What is still left of scientific writing? - Ed Yong. This Article Translated in Prof. T. Chandraguru. அறிவியல் எழுத்து என்று எது இன்னும் எஞ்சியிருக்கிறது? - எட் யாங் 

அறிவியல் எழுத்து என்று எது இன்னும் எஞ்சியிருக்கிறது? – எட் யாங் 



என்னை ஓர் அறிவியல் எழுத்தாளன் என்று நானே நினைத்துக் கொண்டு 2020ஆம் ஆண்டிற்குள் நுழைந்தேன். இறுதியில் அந்த ஆண்டை எழுத்தாளன் என்ற நிலைப்பாட்டில் நம்பிக்கையற்றே நிறைவு செய்திருந்தேன். கோவிட்-19 தொற்றுநோயின் முதல் பொறிகள் 2019ஆம் ஆண்டின் இறுதியில் கிளம்பிய போது மலைப்பாதை ஒன்றில் ரேடியோ-டேக் செய்யப்பட்ட விரியன் பாம்புகளைத் தேடியலைந்து கொண்டிருந்தேன். என் மீது மின்கெளிறு மீன் மின்சாரத்தைச் செலுத்த அனுமதித்துக் கொண்டும், அப்போது பொரித்த ஆமைக் குஞ்சுகளை உள்ளங்கைகளில் ஏந்திக் கொண்டும் திரிந்தேன். 2020ஆம் ஆண்டின் தொடக்கத்தில் புதிய கொரோனா வைரஸ் உலகின் பேரழிவைத் தூண்டிவிடத் தொடங்கியிருந்த வேளையில் புலம்பெயர்ந்து செல்கின்ற அந்துப்பூச்சிகளையும், மிகச் சிறிய ஆனாலும் வியக்கத்தக்க ஆற்றலுடனிருந்த மான்டிஸ் இறால் என்னுடைய சுண்டுவிரலில் குத்தியதையும் கண்டு ஆச்சரியத்தில் ஆழ்ந்திருந்தேன்.

அந்த உயிரினங்களுடன் யதார்த்தத்தைப் பகிர்ந்து கொள்கின்ற நாம் அதைப் பல்வேறு வழிகளில் அனுபவித்து வருகின்றோம். அந்த விரியன் பாம்பால் தன்னுடைய பாலூட்டி இரையின் உடல் வெப்பத்தை உணர – கண்டு கொள்ள முடிகிறது. மின்கெளிறால் மற்ற விலங்குகள் தன்னிச்சையாக உருவாக்குகின்ற மின்புலங்களைக் கண்டறிந்து கொள்ள முடிகிறது. பூமியின் காந்தப்புலத்தை உணர்ந்து கொள்ளும் அந்துப்பூச்சிகளும், ஆமைகளும் தங்களுடைய நெடிய புலப்பெயர்விற்கு அதைப் பயன்படுத்திக் கொள்கின்றன. மான்டிஸ் இறாலால் நம்மால் காண முடியாத ஒளியின் வடிவங்களைக் காண முடிகிறது. நம்மில் யாருக்கும் முழுமையாகப் புரியாத வகையிலே அது வண்ணங்களைப் புரிந்து கொள்கின்றது. இவ்வாறு ஒவ்வொரு உயிரினமும் தனக்கென்று தனித்துவமான புலன்களைக் கொண்டிருக்கிறது. அவை ஒவ்வொன்றும் தங்களுடைய காட்சிகள், மணங்கள், ஒலிகள் மற்றும் இந்த பூமியை ஊடுருவுகின்ற பிற தூண்டுதல்களைப் பொறுத்தவரை தனித்த தன்மையுடனே இருக்கின்றன.

What is still left of scientific writing? - Ed Yong. This Article Translated in Prof. T. Chandraguru. அறிவியல் எழுத்து என்று எது இன்னும் எஞ்சியிருக்கிறது? - எட் யாங் 

அந்த புலனுணர்வுகளின் அனுபவங்கள் குறித்து புத்தகம் ஒன்றை எழுதுவது அதாவது – ‘பயணம் என்பது வினோதமான இடங்களுக்குச் செல்வதல்ல – மற்றவர்களின் கண்களைக் கொண்டிருப்பதே உண்மையான பயணம் ஆகும்’ என்று மார்செல் ப்ரூஸ்ட் ஒருமுறை கூறியிருந்ததைப் போல – மக்களை வௌவால், பறவை அல்லது சிலந்தியின் மனதிற்குள் அழைத்துச் செல்லக்கூடிய  பயணம் குறித்து எழுதுவதே எனக்குள் இருந்த திட்டமாக இருந்தது.

