Posted inPoetry
தங்கேஸ் கவிதைகள் –
சாத்தான் நண்பன்
**********************
இடையை நோக்கி நகரும் விரல்களைத் தட்டிவிட்டு
” உன் விரல்கள் எப்போதும் விரல்களல்ல
சில நேரம் சாத்தானின் அறைக்கதவை
திறக்கும் சாவிகள்” என்றாள்
நானும்
“சாத்தான் எப்போதும் சாத்தானல்ல
சில நேரம் மனிதர்களை
அதிசய
ஆப்பிள்களை உண்ணச் சொல்லும்
நண்பன் அவன் ” என்றேன்.
ஆயுதம்
***********
உயிர்களைக் கொய்பவை
சுழலும் வாட்களல்ல
உருளும் விழிகளென்று
கண்டு கொண்ட பொழுதில்
உன் முன் நிராயுதபாணியாய்
நின்று கொண்டிருக்கிறேன்
தொடுதிரை
***************
மெல்லிய திரைதான்
இருவருக்கும் இடையில்
ஆனால் ஒவ்வொரு தொடுகையின் போதும்
ஒவ்வொரு கனிமமாய் உருக்கொள்கிறது
சில நேரம் இரும்புத் திரை
சில நேரம் பட்டுத் திரை
சில நேரம் தொடு திரை
– தங்கேஸ்