலியை நிர்ணயிப்பவன் முதலாளியே. இது முக்கியமான இன்னொரு முரண்.

பழைய பட்டறைத் தொழிலை எடுத்துக் கொண்டால் துருத்தியோ, சம்மட்டியோ வேறு ஏதேனும் கருவிகளோ அந்த உழைப்பில் ஈடுபடுகிறவனுக்கே சொந்தமாக இருந்தன. இந்த அரிவாளை நான் செய்தேன், இந்த கடப்பாரையை நான் செய்தேன் என்று கூற முடியும். ஆனால் முதலாளித்துவத் தொழிற்சாலையில் ஓரிடத்தில் குவிக்கப்பட்ட கருவிகள், உழைப்பாளர் என அனைத்தும் சமூகமயமாக்கப்பட்டது.  இந்தப் பொத்தானை நானே செய்தேன், இந்தக் குண்டூசியை நானே செய்தேன் என யாரும் உரிமை கொண்டாட முடியாது. கூட்டு உழைப்பு. அனைத்தையும் சமூகமயமாக்கிவிட்டது. 

அதேசமயம் அதன் லாபத்தில் பெரும்பகுதி தனிப்பட்ட முதலாளி பைக்குச் சென்றதுதான் அடிப்படையான முரண். லாபத்தின் சொந்தக்காரர்களாக இருக்க வேண்டிய தொழிலாளிகள் வெறும் கூலி அடிமைகளாக ஆக்கப்பட்டனர். 

அடுத்து இன்னொரு முக்கியச் செய்தி. அன்று கிராமங்கள் பெரும்பாலும் சுயதேவையைப் பூர்த்தி செய்யும் ஒடுங்கிய அமைப்பாகவே இருந்தன. அன்றைய கிராமங்களின் தேவையும் நுகர்வும்கூட ஒரு சிறிய வட்டத்தில் அடைபட்டுக் கிடந்தன. வளர்ந்து வந்த நகரங்களும்கூடக் கிராமத் தன்மையில் பெரிதும் மாற்றம் காணாமல், வரம்புக்குட்பட்ட பரிவர்த்தனை என்பதோடு முடங்கிக் கிடந்தன. ஆனால் முதலாளித்துவ உற்பத்தி முறை இவற்றைத் தாக்கி அழித்தது.

தேவைக்கு அதிகமாய் உற்பத்தி செய்து குவிக்கப்பட்டன. அவற்றுக்கான சந்தையைத் தேடி அலைந்தன. மனித குலத்தின் தேவையை நிறைவுசெய்ய உற்பத்தி, வினியோகம் எனும் பழைய சட்டகம் நொறுக்கப்பட்டது. அதிக லாபம் தருவதை உற்பத்தி செய்து குவிப்பதும், அதற்கான சந்தையைத் தேடலுமாய் முதலாளித்துவ உற்பத்தி முறை மாற்றம் அடைந்தது. இங்கே சந்தை முக்கிய இடத்தை பெறுவதும். உற்பத்தி செய்த பண்டம் அல்லது சரக்கு பணமாக மாற்றப்பட, நெறியற்ற வணிக விதி ஆட்டம் போடத் தொடங்குகிறது.

“பண்ட உற்பத்தியை அடிப்படையாக் கொண்டுள்ள சமூகத்தில் மனிதர்கள் மீது செலுத்தப்படுகின்ற அதிகாரம் பணத்தின் சக்தியில், தங்கத்தின் சக்தியில் குவிந்து கிடக்கிறது” என்பார் எர்ன்ஸ்ட் பிஷர்.

இங்கு, தங்கத்தைப் பற்றி ஒரு கவிதையை அசை போடுவோம்:

“சபிக்கப்பட்ட மண்
மானுட இச்சைக்கான பொதுமகள்
தேசங்களை அழிவின் பாதைக்கு
இட்டுச் சென்று எதிரெதிரே நிறுத்துபவள்
கொலையும் புரியும் இனியவள்
மணபந்தம் உதறியவள்
மகனுக்கும் கணவனுக்கும் இடையில் உழல்பவள்
அவதூறு பரப்பும் அழகிய மகள்
கன்னிகழியா இளைய மகள்
கவர்ந்திழுக்கும் தாரகைப்பெண்
என்றும் இளமை குலுங்கும் புதுமலர்
காதல் ரசம் ததும்பச் சொக்கி இழுப்பவள்
மலையின் மடியில் உறையும்
பனியின் குளுமையாய் வெட்கம் கொள்பவள்
கண்ணில் தெரியும் கடவுள்
சாத்தியத்தை எல்லாம் சாதிக்கும்
வீரர்களை முத்தமிடுபவள்.”

