இந்திய அறிவியல் வளர்ச்சியின் உண்மையான ஆணிவேர்….. ஆயிஷா இரா நடராசன்
அறிவியல் கண்டுபிடிப்புகளை தொழில்துறையோடு இணைக்கும் அமைப்பு மட்டுமே எதிர்காலத்தை நோக்கிய வளர்ச்சிப் பாதையில் நாட்டை எடுத்துச் செல்ல முடியும்.
-சாந்தி ஸ்வரூப் பட்னாகர்
இந்திய விஞ்ஞானி
திடீரென்று சி.எஸ்.ஐ.ஆர் புகழ் பெற்றுவிட்டது இந்தியாவின் பிரம்மாண்ட அறிவியல் ஆய்வு நிறுவனத்திற்கு முதல் பெண் இயக்குனர் ஜெனரலாக டாக்டர் கலைச்செல்வி நியமிக்கப்பட்டதால் இந்த பரபரப்பு.
நம் நாட்டில் அறிவியல் தொழில்நுட்பம் என்றாலே நாம் இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனத்தையும் (இஸ்ரோ) பாதுகாப்பு தளவாட ஆய்வகத்தையும் (டி.ஆர்.டி.ஏ) முன்னிலைப்படுத்தி ஏதோ ஏவுகணை மற்றும் ராக்கெட் விடுவதே அறிவியல் என்று நாம் மட்டுமல்ல நம் குழந்தைகளையும் நம்ப வைத்து இருக்கிறோம்.
ஆனால் இந்திய நாடு தனது விடுதலையின் 75ஆம் ஆண்டு கொண்டாட்டங்களை முன்னெடுக்கும் இத்தருணத்தில் இந்திய அறிவியலின் உண்மையான ஆணிவேரை அறிய வேண்டி உள்ளது. இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனத்தையும், பாதுகாப்பு தளவாட ஆய்வகங்களையும் நாம் குறைத்து மதிப்பிடவில்லை ஆனால் நாட்டின் சோதனையான காலகட்டங்களில் துணை நின்று ‘கரை சேர்த்து’ ஆபத்பாந்தவனாக விளங்கிய ஒரு சாதனை அமைப்பை மறந்து விட வேண்டாம் என்றே மனம் பதறுகிறது.
விடுதலையின் போது பஞ்சமும் பட்டினியும், கல்வி அறிவின்மையும் நாட்டை பீடித்திருந்த சமூக நோய்கள் மதவெறி, அதீத மூட-நம்பிக்கை, பெண்ணடிமை என பட்டியல் நீண்டாலும் நாட்டின் ஒட்டுமொத்த உற்பத்தியும், தனிநபர் வருமானமும் மிகவும் ஆபத்தான நிலையில் இருந்தன. ஏழை நாடு என்றும் மூன்றாம் உலக நாடு என்றும் பிறகு வளர்ந்து வரும் நாடு என்றும் நாம் முன்னேறிட பெரும்பங்கு வகித்தது அறிவியல் மற்றும் தொழில் துறை ஆராய்ச்சி மன்றம் (Council of Scientific and Industrial Research) எனும் இந்திய அறிவியல் தொழில்நுட்ப நிறுவனம் ஆகும். இந்தியாவின் வளர்ச்சிக்காக ஐந்தாண்டு திட்டங்கள் அறிமுகமான 1950க்கு முன்பே அந்த நிறுவனம் உருவாக்கப்பட்டு விட்டது. ஹோமி ஜஹாங்கீர் பாபா, விக்ரம் சாராபாய் போன்றவர்களை இந்திய அறிவியல் தொழில்நுட்ப வளர்ச்சியின் பிதாமகர்களாக கொண்டாடும் நாம் சாந்தி ஸ்வரூப் பட்னாகர் எனும் மாமனிதரை பற்றி அவ்வளவாக பேசுவதும் இல்லை. அவரை அடுத்த தலைமுறைக்கு அறிமுகம் செய்வதும் இல்லை.