எழுதுவது ஒன்றே என்னால் முடிந்த ஒரே பயணமாக மிகவிரைவிலேயே மாறிப் போனது. தொற்றுநோய் பரவியதால் சர்வதேசப் பயணங்களுக்கான வாய்ப்புகள் அற்றுப் போயின. அன்றாட யதார்த்தத்திலிருந்து மழுங்கிய நினைவுகள் என்பதாகப் பயணங்கள் மாறிப் போயின. உணவகங்கள், பார்கள், பொது இடங்கள் என்று அனைத்துமே மூடப்பட்டன. சமூகக் கூட்டங்கள் சிறியதாகவும், அரியதாகவும் மாறி துணி, இடைவெளி போன்ற தடைகளுக்குட்பட்டன. என்னுடைய உலகம் ஒருசில கட்டிடத் தொகுப்புகளின் சுற்றளவுக்குள்ளே சுருங்கிப் போனது. ஆனாலும் மற்ற விலங்குகளின் உணர்வு உலகங்கள் சுதந்திரமாக, மாயாஜால நார்னியா போன்று எழுத்துகளின் மூலம் அணுகும் வகையிலேயே இருந்தன. அந்த உலகங்களும் தொற்றுநோய் குறித்த அறிக்கைகளை எழுதுவதற்காக நான் எனது புத்தக முயற்சியை இடைநிறுத்த வேண்டி வந்தபோது ​​ மூடப்பட்டு விட்டன.

அறிவியல் எழுத்தாளர்களைப் பொறுத்தவரை கோட்பாட்டளவில் 2020ஆம் ஆண்டு மிகவும் வெற்றிகரமான ஆண்டாகவே இருந்திருக்க வேண்டும். ஒட்டுமொத்த உலகை உலுக்கிய அந்த வைரஸ் உலகமக்கள் அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது. சூப்பர்-பரவல், கூட்டு நோய் எதிர்ப்பாற்றல், சைட்டோகைன் புயல்கள், எம்ஆர்என்ஏ தடுப்பூசிகள் என்ற தொற்றுநோயியல், நோயெதிர்ப்பு அறிவியல் குறித்து அதுவரையிலும் ரகசியமாக இருந்த வார்த்தைகள் அனைவரும் பயன்படுத்துகின்ற வார்த்தைகளாக மாறின. பொதுசுகாதார நிபுணர்கள் (போலி வல்லுநர்களும்) சமூக ஊடகங்களில் பெருமளவில் தங்களைப் பின்தொடர்பவர்களைக் கொண்டிருந்தனர். அந்தோணி ஃபாசி என்ற பெயர் அனைவரும் அறிந்த பெயராக மாறியிருந்தது. அந்த ஆண்டின் – இந்த பத்தாண்டுகளிலேயே – மிகப் பெரிய அறிவியல் கதைகளைச் சொல்வதற்கு அறிவியல் எழுத்தாளர்கள் மிகவும் பொருத்தமானவர்களாக இருந்தனர்.

What is still left of scientific writing? - Ed Yong. This Article Translated in Prof. T. Chandraguru. அறிவியல் எழுத்து என்று எது இன்னும் எஞ்சியிருக்கிறது? - எட் யாங் 

ஒழுங்குடன் மேற்கொண்டு, ​​அறிவியலை உள்ளடக்கிக் கொள்வதன் மூலம் சிக்கலானவற்றை தெளிவுக்கு கொண்டு வருவது, நுணுக்கத்தைத் தழுவிக் கொள்வது, புதியவை அனைத்தும் பழைய அஸ்திவாரங்களின் மீதே கட்டமைக்கப்பட்டுள்ளன என்பதைப் புரிந்து கொள்வது, அறியாமையின் எல்லைகளை வரையறுத்துக் கொண்டு தெரியாதிருப்பவை குறித்து ஆராய்வதற்கான பயிற்சிகளைப் பெற்றுக் கொள்வது என்று அனைத்தையும் எழுத்தாளரால் செய்து முடிக்க முடிகிறது. அறிவியல் என்பது வெறுமனே உண்மைகள், கண்டுபிடிப்புகளின் தொகுப்பாக இருப்பதில்லை என்பதையும், அது படிப்படியாக நிச்சயமற்ற தன்மையைக் குறைப்பதை நோக்கிய ஒழுங்கற்ற இடறலாக இருப்பதையும், மதிப்பாய்வு செய்யப்பட்டு வெளியிடப்படுகின்ற கட்டுரைகள் அனைத்துமே உண்மைகளாக இருப்பதில்லை என்பதையும், சிறப்புமிக்க பத்திரிகைகள்கூட முட்டாள்தனத்தால் பாழ்பட்டுக் கிடப்பதையும், இறுமாப்பு கொண்ட தற்பெருமை போன்ற மனிதர்களின் குணத்தால் அறிவியல் முயற்சிகள் பாதிக்கப்பட்டிருப்பதையும் தலைசிறந்த அறிவியல் எழுத்தாளர்கள் நன்கு அறிந்தே இருக்கிறார்கள். உலகளாவிய பேரழிவிற்கு மத்தியில் தவறான தகவல்கள் அதிகமாகப் பரவி, அவை குறித்த தெளிவான விளக்கங்களுக்கான தேவை அதிகமாக ஆனால் அவை பற்றாக்குறையுடனிருந்த நிலையில் இதுபோன்ற பண்புகள் அதிக மதிப்பு கொண்டவையாக இருந்திருக்கும்.