இப்படி எழுதியவர் ஒரு சிவப்புப் புரட்சியாளரோ – சிவப்புக் கவிஞரோ அல்லர். மிக அண்மையில் எழுதியதும் அல்ல. புகழ்மிக்க நாடக ஆசிரியர் ஷேக்ஸ்பியர் எழுதிய வரிகள் காலத்தை மீறி நிற்கின்றன. இக்கவிதையை மேற்கோள் காட்டி மார்க்ஸ் தொடர்வார்,

“…..ஏனெனில் தற்பொழுது இருந்து கொண்டிருக்கும், செயலாற்றிக் கொண்டிருக்கும் மதிப்பு என்கிற கருத்து அதாவது பணம்  அனைத்தையும் அலங்கோலமாக்கி விடுகிறது; ஒரே குழப்பமாகவும், எல்லா விஷயங்களையும் நிலைமாற்றம் செய்வதாகவும் இருக்கிறது; எல்லா விதமான இயற்கை மற்றும் மானிடப் பண்புகளின் குழப்பமாகவும் மாற்றமாகவும் இருக்கிறது.”

கம்யூனிஸ்டு அறிக்கையில் கூறியபடி, “மருத்துவரையும், வழக்குரைஞரையும், மதகுருவையும், கவிஞரையும், விஞ்ஞானியையும் தன்னிடம் ஊதியம் பெறும் கூலி உழைப்பாளர்களாய் மாற்றிவிட்டது. முதலாளித்துவ வர்க்கம் குடும்பத்திடமிருந்து உணர்ச்சிபூர்வ உறவுத் திரையைக் கிழித்தெறிந்து விட்டது. குடும்ப உறவை வெறும் பண உறவாக்கிவிட்டது.”

இங்கே, மீண்டும் நினைவூட்டுவோம். சமூகமயமாக்கப்பட்ட உற்பத்தி, அதன் லாபத்தை மொத்தமாய் விழுங்கும் பருத்த முதலாளித்துவத் தொந்தி இவற்றுக்கிடையேயான முரண்பாடும் மோதலும் மேலும் மேலும் உக்கிரமடைந்தன. தொடர்ந்தன.

எங்கெல்ஸ் சுட்டுகிறார், “முதலாளித்துவ உற்பத்தி முறை தான் தோன்றிய நாளிருந்து அதில் உள்ளார்ந்து நிலவும் பகைமையின் இரு வடிவங்களில்தான் இயங்கி வருகிறது. ஃபூரியே ஏற்கெனவே கண்டு சொன்ன  ‘நச்சு வட்டத்திலிருந்து’ அதனால் என்றுமே வெளிவர முடிந்ததில்லை.” 

இந்தச் சூழல் படிப்படியாகக் குறுகிக் கொண்டிருக்கிறது. தலைவலி திருகுவலியாவது போல் மேலும் மேலும் முறுகலாகி, கிரகங்களின் இயக்கத்தைப் போல் மையத்துடன் மோதி ஒரு முடிவுக்கு வந்தாக வேண்டும் என்பதை ஃபூரியே உணரவில்லை. ஆயின், மார்க்சும் எங்கெல்சும் கண்டுணர்ந்து சோசலிசத்துக்கான பாதையைக் காட்டினர். பார்ப்போம்.

[13]
“திசைகள் நான்கல்ல
திசைகள் இரண்டுதான்
சோசலிச திசை ஒன்று
சுரண்டல் திசை ஒன்று
சோசலிச திசை காட்டும்
கருவியாய் மாறி வா!
ஊர் தோறும்
நகர் தோறும்
திசைகாட்டும்  கருவிகளாய்
தினமும் நீ மாறி வா!
இருப்பவன் தலைக்கு
நெருப்பாக வா!
இல்லாதவன் காலுக்கு
செருப்பாக வா!
இன்றே வா!
இப்போதே வா!”

கவிஞர் கந்தர்வன் இளைஞர்களுக்கு விடுத்த அழைப்பில் சில வரிகளே இவை! ஆயிரம் கட்சிகள் இருக்கலாம், ஆயிரம் தலைவர்கள் இருக்கலாம். அடிப்படை இரண்டேதான்.