அறிவியல் மற்றும் தொழில்துறை ஆராய்ச்சி மன்றம் ஒரு பிரித்தானிய அரசின் அமைப்பாக 1942ல் தொடங்கப்பட்டபோது அதன் இயக்குனராக சாந்தி ஸ்வரூப் பட்னாகர் நியமிக்கப்பட்டார். ஆனால் அது இந்திய அறிவியல் மற்றும் தொழில் துறை ஆராய்ச்சி மன்றம் என்று மாற்றப்பட வேண்டும் என அவர் போராடினார். நம் தமிழகத்தின் ஆற்காடு ராமசாமி முதலியார் அப்போது ஆங்கிலேய அரசின் நிர்வாக ஆலோசனை அமைப்பில் ஒரு உறுப்பினராக இருந்தார். அப்போது பலம் பொருந்திய மத்திய நாடாளுமன்றத்தில் (Central Legislative Assembly) அவர் வாதிட்டு அதை இந்திய கவுன்சிலாக மாற்ற வைத்தார் வைஸ்ராயின் நிர்வாக குழுமத்திலும் ஆற்காடு ராமசாமி முதலியார் சக்தி வாய்ந்த உறுப்பினரான இருந்ததால் பிரித்தானிய அறிவியல் மற்றும் தொழில் துறை குழுமத்தை(BSIR) இந்திய அறிவியல் மற்றும் தொழில் துறை குடும்பமாக மாற்றி (CSIR) அதற்கு ஒரு கோடி ரூபாய் நிதியையும் பெற்றார்.
விடுதலைக்குப் முன்பே பட்னாகர் ஐந்து தேசிய ஆய்வகங்களை உருவாக்கும் முனைப்பை தொடங்கினார். தேசிய இயற்பியல் ஆய்வகம்
( National Physical Laboratory) தேசிய எரிபொருள் ஆய்வகம் (National Fuel Research station ) தேசிய உலோகவியல் ஆய்வகம் (National Metallurgical Laboratory) ஆகியவை அவற்றில் குறிப்பிடத்தக்கவை. இன்று இந்திய அறிவியல் மற்றும் தொழில் துறை குழுமம் நாடு முழுவதும் 38 ஆய்வகங்கள் 39 தொழில்நுட்ப தொடர்பகங்கள் மற்றும் மூன்று பிரம்மாண்ட கண்டுபிடிப்பு அரங்கங்களையும் நடத்துகிறது.
விடுதலைக்குப் பின் இந்தியாவை பல்துறை தன்னிறைவு கொண்ட வளர்ந்த நாடாக மாற்றும் பிரம்மாண்ட பணியை முதல் பிரதமர் நேரு சி எஸ் ஐ ஆர் இன் வசம் ஒப்படைத்தார். நேரடியாக இந்திய அரசாங்கத்தால் நிதி ஒதுக்க முடியாத காலகட்டம் அது சர் டொராப்ஜி டாட்டா அறக்கட்டளை மற்றும் பொதுமக்களின் நிதி உதவிகளை ஊக்கப்படுத்தி பட்னாகர் ஐந்து முக்கிய ஆய்வகங்களை ஏற்படுத்தி முதலில் ஏழாயிரம் இளம் விஞ்ஞானிகளை பணி அமர்த்தினார். அடுத்தடுத்து வந்த ஐந்தாண்டு திட்டங்களில் இந்த அறிவியல் ஆய்வு நிறுவனம் இந்திய தொழில் துறையை படிப்படியாக தன்னிறைவு அடைய வைத்தது.
சி எஸ் ஐ ஆர் இன் சாதனைகள் பல. நம் நாட்டிற்கு என்று அறிவியல் பூர்வமான நாட்காட்டி ஒன்றை தரமாக தயாரித்து வெளியிட்டது, அவற்றில் ஆரம்ப கால (1955) மகத்தான சாதனைகளில் ஒன்று. இந்திய தேசிய நாட்காட்டியை வடிவமைக்க இந்திய வானியல் விஞ்ஞானி மெக்நாட் சாஹா வின் தலைமையில் அதற்காக ஒரு குழு அமைக்கப்பட்டு அக்குழுவின் பரிந்துரைப் பேரில் இந்திய நாட்காட்டி நாடாளுமன்றத்தில் அறிமுகம் செய்யப்பட்டது.
1952 ல் முதல் இந்திய பொது தேர்தலின் போது சி எஸ் ஐ ஆர் இன் அடுத்த பங்களிப்பை பார்க்கிறோம் தேர்தலில் மோசடிகளை தடுக்க குறிப்பாக ஒருவரே பலமுறை வாக்களிப்பதை தவிர்க்க அழியாத மையை தேசிய இயற்பியல் ஆய்வகம் மூலம் சி எஸ் ஐ ஆர் வெள்ளி – நைட்ரேட்டை பயன்படுத்தி கண்டுபிடித்து வழங்கியது இந்த மை இன்றும் உற்பத்தி செய்யப்படுவதோடு பல நாடுகளுக்கு ஏற்றுமதியும் செய்யப்படுகிறது.