இந்த தொற்றுநோய் வெறுமனே அறிவியல் சார்ந்ததாக மட்டுமே இருக்கவில்லை. நம்முடைய வாழ்வின் ஒவ்வொரு அம்சத்தையும் அடித்து வளைத்து நிமிர்த்தியிருக்கின்ற நெருக்கடியாகவே அது இருந்திருக்கிறது. நம்முடைய உயிரணுக்களைத் தாக்கிய அதே வேளையில் அந்த வைரஸ் நமது சமூகங்களை முற்றுகையிட்டு, அதன் ஒவ்வொரு விரிசலுக்குள்ளும் புகுந்து, ஒவ்வொரு பலவீனத்தையும் தனக்கெனப் பயன்படுத்திக் கொண்டு பலரையும் தாக்கியது. தனக்கென்று அதிக அளவிலே செல்வம், உயிரியல் மருத்துவ அறிவைக் கொண்டிருந்த போதிலும் கோவிட்-19க்கு எதிராக அமெரிக்கா ஏன் மிகவும் மோசமாகச் செயல்பட்டது என்பதைப் புரிந்து கொள்வதற்கு வைராலஜியை மட்டுமல்லாது அமெரிக்காவின் இனவெறி, இனப்படுகொலை வரலாறு, கண்காணிப்பு நிலைமை, மருத்துவமனைகள், மருத்துவம் மற்றும் ஆரோக்கியம் குறித்த வரலாற்று அணுகுமுறைகள், தேசிய தனித்துவங்கள், சமூக ஊடகங்களை நிர்வகிக்கும் வழிமுறைகள் உள்ளிட்டு அதன் நாற்பத்தைந்தாவது அதிபரிடமிருந்த குறைபாடுகள் என்று அனைத்தையுமே ஒருவர் புரிந்து கொள்ள வேண்டியிருக்கும். அடுத்த தொற்றுநோய்க்கு அமெரிக்கா தயாராக இருக்கிறதா என்பது குறித்து 2018ஆம் ஆண்டில் தி அட்லாண்டிக் பத்திரிகையில் நான் எழுதிய எட்டாயிரம் வார்த்தைகள் கொண்ட கட்டுரையில் இந்தப் பிரச்சனைகளில் எவற்றையும் நான் மறைத்திருக்கவில்லை. அறிவியல் எழுத்தாளராக குறிப்பாக தொற்றுநோய்களைப் பற்றி எழுதி வந்த எனது பின்னணி சந்தேகத்திற்கு இடமின்றி தொற்றுநோய் தொடங்கிய வேலையில்​ மிகவும் பயனுள்ளதாகவே இருந்தது. ஆனாலும் அது முழு மராத்தானில் அரை மைல் தொடக்கம் என்ற நிலையில் மட்டுமே இருந்தது. நிபுணத்துவம் எதுவுமின்றி ஆண்டு முழுவதும் தொற்றுநோய் குறித்து எழுதி வந்த பத்திரிகையாளர்களைப் பற்றி என்னுடைய சகாக்கள் பலரும் மிகவும் கேவலமாகப் பேசி வந்தனர். ஆனால் இந்த நெருக்கடி பற்றி எழுதுவதற்கான நிபுணத்துவத்துடன் உண்மையிலேயே யாராவது இருக்கின்றனரா என்ற சந்தேகம் இருக்கவே செய்தது.