ஒன்று, இந்தச் சுரண்டல் அமைப்பை- குரூரமான லாபவெறிப் பேயைச் சீவி முடித்துச் சிங்காரித்து உலகப் பேரழகியாய்க் காட்டும் முதலாளித்துவ அரசியல். இன்னொன்று இதனை நொறுக்கிப் பாட்டாளி வர்க்க நலனுக்கான சமூக மாற்றத்தை முன்னிறுத்தும் இடதுசாரி அரசியல்.

இடதுசாரி அரசியலின் இறுதி இலக்கு சோசலிசமே. ஆனால், அதனை ஒற்றை எட்டில் அடைந்துவிடல் சாத்தியமே அல்ல. ஏனெனில், சோசலிசம் என்பதும் முதலாளித்துவம் என்பதும் நேர் எதிரான வர்க்கப் பகைமை கொண்ட இருவேறு பாதைகள். இன்றைய உலகம் பொதுவாய் முதலாளித்துவ உலகம். அதன் எதிர்த் திசையில் நீச்சலடித்துக் கரை சேர்வது பெரும் சவால்தான்.

முதலாளித்துவத்தின் சில இயல்புகளை முன் அத்தியாயத்தில் பார்த்தோம் எங்கெல்ஸ் சொல்லுகிறார், ”எந்திர சாதனங்களைச் செம்மைப் படுத்தல், மனித உழைப்பைத் தேவையற்றதாக்கிவிடுகிறது.”

ஆம்.  இயந்திரம் மேலும் மேலும் நவீனமயமாகும் போது அதன் இன்னொரு விளைவாய் வேலை இல்லாப் பட்டாளம் ரிசர்வ்டு ஆர்மியாய் தெருவில் நிற்கிற சூழல் ஏற்படுகிறது. இந்த ரிசர்வ்டு ஆர்மியைக் காட்டிக் கூலியைக் குறைக்கவும் உரிமையை நசுக்கவும் முதலாளியால் முடிகிறது.

அதேவேளையில் புதிய உற்பத்திக் கருவிகளைக் கொண்டு சமூகத்துக்கு எது தேவை எவ்வளவு தேவை எனத் திட்டமிட்டு உற்பத்தி செய்யாமல், எதில் அதிக லாபம் எனக் கணக்கிட்டு உற்பத்தி செய்து குவிப்பதும், அதற்குச் சந்தையைத் தேடப் புதுப்புது குறுக்குவழிகளில் செல்வதும் முதலாளித்துவத்தின் உடன்பிறந்த நோய்.

அதாவது, “நுகர்வோரின் தேவைக்குச் சரக்குகளை உற்பத்தி செய்வது என்பதற்குப் பதிலாக, தான் உற்பத்தி செய்யும் சரக்குக்கேற்ற நுகர்வோனைத் தேடுவதும், விளம்பரம், நிர்ப்பந்தம் எனப் பல்வேறு வழிகளில் அதைச் சாதிப்பதும் முதலாளித்துவத்தின் பிறப்பு இயல்பு. அதனால், இலக்கற்ற உற்பத்திக் குவிப்பு பெரும் பொருளாதார நெருக்கடிக்கு தேசத்தை உந்தித் தள்ளுகிறது.

ஆக, முதலாளித்துவ முறையில் உற்பத்தி, வினியோகம், பரிவர்த்தனை இவற்றில் நிலவும் அரஜாகமும் ஒழுங்கின்மையும்  தொடர்ந்து சமூக ஒழுங்கின்மைக்கும் ஏற்றத் தாழ்வுக்கும் அராஜகத்துக்கும் வேராகிறது.

கொரானா நோய்த் தொற்றைக் கட்டுப்படுத்த அதன் ஒட்டுவாரொட்டிச் சங்கிலியை உடைக்க வேண்டும் என்கிறது மருத்துவ அறிவியல். அதாவது, தோற்றுவாயைக் கட்ட வேண்டும். இதுவே சமூக அரசியல் பொருளாதாரத்திலும் விதியாகும்.

முதலாளித்துவ முறையிலான உற்பத்தி, வினியோகம், பரிவர்த்தனை என்கிற கண்ணியை உடைத்து அதை சமூகமயமாக்குவதே  சோசலிசம். இதுதான் சோசலிசம் குறித்த விஞ்ஞான வரையறையுமாகும்.