இந்திய தோல் பதனிடும் தொழில்துறையின் அபரீத வளர்ச்சி அடுத்த சாதனை. உள்ளூர் சிறு தொழில் முனைவோரை தாங்கி பிடித்து சிறு சிறு அளவில் வளர்ச்சிக்கு உதவுதல் என்பது தான் இந்தியா மாதிரியான பெருமக்கள் தொகை கொண்ட மூன்றாம் உலக நாட்டின் வாழ்க்கை தரத்தை மேம்படுத்த முடியும். தோல் பதனிடும் துறையில் விடுதலையின் போது சுமார் 25 ஆயிரம் பேர் ஈடுபட்டிருந்தனர். 1970களில் அரசும் அறிவியல் மற்றும் தொழில் துறை ஆராய்ச்சி மன்றமும் இணைந்து எடுத்த அபாரமான அறிவியல் தொழில்நுட்ப புரட்சி காரணமாக இன்று இத்துறையில் நாடு முழுவதும் குக்கிராமங்கள் உட்பட 4.5 லட்சம் பேர் நேரடியாக வேலை பெறுகிறார்கள். அவர்களில் பெரும்பாலானவர்கள் பெண்கள் மத்திய தோல் ஆராய்ச்சி நிறுவனம்(Central Leather Research Institute) எனும் பிரம்மாண்ட ஆய்வகம் ஒன்றை சி எஸ் ஐ ஆர் சென்னையில் நடத்தி வருகிறது. இந்த ஆய்வகத்தின் மூலம் தோல் பதனிடுதலில் அடுத்தடுத்த பல சந்ததிகளை நாம் பயிற்சி கொடுத்து உருவாக்கி வருவதோடு 1960 களில் 68-ம் இடத்தில் இருந்த இந்திய தோல் தொழில் துறையை இன்று உலகின் நான்காம் இடத்திற்கு உயர்த்தி இருக்கிறோம். அவ்விஷயத்தில் விஞ்ஞானி இயெல்வரத்தி நயுடம்மா எனும் மாமனிதரின் அர்ப்பணிப்பை நாடு மறக்காது.
நம் அறிவியல் மற்றும் தொழில்துறை ஆராய்ச்சி மன்றத்தின் பங்களிப்பு இன்றி பசுமைப் புரட்சி சாத்தியமாகி இருக்காது. வேளாண் – வேதியியல் (Agro-Chemical) மற்றும் வேளாண் – இயந்திரவியல்( Mechanisation of Agriculture) என அறிவியல் மயமான வேளாண்மையை 1960 களிலேயே அறிமுகம் செய்தது அது ஹிந்துஸ்தான் உயிரி – வேதியியல் ஆய்வகம் மற்றும் ஹிந்துஸ்தான் பூச்சிக்கொல்லி ஆய்வகம் போன்ற ஆராய்ச்சி நிலையங்களில் கண்டுபிடித்து தரப்பட்ட வேளாண் இடுபொருட்கள் அயல்நாட்டிலிருந்து அவற்றை வரவழைக்கும் ஏராளமான செலவீனத்தை மிச்சப்படுத்தி நம் நாட்டை இந்த விஷயத்தில் தன்னிறைவு அடைய வைத்தது வரலாறு. நாடு முழுவதும் தனது ஆய்வக உற்பத்தி சாலைகளில் சிஎஸ்ஐஆர் உருவாக்கி கொடுத்த விவசாய இயந்திரங்கள் டிராக்டர் ஊர்திகள் (பஞ்சாப் டிராக்டர்ஸ் லிமிட்டட் ஆய்வகம்) என்று அடுக்கிக் கொண்டே போகலாம்.
உலகையே அச்சுறுத்திய கொடிய எய்ட்ஸ் (எச். ஐ. வி) உயிர் கொல்லி நோய்க்கு தனது ஹிந்துஸ்தான் மருந்தாய்வு ஆய்வகத்தில் எச்ஐவி எதிர்ப்பு மருந்து தயாரிக்கும் முறையை கண்டறிந்து அறிமுகப்படுத்தியது அடுத்த மைல்க்கல். பிறகு அதை மருந்தாலும் நிறுவனங்கள் கையில் எடுத்தனர். கல்வியகத்திற்கும் தொழில்துறைக்குமான பரஸ்பர ஒத்துழைப்பிற்கு அது முன்னுதாரணம். வருடம் 1990.