What is still left of scientific writing? - Ed Yong. This Article Translated in Prof. T. Chandraguru. அறிவியல் எழுத்து என்று எது இன்னும் எஞ்சியிருக்கிறது? - எட் யாங் 
ருடால்ப் விர்ச்சோ

1848ஆம் ஆண்டு டைபஸ் நோய் பரவல் குறித்து ஆய்வுகளை மேற்கொண்டிருந்த ஜெர்மன் மருத்துவர் ருடால்ப் விர்ச்சோவிடம் தொற்றுநோய்களின் தன்மை குறித்த தெளிவு இருந்தது. விர்ச்சோ டைபஸை உருவாக்கிய கிருமியைப் பற்றி எதையும் அறிந்திருக்கவில்லை என்றாலும், அந்த நோய்க்கான காரணங்களாக மோசமான சுகாதாரம், ஆபத்தான பணி நிலைமைகள், தகுதியற்ற அரசியல்வாதிகள், கவனக்குறைவான பிரபுக்களால் நீடித்த ஏற்றத்தாழ்வுகள் போன்றவையே இருந்தன என்பதை நன்கு அறிந்தவராகவே இருந்தார். அவர் ‘மருத்துவம் என்பது சமூக அறிவியலே; அரசியல் என்பது பெரிய அளவிலான மருத்துவம் என்பதைத் தவிர வேறில்லை’ என்று எழுதியிருந்தார்.

விர்ச்சோவிடமிருந்து வெளியான அந்தக் கருத்தை அவரது சமகாலத்தவர்கள் பலரும் ஆதரிக்கவே செய்தனர். ஆனால் கிருமிக் கோட்பாடு வளர்ச்சியடைந்த போது விர்ச்சோவின் கருத்து மழுங்கிப் போனது. உணர்வுகள் சாராது, அரசியல் ரீதியாக நடுநிலையாக இருக்க முயன்ற வேளையில் நோயைச் சாத்தியமாக்குகின்ற சமூகக் காரணிகளைப் புறக்கணித்த அறிவியலாளர்கள் நோயை ஏற்படுத்துகின்ற நோய்க்கிருமிகளின் மீது கவனத்தைச் செலுத்தத் துவங்கினர். சமூக அறிவியலும், உயிரியல் மருத்துவ அறிவியலும் தனித்தனியாகப் பிரிக்கப்பட்டு பல்வேறு புலங்கள், துறைகள், ஆய்வறிஞர்கள் என்றாகிப் போயின. நோய்களை தனிநபர்களுக்கும் கிருமிகளுக்கும் இடையிலான போராக மருத்துவமும், பொதுசுகாதாரமும் கருதிய அதே நேரத்தில் விர்ச்சோவால் அடையாளம் காணப்பட்ட பரந்த சூழலை சமூகவியலாளர்களும், மானுடவியலாளர்களும் கையாளத் துவங்கினர். இந்த விரிசல் 1980களில் குறையத் தொடங்கிய போதிலும் இன்னும் அது அதிக அளவிலேயே இருந்து வருகிறது.

அதற்கிடையில் கோவிட்-19 வந்து சேர்ந்தது. முகக்கவசங்கள், சமூக இடைவெளி பற்றி 2020ஆம் ஆண்டின் பெரும்பகுதி முழுவதும் அமெரிக்கா (குறிப்பாக வெள்ளை மாளிகை) கடுமையான விவாதங்களை மேற்கொண்டு வந்தது. அது மருந்துகள், தடுப்பூசிகளையே கோவிட்-19க்கான தீர்வு என்று கண்டது. பெரும்பாலும் முகக்கவசங்கள், சமூக இடைவெளி மட்டுமே தொற்றுநோயைக் கட்டுப்படுத்துகின்ற நடவடிக்கைகளாக இருந்தன; அவை உயிரியல் மருத்துவ நடைமுறைகளுக்கு எதிராக ‘மருந்துகள் அல்லாத முயற்சிகள்’ என்று குறிப்பிடப்படப்பட்டு வகைப்படுத்தப்பட்டன. ஆயினும் அத்தியாவசிய தொழிலாளர்களைப் பொறுத்தவரை உடல்நலத்தைப் பணயம் வைக்காமல் அவர்கள் தங்கள் வாழ்வாதாரத்தைப் பாதுகாத்துக் கொள்வதற்கு நோய்வாய்ப்பட்டவர்களுக்கு அளிக்கப்படுகின்ற ஊதியத்துடனான விடுப்பு, அனைவருக்குமான சுகாதாரப் பாதுகாப்பு போன்ற சமூகத் தலையீடுகளே உதவிகரமாக இருந்திருக்கும் என்பதே உண்மை.