சோசலிசம், கம்யூனிசம் என்றெல்லாம் புரியாத சொற்களைப் பேசுவதைவிடச் சமதர்மம் என்ற சொல்லையோ, பொதுவுடைமை என்ற சொல்லையோ பயன்படுத்தலாகாதா? அந்நியத் தத்துவம் என்பதால் அந்நியச் சொல்லால்தான் விளிக்க வேண்டுமோ? இப்படியும் சிலர் இன்னும் கேள்வி எழுப்புகின்றனர்.

சுற்றிச் சுற்றி இது ஒரு அந்நியத் தத்துவம் என்று கோடு போட்டு, இந்த மண்ணில் இது முளைக்காது எனச் சொல்வது இந்தத் தத்துவத்தின் எதிரிகளுடைய ஓர் உத்தி. அது இருக்கட்டும், நம் தமிழ்நாட்டில் புரட்சி, அம்மா, மாற்றம், வளர்ச்சி உள்ளிட்ட பல சொற்கள் படும்பாட்டைப் பார்த்தபின்னும் இப்படி ஒரு கேள்வியா? கம்ப்யூட்டர், லேப்டாப் என எண்ணற்ற கருவிகளின் பெயர் எந்த மொழியில் என்பது மட்டுமா பிரச்சனை? பெயர்ச் சொற்களை அப்படியே பயன்படுத்தலில் பிழை என்ன? எந்தச் சொல்லால் விளிப்பது என்பதற்கு முன்னால் அவற்றின் உட்பொருளை அறிவது அவசியமல்லவா? நாம் இங்கு முதல் அத்தியாயத்திலிருந்தே சோசலிசக் கனவு ஒரு மண்ணுக்கு மட்டுமே உரியதல்ல. அதன் வேர் நம் தமிழ்மண்ணிலும் உண்டு என்பதற்குப் பல எடுத்துக்காட்டுகள் தந்துள்ளேன் என்பதைக் கவனப்படுத்துகிறேன்.

முதலாளித்துவம் மூர்க்க லாபெவெறியோடு நிலம், தொழிற்சாலைகள், சுரங்கங்கள் போன்றவற்றைச் சிலரிடம் குவித்து ஏகபோகமாக்குகிறது. அவர்களின் சொத்தைப் பாதுகாக்க அரசு இயந்திரம் முழுதாய் முடுக்கிவிடப்படுகிறது. உழைப்பாளி மக்கள்மேல் ஒடுக்குமுறை ஏவப்படுகிறது. இதற்குத் துணையான கருத்தோட்டமும் ஒழுக்க விதிகளும் சமூகச் சட்டமாக்கப்படுகிறது. கேள்வி கேட்போரும் எதிர்ப்போரும் குற்றவாளிகளாகச் சித்தரிக்கப்படுகின்றனர். விரல்விட்டு எண்ணக்கூடிய சிலரிடம் சமூகத்தின் மொத்தச் செல்வத்தின் பெரும்பகுதி குவிய, பெரும்பாலான மக்கள் வறுமைப் படுகுழியில் தள்ளப்படுகின்றனர். இருப்பவர் இல்லாதவர் இடைவெளி பெருகுகிறது. வறுமையும் வேலையின்மையும் வாட்டி வறுக்கிறது. போரும் மோதலும் தொடர்கிறது.

இந்த முதலாளித்துவ சமுதாயத்துக்கு மாற்றாக சோசலிசம் முன் வைக்கப்படுகிறது. இங்கு உற்பத்திக் கருவிகளான தொழிற்சாலை, சுரங்கம் முதலியன அரசுக்குரியதாகிறது. லாபவெறிக்குக் கடிவாளம் போடப்படுகிறது. நிலக் குவியல் உடைக்கப்பட்டு பரவலாக்கப்படுகிறது. உணவும் உறைவிடமும் வேலையும் கல்வியும் சுகாதாரமும் அனைவருக்கும் உத்திரவாதப்படுத்தப்படுகிறது. ஏழை பணக்காரன் இடைவெளி ஒழிக்கப்படுகிறது. மாறாக, சக்திக்கேற்ற உழைப்பு, உழைப்புக்கேற்ற ஊதியம் நடைமுறைக்கு வருகிறது. இங்கு அரசு என்ற அடக்குமுறைக் கருவி தொடரும். ஆனால், முன்பு முதலாளிகள் நலன் காக்க உழைப்பாளிகளை ஒடுக்கியதற்கு மாறாக, உழைப்பாளிகளின் நலன் பேண முதலாளிகளை அடக்கும். உலகப் போருக்கு அல்ல, உலக சமாதானத்துக்கே முன்னுரிமை. இன்னும் சொல்லலாம்.