1950 களில் சத்துக்குறைபாட்டால் ஐந்து வயதுக்கு உட்பட்ட குழந்தைகளின் இறப்பு சதவிகிதம் அதிகரித்த போது நடந்த எழுச்சி மிக்க பங்களிப்பை யாருமே மறக்க முடியாது. இந்தியா சுதந்திரம் அடைந்த நாட்களில் குஜராத்தின் ஆனந்த நகர் கறவை மாடு விவசாயிகளின் ஒரு குழுவினர் சர்தார் வல்லபாய் படேலை சந்திக்கிறார்கள் தங்கள் வாழ்வாதாரத்தை காப்பாற்றுமாறு கெஞ்சுகிறார்கள். நடுவில் தலையிடும் இடைத்தரகர்களுக்கு பாலை விற்காமல் ஒரு கூட்டுறவு சங்கம் அமைத்து நேரடியாக உற்பத்தியான பாலை விற்குமாறு படேல் யோசனை தெரிவிக்கிறார். சர்தார் படேல், மொரார்ஜி தேசாய், திரிபுவன்தாஸ் படேல் போன்றவர்களின் வழிகாட்டுதலில் கெய்ரா மாவட்ட பால் உற்பத்தியாளர் கூட்டுறவு சங்கம் அமைக்கப்பட்டது. அதுதான் இன்றைய அமுல்.
1950 களில் இந்த சங்கத்தோடு இந்திய அறிவியல் மற்றும் தொழில் துறை மன்றம் ஒப்பந்த அடிப்படையில் எருமை மாட்டுப்பால் பெற்று அந்த பாலை, பால் பவுடராக மாற்றும் தொழில்நுட்பத்தை வெற்றிகரமாக அறிமுகப்படுத்தி கொடுத்தது. நாட்டில் உணவு பஞ்சத்தால் பசியால் தவித்த பல ஊர்களுக்கு அரசால் விலையின்றி பால் – பவுடரை அனுப்பி வைக்க முடிந்தது. பல்லாயிரம் குழந்தைகளின் பசியாற்ற சிஎஸ்ஐஆர் இன் தொழில்நுட்பம் உதவியது. அயல்நாட்டு பால்பவுடர் நிறுவனங்கள் இந்தியாவில் தங்களது உற்பத்தி சாலைகளை உருவாக்க முடியாது என்று மறுத்துவிட்ட பின்னணியில் இது நடந்தது. நம் பசுக்களும் எருமைகளும் தரும் பாலில் தேவையான அளவு சத்து இல்லை என்று அவை அறிவித்த பின்னணியில் இந்த கண்டுபிடிப்பு எவ்வளவு முக்கியமானது என்பதை உணர முடியும். இன்று உலக பால் உற்பத்தியில் நாம் முதலிடமும் பால் பவுடர் உற்பத்தியில் மூன்றாம் இடத்திலும் இருக்கிறோம்.
இந்திய செயற்கைக்கோள் தொழில்நுட்பத்தை தகவல் தொடர்பிற்கும் வெகுஜன தொலைக்காட்சி அறிமுகப்படுத்தியதற்கும் பயன்படுத்துவது என்றும் தொலைதூரக் கல்வி செயல்பாடுகளுக்கு தொலைக்காட்சி ஒளிபரப்பை கொண்டு செல்வது என்றும் 1983ல் திருப்பதியில் நடைபெற்ற இந்திய அறிவியல் மாநாட்டில் அரசின் தொழில்நுட்ப கொள்கையை வெளியிட்டு பிரதமர் இந்திரா அறிவித்திருக்கிறார். உடனடியாக சிஎஸ்ஐஆர் தனது மத்திய மின்னணு பொறியியல் ஆராய்ச்சி நிறுவனம் (பிலானி) மூலம் உள்நாட்டிலேயே தயாரிக்க முடிந்த கருப்பு வெள்ளை தொலைக்காட்சிகளை அறிமுகம் செய்து பிறகு மூன்றே ஆண்டுகளில் வண்ணத் தொலைக்காட்சி பெட்டிகளை உற்பத்தி செய்யும் தொழில்நுட்பத்தையும் வழங்கியது. விஞ்ஞானியும் பேராசிரியருமான யஷ்பாலின் பங்களிப்பு இது.