அறிவியல் குறித்ததாக இருந்த அளவிற்கு அந்த தொற்றுநோய் அறிவியலுக்கென்றுள்ள வரம்புகள் குறித்ததாகவும் அமைந்தது. முதன்மையாக உயர்தாக்கமுள்ள பத்திரிகைகளில் தங்களுடைய கட்டுரைகளை வெளியிடுவதற்காக ஆய்வாளர்களுக்கு வெகுமதி என்று கல்வி ஊக்கத்தொகை வழங்கப்பட்டு வருகிறது. அந்த நடைமுறை நீண்ட காலமாகவே அனைத்து ஆய்வுத் துறைகளையும் மிகவும் மேலோட்டமான, மீண்டும் உருவாக்கிக் காட்ட முடியாத ஆய்வுகளை நோக்கித் தள்ளியுள்ளது. தொற்றுநோய்களின் போது அறிவியலாளர்கள் மேற்கொண்ட இதுபோன்ற அரைகுறையான, தவறான ஆய்வுகள் தொற்றுநோய்கள் ஏற்கனவே தொற்றுநோய் குறித்து இருந்து வருகின்ற ஆவணங்களைப் சீரழித்துள்ளன. அறிவியலானது பல வழிகளிலும் விளக்கப்படக் கூடிய தரவுகள் குறித்து வாதிட்டு கருத்து மாறுபாடுகளை முன்வைக்கின்ற ஆயிரக்கணக்கானவர்களின் கூட்டு மனதில் இருந்து பிறந்த உருவமற்ற, மாற்றிக் கொள்ளக் கூடிய ஒன்றாக இருக்கவில்லை என்றும், அது உண்மைகளால் நிறைந்திருப்பதாகவும் அறிவியலைப் பற்றி கருத்தைக் கொண்டிருக்கின்ற  அறிஞர்கள் ‘அறிவியலைப் பேணுங்கள்’ என்பதை மக்களிடம் வலியுறுத்துகின்றனர்.

அனிச்சை மிகைப்பு (டிசாட்டோனோமியா), நாள்பட்ட சோர்வு நோய்க்குறி (மயால்ஜிக் என்செபலோமைலிடிஸ்) போன்ற நாள்பட்ட நோய்கள் மீது இருந்து வருகின்ற நீண்டகால அலட்சியம், கோவிட்-19ஆல் பாதிக்கப்பட்ட ஆயிரக்கணக்கானவர்கள் நோயின் அறிகுறிகளை மாதக்கணக்கில் அனுபவித்த வேளையில் அறிவியலிடம் இவர்களுக்கான தீர்வுகள் எதுவும் இல்லை என்பதையே காட்டியது. ஆய்வாளர்களிடம் ‘அறிவியல் அரசியலுக்கு அப்பாற்பட்டதாக இருக்க வேண்டும்’ என்றிருக்கின்ற அப்பாவித்தனமான ஆசை உண்மையில் அறிவியல், அரசியல் இரண்டையும் மையமாகக் கொண்டுள்ள உலகளாவிய நெருக்கடியைச் சமாளிக்க அவர்களில் பலரும் தயாராக இல்லை என்பதையே காட்டுகிறது. சமூக தொற்றுநோயியல் நிபுணரான விட்னி ராபின்சன் ‘இப்போது வெறுமனே அறிவுரை வழங்குகின்ற வேலையை மட்டும் செய்ய வேண்டுமா அல்லது அறிவியலுடன் மட்டுமே நம்மைப் பிணைத்துக் கொள்ள வேண்டுமா என்பது குறித்து தொடர்ந்த உரையாடல் இருந்து வருகிறது’ என்று என்னிடம் சொன்னார். மேலும் அவர் ‘நமது கண்டுபிடிப்புகளை இந்த மாய மனிதர்கள் எவ்வாறு எடுத்துக் கொண்டு செயல்படுத்தப் போகிறார்கள் என்பதைப் பற்றியே நாம் எப்போதும் பேசிக் கொண்டிருக்கிறோம். அந்தக் கண்டுபிடிப்புகள் வெளியிடப்படுகின்ற போது அறிவு மேலும் அதிகரிக்கிறது! ஆனால் கோவிட்டைப் பொறுத்தவரை அது பொய்யாகவே இருக்கிறது!’ என்றார்.