ஆட்சி அதிகாரம் எந்த வர்க்கத்தின் கையில் என்பது சோசலிசத்தின் முதன்மையான மையக் கேள்வி. எனவே பாட்டாளி வர்க்கம் ஓர் அமைப்பாகத் திரண்டு ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்றுவதே தீர்வு.

இது எளிதில் நடந்துவிடாது. வாக்குப் பெட்டி மூலம் சில மாநிலங்களில் ஆட்சிக்கு வந்தாலும் அது சோசலிச ஆட்சியாகாது. அப்போது அதிகாரத்தைப் பயன்படுத்திச் மக்கள்நலச் செயல்கள் சிலவற்றில் ஈடுபடலாமே தவிரப் பெரும் மாற்றம் காண முடியாது. பெரும்பெரும் ஆலைகள், சுரங்கங்கள் போன்ற உற்பத்திச் சாதனங்களில் தனிவுடைமையை ஒழிக்காமல் சோசலிசம் நோக்கி அடியெடுத்து வைக்கவே முடியாது. ஆனால் சிறு தொழில்கள், குறுந்தொழில்கள் அப்போது ஒழிக்கப்படாது. மாறாக, அந்தந்த நாட்டுச் சமூகப் பொருளாதாரச் சூழலே தீர்மானிக்கும்.

இடம் கருதி இதோடு நிறுத்துகிறோம். இவைவெல்லாம் ஈயடிச்சான் காப்பியாக எல்லா நாட்டிலும் ஒரே மாதிரியாக அமையாது. அமைக்கவும் இயலாது. அந்தந்த மண்ணுக்கேற்ப ஆங்காங்குள்ள சமூகச் சூழல், சமூகத் தேவை, உற்பத்திக் கருவிகளின் வளர்ச்சி, அக, புறச் சூழல் இவையொட்டி, நாட்டுக்கு நாடு கூடுதலாகவோ குறைவாகவோ அமலாகும். இதனைக் குறிக்கும் சரியான சொல் சோசலிசம் என்பதே. இதே உணர்வோடு சமதர்மம் என்ற சொல்லைச் சொன்னாலும் அட்டியில்லை. 

மாறாக, கம்யூனிசம் என்பது இதனினும் உயர்ந்த கட்டம். இன்னும் எங்கும் சோதிக்கப்படவில்லை. கம்யூனிச சமுதாயத்தில் தனிநபர் சொத்துரிமை முற்றாக ஒழிக்கப்பட்டிருக்கும். எல்லோருக்கும் எல்லாம் பொதுவாக இருக்கும். தன் சக்திக்கு ஏற்ப ஒவ்வொருவரும் உழைப்பர். அவரவர் தேவைக்கு ஏற்ப எடுத்துக்கொள்வர். இங்கே அடிமையும் கிடையாது எஜமானனும் கிடையாது. சுரண்டுபவரும் இருக்கமாட்டார். சுரண்டப்படுவோரும் இருக்கமாட்டார். ஒடுக்குவோரும் இருக்கமாட்டார், ஒடுக்கப்பட்டோரும் இருக்கமாட்டார். உடையோரும் இல்லாதோரும் இல்லாத, ஒவ்வொருவர் சுதந்திரத்தையும் ஒவ்வொருவரும் மதிக்கிற, அரசு என்கிற அடக்குமுறைக் கருவியே உலர்ந்து உதிர்ந்து போகிற ஒரு பொன்னுலகம் அது.

அந்த லட்சிய யுகத்துக்குக் கம்யூனிசம் என்று பெயர். இதனைப் பொதுவுடைமை என விளிக்க விரும்பினும் இதே உணர்வோடு விளிப்பின் நமக்கென்ன கசக்கவா செய்யும்?

“தனிநபராட்சி, அரசியல் சட்டரீதியான மன்னராட்சி, குடியாட்சி ஆகியவை வர்க்கப் போராட்டத்தின் பல்வேறு வடிவங்களே. இந்த வடிவங்களில் ஒவ்வொன்றும் அதன் வர்க்க உள்ளடக்கத்தின் வேறுபட்ட வளர்ச்சிக் கட்டங்கள் ஊடே கடந்து செல்கிறது என்று வரலாற்றின் இயக்கவியல் கூறுகிறது. ஒரு வடிவத்திலிருந்து இன்னொரு வடிவத்துக்கான இடைமாற்றம் தன்னளவில், புதிய புறத்தோற்றத்தின் கீழ் உள்ள முந்தைய சுரண்டும் வர்க்கத்தை ஒழிப்பதில்லை” என்பார் லெனின்.