1985இல் இந்திய ராணுவத்திற்காக முதல் தானியங்கி தொலைபேசி மையத்தை தனது டெலிகாம் ஆய்வகம் மூலம் நம் நாட்டில் அர்ப்பணித்ததும் சி எஸ் ஐ ஆர் தான்.
உலகே நவீனமயமாகி, மரபணு ரேகை தொழில் நுட்ப முறைப்படி குற்றவியல் வழக்குகள் அணுகப்பட்ட காலகட்டத்தில் அமெரிக்காவிடம் ஜப்பானியிடம் கையேந்தாமல் 1988லேயே தனது ஹைதராபாத் உயிரணு மற்றும் மூலக்கூறியல் மையத்தின் மூலம் மரபணு ரேகை தொழில் நுட்பத்தை அடைந்து அவ்விதம் சாதித்த உலகின் மூன்றாவது நாடு என்கிற பெருமையை நம் நாட்டிற்கு கொடுத்தது இந்திய அறிவியல் மற்றும் தொழில் துறை மன்றம். அதனை சாதித்த விஞ்ஞானி லால்ஜி சிங்.
இந்தியா இன்று கோவிட் 19 எனும் கொடிய காலகட்டத்தை கடந்து தடுப்பூசிகளால் காப்பாற்றப்பட்டிருக்கிறது என்றால் சி எஸ் ஐ ஆர் அமைப்பு இந்திய மருத்துவ ஆராய்ச்சி நிறுவனத்தோடு இணைந்து கோவாக்ஸின் தடுப்பு மருந்தை வழங்கியதோடு விலை மலிவான மருத்துவ முகக்கவசம் முதல் பிபிசி என்று அழைக்கப்பட்ட முழுமையான மருத்துவ தற்காப்பு கவசம் வரை யாவற்றையும் உற்பத்தி செய்யும் தொழில்நுட்பத்தையும் சேர்த்து ஐந்து முனை செயல்திட்டத்தின் மூலம் போர்க்கால அடிப்படையில் செயல்பட்டதை வரலாறு மறக்காது.
இந்திய அறிவியல் மற்றும் தொழில் துறை ஆராய்ச்சி மன்றம் இன்று அணுகாத அறிவியல் தொழில்நுட்ப துறை இல்லை. விண்வெளிப் பொறியியல், முதல் கட்டமை பொறியியல் வரை, கடல் ஆய்வு, மூலக்கூறு உயிரியல், வேதி சுரங்க இயல், நேனோ தொழில்நுட்பம், பெட்ரோலிய பொருட்களின் ஆய்வியல், சூழலியல், சூழலியல் தொழில்நுட்பம் என்று எதையுமே அது விட்டு வைக்கவில்லை.
நம் நாட்டு மருத்துவ குணம்மிக்க மஞ்சள், வேப்ப எண்ணெய் போன்றவைகளின் காப்புரிமைகள் பெரும் போராட்டத்திலும் சி.எஸ்.ஐ. ஆரின் பங்கு மகத்தானது. இந்திய அறிவியல் மற்றும் தொழில் துறை ஆராய்ச்சி நிறுவனம் தனது ஸ்தாபகர் சாந்தி ஸ்வரூப் பட்னாகர் பெயரில் வழங்கும் அறிவியல் தொழில்நுட்ப கண்டுபிடிப்பு விருது, இயற்பியலாளர் கே எஸ் கிருஷ்ணன், மருத்துவ அறிஞர் ராம் பிஹாரி அரோரா, கணிதவியல் நிபுணர் கே எஸ் சந்திரசேகரன், அனுவியல் விஞ்ஞானி ஹோமி சேத்னா தாவரவியல் விஞ்ஞானி டி எஸ் சதாசிவம், மரபியலாளர் கலப்பை முனியப்பா என்று பலரை அங்கீகரித்து உள்ளது. அறிவியல் தொழில்நுட்ப வளர்ச்சியின் உண்மையான ஆணிவேராக விளங்கிவரும் இந்திய அறிவியல் மற்றும் தொழில் துறை மன்றத்தின் சிறப்பை விடுதலையின் 75 ஆம் ஆண்டில் நாம் அங்கீகரித்து கொண்டாடி அடுத்த தலைமுறைக்கு எடுத்துச்செல்ல வேண்டும்.
– ஆயிஷா இரா நடராசன்