தொற்றுநோய்கள் குறித்து விர்ச்சோவிடமிருந்த அனுபவங்கள் அவரை சமூக, அரசியல் சீர்திருத்தங்களுக்காக வாதிட்ட ‘நோயியலின் தந்தை’ என்றழைக்கும் நிலைக்குத் தள்ளின. அதுபோன்றதொரு நிலைமையையே கோவிட்-19 அறிவியலாளர்கள் பலருக்கும் அளித்துள்ளது. அந்த நோய் கொண்டு வந்த பல சிக்கல்கள் அதிர்ச்சியடைந்திருந்த புதிய தொற்றுநோயியல் நிபுணர்களை வரவேற்று தங்கள் அணிகளுக்குள் இணைத்துக் கொண்ட காலநிலை குறித்த அறிவியலாளர்கள் ஏற்கனவே அறிந்தவையாகவே இருந்தன. தொற்றுநோயைப் பொறுத்தவரை அறிவியல் (அறிவியல் எழுத்துகளும்) என்பது அரசியலா என்ற பழைய விவாதம் இப்போது முட்டாள்தனமாக, பழமையாகத் தோன்றுகிறது. அறிவியலாளர்கள் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் அறிவியலானது சந்தேகத்திற்கு இடமின்றி பிரிக்க முடியாத மனித முயற்சியாக இருப்பதால் அரசியல் சார்ந்தே இருக்கின்றது. சமூகத்திற்குச் சொந்தமானதாக, அது சமூகத்துடன் பிணைக்கப்பட்டுள்ளது. சமூகத்திற்கு உரித்தானதாக இருக்கிறது. அறிவார்ந்த இடங்களில் பாதுகாக்கப்பட்ட மூலைகளில் அடைக்கலம் பெற்றிருப்பதாகத் தோன்றும் அறிவியலின் பகுதிகளைப் பொறுத்தவரை அது உண்மையாகவே இருக்கிறது.

என்னுடைய முதலாவது புத்தகம் டார்வினிசம், கிருமிக் கோட்பாடு ஆகியவற்றின் எழுச்சிக்கு இடையே துரதிர்ஷ்டவசமாக பல நூற்றாண்டுகளாக கவனிக்கப்படாமல் இருந்து வந்த ஆய்வுப் பகுதியான நுண்ணுயிர் சூழகம் குறித்ததாக இருந்தது. இயற்கை மிகவும் கோரமாக, கிருமிகள் நோய்களின் தோற்றுவாயாக இருக்கின்ற நிலையில் விலங்குகள் உடன் ஒத்துழைக்கின்ற நுண்ணுயிரிகளால் பயனடைகின்றன என்ற கருத்து அபத்தமாகவே இருந்தது. அறிவியலாளர்கள் ஒருவர் மீது ஒருவர் நம்பிக்கை கொண்டுள்ளனரா, அவர்கள் தங்களுக்கிடையே வெற்றிகரமாக கருத்துகளைப் பரிமாறிக் கொள்கின்றனரா, புகழ்பெற்ற ஆங்கில இதழில் அல்லது தெளிவற்ற அயல்நாட்டு மொழியில் தங்களுடைய கருத்துகளை வெளியிடுகிறார்களா என்பது குறித்ததாக இருக்கின்ற அறிவியலின் சமூகவியலானது விலங்குகளின் உணர்வுகள் குறித்த நமது புரிதலின் மீது தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது என்பதைக் காட்டுவதாகவே என்னுடைய அடுத்த புத்தகம் இருக்கும். அத்தகைய புரிதலுமே நமது புலன்களுக்குள் சிக்கிக் கொண்டிருக்கின்ற கருத்துகளால் ஊசலாடிக் கொண்டே இருக்கின்றது. பெரும்பாலும் அறிவியல் முற்றிலும் அனுபவத்தால் அறியப்படுவதாக, உணர்வு சாராத நோக்கத்துடன் இருப்பதாகக் கேலியாகச் சித்தரிக்கப்படுகிறது. ஆனால் உண்மையில் உலகு குறித்த அறிவியலாளரின் விளக்கங்கள் அறிவியலாளர்கள் சேகரிக்கின்ற தரவுகளால், வடிவமைக்கின்ற சோதனைகளால், கேட்க நினைக்கின்ற கேள்விகளால், அவர்களுடைய அடையாளம், விழுமியங்கள், முன்னோடிகள், கற்பனைகளால் பாதிக்கப்படுபவையாகவே இருக்கின்றன.