ஆம். உண்மை அதுவே. வரலாற்றில் முதல்முறையாகச் சுரண்டும் வர்க்கத்தைக் கீழே தள்ளி உழைக்கும் வர்க்கத்தை ஆட்சிக் கட்டிலில் உட்கார வைத்தது சோசலிசப் புரட்சியே. இதுதான் அதன் உள்ளடக்கத்திலேயே மிக முக்கியமானது. வர்க்க வேறுபாட்டை சோசலிசம் முற்றாக ஒழித்துவிடாது. ஆயின், உழைக்கும் வர்க்க மேலாண்மையை நிறுவும். சோசலிச சமுதாயத்தின் முக்கிய மரபணு இதுவே.

இதனால்தான் ஆயிரம் ஆண்டுகளாய் அடக்கியும் சுரண்டியும் ஆளும் வர்க்கமாய் இருந்த சுரண்டும் வர்க்கம் தன் வீழ்ச்சியை, இழப்பைத் தாங்கமுடியாமல் வஞ்சகம், சதி, கலகம் இவற்றின் மூலம் சோசலிச சமூகத்தை அழித்தொழிக்க முயல்கிறது. சோவியத் யூனியன் உள்ளிட்ட சில இடங்களில் வெற்றியும் கண்டிருக்கிறது. எனினும், சோசலிசத்தின் மீதான அவதூறுகளையும் தாக்குதலையும் முதலாளித்துவம் தொடரவே செய்கிறது. எல்லாவற்றையும் மீறி ஒவ்வொரு நாட்டின் சூழலுக்கு ஏற்ப சோசலிச அமைப்பு தன்னைத் தகவமைத்துப் புத்துலகம் காணாமல் மனிதகுலத்துக்கு நிம்மதி கிட்டாது என்பதே கொரானா சொல்லும் செய்தியும் ஆகும். அதை நோக்கிப் பயணிப்போம்.

எங்கெல்ஸ் உறுதியாகச் சொல்கிறார்,

“இந்த உலகளாவிய விடுதலைச் செயலை நிறைவேற்றுவது நவீனப் பாட்டாளி வர்க்கத்தின் வரலாற்றுக் கடமையாகும். அதற்கு வரலாற்றின் நிலைமைகளையும், அதன்மூலம் இச்செயலின் தனமையையும்கூடத் தெளிவாகப் புரிந்துகொள்ள வேண்டும். தற்போது ஒடுக்கப்பட்டுக் கிடக்கும் பாட்டாளி வர்க்கத்துக்கு இந்த நிலைமைகளைப் பற்றியும், அது நிறைவேற்றப் பணிக்கப்பட்டுள்ள மாபெரும் முக்கியத்துவம் வாய்ந்த செயலின் நோக்கத்தைப் பற்றியும் முழுமையான அறிவை ஊட்ட வேண்டும். இதுவே பாட்டாளி வர்க்க இயக்கத்தின் வெளிப்பாடான விஞ்ஞான சோசலிசத்தின் பணியாகும்.”

எங்கெல்ஸ் சொன்னதை நெஞ்சில் நிறுத்துவோம். கற்போம். கற்பிப்போம். களம் காண்போம். நவகவியின் கனவோடு விடை பெறுவோம். 

“ஆயிரம் காலம் மானிட விழிகள்
காண்கின்ற ஓர் கனவு
அத்தனை இமைகளும் பொத்தி வளர்த்திடும்
ஒற்றைப் பூங்கனவு
ஆழ நெஞ்சிலே விழுதுவிட் டிறங்கிய
ஆதி நெடுங்கனவு
அதுதானே இங்கு பூக்கப் போகிற
நாளைய பொன்னுலகு.”

கற்பனாவாத சோசலிசமும் விஞ்ஞான சோசலிசமும் | ஜி. ராமகிருஷ்ணன்

கற்பனாவாத சோசலிசமும் விஞ்ஞான சோசலிசமும் | ஜி. ராமகிருஷ்ணன்

LIKE | COMMENT | SHARE | SUBSCRIBE Follow Us on:- Facebook: https://www.facebook.com/thamizhbooks/ Twitter: https://twitter.com/Bharathi_BFC To Buy New Tamil Books. Visit Us BelowA view o https://thamizhbooks.com To Get to know more about tamil…