What is still left of scientific writing? - Ed Yong. This Article Translated in Prof. T. Chandraguru. அறிவியல் எழுத்து என்று எது இன்னும் எஞ்சியிருக்கிறது? - எட் யாங் 

2020இல் கோவிட்-19ஐப் பற்றி எழுதத் தொடங்கிய போது அறிவியலை எழுதுகின்ற வழக்கமான முறை அதற்குப் போதுமானதாக இருக்காது என்பது எனக்குத் தெளிவாகியது. பெரிய அளவிலான கட்டுரைகள் சிறு கூறுகளின் உள்ளடக்கமாக மாறுகின்ற வகையில் உடைக்கப்பட்டு பெரும்பாலும் துண்டு துண்டுகளாகவே இருந்தன. அறிவியல் எழுத்தைப் பொறுத்தவரை தனித்தனிக் கட்டுரைகளை சிறிய அலகுகளாகக் கருதி, ஒரு நேரத்தில் ஒன்று என்று அவற்றைப் பற்றி எழுதுவதாக இருந்தது. தொற்றுநோய் நெருக்கடியைப் பொறுத்தவரை அத்தகைய அணுகுமுறை குளறுபடியான, குழப்பமான, எப்போதும் கலைந்து கிடக்கும் ஜிக்சா துண்டுகளுக்கு மட்டுமே வழிவகுத்துக் கொடுத்தது. அதற்கு மாறாக அந்த துண்டுகள் அனைத்தையும் ஒன்றிணைக்கும் முயற்சிகளை நான் மேற்கொண்டேன். பெரும் பிரச்சனைகளைப் பற்றி தொடர்ச்சியான நீண்ட கட்டுரைகளை எழுதி மிகப் பரந்த அளவிலான தகவல்களை ஒருங்கிணைப்பதற்கான  முயற்சிகளை மேற்கொண்டேன். வாசகர்கள் அந்த தகவல்களால் மூழ்கடிக்கப்பட்டு விடாது அவர்கள் அவற்றை நன்கு கவனித்துச் செல்லும் வகையிலே உறுதியான தளத்தை ஏற்படுத்திக் கொடுக்க முயன்றேன். சமூகவியலாளர்கள், மானுடவியலாளர்கள், வரலாற்றாசிரியர்கள், மொழியியலாளர்கள், நோயாளிகள் என்று பலரையும் நேர்காணல் செய்ததன் மூலம் தொற்றுநோயை ஓர் அறிவியல் கதையாகவே கருதினேன். என்னை ஈர்த்த எழுத்தும் அவ்வாறாகவே அமைந்தது. சமூகத்தின் பிற பகுதிகளிலிருந்து பிரிக்க முடியாததாக, அந்த இணைப்பு இரு வழிகளிலும் செயல்படுவதாக அறிவியல் இருப்பதை இந்த தொற்றுநோய் தெளிவுபடுத்திக் காட்டியுள்ளது. அனைத்தையும் அறிவியல் தழுவியிருக்கிறது; அனைத்தும் அறிவியலையே தழுவியுள்ளன. இடையில் உள்ள சுவர்கள் இடிந்து விழுந்ததைப் போலத் தோன்றுகிறது. என்னை நானே ‘அறிவியல் எழுத்தாக இப்போது எது எஞ்சியிருக்கிறது’ என்று கேட்டுக் கொண்டேன்.

நடைமுறைக்கு அப்பாற்பட்டு தன்னிடமுள்ள தெளிவற்ற உள்ளடக்கங்களை பொதுமக்களுக்கு கிடைக்கச் செய்வதாக அறிவியல் எழுத்து கற்பனை செய்து கொள்கிறது என்ற பார்வை நீண்ட காலமாகவே இருந்து வருகிறது. ஆனால் அந்தப் பார்வை குழப்பமான முடிவுகளைக் கொண்ட வினோதமான மாதிரியாகவே இருக்கிறது. அறிவியல் பாராட்டப்படாமல் மிகவும் சிக்கலான நிலைமையில் இருப்பதாகவும், அதனுடைய முக்கியத்துவத்தையும், மதிப்பையும் விரும்பாதவர்களும்கூட அதை நம்ப வேண்டும் என்றும் மறைமுகமாக அது கருதுவதாகவே இருக்கிறது. உண்மையில் வெளியுலகத்திலிருந்து தனித்து, தெளிவற்று இருக்கின்ற பத்திரிகைகள், பல்கலைக்கழகங்கள் மற்றும் பிற பெரிய நிறுவனங்களை அறிவியல் ஒத்திருப்பதாக அது சமநிலைப்படுத்துகிறது. இறுதியில் சாதாரணமானவர்களையும் பங்கேற்க அழைக்கும் வகையில் அறிவியலை சிறப்புப் பொருளாகக் கருதுவது ஓரளவிற்கு கருணையுடன் இருக்கிறது.

ஆனால் இதுபோன்ற அழைப்புகள் அனைவருக்கும் நீட்டிக்கப்படுவதில்லை. அறிவியல் என்பது வெளியீடுகளின், முனைவர் பட்டதாரிகள் மற்றும் பேராசிரியர்களுடைய கருத்துகளின் நூலகம் என்பதைக் காட்டிலும் மேலானதாக உள்ளது. அறிவியல் எழுத்துகளும் அதைப் போன்று விரிவாகவே இருக்க வேண்டும். அறிவியல் எழுத்து என்று எதைக் கருதுவது என்பது இறுதியில் நாம் பதில் சொல்ல முடியாத கேள்வியாகவே இன்னும் நீடிக்கிறது. பெண் ஒருவரின்  நோய் பற்றிய கட்டுரை, நிறத்தின் கலாச்சார வரலாறு, மூழ்கிய நச்சு பீப்பாய்கள் குறித்த விசாரணை, பக்கத்து வீட்டுக்காரருக்கான ராக்கெட் நிறுவனம் இருக்கின்ற ஊர் என்பது போன்று 2021ஆம் ஆண்டின் மிகச்சிறந்த அமெரிக்க அறிவியல் மற்றும் இயற்கை எழுத்துகளின் தொகுப்பிற்காக நான் தேர்ந்தெடுத்துக் கொண்ட துண்டுக் கட்டுரைகளும், மற்றவையும் என்னைப் பொறுத்தவரை அறிவியலானது நம் வாழ்வின் கட்டமைப்புடன் இறுக்கி கட்டப்பட்டிருப்பதையே காட்டுகின்றன – எனவே அறிவியல் எழுத்துகளை வகைப்படுத்துவது என்பது  மிகவும் கடினமான காரியமாகவே இருக்கும்.

இங்கே ஒரு வெளிப்படையான ஆபத்தும் இருக்கிறது. வழக்கமான பத்திரிகை துணுக்குச் செய்திகளில் அறிவியல் மட்டுமே நாம் சிக்கியுள்ள மனிதப் பொறிகளிலிருந்து நம்மை வெளியே மீட்டெடுக்கிறது. கலாச்சாரம், அரசியல், வணிகம், விளையாட்டு, உணவு என்று இவையனைத்தும் ஓர் உயிரினம் பற்றியவை. அறிவியலோ கோடிக்கணக்கான மற்றவற்றை உள்ளடக்கியதாக, பிரபஞ்சத்தின் முழுமையை உள்ளடக்கியதாக உள்ளது. என்னால் அதன் விரிவான தன்மையை தீவிரமாக உணர்ந்து கொள்ள முடிகிறது. என்னுடைய வாழ்வின் பெரும்பகுதியை நுண்ணுயிரிகள், லைக்கன்கள், விலாங்கு போன்ற ஹாக்ஃபிஷ், ஒட்டகச்சிவிங்கிகள், வாத்தின் ஆண்குறிகள், நீர்யானையின் மலம் பற்றி எழுதுவதற்கே அர்ப்பணித்திருக்கிறேன். நம்மை விட்டு நாம் விலகினாலும் நம்மால் முழுமையாகத் தப்பித்து விட முடியாது என்ற மேம்பட்ட புரிதலுடனே நான் அவ்வாறு செய்கிறேன். இயற்கையைப் பற்றிய நமது புரிதல் நமது கலாச்சாரம், சமூக விதிமுறைகள் மற்றும் அறிவியலாளராக யார் இருப்பது என்பது குறித்த நமது கூட்டு முடிவுகளாலேயே தெளிவுடன் வடிவமைக்கப்பட்டுள்ளது. நமது கூட்டு முடிவுகளையும் சார்ந்தே இயற்கையுடனான நமது உறவு – அதற்கு அடிபணிவது அல்லது அதிலிருந்து கற்றுக் கொள்வது அல்லது அதைக் காப்பாற்ற முடிவது – இருக்கிறது.

What is still left of scientific writing? - Ed Yong. This Article Translated in Prof. T. Chandraguru. அறிவியல் எழுத்து என்று எது இன்னும் எஞ்சியிருக்கிறது? - எட் யாங் 

எட் யாங் எழுதிய ‘அறிவியல், இயற்கை தொடர்பான சிறந்த அமெரிக்க எழுத்துகள் – 2021’ என்ற புத்தகத்தின் அறிமுகப் பகுதியிலிருந்து இந்தக் கட்டுரை தொகுக்கப்பட்டுள்ளது.

https://www.theatlantic.com/science/archive/2021/10/how-pandemic-changed-science-writing/620271/

நன்றி: தி அட்லாண்டிக் 2021 அக்டோபர் 2 

தமிழில்: தா.சந்திரகுரு